Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அவசியமில்லை - சுட்டெரிக்கும் உண்மைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அவசியமில்லை - சுட்டெரிக்கும் உண்மைகள்

 
இது பற்றி மூன்று தினங்கள் முன்பாக சுருக்கமாக எழுதியிருந்தேன். நேற்றும் இன்றும் அலுவலகத்தில் நடைபெற்ற காரசாரமான விவாதங்கள், இணையத்தில் தொடரும் வாதப் பிரதிவாதங்கள் ஒரு நீண்ட கட்டுரைக்கான அவசியத்தை உருவாக்கியது.
 
கிரிக்கெட்டை வெறுப்பதால் சச்சினுக்கு விருது அளிப்பதையும் எதிர்ப்பதாக யாரும் கருத வேண்டாம் என்பதால் ஒரு முன்னுரிமையும் தேவைப்படுகிறது.
 
பிஷன் சிங் பேடி காலத்திலிருந்தே கிரிக்கெட் வர்ணனை கேட்டவன் நான். கான்பூரில் நியூசிலாந்தோடு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நாள் முதல் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டவன். பள்ளி படிக்கையில் பள்ளிக்கு எதிரேதான் வீடு. இடைவெளை நேரங்களில் அவசரம் அவசரமாக வீட்டிற்கு சென்று ஸ்கோர் கேட்டு வருவோம். வீட்டிற்கு தொலைக்காட்சி வந்த எண்பதுகளின் மத்தியில் அதிகாலை எழுந்து ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டிகளை பார்த்து ரசித்தவன். முதன் முதலாக சென்னை சென்ற போது மெரினா கடற்கரையில் இருந்தாலும் பென்ஸன் & ஹட்ஜஸ் இறுதிப் போட்டியின் வானொலி வர்ணனையை ( ரவி சாஸ்திரி ஆடி கார் வென்ற தொடர்) கேட்டுக் கொண்டிருந்தவன். எல்.ஐ.சி பணியில் சேர்ந்து பதினைந்து நாட்கள் பயிற்சி வகுப்பின் போதே அனுமதி பெற்று ஆஸ்திரலேசியா கப் இறுதிப் போட்டியை பார்க்க வந்து சேதன் சர்மாவின் இறுதிப் பந்தில் ஜாவித் மியான்டேட் சிக்ஸர் அடித்ததை பார்த்து நொந்து போனவன். 1987 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுவதை பார்க்க விடுப்பெடுத்தவன்.
 
பணம், பணம், மேலும் பணம் மட்டுமே கிரிக்கெட், பாரபட்சம் மட்டுமே கிரிக்கெட், வெங்சர்க்கர், கபில்தேவ், வெங்கட் ராகவன், ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட அநீதியும் கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்று உருவான நிலையும் அதிலிருந்து விலக வைத்தது. ஏலம் போடும் கேவலம், பெண்களை வைத்து நடனம், சூதாட்டம் என்றெல்லாம் வந்த ஐ.பி.எல் க்கு பிறகு அது வெறுப்பாக மாறியது.
 
சரி இப்போது அடிப்படைப் பிரச்சினைக்கு வருகிறேன்.
 
கிரிக்கெட்டில் சாதனை படைத்தவர், கிரிக்கெட்டின் கடவுள் என்ற பரவச நிலைக்கு ஆளான சச்சின் ரசிகர்கள் அவருக்கு பாரத ரத்னா கொடுக்கப்படுவதைப் பற்றி யாருமே பேசக் கூடாது என்ற பாசிச மனப்பான்மைக்கே வந்து விட்டார்கள். பாரத ரத்னா விருது என்பது வெறும் கிரிக்கெட் திறமைக்கு மட்டும்தானா? வேறு மதிப்பீடுகள் எதுவுமே அவசியமில்லையா என்றால் அது பற்றி பேசாதே என்று வாயடைக்க பார்க்கிறார்கள். வருமான வரி ஏய்ப்பு என்றால் எல்லோருமே திருடர்கள்தானே என்ற எதிர்வாதம் வேறு. இப்போது காங்கிரஸ் கட்சிக்கு இதில் அரசியல் ஆதாயம் உள்ளது என்றால் இருக்கட்டுமே என்று வேறு அலட்சியம் செய்கிறார்கள்.
 
அப்படிப்பட்ட சச்சின் வெறியர்கள் உள்ளார்கள் என்பதற்காக அவருக்கு தேசத்தின் மிக உயர்ந்த விருதை அளித்து விட முடியுமா என்ன? அவ்வளவு மலிவானதா பாரத ரத்னா?
 
யாருக்கெல்லாம் இதுவரை பாரத ரத்னா கொடுக்கப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதிகள் டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி ( நேரடியாக ஜனாதிபதி என்ற பதவியில் இல்லாவிட்டாலும் கூட) ராஜேந்திர பிரசாத், ஜாகீர் ஹூசேன், வி.வி.கிரி, பிரதமர்கள் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மொரார்ஜி தேசாய், சுதந்திரப் போராட்ட வீரர்கள் கோவிந்த வல்லப பந்த், புருஷோத்தம் தாஸ் டாண்டன், காமராஜர், வினோ பாவே, கான் அப்துல் கபார் கான், வல்லபாய் படேல், மௌலானா அபுல் கலாம் ஆஸாத், குல்சாரிலால் நந்தா, அருணா ஆசப் அலி, சி.சுப்ரமணியம், அஸ்ஸாமின் கோபிநாத் போர்துலாய், ஜெயபிரகாஷ் நாராயண், கல்வியாளர்கள் டி.கே.கார்வே, பி.வி.கானே, இலக்கியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான பகவான்தாஸ், பொறியியல் நிபுணர் எம்.விஸ்வேஸ்வரய்யா, மருத்துவரும் மேற்கு வங்க முதல்வருமான பி.சி.ராய், அறிவியல் நிபுணர்கள் சர்.சி.வி.ராமன், ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இயக்குனர் சத்யஜித்ரே, இசைக் கலைஞர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பண்டிட் ரவிசங்கர், பீம்சென் ஜோஷி, பிஸ்மில்லா கான், லதா மங்கேஷ்கர், பொருளாதார நிபுணர் அம்ர்த்யா சென், அன்னை தெரசா, அண்ணல் அம்பேத்கர், ஜே.ஆர்.டி.டாடா, நெல்சன் மாண்டேலா, எம்.ஜி.ஆர்  ஆகிய நாற்பத்தி ஓன்று பேர் இதற்கு முன்பாக பாரத ரத்னா விருது பெற்றுள்ளார்கள்.
 
இதிலே சாஸ்திரி, காமராஜர், வினோபாவே, அண்ணல் அம்பேத்கர், ஜெயபிரகாஷ் நாராயண், மவுலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஜி.ஆர், படேல் ஆகியோருக்கு இறப்புக்கு பின்னர் அளிக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர், ஜெயபிரகாஷ் நாராயண், மவுலானா அபுல் கலாம் ஆசாத், படேல் ஆகியோருக்கு அவர்கள் இறந்து ஏராளமான ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டது.
 
என்னைப் பொறுத்தவரை இதிலே ராஜீவ் காந்தி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது சரியல்ல என்று கருதுகிறேன். எம்.ஜி.ஆர் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம் ஏனென்றால் அவரது சத்துணவுத் திட்டம் பல ஏழை மாணவர்களின் கல்வியை பாதுகாத்துள்ளது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டது அரசியல் நோக்கமுடையது. திமுக வை உடைப்பதற்காக ரிகஷாக்காரன் படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது அளிக்கப்பட்டது போல கூட்டணிக் கனவுகளுக்காகவும் வாக்குகள் பெறுவதற்காகவும் அளிக்கப்பட்டது பாரத ரத்னா. இந்திரா காந்திக்குக் கூட வங்க தேச உருவாக்கத்திற்காக வழங்கப் பட்டது சரிதான். அதன் பின்பு தான் அவர் சர்வாதிகாரப் பாதைக்கு திரும்பினார்.
 
விருது அளிக்கப்பட்டவர்களைப் பார்த்தால் இசைக்கலைஞர்களைத் தவிர மற்ற அனைவரும் சமூகத்திற்காக பங்களிப்பு செய்துள்ளனர். பாடுபட்டுள்ளனர். தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தியாகம் செய்தவர்கள். இதிலே சில விடுபடுதல்கள் உண்டு. சிறுவனாக இருந்த போதே துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்சாமல் பிரிட்டிஷ் கொடியை கீழிறக்கிய சுதந்திரப் போராட்ட தழும்பேறிய தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஏழை மக்களுக்கு நிலமும் ஆட்சியதிகாரமும் வழங்கிய தோழர் ஜோதி பாசு, வீரத்தின் விளை நிலமாம் கேப்டன் லட்சுமி என்று பல செங்கொடியின் புதல்வர்களை சொல்ல முடியும்.
 
இசைக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் காசி விஸ்வநாதர் கோயிலில் அன்றாடம் ஷெனாய் வாசித்து மத நல்லிணக்கத்தின் அடையாளமாய் திகழ்ந்த உஸ்தாத் பிஸ்மில்லா கான், இசையின் மூலம் அமைதியின் தூதுவர்களாய் திகழ்ந்த எம்.ஏஸ்.சுப்புலட்சுமி, சிறந்த இசை மரபுகளை உருவாக்கிய பண்டிட் ரவிசங்கர், பீம்சென் ஜோஷி ஆகியோரும் பாரதத்தின் ரத்தினங்கள்தான்.
 
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வீரர் என்பதற்கு மேல் சமூகத்திற்கு என்ன பங்களித்துள்ளார்? விளையாட்டைத் தவிர அவர் முன்னுதாரணமா?
 
கிரிக்கெட்டில் கோடிகளில் கொழிப்பதைத் தவிர விளம்பரங்களிலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். அதில் வருமான வரி முறையாக செலுத்துகிறாரா என்ற கேள்விக்கு அவர் இதுவரை பதில் சொன்னதில்லை. நடிகர்களுக்கு அளிக்கப்படும் சிறு வருமான வரி விலக்கை பெறுவதற்காக தனது தொழிலை நடிகர் என்றே வருமான வரி படிவங்களில் குறிப்பிட்டுள்ளார். தனது தொழிலையே மாற்றி சொல்பவர் எப்படி ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியும்?
 
பரிசாக பெற்ற சொகுசு காருக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு வாங்கினார். அந்த வரியைக் கூட கட்ட முடியாத ஏழை அல்ல அவர். அப்படி வரி விலக்கு பெற்ற காரையும் கூட விற்று விட்டார். சிறந்த விளையாட்டு வீரர் என்று அவருக்கு வேண்டுமானால் வரி விலக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் இவரிடமிருந்து கார் வாங்கியவர்? இறக்குமதி வரியை இறுதியில் இழந்தது என்னமோ தேசம்தான்.
 
மதுபான விளம்பரங்களில் சச்சின் நடிப்பதில்லை என்பதை பெருமையாக சொல்கிறார்கள். மதுபான நிறுவனங்களின் சோடா விளம்பரங்களிலும் நடிப்பதில்லையா?
 
இந்தியாவின் நிலத்தடி நீர்வளத்தை சுரண்டி, இந்திய குளிர்பான நிறுவனங்களை சீரழித்து மோசமான உணவுக் கலாச்சாரத்தை உருவாக்கிய கோக், பெப்சி நிறுவனங்களின் அமோக விற்பனைக்கு இவரும் முக்கிய காரணம்தானே! மூன்றாம் உலக நாடுகளில் மோசமான உழைப்புச் சுரண்டலை செய்து தொழிலாளர்களின் ரத்தத்தையும் வியர்வையையும் குடித்து வரும் நைக் நிறுவனத்தின் விளம்பரங்களின் புன்சிரிப்போடு தோன்றுவது சச்சின்தானே. இவருக்கு கோடிகளில் அள்ளிக் கொடுக்க நைக் நிறுவனம் எத்தனை தொழிலாளர்களின் இதயத்தை பிளக்கிறதோ?
 
இவர் தன்னுடைய எல்லா ஆயுள் காப்பீடு பாலிசிகளயும் எல்.ஐ.சி யில் மட்டுமே எடுத்துள்ளார். அது நல்ல விஷயம்தான். ஆனால் இவர் பத்திரிக்கையிலும் தொலைக்காட்சிகளிலும் தோன்றி பாரதி ஏ.எக்ஸ். ஏ நிறுவனத்திலும் மற்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் பாலிசி எடுக்கச் சொல்லி பரிந்துரைப்பார். சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்களைப் போலவே முள்ளம்பன்றி ஸ்டைல், மொட்டை ஸ்டைல் என்று கேச அலங்காரம் செய்யும் ரசிகக் கண்மணிகள் கொண்ட நாடல்லவா நம் நாடு. இவர் சொல்வதைக் கேட்டு அவர்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து நடுத்தெருவில் நிற்பார்கள். அவர்களிடம் வாங்கிய விளம்பர துட்டைக் கூட இவர் மட்டும் பாதுகாப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்து விடுவார்.
 
நாடாளுமன்ற உறுப்பினராக இது வரை வாய் திறந்து பேசியதுண்டா? மற்றவர்கள் என்ன கிழிக்கிறார்கள் என்று கேட்காதீர்கள். எதுவும் கிழிக்காதவர்கள் அடுத்த முறை தொகுதிக்கு போகும் போது மக்கள் அவர்களை கிழித்து விடுவார்கள். இவருக்கு எம்.பி பதவி தங்கத் தட்டில் வைக்கப்பட்டல்லவா அளிக்கப்பட்டது!. குறைந்த பட்சம் விளையாட்டுத் துறையின் முன்னேற்றம் பற்றிக் கூட பேசியதில்லையே.
 
மும்பைக் கலவரம் நடைபெற்ற போது இஸ்லாமியர்களை வெறி பிடித்த சிவசேனா கும்பல் தாக்கிய போது களம் இறங்கி அவர்களை சுனில் கவாஸ்கர் காப்பாற்றிய செய்தியை படித்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நாட்டிற்காக விளையாடாமல் தன்னுடைய சொந்த சாதனைகளுக்காகவே விளையாடியவர் என்ற விமர்சனம் அவர் மீது இருந்த போதும், அவரது இந்த செய்கை அவரை நல்ல மனிதராக போற்ற வைத்தது. இது போல பாராட்டத்தக்க செயல் ஏதாவது இருந்தாலும் சொல்லுங்கள்.
 
இதையெல்லாம் விடுங்க சார், விளையாட்டுத் துறையில் ஒருவருக்கு கொடுத்திருக்காங்க, அதை போய் கேள்வி கேட்கிறீங்களே என்போரே உங்களுக்கும் சில கேள்விகள்.
 
கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டா ? வேறு விளையாட்டுக்களே கிடையாதா? வேறு யாரும் சாதனைகளே செய்தது கிடையாதா?
 
மட்டையில் காந்தம் ஒட்டி வைத்துள்ளாரா என்று மட்டையை உடைத்து சோதித்துப் பார்க்கப்பட்ட ஹாக்கி வீரர் தயான்சந்த், நீ கேட்கும் எல்லா வசதிகளும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பணம் தருகிறேன் என்று சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் ஆசை காட்டியும் இந்தியாவை விட்டு வர மாட்டேன் என்று சொன்னவர் அவர். எண்ணற்ற ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை தேசத்திற்கு பெற்றுக் கொடுத்தவர் தயான் சந்த்.
 
மூன்று முறை உலக வாகையாளராக வெற்றி பெற்றவர், எண்ணற்ற கிராண்ட் மாஸ்டர்களும் இன்டர்நேஷனல் மாஸ்டர்களும் இந்தியாவில் உருவாக ஊக்கமளித்த சதுரங்க நாயகன் விஸ்வநாதன் ஆனந்த்.
 
செல்வந்தர்களின் விளையாட்டாக இருந்தாலும் பல முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்ற பெரைரா, கீத் சேத்தி, பங்கஜ் அத்வானி ஆகியோர் சாதனையாளர்கள் கிடையாதா? கேரம் விளையாட்டில் பல உலக சாம்பியன்கள் இந்தியர்கள்தான். ஆனால் அவர்களின் பெயர்கள் கூட யாருக்கும் தெரியாது.
 
டென்னிஸ் போட்டிகளின் ஆரம்ப கால கதாநாயகன் ராட் லேவரை விம்பிள்டன் போட்டிகளில் அச்சுறுத்திய பெருமை டென்னிஸ் கிருஷ்ணனுக்கு உண்டு. அவரது மகன் ரமேஷ் கிருஷ்ணனும் அமிர்தராஜ் சகோதரர்களும் இந்தியாவை டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு எடுத்துச் சென்றார்களே. ஸ்லோபடான் சிகோஜிவோனிக் என்ற யூகோஸ்லோவியா நாட்டு மாமிச மலையோடு விம்பிள்டன் கால் இறுதியில் ரமேஷ் கிருஷ்ணன் விளையாடிய ஆட்டம் யாருக்கு நினைவில் உள்ளது? ஏன் சமீப கால நட்சத்திரங்கள் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஸா, சாய்னா நெஹ்வால் ஆகியோர் தேசத்திற்கு பெருமை சேர்த்து தரவில்லையா?
 
கேரளாவின் குக்கிராமத்தில் பிறந்து தன் வேகமான ஓட்டத்தினால் மக்களின் மனதை கொள்ளையடித்த பி.டி.உஷா, இந்திய வரைபடத்தில் சிறு புள்ளியாக உள்ள மணிப்பூர் மாநிலத்திலிருந்து வந்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற மேரி கோம் இவர்களெல்லாம் சாதனையாளர்கள் கிடையாதா?
 
இல்லைப்பா, கிரிக்கெட்னா சச்சின், சச்சின்னா கிரிக்கெட் அவ்வளவுதான் இதைப்பற்றி இனியும் பேசாதீர்கள் என்று நீங்கள் சொன்னால் நான் வாய் மூடியிருக்க வேண்டுமா என்ன?
 
அவரின் சாதனைப் பட்டியல் தெரியுமா என்று கேட்பவர்களுக்கு ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுகிறேன்.
 
காந்தியை எளிமையானவராக காண்பிப்பதற்காக நாங்கள் ஏராளமாக செலவழிக்க வேண்டியிருந்தது என்று ஒரு முறை சரோஜினி நாயுடு கூறினார். அது போல சச்சின் சாதனைகள் படைப்பதற்காக எத்தனை வாய்ப்புக்கள் தரப்பட்டது. அது போன்ற வாய்ப்புக்கள் மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா?
 
நான் அந்த பந்தை விண்வெளியை தாண்டியும் அடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள் போலும் என்று தான் அணியிலிருந்து நீக்கப்பட்டதும் கபில்தேவ் சொன்னது நினைவுக்கு வருகிறதா?
 
ஒரு தொடரில் தோற்றவுடனேயே அணித்தலைவர் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் அணியில் இருந்தே வெங்சர்க்கர், வெங்கட் ராகவன், ஸ்ரீகாந்த் ஆகியோர் துரத்தப்பட்டனர். ஆனால் ஃபார்மில் இல்லாத போதும் எத்தனை வாய்ப்புக்கள் சச்சினுக்கு வழங்கப்பட்டது. அவருடைய நண்பர் என்ற ஒரே காரணத்திற்காக வினோத் காம்ப்ளியை எத்தனை காலம் வெட்டியாக அணியில் வைத்திருந்தார்கள்! ஒரு நாள் போட்டிக்கான ஈர்ப்பை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உருவாக்கியது ஸ்ரீகாந்த் அல்லவா? அணியை தோல்வியிலிருந்து பல சமயம் காப்பாற்றியது ராகுல் டிராவிட் என்னும் சுவர் அல்லவா?
 
அணித்தலைவராக சச்சின் டெண்டுல்கர் ஒரு மிகப் பெரிய தோல்வி. அணித் தலைவர் என்ற முறையில் அதிகமான வெற்றிகளை குவித்த சாதனைகள் படைத்த பெருமை சவுரவ் கங்குலிக்கும் மஹேந்திர சிங் தோணிக்கும் தான் உண்டு. இவர் நூறாவது செஞ்சுரி அடிப்பதற்குள் பொறுமையின் எல்லைக்கே சென்ற கிரிக்கெட் ரசிகர்கள் எவ்வளவு பேர்! டொனால்ட் பிராட்மேனின் சராசரியையும் பிரியன் லாராவின் உச்சபட்ச ரன் எண்ணிக்கையையும் இவரால் அடைய முடியவில்லை அல்லவா?
 
ஊடகங்களின் கண்மணியாக தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டார். அந்த புகழ் வெளிச்சம் அவருக்கு தொடர்ந்து கிடைத்தது. அவருக்கு பாரத ரத்னா அளித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது மத்திய அரசு. பத்ம விபூஷன், நியமன உறுப்பினர் பதவி, ராஜீவ்காந்தி கேல்ரத்னா என்று அதிகபட்ச விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டு விட்டது.
 
இது போதும். இதற்கு மேலும் அவசியமில்லை. பாரத ரத்னாவிற்கு அவர் தகுதியுமில்லை.
 

http://ramaniecuvellore.blogspot.ca/2013/11/blog-post_19.html

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கட்டுரை. காங்கிரஸ் கட்சியில் அவரை இணைத்துவிட்டார்கள். அதற்கான சன்மானம்தான் இந்த பாரத ரத்ணா விருது. விளையாட்டு வீரனாகவே இருந்திருந்தால் சச்சின் தனது இமேஜை நிலை நிறுத்தியிருக்கலாம். ஆனால் அரசியலுக்குள் நுழைந்துவிட்டார். இனிமேல் பத்தோடு பதினொன்றாவதாக....

  • கருத்துக்கள உறவுகள்

விருதுகளை மலினமாக்குகின்றனர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.