Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வதைகளும் வலிகளும் தந்தவர்களை விடுத்து வாழ்வு வளம்பெற மக்கள் வாக்களிப்பார்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வதைகளும் வலிகளும் தந்தவர்களை விடுத்து வாழ்வு வளம்பெற மக்கள் வாக்களிப்பார்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தினமுரசு பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி

  • கேள்வி: மாகாண சபை உங்களது கனவு என்று கூறிவந்த நீங்கள் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டது ஏன்?

Douglas-Devananda-Minister-1.jpgபதில்: மக்களின் ஆணையை பெற்று மாகாணசபையை வெற்றி கொள்வதும், மாகாண சபை அதிகாரங்களை பாதுகாப்பதும், அதற்கான அதிகாரங்களை மேலும் பெற்று மாகாணசபையை வலுவுள்ளதாக வளர்ப்பதும், அதனூடாக எமது அரசியல் இலக்கு நோக்கி செல்வதும் எனது கனவு என்பதில் என்றும் மாற்றம் இல்லை. நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உண்மை. ஆனாலும் தேர்தலில் போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர்களை நானே நேரில் நின்று வழிநடத்தி வருகின்றேன். நான் தொடர்ந்தும் மத்திய அரசில் அமைச்சராக பங்கெடுத்து எனக்கு ஊடாகவே தமிழ் பேசும் மக்களுக்கான சகல பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்பது ஜனாதிபதி அவர்களின் விருப்பம். ஆனாலும், மாகாணசபையை பொறுப்போற்று அதை வழிநடத்தி பாதுகாத்து மேலும் வளர்த்தெடுக்கும் கடமையை நானே ஏற்க வேண்டும் என்பது எனது விருப்பம். இது குறித்து நான் ஜனாதிபதி அவர்களுடன் தொடர்ந்தும் பேசியிருக்கின்றேன். இதேவேளை, எமது கட்சி சார்பானவர்களை தேர்தல் களத்தில் நாம் இறக்கியுள்ளோம். நான் நினைத்தது போலவே எனது கனவு நிறைவேறும். அரசியல் சட்ட விதிகளை சாதகமாக்கி, எனது விருப்பப்படியே வடதேச விடிவெள்ளியாக திகழப்போகும் முதலமைச்சர் யார் என்பது தீர்மானிக்கப்படும். இது குறித்த சந்தேகங்கள் யாருக்கும் எழ வேண்டிய அவசியமில்லை. நம்புங்கள், தேர்தலின் பின்னர் நல்ல செய்தி இங்கு அரங்கேறும்.

  • கேள்வி: இணக்க அணுகுமுறை மூலம் மக்களின் உடனடித் தேவையான அபிவிருத்திகளை மட்டுமல்லாது, தமிழ் மக்களின் அரசியலுரிமைகளையும் அடைய முடியும் என்று சொல்லி வருகிறீர்கள். என்ன ஆதாரத்தில் அதைச் சொல்கிறீர்கள்?

பதில்: எமது மக்களுக்கான உடனடித் தேவைகள் மற்றும் அபிவிருத்தி குறித்தும் அர்த்தமற்ற போலி எதிர்ப்பு அரசியல் கட்சிகளால் துளியளவும் எதையும் சாதிக்க முடிந்திருக்கவில்லை. அதை அவர்கள் விரும்பியிருக்கவும் இல்லை. எமது மக்களின் அபிவிருத்திப் பணிகளையும், உடனடி தேவைகளையும் சலுகைகள் என்று எள்ளி நகையாடி ஒதுக்கி வைத்தனர். ஆனாலும், இவைகளை நாம் எமது மக்களின் அடிப்படை உரிமைகள் என்று கவனத்தில் எடுத்து காரியம் ஆற்றி வந்திருக்கிறோம். அழிவு யுத்த காலத்தில் மக்களுக்கான உணவு முதற்கொண்டு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வரை நாமே முடிந்தளவு வழங்கி வந்திருக்கிறோம். அழிவு யுத்தத்திற்கு முன்னரும், பின்னருமான அபிவிருத்தி பணிகள் குறித்தும் எம்மைத் தவிர எவரும் செய்திருக்கவில்லை. அரசியலுரிமையை பொறுத்தவரை அடுத்தவர்களை நம்பி பயனில்லை. அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும். தேவை ஏற்படின் அரசியல் தீர்வு என்ற பிள்ளையை பிறப்பிப்பதற்கு ஒரு மருத்துவிச்சியின் துணையாகவே வெளியுலகில் இருந்து யாரும் இங்கு வர முடியும். இதுவே இன்றைய யதார்த்த நிலை. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டிய காலங்கள் கடந்து விட்டன. இன்று எமது மக்களின் பிரச்சினை என்பது கண்ணுக்குள் முள் விழுந்த கதை. இதை பஞ்சு கொண்டுதான் அகற்ற வேண்டும். இதற்கு இணக்க அரசியல் வழிமுறையும், யாருடன் பேசி தீர்வு காண முடியுமோ அவர்களுடன் பேசியே எதுவும் ஆகும் என்ற யாதார்த்த நிலையுமே இங்கு உள்ளது. அரசியல் தீர்வை பொறுத்தவரை நாம் சகதிக்குள் புதைந்திருந்த தீர்வு முயற்சிகளை சகதியில் இருந்து மீட்டு வெளியே இழுத்து வந்திருக்கிறோம். இதன் பயனாகவே கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு இன்று வடக்கிலும் நடக்கின்றது. நாம் வலியறுத்தி வந்தது போலவே, இன்று 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. இது இன்று நடைமுறைக்கு வருவதற்கு காரணமாக இருக்கும் நாம் இதைவிட சகலதையும் சாதிப்போம் என்பதும் தெளிவாகிறது. 

  • கேள்வி: மாகாண சபைகளுக்கு இப்போதிருக்கும் அரைகுறை அதிகாரங்களைப் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?

பதில்: எங்காவது ஒரு இடத்தில் இருந்துதான் எதையும் தொடங்க வேண்டும். கடந்த காலங்களில் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் அரை குறை தீர்வு என்று சாக்கு போக்கு காட்டி சுயலாப தமிழ் தலைமைகள் அவற்றை பயன்படுத்த தவறிவிட்டன. இதனால் எமது மக்களை இருண்ட யுகத்தினுள் தள்ளி விட்டவர்களும் சுயலாபத் தமிழ் தலைமைகளே. கிடைத்ததை எடுத்துக்கொண்டு மேலும் பெற வேண்டிய அதிகாரங்களை நோக்கி நடந்திருந்தால் எமது மக்களுக்கு இத்தனை வலிகளும், வதைகளும் நடந்திருக்காது. அரைகுறை தீர்வு என்று கூறி எல்லா தீர்வு முயற்சிகளையும் கைவிட்டவர்களே இறுதியில் நடந்த முள்ளிவாய்க்கால் வரைக்குமான அவலங்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும். இலங்கை இந்திய ஒப்பந்தம், பிரமேதாசா புலிகள் பேச்சுவார்த்தை, சந்திரிகா புலிகள் பேச்சு வார்த்தை, ரணில் புலிகள் பேச்சுவார்த்தை, இறுதியாக ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களுடனான பேச்சுவார்த்தை என சகல சந்தர்ப்பங்களும் தவற விடப்பட்டு எமது மக்களை அவலங்களுக்குள் தள்ளி விட்ட கசப்பான வரலாறுகள் நடக்க இனியும் நாம் அனுமதிக்க மாட்டோம். புத்திமான் பலவான் என்பார்கள். மதிநுட்ப சாணக்கிய தந்திர வழி முறையே எமது மக்களை வழி நடத்தி செல்ல வேண்டும். மாகாணசபையில் இருந்து தொடங்கி எமது மக்களின் அரசியல் இலக்கை அடையும் யதார்த்தமான வழிமுறைறைய தவிர வேறு எந்த யதார்த்த வழிமுறை குறித்தும், யாராவது நடைமுறைச்சாத்தியமான முறையில் முன்வைத்தால் அது குறித்தும் நாம் சிந்திக்க தயாராக இருக்கின்றோம்.

  • கேள்வி: தமிழ்மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினை தீர்க்கப்படாமலே இன்னும் தொடர்வதற்கு எவையெல்லாம் காரணம் என்று நினைக்கிறீர்கள்? அந்தக் காரணிகளை மேவி எப்படி தீர்வு நோக்கிச் செல்லலாம் என்று கருதுகிறீர்கள்?

பதில்: பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் என்பன தோல்வியில் முடிவதற்கு காரணமாக இருந்தவர்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த அன்றைய ஆளும் அரசுகளே. ஆனாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் முதற்கொண்டு அதற்கு பின்னரான அனைத்து தீர்வு முயற்சிகளும் தோல்வியில் முடிவதற்கு பிரதான காரணமாக இருந்தவர்கள் சக தமிழ் கட்சி தலைமைகளே. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறியவர்களும், அதை ஏற்க மறுத்தவர்களுமே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கொண்டு சாத்தான் வேதம் ஓதுவது போல் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். குறிப்பாக முன்னால் ஐனாதிபதி சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நாம் கொண்டிருந்த 09 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் பலத்தை வைத்து உருவாக்கப்பட்ட தீர்வு முயற்சிகளை இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களே எதிர்த்தார்கள். அன்று எதிர்க்கட்சிகளோடு இணைந்து சந்திரிகாவின் தீர்வு நகல்களை நாடளுமன்றத்தில் வைத்து எரித்தார்கள். தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகளோடு இணைந்து அதற்கு எதிராக தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அன்று எதிர்த்தவர்கள் அதைவிட எந்தத் தீர்வு திட்டத்தை எமது மக்களுக்கு உருவாக்கி கொடுத்தார்கள்?... சந்திரிகா கொண்டு வந்த தீர்வு நகல்களை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளோடு இணைந்து எரித்தவர்கள் அதில் எந்த குறைபாட்டை கண்டிருந்தனர்?... அதை விட சிறந்த தீர்வை உருவாக்கி கொடுத்தார்காளா?... உண்மையில் தமிழ் பேசும் மக்கள் அரசியல் தீர்வின்றி அவலப்பட வேண்டும் என்பதும், அதை வைத்து உரிமை கிடைக்கவில்லை என கூக்குரல் இட்டு தேர்தலில் வென்று தமது பதவி நாற்காலிகளில் உட்கார்ந்து தமது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை வைத்து அரசிடம் இருந்து தமது சொந்தச் சலுகைகளை பெறுவதும், அதை வைத்து தமது உல்லாச வாழ்வை நடத்துவதுமே சக தமிழ் கட்சிகளின் திட்டம். ஐயர் வரும் வரைக்கும் அமாவாசை காத்திருக்காது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வு நோக்கி வரும் என்பது பகற்கனவு. கடல் வற்றி போகும் என்று காத்திருந்து குடல் வற்றி செத்த கொக்கின் கதையாக எமது மக்களின் அரசியல் வரலாறு மாறிவிடக்கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சினை வேறு, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் வேறு. தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது மக்களின் பிரச்சினைகளை தீராப்பிரச்சினையாக நீடித்து சென்று அதில் தமது தேர்தல் வெற்றிகளை மட்டும் விரும்புகிறது. ஆனாலும், எமது மக்களோ தமது அரசியல் உரிமை முதற்கொண்டு அபிவிருத்தி வரை நடக்க வேண்டும் என் விரும்புகிறார்கள். நாம் வலியுறுத்தி வந்த 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை தேர்தலே இன்று நடத்தப்படுகின்றது. அதை உழுத்துப்போன தீர்வு என்றும், அரைகுறை தீர்வு என்றும் எள்ளி நகையாடி ஒதுக்கி வைத்தவர்களே, இன்று மாகாண சபை தேர்தலில் போட்டியிட முண்டியடித்துக் கொண்டு முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் வழமைபோல் தமது பதவி நாற்காலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த எத்தனிக்கலாம். ஆனாலும், நாம் 13வது திருத்தச் சட்டத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட இடதுசாரி கட்சிகள், சக தோழமை கட்சிகளின் பங்களிப்போடு மாhகாண சபையில் இருந்து எமது அரசியல் இலக்கை நோக்கி செல்வோம். அதற்கு அரசாங்கத்தை இணங்க வைத்து பேசும் எமது ஆக்கபூர்வ இணக்க அரசியல் வழிமுறை எம்மிடம் உண்டு.

  • கேள்வி: காணியிழந்த மக்களின் உண்ணாவிரதப் போராட்டம், நீதிமன்ற அணுகல்கள் எதற்கும் மசியவில்லை அரசு. இந்த அரசில் அமைச்சராக உள்ள நீங்கள் எப்படி இன்றுள்ள காணிப்பிரச்சினையைத் தீர்ப்பீர்கள்?

பதில்: 2009 மே மாதத்திற்கு பின்னர் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்று இங்கு எதுவும் இருக்க முடியாது என ஐனாதிபதி மகிந்த ராஐபக்கச அவர்களே பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதை நடைமுறைப்படுத்துமாறு நாம் கேட்டு இதுவரை எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம் என்ற உரித்தில் படையினரிடம் இருந்த பல பிரதேசங்களையும் மீட்டெடுத்து எமது மக்களை மீள்குடியேற்றம் செய்து வருகின்றோம். உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது மக்களை மீள்குடியேற்றம் செய்வதையோ, எமது மக்களின் நிலங்களில் இருந்து படையினர் வெறியேற வேண்டும் என்பதையோ விரும்பவில்லை. எமது மக்கள் முழுமையாகவே தமது நிலங்களில் மீள்குடியேறி விட்டால், அதன் பின்னர் எதை வைத்து அரசியல் நடத்துவது என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சினை தங்கியுள்ளது.

எமது மக்கள் எமக்கு ஆணை வழங்கி எம்மிடம் மாகாண சபை அதிகாரங்களை வழங்கினால் மிக சுலபமாகவே எமது மக்களை ஜனாதிபதியின் ஆசியுடன் பலாலி வரை கொண்டு சென்று குடியேற்றுவோம்.

  • கேள்வி: மக்கள் இந்தத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியைத் தந்தால் படையினரை பிரதான முகாம்களுக்குள் மட்டும் இருக்கச் செய்துவிட்டு, இன்று உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள பகுதிகளில் எல்லாம் மக்களைக் குடியேற வைப்பேன் என்று கூறியிருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் தேர்தலில் தோற்றால் மக்களுக்கு அந்தக் காணிகள் கிடையாது என்று அர்த்தமா?

பதில்: அரசியல் அதிகாரங்களை எமக்கு மக்கள் வழங்கினால் எமக்கு பேரம் பேசும் பலம் கிடைக்கும். அதை மட்டும் வைத்து எதையும் சாதிக்க முடியாது. எமது பேரம் பேசும் அரசியல் பலமும், அரசுடனான இணக்க அரசியல் வழிமுறையும் இணைந்தே எந்த தீர்வையும் எமக்கு பெற்றுத்தரும். இணக்க அரசியல், பேரம் பேசும் அரசியல் பலம் என இரண்டும் இணைந்தே எதையும் சாதிக்கும். கடந்த உள்ள+ராட்சி சபை தேர்தலின் போது எமது மக்கள் தவறாக சித்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து விட்டனர். இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள அத்தனை பிரதேச சபைகளும் அபிவிருத்தியின்றி சோர்ந்து கிடக்கின்றன. எமக்கு கிடைத்த உள்ளூராட்சி சபைகள் சிறந்த செற்பாட்டை கொண்டிருக்கின்றன. நாம் வெற்றி பெற்ற 3 சபைகளுக்கும் தலா 100 மில்லியன் என்று 300 மில்லியல் நிதியை அரசாங்கம் வழங்கி, அதற்கான அபிவிருத்தி பணிகள் நடந்து வருகின்றன. ஆனாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள சபைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து நிதியுதவிகளை பெற தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறிவிட்டது. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் போலி எதிர்ப்பு அரசியலே காரணமாகும். நாம் அனைத்து சபைகளையும் கைப்பற்றியிருந்தால், அனைத்து சபைகளும் இன்று அபிவிருத்தியடையும் நிலைக்கு அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வந்திருப்போம். அது போலவே மாகாண சபை தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். எஞ்சியிருக்கும் உயர்பாதுகாப்பு வலயங்களையும் எமது மக்களிடம் நாம் மீட்டுக் கொடுக்கும் அரசியல் பலம் எமக்கு கிடைக்கும். எமது வெற்றியே தமது வெற்றி என்பதை தமிழ் பேசும் மக்கள் இந்த தேர்தலில் உணர்வதாக தெரிகிறது. நாம் வெல்வதும் உறுதி, எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தமாகும் என்பதும் உறுதி.

  • கேள்வி: தமிழ்த் தலைமைகள் அனைத்தும் ஒன்றுபட்டு நின்று அரசுக்கெதிரான தமிழ்மக்களது ஏகோபித்த ஒற்றுமையைக் காட்டினால் சர்வதேசம் தமிழ்மக்களுக்குத் தீர்வை எடுத்துத் தந்துவிடும். ஆனால் அரசுடன் நீங்கள் சேர்ந்து செயற்பட்டு வருவது அதற்குத் தடையாக அமைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனரே உங்கள் பதில் என்ன?

பதில்: இது நொண்டிச்சாட்டு. இதில் உண்மை துளியளவும் இல்லை. எமது மக்களின் விடிவிற்காகவே நாம் அரசுடன் உறவுக்கு கரம் கொடுத்து, உரிமைக்கு குரல் கொடுத்தும் வருகின்றோம். சர்வதேச சமூகம் எமது மக்களின் மீது அக்கறை கொண்டிருந்தால், அழிவு யுத்தம் எமது மக்களை முள்ளிவாய்க்கால் வரை தள்ளிச் சென்ற போது, எமது மக்களின் அவலம் தீர்க்க வந்திருக்க வேண்டும். யுத்தத்தை நிறுத்த கோரி இரு தரப்பையும் அரசியல் தீர்வுக்கான பேச்சில் ஈடுபட வைக்க முயன்றிருக்க வேண்டும். இதன் மூலம் இங்கு நடந்த அழிவுகளை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனாலும், சர்வதேச சமூகம் அவ்வாறு எமது மக்களுக்காக குரல் கொடுத்து ஆபத்து காக்க இங்கு வந்திருக்கவில்லை. எல்லாம் நடந்து முடிந்த பின்னரே சகலரும் இங்கு வந்தனர். சர்வதேச சமூகத்திற்கு ஒற்றுமையை  காட்டுங்கள் என்று கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடந்து முடிந்த தேர்தல்கள் அனைத்திலும் மக்களின் வாக்குகளை அபகரித்து கொண்டார்கள். ஆனாலும் சர்வதேச சமூகம் எமது மக்களை திரும்பி பார்க்கவும் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் போலியான கோரிக்கைகளை ஏற்கவும் இல்லை. சர்வதேச சமூகத்தை துணைக்கு அழைப்பது போல் நடிப்பது தமிழ் தேசிய கூட்iமைப்பின் தேர்தல் கால வாக்குறுதி மட்டுமே. ஆகவேதான் இந்த தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் சரியான முடிவுகளை எடுப்பதற்கு தயாராகி உள்ளனர்.

  • கேள்வி: மாகாண சபைக்குரிய காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?.....

பதில்: 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டுமென நாம் வலியுறுத்தி வருவதன் அர்த்தம், காணி, பொலிஸ் அதிகாரங்களும் மாகாண சபை அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டும் என்பதேயாகும். ஆனாலும். உள்ளே அரசுடன் கைகுலுக்குதல், வெளியே வீரப்பேச்சு நடத்தி அரசை எதிர்ப்பது போல் பாசாங்கு காட்டுவதுமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதியற்ற இரட்டை நிலைப்பாடு காணி, பொலிஸ் அதிகாரங்களை எமது மக்களுக்கு பெற்றுத்தரப் போவதில்லை. அதற்கான மதிநுட்ப சிந்தனைகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இல்லை. மாகாண சபையின் அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கும் போது நாம் எமது மதிநுட்ப சிந்தனையாலும், அரசுடனான ஆக்க பூர்வ இணக்க அரசியலாலும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களையும் பெற்றெடுப்போம்.

  • கேள்வி: இறுதியாக வட மாகாண சபை தேர்தலில் வாக்களிக்கப் போகும் மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?...

பதில்: வலி தந்தவர்களைத் தோற்கடிப்போம். சுயாட்சிக்கு வாக்களிப்போம் என்கிறார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இதைத் தமிழ் பேசும் மக்கள் நம்பப் போவதில்லை என்பது உறுதி. காரணம், இதுவரைகால அரசியல் தீர்வு முயற்சிகள் யாவற்றையும் ஒதுக்கி வைத்து சுயாட்சியை நோக்கிச் செல்வதற்கான வழிகளைத் தடுத்து நிறுத்தியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. இதன்மூலம் தமிழ் பேசும் மக்கள் வதைகளும், வலிகளும் தாங்கி நிற்பதற்குக் காரணமாக இருந்தவர்களும் கூட்டமைப்பினரே. சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியிருந்தால், எமது மக்கள் வலி சுமந்திருக்க முடியாது. ஆகவே, இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து வந்தவர்கள் மனம் விரும்பி, எமது யதார்த்தமான வழிமுறைக்கு வாக்களிப்பார்கள் என்பது எமது நம்பிக்கை. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எனது கனவும், மக்களின் கனவும் ஒன்றென நிறைவேறும். எமது மக்கள் அரசியல் உரிமை பெற்றார்கள் என்ற நல்ல செய்தி விரைவில் அரங்கேறும். 

நன்றி தினமுரசு

வதைகளும் வலிகளும் தந்தவர்களை விடுத்து வாழ்வு வளம்பெற மக்கள் வாக்களிப்பார்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

1044398_657107480980868_21949816_n.jpg

//தேர்தல் வருதுன்னு சொன்னாலும் சொன்னானுங்க.... கருமண்டா..... /

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.