Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பிரமணியசுவாமி நகர்த்தும் காய்கள் சிறீலங்காவுடன் கைகோர்ப்பாரா மோடி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கொங்கிரஸ் அரசுடன் கூட்டுச் சேர்ந்து தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட சிறீலங்கா அரசு, தற்போது பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

 

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் கொங்கிரஸ் படுதோல்வியடைந்து, பா.ஜ.க. வெற்றி பெறும் என்று பரவலாக நம்பப்படும் அதேவேளை, கருத்துக் கணிப்புகளும் இதனை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

mahintha%20samy.jpg

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் தமது கைக்குள் போட்டுக்கொள்ளும் நடவடிக்கையில் சிறீலங்காப் பேரினவாத அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. ஏற்கனவே, பா.ஜ.க. தலைமை மகிந்தவை இந்தியாவிற்கு அழைத்து செங்கம்பள வரவேற்புக் கொடுத்திருந்தது. இந்நிலையில், நரேந்திரமோடியின் ஆதரவு சிறீலங்கா அரசிற்கு கிடைக்கும் என்றே நம்பப்படுகின்றது.

 

நரேந்திர மோடிக்கும் சிறீலங்காவிற்கும் இடையிலான இணைப்புப் பாலமாக சுப்பிரமணிய சுவாமி இயங்கிவருகின்றார். ஜனதா கட்சியின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் கடுமையாகக் கொச்சைப்படுத்தி வருவதுடன், சிறீலங்கா அரசுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றார். அடிக்கடி சிறீலங்கா சென்று மகிந்த ராஜபக்ச உட்படப் பல்வேறு சிங்கள மற்றும் தமிழ் ஒட்டுக்குழுத் தலைவர்களுடன் சந்திப்புக்களையும் மேற்கொண்டு வருபவர். 

 

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இப்போதே அங்கு விறுவிறுப்படைந்துள்ளன. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்திவந்த சுப்பிரமணியன் சுவாமி, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என உறுதியாகத் தெரிந்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் பா.ஜ.க.வில் தன்னை இணைந்துகொண்டார். 

 

கடந்த செப்டெம்பர் முதல் வாரம் சிறீலங்காவில் நடைபெற்ற சிறீலங்கா இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்த 66 வெளிநாட்டுப் பிரதிநிதிகளில் 20 பேர் இந்தியர்கள். அதில் ஒருவராக இந்த சுப்பிரமணியன் சுவாமியும் கொழும்புக்குச் சென்றிருந்தார். இம்மாநாட்டின் பின்னர் கடந்த மாதம் 5ம் திகதி சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் சிறீலங்கா உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்திய சுப்பிரமணிய சுவாமி, இந்தியாவின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பிருக்கும் என்று நம்பப்படும் நரேந்திர மோடியுடன் சிறீலங்கா உறவைப் பலப்படுத்திக்கொள்ள அனைத்து வழிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதாக உறுதியளித்திருந்ததாகவும் இதற்கான காய்களை நகர்த்தி வருவதாகவும் தெரியவருகின்றது.

 

இந்நிலையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தற்போது அம்பலத்திற்கும் வந்துள்ளது. நரேந்திர மோடியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாகக் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த ஊடகம்  தெரிவித்துள்ளதாவது, கடந்தவாரம் நடந்த ஒரு சம்பவம், பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடியுடன் சிறீலங்கா அரசாங்கம் இணக்கத்தை ஏற்படுத்த முனைகிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த வாரம் உலங்குவானூர்தி ஒன்று குறிப்பிட்ட பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. தற்போது எடுக்கப்பட்டு வரும் புதிய படமான ‘பொம்பே வெல்வெட்’ ஹிந்தித் திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களைத் தாங்கிய விமானப் படையின் பெல்-212 உலங்குவானூர்தி தொம்பேயில் உள்ள தேவி பெண்கள் பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டதாக செய்திகளில் கூறப்பட்டிருந்தது.

 

உலங்குவானூர்த்தி கண்டியில் இருந்து காலி நோக்கி, பொலிவூட் நட்சத்திரங்களான, ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் பயணம் செய்தனர். அவர்கள், இன்னொரு உலங்குவானூர்தி மூலம், கொக்கலவுக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர் என்றும் செய்திகளில் கூறப்பட்டிருந்தது. அதிலிருந்த பயணிகள் தொடர்பாக, விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் அன்ரூ விஜேசூரியவிடம், மேலதிக விபரங்களைக் கேட்டபோது, உலங்குவானூர்தியை வாடகைக்கு அமர்த்தியிருந்த தனியார் நிறுவனம் குறித்த விபரங்களை வழங்க மறுத்து விட்டார். ஆனால், ரன்மிகிதென்ன தொலைக்காட்சிப் படப்பிடிப்புக் கிராமத்தில் படமாக்கப்பட்டு வரும், ஹிந்திப் படத்தில் நடித்து வரும், ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரே அதில் இருந்ததாக ஊடகங்களில் தகவல் பரவியது.

 

சிறீலங்காவோ, இந்தியாவோ இந்தச் செய்தியை உறுதிப்படுத்தவோ, நிராகரிக்கவோ இல்லை. ஆனால், அந்த உலங்குவானூர்தியில், குறிப்பிட்ட திரை நட்சத்திரங்கள் இருக்கவில்லை. உண்மையில், அதில் இருந்தது ஒரு வேறொரு முக்கிய பிரமுகர். அவர் ஏன் சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டார்? அந்த உலங்குவானூர்தியில் இருந்த மர்மமான பயணி, சிவ்சேனாவின் புதிய தலைவர் உத்தவ் தாக்கரே. எதிர்காலத்தில் அமையவுள்ள பா.ஜ.க. அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிதான் சிவ்சேனா. இவரது தந்தை பால் தாக்கரேயினால், உருவாக்கப்பட்ட கடும்போக்குவாத சிவ்சேனா கட்சியின் தலைவராக, உத்தவ் தாக்கேரே பொறுப்பேற்றார். இவர் பயணம் செய்த உலங்குவானூர்தி இயந்திரக் கோளாறினால், தொம்பேயில் அவசரமாகத் தரையிறங்காது போயிருந்தால், தாக்கரேயின் பயணம் இன்னொரு இரகசியமாகவே இருந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்னர், உத்தவ் தாக்கரே, தனியார் ஜெட் ஒன்றின் மூலம், சிறீலங்காவுக்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

 

கோடீஸ்வர அரசியல்வாதியான அவர், ஒளிப்படங்களைப் பிடிப்பதில் தீவிர ஆர்வம் உள்ளவர். அவரது ஒளிப்படக் கருவிகளை, மீட்பு உலங்குவானூர்திக்கு மாற்றியதைக் கண்ட ஊடகவியலாளர்கள், ‘பொலிவூட்’ நட்சத்திரங்களே அதில் பயணம் செய்ததாக தவறாக கருதியிருந்தனர். வில்பத்து தேசிய பூங்காவில், ஒளிப்படங்களை எடுப்பதற்கான முன்னைய பயணத்தின் போது உத்தவ் தாக்கரே, சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் சந்தித்தார் என்பது இப்போது புரிந்துள்ளது.

 

எதிர்கால இந்திய அரசுக்கும், சிறீலங்கா அரசுக்கும் பாலம் கட்டும் நோக்கிலேயே தாக்கரே இந்த இரகசிய பயணத்தை மேற்கொண்டதாக ஊகிக்கப்படுகிறது. எனினும் இந்தியா, தாக்கரேயின் பயணத்தை உறுதிப்படுத்தவோ, நிராகரிக்கவோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001ல், குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, அப்போது, சட்டசபையில் உறுப்பினராகக் கூட அங்கம் வகிக்காத மோடி, மேலிடத் தலைவர்களால் நேரடியாக முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன் பின், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்வரான பின், கட்சி வளர்ச்சி மட்டுமின்றி, மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்திய மோடி, 2002, 2007 மற்றும் 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில், அடுத்தடுத்து, பெரும் வெற்றி பெற்றார். குஜராத் வரலாற்றிலேயே, நீண்ட காலம் முதல்வராக இருக்கும் பெருமையையும் பெற்றுள்ளார்.

 

நாட்டு மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள மோடியை, சமூக வலைதளமான, ‘டுவிட்டரில்` 16 இலட்சத்து, 94 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். ஆனாலும், தீவிர இந்துத்துவவாதியான இவர் குஜராத்தில் நடந்த முஸ்லீம்கள் படுகொலைகளுக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்று குற்றம்சாட்டப்படுகின்றது. குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரத்தை தொடர்ந்து, ஏராளமான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதனை உலக நாடுகள் பலவும் கடுமையாகக் கண்டித்தன. இதனால்தான், அமெரிக்கா இவருக்கு விசா கொடுக்கவும் இன்றுவரை மறுத்து வருகின்றது.

 

இதேவேளை, இந்தியாவிலும் மோடிக்கு கடுமையான எதிர்ப்பு நிலவுகின்றது. குறிப்பாக தமிழகக் கட்சிகள் மோடிக்கு ஆதரவு வழங்கத் தயங்கிவருகின்றன. எனினும் கொங்கிரஸ் கட்சியைக் கடுமையாக எதிர்ப்பதால் அ.தி.மு.க உட்பட தமிழகக் கட்சிகள் சில பா.ஜ.க.விற்கு ஆதரவு வழங்கவேண்டிய நிலையில் உள்ளன. இக்கட்சிகளின் ஆதரவைப் பெறுவதாயின் சிறீலங்காவுடன் வெளிப்படையாக உறவு வைத்துக்கொள்வது மோடிக்கு ஆபத்தாகவே முடியும். எனவே, சிறீலங்காவிற்கு மோடி தனது ஆதரவை தேர்தல் முடியும் வரை வெளிப்படையாகத் தெரிவிக்கமாட்டார் என்றே நம்பப்படுகின்றது.

 

நன்றி: ஈழமுரசு

 

http://www.sankathi24.com/news/34075/64//d,fullart.aspx

மோடி வென்றால் பொருளாதார ஊழல்களுடன் மத்திய அரசை காங்கிரஸ் நடத்தியது மாதிரி நடத்தமுடியாது. இதனால் மகிந்தவுடன் காங்கிரஸ் வைத்திருந்த ஐக்கியம் சாதகமாகாது. சு.சாமிக்காக மோடி தமிழ் நாடு முழுவதையும் கைவிடத்தயாராக வேண்டும். அப்படி நடந்தால் ஐ.நா மீது தமிழ் மக்கள் தமது பார்வைத்திருப்ப வேண்டியதுதான்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.