Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனில் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளுடன் கமலேஷ் சர்மா முக்கிய பேச்சு!

Featured Replies

இலண்டனில் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளுடன் கமலேஷ் சர்மா முக்கிய பேச்சு!
fbdad5e6-f8fc-47ab-918b-5805db3a50301.jp

 

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளினது கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொதுநலவாய மாநாட்டை நடத்தும் வாய்ப்பு கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் சம்பந்தமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இலங்கை  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பிரதிநிதிகளைச் சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலண்டனில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா சிறிவர்ண மஹாநாமஹேவா, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ், வவுனியா இணைப்பாளர் எம்.ரோஹித பிரியதர்ஷன, மட்டக்களப்பு இணைப்பாளர் அப்துல் கரீம் அப்துல் அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலவரங்கள், மீள்குடியேற்றம், மும்மொழிக்கொள்கை, வடக்கு, கிழக்கு நிலவரங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பாக பொதுநலவாய செயலாளர் கமலேஷ் ஷர்மா இலங்கைக் குழுவினரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க மேலும் செயற்பாடுகள் அவசியம் என்றும், இனங்களுக்கிடையிலான ஐக்கியம் கட்டியெழுப்பட வேண்டும் என்றும் இதன்போது கருத்து வெளியிட்டுள்ள கமலேஷ் சர்மா, இதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் கமலேஷ் ஷர்மா இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் சம்பந்தமாகவும், பொதுநலவாய நாடுகள் அமைப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கவுள்ள உதவித் திட்டங்கள் சம்பந்தமாகவும் இச்சந்திப்பில்  கருத்துப் பறிமாற்றல்கள் இடம்பெற்றுள்ளன.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக்குழு கூட்டம் கடந்த 26ஆம் திகதி லண்டனில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கை விவகாரம் குறித்து பேசப்படாவிட்டாலும், குறித்த மாநாடு முடிவடைந்த பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்த கமலேஷ் சர்மா, பொதுநலவாய மாநாடு திட்டமிட்ட அடிப்படையில் இலங்கையில் நடைபெறும் என்ற அறிவிப்பை விடுத்தார்.

இலங்கை அரசு, பொதுநலவாய அமைப்பின் கொள்கைப் பிரகடனங்களை மீறிச் செயற்படுவதால் அங்கு மாநாட்டை நடத்தக்கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்துவந்த நிலையிலேயே கமலேஷ் சர்மா இந்த அறிவிப்பை விடுத்தார்.

பொதுநலவாயத்தின் இந்த முடிவானது, கனேடிய அரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இலங்கை மனித உரிமை நிலவரங்களைக் கோடிகாட்டி அங்கு மாநாட்டை நடத்தக்கூடாது என கனேடிய அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, பொதுநலவாயத்தின் இந்த முடிவால் இலங்கையில் நடைபெறும் மாநாட்டிக்கு உயர்மட்டக்குழுவுக்கு பதிலாக அதிகாரிகள் மட்ட குழுவை அனுப்புவதற்கு கனடா முடிவெடித்துள்ளது.

இவ்வாறான பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கை அதிகாரிகளைச் சந்தித்து கமலேஷ் சர்மா பேச்சு நடத்தியுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக் கருதப்படுகின்றது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறவுள்ளமை தெரிந்ததே.

மாநாடு இலங்கையில் நடைபெறுவது உறுதியானாலும் அதில் பிரித்தானிய மகாராணி கலந்துகொள்வாரா என்ற விடயத்தில் தொடர்ந்தும் சர்ச்சை நீடிக்கின்றது. பொதுநலவாய விவகாரத்தில் பிரிட்டன் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்தாலும் ஆஸ்திரேலியா   இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆஸி. பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்வது உறுதியென இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வரும் பன்நாட்டுப் பிரதிநிதிகள் அக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம்செய்து நிலைமைகளை நேரில் பார்வையிடவுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=fbdad5e6-f8fc-47ab-918b-5805db3a5030

  • கருத்துக்கள உறவுகள்

மனிதவுரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டு அதற்காக ஐநா அமைப்பினால் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுப் போர்க்காலக் குற்றங்களையும் விசாரித்துப் பொறுப்புக் கூறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் பொதுநலவாய மாநாட்டை நடத்தியே தீருவோமென்று காமன்வெல்த் ஒன்றியம் விடாப்பிடியாக நிற்கிறது. காமன்வெல்த் ஒன்றியத்தின் மிகமுக்கியமானவோர் அங்கமான தமிழ்த் தேசியத்திற்கு நடந்த அனியாயங்களை அந்த ஒன்றியம் கணக்கிலெடுக்காமல் விட்டு அலட்சியப்போக்கில் நடப்பதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை.  நம்மைத் தொடர்ச்சியாக வஞ்சித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் பிரதிநிதியே தற்போதைய காமன்வெல்த் செயலாளர் நாயகமாகவிருப்பது அதற்கொரு காரணமாகவிருக்கலாம்.

இந்தியா, அதாவது ஆளும் மத்திய காங்கிரஸ் என்ன வழிப்பட்டும் தமிழர்களை ஓரங்கட்டி அவர்களது தேசியவுணர்வை உதாசீனம் செய்யவேண்டுமென்னும் உள்நோக்கோடு செயற்படுவதால், தமிழர்கள் மீது நடத்தப்பட்ட அனியாயங்களை அலட்சியம் செய்யும் நோக்கில் இந்த மாநாட்டை இலங்கையில் நடத்த முயன்று வருகிறது.  இந்த நிலையில் இதனை ஒரு சவாலாக எடுத்து ஆளும் காங்கிரசுக்குத் தக்க பதிலடி கொடுக்காவிட்டால் தமிழரின் அரசியல் கருத்தற்றதாகிவிடும்.

சாதாரண கல்வி, பொருளாதார மேம்பாடுகள் தொடர்பானவோர் மாநாடென்றால் பரவாயில்லை.  எதிர்வரும் நவம்பரில் கொழும்பில் நடக்கவிருப்பது காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் கூட்டமாகும்.  அத்தகைய  கூட்டங்களில் பொதுநலவாயத்தின் தலைவியென்ற வகையில் மகாராணி எலிசபெத் அவர்களே பொதுவாகப் பங்குபற்றுவது வழக்கம்.  உடல்நிலை, வயது போன்றவை காரணமாக அரசியார் அதில் பங்குபற்றாமல்  விட்டால் அரசகுடும்பத்தின் அடுத்தவாரிசுகூடப் பங்குபற்றக் கூடும்.  அவ்வாறு ஒருவரும், நாடுகளின் அரச தலைவர்களும் பங்குபற்றிவிட்டால் அது இலங்கைக்குப் பெரிய கௌரவமான விடயமாகப் போய்விடுவதோடு, தற்போது அந்த நாடு பெற்றிருக்கும் அவப்பெயர்களெல்லாம் அந்த மாநாட்டோடு அடிபட்டுப் போய்விடும்.  இந்த நிலையை உருவாக்கித் தமிழர்கள்மீது சேறு பூசிவிடும் நோக்கில் இந்தியா வரிந்து கட்டிச் செயற்படுகிறது.  போர்க்காலத்தில் ஓர் விஜய் நம்பியார் ஐநாவில் எமது அழிவுக்குக் காலாயிருந்ததுபோல தற்போது காமன்வெல்த்தின் கமலேஸ் சர்மா தமிழர்களை அவமதிக்க முன்னின்று உழைப்பதுபோலத் தெரிகிறது.

சர்வதேச மன்னிப்புச்சபை இந்த மாநாட்டை  வேறொரு நாட்டிற்கு மாற்றவேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது.  மனிதவுரிமைகள் மீறப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள இலங்கையில் இதனை நடத்துவது பொருந்தாது என்பது அதன் வாதமாக இருக்கிறது.  'மாற்றுக் கருத்தின் மீதான இலங்கையின் தாக்குதல்' என்ற மிகப்பொருத்தமானவோர் தலைப்பிடப்பட்ட அதன் அறிக்கையின் முடிவுரையிலும் சிபாரிசுகளிலும் சிறீலங்காவில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.   மாறாக அங்கு அந்த மாநாடு நடைபெறும் பட்சத்தில் 2013 இலிருந்து 2015 வரையான காமன்வெல்த்தின் தலைமையைச் சிறீலங்கா பெற்றுக்கொள்ளக் கூடுமென்றும் அதனைத் தவிர்க்கவேண்டுமென்றும் அந்த அறிக்கை வற்புறுத்துகிறது.

இதேவகையில் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் கடந்த பெப்ரவரியில் வெளியிட்ட 'சிறீலங்கா விருந்தோம்பும் 2013 காமன்வெல்த் அரசுத்தலைவர்கள் கூட்டம் தொடர்பான பகிரங்கக் கடிதம்' என்னும் தலைப்பிடப்பட்ட அறிக்கையிலும்: 'உடனடியான, கணக்கிலெடுக்கப்படக்கூடிய, கருத்துள்ள மனிதவுரிமைகள் தொடர்பான முன்னேற்றங்களைச் சிறீலங்கா செய்யாதுவிடின், 2013 இற்கான உச்சி மாநாட்டை வேறிடத்திற்கு மாற்ற வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  அந்த அறிக்கை இந்த வேண்டுகோளைக் காமன்வெல்த் அரசுத் தலைவர்களிடம் முன்வைக்கின்றது.  மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான நிறைவேற்று இயக்குனர் பிரட் அடம்ஸ் என்பார் அக்கடிதத்தை எழுதியுள்ளார்.

இங்கே நாம் முக்கியமாகக் கவனத்திலெடுக்க வேண்டியது எமக்காகப் பரிந்து பேசும் மேற்கண்ட நிறுவனங்களிரண்டும் அரசு சார்பற்றவை என்பதையே.  கனடா மட்டும் அங்குள்ள தமிழர்களின் செல்வாக்கினால் இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவதைக் கண்டிக்கிறது.  இருப்பினும் தலைவர்கள் மட்டத்திலல்லாத அதிகாரிகள் மட்டத்திலான கனடாவின் பிரசன்னம் இந்த மாநாட்டில் இடம்பெறலாமென்பதை மறுக்க முடியாது.  பிரிட்டன் உட்பட மேலும் சில நாடுகளும் இந்த மாநாட்டிற்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், தற்போது காமன்வெல்த்தின் தலைமைத்துவத்தை வைத்திருக்கும் அவுஸ்திரேலியா இந்தியாவுடன் சேர்ந்து எமக்கு நடந்த அனியாயங்களை அலட்சியப்படுத்தவே முன்னிற்கின்றது.

இந்த இக்கட்டான நிலையில் தமிழர்கள் தம்மாலான முயற்சிகளை மேற்கோண்டு இந்தியாவிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் இந்த மாநாட்டுக்கெதிராக உருவாக்கும் எதிர்ப்பலைகளே ஏதாவது பலனையுருவாக்கக்கூடும்.  மீண்டுமொரு மாணவர் எழுச்சி தமிழகத்தில் இந்த மாநாடு தொடர்பாக உருவாகி இந்திய மத்திய அரசை நெருக்கு வாரத்திற்குள் தள்ளுவதன் மூலமே இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல.   கடந்த ஜெனிவாக் கூட்டத்தில் எவ்வளவு பாடுபட்டும் இந்திய அரசு எப்படியோ இலங்கையரசைக் காப்பாற்றிவிட்டது. கடைசி நேரத்தில் தீர்மானத்தைக்; ஆதரிப்பதாகப் போக்குக்காட்டி அதேவேளை தீர்மானத்தின் வார்த்தைப் பிரயோகங்களில் மாற்றங்களைச் செய்து அதனை மீண்டும் நீர்த்துப் போகச் செய்ததாக அவதானிகள் கூறுகின்றனர்.

கொழும்பில் பொதுநலவாய உச்சி மாநாடு நடைபெறுமாயின் மனிதவுரிமை மாநாட்டுத் தீர்மானம் கருத்தற்றதாக மாறுவதைத் தவிர்க்க முடியாது.  ஏனெனில் காமன்வெல்த்தின் ஆசீர்வாதத்தை இலங்கை பெறுவதோடு அதனது தலைமைத்துவத்தையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விடுமாதலால் தற்போது இலங்கை தொடர்பாக இருக்கும் மனிதவுரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அந்நாடு சமாளித்துவிடும்.

மனிதவுரிமைகள் தொடர்பான அபிவிருத்தி இலங்கையிலேற்பட்டால் அது வரவேற்கத்தக்கதே. ஆனால் இன ரீதியான இணக்கப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய அரசியல் தீர்வொன்று இல்லாமல் தொடர்ந்து உரிமைகளற்ற சமூகமாக ஈழத்தமிழினம் வாழவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால், உலகத்தின் கண்களிலிருந்து எமது நீதியான கோரிக்கைகள் மறைக்கப்பட்டால், எமது கதியென்ன?

இலங்கையில் எயார்ப் போட்டிலிருந்து சாதாரண அலுவலகங்களில் வேலைசெய்யும் ஊழியர்கள் வரை, பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடும் பொலீஸ், ராணுவம், அதிரடிப்படையுட்பட ஊர்காவல் படையினர் வரை தமிழர்களை மிகவும் இளக்காரமாகவே கணக்கிடுகின்றனர்.  அங்கு தமிழர்கள் மீதான சமூக ஒடுக்குமுறை மிகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  இந்த மறைமுகமான ஒடுக்குதலை நாம் யாரிடமும் சொல்லி அழமுடியாது.  சொன்னால் அது யாருக்கும் புரியப் போவதுமில்லை.  அரசியல் ரீதியானவோர் தீர்வின்றி அதாவது எமக்கான நிர்வாக அலகுகள் உருவாக்கப்படும்வரை இந்த அவலநிலையிலிருந்து நாம் மீளப் போவதில்லை.

அந்த அரசியல் தீர்வு ஏற்படும்வரை இலங்கை சர்வதேசத்திலிருந்து தனிப்படுத்தப்பட்டே இருத்தல் வேண்டும். அதற்கு இத்தகைய சர்வதேச மாநாடுகள் தடைக்கல்லாகவேயிருக்கும்.  போதாததற்கு பொதுநலவாயத்தின் தலைமைத்தவத்தையும் இலங்கை பெற்றுவிட்டால் எம்மீதான இளக்காரமும் கணக்கில் வராத சமூக ஒடுக்கு முறையும் தொடரவே செய்யும். 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.