Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒருங்கிணைந்து கடமையாற்ற TNA ஆவன செய்ய வேண்டும்:-

Featured Replies

மஷூர் மௌலானாவின் அகவை 80 விழாவில் 2013.02 21ந் திகதி மாலை 4.30 மணிக்கு தமிழ்சங்க மன்டபத்தில் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆற்றிய தலைவருரை

wigneswaran-1_CI.jpg

மஷூர்  மௌலானா அவர்களின் அகவை எண்பது நிறைவு விழா 2013ம்  ஆணடு பெப்ரவரி  21ந்  திகதி மாலை 4.30 மணிக்கு தமிழ்சங்க மண்ட்டபத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதியரசல் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆற்றிய தலைவருரையை என் நண்பரும் ஊடகவியலாளருமான வரதராஜன் நியூசிலாந்தில் இருந்து அனுப்பி வைத்தார் காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. 

இந்த விழாவின் நாயகன் மஷூர்  மௌலானா அவர்கள் பற்றிய எனது நினைவையும் இங்கு பதிய வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. 2006ல் மீண்டும் உக்கிரமடைந்த போரின் போது கிழக்கில் திருகோணமலையில் இருந்து வாகரையை இலங்கைப் படை கைப்பற்ற நடத்திய யுத்தத்தில் லட்சக்கணக்கான கிழக்கு தமிழ்  மக்கள் நிர்ரகதியானர்கள். இந்தக் காலப்பகுதியில் ஒரு சனிக்கிழமை காலைப் பொழுதில் சூரியன் எம் எம் விழுதுகள் நிகழ்ச்சிக்காக  மஷூர்  மௌலானாவிடம் ஒரு செவ்வி கண்டேன். அன்றைய காலப்பகுதியில் இலங்கைப்படையினரின் கொடுமைகளை துணிந்து வெளிப்படுத்திய மஷூர் மௌலானா அவர்கள் "தானியத்திற்கு புகழ்பெற்ற தானியக் கழஞ்சியமாக இருந்த கிழக்கில் நான் அறிய எக்காலப்பகுதியிலும் மக்கள் சோற்றுக்காக ஏங்கியதோ அலைந்ததோ இல்லை. இப்போ எனதருமை சகோதரர்கள் வீதியில் சோற்றுக்காக பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கிறார்கள்" என்று சொல்லிய போது அவரது நா தளதளத்து பேச முடியாது மௌனித்தார். அந்த உன்னத மனிதர் பற்றிய பதிவை இங்கு தருவதில் குளோபல் தமிழ்ச் செய்திகள் மகிழ்ச்சி அடைகிறது.

நடராஜா குருபரன்

குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவா மகேஷ்வ்வரஹ குருசாக்ஷ்த் பரப்ப்பிரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ||

பெருமதிப்புக்குரிய நண்பர் மஷுர் மௌலானா அவர்களே, வருகை தந்துள்ள சான்றோர்களே, என்னை இக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும்படி வலிந்தழைத்த நண்பர் ஜின்னா ஷெரீப்டீன் அவர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே!

நண்பருக்கு 81 வயது சென்ற மாதம் 31ந் திகதி பூர்த்தியானது. நாங்கள் சட்ட மாணவர்களாக இலங்கைச் சட்டக் கல்லூரியில் இருந்த போது என்னிலும் வயது கூடியவர் மஷுர் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

காரணம் என்னிலும் இளமை மிக்கவராக அந்த நாட்களில் அவர் காட்சி அளித்தார். அவரின் அந்தக்கால இளமை பற்றி திரு.அஸ்வர் அவர்கள் எழுதியதை அவரின் மருதமுனை முத்து|| என்ற நூலில் வாசித்தேன். 

பாராளுமன்ற செயலாளர் சாம் விஜேசிங்க அவர்கள் மஷுரின் வயது என்ன என்று கேட்க, அஸ்வர் 35 என்று கூறினாராம். அதற்கு சாம் விஜசிங்க நம்பமுடியவில்லை. இவரைப் பார்த்தால் 25 வயதுடையவர் போல தோற்றமளிக்கின்றார்ளூ இவருடைய பிறப்பத்தாட்சிப் பத்திரத்தை எடுத்து வாருங்கள்|| என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். மேலவைக்கு நியமிக்க 35 வயதை எட்டியிருக்க வேண்டும் என்பதாலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 35 வயது மனிதர் 25 வயதாகக் காட்சி அளித்தார் என்றால் நான் மஷுரைச் சந்தித்தது அவரின் 30ம் வயதில். எவ்வளவு இளமையுடன் இருந்திருப்பார் என்று நீங்களே கணியுங்கள். அவரை நண்பராக நான் ஏற்றுக்கொண்டது அவர் சட்டக்கல்லூரிக் கூட்டம் ஒன்றில் தமிழ்ப் பேசிய உடனே தான். அவரின் குரலோ, தமிழோ அல்லது பேசிய பொருளோ எது என்று அறியேன். ஆனால் அவரின் பேச்சு மயிர்க் கூச்செடுக்க வைத்தது. அடடே! அழகு தமிழ்ப் பேசுவோர் முஸ்லீம் களுக்குள்ளும் இருக்கின்றார்களா என்று யோசித்தேன். காரணம் நான் பிறந்ததே புதுக்கடையில்.

அதாவது Hulftsdorp  என்று அழைக்கப்படும் உச்ச நீதிமன்றம் நிலை பெற்றிருக்கும் அந்த வட்டாரத்தில். அங்கு முஸ்லீம்கள் அதிகம். எனது தாய்மாமனின் வீடும், அவரின் சட்டத்தரணி அலுவலகமும் அங்கிருந்தது. அவர் வீட்டில்த்தான் நான் பிறந்தேன். அங்கு வருபவர்கள் அதிகம் பேர் அந்தக் காலத்தில் செட்டிமார்களும் முஸ்லீம்களுந்தான். கொழும்பு முஸ்லீம்கள் தமிழை ஒரு விதமாகப் பேசுவார்கள். இருப்பதை ஈக்கி|| என்பார்கள். போய் வருகின்றேன் என்பதைப் பெய்த்து வாரேன்|| என்பார்கள். அதனால் என்பதற்கு அது சுட்டி|| என்பார்கள். அதைக்கேட்டுப் பரீட்சயப்பட்ட எனக்கு முஸ்லீம்கள் என்றால் அவ்வாறு தான் தமிழ் பேசுவார்கள் என்று மனதில் பதிந்து விட்டது.

எனது மாணவப் பருவத்தில் றோயல் கல்லூரியில் முஸ்லீம்கள் பொதுவாக ஆங்கிலத்திலேயே பேசினார்கள். அத்துடன் பெரும்பாலானவர்கள் சிங்கள மொழியையே தேர்ந்தெடுத்திருந்தார்கள். ஆகவே அழகு தமிழ்ப் பேசும் இஸ்லாமியரைக் காணாதே வளர்ந்திருந்தேன். ஆனால் மஷுர் தமிழ் பேசுவதை நான் சட்டக்கல்லூரியில் கேட்ட போது திடுக்குற்றேன். எம்மிலும் பார்க்க நற்தமிழில் பேசுகின்றாரே இவர் என்று சற்றுப் பொறாமையாகவும் இருந்தது. தமிழ் இலக்கியம், தமிழ்ப் பேச்சுப் போட்டி என்று பலதிலும் றோயல் கல்லூரியில் பரிசுகள் வாங்கியிருந்த எனக்கு, தமிழ் சரளமாக வரும் என்ற மமதை இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். என்னை விட ஒரு முஸ்லீம் இத்தனை அழகாகத் தமிழ் பேசுகின்றார் என்றவுடன் மஷுர் மீது ஒரு நல்லெண்ணம், மதிப்பு அதே நேரம் ஒரு மதிப்பச்சம் கூட எனக்குள் எழுந்து விட்டது. யார் இவர்? என்று கேட்டேன்.

இவரைத் தெரியாதா? இவர்தான் மஷுர் மௌலானா. சமஷ்டிக் கட்சித்தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் தத்தெடுத்த புத்திரன் என்றார்கள் என் யாழ்ப்பாணத் தமிழ் நண்பர்கள். ஷஷஅவர் ஒரு மௌலவியா|| என்று கேட்டேன். காரணம் மௌலானா, மௌலவி என்றால் இஸ்லாமிய மத நூல்கள், சட்ட நூல்கள் போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர்களே அவர்கள் என்று அப்பொழுது கேள்விப்பட்டிருந்தேன். இல்லை அவரின் வம்சப் பெயர் அது என்று யாரோ கூறினார்கள். அதன் பின்னர் தான் வகுப்பில் மஷுரை நான் கண்டு பேசத் தொடங்கினேன். 

அந்தக் காலத்தில் நான் இடதுசாரிப் போக்குக் கொண்டவன். சமஷ்டிக் கட்சியை அவ்வளவு விரும்பாதவன். சமஷ்டிக் கட்சி என்று பெயர் வைக்காது தமிழ் அரசுக் கட்சி என்று பெயர் வைத்ததே ஒரு ஏமாற்று வித்தை என்ற கருத்தில் இருந்தேன். என்றாலும் அனல் பறக்கும் மஷுரின் பேச்சுக்கள் எனக்குப் புதுமையாகவும் புத்துணர்வு கொடுப்பதாகவும் அமைந்திருந்தன. ஒரு பேச்சினால் மக்களை ஒருமித்துக் கிளர்ந்தெழச் செய்ய முடியும் என்பதை மஷுர் பேசியபோது நான் உணர்ந்துகொண்டேன்.

அதன் பின்னர் தான் கிழக்கிலங்கை மருதமுனை பற்றி அறியத் தொடங்கினேன். பொதுவாக அவ்வூர் மக்கள் தமிழறிவு பெற்றவர்கள். தமிழில் அழகாக அளவளாவக் கூடியவர்கள் என்று அறிந்து கொண்டேன். மட்டக்களப்பில் இருந்து தெற்கே 22 வது மைல்கல்லில் அமைந்திருக்கின்றது மருதமுனை என்று நம்புகிறேன். மதுரமான தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கிராமத்தை மதுரமுனை என்று அழைக்காது மருதமுனை என்று பெயர் வைத்தது எதற்காக என்று நான் கேட்டதுண்டு. மருதமரங்கள் பல உயர்ந்து நின்றதால் அவ்வூர் மருதமுனை எனப்பட்டது என்று என் கிழக்கிலங்கை நண்பர்கள் கூறினார்கள். செழித்து வளரும் மருத மரங்களின் கீழ் தோண்டப்படும் கிணறுகளிலிருந்து ஊற்றெடுக்கும் நீர் சுத்தமான தெளிந்த நீராக இருக்கும் என்று கூறுவதைக்கேட்டுள்ளேன். போய்ப் பார்த்ததில்லை. 

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக இருந்த போது அதைச் செய்திருக்கலாம். மஷுருடன் போய் மருதமுனை பார்த்திருக்கலாம். ஆனால் காசி ஆனந்தனுக்குக் காசின்றிப் பிணை அளித்ததால் என்னை கழிந்து போ என்று ஏழு மாதங்களுள் மட்டக்களப்பில் இருந்து விரட்டி சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக்கி விட்டார்கள் பதவியில் இருந்தவர்கள். நீதித்துறையில் சேர்ந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக எனது முதல் நியமிப்பு இருந்ததை வெகுவாக வரவேற்றவன் நான். என் மனைவியார் கூட அக்காலத்தில் மட்டக்களப்பில் காணி வாங்கி வீடு கட்டுவோமே என்று கேட்டிருந்தார். எனது தந்தையார் கல்வி கற்றது  St.Michaels கல்லூரியில். அவர் அரசாங்க சேவையில் சேர்ந்த போது முதலில் கடமையாற்றியது சம்மாந்துறையில். அவரின் மிக நெருங்கிய நண்பர் காரியப்பர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் நான்

கேள்விப்பட்டிருந்ததால் மட்டக்களப்பு, கல்முனை போன்ற பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற அவாவில் இருந்தேன். ஆனால் திடீரென்று வடக்கிற்கு விரட்டப்பட்டதால் மஷுரின் மருதமுனையைப் பார்க்கக் கிடைக்கவில்லை. என்றாலும் மஷுரின் மீது இருந்த, அவரின் தமிழின் மீதிருந்த அன்பின் காரணமாக மஷுர் பற்றி சில விடயங்கள் அறிந்து வைத்துக் கொண்டிருந்தேன். அவரின் பாட்டனார் செய்யத் உதுமான் மௌலானா யெமன் நாட்டில் இருந்து இலங்கைக் கரையை வந்தடைந்தார் என்றும் வர்த்தகம் நிமித்தம் கிழக்குக் கரை மருதமுனையைச் சென்றடைந்து அம் மண்ணின் ஒரு பெண்ணை மனைவியாகக் கொண்டு அங்கு நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார் என்றும் தெரிந்து கொண்டேன்.

அண்மையில் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். நீயா நானா|| புகழ் கோபிநாத் நடத்தும் நிகழ்ச்சி அது. அவர் வந்திருந்த நேயர்களிடம் அதுவும் பெண்களிடம் ஒரு கேள்வி கேட்டார். தென்னிந்தியத் தமிழ் நாட்டில் மிகவும் அழகான பெண்கள் எங்கு வசிக்கின்றார்கள் என்று கேட்டார். இரண்டு மூன்று பேர் காயல்ப்பட்டினம் என்று பதில் இறுத்தார்கள். அதாவது அங்குள்ள பெண்கள் அரேபிய நாட்டில் இருந்து வந்தவர்களின் வாரிசுகள் என்றும் மிக அழகாக இருக்கின்றார்கள் என்றும் கூறினார்கள். மஷுரின் குடும்பத்தாரும் மத்திய கிழக்கில் இருந்து வந்தவர்களின் வாரிசுகள் என்ற முறையில் அரபு நாட்டு அழகைப் பிரதிபலிக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது. மஷுர் கொழும்பு சாஹிரா கல்லூரியில் படித்த காலத்தில் என் நண்பர்கள் இருவர் அவரின் சம காலத்தவர். ஒன்று காலஞ்சென்ற பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், மற்றையவர் சட்டக்கல்லூரியில் என் மாணவராக இருந்த காலஞ்சென்ற தினகரன் ஆசிரியர் திரு.ஆர்.சிவகுருநாதன் அவர்கள். அவர்கள் இருவரையும் மஷுரையும் கண்டு அவர்கள் பேச்சுக்களைக் கேட்ட போது சாஹிராக் கல்லூரி அந்தக் காலத்தில் எங்கள் றோயல் கல்லூரி போன்று எந்த அளவுக்குத் தமிழ்ப் பற்றுதலையுந் தமிழறிவையும் தமிழ் ஆற்றலையும் அதன் மாணவர்களுக்குப் போதித்து வளர்த்தது என்பது புலப்பட்டது. றோயல் கல்லூரியில் என் சிரேஷ்டராகிய பேராசிரியர் கைலாசபதி படித்த காலத்தில் சாஹிராவில் பேராசிரியர் சிவத்தம்பி கல்வி கற்றார். இரு கல்லூரிகளும் அனைத்து இன மாணவர்களையும் உள் எடுத்து இன ஐக்கியத்திற்கு வழி வகுத்தன. சட்டக் கல்லூரியில் எங்கள் சமகாலத்தவர்கள் வீ.ஆனந்தசங்கரி, மற்றும் என் மகனாரின் மாமனார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்கள் தர்மசிறி சேனாநாயக்க, டெனிசன் எதிரி சூரிய போன்றோர். அரசியலில் காலடி எடுத்து வைத்ததால் மஷுர் சட்டத் தொழிலைத் தவற விட்டு விட்டார். அவர் அரசியலில் மிக இளமைக் காலத்திலேயே நுழைய வேண்டிய சூழ்நிலை. அதாவது மட்டக்களப்பு சிவானந்தாக் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் தலைவராக மஷுர் இருந்த போது தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களும் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை அவர்களும் அக் கல்லூரிக்கு விஜயம் செய்தார்கள். மஷுர் அங்கு பேசியதைச் செவி மடுத்த இம்மூவரும் தமது கட்சிக்குத் தமிழ்ப் பீரங்கி ஒன்று கிடைத்து விட்டது என்று மகிழ்வுற்றனர். அவர்கள் உடனே மஷுரின் தந்தையார் செய்யத் செய்ன் மௌலானாவைக் காண மருதமுனைக்கு விரைந்தனர்.

அழகாகத் தமிழ்ப் பேசும் உங்கள் மகன் தமிழ் - முஸ்லிம் உறவுக்கு இலக்கணமாகத் திகழ்கின்றார். அவரை எங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ள உங்கள் அனுமதி தேவை|| என்று தமிழரசுக் கட்சியின் தந்தை செல்வா விடுத்த வேண்டுகோளை மஷுரின் தந்தையால் மறுக்க முடியவில்லை. தந்தை செல்வா பாதுகாப்பில் மஷுர் விடப்பட்டார். அரசியல், மஷுரைச் சிறை செல்லக் கூட வழிவகுத்தது. அப்பேர்ப்பட்ட அவதியான காலகட்டத்தில் அவரால் எங்களுடன் சேர்ந்து சட்டம் கற்க முடியாதது துரதிர்ஷ்டமே. அவர் கற்றிருந்தால் நீதி மன்றங்களில் அவர் குரல் ஷஷகணீர்|| என்று ஒலித்திருக்கும். எனினும் செனட் சபைக்கு அவர் மிக இளவயதில் நியமிக்கப்பட்டார். அவருக்கு அனுபவம் கொடுத்த பாடங்கள் எங்களுக்கு அறிவு கொடுத்த பாடங்களிலும் பார்க்க அதிகமாக இருந்தது. செனட் சபையில் அவர் அளித்த கன்னியுரை வரலாறு, சமகால அரசியல், பாராளுமன்ற - செனட் சபைப் பாரம்பரியங்கள், இலக்கிய மேற்கோள்கள் யாவுஞ்செறிந்ததாக அமைந்திருந்தது. வட இலங்கை தமிழ் மக்களின் மனதில் அக்காலத்தில் மஷுர் நீங்காத இடம் பெற்றிருந்தார். வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்கள் உறவின் பாலமாக அப்போது அவர் விளங்கினார். தமிழரசுக் கட்சியை வெறுத்த தமிழ் காங்கிரஸ்காரர்கள் கூட மஷுர் தமிழ் பேசுகின்றார் என்றால் ஒட்டுக்கேட்பார்கள். தங்களிடம் அப்பேர்ப்பட்ட ஒரு தமிழ்ப் பீரங்கி இல்லையே என்று அந்தக்காலத்தில் அங்கலாய்த்தார்கள்.

அதேபோல் மஷுரின் தமிழ்ப் பேச்சும், அஸ்வர் அவர்கள் அதற்களித்த சிங்கள மொழி பெயர்ப்பும் சிங்கள மக்களிடையே கூட நல்ல வரவேற்புப் பெற்றன. காலஞ்சென்ற ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் தனது கூட்டங்களில் இவர்கள் இருவருக்கும் முறையே பேசவும் மொழிபெயர்க்கவும் இடமளித்தார். தேசிய ஒற்றுமைக்கு, இனத்தாரிடையே நல்லிணக்கத்திற்குப் பாடுபட்டு வரும் ஒரு மகானுபாவர் எங்கள் மஷுர். உச்ச நீதிமன்ற வரவேற்புரையில் நான் என்னைப் பற்றிக்கூறிய போது இந்த நாட்டின் முக்கிய மொழி மூன்றையும், மதங்கள் நான்கையும் ஓரளவு தெரிந்து வைத்திருப்பதாலும், நாட்டின் பெரும்பாலான இடங்களில் சிறிது காலமேனும் வசித்து வந்திருப்பதாலும் நான் என்னை முழுமை பெற்ற ஒரு இலங்கையன் என்று கொள்ளத் தகுதி பெற்றவன் என்று கூறினேன். ஆனால் மஷுர் பற்றி திரு அஸ்வர் அவர்கள் தமது மருதமுனை முத்து|| என்ற நூலில் கூறியிருப்பது எம்மிலும் பார்க்க ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர் மஷுர் என்பதை வெளிக்காட்டுகிறது. அவர் கூறுகிறார் - ஷஷவடக்கிலுஞ் சரி, தெற்கிலுஞ் சரி, சன்மார்க்கக் கூட்டங்களானாலும், சமத்துவ போராட்டங்களானாலும், சாஹித்ய விழாக்களானாலும், சர்வ மத பிரார்த்தனைகளானாலுந் தேசிய ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வண்ணம் நான்கு மறைகளின் பொதுமைக் கருத்துக்களை அடி நாதமாகக் கொண்டு தன் உரையை முடிக்கும் அவரது பாணி...... அனைத்து இன மக்களினதும் மனங்களில் மகிழ்ச்சி கொப்பழிக்கச் செய்யும்|| என்றார். இன்று பெரும்பான்மை சிங்கள மக்கள் முழுமை பெற்ற இலங்கையர் சிறுபான்மையரிடையே இருக்கக் கூடும் என்பதைக் கூட ஏற்க மறுக்கின்றனர். சிங்களத்தையும் பௌத்தத்தையுந் தெரிந்து வைத்துக் கொண்டால் அவர்கள் உண்மையான இலங்கையர்கள் என்று நினைத்து விடுகின்றார்கள். ஆனால் என் கருத்துப்படி மூன்று மொழிகளை அறிந்து நான்கு மதங்களின் அடிப்படைகளை அறிந்து நாட்டின் பல்வேறு கலாசார முறைமைகளைக் கண்டுகேட்டறிந்த ஒருவரே உண்மையான இலங்கையர் என்று கூறப்படலாம் என்ற நம்புகின்றேன். ஏனென்றால் இந் நாடு இறைவன் அருளால் ஒரு பல்லின, பன்மொழி, பலமதங்கள் உறைந்திடும் நாடாக மலர்ந்துள்ளது. அதனை உணர்ந்தவர் தான் மஷுர்.

ஒரு முறை நான் அகலவத்தைக்குப் போயிருந்தேன். மாலை நேரம் காற்று வாங்கத் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். ஜன நடமாட்டம் அற்ற தெரு அது. அப்பொழுது ஒரு சிங்களவர் அந்த வழியாக வந்தார். என்னைக் கண்டதும் Baharedha  என்றார். எனக்கு விளங்கவில்லை. எனினும் அவர் மனம் கோணாமல் ஷஷஅவிதெனவா|| என்றேன். அவிதெனவா என்றால் நடை போகின்றேன் என்று அர்த்தம். வீடு திரும்பியதும் “Baharedha”  என்பதின் அர்த்தம் கேட்டேன். தொலை தூரத்துக்கா?|| என்று பதில் வந்தது. நான் யாழ்ப்பாணத்தில் மாதகலில் ஒருமுறை நடந்து வருகையில் தமிழில் ஒருவர் கேட்ட கேள்வி தொலைக்கோ?|| என்பது. மொழி வித்தியாசப்பட்டாலும் வாழ் நடைமுறைகளில் எம்முள் வித்தியாசம் இல்லை என்பதை அன்று உணர்ந்தேன். இதை நன்றாக உணர்ந்ததால்த்தான் தமிழர் உரிமைகள் பற்றி, முஸ்லீம்கள் உரிமைகள் பற்றிக் குரல் கொடுத்த மஷுர் எப்பொழுதும் எவரையும் வெறுத்துப் பேசவில்லை. ஆனால் அவரின் கருத்துக்கள் தமிழர் - முஸ்லீம்கள் இருசாராரையுஞ் சிந்திக்கவைக்குந் தன்மையன. அவர் ஒரு தருணத்தில் கூறியதை இங்கு உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன் -சிறுபான்மையினராக தமிழ், முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்காமல், அதற்கான கொள்கைத் திட்டங்களைவகுக்காமல் வௌ;வேறாகச் செயற்படுவதால் பெற வேண்டியவற்றைப் பெறுவதில் அசாத்தியமான நிலையே தோன்றும். 

தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருமித்துச் செயற்படுவதே இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரே வழி||. இந்தச் சிந்தனை தமிழர்களிடத்தும் முஸ்லீம்கள் இடத்தும் வளர்ந்து அவர்கள் உள்ளங்களில் நிலைபெற்று விட்டால் நாம் பலதையுஞ் சாதிக்கலாம். மஷுரின் கனவுகளை நனவாக்கலாம். தமிழ் தேசீயக் கூட்டமைப்பை முஸ்லீம் காங்கிரஸ் அண்மையில் கைவிட்டது என்பது எல்லோருக்குந் தெரியும். மஷுரின் அறிவுரைக்கு மாறாக இது நடந்தது என்பதுந் தெரியும். நான் இங்கு அரசியல் பேசப் போவதில்லை. ஆனால் சாதாரணத் தமிழ்ப் பேசும் குடிமகன் என்ற விதத்தில் கிழக்கில் நடந்தவை எனக்கு வேதனை அளித்தது. இனிமேலும் கட்சிகளை நம்பி மோசம் போகாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் பிரிவை அமைக்க இங்கிருக்குந் திரு சம்பந்தன் அவர்கள் கரிசனை காட்ட வேண்டும் என்று விருப்பப்படுகின்றேன். எவ்வாறு மஷுர் போன்றவர்கள் தந்தை செல்வாவுக்குத் துணை நின்றார்களோ திரு.சம்பந்தன் அவர்களும் அதேபோன்று தமிழ் ஆர்வங்கொண்ட முஸ்லிம் இளைஞர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆயிரம் ஆயிரம் மஷுர் மௌலானாக்கள் திரு.சம்பந்தனை நாடி வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும். 

தமிழரசுக் கட்சி என்ற பெயருக்கு மாணவர்களாக இருந்த போது நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம் என்று சற்று முன் கூறினேன். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சிப் பெயர் தமிழர்களையும் முஸ்லீம்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பெயராக அமைந்திருப்பதை நாங்கள் எல்லோரும் அவதானிக்க வேண்டும். அது தமிழர் தேசியக் கூட்டமைப்பு அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த்தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒருங்கிணைந்து கடமையாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவன செய்ய வேண்டும். வேண்டுமெனில் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் கூட முஸ்லீம் வேட்பாளர்களைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தலாம். முஸ்லீம் காங்கிரசை எவ்வாறு என் நண்பர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் தொடக்கி வைத்துப் பல்துறைசார்ந்த முஸ்லீம் மக்களைத் தன் கட்சிக்குள் கொண்டு வந்தாரோ அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பல கட்சிகளில் இருக்கும் முஸ்லீம் மக்களையுந் தம் வசம் ஈர்க்க ஆவன செய்ய வேண்டும். முடியுமானால் கௌரவ பஷூர் சேகுதாவூத் அவர்களைக் கூட கூட்டுச்சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு யாவரையுங் கூட்டுச் சேர்ப்பதால்த் தான் நண்பர் மஷுரின் கனவை நனவாக்க முடியும். 

முதலில் முஸ்லீம் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதைத் தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் அதற்கேற்ப செயல்படவும் வேண்டும். சோரம் போகுந் தலைமைத்துவத்தை உண்மையான முஸ்லீம்கள் வரவேற்க மாட்டார்கள். நேர்மையான தலைவர்களை முஸ்லிம் மக்கள் என்றென்றும் போற்றிப் புகழ்ந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். அரசியல்வாதிகள் சுயநலத்துடன் நடந்து தம்மையுந் தம் சுற்றத்தாரையுந் தமது வாக்காளர்களையும் பயனடையச் செய்வதை நான் கண்டிக்கவில்லை. ஆனால் அவ்வாறான சுயநல நடவடிக்கைகள் தமிழ்ப் பேசும் மக்களின் பொதுநலத்தையும் சுயகௌரவத்தையும் பாதிக்கும் என்றால் அதை நாம் கண்டிக்காது இருக்க முடியாது. ஷஷயாதும் ஊரே யாவரும் கேளிர்|| என்ற புறநானூற்றின் முதல் வரியை கவனத்திற்கு எடுக்கும் நாம் ஷஷதீதும் நன்றும் பிறர் தர வாரா|| என்ற இரண்டாவது வரியை மறந்துவிடலாகாது. இன்று வரையில் பதவி, பணம், பகட்டுப் பேச்சுக்கெல்லாம் பலியாகாதிருக்குந் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பாராட்டுக்குரியவர்கள். 

 

இன்று பலரும் என் நண்பர் மஷுரை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. முரண்பாடுடைய கட்சியினரும், முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்ற முறையில் சகலரும் இன்று இங்கு வந்துள்ளனர் என்றால் ஒரு மூத்த தமிழ்த் தலைவருக்கு நாம் செய்யும் எமது நன்றிக்கடன் என்றே அதைக் கொள்ள வேண்டும். எம் பொருட்டு பனாகொடைத் தடைமுகாமில் அன்று சிறையனுபவித்தவருக்கு இன்று நாம் ஆற்றும் நன்றிக்கடன்! எண்பது வயதை எட்டுவதென்றால் ஆயிரம் பிறைகளை அவர் கண்டு விட்டார் என்று அர்த்தம். பிறை காண்பது என்பது முஸ்லீம் மக்கள் அநுகூலமாகக் கருதும் ஒரு செயல். அவர் நீடுழிகாலம் வாழ்ந்து தமிழர்க்கும் தமிழ்ப்பேசும் மக்களுக்கும் அவர் தம் மதத்தவருக்கும் அவர் பிறந்த மண்ணிற்கும் மேலும் மேலும் தம்மாலான நற்சேவைபுரிய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவர் காலத்தில் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒரு கூட்டமைப்பில் இணைந்து தமக்குரிய சகல உரித்துக்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். என்னை இக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும்படி அழைத்த நண்பர் ஜின்னா ஷெரிப்டீனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து என் தலைவருரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.

நன்றி

வணக்கம்

 

ஓய்வு பெற்ற நீதியரசர் சீ.வீ விக்னேஸ்வரன்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94356/language/ta-IN/article.aspx

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக இருந்த போது அதைச் செய்திருக்கலாம். மஷுருடன் போய் மருதமுனை பார்த்திருக்கலாம். ஆனால் காசி ஆனந்தனுக்குக் காசின்றிப் பிணை அளித்ததால் என்னை கழிந்து போ என்று ஏழு மாதங்களுள் மட்டக்களப்பில் இருந்து விரட்டி சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக்கி விட்டார்கள் பதவியில் இருந்தவர்க

இதை பல வருடங்களுக்கு முன் மண்டூர் மகேந்திரனுடன் கதைக்கும் போது தெரிவித்திருந்தார் .

 

அருமையான பேச்சு .இணைப்புக்கு நன்றிகள் யாழ் அன்பு .

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பேச்சு .

இணைப்புக்கு நன்றிகள் யாழ் அன்பு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.