Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

 

D21051512011-TNA.jpg

Pics By:Joy jaya kumar

யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே இத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், 

வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ. விக்கினேஸ்வரன், கூட்டமைப்பில் 

அங்கம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபைத் தேர்தலில் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வடமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், கிளிநெச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களில் பாரிய 

அளவிலான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அவர்களால்  வெளியிடப்படவிருந்த தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

http://www.virakesari.lk/article/local.php?vid=6846

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு முக்கியஸ்தர்களின் முகங்கள் தேவையில்லை ....என்னதை வெளியிட்டிருக்கினம் என்று எழுதினால் நல்லம்..

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு முக்கியஸ்தர்களின் முகங்கள் தேவையில்லை ....என்னதை வெளியிட்டிருக்கினம் என்று எழுதினால் நல்லம்..

 

 

என்னத்தை

அவர்கள்  எழுதமுடியும் என்று  எதிர்பார்க்கின்றீர்கள் புத்தர் ஐயா..

தேர்தல் விஞ்ஞாபனத்தில்  என்னென்ன உள்ளடக்கம் என்பதினை குறிப்பிடவில்லையே  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை

அவர்கள்  எழுதமுடியும் என்று  எதிர்பார்க்கின்றீர்கள் புத்தர் ஐயா..

 

ஈழம் என்ற வார்த்தையை தவிர மற்றவற்றை துணிந்து கூறலாம்... தமிழமக்களின் உரிமைகள்,தேசியம்,மாகாணசபை அதிகாரங்கள்.......

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் என்ற வார்த்தையை தவிர மற்றவற்றை துணிந்து கூறலாம்... தமிழமக்களின் உரிமைகள்,தேசியம்,மாகாணசபை அதிகாரங்கள்.......

 

நீங்கள்  எழுதும் போதே ஈழம்  தவிர  என்பது போல்

எதை  சொன்னாலும்  அது சிங்களவன்  காதில்

ஈழம்   என்று விழுகுதே...

13ம் சரத்தே  ஈழமாம்......

நீங்க வேற....... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவிபரம்...

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (த.தே.கூ) வழங்கப்பட்ட மக்கள் ஆணை 

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் த.தே.கூ விற்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர். அந்த அரசியல் ஆணைக்கு அமையகூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற் படியாக தற்போது வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது. இம் மக்கள் ஆணையின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமானதாகும்.

1948 ஆம் ஆண்டில் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றபோது இலங்கையில் சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று பலவந்தமாக திணிக்கப்பட்டது. 1949 இல்  அண்மைக் கால இந்திய வம்சாவளித் தமிழர்களுள் கணிசமான எண்ணிக்கையிலானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 

தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும்  அரச ஆதரவுடனான குடியேற்றங்கள் தீவிரமடைந்தன. இதன் விளைவாக, 1949 டிசம்பர் மாதம் இலங்கை தமிழரசுக் கட்சி (இ.த.க) உருவாக்கப்பட்டது. 

இந்த பின்னணியில் 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தேசியம் என்பதற்கான எல்லா அம்சங்களிலும் சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு தனிச் சிறப்பு மிக்க  தேசிய இனம் ஆவர் என்பதும்  எனவே, சுய நிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பதுமான  தனது நிலைப்பாட்டை இ.த.க  வலியுறுத்தியது.

இந்த உரிமையை பிரயோகிப்பதற்கு தேவையானதொரு அம்சமாக தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடக்கு கிழக்கில் சுயாட்சி ஏற்பாடு ஒன்றை நாம் கோரினோம். 

1956 ஆம் ஆண்டு, பெரும்பான்மையினரிடம் இருந்த நாடாளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்தி  சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக ஆக்கப்பட்டது. இந்தகாலத்திற்கும் 1970களின்  பிற்பகுதிக்கும் இடைப்பட்டக் காலப்பகுதியில், முதலில் வெளிநாட்டவர்கள் நாட்டை வெற்றி கொண்டமையினாலும்  பின்னர் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, பெரும்பான்மை ஆதிக்கத்தை வலுப்படுத்திய ஓர் ஆட்சி முறையினாலும் இழந்த சுய நிர்ணய உரிமையை மீண்டும் வென்றெடுப்பதற்காக    பல்வேறு அமைதிவழி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க மற்றம் டட்லி சேனநாயக்க ஆகிய இரு பிரதம மந்திரிகளுக்கும் தமிழ் மக்களின் தலைவராகிய எஸ்.ஜே.வி செல்வநாயகத்திற்கும் இடையில் முறையே 1957 ஆம் ஆண்டிலும் 1965 ஆம் ஆண்டிலும் பிரதானமாக வடக்கு கிழக்கில் உள்ள அரச காணிகளின் பராதினப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட்டன. இவ்விரு ஒப்பந்தங்களுமே அன்றைய அரசாங்கங்களினால் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டன. 

1970 இல் தனக்கு உகந்த அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்காக அசியலமைப்புப் பேரவை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதக வும் இச் செயன்முறையில் பங்குபற்றியதோடு, தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக தீர்ப்பிற்கமைய ஒன்றுபட்ட ஒரு நாட்டிற்குள் பகிரப்படும் இறையான்மை எனும் அடிப்படையில்  தமிழ் பேசும் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியது. 

இவ் ஆலோசனைகள் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட, இதக உறுப்பினர்கள் அரசியல் அமைப்புப் பேரவையிலிருந்து வெளியேறினர். இதேபோன்று, 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிறைவேற்றத்திற்கும் தமிழ் மக்கள் தமது சம்மதத்தை வழங்கவில்லை. 

இவ்வாறு, முதலாம் மற்றும் இரண்டாம் குடியரசு அரசியல் அமைப்புகள் ஒற்றை ஆட்சி அரசமைப்பை பாதுகாத்து, தொடர்ந்து  சிங்களத்தை ஒரே அரச கரும மொழியாகக் கொண்டு செயற்பட்டதோடு, பௌத்தத்திற்கு முதன்மையான இடம் வழங்கின. அவை, தமிழ் மக்களின் சம்மதமின்றியே நிறைவேற்றப்பட்டன. 

1948 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, தமிழ் மக்களின் வரலற்றுரீதியான வாழ்விடப் பிரதேசமாகிய வடக்குக் கிழக்கின் இன விகிதாசாரத்தை  மாற்றியமைக்குமுகமாக திட்டமிட்ட அரச ஆதரவுபெற்ற குடியேற்றங்கள் நிறைவேற்றப்பட்டன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றபின்னர் வடக்கில் இது முழு முனைப்புடன்  தொடர்கிறது.  அரசாங்கம் அடக்குமுறை இராணுவ பிரசன்னமொன்றை வட மாகாணத்தில் தொடர்ந்து பேணி வருவதேதாடு, 'இராணுவ நோக்கத்திற்காக'  பெருமளவு காணிகளை கையகப்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது. 

தமிழ் இளைஞர்களின் மூன்றாம் நிலைக் கல்வியைப் பாதித்த தரப்படுத்தல் மற்றும் அரச துறையில் வேலை வாய்ப்புக்களில் பாரபட்சம் ஆகியன அடங்கலான பாரபட்சச் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக, 1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக காலத்துக்குக் காலம் திட்டமிட்ட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசினால் எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இச் சந்தர்ப்பங்களிலெல்லாம், நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அரசினால் வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதன் மூலம் இவ்விரு மாகாணங்களும் தமிழர்தம் தாயகமாக அங்கீகரிக்கப்பட்டன.

அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் 

1983 ஆம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பை உடனடுத்து, தமிழ் பேசும் மக்களுக்கு பெருமளவு தன்னாதிக்கம் வழங்கும் ஒரு மாற்று அரசியல் ஏற்பாட்டின் மூலம் தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வ காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1987 இல் (அரசியல்) ஏற்பாடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைகளை அமைப்பதற்கு இம் மாற்றங்கள் வழி வகுத்ததோடு, அது மேலும் விருத்திசெய்யப்படும் என்று அதி உயர் மட்டத்தில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அத்தகைய பல முயற்சிகள் 1993 ஆம் ஆண்டின் மங்கள முனசிங்க தெரிகுழு தீர்வாலோசனைகள், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 1995, 1997 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அரசாங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் 2006 டிசெம்பரில் சர்வ கட்சி பல்லின வல்லுனர் குழுவின் பெரும்பான்மையினர் அறிக்கை ஆகியவற்றிற்கு இட்டுச்சென்றன. 

எரியும் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண அரசியல் அரங்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதிருந்த அதேவேளை, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தது. ஆரம்பத்தில் பல ஆயுத இயக்கங்கள் இருந்தபோதிலும், 1987 இல் இருந்து இப் போராட்டத்தை தொடரும் ஒரே ஆயுத இயக்கமாக த.ஈ.வி.பு தோற்றம் பெற்றது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் த.ஈ.வி.புகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. 2002 பெப்ரவரி மாதம் த.ஈ.வி.பு வும் இலங்கை அரசாங்கமும் போர் நிறுத்த ஒப்பந்தமொனறில் கைச்சாத்திட்டதோடு, அதன் பின்னர், ஒஸ்லோ அறிக்கையென்று அழைக்கப்படும் பின்வரும்  கோட்பாட்டுத் தொகுதியொன்றின் மீது இணக்கம் கண்டன.

'ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பின்  அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுய நிர்ணய உரிமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த தீர்வொன்றை ஆராய்தல்'. 

இராணுவத் தாக்குதலும் அதன் பின் விளைவுகளும் 

எனினும், இந்த யுத்த நிறுத்தம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அரசாங்கப் படைகளுக்கும் தஈவிபு களுக்கும் இடையில் யுத்தம் மூண்டு 2009 மே 19 ஆம் திகதி இவ் இராணுவ மோதல் முடிவுக்கு வந்தது. 30 வருட பகைமையும் யுத்தமும் தமிழ் பேசும் வடக்குக் கிழக்குப் பகுதியை பேரழிவுக்கு உள்ளாக்கியதோடு, தமிழ் மக்களையும் கதியற்றவர்களாக்கியது. பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்புத் தேடி ஏனைய நாடுகளுக்கு தப்பிச் செல்ல, மேலுமொரு ஐந்து இலட்சம் தமிழர்கள் நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.

ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மோதல் நிலவிய ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத் தாக்குதலின் இறுதிக் கட்டங்களில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர்  அவயவங்களை இழந்தும் கடுமையான காயங்களுக்குள்ளாகியும் உள அழுத்தங்களுக்கும் ஒழுங்கீனங்களுக்கும்  உள்ளாகியுள்ளனர். 

மேலும், 500,000 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டதோடு, பலர் எல்லா நாகரிக மற்றும் சர்வதேச நியமங்களுக்கும் எதிராக தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.  இம் மக்கள் தமது பூர்வீக இடங்களில் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என சர்வதேச சமூகத்துக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டபோதும் அவர்களின் மீள் குடியேற்றம் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.  

அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு

தேசிய பிரச்சனையின் தீர்வுக்கு மிக முக்கியமானதென த.தே.கூ கருதுகின்ற கோட்பாடுகளும் விசேட அரசியலமைப்பு ஏற்பாடுகளும் பிரதானமாக இத் தீவில் வாழுகின்ற மக்களின் மத்தியில் பகிரப்பட்டதொரு இறையான்மையின் மூலம் ஆட்சி அதிகாரங்களை பகிர்வது தொடர்பானதாகும். உண்மையான நல்லிணக்கத்தையும் நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தையும் இலங்கை மக்கள் அனைவருக்குமான அபிவிருத்தியையும் எய்துவதற்கு அதிகாரப் பகிர்வின் பின்வரும் முக்கிய அம்சங்கள் அடிப்படையாக அமைகின்றன.

•    தமிழ் மக்கள் ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசியமாகும் என்பதோடு சிங்கள மக்களோடும் ஏனையவர்களுடனும் சேர்ந்து இலங்கைத் தீவில் வாழ்ந்தும் வந்துள்ளனர்.

•    புவியியல் ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளதும்  தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டதுமான  ; வடக்கு கிழக்கு மாகாணங்களே; தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும். 

•    தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவர்.

•    தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முறையில், சமஷ்டி கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும்.

•    அதிகார பரவலாக்கமானது காணி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றின் மீதானவையாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் உடனடி அக்கறைக்குரிய விடயங்கள்

நீதியானதும், நிலைத்திருக்கத்தக்கதுமான  சமாதானத்திற்காக தொடர்ந்து முயல்வதற்கு மேலதிகமாக, எமது மக்களின் தற்போதைய உடனடி  கவலைகளைத் ;தீர்த்து வைப்பதிலும் நாம் முனைப்புடன் ஈடுபடுவோம். ஐநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட  பரிந்துரைக்களையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் மார்ச் 2012 இலும் மார்ச் 2013 இலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் அமுல்படுத்த நாம் முனைவோம். விசேட விடயங்கள் பின்வருமாறு;-

•    ஆயுதப் படைகள், இராணுவச் சாதனங்கள் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள் ஆகியவற்றை வடக்கு கிழக்கிலிருந்து அகற்றுவதன் மூலம் 1983 இல் நிலவிய யுத்தத்திற்கு முந்திய சூழ்நிலை மீண்டும் ஏற்படும் வகையில் காத்திரபூர்வமான இராணுவ பிரசன்னமற்ற நிலை இருக்கவேண்டும்.

•    போர் காரணமாக வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது முன்னைய இடங்களில் துரிதமாக மீள்குடியேற்றப்பட்டு வீடுகள் வழங்பப்படவேண்டும், அவர்களது வாழ்வாதாரம் மீண்டும் ஏற்படுத்தித்தரப்படவேண்டும், அவர்களது கௌரவம் மதிக்கப்படவேண்டும்.

•    யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில்  சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியமை பற்றிய இலங்கை அரசாங்கத்துக்கும்  தஈவிபு களுக்கும்  எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு, உண்மையும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும்  நிலைநாட்டப்படுவதோடு, இழப்பீடுகள் அடங்கலான நிவாரணங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

•    குற்றச்சாட்டுக்களின்றித் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படுவதோடு, ஏனைவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும்.

•    காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பாக இறுதி முடிவொன்று எட்டப்பட வேண்டும் என்பதோடு, அவர்களின் உறவினர்களுக்க நட்டஈடு வழங்கப்படவும் வேண்டும். 

•    நாட்டை விட்டு தப்பியோடிய தமிழர்கள் தமது வீடுகளுக்கு திரும்பி வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்பதோடு, அவர்கள் திரும்பி வருவதற்கு உகந்ததோர் சூழ்நிலை உருவாக்கப்படவும் வேண்டும். 

•    இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குதல் அடங்கலாக வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கான விரிவானதொரு நிகழ்சித் திட்டம் இலங்கை அரசாங்கத்தினதும்  புலம் பெயர்ந்த  தமிழர்களதும்  சர்வதேச சமூகத்தினதும் முனைப்பான ஆதரவுடன் மேற்கொள்ளப்படும்.    

சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றம் உடன்படிக்கைகள் தொடர்பாகப் பேணப்படும்  விளக்கங்களுக்கமைய,  இலங்கை வாழ் தமிழர்களான நாம்  தனிச் சிறப்புமிக்கதொரு மக்கள் கூட்டமாகும். ஒரு மக்கள் கூட்டம் என்ற வகையில் நாம் இந்த நாட்டில் பேரினவாத விரிவாக்கத்திற்கு ஆட்படாது,  கன்னியத்துடனும் சுய மரியாதையுடனும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் சமத்துவமான பிசைகளாக ஏனைய மக்களுடன் தொடர்ந்து  சமாதான சகவாழ்வு வாழவே விரும்புகிறோம். 

எனவே, ஒரு மக்கள் கூட்டம் என்ற வகையில்,  எமது வரலாற்று ரீதியான வாழ்விடங்கள்; ஒரு தேசியம் என்ற வகையில் எமக்கு உரித்தாகின்ற எமது ஒருமித்த உரிமைகள் மற்றும் ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் நாட்டின் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடக்கு கிழக்கில் சுய அரசாங்கமொன்றை உறுதி செய்வதற்கு நாங்கள் செய்யக்கூடிது என்ன  என்பதை தீர்மானிப்பதற்கான எமது தெரிவை பயன்படுத்துவதற்கான எமது உரிமை ஆகியன பற்றி நாம் கரிசனை கொண்டுள்ளோம்.

இது தொடர்பான தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகள் திருப்தியற்றவையாக அமைந்துள்ளன. பெரும்பான்மை சமூகத்திற்கும் பேரினவாத விரிவாக்கத்திற்கும்  சார்பான அரசியலமைப்பு ஒன்றுதான் தற்போது உள்ளது. நீதி, சமத்துவம், சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு வகைசெய்யும் ஓர் அரசியலமைப்பு முறைமை இன்றி பல்லின சமூகமொன்றில் ஜனநாயகம் செயற்பட முடியாது. இந்தக் கண்ணோட்டத்தில்தான் நாங்கள் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலை நோக்குகின்றோம்.

இறையான்மை என்பது, மக்களிடமே உண்டு, அரசிடம் இல்லை என்று ததேகூ உறுதியாக நம்புகிறது. தமிழ் மக்களை ஆளுகின்ற உரிமை கொழும்பிலிருக்கும்  அரசாங்கத்திடமின்றி, அம் மக்களிடமே உண்டு. மத்திய அரசாங்கத்திலும் அதன் முகவரான ஆளுநரிடமும் அதிகாரம் குவிந்து கிடக்கிறது என்பதால், இலங்கை அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் மீறப்பட்டுள்ளது. யதேச்சாதிகார  அரசிற்கு விடுக்கும் ஒரு அடிப்படை ஜனநாயக சவாலில்தான் எமது அரசியல் சித்தாந்தம் வேரூன்றி நிற்கின்றது. 

எனவே, தமிழ் மக்களின் தேவைகளிலும் வேணவாக்களிலுமே எமது நீதிக்கும் சமத்துவத்திற்குமான அரசியல் நிகழ்ச்சித் திட்டம்  வேரூன்றி இருக்கிறது. மேற் கூறியவற்றையும் (தேவைகளையும் வேணவாக்களையும்) நம்மில் நாம் தங்கியிருத்தலையும் அடைவதற்கு நம்மை நாமே ஆளுகின்ற அரசாங்கம் எமக்கு வேண்டுமென்பது முக்கியமாகும். இதனை அடைவதற்காக ஓர் இரு கட்ட அரசியலமைப்பு செயன்முறையை நாம் வகுத்துள்ளோம்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கான தன்னாட்சி அரசாங்கம் ஒன்றிற்காக குரல் கொடுப்பதில் சிறந்த பங்கொன்றை வகிப்பதற்கு எங்களால் இயன்றதனைத்தையும் செய்கின்ற அதேவேளை, ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான எமது காத்திரபூர்வமான அரசியல் பேச்சு வார்த்தைகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். 

நியாயமாகவே எங்களுக்குரியதான அந்த அரசாங்கப் பணிகளைப் பொறுப்பேற்பதற்கு சட்டவாக்க, நீதித்துறை மற்றும் நிதி அதிகாரங்களைக் கொண்ட, ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட ஓர் அமைப்பு இருக்க வேண்டியதன் தேவையை நாங்கள் இதைவிட வலியுறுத்த முடியாது. 

தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகள் மூன்று தசாப்த கால ஆயுத மோதலினால் நொந்து போயுள்ளது.; நேரடி மோதலின் விளைவுகளாக – போரிடும் தரப்பினர் மத்தியிலான இழப்புகள், படையினரின் ஒழுக்கமற்ற நடத்தை, வேண்டுமென்றே குடிமக்களை  குறி வைத்துத் தாக்கியமை மற்றும் கன்னி வெடிகளை புதைத்தமை – மட்டுமன்றி, பட்டினி, பலவந்தமாக குடியகலச் செய்தமை மற்றும் வடக்கு கிழக்கின் பொருளாதார மற்றம் நிர்வாகக் கட்டமைப்புக்களின் சீரழிவினால் ஏற்பட்ட அரசாங்க சேவைகளின் வீழ்ச்சி ஆகியவற்றினாலும் மனித இழப்புகள் ஏற்பட்டன. 

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் 

உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களுக்கு (உஇஆ) நீடித்து நிலைக்கத்தக்க ஒரு தீர்வை பெறுவதற்கான உரிமை உண்டு என்பதோடு, அவர்களக்கு தமது முயற்சிகளில் அடிக்கடி உதவியம் தேவை. மாகாண சபை உஇஆ ;களின் உரிமைகளுக்கு உடனடி கவனம் செலுத்தி நீடித்து நிலைத்திருக்கும் தீர்வுகளை வகுப்பதோடு, அதிகாரிகளின் பொறுப்புக்களை விதித்துரைத்து இவற்றை அடைவதில் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திச் செயற்பாட்டாளர்களின் உதவிகளைப் பெறுவதற்கும் வகை செய்யும். 

உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு அல்லது வழக்கமான வாழ்விடங்களுக்கு பாதுகாப்பாகவும் கன்னியத்தோடும் திரும்பிச் செல்வதற்கு இடமளிக்கும் நிலைமைகளை ஏற்படுத்துவதும் அதற்கான வழி வகைகளை வழங்குவதுமான முதன்மையான கடமையும் பொறுப்பும் நம்பகத் தன்மை மற்றும் வகைகூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பொருட்டு மாகாண சபைகளின் கைகளிலேயே விடப்பட வேண்டுமென்பதை த.தே.கூ அங்கீகரிக்கின்றது. 

முஸ்லிம்கள்

1996 ஆம் ஆண்டிற்கு முன்னர், வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பகுpகளில் பாரம்பரிய குடிகளாக இருந்துள்ளனர். அவர்கள் தமது சொத்துக்களைக் கைவிட்டு, நாட்டின் ஏனைய பாகங்களுக்குச் சென்று சொல்லொனாத் துன்பங்கள் அனுபவிக்க நிர்பந்திக்கப்பட்டமை வருந்தத் தக்கதாகும்.

வட மாகாணத்திலிருந்து வெளியேறிய அனைத்து முஸ்லிம்களும் இயன்றவரை விரைவாக தத்தமது பகுதிகளுக்கு திரும்பிச் சென்று தமது வாழ்வாதாரத் தொழில்களை மீண்டும் தொடங்குவதை உறுதிப்படுத்துவதில் நாம் பற்றுறுதி கொண்டுள்ளோம். அவர்கள்  திரும்பிச் செல்வதற்கு ஊக்குவிக்கப்படுவதோடு, தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனைத்து உதவிகளையும் வட மாகாண சபை அவர்களுக்கு வழங்கும். 

முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பான எந்தப் பிரச்சனைக்கும் வட மாகாணத்தில் வாழுகின்ற ஏனைய சமூகங்களின் பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் அதேயளவு கவனிப்பு வழங்கப்படும். இம் மாகாணத்தில் வாழும் அனைத்து சமூகத்தவருக்கும் நீதியானதும் சமத்துவமானதுமான கவனிப்பு கிடைக்கப்பெறுவதை இம் மாகாண நிர்வாகம் உறுதி செய்யும். 

போர் விதவைகள்  

யுத்தம் வட மாகாணத்தில் மாத்திரம் 50,000ற்கும் மேற்பட்ட விதவைகளை விட்டுச் சென்றுள்ளது. அவர்களுடைய திறனைக் கட்டியெழுப்புவதற்கும் இப் போர் விதவைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குமான தெளிவானதொரு கொளன்கைக்கான தேவையொன்றுள்ளது. இவ் விதவைகள், பொருளாரார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். 

எனவே, அவர்களது தற்போதைய துயர் நிலையைத் துடைப்பதற்கு வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்களையும் ஏனைய தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான பொறுப்பினை இம் மாகாணசபை விரைவாகவும் வினைத் திறனோடும் ஏற்றுச் செயற்படும்.யுத்தத்திற்குப் பிந்திய காணிப் பிரச்சனைகள்.

யுத்தம் முடிவுற்று நான்கு ஆண்டுகளின் பின்னர் இன்னமும் அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயங்களாக அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வலயங்களாக பல பகுதிகளை அறிவித்து, அப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் அங்கு சென்று மீள் குடியேறவிடாது தடுக்கின்றது. உரிய நடைமுறைகள் இன்றி பெருமளவு காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

உரிய நடைமுறைகள் இன்றி காணிகளைக் கையகப்படுத்துவதற்கு எந்தவொரு ஜனநாயக அரசாங்கத்துக்கும் உரிமை இல்லை. தனியார் காணி உடைமையாளர்களின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டுமென்பதோடு, அத்தiகைய காணிகளை அவற்றின் சட்டபூர்வ உடைமையாளர்களிடம்  மீளக் கையளிக்கவும் வேண்டும். இக்காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட  கணிசமான தொகையினர் மிகவும் கஸ்டமான நிலைமைகளில் வாழுகின்றனர். காணி கையகப்படுத்தல் மற்றம் அவற்றைப் பிடித்து வைத்திருத்தல் தொடர்பான   அரசாங்கத்தின் கடுமையான சட்ட விதிகள்  பல ஆயிரம் தமிழர்களின்  வளமான விசாயக் காணிகளை பறித்துவிட்டது. அத்துடன், கடல்தொழில் மீது விதிக்கப்பட்டக் கட்டுப்பாடுகள் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து விட்டது.

வடக்கு கிழக்கில் அரசாங்கம் காணிகளை பலவந்தமாக  கையககப்படுத்துல் மற்றும் பயன்படுத்தல் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அவசரத் தேவையொன்று நிலவுகின்றது. வடக்கு கிழக்கில் காணிகள் மீதான கட்டுப்பாட்டை மாகாண நிர்வாகம் தக்க வைத்துக் கொள்வதில் ததேகூ பற்றுறுதி கொண்டுள்ளது. வடக்கு கிழக்கின் இனத்துவ மற்றும் கலாசார தனித்துவத்தின் மீது  குறிவைக்கும் காணி உடைமை, கட்டுப்பாடு மற்றும் பாவனை மீதான தற்போதைய கொள்கையை சீர்திருத்தாது நல்லிணக்கம் எதுவும் ஏற்பட முடியாது என்று ததேகூ நம்புகிறது. 

சட்டமும் ஒழுங்கும்  

வட மாகாணம் சட்டமும் ஒழுங்கும் தொடர்பான நெருக்கடியொன்றை எதிர்கொள்கின்றது. அதன் மக்கள் அச்சத்தினாலும் பாதுகாப்பின்மை உணர்வினாலும் ஆட்டிப் படைக்கப்படுகின்றனர். குற்றம் புரிவோர், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒருவாறு தப்பித்துச் சென்றுவிடுகின்றனர். தமது மனித உரிமைகள் பாரதூரமாக மீறப்பட்டமையினால் பாதிப்புற்ற மக்களுக்கு நீதியோ அன்றில் பொறுப்புக் கூறலோ இல்லை. 

குற்றமிழைப்போர் நீதியின் முன் கொண்டுவரப்படுவதில்லை. அதனால், பாதிப்புறுவோருக்கும்; உயிர் தப்பியவர்களுக்கும் நிவாரணம் கிடைப்பதில்லை. இ.ந் நிலைமையானது, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான இலங்கை அரசாங்கத்தின் சர்வதேசக் கடப்பாடுகளின் பாரதூரமானதொரு மீறலாக அமைகின்றது. மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியற்றின் மீறலுக்கான குற்ற விலக்களிப்பானது இலங்கையில் வடக்கு கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் ஒரு விதிவிலக்கு என்பதை விட நாளாந்த வழக்கமாகவே நிலவி வருகின்றது. 

மாகாண சபையினால்  பணிக்கபபுரை விடுக்கப்படுகின்ற ஒரு பொலிஸ் படையே வடக்கு கிழக்கிற்கான மிகவும் பயன் மிக்க ஒரு பொலிஸ் படையாக அமையுமென்று ததேகூ நம்புகிறது. தற்போது  மாகாணத்தில் மக்களுக்கும் பொலிஸ் சேவைக்குமிடையே எவ்வித நம்பிக்கையும் இல்லை. மக்களுக்கு அவர்களுடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால், தமது சமூகத்தில் நிலவும் குற்றங்கள் மற்றும் பூசல்கள் பற்றிய கரிசனையோடு பொலிசாரை அணுக அவர்கள் அஞ்சுகின்றனர். 

 தொழில் உருவாக்கம் 

எந்த ஒரு மாகாண சபையும் தொழி;ல் இன்மைப் பிரச்சனையை கையாளவே விரும்பும். எனவே, அதனைச் செய்வதற்கு அதற்கு கருவிகள் தேவை. உண்மையில் வட மாகாணத்தில் நிலவும் தொழிலின்மையின் மூல காரணங்களை அகற்றுவது ததேகூ வின் முன்னுரிமைகளுள் ஒன்றாக அமையும். 

தொழில் வாய்ப்புக்களை உச்சநிலைப்படுத்த பொருளாதாரத்தின் தொழில் முயற்சி மற்றும் வியாபாரத் துறைக்கு உறுதுணை புரிவதை  ததேகூ ஆதரித்து நிற்கின்றது. நமது சமூகத்தில் செய்யப்பட வேண்டிய பல பணிகள் உள்ளன என்பதை நினைக்கும்போது இது குறிப்பாக, பொருத்தமுடையதாகிறது: சூழலைப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும்; பொதுப் போக்குவரத்தை அபிவிருத்தி செய்தல்; மேலும் சிறந்த சமூகப் பராமரிப்பு; குற்றச் செயல்களையும் நாச வேலைகளையும் எதிர்த்துப் போராடுதல்; புதிய உட்கட்டமைப்புகளிலான முதலீடு. இவையனைத்தும் தற்போதைய அரசாங்கம் எவ்வித தீர்வும் வழங்காத மிக முக்கிய தேவைகளாகும். அதன் மனப்பாங்கு தமிழ் மக்களுக்கு குறிப்பாக தவறிழைத்துவிட்டது. ஒப்பீட்டளவில், கைத்தொழில் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உரிமை மறுக்கப்பட்ட மக்களை மீள ஒருங்கிணைப்பதையும் நிலைபேறான வளர்ச்சியை மேம்படுத்துவதையும் ததேகூ ஆதரிக்கின்றது. 

தேசிய மற்றும் சர்வதேச உதவியுடனான அபிவிருத்தி    

யுத்தத்திற்குப் பிந்திய புனர்நிர்மாணத்திற்கு, யுத்தத்தின் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதும் சந்தை நிறுவனங்களுக்கு உறுதுணை புரிவதும் அதன் மூலம் தனியார் துறை உற்பத்தியில் நீண்ட கால வளர்ச்சிக்கான திறனை உருவாக்குவதுமான ஒரு ஒருங்கிணைந்த வறியோர் சார்பு அணுகுமுறை தேவை. இம் மாகாணத்தில் நிலவும் நீண்ட கால முதலீடு மற்றும் உதவி பிரச்சனைகளை தீர்த்துவைக்க ததேகூ இலங்கை அரசுடனும் சர்வதேச சமூகத்துடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் இணைந்து செயற்படும். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்சியையும் நலச் செழிப்பையும் பெற்றுக் கொள்வதில் புலம்பெயர் தமிழர்கள் ஒரு முக்கிய அம்சமாகும். எனவே, அபிவிருத்தித் துறையில் மட்டுமன்றி, நீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதும் நீடித்து நிலைக்கக்கூடியதுமான ஓர் அரசியல் தீர்வை காண்பதற்கான எமது தாகத்திலும் அவர்களது பெறுமதி மிக்க உதவியையும் நிபுணத்துவத்தையும்  பெற்றுக்கொள்வோம். 

சுமூகத்தின் பங்கேற்பு சமூக அபிவிருத்தியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. எனினும், மோதல் மோசமடைந்ததால் வட மாகாணத்தில் இருந்த கூட்டுறவுச் சங்கங்களின் நடவடிக்கைகள் ஒரு பின்னடைவை எதிர்நோக்கின. தற்போது யுத்தம் முடிவுற்றிருப்பதால் மாகாண நிர்வாகம் பனையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளின் அபிவிருத்தி, விவசாயம் மற்றும் கடற்றொழில் முதலிய சமூக  அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

சர்வதேச சமூகத்தின் பங்கு 

உள்நாட்டு நடைமுறைகளுடாக தேசிய பிரச்சனையின் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான ஒரு தீர்வுக்காக தமிழ் மக்கள் எப்போதும் பற்றுறுதியுடன் பணியாற்றியுள்ளனர். இலங்கை அரசுதான் இவ் வாய்ப்புக்களை வீணடித்து மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு செயல்களின் மூலம் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முயன்றது. இலங்கை அரசின் அத்தகைய நடத்தைதான் தேசிய பிரச்சனையை சர்வதேசமயமாக்கி சர்வதேச வகிபாகத்தை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசை நிர்பந்தித்தது. தவிர்க்க முடியாத ஒரு விளைவாகிய தமிழ் போராளிச் செயற்பாடுகள் தற்போது முடிவடைந்துவிட்டன. 

சர்வதேச ஈடுபாட்டின் வாயிலாக அடையப்பெற்ற குறைந்தபட்ச முன்னேற்றத்தையும் இல்லாமல் செய்ய இலங்கை அரசு தற்போது முயன்று வருகிறது. இது, இலங்கையில் தமிழர்கள் ஒரு மக்கள் கூட்டமாக இருப்பதை இல்லாமல் செய்வதற்கே இட்டுச் செல்லும். இலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களுக்குமான நீதியும்   நிரந்தர சமாதானத்தின் மூலம் அடையப்பெறும் உண்மையான நல்லிணக்கமும் சர்வதேச அனுசரணையின் கீழேயே அடையப் பெறலாம் என்ற உறுதியான கருத்தை ததேகூ கொண்டுள்ளது. 

இலங்கை அரசு தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய தன்னை மீள் கட்டமைத்து அதன் மூலம் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதிருந்தமையும் தமிழ் குடிமக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டமையும்தான் சர்வதேச சமூகத்தின் வகிபாகம் மிகவும் தவிர்க்க முடியாததாக மாறியமைக்கு வழி வகுத்தது என்பதை ததேகூ சுட்டிக் காட்ட விரும்புகிறது. இத்தகைய சூழ்சிலைகளில்,  சர்வதேச சமூகம் உலகெங்கும் பல சந்தர்ப்பங்களில் நியாயபூர்வமாகவே ஒரு முக்கிய பங்கினை வகித்துள்ளது. 

முடிவுரை 

ஒரு மக்கள் கூட்டமென்ற வகையில் எமக்கேயுரிய தனித்துவத்தை பேணுகின்ற அதேவேளை, எமது மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும். ஒரு மக்கள் கூட்டமென்ற வகையில் எமது அரசியல் உரிமைகளையும் நாம் மீட்டெடுக்க வேண்டும். எனவே,  இலங்கைத் தமிழரசரசு கட்சி என்ற பெயரின் கீழ் அதன் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து இத் தேர்தலில் தமது உறுதியை எடுத்துக்காட்ட தைரியத்துடன் எழுந்து நிற்குமாறு தமிழ் பேசும் மக்களிடம் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.    

இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/81215-2013-09-03-08-10-51.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.