Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் அரசியலும், இலட்சிய அரசியலும் ஒன்றாகப் பயணிக்கமுடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் அரசியலும், இலட்சிய அரசியலும் ஒன்றாகப் பயணிக்கமுடியுமா?

- முத்துக்குமார்

தேர்தல்கள் இலட்சிய அரசியலைச் சிதைக்கும் ஒரு கருவி என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இதற்கு இடதுசாரி அரசியலோ, தேசிய இன அரசியலோ விதிவிலக்காக இருந்ததில்லை. இலட்சிய அரசியலின் எதிரிகள் அதனைத் தோற்கடிக்க எப்போதும் தேர்தல் அரசியலையே பயன்படுத்த முனைவர்.

தேர்தல் அரசியலில் ஈடுபடும்வரை இடதுசாரி இயக்கம், இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி வலுவானதாக இருந்தது. அவை எப்போது தேர்தல் அரசியலைத் தேர்ந்தெடுத்ததோ, அன்றிலிருந்தே சிதையத் தொடங்கியிருந்தன. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலும், சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒரு சில வருடங்களும், இடதுசாரி இயக்கங்கள் வலிமையான அமைப்புகளாக இலங்கையில் இருந்தன. மகத்தான பல போராட்டங்களை நடாத்தியிருந்தன. ஒரே நேரத்தில் காலனித்துவத்திற்கெதிரான தேசிய இயக்கமாகவும், தொழிலாளர்களின் நலன்களை முன்னெடுக்கும் இடதுசாரி இயக்கமாகவும் அவை இருந்ததை மறுக்க முடியாது. தொழிற்சங்க இயக்கத்தின் கட்டுப்பாடு முழுக்க முழுக்க இடதுசாரி இயக்கத்தின் கைகளிலேயே இருந்தது.

ஆனால் தேர்தல் அரசியல் இவற்றையெல்லாம் சிதைத்து, இடதுசாரி இயக்கத்தை வெறும் பெயர்ப்பலகைக் கட்சிகளாக தற்போது உருமாற்றியுள்ளது. இலங்கை அரசியலில் சமூகங்களின் அமைவைப் பொறுத்தவரை பன்மைத்தன்மையைப் பேணிய இடதுசாரிக் கட்சிகள் பின்னர் வாக்குவங்கிக்காக அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டன. பேரினவாதக் கட்சிகளுக்கு எந்தவித குறைவுமில்லாமல், பேரினவாத சுலோகங்களைத் தூக்க இக்கட்சிகளும் பின் நிற்கவில்லை.

இலட்சிய அரசியலில் இலட்சியம்தான் முக்கியம். ஆனால் தேர்தல் அரசியலில் கதிரைகள்தான் முக்கியம். இக்கதிரைகளுக்காக இடதுசாரி இயக்கங்கள் இலட்சிய அரசியலையே கோட்டைவிட்டன என்பதே வரலாறு. கதிரைகளுக்காக இலட்சியத்தைக் கைவிடச் செய்யும் ஆற்றல் தேர்தல் அரசியலுக்கு இருந்தது, 'இரு மொழி ஒருநாடு' என்று கர்ச்சித்த கொல்வின் ஆர்.டி. சில்வா, பின்னர் தமிழ்மக்களை அரசகட்டமைப்பிலிருந்து முழுமையாக நீக்குகின்ற 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் உருவாக்கத்திற்குத் துணைபோனார்.

தேர்தல் அரசியலினால் சிதைந்துபோன மற்றோர் இலட்சிய கட்சிக்கு உதாரணம் ஜே.வி.பி ஆகும். அது இலட்சிய அரசியலை தேர்தல் அரசியலுக்குள் செயற்படுத்த முனைந்தது. கட்சியின் அதியுயர் தலைமையை மறைமுகமாக வைத்திருந்தது. தலைவரும், செயலாளரும் தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து தவிர்க்கப்பட்டனர். ஆனால் சிதைவு இறுதியில் தவிர்க்கமுடியாததாகியது. தேர்தல் அரசியலுக்காக இறக்கிவிடப்பட்ட விமல் வீரவன்ச பின்னர் கட்சியையே உடைத்துச் சென்றார். தொடர்ந்து தேர்தல் அரசியலா? இலட்சிய அரசியலா? என்ற விவாதத்தில் கட்சி மீண்டும் இரண்டாக உடைந்தது.

இந்தியாவிலும் இடதுசாரி இயக்கங்களின் சிதைவிற்கு தேர்தல் அரசியலே காரணமாக இருந்தது. தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினாலும், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினாலும் இந்திய அரசியலில் பெரியளவு தாக்கங்களை உருவாக்க முடியவில்லை. சற்று வலிமை நிலையிலிருந்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று தனது கோட்டையான மேற்கு வங்காளத்தையும், நேற்று முளைத்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸிடம் பறிகொடுத்துவிட்டுத் தவித்துக்கொண்டிருக்கின்றது.

தமிழ்த்தேசிய அரசியலில் தேர்தல் அரசியலின் தாக்கம் மிகவும் பெரியது. வரலாற்றுக் காலம் முழுவதுமே தமிழ்த்தேசிய அரசியலைச் சிதைப்பதில் அது பெரும் பங்காற்றியிருக்கின்றது. தமிழரசுக் கட்சியோ, தமிழர் விடுதலைக் கூட்டணியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

தமிழரசுக்கட்சி அதன் ஆரம்ப காலத்தில் தேசிய அரசியல் இயக்கமாகவும், ஒரு தேர்தல் அரசியல் கட்சியாகவும், இரட்டைத்தன்மையைப் பெற்றிருந்தது. எனினும் ஆரம்பகாலங்களில் தேசிய அரசியல் இயக்கத் தன்மையே மேல்நிலையில் இருந்தது. தமிழரசுக் கட்சியின் பொற்காலம் எனக் கருதப்படுகின்ற, 1956 - 1961 காலம்வரை அது நீடித்தது எனலாம். காலிமுகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டம் (1956), திருமலை யாத்திரை(1957), சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டம் (1958), வட - கிழக்கு அரச செயலகங்களின் முன்னாலான சத்தியாக்கிரகப் போராட்டம் (1961) என்பன இக்காலகட்டத்திலேயே இடம்பெற்றன.

தொடர்ந்து வந்த காலங்களில் தேர்தல் அரசியற்கட்சித் தன்மை மேலோங்கியமையால் தேசிய இயக்கத்தன்மை படிப்படியாகச் சிதைந்து போனது. 1965இல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டரசாங்கம் அமைத்தமை இச்சிதைவின் உச்சமாக இருந்தது. இதற்குப் பின்னர் தமிழரசுக் கட்சிக்கு தேசிய அரசியல் இயக்கப் பாத்திரமே இருக்கவில்லை.

ஓர் அரசியல் இயக்கத்திற்கு தேசிய அரசியல் இயக்கத் தன்மை அதிகரிக்க, அதிகரிக்க இலட்சிய சக்திகள் அதிகளவில் உள்வருவர். அதேவேளை தேர்தல் அரசியல் தன்மை அதிகரிக்க, அதிகரிக்க இலட்சிய சக்திகள் தாமாகவே வெளியேறுவர். தேர்தலில் கூத்தடிக்கும் ஜொலி அரசியல்வாதிகள் அவ்விடத்தை நிரப்புவர். 1965ற்குப் பின்னர் தமிழரசுக்கட்சி ஜொலி அரசியல்வாதிகளின் கூடாரமாக மாறிப்போனது.

அதேவேளை இக்காலப்பகுதியில் தான் தேசிய இனஒடுக்குமுறை கொடூரவடிவத்தை எடுத்தது. தமிழ்மக்களின் கூட்டிருப்பைச் சிதைக்கும் வகையில் சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன. இலட்சியவாத சக்திகள் இலட்சிய அரசியலும், தேர்தல் அரசியலும் ஒன்றாகப் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்தனர். இதன் வெளிப்பாடாகத்தான் 1968ஆம் ஆண்டு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் முதலாவது தேசிய அரசியல் இளைஞர் இயக்கமாக ஈழத்தமிழர் விடுதலை இயக்கம் தோற்றம் பெற்றது.

1970ம் ஆண்டு தேர்தல் வந்தது. இது தேசிய அரசியல் இயக்கமாக உருவாகிய ஈழத்தமிழர் விடுதலை இயக்கத்தையும் அடித்துச் சென்றது. ஒரு பிரிவினர் தேர்தல் அரசியலில் ஈடுபட்ட தமிழரசுக் கட்சிக்காகவும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்காகவும் பிரச்சாரம் செய்தனர். இன்னோர் பிரிவினர் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஒதுங்கிப் போயினர். இலட்சிய அரசியல் சக்திகளையும் தேர்தல்கள் காவுகொண்டுவிடும் என்பதற்கு இது நல்ல உதாரணமாகியது.

இதே ஆண்டு பல்கலைக்கழக அனுமதியில் இனரீதியான தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது இலட்சிய அரசியல் சக்திகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியது. தமிழ் மாணவர் பேரவை என்கின்ற தேசிய அரசியல் இயக்கம் தோற்றம் பெற்றது. தமிழ்மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து முழுமையாக நீக்கிய 1972 ஆம் ஆண்டு யாப்பு வெளிவந்தமை தேசிய அரசியல் இயக்கம் வளர்வதற்கான புறச்சூழலை ஏற்படுத்தியது. இந்த வளர்ச்சியை தமிழரசுக்கட்சியின் நீட்சியாகவிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் தடுக்கமுடியவில்லை.

அரசகெடுபிடிகளினால் தமிழ் மாணவர் பேரவை பலவீனமடைய 1973இல் தமிழ் இளைஞர் பேரவை தோற்றம் பெற்றது. தேர்தல் அரசியலுக்கு வெளியே ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்பதில் இது அக்கறையாக இருந்தது. எனினும் 1975இல் தேர்தல் அரசியலா? இலட்சிய அரசியலா? என்ற விவாதத்தில் அது உடைந்தது. ஆனாலும் மாவை சேனாதிராஜாவைத் தவிர, தமிழ் இளைஞர் பேரவையின் முக்கியஸ்தர்கள் அனைவரும் வெளியேறி தமிழீழ விடுதலை இயக்கம் என்ற தேசிய இயக்கத்தை உருவாக்கினர். தேர்தல் அரசியல் கட்சியினால் ஒருபோதும் தேசிய அரசியல் இயக்கமாக செயற்படமுடியாது என்பது இவர்களது வாதமாகவிருந்தது. (இது தற்போதைய ரெலோ அல்ல, இப்பெயரை பின்னர் ரெலோவின் முக்கியஸ்தர் தங்கத்துரை தமதாக்கினார்) 1977 தேர்தல் இவ்வியக்கத்தையும் இரண்டாக உடைத்தது. சிலர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். பலர் ஒதுங்கிக்கொண்டனர்.

1970களின் பிற்பகுதியில் மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ் இளைஞர் பேரவைக்குள் மீண்டும் தேர்தல் அரசியலா? கட்சி அரசியலா? என்ற விவாதம் எழுந்தது. இதனால் இவ்வமைப்பு உடைந்தது. மாவை தேர்தல் அரசியலோடு நிற்க, சந்ததியார், இறைகுமாரன் போன்றவர்கள் தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணி என்ற அமைப்பை உருவாக்கினர்.

1980களின் ஆரம்பத்தில் நிலமைகள் மாறத்தொடங்கின. விடுதலை இயக்கங்கள் பல வளரத்தொடங்கின. இந்த வளர்ச்சி, தங்கள் இருப்பினை அடியோடு அகற்றிவிடுமோ? என தேர்தல் அரசியற்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி பயந்தது. தேசிய அரசியல் இயக்கத்தின் அரசியல் இலக்கினை, தன்கையில் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு ஏற்பட்டது. இதன் வெளிப்பாடுதான் வட்டுக்கோட்டைத் தீர்மானம். இது உண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மனப்பூர்வமான தீர்மானமல்ல. தேர்தலில் வெல்லவேண்டும் என்பதற்காக நிர்ப்பந்தத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்.

இந்த விருப்பமின்மை அடுத்தவருடமே வெளிப்படத் தொடங்கியது. சிறிலங்கா அரச அதிகாரக் கட்டுமானத்திற்கு எதிராக அதற்குவெளியே அரசியல் செய்வதற்கு, எடுக்கப்பட்ட தீர்மானமும், 1977 தேர்தலில் மக்கள் அதற்கு வழங்கிய அங்கீகாரமும் காற்றில் பறந்துபோனது. தமிழீழத்திற்கான அரசியல் நிர்ணய சபையை அமைப்போம் என தேர்தலின்போது கர்ச்சித்தவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ஓடிப்போய்க் குந்திக்கொண்டனர். தமிழீழ அரசியல் நிர்ணயசபையும், வட்டுக்கோட்டைத் தீர்மானமும் காலாவதியாகின. தொடர்ந்து 1981ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு இச்சத்திகள் கீழிறங்கின. இக்கீழிறக்கத்திற்கு 'கல் அணை கட்டுவதற்கு முன்னர் மண் அணை கட்டுவோம்' என பொருள் விளக்கம்வேறு கொடுக்கப்பட்டது.

எனினும் 1983இன் இன அழிப்பு தேர்தல் அரசியல் சக்திகளை அரசியல் அரங்கிலிருந்து அகற்றியது. அவை இந்தியாவிற்கு அஞ்ஞாதவாசம் சென்றன. தமது காலத்திற்காக தொடர்ந்தும் காத்திருந்தன. 1987இன் இலங்கை - இந்திய ஒப்பந்தம் அஞ்ஞாதவாசத்தைக் கலைக்க உதவியது. இந்தத் தடவை முன்னாள் விடுதலை இயக்கங்கள் சிலவும், தேர்தல் கட்சியுடன் இணைந்துகொண்டன. தேர்தல் அரசியலில் கூத்தடிக்கத் தொடங்கின. தேசிய இயக்க அரசியல் பலவீனமடைகின்றது என்ற கவலை இவர்களுக்கு இருக்கவில்லை. செஞ்சோற்றுக்கடன் தீர்க்க தேசிய இயக்க அரசியலை காவுகொடுக்கவும் தயாராகினர்.

தேர்தல்கள் இச்சக்திகள் கூத்தடிப்பதற்கான களங்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தன. தமிழரசியல் களத்தில் தேர்தல்அரசியல், இலட்சியஅரசியல் என்கின்ற இரண்டும் தொழிற்படத் தொடங்கின. தேர்தல் அரசியல் சக்திகள் எப்போதும் சமரச அரசியலிலேயே அக்கறை செலுத்தியமையினால், இலட்சிய அரசியல் சக்திகளுக்கு இவர்களைச் சமாளிப்பதும் ஒரு வேலையாகிவிட்டது. இலகுவில் விலைபோகின்ற கூட்டமாகவும் இவை இருந்தமையினால் இலங்கை அரசு மட்டுமல்ல பிராந்திய, சர்வதேச சக்திகளும் இவர்களைப் பயன்படுத்த பின்நிற்கவில்லை. அரசியல் தீர்வு விடயத்தில் இலட்சியவாதிகள் கோரும் தீர்வைவிட மிகக்குறைந்த அரசியல்தீர்விற்கு இவர்கள் எப்போதும் தயாராக இருந்தனர்.

தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்கள் இவர்களைப் பயன்படுத்துவதை தடுப்பதற்காகவே, சமாதான காலத்தில் புலிகள் அவர்களை உள்வாங்கினர். தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே தமிழ் அரசியல் சக்திகள் இருப்பது, போராட்டத்தைப் பாதிக்கும் என்பதே இதுவிடயத்தில் புலிகளின் கருத்தாக இருந்தது. ஆனால் இதன் பின்னரும் இச்சக்திகள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு விசுவாசமாக இருக்கவில்லை. பிராந்திய, சர்வதேச சக்திகளுக்குத் தலையையும், புலிகளுக்கு வாலையும் காட்டினர். இறுதியில் புலி அழிப்பிற்கு இவர்களும் துணைபோயினர். புலிகளின் அரசியலில் இவர்களும் உறுதியாக நின்றிருந்தால் பிராந்திய சர்வதேச சக்திகள் புலி அழிப்பிற்குத் துணை நின்றிருக்காது. ஒருவகையில் இன அழிப்பிற்கும், தமிழ்த்தேசிய அழிப்பிற்குமான கூட்டுக்குற்றம் இவர்களுக்கும் உரியது.

புலிகள் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், தேர்தல் அரசியல் சக்திகளுக்குப் பெரிய போட்டியிருக்கவில்லை. தங்களது தேர்தல் அரசியலை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் மேற்கொள்ளக்கூடிய சூழல் உருவாகியது. இலங்கை அரசினாலோ, பிராந்திய சக்திகளினாலோ, சர்வதேச சக்திகளினாலோ, சிதைக்கமுடியாத தமிழ்த்தேசிய அரசியலை சிறிது, சிறிதாக சிதைக்கத் தொடங்கினர். புலிநீக்கம், சிங்கக்கொடிஅசைப்பு, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றுதல் எனச் சிதைப்புச் செயற்பாடுகள் வளர்ச்சியடைந்தன. வடமாகாணசபை தேர்தலுடன் இச்செயற்பாடு முற்றுப்பெறும் நிலைக்கு வந்துள்ளது. இங்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதைக்கூட ஒருவாறு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தமிழ்த்தேசிய அரசியலைச் சிதைப்பதற்கு அதனை ஒருகருவியாக பயன்படுத்துவதுதான் ஏற்றுக்கொள்ள முடியாததாகவுள்ளது.

வடமாகாணசபைத் தேர்தல் பல வழிகளில் தமிழ்த்தேசிய அரசியலையும், தமிழர் ஐக்கியத்தையும் சிதைக்கின்றது. அதில் முதலாவது தமிழ்த்தேசியம் நீக்கம் செய்யப்பட்ட அரசியலை முன்னெடுக்கின்றமையாகும். தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற சொற்பதங்கள் அவ்வப்போது தேர்தல் அரசியலுக்காக வெளிப்பட்டாலும், நடைமுறைச் செயற்பாட்டில் அவை கைவிடப்பட்டன. இவை இந்திய எஜமானுக்குப் பிடிக்காதென சம்பந்தன் நேரடியாகவே கூறியிருக்கிறார்.

தமிழ்த்தேசிய அரசியலின் இவ் அடிப்படை பண்புகள் பேசுபொருளாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவருவது பிற்போடப்பட்டது. தற்போது தேர்தல் விஞ்ஞாபனம் என்ற பெயரில் ஓர் அறிக்கை வந்துள்ளது. தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்கின்ற சொற்பதங்கள் பலவந்தமாக அங்கு செருகப்பட்டுள்ளது. இதனால் அதன் உண்மையான அர்த்தம் விஞ்ஞாபனத்தில் வெளிப்படவில்லை. மாகாணசபைகள் தொடர்பாக வெறும் நம்பிக்கையூட்டல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதிகாரம் இல்லாத மாகாணசபையில் தமிழர்களுடைய அபிலாஷைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது பற்றி தெளிவு ஏதுமில்லை. கூட்டமைப்பின் இலக்கு தன்னாட்சி எனக் கூறப்பட்டபோதும், அதை அடைவதற்கான மார்க்கங்கள் பற்றி எதுவும் கூறவில்லை. மாகாணசபை தோல்வியில் முடிந்தால் அடுத்தகட்டம் என்ன? என்பது பற்றியும் தெளிவுகள் இல்லை.

தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்தும் வகையில் கொள்கைத் திட்டத்தையும், வேலைத்திட்டத்தையும் முன்வைத்தால் இந்திய எஜமான் முகம்சுழிப்பார். முன்வைக்காவிட்டால் வாக்குவேட்டை பலவீனமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிராந்திய - சர்வதேச சக்திகளுக்கு தமிழ்த்தேசிய நீக்க முகத்தையும், தமிழ்மக்களுக்கு தமிழ்த்தேசிய முகத்தையும் காட்ட முயற்சிக்கின்றது. இதனால் தேர்ந்த நடிகர்கள் போல நாடகமாடத் தொடங்கிவிட்டனர்.

கூட்டமைப்பின் தலைமை எப்போது சிங்கக்கொடி அசைத்ததோ, அன்றே தேசிய நீக்க அரசியலுக்குத் தயாராகிவிட்டது. தேசியம் என்பது கூட்டுப்பிரக்ஞை. சிங்கள அடையாளக் கொடியை ஏற்பதும், கூட்டிருப்பைச் சிதைக்கின்ற மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த்தேசியப் பாதுகாப்புகள் எதுவுமின்றி போட்டியிடுவதும் கூட்டுப்பிரக்ஞையைச் சிதைப்பதே.

இரண்டாவது முன்னைய காலம் போலவே இத்தேர்தலும் இலட்சியவாத தளத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளமையாகும். இலட்சியவாதம் பேசிய பலர், தேர்தலில் கூத்தடிக்கச் சென்றுவிட்டனர். இலட்சியவாதத்திற்குப் பலம் சேர்த்த புலமையாளர்கள் தேர்தலுக்குப் பொருள் விளக்கம் தொடங்கிவிட்டனர். தமிழ் அரசியலில் மக்களின் பங்களிப்பு என்பது தேர்தலில் வாக்களிப்பது மட்டும்தான். அவர்களும் தமது வரலாற்றுப் பங்களிப்பினைச் செய்யத் தயாராகி வருகின்றனர். மொத்தத்தில் வட-மாகாணம் இலட்சிய அரசியலை மறந்து ஒரு திருவிழா போல காட்சியளிக்கின்றது. இலட்சிய அரசியலுக்கு மிகவிசுவாசமாக இருந்தவர்கள் கூட தேர்தல் அரசியலுக்குச் சென்றவுடன் மிகமோசமாகச் சிதைந்து போகின்றனர்.

மூன்றாவது தேசிய அரசியல் என்றாலே ஓடி ஒழிப்பவர்கள் தேர்தல் அரசியலுக்குப் பறந்து வருகின்றமையாகும். இலட்சக்கணக்கான பணத்தை செலவழித்தும் வழங்கியும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவும் இவர்கள் முயற்சிக்கின்றனர். முன்னரே கூறியதைப் போல தேர்தல்கள் இலட்சிய அரசியல் சக்திகளை அரசியல் தளத்திலிருந்து வெளியே தள்ளுகின்றது. மறுபக்கம் ஜொலி அரசியல் சக்திகளை உள்ளே இழுக்கின்றது.

நான்காவது விருப்பு வாக்குப் போட்டியாகும். முன்னைய தேர்தல்முறையில் கட்சிகளுக்கிடையேதான் போட்டி இடம்பெற்றது. இதனால் வேட்பாளர்கள் கட்சிக்கும், கொள்கைக்கும் முக்கிய இடம்கொடுக்க வேண்டியிருந்தது. போட்டிக்கட்சி வேட்பாளர்களிலிருந்து தன்னை வேறுபடுத்த இதுவே உதவியாக இருந்தது. ஆனால் தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விருப்பு வாக்கு முறையின்படி, ஒரே வாக்காளரிடம் ஒரு கட்சியைச் சேர்ந்த பலர் வாக்குக் கேட்கச் செல்வதால் தங்களது இலக்கங்களை மட்டும் முதன்மைப்படுத்த முனைகின்றனர். வடமாகாணசபைத் தேர்தலிலும் இதுவே நடக்கின்றது. வேட்பாளர்கள் கட்சியையோ, கொள்கைகளையோ முதன்மைப்படுத்தவில்லை. மாறாக தமது இலக்கங்களையே முதன்மைப்படுத்துகின்றனர். தம்முடைய இலக்கத்திற்கு மட்டும் வாக்களிக்கும் படியும், ஏனையவர்களுக்கு வாக்களிக்கவேண்டாம் எனவும் கேட்கின்றனர். முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரன் நிற்கின்றபோதும், அவருக்கு ஒருவாக்கை அளிக்கும்படி எந்தவொரு வேட்பாளருமே கேட்கவில்லை. தங்களது துண்டுப்பிரசுரங்களிலும் விக்கினேஸ்வரனை முதன்மைப்படுத்தவில்லை. தங்களை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றனர். இலக்கோ, கொள்கையோ, கட்சியமைப்போ இல்லாத கூட்டமைப்பில் இவையெல்லாம் எதிர்பார்க்கக் கூடியதே!

ஜே.வி.பி போல விருப்புவாக்கினைத் தவிர்த்து கட்சிக்கு மட்டும் வாக்களியுங்கள் என மக்களைக் கேட்கலாம். அதற்கு கட்சித் தலைவர்கள் எவரும் தயாராக இருக்கவில்லை. விருப்பு வாக்கினைத் தவிர்த்தால் நிராகரிக்கப்படும் வாக்குகளும் குறைவாக இருக்கும். தமிழ்மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு வரும்வரை விருப்பு வாக்கு செயற்பாட்டை தவிர்க்கவேண்டியது அவசியமாகவுள்ளது. இந்த விருப்பு வாக்குமுறை இலட்சிய அரசியலை கொள்கையோ, இலக்கோ இல்லாத வாக்குவேட்டை அரசியலாக மாற்றியிருக்கின்றது.

ஐந்தாவது சாதி, மத, பிரதேச முரண்பாடுகள் கிளறிவிடப்படுகின்றமையாகும். வேட்பாளர்கள் தாங்கள் மட்டும் வெல்லவேண்டும் என்பதற்காக இதனைக் கிளறிவருகின்றனர். பிரதேசசபையின் உபதலைவர் ஒருவர் தனக்குப் போட்டியிடச் சந்தர்ப்பம் தரவில்லை என்பதற்காக சாதியை இழுத்துப் பிரச்சாரம் செய்கின்றார். சாதியை அடிப்படையாக வைத்து அரசாங்கக் கட்சியுடன் சேர்வதற்காக ஜனாதிபதியையும் சந்தித்திருக்கின்றார். இதேபோல மதமுரண்பாடுகளும் கிளறப்படுகின்றது, தன்னுடைய மதத்தைச் சேர்ந்தவர்கள் தனக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும் எனப் பிரச்சாரம் நடக்கின்றது. இந்தப் பிரதேசம் தனக்குரியது என்ற வேலியடைப்பும் இடம்பெறுகின்றது.

தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சி, சாதி, மத, பிரதேச முரண்பாடுகளைப் பின்னுக்குத் தள்ளியிருந்தது. இந்த முரண்பாடுகள் கடந்து மக்கள ஐக்கியமாகியிருந்தனர். 1977தேர்தலின் போது உடுப்பிட்டித் தொகுதியில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படும் வாக்காளர்கள் 9,000 பேர் மட்டும் இருந்தபோதும், இராசலிங்கம் 14,000இற்கும் மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தார். இன்று இந்த ஐக்கியமெல்லாம் சிதறடிக்கப்படுகின்றது.

எனவே இன்றைய கேள்வி தேர்தல் அரசியலும், இலட்சிய அரசியலும் இணைந்துசெல்ல முடியுமா? முடியாதென்றே வரலாறு கற்பித்திருக்கின்றது. தேர்தல் அரசியலின் ஆதிக்கத்திலிருந்து இலட்சிய அரசியலைப் பாதுகாத்தலே இன்றைய கட்டத்தில் தேசியசக்திகளின் பிரதான கடமையாக இருக்கவேண்டும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=2b382dab-0139-4ec9-ae44-f9de0cfc302a

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.