Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 விமர்சனம்

Featured Replies

‘ஆறு மனமே ஆறு’ -இதுதான் ஷாமும் முகவரி துரையும் சொல்ல வந்த 6 ஆக இருக்க வேண்டும். திருக்குறள் சைசுக்கு கதை இருந்தாலும், அதில் முதல் வரி முழுவதையும் ஓ.பி அடிக்க பழகியிருக்கிறார்கள் இப்போதிருக்கும் பல இயக்குனர்கள். மீதி ரெண்டாவது வரியில்தான் கதையும் விறுவிறுப்பும் அடங்கியிருக்கும். (சில படங்களில் அந்த உப்பு சப்பும் இல்லை) ஆனால் 6 அப்படியல்ல, படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கிவிடுகிறது. கதை தொடங்கிய பத்தாவது நொடியில் நமக்கும் பதற்றம் தொடங்கிவிடுகிறது. அடுத்த காட்சி அடுத்த காட்சி என்று குரங்கை போல நம்மை தாவி இழுத்துக் கொண்டு ஓடுகிறது படம். முடியும்போது நம்மையறியாமல் சிந்துகிற ரெண்டு சொட்டு கண்ணீருக்குள்தான் இந்த படத்தின் ஹிட்டும் அடங்கியிருக்கிறது.

இன்டர்வெல் நேரத்தில், வீட்டுக்கு போன் அடித்து ‘புள்ள எங்க இருக்கு’ என்று கேட்காத ஒரு சிலரை ‘தம்பி பேச்சுலர் போலிருக்கு’ என்று புரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு கலங்க வைக்கிறது ஒவ்வொரு காட்சியும்.

பீச்சுக்கு போகிற இளம் தம்பதிகளான ஷாமும், பூனம் கவூரும் தனது ஐந்து வயது மகனை தொலைத்துவிடுகிறார்கள். போலீஸ் நிலையத்துக்கு ஓடுகிற அவர்களிடம், ‘விசாரிக்கிறோம்’ என்று ஒற்றை வர்த்தையோடு அனுப்பி வைக்கிறது சட்டம் ஒழுங்கு. அதிலும் இரக்க மனம் படைத்த அதிகாரி ஒருவர், சட்டத்தை புறம் தள்ளி சந்து வழியாக கொஞ்சம் கருணையை அனுப்பி வைக்கிறார். கிடைக்கிற கொஞ்சூண்டு க்ளுவை வைத்துக் கொண்டு குழந்தையை தேடி புறப்படுகிறார் ஷாம். ஆந்திராவின் நகரியில் ஆரம்பித்து வாரங்கல், போபால், மும்பை, கோவா, கொல்கத்தா என்று தனது குழந்தையை தேடி ஷாம் நடத்தும் வேதனையான பயணம்தான் முழு படமும்.

இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கிறதா? இவர்களை பிடித்து உறுப்புகளை உசுரோடு அறுத்தால் என்ன என்கிற ஆத்திரத்தை வரவழைக்கிறது இந்த கதையில் வழிந்தோடும் நிஜம். வெறும் காட்சிகளுக்காக மட்டும் கற்பனையை தட்டிவிடாமல் எங்கெல்லாம் இந்த கொடுமைகள் நடக்கிறதென தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார் துரை. அதற்காகவே மனசார பாராட்டலாம் இவரை.

படத்தில் ஷாமின் நடிப்பு? ஒரு நல்ல நடிகனை இத்தனை காலம் ஊறுகாய் ஜாடி போல பயன்படுத்திய முந்தைய இயக்குனர்களை தேடிப்பிடித்து குட்ட வேண்டும் போலிருக்கிறது. இரக்க குணம் படைத்த நடுத்தர குடும்பஸ்தன் எப்படியிருப்பான்? எங்காவது ஓரிடத்தில் தன் பிள்ளையை பார்த்துவிட மாட்டோமா? பசி மறந்து உறக்கம் மறந்து ஓய்வு மறந்து திரிகிறவனின் கண்களில் நிரந்தரமாக தேங்கிக் கிடக்கும் சோகம் எப்படியிருக்கும்? ஷாம் ஒரு டிக்ஷனரியாகவே மாறிப் போயிருக்கிறார் இந்த 6 க்காக.

இவனை கொன்றால் தன் குழந்தை கிடைக்கும் என்பதற்காக முரட்டு வில்லனைக் கூட அசால்ட்டாக பந்தாடும் காட்சி, நிச்சயம் ஆக்ஷனுக்கான ‘ஸ்பேஸ்’ அல்ல. ஒரு அப்பனின் நிஜமான ‘ஃபேஸ்’ அது.

இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் குழந்தைகள் தன் காலை பிடித்து கெஞ்சுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கடவுளே… என்று கதறிக் கொண்டே ஓடிவரும் ஷாமின் நடிப்பை இப்போது நினைத்தாலும் நரம்பெல்லாம் அதிர்கிறது. இன்னும் 100 படங்களில் நடித்தாலும் உங்களால் இந்த 6 போல் நடிக்க முடியாது ஷாம்! அருமை…

குழந்தையும் ஷாமும் சந்தித்துவிட மாட்டார்களா என்று ஒவ்வொரு வினாடியும் நம்மை ஏங்க வைக்கிறார் டைரக்டர். அந்த கடைசி காட்சி…? நல்லவேளை, சரியான முடிவாக வைத்தார் துரை. இல்லையென்றால் தியேட்டரை கூட கொளுத்தாத தயங்காது அப்பன்களின் மனசு.

குழந்தைய தேடுனது போதும். இன்னும் பத்து புள்ளை வேணும்னாலும் பெத்து தர்றேன். உடனே வா… என்று போனில் கதறும் பூனர் கவுரின் இந்த வசனங்கள் தாய்மையை கேலி பேசினாலும், எல்லாவற்றையும் இழந்தவளின் வேதனையாக கருதி அதை பொறுத்துக் கொள்ளலாம்.

குழந்தை திருடர்களின் நெட்வொர்க் எப்படியிருக்கிறது. அவர்களின் பல்வேறு முகங்கள் என்ன? கொண்டு செல்லப்படும் குழந்தைகள் என்னவாகிறார்கள்? எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறார்கள். காட்சிகள் நகர நகர இரும்பை காய்ச்சி இதயத்தில் ஊற்றியது போல இருக்கிறது அத்தனையும். இந்த பதற்றத்தை அப்படியே நமக்குள் செலுத்துவதில் பெரும் அக்கறை காட்டியிருக்கிறது கிருஷ்ணசாமியின் கேமிராவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும். இதில் ஸ்ரீகாந்த் தேவாதான் நம்மை மேலும் ஆச்சர்யமூட்டுகிறார். இத்தனை காலம் வெட்டியாக தட்டிக் கொண்டிருந்தவரின் விரல்கள் இத்தனை அர்த்தபூர்வமானதா? ஆச்சர்யம் பெரிசு!

ஷாமை விட வேகமாக பிள்ளையை தேடிக் கிளம்புகிறது தியேட்டரில் இருக்கும் ரசிகனின் மனசு. அதை மிக சரியாக புரிந்து கொண்டு நீட்டி முழக்காமல் சுருக்கென வெட்டி, நறுக்கென சொல்லியிருக்கும் எடிட்டர் அருண்குமாருக்கும் பாராட்டுகள். இந்த படத்தின் வசனகர்த்தா பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். ஆனால் சில இடங்களில் மட்டுமே வெளிப்படுகிறது அவரது வசனங்கள்.

ஷாமின் மேக்கப்மேன் யாரோ? அவருக்கும் நம் பாராட்டுகள்.

கடத்தப்படும்போது மெர்க்குரி விளக்கை போல பிரகாசமாக இருக்கும் அந்த சிறுவன், க்ளைமாக்சில் கரிபடிந்த அரிக்கேன் விளக்காக காட்சியளிக்கும்போது அழுகையே வந்துவிடுகிறது. பெற்றவர்களே… ஜாக்கிரதை.

ஷாம் இத்தனை காலம் எதை தேடினாரோ, அது படத்தில் கிடைத்துவிட்டது. நிஜத்திலும் கிடைக்கும்!

-ஆர்.எஸ்.அந்தண

http://www.newtamilcinema.com/2013/09/406/

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அபராஜிதன் பகிர்விற்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகப்புத்தகத்தில் வேறும் பல சினிமா விமர்சகர்களும் சொல்லி இருந்தார்கள் 6 நிச்சயம் பார்க்க வேண்டிய அருமையான படம் என்று.

 

இணைப்பிற்கு நன்றிகள் அபராஜிதன் .
 
 
இப்போ அஞ்சலி ஒன்றும் இணைப்பதில்லையா  :D
  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா.. அந்த லேடி கபூரைப் பற்றி கொஞ்சம் எழுத மாட்டீங்களா? :unsure: ஷாமின் மேக்கப்பை பார்க்க யாராவது படத்துக்கு போவானா? :D

  • கருத்துக்கள உறவுகள்

’6′- ஒரு சினிமாவுக்குப்பின்னால்…
ஜெயமோகன்


2010 மார்ச் மாதம் இருபத்தாறாம் தேதி அங்காடித்தெரு வெளியாகியது. ஆரம்பகட்ட இழுபறிகளுக்குப்பின் அது ஒரு வெற்றிப்படம் என உறுதியாவது வரை ஒரு பதற்றம் நீடித்தது. தினம் இரண்டுமூன்று தொலைக்காட்சிகளில் தோன்றி அப்படத்தைப்பற்றி பேசவேண்டியிருந்தது. ஒருவழியாக வண்டி வேகம்பிடித்ததும் அதிலிருந்து முழுமையாக விலகிவிடவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.

ஆகவே ஒரு பயணம் போகலாமென்ற சிந்தனைவந்தது. இம்முறை தமிழே காதில்விழாத எங்காவது போகவேண்டும். எல்லாவற்றையும் அடித்துக்கழுவிச்செல்லும் புதுவெள்ளம்போல அனுபவம் தேவை. என்ன செய்யலாம் என நினைத்தபோது ஹரித்வார் கும்பமேளாவைப்பற்றிய செய்தி கண்ணில்பட்டது. கிளம்பலாமென முடிவெடுத்து கிருஷ்ணனிடம் சொன்னேன். அரங்கசாமி, வசந்தகுமார், யுவன் சந்திரசேகர் வருவதாக சொன்னார்கள். கிளம்பிவிட்டோம்.



ஏப்ரல் பத்தாம்தேதி சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றிறங்கி அங்கிருந்து ஹரித்வாருக்கு பேருந்தில் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். நான் ஒன்பதாம் தேதி காலையில் சென்னையில் பிரதாப் பிளாஸா ஓட்டலுக்கு வந்தேன். அரங்காவும் கிருஷ்ணனும் வந்து என்னுடன் தங்கினார்கள். நாங்கள் அன்று மதியம் விமானமேறவேண்டும். அன்று காலை எனக்கு ஓர் அழைப்பு வந்தது. என்னை வி.இஸட்.துரை சந்திக்கவிரும்புவதாக.

வி.இசட்.துரை இயக்கிய முகவரி படத்தை மட்டும்தான் நான் பார்த்திருந்தேன். அந்தப்படத்திலிருந்த வணிக அம்சங்களைத் தாண்டி விரும்பியதுறைக்குள் நுழையத் துடிக்கும் ஓர் இளைஞனின் அவஸ்தை என்னை கவர்ந்ததாக இருந்தது. உண்மையில் எல்லா வாழ்க்கையிலும் அந்தக் காலகட்டம் கடந்துபோகும். அது நிகழும்போது வலிமிக்கதாக இருந்தாலும் பின்னர் நினைக்கும்போது அதைப்போல ஆனந்தமான ஓர் அனுபவம் பிறிதில்லை.



துரையை சந்திக்க ஒப்புக்கொண்டேன். அவரும் அவரது நண்பர் ஒருவரும் என் ஓட்டலுக்கு வந்தார்கள். கீழே உணவகத்தில் அமர்ந்து பேசினோம். துரை அங்காடித்தெரு பார்த்து நிறைவடைந்த மனநிலையில் இருந்தார். ‘ரொம்பநாளா ஒரு தீம் இருக்கு சார். ஒரு உண்மைச்சம்பவம்…அது மனசைப்போட்டு படுத்தி எடுத்திட்டிருந்தது…சொல்லப்போனா அதை எடுக்கணும்னுதான் சினிமாவுக்கே வந்தேன். இப்பவரை ஒரு ஃபார்ம் வரல்லை. ஆனா அது என்னை விடவும் இல்லை. அதை நீங்க எழுதினா எடுக்கிறேன்…அங்காடித்தெரு பாத்தப்ப நம்பிக்கை வந்திட்டுது…’ என்றார்.

அந்தக்கதைக்கருவைச் சொன்னார். என்னையும் அதிரச்செய்த விஷயம் அது. ஏனென்றால் அந்தக் கதையின் பின்புலமாக இருக்கும் நிழலுலகம் நான் ஓரளவு அறிந்ததே. என் அலைச்சல் வாழ்க்கையில் ஆந்திராவில் ஒருமுறை அவ்வுலகை மெல்ல உரசிச்சென்ற அனுபவம் இருந்தது. ‘எழுதிடலாம்…சொல்லப்போனா இப்பவேகூட உக்காந்து எழுதிடலாம்னு தோணுது’ என்றேன். ‘நான் திரும்பிவரணும் சார்…அது இந்தப்படத்தாலத்தான் முடியும். இப்பதான் இந்தமாதிரி படங்களை எடுக்கிறதுக்குண்டான காலம் கனிஞ்சிருக்கு. என்னைவிடவும் இந்தப்படத்திலே நடிக்கிறதுக்குன்னு துடிச்சிட்டிருக்காரு ஷாம். அவருதான் இதுக்கு கதாநாயகன்’ என்றார்.



சொல்லப்போனால் எனக்கு முதலில் மனம் ஒப்பவில்லை. ‘ஷாமா?’ என்றேன். ஷாம் கட்டுடல் கொண்ட அழகான இளைஞன் என்ற எண்ணமே எனக்கிருந்தது. ‘அவர் ரொம்ப கிளாமர் இல்லையா?’ என்றேன். ‘ஆமா சார்…கிளாமர்தான்….ஆனா எல்லாத்தையும் உதறிட்டு இதிலே குதிச்சிடணும்னு துணிஞ்சிருக்கார். ரெண்டுபேருக்குமே ஒரு பிரேக் தேவைப்படுது. ஒவ்வொரு நாளும் அல்லாகிட்ட கேக்கிறது ஒரு நல்ல தொடக்கத்தைத்தான். அது இந்தப் படத்திலே ரெண்டுபேருக்குமே கிடைக்கும்னு தோணுதுசார். இன்ஷா அல்லாஹ்.’

‘சரி ஆரம்பிச்சிடலாம்’ என்றேன். ‘நீங்க போய்ட்டுவாங்க…பாப்போம்’ என்றார். நானும் ஹரித்வார் கிளம்பினேன். திரும்பி வந்ததும் அடுத்த சந்திப்பு. ‘புரடியூஸர் ரெடியா இருக்கார் சார். நீங்க எழுதுங்க. நான் நடுவிலே தெலுங்கு ரீமேக் படம் ஒண்ணு பண்ணணும்…சர்வைவலுக்கு தேவைப்படுதுசார்… அதை முடிச்சதுமே ஆரம்பிச்சிடலாம் சார்’ என்றார். ஒப்பந்தம் போட்டு முன்பணம் பெற்ற பின் நான் எழுத ஆரம்பிக்கவில்லை. ஏதோ ஒரு தடை. அந்தப்படத்தில் உள்ள மையப்பிரச்சினைக்குள் நுழைய ஒரு வாசல் தேவைப்பட்டது. அது திறக்கவில்லை.

இருபது நாள் கழித்து துரை கூப்பிட்டார். ‘சார், நாம இதையே ஆரம்பிச்சிருவோம்…உடனே ஆரம்பிக்கிறோம் சார்…’ நான் ‘என்னாச்சு தெலுங்குப்படம்?’ என்றேன். ‘இல்ல சார், அதை விட்டாச்சு. என்னால அதைப்பண்ண முடியலை. கதைக்கு ஒக்காந்தா மனசு இதிலே மட்டும்தான் நிக்குது. இதை பண்ணாம நான் இன்னொரு படம் பண்ண முடியாது. நைட் அண்ட் டே இதே நினைப்பாவே இருக்கேன்…இதுதான் சார் படம்’ நான் ‘இல்ல உங்க சர்வைவல்..’ என்றேன். ‘அதுக்கு ஏதாவது விளம்பரம் எடுத்துக்கறேன் சார்…இப்ப எனக்கு இந்தப்படம்தான்.’

எழுதவேண்டும். ஆனால் மீண்டும் அதே சிக்கல். தொடங்கவில்லை. நாலைந்துநாட்களுக்குப்பின் கிளிசொன்ன கதையின் ஓர் அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருந்தேன். அப்பாவுக்கும் மகனுக்குமான உறவின் நுண்ணிய உணர்ச்சிகளாலான தருணம் ஒன்றை எழுதும்போது சட்டென்று ஒரு வேகம் பிறந்தது. ’ஒருநாள் உன் பேரை அவந்தான் சொல்லப்போகிறாண்டா’ என்று போத்தி அப்பாவிடம் சொல்லும் இடம் அது. அந்த உணர்ச்சிகளால் நான் அடித்துச்செல்லப்பட்டேன். திரைக்கதையின் முதல் வடிவை எழுதினேன். அதை பின் செம்மைப்படுத்தினோம்.

அதன்பின்னர்தான் ஷாமை சந்தித்தேன். நான் சந்திக்கும்போது துணி விளம்பரங்களுக்கான மாடல் போலத்தானிருந்தார். ‘உங்கள் கிளாமரை முற்றிலுமாக துறக்கவேண்டியிருக்கும்…மெலிந்து உலர்ந்து துரும்பாகவேண்டியிருக்கும்’ என்றேன். ‘தயார்தான் சார்…எல்லாத்தையும் சொல்லிட்டார். என்ன வேணுமானாலும் செய்றேன். எப்டி வேணுமானாலும் மாறுறேன்னு சொல்லிட்டேன்…’ உணர்ச்சிமிகுந்த கண்களுடன் ‘இந்த படம் ஒரு பிரார்த்தனை மாதிரி. இதுக்குமேலே நான் ஒண்ணும் அல்லாகிட்டே வேண்டலை…இது எனக்கு கை கொடுக்கணும்…கை குடுக்கும்சார்…இன்ஷா அல்லா’ என்றார்.

தயாரிப்புத் தாமதங்களைத் தாண்டி படப்பிடிப்பு ஆரம்பித்தது. படப்பிடிப்பு நிகழும் இடத்துக்கு நான் ஒரேயொருமுறைதான் போனேன். சென்னையில் நிகழும்போது. எழுதிமுடித்ததும் என் வேலை அனேகமாக முடிந்துவிட்டது. படப்பிடிப்பு நினைத்தது போல நடக்கவில்லை. தயாரிப்பாளர்கள் மாறினார்கள். பலவகையான பொருளாதார நெருக்கடிகள். ஆனால் எளிதாக எடுக்கக்கூடிய படமும் அல்ல. சொல்லப்போனால் கொஞ்சம் பெரிய படம். இந்தியா முழுக்க பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கதை நிகழ்கிறது. பலவகையான உதிரிக்கதாபாத்திரங்கள்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக விட்டுவிட்டு நடந்த படப்பிடிப்பு பற்றி அவ்வப்போது துரை சொல்வார். பலவகையான சிக்கல்கள். பலமுறை படமே நின்றுவிட்ட்டது என்ற எண்ணம் வந்தது. ஒரு கட்டத்தில் எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு ஏமாறவேண்டியதில்லை என்று நினைத்து நான் மானசீகமாக அப்படத்தில் இருந்து ஒதுங்கியே விட்டேன். அடுத்தடுத்த படங்களில் ஈடுபட்டேன். ஆனால் துரையும் ஷாமும் அந்தப்படமன்றி வாழ்க்கையில்லை என்று அதிலேயே தங்களை பிணைத்துக்கொண்டார்கள்.

சினிமா என்ற வெகுஜன ஊடகத்தைப்பற்றி எப்போதுமே அறிவுஜீவிச்சூழலில் ஒரு மேலோட்டமான பார்வை உண்டு. அப்பார்வை உடையவன்தான் நானும். ஆனால் சினிமாவின் பின்னாலிருக்கும் கண்ணீரையும் தியாகத்தையும் இந்தப்படத்தில்தான் முழுமையாக உணர்ந்தேன். இத்தனை சிக்கல்களில், இக்கட்டுகளில் நீந்தி முழுவாழ்க்கையையும் பணயம் வைத்து ஒரு திட்டத்தை முன்னெடுக்கவேண்டுமென்றால் அபாரமான ஒரு கனவு மனதிலிருக்கவேண்டும்.

‘6’ ஒரு கலைப்படம் அல்ல. அனைத்து ரசிகர்களுக்குமான ஓர் உணர்ச்சிகரமான படம்தான். ஆனால் நான் எழுதியவரை அதற்குள் ஆத்மார்த்தமான ஒரு வாழ்க்கைச்சித்திரம் இருக்கிறது. அடிப்படையான மனித துயரத்தின் சில மகத்தான கணங்கள் இருக்கின்றன. தமிழ்ச்சூழலில் ஒரு படம் என்பது ஒரு கனவுக்கும் அதை நடைமுறையாக ஆக்கும் வாய்ப்புகளுக்கும் நடுவே எங்கோ ஒரு சமரசப்புள்ளியில் நிகழ்ந்து வருகிறது. பொருளியல் சிக்கல்கள், வணிக நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றைத்தாண்டி தமிழ்ச்சூழலிலிருந்து தரமான நடிப்பை வெளிக்கொண்டுவருவதும் பெரிய சவால்தான்.



சிலநாட்களுக்கு முன் துரை கூப்பிட்டார். நீண்ட இடைவேளைக்குப்பின் அவரது குரல் ‘சார், இன்ஷால்லா, படத்தை முடிச்சிட்டேன்…இனிமே ரெண்டு பாட்டு மட்டும்தான் சார் பாக்கி.’ எனக்கு ஆச்சரியமாக இருந்தது. படம் எதிர்கொண்ட பிரச்சினைகள் எனக்கு முழுமையாக இல்லையேனும் ஓரளவு தெரிந்திருந்தது. ‘படாதபாடு பட்டுட்டேன் சார். அல்லாகிட்டே சரண்டர் ஆயிட்டேன். அதனாலத்தான் இவ்ளவுக்குப்பின்னாடியும் இதை முடிக்கிற தெம்பு வந்திச்சு…ஆனா ஒண்ணு சார், எடுத்தா நினைச்ச மாதிரி எடுக்கணும், எதிலயும் காம்ப்ரமைஸ் ஆவாமத்தான் எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்சார். இப்டித்தான் எடுக்கணும்னா எவன் என்ன பண்ணினாலும் சரி, பட்டினியே கிடந்தாலும் சரி அப்டித்தான் எடுக்கணும்னு நினைச்சேன்…எடுத்திட்டேன்…மனசுக்கு நிறைவா இருக்கு சார்.’

‘நல்லா வந்திருக்கா?’ என்றேன். ‘அதை முதல்ல சொல்லவேண்டியது நீங்கதான் சார். எழுதின உங்களுக்கே ஹாண்ட் ஆவுற மாதிரித்தான் இருக்கும்னு நான் நினைக்கிறேன் சார்…என்ன தப்பு இருக்கோ தெரியல்ல, ஆனா படத்திலே மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு…’ என்றார். ’ஷாம் எப்டி இருக்கார்?’ என்றேன். ‘அவனை கட்டிப்பிடிச்சு கண்ணீர் விட்டுட்டேன் சார்…அப்டி ஒத்துழைச்சான். கொலைப்பட்டினி கிடந்து எடைய குறைச்சிருக்கான்… தாடி வளர்த்து கிறுக்கன்மாதிரி அலைஞ்சிருக்கான். எந்த வசதியும் இல்லாம எங்கெங்கயோ படத்த எடுத்தோம். ஒரு காரவான் கூட குடுக்க முடியலை. தெருவில புழுதியில படுத்து நடிச்சான் சார்…இது நம்ம படம் இல்ல, அவனோட படம்…இன்ஷால்லா அவனுக்கு அல்லா இதில ஒரு வாழ்க்கை குடுப்பார்.’



அந்தக்குரலின் நிறைவும் நெகிழ்ச்சியும் என்னையும் தொற்றிக்கொண்டது. நான் இன்னும் படத்தின் காட்சிகள் எதையும் பார்க்கவில்லை. இங்கே திருவனந்தபுரத்தில் ஒழிமுறி படத்தின் வேலைகளுடன் சிக்கிக்கொண்டுவிட்டேன். சென்னை செல்வது தாண்டித்தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் படம் பார்க்கவேண்டியதில்லை என்று ஒரு கணம் தோன்றியது.

இந்த வகையான ஒரு மன எழுச்சியும் நிறைவும் அபூர்வமாகவே நிகழ்கிறது. எந்த விளைவுகளை பிறரில் உருவாக்கினாலும் சரி கலை அதன் எல்லா நிலையிலும் அதை ஆக்கியவர்களுக்கு மகத்தான வாழ்க்கைப்பகுதி ஒன்றை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.


http://www.jeyamohan.in/?p=28150

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.