Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி பிரதமராகக்கூடாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Narendra-modi-336x243-300x216.jpg“இணக்கம் மிகுந்த வாழ்க்கை, வந்தாரை வரவேற்கும் இன்முகம் – இவற்றுக்கு அடையாளமானவர்கள் குஜராத் மக்கள்.” -முப்பது ஆண்டுகளுக்கு முன் எனது நண்பனோடு குஜராத்திற்கு அவனது தொழில் தொடர்பாக ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஒரு ஆசிரியர் இப்படிச் சொல்லி வழியனுப்பி வைத்தார். அந்த மாநிலத்தில் அதை நாங்கள் நேருக்கு நேர் அனுபவித்தோம். பலித்தானா என்ற ஊரில் நள்ளிரவு சென்று இறங்கியபோது, அந்த நேரத்தில் ஒரு கூலித்தொழிலாளி ஒரு குதிரை வண்டிக்காரரிடம் எங்களுக்காக அவர்களது மொழியில் பேசி, தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் வந்து, வண்டிக்காரர் சரியாகக் கொண்டுவந்து சேர்த்தாரா என்றும், விடுதி வசதியாக இருக்கிறதா என்றும் விசாரித்தார். அவருக்கு நாங்கள் கொஞ்சம் பணம் கொடுக்க முயன்றபோது வாங்க மறுத்துவிட்டுச் சென்றார்.

காந்தி பிறந்த மண் என்ற அளவிலேயே குஜராத் பற்றிய புரிதல் இருந்தபோது, அங்கே காந்தியின் மத நல்லிணக்கக் கொள்கைக்கு நேர்மாறான பாரதிய ஜனதா கட்சி  ஆட்சியமைத்தபோது, அந்த நடப்பு நிலையை ஏற்பது சற்று கடினமாகத்தான் இருந்தது. அந்த அளவுக்கு குஜராத் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப்போன காங்கிரஸ் கட்சி பற்றிய கோபமும், இரண்டிற்கும் மாற்றான முற்போக்கு சக்திகள் அங்கே வலுவாக வளரவில்லையே என்ற ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டன. இன்று அந்த மாநிலத்தின் முதலமைச்சரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோடி, இன்னும் இரண்டு ஆண்டுகளில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகவே நிறுத்தப்பட இருக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிற நிலையில் என் ஆதங்கம் அதிகரிக்கிறது.

மோடி பிரதமராக வர முடியுமா, முடியாதா என்ற விவாதங்க்ள் நடந்துகொண்டிருக்கின்றன. என்ன நடக்கும் என்று சோதிடம் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றாலும், எது நடக்கக்கூடாது என்று சொல்கிற அக்கறை எனக்கு உண்டு. நாட்டின் பிரதமராக மட்டுமல்ல, குஜராத்தின் முதலமைச்சராகவும் அவர் திரும்பி வரக்கூடாது, அவரது கட்சி மத்தியிலும் ஆட்சியமைக்கக்கூடாது, குஜராத்திலும் மறுபடி ஆட்சி பீடம் ஏறக்கூடாது.

அவரை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பவர்கள் யாரென்று பார்த்தால், ஆகப் பெரும்பாலும் தரையில் கால் வைக்காத நடுத்தர வர்க்க, அதிலும் குறிப்பிட்ட மேலாதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். சென்னையில் எல்.கே. அத்வானி, மோடி இருவருமே கலந்துகொண்ட ‘துக்ளக்’ ஆண்டுவிழாவில் கலந்துகொண்டவர்களைப் பார்த்தாலே இது தெரியும்.

மோடி ஆட்சியில் குஜராத் வேறு எந்த மாநிலத்தோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு முன்னேற்றங்களைச் சந்தித்திருக்கிறது என்பதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். மோடி பிரதமரானால் அதே போன்ற முன்னேற்றம் நாடு முழுவதும் ஏற்படும் என்கிறார்கள். ஆனால், குஜராத்தின் உண்மையான வளர்ச்சி பற்றிய ஆய்வறிக்கைகள் இந்த மிடில் கிளாஸ் மாயைகளை உடைத்தெறிகின்றன.

மோடியே தனது பேச்சுகளிலும் பேட்டிகளிலும் அடிக்கடி குறிப்பிடுவது, குஜராத்தின் தொழில் வளர்ச்சிக்காக தன்னால் அந்நிய நேரடி முதலீடுகளைப் பெருமளவுக்கு ஈர்க்க முடிந்திருக்கிறது என்பதுதான். ஆனால், கடந்த ஆண்டுகளில் குஜராத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம் என்று அவர் கூறுவதில் மிகப்பெரும்பாலும், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து வந்ததுதான். வெளிநாடுகளில் வேலை செய்கிற, தொழில்களில் ஈடுபட்டிருக்கிற குஜராத்திகள் தங்களது வீடுகளுக்கு அனுப்புகிற பணத்தை அந்நிய நேரடி முதலீடாகச் சொல்வது, அதைப்பற்றிய அவரது அறியாமையிலிருந்து அல்ல, மக்களின் அறியாமை மீது அவருக்கு உள்ள நம்பிக்கையிலிருந்துதான்.

ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குச் சென்று திரும்புகிறபோதெல்லாம் இத்தனை ஆயிரம் கோடி முதலீடு அங்கேயிருந்து வரப்போகிறது என்றும் அதற்காக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும் கூறுவது அவரது வழக்கம். அப்படி அவரால் அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளில் அதிகபட்சமாக 15 சதவீதத்திற்கு மேல் வரவில்லை என்று பொருளாதாரத்துறை சார்ந்த ஏடுகள் எடுத்துக்காட்டியிருக்கின்றன.

ஜனவரி 2000 முதல் மார்ச் 2010 வரையில் குஜராத்துக்கு வந்த மொத்த வெளிநாட்டு முதலீடு 28,000 கோடி ரூபாய்தான். இதே காலகட்டத்தில் உ.பி. மாநிலத்திற்கு வந்த முதலீடு 1.02 லட்சம் கோடி ரூபாய். கர்நாடக மாநிலத்திற்கு வந்தது 31,000 கோடி ரூபாய். மத்திய அரசின் தொழில் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைத் துறை ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. தமிழகத்தை விட குஜராத் 3,000 கோடி ரூபாய் கூடுதலாகப் பெற்றிருக்கிறது என்பதை வேண்டுமானால் அவர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்.

அந்நிய முதலீடுகள் பற்றிய தம்பட்டங்களின் பின்னணியில், வெளிநாட்டுத் தொழிற்சாலைகளுக்காக நிலங்களைக் கைப்பற்றுவது, அந்த நிலங்களிலிருந்து விவசாயிகளையும் இதர கிராம மக்களையும் வெளியேற்றுவது, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பல ஆண்டுகள் வரிச் சலுகை அளிப்பது என்ற இணக்க நடவடிக்கைகள் இருக்கின்றன என்று அஹமதாபாத் நகரைச் சேர்ந்த பண்பாடு மற்றும் மேம்பாடு மையத்தின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கூட நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது எனபது உண்மையே. மோடி அரசு, உள்நாட்டு – வெளிநாட்டுப் பெரு நிறுவனங்களுக்காக நிலங்களைக் கைப்பற்றித் தருகிற கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை என்பதே இங்கு கவனிக்கத்தக்கது.

இதனால் சுமார் 50 லட்சம் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துவிட்டு, தங்களது பாரம்பரிய வாழ்க்கைக்கு சம்பந்தமே இல்லாத இடங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு மோடி அரசு செய்தது என்ன? அப்படிப்பட்ட கதியற்ற மக்களிடையே “உங்கள் நிலைமைக்குக் காரணம் இஸ்லாமியர்கள்தான்,” என்று சங் பரிவாரம் தனது குட்டிகளை விட்டுப் பிரச்சாரம் செய்வதற்கும், மோடி அரசின் செயலின்மைக்கும் தொடர்பில்லையா?

பவநகர் மாவட்டத்தில் 270 ஏக்கர் பயிர் நிலத்தைச் சுற்றி திடீரென சுவர் முளைக்கத் தொடங்கியது. சுற்றுவட்டார கிராமங்களின் மக்கள் அது எதற்காக என்று விசாரித்தபோது, கால்நடைகளைத் தடுப்பதற்காக என்று அரசு அதிகாரிகள் பதிலளித்திருக்கிறார்கள். பிறகுதான் மக்களுக்குத் தெரியவந்தது, அது உண்மையில் நிர்மா நிறுவனத்தின் புதிய சிமென்ட் ஆலை கட்டுவதற்காக வளைக்கப்பட்ட நிலம் என்பது. அரசாங்கம் சல்லிசான விலையில் அந்த நிலத்தை நிர்மா நிறுவனத்திற்கு விற்றிருக்கிறது. கிராம மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, பொது விசாரணை ஒன்று நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற விவசாயிகளிடம் ஒரு ஆவணத்தைக் காட்டி அதில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். கூட்டத்தில் கலந்துகொண்டதற்கான பதிவுதான் அது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால், அந்த இடத்தில் சிமென்ட் ஆலை வருவதில் தங்களுக்கு மறுப்பு ஏதும் இல்லை என்று விவசாயிகள் ஒப்புக்கெர்ள்வதாக அந்த ஆவணத்தில் எழுதப்பட்டிருந்திருக்கிறது! இப்படிப்பட்ட மோ(ச)டி வழிகளில்தான் மாநில அரசு தொழில் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறது போலும்.

நிலத்தையும் இழந்து, இருக்கிற நிலத்தில் பிழைப்பை இழந்து இறுதியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் கதையும் குஜராத்தில் மாறுபட்டுவிடவில்லை. கடந்த பத்தாண்டு காலத்தில் அந்த மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் பற்றிய புள்ளிவிவரத்தை தேசிய குற்றச்செயல்கள் பதிவகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் விபத்து மரணங்களும் தற்கொலைகளும் என்ற அந்த ஆவணம், குஜராத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கிறது. அவர்கள் என்ன காதல் தோல்வியாலா தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள்?

ஆனால், வேறொரு பொய்யை மோடி அரசு சொன்னது. 2007 மார்ச் 29 அன்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில், 2005 ஜனவரிக்கும் 2007 ஜனவரிக்கும் இடையே தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 148 என்று அரசு அறிவித்தது. இது தவறான தகவல் என்று மறுப்புத் தெரிவித்தது ஒரு விவசாய அமைப்பு. அது எதிர்க்கட்சிகளின் தலைமையில் உள்ள அமைப்பு அல்ல; மாறாக பாஜக தலைமையிலான பாரதிய கிஸான் சங் (பிகேஎஸ்)! அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் பிரபுல் சஞ்ஜேலியா வெளியிட்ட அறிக்கையில், தன்னுடைய மதிப்பீட்டின்படி குறைந்தது இந்த எண்ணிக்கை 300க்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறினார் (அதன் பின் பாஜக மேலிடம் தலையிட்டதும், பிகேஎஸ் தேசியச் செயலாளர் ஜீவன் படேல், குஜராத்தில் விவசாயிகள் தற்கொலை என்ற பிரச்சனையே இல்லை என்று அடித்துப் பேசியதும் தனிக்கதை).

மோடி ஆட்சி குறித்துக் கட்டப்படுகிற இன்னொரு மாயக் கோட்டை, அது ஊழலற்ற ஆட்சி என்பது. மேற்படி தொழில் வளர்ச்சியின் பின்னணியில், முதலாளித்துவத்தின் உடன்பிறப்பான ஊழல் தாண்டவமாடிக்கொண்டிருப்பதை பல செய்திகள் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. தொடக்கத்தில் ஊழலில்லா நிர்வாகத்திற்கு முன்மாதிரி என்று மோடி அரசாங்கத்திற்கு நற்சான்று அளித்த அன்னா ஹசாரே குழுவினர் கூட இப்போது, இந்தியாவின் ஊழல் மலிந்த மாநிலங்களில் ஒன்று குஜராத் என்று அறிவித்து அந்த நற்சான்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டனர்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், மோடியின் மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி, 58 நீர்நிலைகளில் மீன்பிடிப்பதற்கான உரிமங்களை வெறும் 2.36 கோடி ரூபாய்க்குக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு நீர்நிலைக்கும் 40 கோடி ரூபாய் வரையில் தருவதற்கு சிலர் தயாராக இருந்தும் இப்படியொரு சொற்பத்தொகைக்கு உரிமம் வழங்கப்பட்டதன் நோக்கம், மக்களுக்குக் குறைந்தவிலையில் மீன் கிடைக்கச் செய்வதற்காகவா என்ன? சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் சோலங்கி மீது விசாரணை நடத்துவதற்கு மாநில ஆளுநர் அனுமதியளித்துள்ளார்.

திலிப் சங்கானி என்ற இன்னொரு அமைச்சர் மீதும் இதே போன்ற ஊழல் குற்றச்சாட்டு எழ, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எல்லா அமைச்சகங்களிலும் நைவேத்தியம் இல்லாமல் எந்தக் காரியமும் நடப்பதில்லை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். அமைச்சர்கள் கையெழுத்திடுகிற ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் குறிப்பிட்ட சதவீதம்  முதலமைச்சருக்கான நைவேத்தியப் படையலாக நிர்ணயிக்கப்படுகிறது என்றும், நிர்ணயிக்கப்பட்ட தொகை பல்வேறு தடங்களில் முதலமைச்சருக்குச் செல்கிறது என்றும், எதிர்க்கட்சிகள் அல்ல – ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே புலம்புகிறார்கள். “தொழிலதிபர்களை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் சந்திக்கிறார் மோடி.  நிர்வாக அதிகாரங்களைத் தனது அதிகாரிகள் பொறுப்பில் விட்டிருக்கிறார். இந்த ஏற்பாட்டின் மூலம் அவருக்குத் தொடர்ச்சியாகப் பணம் பாய்வது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.” -இப்படிக் கூறியிருப்பவர் குஜராத் பாஜக அரசின் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல். ஆக, இதிலேயும் மிடில் கிளாஸ் மயக்கம் உடைபடுகிறது.

பெருந்தொழிலதிபர்களுடனான உறவு, அவர்களுக்காக நிலப் பறிப்பு, அதற்காக லஞ்ச நைவேத்தியம், வேலைவாய்ப்பற்ற தொழில் முதலீடு, விவசாய அழிப்பு, ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள், அதிகரிக்கும் சிசு மரணம்… இவையெல்லாம் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் ஆளுகிற மற்ற மாநிலங்களிலும் நடப்பதுதான். மோடியைப் பொறுத்தவரையில் கண்டிப்பாக அவரிடம் மறுபடியும் அந்த மாநில ஆட்சிப்பொறுப்போ, பாஜக-வின் ஒரு பகுதி தலைவர்கள் (வேறு ஆளில்லாமல்) ஆசைப்படுவது போல் மத்திய ஆட்சிப் பொறுப்போ சிக்கிவிடக்கூடாது என்பதற்கு மிக முக்கியமான வேறு காரணங்களும் உள்ளன. அவரையே பிரதமராக்க, பாஜக-வின் மூல இயக்குநரான ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன் என்ற கேள்வியோடு தொடர்புடைய காரணங்கள் அவை.

இந்து மத ஒற்றை ஆதிக்க நாடாக இந்தியாவை மாற்றும் நெடுந்திட்டத்தோடு செயல்பட்டுக்கொண்டிருப்பது ஆர்எஸ்எஸ். இந்துத்துவம் என்றால் அதன் அடியர்த்தம் பிராமணியம். அதாவது சாதிப்பாகுபாடுகளும் பெண்ணடிமைத்தனமும் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடுகளும் விதியின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளுமே. அந்த நெடுந்திட்டத்தை அடைவதற்கான இடைக்கால ஏற்பாடுதான் வர்ண அடுக்கின் மேல்தட்டைச் சாராத பிறரையும் வளர்த்துவிட்டு, அவர்களது செல்வாக்கையும் பலத்தையும் பயன்படுத்திக்கொள்வது. அப்படி முன்னிறுத்தப்படுகிறவர்தான் மோடி. இதில், தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிற அவருடைய சொந்தக் கணக்குகளும் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது ஒன்றும் கடினமானதல்ல.

அதே நேரத்தில், இந்துத்துவ நோக்கத்தை அடைவதில் அவருடைய பக்குவமற்ற வழிமுறைகள் பயனளிக்காது என்ற கோணத்தில் அவரை எதிர்ப்பவர்களும் ஆர்எஸ்எஸ், பாஜக கூடாரங்களில் இருக்கவே செய்கிறார்கள். குஜராத்தின் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சிலர் வெளிப்படையாகவே அவரைத் தாக்கிக் கருத்துக் கூறியிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் தலைமை அவர்களைப் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறது.

மிதவாத இந்துத்துவத் தலைவராக சித்தரிக்கப்படும் பாஜக மூத்த தலைவர் அடல்பிகாரி வாஜ்பேயி கூட, நரேந்திர மோடியின் செயல்முறை கண்டு கடுப்பாகியிருக்கிறார். குஜராத்தில் கோத்ரா ரயில்பெட்டி எரிப்பைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், அவர்களது உடைமைகள் சூறையாடப்பட்டது குறித்தும் இனி நான் எந்த முகத்தோடு வெளிநாடுகளுக்குச் செல்வேன், என்று அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பேயி வெளிப்படையாகவே கூறினார்.  அந்தப் படுகொலைகளுக்குப் பிறகு, மோடியை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட வாஜ்பேயி விரும்பினார் என்றும், பாஜக-வின் மற்ற தலைவர்கள் அதை ஏற்கவில்லை என்றும், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா அண்மையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்தப் படுகொலைகளில் மோடி சம்பந்தப்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. இந்துத்துவக் கும்பல்கள் நேரடியாகவே தாக்குதல்களில் இறங்கின. அவர்களது தூண்டுதலால் அப்பாவிப் பழங்குடி மக்களும், கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்து நகரங்களில் குடியேறியவர்களும் கைகளில் சூலாயுதம் ஏந்தி அந்தக் கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டார்கள்.  முதலமைச்சர் முன் கூடிய காவல்துறை அதிகாரிகளிடம், “முஸ்லிம்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். நீங்கள் தலையிடாதீர்கள்,” என்று அவர் ஆணையிட்டதை, அப்போது அங்கே இருந்த காவல்துறை அதிகாரி சஞ்ஜய் பட் அம்பலப்படுத்தியிருக்கிறார். அவர் இப்போது வேட்டையாடப்பட்டு வருகிறார்.

பக்குவமற்ற முறையில் மோடி இதையெல்லாம் செய்தார் என்று நம்ப முடியாது. ஏனென்றால், அவரது மனதில் மதப்பகைமை குடியேறியிருக்கிறது என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. குஜராத் பள்ளிகளின் பாடப்புத்தகங்களில் மதக்கண்ணோட்டம் புகுத்தப்பட்டது, பல்கலைக்கழகத்தில் சோதிடப்பாடம் சேர்க்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் அத்தகைய சான்றுகளில் சில. காந்தி பற்றிய பள்ளிப் பாடங்களில், அவர் நாதுராம் கோட்ஸேயால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது அடித்துத் திருத்தப்பட்டு அவர் 1948 ஜனவரி 30 அன்று காலமானார் என்று மாற்றப்பட்டது – காந்தி என்னவோ காலரா வந்து காலமானது போல!

2002ம் ஆண்டுப் படுகொலைக் கலவரத்தில் பலியான குடும்பங்களுக்கு உதவித்தொகை அளிக்குமாறு நீதிமன்றம் பணித்ததை ஏற்க மறுத்தவர் மோடி. மத அடிப்படையில் அப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய முடியாது என்று மதச்சார்பின்மைப் போர்வை போட்டுக்கொண்டவர். கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளை மறுபடியும் கட்டுவதற்கு அரசாங்கம் நிதியுதவி செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையையும், அதே போர்வையைப் போர்த்திக்கொண்டு செயல்படுத்த மறுத்தவர்.

அவருடைய ஆட்சியில் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக, மன நிறைவாக இருக்கிறார்கள் என்ற ஒரு பிரச்சாரம் எவ்விதக் கூச்சமும் இல்லாமல் செய்யப்படுவதுண்டு. மத்திய அரசு, சிறுபான்மை மக்களுக்கான கல்வி உதவித்திட்டத்தின் கீழ், குறிப்பாகப் பெண்குழந்தைகளின் கல்விக்காக என ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்கிற நிதியைக் கூட, இப்படிப்பட்ட கல்வி உதவிகளை மத அடிப்படையில் செய்யக்கூடாது, என்று கூறி திருப்பி அனுப்பி வருகிறவர் மோடி.

அவருடைய மனதில் எந்த அளவுக்கு மதக் குரோதம் இருக்கிறது என்பதற்கு இன்னொரு ஆதாரத்தையும் குறிப்பிடலாம். முஸ்லிம் மக்களுடன் தனது சகோதரத்துவத்தைக் காட்டுவதற்காக ஒரு உண்ணாவிரத நாடகம் நடத்தினார் மோடி. அப்போது, ஒரு பெரியவர் தன் கையால் தைத்துக் கொண்டு வந்த குல்லா ஒன்றை மோடியிடம் கொடுத்தார். அதை அணிந்துகொள்ளாமல் தள்ளி வைத்தார் மோடி.

ஏற்கெனவே ஆறரையாண்டுக் கால பாஜக ஆட்சியின்போது மத்திய அரசுக் கட்டமைப்பில் இந்துத்துவ ஆட்களை நியமிப்பது போன்ற கரசேவைகள் நடந்தன. அந்தத் திருப்பணிகள் அரைகுறையாக நின்றுவிட்டன என்பதால், மோடியை பிரதமராக்கி அவற்றை முழுமையாக நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் – பாஜக பீடம் வியூகம் அமைக்கிறது. மன்மோகன் சிங்கின் உலமயமோக பொருளாதாரக் கொள்கைகளால் காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களின் கடும் சினத்திற்கு உள்ளாகியுள்ள நிலையை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வியூகம் அது. மக்களின் விழிப்புணர்வும், மதச்சார்பற்ற ஜனநாயக எழுச்சியும் அந்த வியூகத்தை உடைக்கட்டும்.

(ஆழம் இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்).

 

மோடி பிரதமர் ஆனாலும் அவரால் சிறுபான்மையின மக்களுக்கெதிராய் ஒன்றும் செய்ய இயலாது, அவ்வாறு ஏதேனும் செய்ய முற்படுவாராயின் அதுவே அவரது அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வரும். கடந்த காலத்தின் படிப்பினையை அவர் நன்கு அறிவார். மோடி மதச்சார்பு உடையவர் என்பது தவிர காங்கிரஸிற்கு வேறு ஏதும் பிரச்சார வழிகளே இல்லை. வெளியுறவுக் கொள்கையில் தோல்வி, எல்லை பாதுகாப்பில் தோல்வி, உள் நாட்டுப் பாதுகாப்பில் தோல்வி, பொருளாதார வளர்ச்சியில் தோல்வி, பிராந்தியங்களுக்கிடையே ஸ்ரதிரத்தன்மையை நிலை நாட்டுவதில் தோல்வி. இதுவே காங்கிரஸின் சாதனை. மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? இதைப் பற்றி கட்டுரையாசிரியர் சிந்திக்கவில்லை போலும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.