Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும் -2 (ராஜ்சிவா)

Featured Replies

அணு உலை பற்றிப் பரவலான பேச்சுகள் தமிழ்நாட்டு மக்களிடையே இருந்தாலும், அணு உலைக்கான சரியான அறிவியல் விளக்கம், பலருக்கு இல்லாமல் இருப்பது உண்மைதான். மின்சாரம் இல்லாமல் மனுசன் கஷ்டப்படும் வேளையில், மின்சாரம் தயாரிப்பதை இந்த கூடங்குளவாசிகள் ஏன் தடுக்க வேண்டும்?" என்று சர்வசாதாரணமாகக் கோபப்படுபவர்களும் உண்டு. அணு உலையை எதிர்க்கும் மக்களின் கோபத்துக்குச் சரியான காரணம் உண்டுதானா? அல்லது அதெலாம் சும்மா தேவையற்ற பயமா? என்னும் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் தேவை. "விமானம் விபத்துக்குள்ளாகும் என்று நினைத்து, விமானத்திலேயே பயணம் செய்யாமல் இருப்பது சரிதானா?" என்று ஒரு தலைவரே கேட்டிருந்ததை, நியாயமான வார்த்தைகள் என்றும் சிலர் நம்புகிறார்கள். இவற்றுக்கான விடைகளை நான் மொத்தமாக இங்கு ஆராயாவிட்டாலும், தேவையான விடைகளை நீங்களே பெற்றுக் கொள்ளக் கூடியவகையில் அணு உலை பற்றி நான் உயிர்மைக்கு எழுதிய மூன்று கட்டுரைகள் மூலம் சொல்லியிருக்கிறேன். முதல் இரண்டு கட்டுரைகளும் வெளிவந்த நிலையில் மூன்றாவது கட்டுரை வரும் 1ம் திகதி உயிர்மையில் வெளிவருகிறது. முடிந்தால் படித்துப் பாருங்கள். பின்னர் அவை பற்றிப் பேசலாம்.

 

-ராஜ்சிவா-

 

 

அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும் - பகுதி 1

 


 

999076_539684079431957_826074149_n.jpg
 

தற்போது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 'அணு உலை' என்பது ஒரு சூடான விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அணு உலை ஆபத்தானதா? இல்லையா? என்று இரண்டு தரப்பாகப் பிரிந்து வாதப் பிரதிவாதங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு தரப்பிலிருந்தும் பல கட்டுரைகள் வெளிவந்துவிட்டன. கட்டுரைகளை வாசிப்பவர்கள் இதை நம்புவதா? அதை நம்புவதா? என்னும் குழப்பத்தில் இப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அணு உலையை ஆபத்தானது என்று சொல்பவர்களும், ஆபத்து இல்லை என்று சொல்பவர்களும் தங்களுக்கென நிலையான ஒரு நிலைப்பாட்டை எடுத்து விட்டார்கள். ஆனால் இந்த இரண்டுக்கும் இடையில் இருப்பவர்கள் கொஞ்சம் குழப்ப நிலையில் இருப்பது என்னவோ உண்மைதான். இந்தச் சமயத்தில் அணு உலை பற்றி நானும் ஒரு கட்டுரையை எழுதலாம் என்று விரும்பினேன். ஆனால் கட்டுரை வழமையான வாதப் பிரதிவாதங்களாக இல்லாமல், அறிவியல் தகவல்களுடன் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அணு உலை பாதுகாப்பானதா? இல்லையா? என்பதற்கு எனது பதில் நேரடியாக இந்தக் கட்டுரையில் இருக்குமா தெரியாது. அப்படி இருக்கும் பட்சத்தில், அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

 

நான் இன்னுமொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். சமீபத்தில் ஒரு பிரபல தமிழ்த் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய தமிழ் எழுத்தாளர் ஒருவர், நிகழ்ச்சியின் பின்னர், "கூடங்குளம் அணு உலையை ஆபத்தானது என்று சொல்லும் எழுத்தாளர்கள் எப்போது விஞ்ஞானிகள் ஆனார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த எழுத்தாளர் தன்னுடன் நிகழ்ச்சியில் பங்குபற்றிய சக எழுத்தாளர்களைப் பற்றியே இப்படியொரு கருத்தைச் சொன்னார். அதற்குக் காரணம், நிகழ்ச்சியில் பங்குபற்றிய பல எழுத்தாளர்கள் 'அணு உலை எதிர்ப்பு நிலையை' எடுத்திருந்ததுதான். 'விஞ்ஞானிகளின் துணையுடன் கட்டப்படும் ஒரு அணு உலையை ஆபத்தானது என்று இவர்கள் எப்படிச் சொல்லலாம்' என்னும் கோபத்தில் அவர் கூறிய வார்த்தைகள் அவை. விஞ்ஞானத்தைப் பேசவோ, அறிவியல் கட்டுரைகள் எழுதவோ, 'ஒரு எழுத்தாளர் விஞ்ஞானியாகத்தான் கட்டாயம் இருக்க வேண்டுமா?' என்னும் கேள்வி இப்போது என்னையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இருந்தாலும், ஒரு அணு உலை எப்படி இயங்குகிறது? அணு உலையை ஆபத்தானது என்று ஏன் சொல்கிறார்கள்? அணுக் கதிர்வீச்சு என்றால் என்ன? யூரேனியம் என்றால் என்ன? அணுக்கழிவு என்றால் என்ன? என்று கேட்கப்படும் பல கேள்விகளுக்கான பதில்களை, நாம் இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம். அறிவியல் மூலமாக அணு உலை சார்ந்த அனைத்தையும் முடிந்தவரை நாம் இக்கட்டுரை மூலம் பார்க்கலாம். 

 

968857_539684269431938_385122822_n.jpg
 

ஆரம்ப காலங்களில் அணு உலைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, மக்களைக் கவருவதற்காக விளம்பரமாக ஒரு கருத்து பரப்பப்பட்டது. அந்தக் கருத்து என்ன தெரியுமா? 'கார்பன் இல்லா மின்சாரத்தை அணு உலைகள் மூலமாகப் பெறுவோம்' என்பதுதான். அதாவது கார்பன் வாயு வெளியேற்றத்தால் புவி மாசடைகிறது. அப்படி ஒரு மாசடைவு இல்லாமல் அணு உலைகள் மூலமாக நாம் மின்சாரதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்கள். உலகம் முழுவதற்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒன்று உண்டென்றால், அது மின்சாரமாகத்தான் இருக்கும். அணு உலைகள் பாவனைக்கு வருவதற்கு முன்னர், பெருமளவிலான மின்சாரத்தை இரண்டு வழிகளில்தான் பெற்று வந்தார்கள். ஒன்று நீரின் மூலம் பெறும் மின்சாரம் மற்றது அனல் மின்சாரம். எந்த வகையில் நாம் மின்சாரத்தைப் பெற்றாலும், அதற்கு அடிப்படையான தொழில்நுட்பமாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். 'டர்பைன்' (Turbine) என்று சொல்லப்படும் மிகப்பெரிய, சுழலும் பொறிமுறைக் கருவியைச் சுழலவிடுவதன் மூலம் மின்சாரம் பெறுவதுதான் அது (இதற்கு விதிவிலக்காக இருப்பது சூரிய ஒளிமூலம் கிடைக்கும் மின்சாரம் மட்டும்தான்). நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சைக்கிளில் மின்விளக்கு எரிவதற்கு 'டைனமோ' (Dynamo) சுற்றவிடப்படுகிறதல்லவா? அது போல, மிகப்பெரிய சுழற்சியாக இந்த டர்பைனின் சுழற்சி இருக்கும். 

 

1044253_539684439431921_374179917_n.jpg
 

நீர்வீழ்ச்சிககளில் இருந்து வேகமாக நீர் பாயும் போது அல்லது வீழும் போது, அந்த நீரின் பாய்ச்சலுக்குக் குறுக்காக இந்த டர்பைன்கள் அமைக்கப்படுகின்றன. வேகமாக வரும் நீரின் சக்தியால் சுழலும் டர்பைன்கள் மூலமாக மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் இந்த நீர்மின்சாரம் தடையில்லா மின்சாரமாக எப்போதும் கிடைப்பதில்லை. மேற்கு நாடுகளில் குளிர்காலங்களில் அருவி நீர், பனிக்கட்டியாக உறைந்து போய்விடும். அந்தக் காலங்களில் மின்சாரம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அதே போல, வெப்ப நாடுகளில் தண்ணீர் வற்றிவிடுவதால் அருவிகளின் வேகம் தடைப்பட்டு மின்சாரம் குறைவாகக் கிடைக்கும். இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் மாற்றீடாக வந்த மின்சாரம் பெறும் வழிதான் அனல் மின்சாரம். அனல் என்றால் நெருப்பு. நெருப்பிலிருந்து எப்படி மின்சாரம் பெறமுடியும்? நிலக்கரியைப் பெரிய அளவில் எரிப்பதால் கிடைக்கும் வெப்பத்தால் மிகப்பெரிய நீர்த்தாங்கிக்குள் (Water Tank) இருக்கும் நீரைக் கொதிக்க வைத்து, அதன் மூலம் பெறப்படும் நீராவியால், மேலே சொன்ன டர்பைனைச் சுழலவைத்து பாரிய அளவில் மின்சாரம் பெறப்படும். இந்த முறையில்தான் உலகின் பல நாடுகள் மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டுவருகின்றன. இது தடையில்லா மின்சாரத்தைப் பெறும் வழியாகவும் இருந்தது. நமது பூமிக்கு அடியில் நிலக்கரி, படிமங்களாக படிந்திருப்பதால், அவற்றை வெட்டியெடுத்து மின்சாரம் பெறுவதற்கு உபயோகப்படுத்துகிறார்கள். 

 

அனல் மின்சாரம் பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கான தொன்கள் நிலக்கரி எரிக்கப்படுகிறது. அப்படி எரிக்கப்படும் நிலக்கரியினால் ஏற்படும் புகை, கார்பன் வாயுவாக நம் சுற்றுப்புறச் சூழலில் கலந்து கொண்டே இருக்கும். இது பூமியின் சுற்றுப்புறச் சூழலை மாசாக்குகிறது. இதனால் புவி வெப்பமாகிறது என்ற கருத்து படிப்படியாக வளரத் தொடங்கியது. இந்த நேரத்தில்தான், அணு உலைகளின் செயல்பாடு ஆரம்பிக்கத் தொடங்கியது. அணு மின்சாரத்தை நாம் பெறும்போது தடையில்லாமல் மின்சாரம் பெறுவது மாத்திரமல்ல, கார்பன் இல்லா மின்சாரமாகவும் அது இருக்கிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டது. நவீன தொழில்நுட்பம், தடையில்லாமல் மின்சாரம், கார்பன் இல்லாத மின்சாரம், இலகுவான வழியில் மின்சாரம் என உலகை தன்வசப்படுத்திக் கொண்டு அணு உலைகள் வளர்ந்து வந்தபோது, செர்னோபில்லில் (Chernobyl) அணு உலை ஒன்று வெடித்தது. அதற்கு முன்னரும் உலகம் பூராவும் அணு உலை விபத்துகள் பல நடந்திருந்தாலும், செர்னோபில் அணு உலை வெடிப்பு, உலகையே ஒரு உலுக்கு உலுக்கிப் போட்டது. பல உயிரிழப்புகளுடனும், பொருளிழப்புகளுடனும் அணு உலை வரலாற்றில் அழியாத  இடத்தைப் பெற்றுக் கொண்டது ரஷ்யாவின் உக்ரைன் மாநிலத்தில் உள்ள செர்னோபில் நகரின் அணு உலை வெடிப்பு. இந்த விபத்து 1986ம் ஆண்டு நடைபெற்றது. அணு உலை என்றாலே பயத்தில் மக்கள் காத தூரம் ஓடுவதற்கு இன்றுவரை செர்னோபில் ஒரு காரணமாகிறது. உண்மையான உயிரிழப்பு எதுவெனத் தெரியாமல் மறைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், பாரிய அளவில் உயிரிழப்பும், 18 பில்லியன் ரூபிள்கள் (1986 களிலேயே) பெறுமதியான சேதமும் இந்த விபத்தில் ஏற்பட்டது. அது மட்டுமல்ல. மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர்வரை அந்த இடத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்கள். ஒரு போர் நடந்த இடமொன்று எப்படி அழிந்து காணப்படுமோ அப்படிக் காணப்பட்டது செர்னோபில். 

 

1003496_539684582765240_1768727770_n.jpg
 

போர் ஒன்றில் ஒரு நகரமும், நகர மக்களும் அழிந்தால், அதன் பாதிப்பு போர் முடிந்த அந்தக் காலத்துடன் முடிந்துவிடும். அழிவிற்குப் பின்னர் வரும் காலங்கள் எல்லாம் அந்த நகரத்தின் வளர்ச்சிக்குரிய கட்டுமானக் காலங்களாகத்தான் எப்போதும் இருக்கும். ஆனால் அணு சக்தி மூலம் ஒரு நகரம் அழிந்தால், மனித வரலாற்றிலேயே மீளக் குடியேற முடியாத அளவுக்கு அந்த நகரம் சுடுகாடாக மாறிவிடும். அதுமட்டுமில்லாமல், அணு சக்தி மூலம் அழிவு ஏற்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்கள் உயிருடன் தப்பிவிட்டாலும் அதற்காக அவர்கள் மகிழ்ந்து விடமுடியாது. அவர்கள் உயிர் உள்ளவரை அணுக்கதிர் வீச்சின் பாதிப்பால் ஏற்படும் நோய் என்னும் பிசாசாக அது துரத்திக் கொண்டே இருக்கும். அத்துடன் முடிந்தாலும் பரவாயில்லை அந்தச் சந்ததியுடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நிம்மதியடையலாம். ஆனால், அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள், பிள்ளைகளுக்குப் பிறக்கும் பிள்ளைகள் என அந்தச் சந்ததியினரையே தொடர்ந்து அழிக்கும் அரக்கனாக அது இருந்து கொண்டிருக்கும். அணு உலைகள் வெடித்து அதனால் ஏற்படும் அணுக்கதிர் வீச்சு அவ்வளவு கொடுமையானது. 

 

"என்னடா இது! இவர் ஆரம்பத்திலேயே அணு உலை ஆபத்தானது என்பது போலவே எழுத ஆரம்பித்துவிட்டாரே, இவரும் ஒரு அணு உலை எதிர்ப்பாளர்தானா?" என்று நீங்கள் இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கலாம். அணு உலையின் வரலாற்றை நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமாயின், அந்த இடத்தில் செர்னோபில் அணு உலை விபத்துக்கு பெரிய இடம் இருக்கிறது. அது பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளாமல் நாம் மேலே நகர்ந்து கொள்ள முடியாது. அதனால் இதைச் சொல்வது இங்கு முக்கியமானது. அணுக்கதிர் வீச்சின் அபாயம் மூன்று இடங்களில் பெரும்பான்மையாக இருக்க வாய்ப்புள்ளது. 1.அணு உலை வெடித்த இடம், 2.அணுகுண்டு வெடித்த இடம், 3.அணுக்கழிவு பாதுகாக்கப்படும் போது, கசிவு ஏற்படும் இடம். அணு உலை வெடித்ததற்கு செர்னோபில் உதாரணமாகச் சொல்லப்பட்டால், அணுகுண்டு வெடித்ததால் பாதிக்கப்பட்டதற்கு உதாரணமாக ஜப்பான் ஹிரோஷிமாவைச் சொல்லலாம். இந்த இரண்டு சம்பவங்களையும் அறியாதவர்கள் உலகில் இல்லை என்னும் அளவுக்கு உலகத்தையே உலுக்கிய சம்பவங்கள் இவை. ஆனால் அணுக்கழிவு என்றால் என்ன என்று பலருக்குத் தெளிவான அறிவு இல்லை என்றே சொல்லலாம். இவை எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்கான ஆரம்பப் புள்ளியாக, ஒரு அணு உலை என்பது எப்படி இயங்குகிறது என்பதை நாம் முதலில் பார்க்கலாம்.

 

இயற்பியல் தத்துவத்தின்படி, ஒரு சக்தியின் மூலம், இன்னுமொரு சக்தியைப் நாம் பெற்றுக் கொள்ளலாம். ஒளிச் சக்தி, வெப்ப சக்தி, ஒலிச் சக்தி, மின் சக்தி, காந்த சக்தி, மின்காந்த சக்தி, இயக்க சக்தி என்பவை சக்திகளுக்கு உதாரணங்கள். இவற்றோடு அணு சக்தியும் ஒரு சக்தியாக இணைந்து கொள்கிறது. இங்கு சொல்லப்பட்ட சக்திகளில், ஒன்றிலிருந்து இன்னுமொரு சக்தியை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணமாக ஒளிச் சக்தியிலிருந்து வெப்ப சக்தியையும், ஒளிச் சக்தியிலிருந்து மின் சக்தியையும், இயக்க சக்தியிலிருந்து மின்சக்தியையும் பெற்றுக் கொள்ளலாம். முன்னர் சொன்னது போல, சாதாரணமாக நாங்கள் பயன்படுத்தும் இரண்டு சக்கர மிதிவண்டிக்கு, மின் விளக்குப் பொருத்த வேண்டும் என்றால் 'டைனமோ' (Dynamo) என்பதைச் சக்கரத்தில் பொருத்தி, அதைச் சுற்ற வைப்பதன் மூலம் மின்சாரத்தைப் பெறுகிறோம். அதே போல, நீரை ஆவியாக்குவதன் மூலம் கிடைக்கும் நீராவியின் அமுக்கத்தினாலும் சக்கரத்தைச் சுற்ற வைக்கலாம். நீராவி இயந்திரங்கள் அனைத்தும் இந்த வகையில்தான் இயங்குகின்றன. சுற்ற வைக்கும் சக்கரத்தின் இயக்க சக்தியினால் மின்சாரம் பெறப்படுகிறது. அதிக மின்சாரத்தைப் பெற வேண்டும் என்றால் சுற்ற வைக்கப்படும் சக்கரத்தின் அளவும், வேகமும் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே இதற்கு நீரை வெப்பமாக்குவதற்கு வேண்டிய வெப்ப சக்தியும் அதிகமாக இருக்க வேண்டும். மேற்படி அதிக அளவு வெப்பசக்தியைப் பெறுவதற்கு உதவுவதுதான் அணுசக்தி. 

 

அணுவில் இருந்து பெறப்படும் சக்தி அதிகப்படியான வெப்பத்தை நமக்குத் தருகிறது. இந்த சக்தியை நாம் எப்படிப் பெற்றுக் கொள்கிறோம் என்பதை முதலில் பார்க்கலாம். உலகில் உள்ள அனைத்து முலகங்களும் அணுக்களால் உருவானவை (பொட்டாசியம், சோடியம், இரும்பு, ஐதரசன், ஒட்சிசன், தங்கம் என்பவை அனைத்தும் மூலகத்துக்கு உதாரணங்கள்). ஒவ்வொரு மூலகங்களின் அணுக்களும் தனித்தன்மை கொண்டவை. இந்த அணுக்களுக்கு 'அணுக்கரு' என்ற ஒன்று உண்டு. அந்த அணுக்கருவை இலத்திரன்கள் சுற்றிக் கொண்டிருக்கும். அணுக்கரு புரோட்டான்களாலும், நியூட்ரான்களாலும் உருவாக்கப்பட்டது. 

 

998223_539684819431883_635477451_n.jpg
 

இதுவரை 118 மூலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 70 சதவீதமான முலகங்களின் அணுக்கருக்கள் உறுதியானவை. ஆனால் ஒரு சில மூலகங்களின் அணுக்கருக்கள் உறுதி குறைந்தவை. அப்படி உறுதி குறைந்தவற்றின் அணுக்கருவைச் சலனப்படுத்தினால் உள்ளே இருக்கும் நியூட்ரான்கள் வெளியே சிதறத் தொடங்கிவிடும். அப்படி அவை நியூட்ரான்களை வெளியே விடும்போது, அதனுடன் சேர்ந்து அணுக்கதிர்வீச்சும், சக்தியும் வெளிவரும். இந்த மூலகங்களையே அணுக்கதிர் மூலகங்கள் என்பார்கள் (உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக இதை மிகவும் மேலோட்டமாகச் சொல்லியிருக்கிறேன். இதைக் கொஞ்சம் விரிவாகக் கீழே பார்க்கலாம்). அணுக்கதிர் வீச்சுள்ள மூலகங்களுக்கு உதாரணமாக, யூரேனியம், புளுட்டோனியம் ஆகியவற்றைச் சொல்லலாம். அணு உலைக்கு பாவிக்கப்படும் மூலகமாக பெரும்பாலும் யூரேனியமே (Uranium) இருக்கிறது. யூரேனியம் மூலகம் மிகவும் பாரமான ஒரு உலோகமாகும். பூமிக்கு அடியில் பாறைகளுடன் கலந்து இது காணப்படுகிறது. 1789 ம் ஆண்டு ஜேர்மன் வேதியலாளர் ஒருவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது 'பிட்ச்பிலெண்டெ' (Pitchblende) என்னும் பெயரிலேயே அழைக்கப்பட்டது. பின்னர் யூரேனஸ் கிரகத்தின் பெயரால் யுரேனியம் என்று அழைக்கப்படுகின்றது.

 

1013093_539684996098532_139080445_n.jpg
 

அணுக்களில் எத்தனை புரோட்டான்கள் உண்டோ அதே அளவான இலத்திரன்களும் இருக்கும். ஆனால் நியுட்ரான்கள் பலசமயங்களில் அதே அளவாகவும் சில சமயங்களில் அதிகமாகவும் காணப்படும். உதாரணமாக பொட்டாசியம் அணுவை எடுத்துக் கொண்டால், அதற்கு 19 இலத்திரன்களும், 19 புரோட்டான்களும் உண்டு. அதே நேரத்தில் 20 நியூட்ரான்களை அது கொண்டிருக்கும். அணு ஒன்றுக்கு எத்தனை இலத்திரன்கள் அல்லது புரோட்டான்கள் உள்ளதோ அதுவே அந்த அணுவின் அணு எண் எனப்படும். இந்த அணு எண்தான் அந்த அணுவுக்கான பெயர் போல, அடையாளமாக இருக்கும். அணுக்கருவுக்குள் இருக்கும் புரோட்டான்களினதும், நியூட்ரான்களினதும் எண்ணிக்கையின் கூட்டுத் தொகை அந்த அணுவின் அணு நிறை என்று சொல்லப்படும். இதன்படி பொட்டாசியத்தின் அணு எண் 19 ஆகவும், அணு நிறை 39 ஆகவும் காணப்படுகின்றது. மூலகங்களின் அணு எண் மாறும் போது அவை வேறு வேறு மூலகங்களாக இருக்கும். ஆனால் மூலகங்களுக்கு அணு எண் மாறாமல் அப்படியே இருக்கும் போது, அதன் அணுக்கருவுக்குள் இருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இருக்கும். அதாவது அணு நிறை மாறுபடும். இப்படி வேறு வேறான அணு நிறையுள்ள மூலகங்கள் பல உண்டு. அப்படிப்பட்ட மூலகங்களில் ஒன்றுதான் யூரேனியமும். யூரேனியம் அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை 92. அதாவது அதன் அணு எண் 92. யூரேனியத்திற்குள் இருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை 146. இதன்படி யூரேனியத்தின் அணு நிறை 238 ஆகும் (92+142=238). இதை U238 என்று பெயரிட்டுள்ளார்கள். U238 வகை யூரேனியமே உலகில் அதிக அளவில் காணப்படுகிறது. அதாவது 99.7% இது காணப்படுகிறது. ஆனால் 0.7% அளவில் U235 என்று சொல்லப்படும் யூரேனியமும் காணப்படுகிறது. அதாவது இந்த வகை யூரேனியத்தில் 143 நியூட்ரான்களே இருக்கும். இதனால் அணு நிறை 235 ஆகவும் இருக்கும். இது U235 என்று அழைக்கப்படுகிறது. U238, U235 என்று இரண்டு வகையான யூரேனியங்கள் யூரேனியத்தில் இருப்பதால், அவற்றை ஐசடோப்புகள் (Isotope) என்பார்கள். U235 என்னும் யூரேனியமே அணு உலைகளில் மின்சாரத்தைப் பெறுவதற்குப் பயன்படுகிறது. 

 

999650_539685172765181_320966419_n.jpg
 

யூரேனியம் 235 மெல்லிய உலோக குழாய்கள் (Rods) போல இடப்பட்டு, அந்தக் குழாய்களில் பல ஒன்று சேர்க்கப்பட்டு அணு உலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை Fuel rods என்று சொல்வார்கள். இந்தக் குழாய்களில் இருக்கும் யூரேனியத்தின் அணுக்கருவை நியூட்ரான் ஒன்றினால் மோதும் போது அணுச்சிதைவு ஏற்படுகிறது. அப்போது சக்தியும் பெருமளவில் வெளிப்படுகிறது. யூரேனியத்தின் (U235) கருவில் ஒரு நியூட்ரானால் மோதச் செய்யும் போது, அது உடனடியாக  கிரிப்டோன், பேரியம் என்னும் இரண்டு வெவ்வேறான மூலகங்களாகச் சிதைந்து, அதனுடன் மூன்று நியூட்ரான்களையும், அதிக அளவு வெப்ப சக்தியையும் வெளிவிடும். இதில் வெளியேறிய மூன்று நியூட்ரான்கள் மேலும் மூன்று யூரேனியம் அணுக்கருக்களுடன் மோதுவதால், அதிலிருந்து மீண்டும் 3 பேரியமும், 3 கிரிப்டோனும், ஒன்பது நியூட்ரான்களும், மூன்று மடங்கு வெப்ப சக்தியும் உருவாகும். பின்னர் இந்த ஒன்பது நியூட்ரான்களும் ஒன்பது யூரேனியம் கருக்களில் மோதி 27 நியூட்ரான்களையும், ஒன்பது மடங்கு வெப்பத்தையும் வெளிவிடும். இந்தச் செயல் தொடர்ந்து நடைபெறுவதால் ஒரு செக்கனிலேயே பில்லியன் பில்லியன் அளவு நியூட்ரான்கள் உருவாவதுடன், அளவிடமுடியாத அளவுக்கு சக்தியும் வெளியாகும். இப்படித் தொடர்ச்சியாக நடைபெறும் செயலைச் சங்கிலித் தொடர் விளைவு (Chain Reaction) என்பார்கள். இதே போன்ற சங்கிலித் தொடர் விளைவுதான் அணுகுண்டுகளிலும் நடைபெற்று பெருவெடிப்பாக வெளிப்படுகிறது.   

 

1000412_539685436098488_1543569084_n.jpg

 

சங்கிலித் தொடர் விளைவால் உருவாகும் வெப்ப சக்தி, மூடப்பட்டுள்ள ஒரு தாங்கியில் (Tank) உள்ள நீரை ஆவியாக்குவதால் ஏற்படும் நீராவி அழுத்தம், மிகப் பெரிய சக்கரத்தைச் சுற்ற வைக்கிறது. அதன் மூலம் மிகையான மின்சாரம் பெறப்படுகிறது. வெப்பமாகிய நீராவி மீண்டும் குளிரடைந்து பழையபடி நீராக மாறுகிறது. அந்த நீர் மீண்டும் தாங்கிக்குள் சென்று மீண்டும் வெப்பமாகி ஆவியாகிறது. இவையெல்லாமே ஒரு வட்டமாகச் சுற்றிச் சுற்றி நடைபெறுகின்றது. இப்படி வெப்பமாவது, நீராவியாவது, அதன் மூலம் சக்கரம் சுற்றுவது, தண்ணீர் மீண்டும் குளிர்வடைவது என்பது தொடர்ச்சியாக நடப்பதால் மின்சாரம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும். ஆனால் இதில் ஏதாவது ஒன்று தடை செய்யப்பட்டாலும் அது ஆபத்துக்கான அறிகுறியாகிவிடும். அப்படி ஏற்படும் ஆபத்து மிகவும் பயங்கரமாக இருக்கும். இதுவே சமீபத்தில் ஃபுக்குஷிமாவில் நடைபெற்றது.  

 

ஃபுக்குஷிமாவில் ஏற்பட்ட பூகம்பத்தால், நீர் குளிர்வடையும் சாதனம் பழுதடைத்தது. அதனால் அந்த அணு உலைக்குள் இருந்த நீர் அதிக வெப்பத்தால் ஆவியாகிவிட்டது. அப்போது அங்கு நீராவி அமுக்கம் அதிகமாகி, வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது நீருக்குள் பாதுகாப்பாக இருந்த யூரேனியம் தகடுகள் அதிகளவு வெப்பத்தால் உருக ஆரம்பித்தன. இதனால் அணுக்கதிர்வீச்சு அந்தப் பிரதேசம் எங்கும் வெளியிடப்பட்டது. அணுக்கதிர் வீச்சு என்பது மிகவும் பயங்கரமான ஒன்று.

ஃபுக்குஷிமாவிலும், செர்னோபிலிலும் அணு உலைகள் வெடித்தத்தால் உண்மையில் அணு உலைகள் பாதுகாப்பு அற்றவைதானா? அல்லது அவை பாதுகாப்பானவையா? என்னும் கேள்விகளுக்கான பதிலை நாம் தெரிந்து கொள்வதற்கு அணு உலை பற்றிய மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் முழுமையாக அவற்றை நம்மால் பார்க்க முடியாமல் இருப்பதால், அடுத்த இதழில் இதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

 

 

 

உயிர்மை.com 

 

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கட்டுரை ! 

 

இணைப்புக்கு நன்றிகள், அபராஜிதன் !

நன்றி இணைப்புக்கு  :) 

  • தொடங்கியவர்

அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும் (பகுதி 2) - ராஜ்சிவா

 

 

58271_540081092725589_2082297523_n.jpg



மனிதனாக இருந்தாலென்ன, விலங்குகளாக இருந்தாலென்ன, பொருட்களாக இருந்தாலென்ன, அவை இயங்க வேண்டுமென்றால், அதற்குச் 'சக்தி' என்ற ஒன்று மிகவும் அவசியமாகிறது. மனிதன் ஓட, நடக்க, வேலை செய்ய எனத் தனது அனைத்து இயக்கங்களுக்கும் தேவையான சக்தியை, தான் உட்கொள்ளும் உணவிலிருந்து பெற்றுக் கொள்கிறான். உணவு மனிதனுக்குள்ளே சென்று அவனுக்கு வேண்டிய சக்தியாக மாற்றப்பட்டு, அவனை இயங்க வைக்கிறது. இதுபோல, ஒவ்வொரு இயக்கத்துக்கும் தேவைப்படும் சக்தி, நேரடியாகவோ, ஒரு வடிவத்திலிருந்து இன்னொமொரு வடிவத்துக்கு மாற்றப்பட்டோ பெறப்படுகிறது. ஒலிச்சக்தி, ஒளிச்சக்தி, வெப்பசக்தி, இயக்கசக்தி, மின்சக்தி, மின்காந்தசக்தி, அணுசக்தி என்பன சக்திகளின் பல வடிவங்களாகும். இவை அனைத்தும் மனிதனின் பயன்பாட்டுக்கு அவசியமானவையாக இருக்கின்றன. மனிதனுக்கு இவை எந்த அளவுக்குத் தேவைப்படுகின்றன என்பதைப் பொறுத்து இவற்றின் பெறுமதியும் தீர்மானிக்கப்படுகின்றது. குறிப்பாக மின்சக்தி என்பது மனிதனுக்கு மிகமிக முக்கியமான ஒரு சக்தியாக இருக்கிறது. உலகம் முழுவதும் மின்சாரத்தைப் பரவலாகப் பயன்படுத்துவதால், அதற்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் மின்சாரத்துக்குத் தட்டுப்பாடும் எற்பட ஆரம்பிக்கிறது. இதை நிவர்த்தி செய்யும் புது வழியாக அணுசக்தி உதவும் என்று சொல்லப்பட்டு, அணு மூலம் மின்சாரம் பெறலாம் என்பது முன்மொழியப்பட்டது. 'அணு உலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், தடையில்லாமலும், கார்பன் வாயுவின் மாசு இல்லாமலும் கிடைக்கிறது' என்றும் சொல்லப்பட்டது. இந்தக் கூற்று ஒரு வகையில் உண்மையும் கூட. இதனடிப்படையில் அணு உலைகள் மூலம் மின்சாரத்தைப் பல நாடுகள் பெற்றுக் கொண்டுவந்த போது, அங்கு ஏற்பட்ட விபத்துகள் தந்த தாக்கம், 'அணு உலைகளே வேண்டாம்' என்னும் பயத்தை மக்களிடையே ஏற்படுத்தியது. அணு சக்தி என்பது எவ்வளவு பயங்கரமானது என்று மக்கள் பயப்பட ஆரம்பித்தார்கள். அதனால் அணு சக்தி மூலம் மின்சாரம் பெறுவதை மக்கள் எதிர்க்கும் சூழ்நிலையும் உருவாகத் தொடங்கியது. இவை பற்றி கடந்த இதழில் சுருக்கமாகப் பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் பார்க்கலாம். அத்துடன் உங்களுக்குச் சலிப்பாக இருந்தாலும், அணு உலைக்கு பயன்படுத்தப்படும் அணுசக்தித் தனிமங்கள் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். இந்தக் கட்டுரையில் இருக்கும் உள்ளடக்கங்கள் மாணவர்களுக்கு மட்டும் தேவையானது என்றும், சாதாரணமான நமக்கு அது தேவையில்லை என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் அணு உலைகள் பற்றிய போராட்டங்கள் சாதாரண மக்கள் அளவுக்கு வந்துவிட்டதால், இவை பற்றிய ஒரு தெளிவு நிச்சயம் நமக்குத் தேவையானது. இவை பற்றியெல்லாம் அணு விஞ்ஞானிகள் மட்டும்தான் பேசலாம் என்னும் நிலை மாற்றப்பட வேண்டும். அதனால் மனதைச் சலிப்படைய விடாமல் தொடர்ந்து படியுங்கள்.

 

994870_540081529392212_1532214973_n.jpg



ரஷ்ய விஞ்ஞானியான மெண்டலீவ் (Mendeleev) என்பவர், உலகில் உள்ள தனிமங்களை (Elements) வரிசைப்படுத்தி முதன்முதலாக ஒரு அட்டவணையை உருவாக்கினார். அது 'ஆவர்த்தன அட்டவணை' அல்லது 'தனிம அட்டவணை' (Periodic Table) என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு தனிமமும், தான் கொண்டிருக்கும் ப்ரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் ஆகியவற்றின் அளவுகளுக்கேற்ப குறைந்ததிலிருந்து கூடியதாக, வரிசைப்படுத்தப்பட்டு, இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டது. மெண்டலீவ் இந்த அட்டவணையைத் தயாரிக்கும் போது, சிறிய அளவிலேயே தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அவருக்குப் பின்னரும் இந்த அட்டவணை வரிசைப்படுத்தப்பட்டு, இப்பொழுது 118 தனிமங்கள் அந்த அட்டவணையில் இடம்பெறுகின்றன.

உலகில் உள்ள அனைத்துத் தனிமங்களும் அணுக்களால் ஆனவை. ஒவ்வொரு தனிமத்தின் அணுவும் வெவ்வேறு வகையான தனித்தண்மையைக் கொண்டது. அந்தத் தனித்தண்மைகளுக்குக் காரணம், அவற்றின் அணுவுக்குள் இருக்கும் ப்ரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் என்பவற்றின் அளவுகள்தான். ஒரு அணுவில், அணுக்கருவும் அணுக்கருவைச் சுற்றி எலெக்ட்ரான்களும் காணப்படும். அணுக்கருவினுள்ளே ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் காணப்படும். புரோட்டான்களின் எண்ணிக்கை அணுக்கருவினுள் ஒவ்வொன்றாக மாறும்போது, அந்த அணு வேறு தனிமமாக மாறுகிறது. உதாரணமாக, ஐதரசன் அணுவின் கருவில் ஒரு ப்ரோட்டான் மட்டுமே இருக்கும். ஒரு ப்ரோட்டான் இருந்தால் அது ஐதரசன் அணுக்கரு என்றாகிவிடுகிறது. அதுபோல, அணுக்கருவில் இரண்டு ப்ரோட்டான்கள் இருந்தால், அது ஹீலியம் என்னும் தனிமம் ஆகிவிடும். மேலே கூறிய தனிம அட்டவணையின் மூலம் ஒவ்வொரு ப்ரோட்டானாக அதிகரிக்க, எந்தத் தனிமங்கள் கிடைக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அணுக்கருவில் உள்ள ப்ரோட்டான்களின் எண்ணிக்கையை அந்தத் தனிமத்தின் 'அணுஎண்' என்று சொல்கிறார்கள். அணுக்கருவில் ப்ரோட்டான்களுடன் நியூட்ரான்களும் சேர்ந்தே காணப்படுகின்றன. தனிம அட்டவணையின் ஆரம்ப மூலகங்களை நாம் அவதானித்தால், ஒரு அணுக்கருவில் எத்தனை ப்ரோட்டான்கள் இருக்கின்றனவோ அதற்கேற்ப, கிட்டத்தட்ட அதே அளவான நியூட்ரான்களும் இருப்பதைக் காணலாம். ஆனால் அட்டவணை மேலே செல்லச் செல்ல ப்ரோட்டான்களின் அளவை விட, நியூட்ரான்களின் அளவு மிக அதிகமாக இருப்பதை நாம் கண்டுகொள்ளலாம். இப்படிப்பட்ட தனிமங்களில் ஆச்சரியமான சிறப்புத் தண்மைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அணுஎண் 90 க்கும் 100க்கும் இடையில் உள்ள தனிமங்களில் இந்தச் சிறப்புத் தண்மை அதிகமாகக் காணப்பட்டது. இந்தச் சிறப்புத் தண்மைதான் அணுசக்தியை நாம் பெறுவதற்கு காரணமாகிறது. இவையே ஆக்க சக்தியாகவும், அழிவு சக்தியாகவும் நாம் பயன்படுத்தும் அணுசக்தி மூலகங்கள் ஆகும்.

 

ஒரு அணுவில். ப்ரோட்டான் நேரேற்றத்துடனும் (+), எலெக்ட்ரான் எதிர் ஏற்றத்துடனும் (-), நியூட்ரான் ஏற்றமற்றும் (0) காணப்படும். எப்பொழுதும் எதிர் ஏற்றங்கள் ஒன்றையொன்று கவர்ந்து கொண்டும், ஒத்த ஏற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளிக் கொண்டும் இருக்கும். இதுதான் இயற்பியல் விதி. அணுக்கருக்குள் இருக்கும் ப்ரோட்டான்கள் நேரேற்றம் உடையவையாக இருப்பதால், அவை ஒன்றை ஒன்று தள்ளிக் கொண்டிருக்க வேண்டும். இதுபோல, பல ப்ரோட்டான்கள் தங்கள் ஒத்த விசையினால் ஒன்றை ஒன்று தள்ளினால், அணுக்கருவுக்குள்ளிருந்து ப்ரோட்டான்கள் வெளியே வீசியெறியப்பட வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. காரணம், அணுக்கருவுக்குள் இருக்கும் ப்ரோட்டான்கள், நியூட்ரான்கள் ஆகியவை ஒட்டிக் கொள்ளும் ஒரு விசையினால் அசையாமல் பிணைக்கப்பட்டிருக்கின்றன. 'திட அணுக்கரு விசை' (Strong Nuclear Force) என்னும் விசையே, ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் அந்த விசையாகும். அண்டத்தில் உள்ள அனைத்து விசைகளுக்கும் அடிப்படையான நான்கு விசைகளில் ஒன்றுதான் இந்தத் திட அணுக்கரு விசை. நான்கு விசைகளிலும் மிகவும் பலமான விசையும் இதுதான்.

அணுக்கருவை 'நியூக்கிளியஸ்' (Nucleus) என்று சொல்வதால், அதனுள் இருக்கும் ப்ரோட்டான்களையும், நியூட்ரான்களையும் 'நியூக்கிளியான்கள்' (Nucleons) என்று பொதுவான பெயரில் அழைப்பார்கள். நியூக்ளியான்கள் அனைத்தும், 'திட அணுக்கரு விசை' என்னும் பலமான விசையால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, யூரேனியம் (Uranium) என்னும் ஒரு தனிமத்தை நாம் எடுத்துக் கொள்வோம். யூரேனிய தனிமம் U என்னும் எழுத்தின் மூலமாக அடையாளப்படுத்தப்படுகிறது. யூரேனியத்தின் அணுக்கருவுக்குள் 92 ப்ரோட்டான்கள் இருக்கின்றன. மேலே சொன்னது போல, அணுசக்தித் தனிமம் என்னும் சிறப்பான தண்மையை இந்த யூரேனியம் கொண்டிருகிறது. யூரேனியத்துக்கு 146 நியூட்ரான்கள் உண்டு. எனவே யூரேனிய அணுக்கருவினுள் மொத்தமாக 238 நியூக்ளியான்கள் உண்டு (92+146=238). இந்த ஒவ்வொரு நியூக்கிளியான்களும் (ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும்) தனித்தனியாக மேற்படி விசையால் ஒட்டப்பட்டு இருக்கின்றன.  

 

அணுசக்தியைப் பெறுவதற்கு யூரேனியத்தின் U235 வகையையே பயன்படுத்துவார்கள். இந்த யூரேனியம் அணுக்கருவுக்குள் 235 நியூக்ளியான்கள் இருக்கும். பலமான விசையினால் ஒட்டப்பட்டிருக்கும் நியூக்கிளியான்களை, நாம் ஏதோ ஒரு வழியினால் உடைப்போமேயானால், அவை ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிளவுபடும். அப்போது சக்தி வெளிவிடப்படும். இந்த சக்தியை 'மெகா எலெக்ட்ரான் வோல்ட்' MeV (Mega electron Volt) என்னும் அளவினால் அளப்பார்கள். யூரேனியத்தில் இருக்கும் 235 நியூக்கிளியான்களும் மொத்தமாக உடையும் போது, 260 MeV சக்தி வெளிவிடப்படுகிறது. இது ஒரே ஒரு யூரேனியம் அணுவினால் வெளிவிடப்படும் சக்தி. ஒரு குறிப்பிட்ட எடையுடைய யூரேனியத்தில் எவ்வளவு அணுக்கள் இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள். பில்லியன் பில்லியன் அணுக்கள் அங்கே காணப்படும். அவை அனைத்தும் ஒரு செக்கனுக்குக் குறைவான நேரத்தில். உடைக்கப்பட்டால் எவ்வளவு சக்தி வெளிவிடப்படும் சொல்லுங்கள். அந்த சக்தி அளவிட முடியாத அளவுக்கு இருக்கும். குரோஷிமா, நாகசாக்கி நகரங்களை ஒரு நிமிட நேரத்தில் சவக்காடாக்கியது இந்த சக்திதான். 

 

 

1002299_540081849392180_1406287390_n.jpg



அணுசக்தித் தனிமங்கள் இரண்டு வகையாகத் தங்கள் செயல்திறணைக் காட்டிக் கொள்ளும். ஒன்று, அவை தானாகச் சிதைவடைவது (Nuclear Decay), மற்றது அவை இலகுவில் பிளவடைவது (Nuclear Fission). ஒவ்வொரு தனிமங்களும் அவற்றின் தண்மைக்கேற்ப சிதைவடைகின்றன. அதாவது தம்மைத் தானே அழித்துக் கொண்டு வேறொரு மூலகமாக மாறுகின்றன. இப்படி அழித்துக் கொள்வதை 'அரை வாழ்வுக் காலம்' (Nuclear half life) என்னும் அளவீட்டினால் அளக்கவும் செய்கிறார்கள். ஒரு கிலோ எடையுள்ள சிதைவடையும் தனிமம், தன்னைத் தானே அழித்து (சிதைவடைந்து) அரைக் கிலோ எடையுள்ளதாக மாறுவதற்கு எடுக்கும் காலத்தை, 'அரை வாழ்வுக் காலம்' என்கிறார்கள். பல தனிமங்களின் அரைவாழ்வுக் காலம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. தனிமங்கள் சிதைவடையும் போது, தனிமங்களின் தண்மைகளைப் பொறுத்து, அல்ஃபா கதிர், பீட்டா கதிர், காமா கதிர் என்னும் முன்று விதமான கதிர்களை வெளிவிடுகின்றன. இந்தக் கதிர்களை வெளிவிடுவதால், படிப்படியாக அந்தத் தனிமங்கள் அழிந்து புதிய தனிமங்கள் உருவாகின்றன. இதுவே மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய அணுக்கதிர்வீச்சு என்று சொல்லப்படுகிறது. ஒரு யூரேனியம் U238 தனிமம், அல்பா கதிரை வெளியிட்டுப் படிப்படியாக சிதைவடைந்து தோரியமாகவும் (Th234), ஹீலியமாகவும் (He) மாற்றமடைகிறது. 

 

44772_540082072725491_550995650_n.jpg



அணுப்பிளவு (Nuclear fission) என்பது வேறு விதமானது. இதுவே அணு உலைகளுக்கும், அணு குண்டுகளுக்கும் அடிப்படையானது. யூரேனியத்தின் ஐசடோப்புகளில் ஒன்றான U235 தனிமத்தை, ஒரு நியூட்ரானால் மோதும் போது, அந்த யூரேனியம் அணுக்கருவினுள் உள்ள நியூக்கிளியான்கள் சிதறடிக்கப்பட்டு, அணுக்கரு இரண்டாகப் பிளவுபடும். அப்படிப் பிளவுபடும் போது, ஒரு மடங்கு சக்தியும், மூன்று நியூட்ரான்களும் வெளிவிடப்படுகிறது. அத்துடன் புதிய அணுக்கதிர் வீச்சுள்ள தனிமங்களான பேரியமும் (Ba), கிரிப்டோனும் (Kr) உருவாகின்றன. வெளிவிடப்பட்ட மூன்று நியூட்ரான்கள், மேலும் மூன்று U235 தனிமத்தில் மோத, மூன்று மடங்கு சக்தியும், ஒன்பது நியூட்ரான்களும் வெளிவரும். இப்படியே தொடர்ச்சியாக இந்த அணுப்பிளவு சங்கிலித் தொடர்ச்சியாக நடைபெறுவதால், ஒரு மிகக் குறுகிய நேரத்தில் பாரிய சக்தி வெளிவிடப்படுகிறது. இந்தச் சக்தி வெப்பமாகவோ, அதிர்வாகவோ மாற்றப்படுவதால், மின்சாரம் பெறுவது போன்ற நல்ல பயன்பாட்டுக்கும், அணுகுண்டு போன்ற கெட்ட பயன்பாட்டுக்கும் பிரயோகிக்கப்படுகிறது.

அணுச்சிதைவு (Nuclear Decay), அணுப்பிளவு (Nuclear Fission) என்னும் இரண்டைப் பற்றியும் நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்க்குப் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் மேலே சொல்லியிருக்கிறேன். "இவை இரண்டைப் பற்றியும் ஏன் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்?" என்று நீங்கள் நினைக்கலாம். அணு உலைகள் பிரச்சனையாகப் பார்க்கப்படும் இந்த வேளையில், பலர் அணுக்கதிர் வீச்சினால் வரும் பாதிப்பையும், அணு உலை வெடிப்பினால் வரும் பாதிப்பையும் ஒன்றாகப் புரிந்து கொள்கின்றனர். ஒரு வெடி விபத்து எந்த விதத்தில் ஏற்பட்டாலும், வெடித்த இடத்தில் வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வுகளின் பாதிப்பு மட்டுமே இருக்கும். அங்கு மக்கள் இறந்தோ, பொருட்கள் சேதமடைந்தோ காணப்படும். ஆனால் அத்துடன் அது முடிவடைந்துவிடும். காலமாற்றத்தில் அந்த இடம் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும். இதுபோல, அணு உலையோ, அணு குண்டோ வெடித்தாலும் பாதிப்பு என்பது அதிர்வுகளினால் ஏற்படும் பாதிப்பாகதான் தோன்றும். அதாவது அணுப்பிளவின் மூலம் ஏற்படும் சக்தியின் வீரியத்தால் வெளிவரும் வெப்பத்தினாலும், அதிர்வினாலும் அழிவு ஏற்பட்டால் இதுவும் ஒரு சாதாரன வெடி விபத்தைப் போலவே பார்க்கப்படும். ஆனால் இங்கு பிரச்சனை இது மட்டுமில்லை. அணுப்பிளவுடன், அணுச்சிதைவை உருவாக்கும் மூலகங்களும் அந்த இடத்தில் சிதறடிக்கப்படுகின்றன. அணுவினால் கிடைத்த சக்தி மட்டுமே வெளியிடப்பட்டது என்றால் அதனால் அந்த நேரத்து அழிவுகள் மட்டும்தான் இருக்கும். ஆனால், அணுச்சிதைவை வெளிவிடும் அணுக்கதிர்வீச்சுத் தனிமங்களும் அங்கே சிதறிவிடுகின்றன. சிதற விடப்பட்ட அணுக்கதிர் மூலகங்களின் அரைவாழ்வுக் காலங்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருப்பதால், அவையெல்லாம் ஒட்டுமொத்தமாக அந்த இடத்தை விட்டு அழிவதற்கு இலட்சக்கணக்கான வருடங்கள் தேவைப்படும். அதுவரை அவை அங்கேயே இருந்து அணுக்கதிர்வீச்சுகளை வெளிவிட்டபடி மக்களை அழித்துக் கொண்டே இருக்கும் அவை. 

 

அணு உலை ஒன்று வெடிப்பதையிட்டு மக்கள் பெரிய பயம் கொள்ளத் தேவையில்லை. ஆனால், அந்த வெடிப்பின் மூலம் சிதற விடப்படும் கதிர்வீச்சைப் பற்றித்தான் பயப்பட வேண்டும். அதனால் அணுப்பிளவு (Nuclear Fission) என்பதை விட, அணுச்சிதைவு (Nuclear Decay) மிகவும் ஆபத்தானது. இதனாலேயே அணு உலையைப் பற்றி கவலை கொள்வதை விட, அணுக்கழிவு பற்றி அனைவரும் கவலை கொள்கின்றனர். அனு உலை மூலமாக, மீதமாக கழிக்கப்படும் அணுக்கழிவு என்பது அணுக்கதிர் வீச்சை வெளியிடக் கூடிய ஆபத்தான மூலகங்களைக் கொண்டது. இவையே இன்று உலகத்தை பலமாக மிரட்டிக் கொண்டுமிருக்கிறது. அதனால் அணுக்கழிவு எப்படி உலக நாடுகளினால் பாதுக்காக்கப்படுகின்றது என்பதை அடுத்த இதழில் விபரமாகப் பார்க்கலாம்.  

 

-ராஜ்சிவா -



பி.கு: இந்த அணு உலை பற்றிய தொடரின் மூன்றாம் பகுதி 2013 ஆகஸ்ட் மாத உயிர்மை இதழில் வெளிவருகிறது. அந்தப் பகுதி, முதல் இரண்டு பகுதிகள் போல அல்லாமல், மிகவும் வித்தியாசமான வேறு ஒரு வகையில் அமைந்திருக்கும். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் அது பிடிக்கும். காரணம் இவை இரண்டையும் முழுமையாகப் படிக்கும் ஆவலுள்ள உங்களுக்கு அது பிடிக்கும். என்னாலும், தமிழ்நாட்டின் அணு உலை பற்றிய விவகாரத்தில் ஒரு எல்லை தாண்டிக் கருத்துகள் சொல்லிவிட முடியாது. காரணம் அது இப்போ அரசியலின் உச்சக்கட்ட நிலைக்குச் சென்றுவிட்டது. அதனால் ஒரு நிலைக்கு மேல் என் கருத்தை நான் சொல்வது எப்படிப் பார்க்கப்படும் என்று தெரியவில்லை. ஆனாலும், மூன்றாம் பகுதியை வாசிப்பவர்கள் அணு உலைகளின் தண்மை பற்றி நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன். நன்றி/
-ராஜ்சிவா-
 
 
via fb

நல்ல ஒரு கட்டுரை ! 

 

இணைப்புக்கு நன்றிகள், அபராஜிதன் !

 

 

 

வருகைக்கும்  கருத்துக்கும் நன்றிகள் அண்ணா .. :)


நன்றி இணைப்புக்கு  :) 

 

 வருகைக்கு   நன்றிகள்  கா ளா ன்

 

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.