Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு... ஈழம் இன்று! - டி.அருள் எழிலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு... ஈழம் இன்று! - டி.அருள் எழிலன்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:38 GMT ] [ அ.எழிலரசன் ]

நன்றி : ஆனந்தவிகடன் இதழ் - 22 May, 2013

“நாம் நமது தாய்நாட்டைப் பிரிவினைவாதப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம். இலங்கையின் ஒவ்வோர் அங்குல நிலத்தினுள்ளும் இப்போதிருந்து நடைமுறையில் இருப்பது மேன்மைமிக்க சட்டத்தின் ஆட்சிதான். சிறுபான்மை மக்கள் என்ற சொல்லை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எமது அகராதியில் இருந்து நீக்கிவிட்டோம். இப்போது இந்த நாட்டில் இருப்போர் இரண்டு இனங்கள்தான். ஒன்று, நாட்டை நேசிக்கும் இனம். இன்னொன்று, நாட்டை வெறுக்கும் இனம். நாட்டை வெறுப்போர் மிகச் சிறுபான்மையாகிவிட்டனர்!'' - நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2009 மே 19-ம் தேதி வடக்கில் சரணடைந்த போராளிகளைக் குடும்பத்தோடு கொலைசெய்து ரத்த தாண்டவத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்த அதே நாளில், தென் இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷே ஆற்றிய 'வெ(ற்)றி உரை’யின் சாராம்சம் இது. நாட்டை வெறுப்போர் என்று அன்று அவர் குறிப்பிட்டது தமிழ் மக்களை. இன்று நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையை வெறுப்போரின் பட்டியலில் சிங்களர் அல்லாத அனைவருமே சேர்ந்துவிட்டனர்.

உலகின் மௌனமே காரணம்!

பொதுவாக, வென்றவர்கள் தன்னடக்கத்துடனும் பெருந்தன்மையுடனும் நடந்துகொள்வதுதான் போர் மரபு. ஆனால், உலகின் மௌனமும் இந்தியா கொடுத்த துணிச்சலுமாக, 'இனி, என்னைக் கேட்க யார் இருக்கிறார்கள்?’ என்று தறிகெட்டு ஆடிக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. சமீபத்தில் 'மாற்றுக் கொள்கைக்கான மையம்’ மற்றும் 'தேசிய சமாதானப் பேரவை’ என்ற இரு அமைப்புகள் போருக்குப் பிந்தைய மக்களின் வாழ்வை ஆய்வுசெய்தது. மக்களுடைய நிலங்களை ராணுவமும் அரசாங்கமும் தொடர்ந்து கைப்பற்றிக்கொண்டிருப்பது, முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மீண்டும் நிலங்களை ஒப்படைக்காதது, நிலங்களுக்காகப் போராடும் மக்களை ராணுவத்தைக்கொண்டு அடக்குவது என அங்கு நிலவும் எதேச்சதிகார அராஜகங்களைச் சுட்டிக்காட்டி, பிரிவினைவாதம் ஆழமாக வேரோடி இருப்பதைச் வெளிக்காட்டுகின்றன அந்த அறிக்கைகள். வருடம்தோறும் ஐ.நா. மனித உரிமைப் பணியகத்தால் வெளியிடப்படும் இந்த வருடத்துக்கான அறிக்கையிலும் எந்த மாற்றங்களும் இல்லை. வழக்கம்போலக் கடத்தல், காணாமல்போதல், ஊடக அச்சுறுத்தல், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த இலங்கை அரசு தவறியிருப்பது, போர்க் குற்றம் தொடர்பாகத் தனக்குத்தானே விசாரித்துக்கொள்வதில் நம்பகத்தன்மையின்மை என வழக்கமான அறிக்கையாக விரிந்துசெல்கிறது.

 

MR-with%20wife.jpg


இந்தச் சில அறிக்கைகளுக்கு அப்பால் மூன்றுவிதமான அரசியல் நிர்பந்தங்களுக்கு ஆளாகி நிற்கிறார்கள் தமிழ் மக்கள். ஒன்று, நிரந்தரமான ராணுவ முகாம்களாக தமிழ்ப் பகுதிகளை மாற்றுவது. இரண்டு, தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளை அழித்தொழிப்பது. மூன்று, பண்பாட்டுக் கலாசார அடையாளங்களை அழித்து அனைத்தையும் பௌத்தத்தினால் நிரவுவது. இந்த அராஜகங்கள் அனைத்தையும் உலகின் மௌனம் அளித்த துணிச்சலில் உற்சாகமாக அரங்கேற்றுகிறார் ராஜபக்ஷே.

தமிழ் மக்களுக்குப் பல விதமான பயிற்சிகளை வழங்குவதாக அறிவிக்கும் இலங்கை அரசு, அந்தப் பயிற்சிகளை அளிக்கும் பொறுப்பை ராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறது. மின்னேரியா காட்டுப் பகுதியில் இப்படியான பயிற்சிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிறார்கள். தமிழ் இளைஞர்கள் என்றால், மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகித் திரும்பி வருகிறார்கள்.

தேர்தல்களின்போது தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தமிழ்த் தலைவர்களும், மலையகத்தில் மலையகத் தலைவர்களும், முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் தலைவர்களும் ஜெயிப்பார்கள் என்கிற நிதர்சனத்தை மாற்றி, எல்லா இடங்களிலும் சிங்களர்கள் வாக்குகளைப் பெற்றே ஜெயிக்க வேண்டிய நிலையை அடுத்த 20 வருடங்களில் உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறது ராஜபக்ஷே அரசு. இதற்காக ஒரு தமிழ்க் குடும்பத்துக்கு இரண்டு சிங்களக் குடும்பங்கள் வீதம் சிங்களக் குடியேற்றங்களை நடத்துகிறது இலங்கை அரசு. திரிகோணமலையில் சரிக்குச் சமமாகச் சிங்களர்கள் குடியேற்றப்பட்டுவிட்டார்கள். வரவிருக்கும் வட மாகாண சபைகளுக்கான தேர்தலில் ராஜபக்ஷே கட்சியின் வேட்பாளராக தயா மாஸ்டரையோ, கே.பி-யையோ களமிறக்கி, தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதைத்து, வட மாகாணங்களைக் கைப்பற்ற நினைக்கிறார் ராஜபக்ஷே!

பௌத்த - சிங்கள இனவாதம்!

பௌத்த - தேரவாத மரபைப் பின்பற்றும் ராஜபக்ஷேவை இயக்குவதே அடிப்படைவாத பௌத்த அமைப்புகள்தான். வடக்கில் தமிழ் மக்களின் இந்து சைவ ஆலயங்கள் இடிக் கப்பட்டு, பௌத்த விஹாரைகள் உருவாக்கப் பட்டபோது, அதுபற்றி எவரும் வாய் திறக்கவில்லை. சிலாபம் முனேஸ்வரம் பத்ரகாளிக் கோயிலில் பலி வழிபாட்டுக்கு ஜாதிக ஹெல உறுமய என்ற பௌத்த அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தபோது, வேறு எந்த சிறுபான்மை அமைப்புகளும் தமிழ் மக்களை ஆதரிக்கவில்லை. வடக்கில் தமிழ் மக்களை அமைதியாக்கிவிட்டு, அடுத்து சிங்கள - பௌத்த வெறியர்கள் கை வைத்தது கிழக்கு முஸ்லிம்களை. இப்போது சிங்கள இன வெறியின் தலைமையகமாக ராஜபக்ஷே குடும்பம் இருந்தாலும், இனவாதப் பிரிவினையைச் சிங்கள மக்களிடையே மத உணர்ச்சியாகப் பரப்புவது ஜாதிக ஹெல உறுமய, பொது பல சேன, ராவன பலய மற்றும் சிங்கள ராவய ஆகிய இந்த நான்கு அமைப்புகள்தான். ஹெல உறுமய தமிழர்களைக் கண்காணிக்கும். பொது பல சேனவும் சிங்கள ராவயவும் முஸ்லிம்களைக் கண்காணிக்கும். இலங்கையில் முஸ்லிம்கள் உண்ணும் ஹலால் உணவுகளைத் தடைசெய்ய வேண்டும் என்று விவாதம் துவக்கி, ஆங்காங்கே முஸ்லிம் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தத் துவங்கி, இப்போது முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்களைத் தாக்குவது வரை முன்னேறிவிட்டனர். பொது பல சேனா உருவாக்கிய பௌத்த சிங்கள வெறியிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அரசோடு நெருக்கமாக இருக்கும் முஸ்லிம் தலைவர் ஹக்கீம் ஒரு பக்கம் அரசோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பௌத்த இனவெறி அமைப்புகள் முஸ்லிம்களோடு சமரசமாகப் போக மாட்டோம் என அடம்பிடிக்கின்றன.

பாதிக்கப்பட்ட சமூகங்கள் அச்சத்தில் பதுங்கிக்கிடக்க, பயங்கரவாதத்தைத் தூண்டும் பௌத்த இனவெறி அமைப்புகளோ, 'ஆமாம்... நாங்கள் இனவாதிகள்தான். பௌத்த சிங்களர் அல்லாதவர்கள் இந்த நாட்டைக் குற்றங்களின் குகையாக்கிவிட்டார்கள். அதை ஆசியாவின் அதிசயமாக மாற்ற நாங்கள் நினைக்கிறோம்!’ என்று உறுமுகிறார்கள். ஆனால், புத்த மதத் தலைவர் தலாய் லாமாவோ, "இலங்கையிலும் மியான்மரிலும் முஸ்லிம்கள் மீது பௌத்தப் பிக்குகள் தாக்குதல் நடத்திவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சகலவிதமான கொலைகளும் கண்டிக்கப்பட வேண்டியவை!" எனக் கண்டிக்கும் அளவுக்கு இலங்கையில் இன வெறி எல்லை மீறிச் சென்றுவிட்டது.

வடக்கிலும் கிழக்கிலும் அச்சுறுத்தும் ராஜபக்ஷே குடும்பத்தினர், இவை எதற்குமே சம்பந்தம் இல்லாமல், எதிர்வரும் நவம்பர் மாதம் 54 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் மாநாட்டுக்காக மூன்றரை மில்லியன் டாலர் பணத்தில் கொழும்பு நகரைப் பூசி மெழுகிவருகிறார்கள். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்ட பிறகு, நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சர்வதேசச் சமூகத்துக்குக் காட்ட இந்த காமன்வெல்த் மாநாட்டை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தவிருக்கிறது இலங்கை அரசு.

வடக்கிலோ, வாழ்வில் எதையுமே மிச்சம்இல்லாமல் சிங்களப் பேரினவாதத்திடம் தின்னக் கொடுத்துவிட்டு, அம்மணமாக வீதியில் வீசப்பட்டுள்ள தமிழ் மக்கள், பிழைத்துக்கிடப்பதற்கு எந்த வருவாயும் இல்லாமல் தங்கள் சிறுநீரகங்களை அற்ப தொகைக்காக தென் இலங்கை சிங்களர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். உயிரைச் சிறுகச் சிறுக உறிஞ்சுவது என்பது இதுதானா?

 
http://www.puthinappalakai.com/view.php?20130516108274
 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலும் கிழக்கிலும் அச்சுறுத்தும் ராஜபக்ஷே குடும்பத்தினர், இவை எதற்குமே சம்பந்தம் இல்லாமல், எதிர்வரும் நவம்பர் மாதம் 54 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் மாநாட்டுக்காக மூன்றரை மில்லியன் டாலர் பணத்தில் கொழும்பு நகரைப் பூசி மெழுகிவருகிறார்கள். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்ட பிறகு, நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சர்வதேசச் சமூகத்துக்குக் காட்ட இந்த காமன்வெல்த் மாநாட்டை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தவிருக்கிறது இலங்கை அரசு
இலங்கை அரசுமட்டும் சொல்லவில்லை பாலாறும் தேனாறும் ஒடுது என்று சர்வதேசமே அப்படிசொல்கின்றது அதற்கு உதவியாகவும் இருக்கின்றது .முக்கியமாக பொதுநல அமைப்புநாடுகள் இதை இரண்டாவது தடவை செய்கின்றது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.