Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் – அவதூறுகளை அறுத்தெறியும் அறம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீமான் – அவதூறுகளை அறுத்தெறியும் அறம் - மணி.செந்தில் & பாக்கியராசன் சே
 
   உலக மூத்தகுடி தமிழ்த் தேசிய இன மக்களின் பூர்வீக தாய்நிலங்களுள் ஒன்றான ஈழப் பெருநிலத்தின் மீது சிங்களப் பேரினவாதத்தின் கொடும் நிழல் படியத் துவங்கிய 2008க்குப் பின்னான கால கட்டத்தில்தான் இன உணர்வுள்ள இளைஞர்கள் தாயக தமிழகத்தில் கண்கலங்க கைப் பிசந்து நின்று கொண்டிருந்தார்கள். ஈழமும், தமிழகமும் கடலால் பிரிக்கப்பட்ட இரு நிலப்பரப்புகளாய் நின்றனவே ஒழிய உணர்வால்..உறவால்..மரபணு தொடர்ச்சியால் ஒற்றை நிலமாகவே இருக்கின்றன. ஈடு இணையற்ற வீர தீரத்துடன் போர் புரிந்து கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் தியாகத்தினால் ஈழம் சிவப்பாகிக் கொண்டிருந்த வேளையில்.. தாயகத் தமிழ் இளைஞர்களின் நெஞ்சில் ஆற்றவே முடியாத பெருநெருப்பு மூண்டிருந்தது. அரசியல்வாதிகளின் சுயநல பிழைப்புவாத நடவடிக்கைகளால் முற்றிலும் நம்பிக்கை இழந்துபோன உணர்வுள்ள இளைஞர்களில் ஒருவன் தான் மாவீரன் முத்துக்குமார். அவனுடைய ஈகையில் இருந்துதான் நாம் தமிழர் அமைப்பின் துவக்கம் அமைகிறது.
 
   உணர்வும், அறிவும் ஒரே அலைவரிசையில் அமைந்து ஒழுங்கமைவுடன் வெளிப்பட்ட அவனுடைய மரண வாக்குமூலம்தான் தமிழின இளைஞர்கள் பலருக்கு அரசியல் சிந்தனையை தமிழக மண்ணில் விதைத்தது. இனமான உணர்வுடன், ஊருக்கு நால்வராய் முச்சந்திகளில் கூடி நின்ற இளைஞர்கள் தமக்கான அரசியலின் அவசியத்தினை உணர்ந்த தருணம் அது. சுயநல அரசியல்வாதிகளிடமும், சாதீய அமைப்புகளிடமும் பிளவுப்பட்டுக் கிடந்த தமிழ்ச் சமூகம் சாதி கடந்து, மதம் மறந்து, இனம் சார்ந்த அரசியலுக்காக இறுதியில் ஒன்றுபட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது. இனமானம் காக்க நின்ற அவ்விளைஞர்கள் தமக்கு தாமாகவே தோற்றுவித்த அரசியல் அமைப்புதான் 'நாம் தமிழர்'. சாதீய இறுக்கங்களினால் முற்றிலும் பிளவுபட்டிருக்கும் ஒரு சமூகத்தில் இன ஒற்றுமையை எழுப்பும் ’நாம் தமிழர்’ என்ற முழக்கம் சவாலான ஒன்றுதான்.
 
Director-Seeman-Press-Meet-Stills-2.jpg
 
   அதனால்தான் என்னவோ தொடங்கியது முதல் பல்வேறு விதமான விமர்சனக்கணைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் எமக்கு ஏற்பட்டது. காங்கிரசு என்ற மாபெரும் இன எதிரியை அடையாளம் காட்டி அழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த எமக்கு, எதிரிகளின் சீறிப் பாயும் தோட்டாக்களுக்கு மத்தியில் சகத்தோள்களின் அக்கறையில்லாத அவதூறுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதே என்ற உறுத்தலும் வருத்தமும் இருந்தது உண்மைதான். இந்த பத்தி கூட அவதூறுகளுக்கு எதிரான விளக்கம் அல்ல. மாறாக எதுதான் உண்மை என்பதற்கான மீள் வாசிப்பு. அவ்வளவே. எங்கள் தோள்கள் மேல் கைபோட்டு சொல்லும் அக்கறையுடனான விமர்சனங்களுக்கும், உண்மைக்குப் புறம்பான அவதூறுகளுக்குமான வேறுபாட்டினை நாம் அறிவோம். எம் மீதான, புதிதாக தோன்றியிருக்கும் இன ஆதரவு அரசியலின் மீதான அக்கறையில் விமர்சனக் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் தோழமைகளின் கருத்துக்களில் நாங்கள் என்றென்றும் நம்பிக்கையும், அன்பும் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறோம்.
 
 
 
   மே 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு, எந்த அரசு அதிகாரம் இல்லாமல் நாம் வீழ்ந்தோமோ, அதே அதிகாரத்தினை நாம் கைப்பற்றியாக வேண்டும் என்ற முடிவோடு சீமான் பொதுவெளி அரசியலுக்கு வந்தபொழுது அவர் கலைஞர் கருணாநிதியின் கைப்பாவை என்றார்கள். இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் மொத்தமாக ஐந்து முறை கருணாநிதியே சீமானை கைது செய்து சிறைப்படுத்திய பின் அது இல்லை என்றானது. சிறையில் இருந்து சீமான் விடுதலையான காலகட்டத்தில் வருகின்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி என்றார்கள். கூட்டணி என்பது ஒரு கட்சியோடு பேசி தொகுதிகளை பிரித்துக் கொண்டு தேர்தலில் நிற்பது. ஆனால் சீமான் காங்கிரசு போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் காங்கிரசை எதிர்த்து நிற்கிற முக்கிய எதிர்க்கட்சிக்காக சீமான் பிரச்சாரம் செய்தார். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரசு கட்சியை எதிர்த்து நின்ற அய்யா. என் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரசு கட்சிக்கு ஆதரவாகக் கூட சீமான் பிரச்சாரம் செய்தார். இனத்தின் எதிரி காங்கிரசை கருவறுப்போம் என்பதான தேர்தல் நிலைப்பாடு எடுத்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் கூட்டமும், காட்டமுமாக எதிர்த்து களமாடிய பொழுது அவதூறு வாய்கள் இறுக மூடிக் கொண்டன.
 
   தமிழ்ப்பெண்களை எருமை தோள்களைக் கொண்ட தடிச்சி என்று சொன்ன நடிகர் ஜெயராம் அவர்களின் வீடு தாக்கப்பட்ட பொழுது உணர்ச்சிவசப்பட்டு இனவாதம் பேசி ராஜ்தாக்கரே பாணி அரசியல் செய்கிறார் என்று பரபரத்து அவதூறு பேசியவர்கள், தமிழர் பண்பாடு, விழுமியங்கள் போன்றவற்றில் உள்ள தமிழர் வாழ்வின் சாரத்தினை இந்த தலைமுறையின் இளம் தமிழர்கள் உணரும் வண்ணம் நாம் தமிழர் குடும்ப விழாக்கள் அமைதியாக நடத்திய பொழுது தமிழர் வீர விளையாட்டு, கட்டுரை, கவிதைப் போட்டிகளை விட்டுவிட்டு கோலப்போட்டி நடத்துகிறார்கள் என்றார்கள். நேற்றுவரை தமிழக முதல்வரை ஆதரிக்கிறார் என்று ஆலாபனை செய்தவர்களின் குதர்க்கக் குற்றச்சாட்டு இன உணர்விற்கு எதிராக நிகழும் இந்த அரசின் அடக்குமுறைக்கு எதிராக சீமான் இன்று பேசுவதால் புஸ்வாணமாகி விட்டது. இப்படி தொடர்ந்து சீமான் மட்டும் குறி வைத்து ஏன் தாக்கப்படுகிறார் என சிந்திக்கும்போது சீமானை நோக்கி தொடர்ந்து கிளம்பும் அவதூறுகளுக்குப் பின்னால் அருவருப்பான மூன்றாம் தர அரசியல் இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்காட்ட நாங்கள் முயன்றதன் விளைவே இந்த பத்தி.
 
   பெரியாரை எதிர்த்து, பெரியாரை விமர்சித்து, தமிழ்த்தேசியம் என்ற கருத்தை சீமான் முன்னிறுத்துகிறார் என்பது பெரியார் என்ற அறிவுத்தளத்தில் இருந்து சீமானை வெளியேற்றிட முயலும் சிலரின் வாதமாக இருக்கிறது. 
தமிழ்நாட்டில் ஒரு திராவிட இயக்கத்தினை சாராமல் பெரியாரின் கொள்கைகளை பல கட்சி மேடைகளில் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருபவர்களில் முதன்மையானவர் சீமான் என்பது அனைவரும் அறிந்தது. இந்துத்வாவாதிகளால் நேரடியான தாக்குதலுக்கு திருத்துறைப்பூண்டியிலும், கோவையிலும் இலக்கான சீமானின் ஆவேசம் மிகுந்த பிரச்சாரம் உலகம் அறிந்தது. அரசியலிலும் - சமூகத்திலும் ஒரு கருத்துருவாக்கத்தின் வீழ்ச்சியே, மற்றொரு புதிய கருத்துருவாக்கத்தின் தொடக்கமாக இருக்கிறது. அப்படி தமிழக அரசியல் தளத்தில் 'திராவிடம்’ என்ற கருத்தாக்கத்தின் வீழ்ச்சி தமிழ்த்தேசிய அரசியலுக்கு விதையாகி இருக்கிறது.
 
   தமிழர்களிடையே தந்தை பெரியாரின் சிந்தனை வெளியிலான திராவிடம் என்ற கருத்துரு சமூக நீதித் தளத்தில் மிகச்சிறப்பான புரட்சிகர உட்கூறுகளைக் கொண்டு அரசியல் விழிப்புணர்வை உண்டாக்கி பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் காந்தியாலும் மேட்டிமைமக்களாலும் கட்டமைக்கப்பட்ட இந்தியத் தேசியம் என்னும் பெரும் சித்தாந்தப் புனைவை, தமிழர்கள் இருபதே ஆண்டுகளில் தூக்கியெறிந்து, எதிர்த்து, அதற்கு மாற்றாக உருவான நேரெதிர் சிந்தனையான திராவிடத்தை அரசியல் தளத்தில் ஏற்றுக்கொண்டனர். இவ்வாறான சிறப்புகளுடன் தமிழக அரசியலில் காலடி வைத்த திராவிடக் கருத்தாக்கம் சில சுயநல அரசியல்வாதிகளாலும், திரைப்படக் கவர்ச்சியாலும், வேற்று மொழியைச் சேர்ந்த சுரண்டல்- அரசியல் வியாபாரிகளாலும் களவாடப்பட்டு கடந்த ஐம்பது ஆண்டில் கொள்கைத் தளத்தில் அதல பாதாள வீழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் அரசியல் தளத்தில் திராவிடக் கருத்தாக்கம் அதன் அடிப்படைத் தன்மைகளிலிருந்து வேறுபட்டு விலகி விட்டது என்பதை உணரும் தமிழர்கள், புது கருத்துருவாக்கத்தின் தேவையை நாடும் அளவில் இருக்கிறார்கள்.
 
   திராவிடம் என்ற பொதுமை சொல்லுக்கான அவசியம் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின்னர் கேள்விக்குறியானது. அது பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் குறியீட்டு சொல் என்கிறபோது பார்ப்பனர்களும், மூடநம்பிக்கையாளர்களும், சாதிப் பற்றாளர்களும், மிக எளிதில் தலைமை வகிக்க முடிகிற இழிநிலையில் திராவிட அரசியல் மாறிவிட்ட நிலையில் பெரியார் முன் வைத்த திராவிடம் என்ற சமூக கருத்தியல் அரசியல் தளத்தில் இல்லாமல் போய்விட்டது. அப்படி அரசியல் தளத்தில் வேறுபட்டு மாறி விட்ட திராவிடத்தின் வீழ்ச்சியில் உருவாகும் புது கருத்துருவாக்கம், கட்டாயம் தந்தை பெரியார் சிந்தனை வெளியிலான மரபுகளை உள்வாங்கி, தந்தை பெரியார் முன் வைத்த பெண் விடுதலை, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, சாதீய ஒழிப்பு, பகுத்தறிவு போன்ற சிறப்பான அம்சங்களை தன்னகத்தே கவர்ந்து இருந்தால் மட்டுமே அது தமிழர்களால் ஏற்றுக்கொள்ளபடும் என்பது திண்ணம்.
 
   கேள்வி : திராவிடம் என்ற கருத்தியல் தமிழ்த் தேச அரசியலுக்கு முரணானது      என்கிற கருத்து நிலவுகிறதே! அது குறித்துத் தங்களின் நிலைப்பாடு என்ன?
 
   தவறு. பெரியாரும் அவரைத் தொடர்ந்து நாங்களும் 'திராவிடர்' என்ற அடையாளத்தை சமுதாய விடுதலைத் தளங்களிலும் 'தமிழர்' என்ற அடையாளத்தை அரசியல் விடுதலை தளங்களிலும் பயன்படுத்தி வருகிறோம் என்பதே உண்மை
 
 
   ஆனால் பெரியாரை உள்வாங்காத, பெரியாரைப் பேசாத, சொல்லப்போனால் பெரியாரைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு வேற்று மொழி நடிகர் இந்த மண்ணில் திராவிடத்தின் பெயரால் முற்போக்கு, வயிற்றுப்போக்கு என்றெல்லாம் சொல்லி பெருந்திரள் அரசியல் நிகழ்த்த முடியும். அவர்களிடம் இதில் எல்லாம் என்ன நிலைப்பாடு, அதில் என்ன குறைபாடு என்று எந்த படித்த, அறிவு வெள்ளாவியில் வைத்து வெளுத்த எந்த வெங்காயங்களும் கேட்பதில்லை. இன அழிவிற்குப்பிறகு, இன உணர்வின் உந்துதலால், முற்போக்குப் பார்வையும் கொண்டு, தந்தை பெரியாரை சமூகத்தளத்தில் உள்வாங்கி 'நான் பெரியார் பேரன்' என்று மேடைக்கு மேடை முழங்கி வரும் தமிழன் ஒருவன் தமிழ்த்தேசிய அரசியலை முன் வைத்தால் ஆயிரம் விமர்சனங்களும், கேள்விகளும், தர்க்கங்களும் வருவது எதனால் என்று சிந்தித்தால், இது திட்டமிட்ட அவதூறே அன்றி வேறில்லை.
 
   ஆதிக்க சாதி அரசியல் செய்கிறார் என்பது அடுத்த அவதூறு. அதற்கு இவர்கள் ஆதாரமாக முன் வைப்பது சீமான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு செய்த மரியாதை. வாக்கு அரசியலுக்காகவும், ஆதிக்க சாதிக்கு துணை போவதற்காகவும் சீமான் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செய்கிறார் என்பது தான் குற்றச்சாட்டு. சாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரனுக்கும், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனுக்கும், அய்யா அயோத்திதாச பண்டிதருக்கும், மார்ஷல் நேசமணிக்கும், பெரும்பிடுகு முத்திரையருக்கும், தீரன் சின்னமலைக்கும், பாட்டன் இராச ராசனுக்கும், வேலுநாச்சியாருக்கும், மாமன்னர் மருதுபாண்டியருக்கும் தான் சீமான் மரியாதை செய்கிறார். அவர் செய்யும் மரியாதை என்பது தமிழ்த்தேசிய பார்வையில் மறைந்த தலைவர்கள் எல்லோரும் தமிழர்கள், தமிழ் மக்களின் பெருமதிப்பிற்குரிய ஆளுமைகள் என்பதால் தான். மறைந்த தலைவர்களுக்குள் நிலவிய முரண்களை சம காலத்திற்கு கடத்தி வந்து அதன் வாயிலாக கட்டமைக்கப்படும் சாதீய அரசியலுக்கு ‘நாம் அனைவரும் தமிழர்’ என்கிற முழக்கம் எதிராக இருக்கிறது. சொல்லப்போனால் சீமான் நிகழ்த்தும் அரசியலானது முரண்களைக் கடந்து தமிழர் என்கிற தேசிய இனத்தின் மக்களாக தமிழர்கள் அனைவரும் திரள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறதே தவிர மற்றபடி மறைந்த தலைவர்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கவோ, அவர்கள் அரசியலை பின்பற்றவோ, அவர்களுக்குள் இருந்த முரண்களினை முன் வைத்து அரசியல் செய்யவோ இல்லை. அதற்கான தேவையும் இல்லை.
 
 
seeman_jawaharulla_500.jpg
 
 
 
   காங்கிரசை எப்பாடுபட்டாவது ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பெரியாரும், முத்துராமலிங்கனாரும் காங்கிரசை தோற்கடிக்க பாடுபட்டார்கள் நானும் ஒழிப்போம் என்ற மொழியில்தான் அப்படி பேசினார் ஒழிய முத்துராமலிங்கத் தேவரை முன்னிலைப்படுத்தவோ, பெரியாரையும் முத்துராமலிங்கத் தேவரையும் நேர்கோட்டில் வைக்கவோ இல்லை. இந்த இனத்தினை அழித்த்து காங்கிரசுதான். காங்கிரஸ் என்ற கட்சியை தமிழ்நாட்டில் இல்லாதொழிப்போம் என்று பேசி களமாட தமிழ்நாட்டில் ஒரு அரசியல் தலைவரும் தயாராக இல்லாத பொழுது, எல்லோரும் சீட்டு அரசியலில் மூழ்கியிருந்த, மூழ்கிப்போன பொழுது சீமான் களமாடினார். ஆனால் யாரும் அதைப் பேசவில்லை. தேர்தலில் காங்கிரஸ் தோற்க வேண்டும் என்று களத்தில் நின்று களமாடியவர் மேல், எதுவுமே செய்யாதவர்கள் அவதூறைக் கிளப்புகிறார்கள்.
 
 
 
   வாக்கு அரசியலும், வாக்கு வங்கியும் தான் முதன்மை என்றால் இங்கே ஒரு தேர்தலில் தன் சாதிக்கு கட்சி ஆரம்பித்து வாக்கு கேட்டு வாக்குவங்கியை நிரூபித்தால், போட்டிபோட்டுக் கொண்டு தொகுதிகளைக் கொடுத்து சாதி அரசியலை ஊக்குவிக்க முற்போக்கு பேசும் திராவிடக் கட்சிகள் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு காத்திருகின்றன. மார்க்சியம், பொதுவுடைமை பேசும் கட்சிகள் கூட பின் கதவு வழியாக யாருக்கும் தெரியாமல் வந்து இளித்துக்கொண்டு கூட்டணி வைக்கத் தயாராய் இருக்கின்றன. சரி அப்படி இல்லை என்றால் இருக்கிற திராவிடத்தில் முன்னாடியோ பின்னாடியோ முற்போக்கு என்ற வார்த்தையைப் போட்டு, ஜோசியரைக் கூப்பிட்டு கட்சியை ஆரம்பித்து , ஒரு தேர்தலில் ஒரு சீட் வென்று, ஊடகத்தின் துணையோடு ஐந்து வருடம் ஒட்டி, அதற்குப் பிறகு பொண்டாட்டி, மச்சான் துணையுடன் பேரம் பேசினால் ஆச்சு. எதற்கு தமிழ்த்தேசியத்தை கையில் வைத்துக் கொண்டு, தேசியத்தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தி அரசியல் கோட்பாடுகள் வகுத்து “இப்பொழுது அவர் படத்தை போட தடை செய்கிறீர்கள், ஒருநாள் அவர் படத்தோடு நான் சட்டமன்றத்திற்குள் போவேன், அப்பொழுது என்ன செய்வீர்கள்” என்று பேசிக்கொண்டு இருக்கவேண்டும்?
 
 
 
   அப்படியே அவர் பரப்புரையில் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று சொல்லி இருந்தால் கூட அதை விமர்சனம் செய்து, "நாங்கள் போராடிக் கொண்டிருக்கும்பொழுது எப்படி நீ இதை சொல்லலாம்" என்று தடுக்கும் தகுதி விடுதலை புலிகள் அமைப்புக்கு மட்டும்தான் உண்டே தவிர வேறு யாருக்கும் இல்லை. அந்தத் தேர்தலை உற்று நோக்கிக்கொண்டிருந்த அவர்களே அதைத் தடுக்கவில்லை, விமர்சிக்கவில்லை எனும்பொழுது எதற்காக, யாருக்காக சீமான் அப்படி பரப்புரை செய்தார் என்று யூகிப்பது மிகச்சுலபம். யுத்தக்களத்தில் நின்ற கடற்புலிகளின் தலைவர், அண்ணன் சூசை கூட சீமானை தொடர்ந்து எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கள் என்று அப்பொழுதிலும் சொன்ன சொற்கள் அனைவரும் அறிந்ததே.
 
 
 
   ஈழப்பிரச்சனை பேசி பிழைப்பு நடத்துவதாக மற்றொரு கருத்தும் பலகாலமாக சொல்கிறார்கள். புலிகளிடம் இருந்து பணம் வாங்கி இருக்கிறார், புலம் பெயர் தமிழர்கள் பணம் தருகிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் ஈழத்தினைப் பற்றி பேசினால் பிழைப்பு நடத்த முடியாது; பிழைப்பு போகும். அத்தனை அடக்குமுறை, சிறை, வழக்குகளை சந்திக்க வேண்டும். உண்மை என்னவெனில் சீமான் தன் பிழைப்பை இழந்துதான் இந்தப் பணியை மேற்கொள்கிறார். கடைசியாக வந்த பட வாய்ப்பும் இந்த அரசியல் செய்கிறார் என்பதால் தள்ளி சென்றுவிட்டது. பெரும் பொருளாதார நெருக்கடியில் தான் ஒவ்வொரு நாளும் கட்சி இயங்குகிறது. அப்படியே பணம் வாங்காமல் இதை எல்லாம் எப்படி மேற்கொள்கிறார் என்பவர்கள் கட்சியில் இணைந்து உள்ளே வந்து நாங்கள் சாதாரண ஒரு கூட்டம் நடந்த பணத்திற்காக எத்தனை சிரமப்படுகிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம். அது தான் இந்த குற்றச்சாட்டைப் பற்றி நீங்கள் உண்மை அறிய ஒரே வழி. துண்டறிக்கைகள் அச்சிடக்கூட துண்டேந்தி திரியும் தமிழ்ப்பிள்ளைகளான நாம் தமிழர் உங்களை எம்மோடு, நாங்கள் எதிர்கொள்ளும் "நெருக்கடிகளோடு" இணைந்து பணியாற்ற இருகரம் நீட்டி வரவேற்கிறது..
 
   இதோ அடுத்து வருவது உதிர்க்கிற வார்த்தைகளின் மீதாக கட்டமைக்கப்பட்ட அவதூறு.
 
 
 
 
 
   இங்கே சீமான் மீதும், நாம் தமிழர் மீதும் தொடுக்கப்படும் அரசியல் ரீதியான அவதூறுகளுக்கு ஆதாரத்துடன் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. சீமான் அவர்களின் தனிப்பட்ட வாழ்கையின் மீது பல அவதூறை கிளப்பும் தரம் தாழ்ந்தவர்களுக்கு பதில் சொல்லி இந்தப் பத்தியை தரம் தாழ்த்திக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. சமீப காலத்தில் அரசியலில் அதிகமான அவதூறு தாக்குதல்களை எதிர்கொண்டது சீமானும், நாம் தமிழருமாய் தான் இருக்க முடியும். இந்தப் பத்தியின் வாயிலாகவும் பல அவதூறுகள் உருவாகும் என்பதும் தெரியும். நாங்கள் காதுகளைத் திறந்தே வைத்திருக்கிறோம். எங்கள் வாசல்கள் திறந்துதான் இருக்கின்றன. நாங்களும் உங்கள் அருகில்தான் இருக்கிறோம். எங்களிடம் தங்களின் கருத்துக்களைக் கூறி, உங்கள் தமிழ்ப்பிள்ளைகள் தங்களுக்காக உருவாக்கும் அரசியலை ஊக்குவியுங்கள். முதலில் எங்களை தட்டிக்கொடுங்கள்; பிறகு தவறு செய்தால் தட்டிக்கேளுங்கள். எம்மைப் போன்ற சாதியை மறுத்த, இனத்தினை தன் உயிருக்கு மேலாக நேசிக்கின்ற ஒரு பெரும் திரள் இளைஞர் கூட்டம் வரலாற்றின் போக்கில் அமைவது கடினம். எம்மை செதுக்க வாருங்கள். சிதைக்க வராதீர்கள். வீழ்த்த வராதீர்கள். மாறாக வீழ்ந்து கிடக்கும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்ட்தில் அவரவருக்குண்டான பங்கினை குறைவின்றி செய்திட சிந்திப்பீர்கள்.
 
   “விமர்சனம் என்பது வெறும் சொற்கள் தான் அது நம்மை காயப்படுத்தும் கற்கள் அல்ல..” – தேசியத்தலைவர்.
 
   வார்த்தைகளை வரவேற்கிறோம்; கற்களை அல்ல.
 
- மணி.செந்தில் & பாக்கியராசன் சே
நன்றி : கீற்று 

 (

). கருப்புப் பணம் பற்றி (
), காமன்வெல்த் பற்றி (
)


  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.