Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தளபதி ஸ்டாலின் - திறனாய்வு

Featured Replies

உள்ளாட்சித்துறை அமைச்சர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், இரு முறை சென்னை மாநகர மேயர், திமுகவின் நிரந்தர இளைஞர் அணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாம முதல்வர் கலைஞரின் மகன் தளபதி ஸ்டாலின்.... எதிர்கால முதலமைச்சர் என்று சிலரால் மகிழ்ச்சியோடும், பலரால் வயிற்றெரிச்சலோடும் சொல்லப்படுபவர்.... இவரைப் பற்றிய இருண்ட பக்கங்களையும், வதந்திகளையும், எதிர்காலத்தையும் பற்றி என் அறிவுக்கு எட்டிய வகையில் திறனாய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்....

1976.... கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பாக நடக்கிறது.... பரபரப்புக்கு காரணம் மிசா.... இந்தியா முழுவதும் மக்களும், பத்திரிகைகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்றைய பிரதமரால் தடை விதிக்கப்பட்டு அடக்குமுறை கையாளப்பட்ட நேரம் அது.... திமுக ஆண்ட தமிழகத்திலும், காமராஜரின் பழைய காங்கிரஸ் ஆண்ட குஜராத்திலும் மட்டுமே மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அடக்குமுறை இல்லை....

அம்மாநில மாநாட்டிலே இருபதுகளின் இடையில் இருக்கும் ஒரு இளைஞர் இந்திரா அம்மையாரை பர்சனலாகத் தாக்கி முழங்கிக் கொண்டிருக்கிறார்.... அவர் தந்தையாரைப் போன்ற மிகச்சிறந்த பேச்சாளர் அல்ல அவர்... அவரது தமிழ்நடை படுமோசம்.... இருந்தாலும் அவர் சொல்லிய விஷயங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.... அவர் யார் என்று மாநாட்டுக்கு வந்த திமுக தொண்டர்கள் தங்களிடையே கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.... அவர்தான் தளபதி மு.க. ஸ்டாலின்....

கலைஞர் தனது அரசியல் மற்றும் கலையுலக வாரிசாக அடையாளம் காட்ட நினைத்தது தனது மூத்த தாரத்தின் மகன் மு.க. முத்துவைத் தான்.... சிறந்த நடிகர், அருமையான குரல்வளம் மிக்க பாடகர்... ஏனோ தனிப்பட்ட வாழ்க்கையிலும் தோல்வி.... திரையுலக வாழ்க்கையிலும் தோல்வி.... துவண்டுப் போயிருந்த கலைஞருக்கு கை கொடுத்தவர் இரண்டாம் தாரத்தின் இரண்டாம் மகனாகிய தளபதி மு.க. ஸ்டாலின் தான்....

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு "மிசா" சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தளபதியை நோக்கி அதிர்ஷ்ட தேவதை கண்ணடித்தாள்.... சிறைச்சாலையில் காவலர்களால் அன்றைய இரவு "ஹிட்" லிஸ்டில் இருந்த ஸ்டாலினை தன் உயிர் கொடுத்து "மிசா" சிட்டிபாபு காத்தார்.... சிட்டிபாபு இல்லையென்றால் இன்றைய ஸ்டாலின்?

சிறையிலிருந்து வெளிவந்தவர் திமுகவின் இளைஞரணி உருவாக்கப்பட்டு அதன் செயலாளராக நியமிக்கப்பட்டார்.... அடுத்த வாரிசு இவர் தான் என தலைமையால் மட்டுமல்ல தொண்டர்களாலும் முடிவெடுக்கப்பட்டார்... அப்போது அவருக்கு சூட்டப்பட்ட "தளபதி" பட்டம் தான் இன்றைய நிலையில் சுமார் 50களின் மத்தியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பேற்றப் பிறகும் தொடர்கிறது....

அரசியல் ஒரு சதுரங்கம்... நல்லவர்கள் தோற்பதும், வல்லவர்கள் வெற்றிபெறுவதும் சர்வ சகஜம்... ஒருவருடைய உண்மையான சுபாவத்துக்கும், மக்கள் மத்தியில் இருக்கும் இமேஜூக்கும் துளிகூட சம்பந்தம் இருக்காது... சரியாக இதற்கு உதாரணம் காட்ட வேண்டுமானால் தளபதி ஸ்டாலினையும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் அடையாளம் காட்டலாம்....

தளபதியுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர் ஒரு வெள்ளை மனிதர் என்பது... அழகிரி போல அடாவடி ஆசாமியோ, அப்பாவுக்கு அடங்காத மு.க. முத்துவோ அல்ல அவர்.... உண்மையான அவர் சுபாவத்துக்கு நேரிடையான ஒரு இமேஜ் தான் அவரைப் பற்றி மக்கள் மத்தியில் இருக்கிறது... இதற்கு காரணம் இந்த இமேஜை மாற்ற துளிகூட அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதே....

ஸ்டாலின் - பாத்திமா கிசுகிசு வந்தபோது கூட இவர் அந்த கிசுகிசுவைப் பொய்யாக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.... குறிஞ்சி மலர் தொலைக்காட்சி நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது.... அந்தப் பொய்யான கிசுகிசு எந்தப் பத்திரிகையிலும் வராமல் பேச்சுவழக்காக மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவிக் கொண்டிருந்தது.... காரணம் அப்போது தொலைக்காட்சியில் செய்திகள் வாசித்திக் கொண்டிருந்த பாத்திமா சில நாட்களாக செய்திகள் வாசிக்கவில்லை.... அப்போதைய தொலைக்காட்சியின் சட்டவிதிகளின் படி விளம்பரதாரர் நிகழ்ச்சியில் நடிப்பவர் செய்தி வாசிக்க முடியாது.... நெற்றிக்கண் படத்தில் ரஜினி பயன்படுத்திய கூலிங் கிளாஸைப் போன்ற கூலிங் கிளாஸை எம்.ஜி.ஆர் பயன்படுத்துகிறார் என்ற கிசுகிசு எந்த அளவு உண்மையோ, அதே அளவு உண்மை தான் ஸ்டாலின் - பாத்திமா கிசுகிசுவும்.... இந்தக் கிசுகிசுவைப் பற்றி கூட ஒரு முறை குழலி எழுதியிருந்ததாக ஞாபகம்....

அவருக்கும், அன்னை இந்திராவுக்கு ஏகப்பட்ட ஒற்றுமைகள் உண்டு.... இருவரும் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி.... மிசா சட்டத்தில் சிறைக்குச் சென்றதைத் தவிர அடிமட்ட வாழ்க்கையை அனுபவித்தவர் அல்ல தளபதி... சந்தர்ப்பச் சூழ்நிலை எப்படி அன்னை இந்திராவையும் அவரது திருமகன் ராஜிவையும் அரசியலில் ஈடுபடுத்த வைத்ததோ அதுபோல தான் ஸ்டாலினுக்கும்.... ஆனாலும் இந்திராவைப் போல என்னென்னமோ செய்ய வேண்டும் என்கிற ஆவல் அவருக்கு இருந்தாலும் அதற்கான சந்தர்ப்பமும், சூழ்நிலையும் துரதிருஷ்டவசமாக இன்று வரை அவருக்கு அமையவில்லை....

கலைஞரை மீறி ஸ்டாலினால் வளரமுடியாது என்பதும் ஒரு காரணம்.... ஒரு அளவுக்கு மேல் ஸ்டாலின் வளர்வதை கலைஞரும் விரும்பவில்லை என்பது இன்னொரு காரணம்.... குடும்ப அரசியல் செய்கிறார் என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்துக்கு பயந்து தளபதியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக கலைஞர் தான் இருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவு....

89ல் ஆட்சிக்கு வந்தபோதும், 96ல் ஆட்சிக்கு வந்தபோதும் கூட சரி தளபதியை அமைச்சராக்காமல் பொறுமை காத்தார் கலைஞர்.... அப்போதே செய்திருந்தால் இன்றைக்கு மூத்த அமைச்சர்கள் வரிசையில் தளபதிக்கு இடம் கொடுத்ததற்கு எந்தவித முணுமுணுப்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை.... அவர் தரவில்லை என்பதற்காக ஸ்டாலினும் கேட்டுப் பெற முயற்சிக்கவில்லை.... தயாநிதி மாறன் முண்டியடித்து முன்னால் வந்து நிற்பது போல ஸ்டாலினால் நடந்துகொள்ள முடியவில்லை.... அதற்கு காரணம் அவரது மென்மையான அணுகுமுறை தான்...

89 மார்ச் 25ல் சட்டமன்றத்திலே பெரும் அமளி - துமளி.... கலைஞர் தாக்கப்பட்டார், ஜெயலலிதாவின் சேலை உருவப்பட்டது என்று கூறப்பட்டபோது கூட சட்டமன்றத்திலே அமைதியாக தன் சீட்டில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்தவர் ஒரே ஒருவர் தான்.... அவர் தாக்கப்பட்ட கலைஞரின் மகன் தளபதி ஸ்டாலின்.... இந்த அணுகுமுறை ஒரு எதிர்கால ஆட்சியாளருக்கு தேவையான அணுகுமுறையாக இருந்திருக்கலாம்.... ஆனாலும் இன்றைய அடாவடி அரசியல் சூழலுக்கு சரிபட்டு வருமா?

வாழைமரத்துக்கு கீழே வளர்ந்திருந்தால் இன்னொரு மரமாகி இருப்பார்.... அவர் வளர்ந்ததோ ஆலமரத்தின் விழுதாக.... அதனால் தான் இன்னமும் பத்தோடு பதினொன்றாக இருக்கிறார்.... அவரால் கலைஞரை மீறி செயல்பட முடியாததற்கு காரணம் கலைஞர் தான்... ஈ.வெ.கி. சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், கே.ஏ. மதியழகன் போன்ற வல்லமைமிக்க தலைவர்களே கலைஞரை மீறி வளர முடியவில்லை.... மென்மை குணம் கொண்ட ஸ்டாலினால் எப்படி வளர முடியும்?

பல விஷயங்களில் தளபதி 'நரசிம்மராவ்' ஸ்டைலைப் பின்பற்றுவது அவருக்கே பலவீனம் தான்... அவரது ஊடகத் தொடர்பு ரொம்பவும் வீக்.... பத்திரிகைகளிலும், அவர்களது குடும்ப ஊடகமான சன் டிவியிலும் கூட இவரைப் பற்றிப் பெரிதாகச் செய்திகள் வருவதில்லை.... (தயாநிதி இந்த விஷயத்தில் செம கோல் அடிக்கிறார்).... இவரது தந்தை கலைஞரோ தினமும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது, தொலைபேசியில் அவர்களோடு பர்சனலாக உறவாடுவது என்று இந்த வயதிலும் அசத்திக் கொண்டிருக்கும்போது, தளபதியோ அசமஞ்சமாக இருக்கிறார்...

இதுபோலவே கட்சித் தொண்டர்கள் அளவிலும் கூட தனக்கு நெருக்கமாக இருக்கும் "ஜால்ரா"க்களுக்கு தொடர்ந்து சீட்டு வாங்கிக் கொடுத்தும், கட்சிப் பதவிகளில் நியமித்தும் அனுபவசாலிகளை ஓரங்கட்டி வருவது அவருக்கு எதிரான ஒரு விஷயம் தான்...

தளபதியிடம் இல்லாத சில குணங்கள் உண்டு.... கோபம் (வந்தாலும் ஒரு நொடியில் சகஜம் ஆகிவிடுவார்) பழிவாங்கும் குணம், நம்பவைத்துக் கழுத்தறுக்கும் வஞ்சகம்.... இவையெல்லாம் இல்லாத தற்போதைய தமிழக அரசியல்வாதி அவர் ஒருவர் தான்.... எதிரியையும் கூட மன்னித்து ஏற்றுக்கொள்ளும் இவரது சுபாவத்துக்கு சமீபத்திய உதாரணம் கராத்தே ஆர். தியாகராஜன்....

ஒரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவையான ஒரு குணம் என்னவென்றால் "எப்படியும் வென்றாக வேண்டும்" என்கிற வெறி.... இந்த வெறி கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோருக்கு இருந்தது.... நம்ம தளபதியிடம் இதுவும் மிஸ்ஸிங்....

எதிர்காலத்தில் தளபதிக்கு அரசியல் எதிரிகளாக இருக்கப் போவது முக்கியமாக இருவர்... அவர்கள் செல்வி ஜெ. ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.... இவர்களிடம் இருக்கும் "வெற்றிக்காக எதையும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளும் குணம்", தளபதியிடம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை....

இந்தத் திறனாய்வைப் படிப்பவர்கள் எதிர்காலத்தில் ஸ்டாலின் கலைஞர் போல திறமையான தலைவராக முடியாதா? முதல்வர் ஆக முடியாதா என்று சந்தேகப்பட்டால்... காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.... நாம் சொல்ல முடியாது....

1964ஆம் ஆண்டு ஜவஹர்லால் மறையும்போது இந்திரா காங்கிரஸ் இயக்கத்தில் ரொம்பவும் சாதாரணமானவர் தான்.... 65 முதல் 69 வரை லால்பகதூர் சாஸ்திரி ஆட்சியில் அமைச்சராக இந்திரா இருந்தபோது இன்றைய ஸ்டாலினைப் போலதான் இருந்தார்.... ஆனால் 69க்குப் பிறகு காங்கிரஸைப் பிளந்து விஸ்வரூபம் எடுத்தாரே.... நினைவிருக்கிறதா?

ஒரு தலைவனை உருவாக்க சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் உதவவேண்டும்.... அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம், சூழ்நிலை தளபதி ஸ்டாலினுக்கும் எதிர்காலத்தில் அமையும் என்று நம்புவோம்....

(http://madippakkam.blogspot.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.