Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாமினியும் திவ்யாவும் இந்தியக் காதலின் சிக்கல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாமினியும் திவ்யாவும் இந்தியக் காதலின் சிக்கல்கள்

ஆர்.அபிலாஷ்

 

 

abilash%20(3).jpg

சேரனின் மகள் தாமினியின் காதல் ஒரு பொது சர்ச்சையாக மாறினதும் எழுந்த முதல் கேள்வி, காதலைக் கொண்டாடிப் படம் எடுக்கிற சேரன் எப்படி தன் மகள் காதலை மட்டும் பிரிக்க நினைக்கலாம் என்பது. மேலோட்டமாகத் தோன்றி னாலும் இது ஒரு முக்கிய கேள்வியே.

சேரனின் படங்களுக்கு வருவோம். அவரது "ஆட்டோகிராப்", "பாரதி கண் ணம்மா" மற்றும் "பொக்கிஷம்" போன்ற படங்களில் காதலியின் அப்பா சேரனை போன்றேதான் காதலுக்கு விரோதமாக நடந்து கொள்கிறார். ஆக, சேரன் சினிமாவில் ஹீரோ, நிஜவாழ்க்கையில் வில்லனா? அல்ல. அவர் என்றுமே லட்சியக் காதலின் மகத்துவங்கள் பேசி னது இல்லை. தன் படங்களில் என்றும் சுயமாய் சம்பாதிக்க முடியாது அவஸ் தைப்படுகிறவரின், வாழ்வில் அந்தஸ்தும் அதிகாரமும் இல்லாதவரின் காதல் வாழ்வு கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறதைத் தான் காட்டி இருக்கிறார். இது ஒரு அசலான தமிழ் மத்திய தர வாழ்க்கைப் பிரச்சினை. நேர்மாறாக, மணிரத்னத்தின் படங்களில் எல்லாவற்றையும் சுலபமாய் தூக்கி எறிந்து காதலன் வீட்டுக்கு பெட்டி படுக்கையுடன் வந்து எந்த எதிர்ப்பும் இன்றி காதலியால் வாழ ஆரம்பிக்க முடியும் (‘‘இருவர்", "ஆய்தஎழுத்து"). சேரனின் படங்களில் குழந்தைகள் வளர்ந்த பின்னும் பொருளாதார மற்றும் உணர்ச்சி ரீதியாகப் பெற்றோரைச் சார்ந்தே வாழ நேர்கிறது. அவர்களால் அந்த பந்தத்தை அறுத்து எளிதில் வர முடிவதில்லை.

சேரனின் நவீனமடையாத தமிழ் சமூகத்தில் தனிமனிதர்கள் இல்லை. அங்கே மனிதர்கள் பொருள் சேர்ப்பதையும் குடும்பத்தோடு ஒட்டி வாழ்வதையுமே காதல் சுதந்திரத்தை விட முக்கியமாய் நினைக்கிறார்கள். அங்கே தன் மருமகளின் பிரசவத்துக்கு சரியான நேரத்தில் வந்து பணம் தரும் கணவனின் அப்பாதான் ஹீரோ (‘‘தவமாய் தவமிருந்து"). சமூகத்தையும் குடும்பத்தையும் மீறித்தான் காதல் ஏற்பட வேண்டும் எனும் நிர்ப்பந்தம் வரும் போது காதலர்கள் தற்கொலை புரிகிறார்கள் (‘‘பாரதி கண்ணம்மா"). ஒரு பக்கம் காதல் சுதந்திரம் பற்றி பேசுவதாய் தோன்றினாலும் சேரன் ஒரு கதைசொல்லியாக நடைமுறை எதார்த்தத்தைத்தான் கணக்கில் கொள்கிறார். இந்திய வாழ்வின் அத்தனை கசடுகளையும் உள்ளடக்கிய எதார்த்தம் அது.

குடும்பமும் அது சார்ந்த மிகை உணர்ச்சிகளும்தான் இந்திய சமூகத்தின் அடிப்படை அலகு. தமிழில் ஓரளவு நவீனமான கருத்துக்களைப் பேசுகிற ஒரே டி.வி. நிகழ்ச்சி என "நீயா நானாவை" சொல்லலாம். இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு பிரதான காரணமாக அதன் இயக்குநர் ஒன்று சொன்னார்: "குடும்ப விழுமியங்கள் மீது வைக்கும் அழுத்தம்." தமிழ் மீடியாவில் குடும்ப விழுமியங்களை மறுத்து ஒருவர் வெற்றி கொள்வது அசாத்தியம் என கூறினார். நம்முடைய நவீன இலக்கியத்திலும் குடும்பம் தான் பிரதானமான ஒன்றாக இருப்பதைக் காணலாம். கிட்டத்தட்ட நம்முடைய அத்தனை நாவல், கதைகளும் ஒரு வீட்டின் வாசலில் துவங்கி தெருமுனைக்குப் போய் திரும்ப ஒரு நடை வந்து முடிந்து விடும். இந்திய சினிமாவிலும் வெற்றி பெறும் இயக்குநர்கள் வலுவான குடும்ப செண்டிமெண்ட் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இம்முறை சேரன் பிரச்சினையில் சினிமா உலகம் திரண்டு அவருக்கு ஆதரவளித்ததும், மீடியா அவருடன் கண் கசிந்ததும் இதே காரணத்தினால் தான். காதலனா தகப்பனா என்றால் நம்மில் பத்தில் ஒன்பது பேர் தகப்பன் என்போம்.

குடும்பம் மிக புராதனமான அமைப்பு. அது ஜனநாயக அமைப்புக்கு எதிரானது. இந்தியாவில் உள்ள கணிசமான பிரச்சினைகளை சிவில் அமைப்புகளின் தோல்வி, ஊழல், குடும்ப அரசியல், சாதி ஆகியவற்றில் இருந்து கௌரவக் கொலைகள் வரை தீர்க்க முடியா ததன் காரணம், குடும்ப அமைப்புதான். குடும்பம் வலியுறுத்தும் விழுமியங்கள் ஜனநாயக உணர்வுகளுக்கு எதிரானது. நீங்கள் சமூகத்தில், அலுவலகத்தில் அல்லது தெருமுனையில் ஒரு பிரச்சினையைப் பார்த்து அதில் தலையிடாமல் ஓடி வந்து விட்டால் அதற்கு ஒரே காரணமாக உங்கள் குடும்பத்தை தான் சொல்லுவீர்கள். சமூகத்தில் சமத்துவமற்ற நிலையைப் பார்க்கையில் இதனால் நம் குடும்பமும் பயன்பெறுகிறதே என அமைதியாகிறோம். ஒரு கௌரவக் கொலை நடக்கையில், சாதிப் பிரச்சினை வருகையில் அதை எதிர்க்கத் தயங்குகிறோம்

ஏனென்றால் நம் குடும்பம் இந்த சமூக தீமையின் பின்னுள்ள அதே நியாயங்களால்தான் தக்க வைக்கப்படுகிறது. நாளை நம் தங்கையோ, மகளோ இன்னொரு சாதியில் காதலித்தால் நாமும் ராமதாஸின் அதே சொற்களில்தான் அதனைப் பழிக்கப் போகி றோம் என்ற உணர்வுதான். அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் ஆவேசமாகக் கலந்து கொண்ட வர்கள் அதற்கு முன்னரோ பின்னரோ லஞ்சம் கொடுத்ததில்லையா? வீட்டுக்கு வெளியே இருக்கையில் சிவில் உரிமைகள் பற்றி, ஜனநாயக லட்சியங்கள் பற்றி முழங்கும் இந்தி யன் குடும்பத்திற்குள் சென்றவுடன் இதற்கெல் லாம் முற்றிலும் அந்நியமாகப் பேச துவங்குவான். நம் குடும்பம் அல்லது அதன் நீட்சியான சாதி பிழைக்க எந்த ஊழலும் பண்ணலாம், பொது சொத்தை அழிக்கலாம். ஆனால் வெளியே வந்ததும் இதற்கு நேர் எதிராகப் பேசவும் செய்யலாம் என்கிற பாசாங்கு நம்மை இந்த நாட்டின் ஒரு பிரஜையாக என்றுமே உணர விடாமல் செய்கிறது. இதனால்தான் ஜனநாயகத்துக்கு எதிரானது என குடும்பத்தை ஆரம்பத்தில் சொன்னேன். சேரனின் பிரச்சினை உண்மையில் காதலை எதிர்க்கிற விவகாரம் அல்ல , குடும்பமா தனிமனித உரிமையா என்கிற விவாதம்தான்.

abilash%20(2).jpg

 

காதலிப்பதை ஒரு உறவுநிலையாக அல்ல, ஒருவன் தன் குடும்பத்தை தானே சுயமாய் சமூக குறுக்கீடு இன்றி உருவாக்க முனையும் தனிமனித முயற்சியாகத்தான் பார்க்க வேண்டும். இங்கு காதல் என்றுமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் காதலித்து சுயமாய் தன் குடும்பத்தைத் தோற்று விக்கும் உரிமை நவீன காலத்தில்தான் துவங்கு கிறது. தனிமனிதன் என்கிற அடையாளமும் கூட ஒரு நவீன கருத்தாக்கம்தான். ஆக, நாம் கற்பனை செய்து வைத்திருக்கிற காதல் என்பது தனிமனிதனிடம் இருந்துதான் தோன்ற முடியும். ஆனால் இந்தியாவில் தனிமனிதனே இல்லை. அதனால் இங்கு முழுமையான காதலும் சாத்தியமில்லை எனலாம்.

இந்திய சமூகம் ஐரோப்பிய சமூகத்தைப் போன்று தனிமனிதர்களால் ஆனது அல்ல.

இங்கு குடும்பத்தை மறுக்காமல் ஒரு சுதந்திரமான காதல் என்பது சாத்தியமே இல்லை. இதை ஆங்கில மற்றும் இந்தியக் காதல் படங்களின் அணுகுமுறை மாறுபாட்டைக் கொண்டு விளக்க முடியும். ஹாலிவுட் காதல் படங்களில் ஆரம்பத் தில் காதலுக்கு எதிரியாக அப்பாவோ குடும்பமோ இருந்தார்கள். பின்னர் நவீன ஹாலிவுட் படங்களில் ஒரு நாள் சட்டென்று அப்பா வில்லன் காணாமல் போனார். ஆக, காதல் நிறைவேறுவதில் உள்ள தடையை விடுத்து காதலிப்பதில் உள்ள சிக்கல்கள் பரஸ்பர குழப்பங்கள், ஆளுமை பொருத்தமின்மைகள், ஒன்றுக்கு மேற்பட்ட வர்களில் யாரைத் துணையாகத் தேர்வது போன்ற குழப்பங்கள் ஆகியவற்றை ஹாலிவுட் பேச ஆரம்பித்தன என்கிறார் ராபர்ட் மெக்கீ தனது ஸ்டோரி என்கிற நூலில். அதாவது அப்பா காதலுக்கு வில்லனாகாமல் இருந்ததால் காதலுக்குக் காதலே எதிரி யாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

டஸ்டின் ஹாப்மேன் நடித்த Graduate எனும் ஒரு பிரபல படம். ஒரு பணக்காரக் குடும்பத்துப் பையன். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு அடுத்து என்ன பண்ணுவது என்ற குழப்பத்தில் இருக்கி றான். அவனுக்கு ஒரு குடும்ப நண்பரின் மகளை மணமுடித்து வைக்க திட்டமிடுகிறார்கள். அவனும் அவளைக் காதலிக் கிறான். ஆனால் காதலுக்கு பெண்ணின் அம்மா கடுமையாக எதிர்க்கிறார். காரணம், பையனைப் பிடிக்கவில்லை என் பதோ அந்தஸ்து குறைவு என்பதோ அல்ல. பெண்ணை ஹீரோ பார்க்கும் முன்னரே பெண்ணின் தாயாருக்கும் பையனுக்கும் ஒரு கள்ள உறவு ஏற்படுகிறது. பிறகு இருவரும் பிரிந்துவிடுகிறார் கள். பின்னர் தன் மகள் அவனைக் காதலிக்கையில் தாய் அவனை ஒழுக்கங்கெட்ட வனாகப் பார்க்கிறார். பொறா மையும் கோபமும் சேர்ந்து மூர்க்கமாக எதிர்க்கிறார். அவரால் வெளிப்படையாக மகளிடம் காரணத்தைச் சொல்லவும் முடியவில்லை.

இப்படியான ஒரு காதல் கதையை இந்திய சினிமாவில் பேச முடியாது. கட்டற்ற காதல் ஏற்கப்படுகிற ஒரு சமூகத்தில்தான் இத்தகைய சிக்கல்கள் ஏற்படும் என வில்லை. அதை வெளிப்படையாக ஏற்காத இந்தியாவிலும் இதே கதை அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் கட்டற்ற காதலை ஏற்காத பட்சத்தில் இதை ஒரு பொது நீரோட்ட விவாதத்திற்குக் கொண்டுவர முடி யாது. தற்சமயம் வந்துள்ள "ஆதலினால் காதல் செய்வீர்" படம் உள்ளிட்ட பல காதல் படங்கள் குடும்பத்தின் வரையறைக்குள் நின்றுதான் காதலையும் அதன் பிரச் சினைகளையும் சித்தரித்துள்ளன. ஹாலிவுட் படங்களைப் போல இங்கு காதலுக்கு வில்லன் இல்லாத நிலை இல்லை. இங்கு இன்றும் அப்பாக்கள்தாம் காதலுக்கு வில்லன்கள். நாம் என்னதான் உலக சினிமா பாணியைப் பின்பற்றினாலும் பழைய கறுப்பு வெள்ளை ஹாலிவுட் காதல் கதைகளின் காலத்தில்தான் இன்றும் நிற்கிறோம். இது நம் சினிமாவின் குற்றம் அல்ல. உண்மைக் காரணம் ஒரு நவீன சமூகமாக நாம் அடைந்த தேக்கம்தான்.

சேரனைக் கடுமையாக விமர்சித்த இடதுசாரி அல் லது மாற்றுச் சிந்தனையாளர்கள் ஒரு லட்சியவாத தரப்பு மட்டும்தான். வணிக சினிமா என்னதான் லட்சியங்களைப் பேசினாலும் இறுதியில் பொதுமக்கள் நம்புகிறதைத்தான் தீர்வாக முன்வைக்கும்.

அதனாலே இந்தியா குறித்த ஒரு சமூகவியல் குறுக்குவெட்டு சித்திரத்தை, மாற்றுச் சிந்தனையாளர்களின் படைப்புகளில் அல்ல, வணிக சினிமா சித்தரிப்புகளில்தான் காண முடியும். நம்முடைய சிறந்த காதல் படங்களின் ஒரு பட்டியலை எடுத்துப் பாருங்கள். அவை காதலின் துரோகம் அல்லது கைவிட லைச் சொல்லும் சோக காவியங்களாகத்தான் இருக்கும். ஹாலிவுட் படங்களைப் போல் இறுதிக் காட்சியில் பட்டவர்த்தனமாகக் காதலியை கட்டிப்பிடித்து உதட்டை கவ்வி காதலை நிறைவடைய வைப்பதோடு நம் காதல் படங்கள் முடிவதில்லை. நம்முடைய அமர காதல் காவியங்களைப் பார்க்கிற ஒரு வெளிநாட்டுக்காரருக்கு ஒருவேளை இந்தியாவில் யாரும் வெற்றிகரமாகக் காத லித்து வாழ்வதே இல்லையோ என தோன் றும். ஆனால் அதுவல்ல எதார்த்தம்.

abilash%20(1).jpg

'துள்ளுவதோ இளமையில் இருந்து "காதல்", "ஆதலினால் காதல் செய்வீர்" வரை காட்டப்படுவது, காதலித்து சேர்ந்து வாழ்வது மிக சிக்கலானது என நம் சமூகம் பொதுவாக நம்புகிறது என்றுதான். ஆனால் எதார்த்தத்தில் நகரங்களில் எத்தனையோ பேர் காதலித்து யார் ஆதரவும் இன்றி சுமுக மாக வாழ்கிறார்கள். உண்மையில் ராம தாஸால்கூட காதல் திருமணங்கள் மரபான திருமணங்களை விட அதிகமாகத் தோல் வியைத் தழுகின்றன என புள்ளிவிபரத்துடன் நிரூபிக்க முடியாது. பல இளைஞர்கள் திருமணத்துக்கு முன்னரே பாலுறவை சுகிக்கிறார்கள் என்பதுதான் புள்ளிவிபரம்.

இவர்கள்தாம் மிக சாதாரணமாக இன்னொரு துணையைக் கண்டடைந்து மணம் புரிந்து வாழ்கிறார்கள். உண்மையில் சினிமாவில் காட்டுவது போல இன்றைய தலைமுறைக்கு செக்ஸ் அத்தனை சிக்கலானது அல்ல. இன்றைய தலைமுறைக்கு செக்ஸ் பல்வேறு பொழுதுபோக்குகளில் ஒன்று. சுசீந்திரன் தன் படத்தில் பேசுவது போன தலைமுறையைச் சேர்ந்த ஒரு கிராமத்து ஆளின் செக்ஸ் குறித்த அச்சங்களும் சஞ்சலங்களும்தான். ஆனாலும் சுசீந்தரனின் அச்சங்களும் குழப்பங்களும் நம் தமிழ் சமூகத்துக்கு உள்ளவைதான். அதனால்தான் அப்படத்தை அறிவுஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் எதிர்த்தாலும் வெகுமக்கள் தரப்பு முழுமையாக ஏற்றுக்கொண்டது.

அதாவது நம் இளைய தலைமுறையை வர்க்கரீதியாய் பிரித்தோமானால் மத்திய, கீழ்மத்திய தட்டைச் சேர்ந்த கணிசமான தமிழர்கள் இன்னும் போன தலைமுறையில் தான் இருக்கிறார்கள். அவர்களால் "சூது கவ்வும்" என எளிதில் இந்தப் பிரச்சினையை ஒரு விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் அவர்கள் "ஆதலினால் காதல் செய்வீரின்" முடிவை ஏற்றுக்கொள் கிறார்கள். அதனால்தான் அவர்கள் ராமதாஸின் காதல் நாடகம் எனும் சொல்லாக்கத்தை வெளிப்படையாக மறுக்கத் தயங்குகிறார்கள். உண்மையில் நவீன மாற்றுச் சிந்தனையாளர்கள் சுசீந்திரன், ராமதாஸை அல்ல, இந்த மக்களைக் கண்டுதான் பதற்றப்பட வேண்டும். இந்த மக்கள்தாம் இந்தியா. இந்த மக்களின் பிரதிநிதிதான் சேரன்.

ஒருவன் தனிமனிதனாக அங்கீகரிக்கப்பட சுயசம்பாத் தியம் வேண்டும். அமெரிக்காவில் துரித உணவு கலாச் சாரத்தால் அது அறுபதுகளிலேயே நிகழ்ந்தது.

கே.எஃப்.ஸி, மெக்டவல்ஸ் போன்ற நிறுவனங்கள் கணிசமான அளவில் தம் கடைகளில் பள்ளிக் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தின. இக்குழந்தைகளுக்கு தம் தேவையை நிவர்த்தி செய்யும் அளவுக்கான நல்ல சம்பளத்தை பகுதிநேர வேலை மூலம் நல்கின. இள மையில் சம்பாதிக்கிற ஒரு சமூகம் தான் தன்னம்பிக்கையுடன் தன்னை தனிமனிதனாக அடையாளம் காண முடியும். ஆனால் இங்கு ஒரு நகரத்தில் கூட கல்லூரி சான்றிதழ் வாங்காத நிலையில் உள்ள இளைஞனுக்கு வெறும் நாலா யிரம் ரூபாய்தான் பகுதிநேர சம்பளமாகத் தருகிறார்கள். இங்கு ஐ.டி. துறை நிலைபெற்ற பின்தான் பொருளாதார சுதந்திரம் அடைந்த இளைஞர்கள் தோன்றினார்கள். அவர்களால் இருபத்தைந்து வயதுக்குள் சுயமாய் வீடு வாங்கி கல்யாணம் பண்ண முடிந்தது. ஆனால் அவர்கள் ஒரு சிறுபான்மைதான். இன்றும் கணிசமான தமிழ் இளைஞர்களுக்குக் காதல் என்ன திருமணமே முப்பது தாண்டின பின்னரும் பகற்கனவாகத்தான் இருக்கிறது. தாமினி முதலில் அப்பாவுக்கு எதிராக வழக்கு தொடுத்து பின்னர் இப்போது மீண்டும் அப்பாவுடன் போவதாக தெரிவித்திருப்பது ஒரு தனிமனிதராக அவர் அடைகிற சஞ்சலங்களைத்தான் காட்டுகிறது.

"பெத்தவன்" கதையில் இமயம் இதை அழகாகத் தொட்டுக் காட்டி இருப்பார். வருடக்கணக்காக அப்பெண் அப்பா மற்றும் ஊரின் எதிர்ப்பை தாக்குப் பிடித்து காதலனுடன் போகும் மன உறுதியுடன் இருப் பாள். ஆனால் அப்பா இறுதியில் காதலை ஏற்றுக் கொண்டு அத்தனை நகை பணத்தையும் கொடுத்து ஓடிப் போகச் சொல்லும்போது அப்பெண் காதலனை நிரா கரித்து அப்பா போதும் என தடாலடியாக மாற்றிக் கூறு வாள் அல்லது சாதி மக்கள் சொல்வது போல் விஷம் தந்து தன்னைக் கொன்று விடும்படி மன்றாடுவாள். ஏன் அப்படி? எதிர்ப்பின் முனையில் இருந்து தனிமனித உரிமையைக் கோருவது எளிது. ஆனால் எதிர்ப்பு கனிந்து ஒரு தனிமனிதனாக குடும்பமா சமூகமா அல்லது காதலா என முடிவெடுக்கும் தருணம் வரும் போது அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்துவது மிக மிக சிரமம்.

நம் பெண்கள் ஒட்டுமொத்த சமூகமா தனிமனிதனா என்றால் சமூகம் (அதாவது சாதி வழியிலான குடும்பம்) போதும் என்று தான் பெரும்பாலும் முடிவு செய்வார்கள்.

திவ்யாவும் தாமினியும் நீதிமன்றத்தின் முன் தம் தனிமனித உரிமையான காதலை விட்டுக் கொடுக்கத்தான் துணிந்தார்கள். கடும் சமூக அழுத்தத்தின் முன் கௌதம் மேனன் மற்றும் சசிகுமாரின் காதலர்களும் தராசின் இதே பக்கம்தான் சாய்கிறார்கள். ஒரு தனிமனிதனாக முடிவெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் கூட அதை ஏற்பது மிக மிக சிரமம். குடும்பத்தை அறுத்தெறிவது, சமூகத்தை அறுத்தெறிவது ஒரு இந்திய மனதுக்கு எளிதல்ல. "காதலுக்கு மரியாதை" என்பது காதலிக்கும் உரிமையை மீண்டும் சமூகத்திடம், சாதிக் கட்சியிடம், சமரச மத்தியவர்க்க குடும்ப அமைப்புகளிடம் வழங்குவது தான். இந்தக் குழப்பமும் சிக்கலும் வேண்டாம் என்று தான் இன்றைய தலைமுறை பெரும்பாலும் சொந்த சாதிக்குள்ளே காதலித்து மணமுடித்து "நாங்களும் காதலித்தோம். ஆனால் குடும்பத்தையும் எதிர்க்கவில்லை" என்று ரெண்டு போஸ்டிலும் கோல் போடுகிறார்கள்.

அடுத்து நாம் பெற்றோரின் பக்கம் இருந்து பார்ப்போம். சேரன் தன் மகளின் காதலன் ஒரு "பொறுக்கி" என்பதால் எதிர்ப்பதாய் சொல்லுகிறார். இது Graduate படத்தில் மாமியார் எடுக்கும் நிலைப்பாடுதான். நாயகன் தன்னைக் காதலிக்கும் வரை சரி, ஆனால் அவன் தன் மகளை மணப்பதை ஒருநாளும் ஏற்க முடியாது.

அத்தருணம் அவன் "பொறுக்கியாக" மாறிவிடுகிறான். அப்படி என்றால் அவனுடன் உறவு கொண்ட மாமியார் பொறுக்கி இல்லையா? சந்துரு பண்ணியதாய் கூறுகிற குற்றங்களை எந்தத் தகப்பனும் பண்ணியதில்லையா? நாமெல்லாம் சாமியார்கள், மற்றவர்கள் "பொறுக்கிகளா"? ஒரு பொறுக்கி (சேரனைச் சொல்லவில்லை) தகப்பனாய் இருக்கலாம் ஆனால் கணவனாய் வரக்கூடாதா? Graduate படத்தின் இறுதியில் காதலன் தன் அம்மாவுடன் உறவு கொண்டதை அறிந்தும் அவள் மன்னித்து அவனை ஏற்கிறாள். காதலில் இப்படி ஒரு குருட்டுத்தனம் உள்ளது. நம் தேர்வு எப்போதும் பிறருக்குத் தவறாகத் தெரியும். தம் பிள்ளைகள் எப்படி தமக்குத் தப்பாகப் படுகிற ஒருவனை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பெற்றோர்களுக்கு ஒரு மீளா புதிராகவே இருக்கிறது.

சரி, ஒரு மோசமான ஆணை அல்லது பெண்ணைக் காதலிக்கத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு உண்டா? உண்டு, ஆனால் இல்லை என்றுதான் பதிலளிக்க முடியும். ஒரு பெண்ணுக்குத் தன் காதலன் வேறு சாதியைச் சேர்ந்தவனாகவோ, குடிகாரனாகவோ, உதவாக்கரையாகவோ இருப்பது ஏற்புடையதாக இருக்கலாம். அதே வேளை ஒரு அப்பா அல்லது அம்மா வுக்கு அந்த முடிவை எதிர்க்கிற உரிமையும் உண்டுதான். ஏனென்றால் நாம் உளவியல் பூர்வமாக அப்பா அம்மாவை சார்ந்துதான் இறுதி வரை இருக்கிறோம். நம் குடும்ப அமைப்பும் வாழ்க்கை முறையும் அப்படிப்பட்டது. காதலிக்கும்போது மட்டுமல்ல, திருமணத்துக்குப் பிறகும்கூட பெற்றோரின் பங்களிப்பு ஏதாவது ஒரு விதத்தில் இருந்துகொண்டுதான் இருக்கும். "பெத்தவன்" கதையில் அப்பெண் வளர்ந்தவளாக இருந்தாலும் ஒரே நொடியில் வருடக்கணக்கான போராட்டத்தை மறந்து தன் காதலனைக் கைவிடத் துணிகிறாள். உளவியல் பூர்வமாக அவள் என்றும் அப்பாவின் கைக்குழந்தை தான்.

அக்கதையில் இன்னொரு நுணுக்கமும் அழகாக இருக்கும். தன் பெண் ணைக் காதலனின் உறவுக்காரனுடன் அனுப்பிவிட்டு அப்பா காதலனுடன் செல்போனில் பேசுவார். அப்போது அவன் அழுவான். அவன் ஒரு போலீஸ் எஸ்.ஐ. அவனிடம் அப்பா சொல்லுகிறார், "அழுவாத. உங்க அப்பன் பேர காப்பாத்து" என்று. இரண்டு ஊரை மோத விடுகிற அளவுக்குத் துணிந்து காதலிக்கிற அந்த போலீஸ் அதிகாரியான இளைஞனும் இதேபோல் ஒரு கைக்குழந்தைதான். அவனுடைய அடையாளம்கூட குடும்பத்தில்தான் இருக்கிறது. அவன் போலீஸ் வேலையில் பேர் வாங்குவது அல்ல, அப்பா பேரைக் காப்பாற்ற வேண்டியதுதான் பிரதானம். நம்முடைய குழந்தைகள் இப்படியான உளவியல் பொருளாதார சார்பு நிலையில் இருக்கையில் பெற்றோர் காதல் முடிவில் தலையிடத்தான் செய்வார்கள்; அவர்களுக்கு அந்த "உரிமை" உண்டுதான்.

இது மிக குழப்பமான ஒரு நிலை. ஒருபுறம் நாம் பொருளாதார ரீதியாக மேம்பட்டுக் கொண்டே இருக்கிறோம். இன்னொருபுறம் மிக அதிகமான வளர்ச்சியை அடைந்த உத்தரப் பிரதேசம் போன்ற இடங்களில்தான் கட்டப் பஞ்சாயத்துகள் நடத்தி கௌர வக் கொலைகளைச் சர்வசாதாரணமாக செய்கிறார்கள். பண்பாட்டு, உளவியல், அரசியல் அளவில் நாம் நவீனப்பட மிகவும் தயங்குகிறோம். தனிமனித உரிமை, குடிமை சமூகம் போன்ற கருத்தாக்கங்கள் நமக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

ஜனநாயக விழுமியங்களை நம்புகிறவர்களும் காதலை எதிர்ப்போர் எல்லாம் ராட்சசர்கள் என முரட்டுத்தனமாக நினைக்காமல் எதிர்த் தரப்பையும் புரிந்துகொள்ள முயல வேண்டும். புரிந்துகொள்வதும் ஏற்பதும் வேறு வேறு. இந்த வித்தியாசம் புரிந்தால் சேரனை நாம் ஒரு காதல் எதிரியாகக் கருத மாட்டோம். எதிர்த்தரப்பை புரிந்துகொள்ளும் பட்சத்தில்தான் இங்கு ஒரு விவாதம் சாத்தியமாகும்.

காதல் திருமணத்தின் நன்மை தீமை பற்றிப் பேசுவது நம்மை எங்கும் கொண்டு போய் சேர்க்காது. நம் குழந்தைகளுக்கு எந்தளவுக்கு சுதந்திரம் தரலாம் என நாம் யோசிக்க வேண்டும். அப்பாவுக்குப் பொறுக்கியாக தெரிகிறவன் மகளுக்குத் தேவனாகத் தோன்றலாம். இதில் எது உண்மை என்பதல்ல. ஒருவரைத் தம் நம்பிக்கைக்கு ஏற்றபடி முடிவெடுக்க எந்தளவுக்கு அனுமதிக்கலாம் என நாம் தீர்மானிக்க வேண்டும். பெற்றோர்கள் எடுக்கிற எத்தனையோ முடிவுகள் தவறாகப் போகின்றன. ஆக, யாரும் இங்கு முழுக்க பிழையாகாத முடிவுகள் எடுக்க முடியாது.

ஒரு குழந்தை சுயமாய் முடிவெடுத்து தவறாகப் போவதற்கும் நாம் அனுமதிக்கலாமே! வளர்ந்த பின் நம் குழந்தைகள் முழுக்க தனிமனிதர்களும் அல்ல, குழந்தைகளும் அல்ல. இடைப்பட்டு தலைப்பிரட்டை போல் இருக்கிறார்கள். இந்த சமூகம் முழுக்க நவீனப்படும் வரை அவர்களுக்குப் பெற்றோரின் ஆதரவும் வேண்டும், சுயமாய் முடிவெடுக்கவும் வேண்டும். அதை எப்படிச் செய்ய என்று உங்களுக்கும் புரியவில்லை, அவர்களுக்கும் தெரியவில்லை.

உண்மையில் இச்சமூகத்தில் காதலிப்பதுதான் மிக மிக எளிது. காதலிப்பதைத் தவிர வேறு எல்லாம் ரொம்ப ரொம்ப குழப்பம். காதலித்த பின்தான் நாம் அதை உணர்கிறோம்.

 

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6352

Edited by கிருபன்

தான் வாசித்த  பல வித்தியாசமான விடயங்களை இங்கு எம்முடன் பகிர்ந்து கொள்ளும் கிருபனுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாய் காதலும், அதன் முடிவுகளும் ஒரு வாய்ப்பாட்டுக்குள் அடங்குவதில்லை, ஒருவருடைய அனுபவங்களும், எண்ணங்களும் அடுத்தவருக்குப் பொருந்துவதில்லை. மாறாக பிக்காசோவின் ஓவியம் போன்றது. பார்ப்பவர்கள் தமக்கு விளங்கிய ஒன்றை நினைத்துக்கொண்டோ அல்லது குளம்பிக்கொண்டோ போகவேண்டியதுதான்!!

 

நன்றி கிருபன்!

உண்மையில் இச்சமூகத்தில் காதலிப்பதுதான் மிக மிக எளிது. காதலிப்பதைத் தவிர வேறு எல்லாம் ரொம்ப ரொம்ப குழப்பம். காதலித்த பின்தான் நாம் அதை உணர்கிறோம்

 

 

பகிர்வுக்கு நன்றி கிருபன். கம்யூனிச சித்தாத்தங்களில் அதிக ஈடுபாடோ?? உங்கள் கருத்துகளில் பகிர்வுகளில் அதிகம் தெரிகிறது.

 

இந்தச் சமூகத்தில் காதலிப்பது அவ்வளவு எளிதாகவா உள்ளது ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.