Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து கண்கள்: மானுட யாப்பின் மீறல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து கண்கள்: மானுட யாப்பின் மீறல்
சேரன்


2006இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எஸ்.ஏ. - 18 வகையைச் சேர்ந்த ஏவுகணைகளையும் வேறு போர்க்கலங்களையும் வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஈழத் தமிழ் இளைஞர்கள் மூன்று பேரை நியூயோர்க்கில் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்பிஐ கைதுசெய்தது. ஆயுத விற்பனையாளர்களிடம்தான் போர்க்கலங்களை வாங்குகிறோம் என அவர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால் எஃப்பிஐ உளவாளிகள்தான் ஆயுத விற்பனையாளர்கள் போலத் தொழிற்பட்டு அந்த இளைஞர்களைச் சிக்கவைத்துவிட்டார்கள். பிற்பாடு, வேறு இரு ஈழத் தமிழ் இளைஞர்களும் ‘பயங்கரவாதம்’ பரவ உதவிசெய்தார்கள் எனக் கூறியும் கனடிய அரசால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். எல்லா இளைஞர்களும் கனடியக் குடியுரிமை பெற்றவர்கள். இவர்களில் ஒருவருக்கு 25 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னொருவருக்கு 14 ஆண்டுகள். சிலருடைய வழக்கு இன்னும் முற்றுப்பெறவில்லை. அமெரிக்காவில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ்த் தண்டனை பெற்றுக்கொள்பவர்களுக்கு நன்னடத்தைப் பிணையில் வெளியில் வருகிற வாய்ப்பே கிடையாது. தண்டனையை நூற்றுக்கு நூறு வீதம் அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும்.

Edward-Snowden-pose.jpg

 

கைதுசெய்யப்பட்டு வழக்கு முடிவதற்காகக் காத்திருக்கும் ஓர் இளைஞர் புகழ்பெற்ற கனடியப் பல்கலைக்கழகம் ஒன்றின் விருதுகள் பெற்ற மாணவர். தலைமைத்துவம், பொதுநல சேவைகள் போன்றவற்றுக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டவர்; அதி திறமைசாலி. இலங்கையில் போர் நிறுத்தமும் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்ற 2002-2006 காலப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாடடுப் பகுதியான வன்னியில் கணினித் தொழில்நுட்பம் போன்ற கற்கை நெறிகளைக் கற்பித்தலிலும் தொண்டூழீயங்களிலும் ஈடுபட்டவர். இவர் மீதான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறபோது இவருடைய ஹாட் மெயில், ஜி மெயில் முகவரியிலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் எல்லாம் பயன்பட்டன. கனடியக் குடியுரிமை பெற்றவராயிருந்தாலும் அமெரிக்காவில் மையங்கொண்டிருக்கும் கணினித் தொடற்பாடல்/பரிமாற்றம் செய்ய உதவுகிற ஒரு வழங்கல் வலையமைப்பை (server) அவர் பயன்படுத்தியமையால் அவரது எல்லா மின்னஞ்சல்களையும் வலைத் தொடர்பாடல்களையும் அமெரிக்காவின் புலனாய்வுத்துறை கண்காணித்துச் சுவீகரித்துக்கொண்டுவிட்டது. இது நடந்தது 2006 - 2007இல். எட்வேர்ட் ஸ்நோடன் அமெரிக்க அரசின் இத்தகைய ‘ஒட்டுக்கேட்கும்’ நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதற்கு ஏழு ஆண்டுகள் முன்!


தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற எல்லா வகையான தொடர்பாடல்களையும் கண்காணிக்கும் வழிமுறைகளை அமெரிக்க அரசின் புலனாய்வு நிறுவனங்கள் இரகசியமாகவும் நீதிமன்ற அனுமதியின்றியும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வந்துள்ளன என்பதை லண்டன் நாளிதழான கார்டியனும், அமெரிக்காவின் நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்டும் ஜூன் மாதம் முதல் கிழமை அம்பலப்படுத்தின. இந்த ஊடகங்களுக்கு ஆதாரங்களையும் தகவல்களையும் வழங்கியவர் எட்வேர்ட் ஸ்நோடன் எனும் கணினித் தொடர்பாடல் வல்லுநர். கூகுள், மைக்ரோஸாப்ட், ஆப்பிள் நிறுவனங்களின் வழங்கல் வலையமைப்பிலிருந்து நேரடியாக எல்லாத் தகவல்களையும் அமெரிக்க உளவு நிறுவனங்கள் எடுத்துக்கொண்டன. 2007இல் மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் வலையமைப்பு உளவு நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. யாஹு 2008இலும் கூகுள், முகநூல் என்பன 2009இலும் யூ ட்யூப் 2010இலும் ஸ்கைப் மற்றும் எஓஎல் என்பன 2011இலும் ஆப்பிள் 2012இலும் உளவு நிறுவனங்களின் கண்காணிப்புக்குக் கீழ் வந்தன. கோடிக்கணக்கான உரையாடல்கள், முகநூல் தரவுகள், மின்னஞ்சல்களை இந்த உளவு நிறுவனங்களின் ‘ஆய்வாளர்கள்’ நாளும் பொழுதும் கண்காணித்து வருகிறார்கள். “நாங்கள் உரையாடலை ஒட்டுக்கேட்கவில்லை; மின்னஞ்சல்களை வாசிப்பதில்லை; அவற்றின் Meta Dataவை மட்டுமே கவனிக்கிறோம்” என்று அதிபர் பராக் ஒபாமா கூறுகிறார். அதாவது, பொருளடக்கத்தை மட்டுமே பார்க்கிறோம்; நூலை வாசிப்பது இல்லை என்று சொல்வதுபோல! அமெரிக்கக் காங்கிரஸினதும் நீதிமன்றங்களினதும் அனுமதியை உரிய முறையில் பெற்றுக்கொண்டுதான் இத்தகைய தீவிரமான - பொதுமக்களின் அந்தரங்கத்தை மீறும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க அரசு கூறினாலும் அது உண்மையல்ல.

NSA-Director-Keith-Alexande.jpg

 

இத்தகைய ஒட்டுக்கேட்டலும் கண்காணிப்பும் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது என்ற சந்தேகம் பல மட்டங்களில் இருந்தாலும் எத்தகைய ஆதாரங்களையும் எவரும் முன்வைக்க முடியாமல் இருந்தது. அமெரிக்காவின் மைய நீரோட்ட ஊடகங்களும் இதுபற்றிய தீவிரமாக புலனாய்வு இதழியலுக்குள் இறங்க எத்தனிக்கவில்லை. பாதுகாப்புக்காகவும், ‘பயங்கரவாத’ ஒழிப்புக்காவும் நமது சுதந்திரங்களையும் அந்தரங்கத்தையும் விட்டுக்கொடுக்கப் பலர் தயாராக இருந்தார்கள்.

2005இல் ஜோர்ஜ் புஷ் அரசு, நீதிமன்ற ஆணையைப் பெற்றுக்கொள்ளாமல் ஒட்டுக்கேட்கும் நடைமுறையை ஆரம்பித்தது. அதனை நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்திய பிற்பாடு, ‘பயங்கரவாத கண்காணிப்புப் பொறிமுறை’ (Terrorist Surveillance Program) ஒன்று நடைமுறையிலிருப்பதாக புஷ் அரசு ஒப்புக்கொண்டது எனினும் Foreign Intelligence Surveillance Court - FISA என்று வழங்கப்படும் வெளிநாட்டுப் புலனாய்வு கண்காணிப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் மரபார்ந்த ஒரு நீதிமன்றம் அல்ல. இரகசியமான சான்றுகளை இரகசியமாக அரசு முன்வைக்கும். வாதிட முடியாது. என்ன விவரம் என எவருக்கும் தெரியாது. உண்மையில் இவற்றை நீதிமன்றங்கள் என அழைப்பதே பெரும் நகைச்சுவை. இந்த நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதிலும் வழமையான ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அரசு கொண்டுவரும் எந்த விடயத்தையும் அப்படியே ஏற்று முத்திரை குத்துகிற அமைப்புதான் FISA. இத்தகைய FISA கூடம் அனுமதி பெற்றமைக்குக்கூட எல்லாச் சந்தர்ப்பங்களிலும் முறையான ஆதாரங்கள் இல்லை. அமெரிக்கர்கள் அல்லாதோரின் தொடர்பாடல்களைத் தான் ஒட்டுக்கேட்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டாலும் எல்லா அமெரிக்கர்களுடைய எல்லா தொடர்பாடல்களுமே கண்காணிப்பின் மிகப்பெரும் விழிவலயத்துக்குள் ஆட்பட்டதாக இருக்கிறது எனத் தெரியவந்துவிட்டது. உலகத்தின் மீது பாரிய கண் பார்வையை எந்த நேரமும் வன்மத்துடன் வீசிக்கொண்டிருக்கும் ஒரு Pan Opticianஉம் மிஷேல் ஃபூக்கோவும் நினைவில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இத்தகைய நடவடிக்கைகளுக்குக் குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் தயக்கமின்றி ஆதரவு வழங்குவது பொதுவானது என்றாலும் இந்த முறை ஒபாமாவின் ஜனநாயக் கட்சி ஆதரவாளர்களில் ஏறத்தாழ 60 சதவீதமானோர் இத்தகைய கண்காணிப்புக்கு ஆதரவாக இரப்பது கருத்துக்கணிப்புக்களிலிருந்து தெரியவந்திருக்கிறது. (மேலும் தகவல்களுக்கு wired.com இணையத் தளத்தைப் பார்க்கலாம்.)

தனிமனித சுதந்திரம், அந்தரங்கத்துக்கான உரிமை, பேச்சுரிமை போன்றவற்றை ஒட்டுமொத்தமாக மீறுகின்ற இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவின் அரசியல் வாழ்வை மட்டுமல்ல மானுட உரிமை, விழுமியங்களையும் கேலிக்குள்ளாக்குகின்றன. இணைய வழி கண்காணிப்புக் குழு எல்லா வகையான மின்னியல் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்கவும் அமெரிக்க அரசு கீத் அலெக்ஸாண்டர் என்னும் படைத்துறைத் தலைவரின் கீழ் உருவாக்கியிருக்கும் தேசிய பாதுகாப்பு நிறுவனத்துக்கு 4.7 பில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிஐஏ போன்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 4.4 பில்லியன் டொலர்கள் மட்டும். 14000 ஊழியர்கள் இணைய உளவு சேவையில் பணியாற்றுகிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஒற்றர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். இதனையொத்ததான இன்னோர் நிறுவனம் கனடாவின் CSEC (Communications and Secutiry Establishment of Canada) என்பதாகவும் இந்த இரண்டு பெரிய நிறுவனங்களுடன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலுள்ள கண்காணிப்பு நிறுவனங்களும் இணைந்து ‘ஐந்து கண்கள்’ எனும் தொழில்நுட்ப, புலனாய்வுப் பரிமாற்ற இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. இந்த ‘ஐந்து கண்’களின் வீச்சுக்குத் தப்பி உலகத்தில் எங்காவது தொடர்பாடல் இடம்பெற முடியுமா என்பது பெருத்த சந்தேகமாகும்.


இதனை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்? ‘பயங்கரவாத’ நடவடிக்கைகளில் தொடர்பில்லாதபோது நாங்கள் ஏன் இத்தகைய கண்காணிப்பைப் பற்றி அச்சமடைய வேண்டும்? போர்ச் சூழலில் கண்காணிப்புத் தவிர்க்க முடியாததுதானே? போன்ற பல கேள்விகளை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் எழுப்புகிறார்கள். உண்மையில் நாட்டின் மக்கள் அனைவரையுமே கண்காணிப்பில் இணைத்திருப்பதை எல்லா வகையான அரசுகளும் எப்போதுமே விரும்பி வந்திருக்கின்றன. எனினும் இதற்கான தொழில்நுட்பமும் சாத்தியமும் இப்போதுதான் கிடைத்துள்ளது. ஐந்து முக்கியமான காரணங்களுக்காக இத்தகைய கண்காணிப்பையும் ஒட்டுக்கேட்டலையும் அரசுகள் செய்வதை நாங்கள் எதிர்க்க வேண்டியிருக்கிறது.

 

imagesvv-copy.jpg

 

1. ஜனநாயகத்தினதும் மானுட யாப்பினதும் அடிப்படை நம்முடைய அந்தரங்கமும் தயக்கமும் அச்சமும் இன்றி நமது கருத்துக்களை வெளியிடும் சுதந்திரமாகும். கண்காணிப்பின் கொடூரம் இவற்றைத் தீவிரமாக மீறுகிறது.

2. தாராளவாத ஜனநாயக அரசுகள் எல்லாவற்றினதும் அவற்றின் அரசியல் யாப்புக்களினதும் மனித உரிமைகளினதும் மையம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதாகும். இதனை உறுதிப்படுத்துவதற்காகவே அரசுக்கும் தனிமனிதர்களுக்குமிடையேயான எல்லைகள் வரையறுக்கப்படுகின்றன. ஜனநாயகத்தின் முதுகெலும்பு இதுதான். கனடியப் பிரதமராக இருந்த பியர் ட்றூடொ என்பவரின் புகழ்பெற்ற வாக்கியம் ஒன்று உண்டு: குடிமக்களின் படுக்கை அறைக்குள் அரசுக்கு எந்த வேலையுமில்லை!

youtube-icon.jpg

 

3. இத்தகைய கண்காணிப்புத் தொழில்நுட்பம் சந்தேகத்துக்குரிய பல சமூகங்களை உருவாக்குகிறது. இதனை Communities of Interest என்று அவர்கள் நாகரிகமாக அழைக்கிறார்கள். தொடர்பாடல்களையும் முகநூல் அரட்டைகளையும், மின்னஞ்சல்களையும் உளவு செய்வதன் மூலம் அரசுக்கெதிரான ‘குழுமங்களை’ அவர்கள் இனங்காணுகிறார்கள். ஜனநாயக உரிமைக்காக எழுதுபவர்கள், மரண தண்டனை ஒழிப்பைக் கோருபவர்கள், சூழலியல் ஆர்வலர்கள் என எல்லோரையும் இத்தகைய சந்தேகக் குழுமங்களுக்குள் இணைத்துவிடுகிறார்கள்.

4. தேசிய பாதுகாப்புச் சட்டங்கள், பயங்கரவாத/தீவிரவாத ஒழிப்புச் சட்டங்கள் போன்ற எல்லாவற்றிலும் அவை பற்றிய வரைவிலக்கணங்களும் விவரணங்களும் மிகப் பொதுவானதாகவும் அரசுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் தீவிரவாத/பயங்கரவாத முத்திரை குத்த வாய்ப்பானதாகவும் வரையப்பட்டிருக்கின்றன. மிகப் பரவலாக, மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் குடிமக்கள் மீது இத்தகைய பொதுவான குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தும் சமூக, உளவியல், அரசியல் தாக்கங்கள் மிகப் பயங்கரமானதாகும்.

aol06_rev_grad_blue_rgb.jpg

 

5. பயங்கரவாதத்துக்கான பொருண்மிய ஆதரவு வழங்குவது பெருங்குற்றம் ஆகும் என அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டக்கோவை கூறுகிறது. வேறு பல நாடுகளுக்கும் இது பொருந்தும். பொருண்மிய ஆதரவு என்பது, அமெரிக்க உயர்நீதிமன்றத்தின் ‘தெளிவுரை’யின்படி “தார்மீக ஆதரவு, கருத்தியல் ஆதரவு, பிரசார ஆதரவு” எல்லாமேதான்! சுற்றுச்சூழல் மாசடைவதை எதிர்த்து ஊர்வலம் போனவரை கைதுசெய்த படையினரை எதிர்த்து எழுதினால் நீங்கள் குற்றவாளி; ஏனெனில் தொழிற்சங்கங்கள் மனித உரிமை இயக்கங்கள் சுற்றுச்சூழல் இயக்கங்கள், மாமிச உணவை எதிர்ப்பவர்கள். நிர்வாணமாக வாழ்வதை நேசிப்பவர்கள், பூர்வீக குடிமக்கள், ஆதிவாசிகள், தமிழர்கள், பாலஸ்தீன மக்கள், குர்திய மக்கள் என எல்லோருமே ‘பயங்கரவாத’ சாத்தியப்பாடு உள்ளவர்கள் என்று இத்தகைய கண்காணிப்பின் வாக்குமூலங்கள் சொல்கின்றன. எனவே, அடிப்படையில் சாதாரண மனிதர்களுடைய நலன், பாதுகாப்பு, நல்வாழ்வு பற்றியதல்ல இக்கண்காணிப்பு அரசியல். இது அரசுகளதும் அவற்றைத் தாங்கிப் பிடித்து வலுவாக்கி வருகிற பெருநிதி நிறுவனங்களது நலன் பேணவும் பாதுகாப்புக்காகவுமே எழுந்திருக்கிற ‘பயங்கரவாத அரசியல்.

எட்வேர்ட் ஸ்நோடன் அம்பலப்படுத்திய வற்றிலிருந்து அமெரிக்க மக்களும் அமெரிக்க சிவில் சமூகமும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு மிகச் சிறப்பான பாடம் உண்டு: உலகின் வல்லரசாகத் தொடர்ந்து அமெரிக்கா விளங்க வேண்டும் என்ற பேராசை உங்களுக்கு இருந்தால் தயவுசெய்து, அடிப்படை உரிமைகள், அந்தரங்கம், சுதந்திரம் என்பனவற்றை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. வல்லரசு ஆசையும் ஜனநாயகமும் ஒன்றிணைய முடியாது. சீனாவுக்கு இது சிக்கல் அல்ல. வல்லரசு, பிராந்திய வல்லரசு, போன்ற கனவுகளில் இருக்கும் பல நாடுகளுக்கு இது ஒரு பாடமாக அமையலாம். ஆனால் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள அவை தயாராக இல்லை.
 
http://www.kalachuvadu.com/issue-163/page24.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.