Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12 வருட அடிமை (12 Years A slave)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12 வருட அடிமை - அடிமைகளது அகவாழ்க்கையையும் துயர்களையும் சொல்லும் படம்

ரதன்

முப்பது வருடங்களுக்கு முன்பு அகதியாக மொன்றியலில் உள்ள மிராபல் விமான நிலையத்தில் தை மாத முற்பகுதியில் வந்திறங்கியபோது காலை பத்து மணி. அகதி விசாரணைகள் முடிந்து அங்கிருந்த ஒரு கறுப்பின மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் மொன்றியல் நகருக்கு வந்தபோது மாலை நான்கு மணி. நான் மொன்றியல் நகரில் இறங்கியபோது குளிர் பூச்சியத்துக்கு கீழே 27 பாகை எனப் பேருந்து நிலைய அறிவித்தல் பலகை காட்டியது. அப்போது என்னால் அந்தக் குளிரின் கொடூரத்தை உணரமுடியவில்லை. என்னிடம் அப்போது இருந்தது இரண்டு கனடிய டொலர்கள். அங்கு நின்றவர்களிடம் விலாசத்தைக் காட்டி அரைகுறை ஆங்கிலத்தில் வினவி மற்றொரு பேருந்தில் ஏறிக்கொண்டேன். புதிய இடம், கடும் குளிர், புதிய மொழி நான் அணிந்திருந்த ஆடைகளோ உஷ்ணப் பிரதேசத்துக்குரியவை. அறிவித்தல் விளம்பரப் பலகைகளில் பெரிதாக பிரெஞ்சு மொழியே இடம் பெற்றிருந்தது; எனக்குள் ஏக்கம், தாகம், எதிர்பார்ப்பு எனப் பலவகை உணர்வுகளுடன் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது எனக்கருகில் ஒரு வயோதிக கறுப்பினத் தம்பதிகள் அமர்ந்திருந்தனர். எனது உடையைப் பார்த்தவுடன் ஊருக்குப் புதிது என்பதை இலகுவாக கண்டுகொண்டார்கள். முதலில் ஆங்கிலத்திலேயே உரையாடலைத் தொடங்கினர். நான் இறங்கவேண்டிய இடம் வந்தபோது தங்களிடமிருந்த குளிருக்கு அணியும் நீல நிறத் தொப்பி ஒன்றை எனது தலையில் மாட்டிவிட்டனர். என்ன நினைத்தார்களோ தெரியாது என்னுடன் இறங்கிவிட்டார்கள். நான் இடம் தவறிவந்துவிட்டேன் என்பதை அறிய சில நிமிடங்கள் பிடித்தன. ஆனால் அவர்கள் எனக்கு முதலே அறிந்து ஒரு டாக்சி ஒன்றைப் பிடித்து என்னை எனது நண்பனின் முகவரியில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டர்கள். டாக்சி சாரதி ஒரு கிழக்கு ஐரோப்பியர். அவர்கள் பணம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். நண்பன் அங்கில்லாவிட்டால் தங்களது முகவரியைக் கொடுத்து அங்கு அழைத்து வரவும் என சாரதிக்கு கூறினார்கள். அதன் பின்னர் கடந்த முப்பது வருடத்தில் அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் அளித்த குளிர்த் தொப்பி இன்றும் என்னிடமிருக்கின்றது. அவர்களது முகம் இப்பொழுதும் தெளிவாக மனதில் பதிந்துள்ளது.

07.jpg

கால ஓட்டத்தில் பல கறுப்பினத்தவர்களை சந்தித்துக்கொண்டிருந்தேன். பலர் என்னுடன் வேலை பார்த்தார்கள். பெரும்பாலான தடவைகள் நானும் அவர்களில் ஒருவன் என்பதை வெள்ளை இனத்தவர்கள் நினைவு படுத்திக்கொண்டிருந்தார்கள். எனக்கு மற்றுமொரு பட்டப் பெயரும் உண்டு. அது “பாக்கி”. இவ்வாறு அழைத்தவர்களுக்கு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள பகை உணர்வு தெரியாது. இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடித் தொடர்பெதுவும் இல்லை என்பதும் தெரியாது. ஆனாலும் தென்கிழக்காசியர்கள் அனைவரையும் அப்பெயரிலேயே அழைத்தனர். காலப்போக்கில் ரொரண்ரோவில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரிக்க இவ்வாறான பட்டப் பெயரழைப்பு இல்லாமல் போய்விட்டது.

சில வருடங்களுக்கு முன்னர் ஒகாயோ மாநிலத்தின் தலைநகரான கொலம்பசில் உள்ள அரும்பொருட்காட்சியகத்தில் கறுப்பினத்தவர்கள் பற்றிய காட்சியறையில் வீடொன்றில் கறுப்பினப் பெண்கள் மேலாடையின்றியிருப்பது பற்றி ஒரு பத்து வயது வெள்ளை இனச்சிறுவன் தனது தந்தையிடம் வினவினான். அதற்குத் தந்தை “அவர்கள் அப்போது நாகரீகமற்றிருந்தார்கள். காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தார்கள்” எனப் பதிலளிக்கின்றார். இதுதான் இன்றைய அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் பற்றிய கருத்தியலாக சிறார்கள் மத்தியில் படிந்துள்ளது.

 

12-years-a-slave-soundtrack.jpg

இவ்வருடம் ரொரண்ரோ சர்வதேசத் திரைப்பட விழாவில் 12 Years A slave என்ற திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இதற்கு முன்பாக சில அடிமைகள் பற்றிய படங்களைப் பார்த்துள்ளேன். மிகக் குறிப்பாக ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் Amistad என்ற படம் அடிமை வியாபாரத்தின் கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இருந்து அடிமைகள் கியுபாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள். La Amistad கப்பலில் பயணிக்கும் இவர்கள் ஆறு வாரங்களின் பின்னர் குடிநீர் போதிய உணவின்றி அவதிப்படுகின்றார்கள். கரையொன்று தென்படுகின்றது. அப்பொழுது இக்கப்பலை அமெரிக்க இராணுவக் கப்பல் கைப்பற்றி கரைக்கு கொண்டு செல்கின்றது. அதன் பின்னர் இவ் அடிமைகள் எவ்வாறு கொடூரமாக நடாத்தப்படுகின்றார்கள் என்பதனையே இப்படம் பதிவு செய்துள்ளது. இவர்களைப் பொருட்களாகவே கருதினார்கள். அப்போதைய ஸ்பானிய அரசி இரண்டாம் இஸபெல்லா அமெரிக்க ஜனாதிபதியிடம் (Martin Van Buren) கப்பலுக்கும் அடிமைகளின் சந்தை விலைக்கும் நட்டஈடு கோரியிருந்தார். இப்படத்தை மீண்டும் பார்த்தபோது இலங்கைப் போரால் அகதியாக பல நாடுகளுக்கு கப்பலில் செல்லும் தமிழர்கள் நினைவுக்கு வந்தார்கள். இவர்களும் பல்வேறு நாட்டு அரசுகளால் மிக மோசமாகவே நடாத்தப்படுகின்றார்கள்.

12-Years-a-Slave-Photo.jpg

1800களின் ஆரம்பத்தில் இளம்வயது (20) ஆரோக்கியமான இளைஞனின் விலை 333இல் இருந்து 500 டொலர்களாக இருந்தது. இது பின்னர் 1849இல் 700 - 800 டொலர்கள்வரை உயர்ந்திருந்தது. பெண்களுக்கும் தொழிற்திறன் உள்ளோருக்கும், சிறுவர்களுக்கும் என தனித் தனி விலைகள் இருந்தன. இது அன்று அமெரிக்காவில் முக்கிய வியாபாரமாக திகழ்ந்தது. அடிமை வாழ்வைப் பதிவு செய்த வேறு சில படங்கள் இவை. Beloved (1998) Manderlay (2005) Django Unchained (2012) Tula (2013) Mandingo (1975), Sankofa (1993), Glory (1989) இவற்றுடன் கடந்த வருடம் வெளியான லிங்கனையும் உள்ளடக்கலாம்.

இவ்வரிசையில் வெளிவந்துள்ள மற்றொரு படமே 12 Years A Slave. இப்படம் உலகின் மிக முக்கிய திரைப்பட விழாக்கள் வரிசையில் உள்ள ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் மக்கள் தேர்வு செய்த சிறந்த திரைப்பட விருதைப் பெற்றது. இவ்விருதைப் பெற்ற The King’s Speech, Slumdog Millionaire ஆகிய படங்கள் ஒஸ்காரின் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றன. எனவே இப்படமும் ஒஸ்காரின் சிறந்த பட விருதைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

128a_df-03580small_wide-879.jpg

சொலமன் நோத்யப்யின் 12 Years A Slave என்ற வாழ்க்கை வரலாறே இப்படம். சொலமனின் சுயசரிதத்தை இவர் கூற எழுதியவர் Glen Falls - நியுயோர்க்கைச் சேர்ந்த டேவிட் வில்சன் என்ற வெள்ளை இன வழக்கறிஞர். இதனால் இதன் உள்ளடக்கம் பற்றிய விமர்சகர்களின் கருத்துக்களை இதன் நம்பகத்தன்மையை ஏற்றுக்கொண்ட போதும் முற்று முழுதாக சொல மனின் கருத்துக்கள் பிரதிபலிக்கவில்லை எனக் கருதுகின்றன. இச்சுயசரிதம் ஏற்கனவே 1984இல் Solomon Northup’s Odyssey என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இதனை இயக்கியவர் Gordon Parks இதில் சொலமானாக நடித்திருப்பவர் Avery Brooks. இப்படம் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை.

இம்முறை இப்படத்தை இயக்கியிருப்பவர் ஸ்டீவ் மக்குவின். இவர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர். அடிமைகளைப்பற்றிய படங்களில் பெரும்பாலானவற்றை வெள்ளை இன இயக்குநர்களே இயக்கியுள்ளார்கள். விதிவிலக்காக 12 Years A Slave சுயசரிதத்தின் இரு படங்களையும் கறுப்பின இயக்குநர்களே இயக்கியுள்ளார்கள்.

1619இல் முதல் கறுப்பின அடிமை அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டார். 188 வருடங்களின் பின்னரே அமெரிக்கா அடிமைகளை இறக்குமதி செய்வதை தடைசெய்தது. முதல் அடிமை வந்து 246 வருடங்களின் பின்னர் 1865இல் அடிமை முறை ஒழிப்பு சட்டமாக்கப்பட்டது. 1868இல் முன்னால் அடிமைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. சுமார் 250 வருடங்கள் கறுப்பின அடிமைகள் பல்வேறு சித்திரவதைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்த வரலாற்றின் ஒரு சிறு கல்லே ‘12வருட அடிமை’ என்ற இப்படம்.

12years12.jpg

சொலமன் நோத்யப் 1808இல் ஒரு சுதந்திர பிரஜையாகவே அமெரிக்காவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு முன்னாள் அடிமை. இளம் வயதில் தந்தைக்கு உதவியாக தோட்டங்களில் வேலை பார்த்தார். 1829 கிறிஸ்மஸ் அன்று அனி ஹம்படனை திருமணம் செய்துகொண்டார். அனி ஹம்படன் கறுப்பு, வெள்ளை, பூர்விக இந்தியக் கலப்பைக் கொண்டிருந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இவர் பின்னாளில் சிறந்த பிடில் வாசிக்கக் கூடியவராகத் தேர்ச்சி பெற்றிருந்தார். (திரைப்படத்தில் வயலின் வாசிப்பவராக காட்டப்படுகின்றார்) 1841இல் இருவர் இவருக்கு வாஷிங்டனில் உள்ள இசைக் குழுவில் கலைஞராக இருப்பதற்கு அதிகப் பணம் கொடுப்பதாக கூறி வாஷிங்டன் அழைத்துச்செல்கின்றனர். அங்கு அடிமையாக விற்றுவிடுகின்றனர். அதன் பின்னர் ஒரு ஏலத்தில் நியு ஒர்லன்ஸ்ஸில் உள்ள ஒரு முதலாளி இவரை வாங்குகின்றார். பின்னர் பல முதலாளிகளிடம் வேலை செய்கின்றார். இக்காலகட்டத்தில் இங்கு வேலைக்கு வரும் ஒரு வெள்ளை இன கனடியர் இவரது இருப்பையும் இடத்தையும் இவரது குடும்பத்துக்கு கடிதம்மூலம் தெரியப்படுத்துகின்றார். இதன் பின்னர் அதிகாரிகள் இவரை மீட்கின்றனர். இவர் தன்னை கடத்தியவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வெற்றி பெற முடியவில்லை. இவர் 1863இல் இறந்ததாக நம்பப்படுகின்றது. இப்படம் இவர் கடத்தப்பட்டதில் இருந்து விடுதலையடைந்தவரையிலான கால கட்டத்தைப் பதிவு செய்துள்ளது. இக்காலகட்டத்தில் இவருடன் இருந்த அடிமைகளை முதலாளிகள் செய்த சித்திரவதைகளை வலியுடன் வெளிப்படுத்தியுள்ளது. தாயிடமிருந்து பிள்ளையைப் பறித்து வேறு முதலாளிகளுக்கு விற்றல், பெண்களுடன் வன்புணர்வு கொள்ளல், கயிற்றில் கட்டி தூக்கிலிடுதல் போன்ற பயங்கரங்களையும் பதிவு செய்துள்ளது. சக அடிமையாக இருந்த பெண் தப்பி ஓட முயற்சித்ததாக கூறி அப்பெண்ணை நிர்வாணமாக்கி சவுக்கால் அடிக்கச் சொல்வார் முதலாளியம்மா. அப்பெண் நிர்வாணமாக்கப்பட்டு மரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பெண்மீது சவுக்கால் அடிக்குமாறு சொலமன் பணிக்கப்படுகின்றார். என்ன செய்வது? அடிக்கத்தானே செய்ய வேண்டும். சொலமனுக்கு ஒரு தடவை தண்டனை வழங்கப்பட்டு மரத்தில் கட்டி தூக்கப்படுகின்றார். கால்கள் நிலத்தை தொடாவிட்டால் உயிர் போய்விடும். அந்நிலையில் இப்பெண் சொலமனுக்கு தண்ணீர் வழங்குகின்றார். அதே பெண்ணை சொலமனே அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். சொலமன் வேலை செய்த இடங்களில் தனது திறமையால் முதலாளிகளுக்கு லாபம் அதிகமாகவும் வழிவகைகள் செய்துள்ளார். பருத்தித் தோட்டங்களில் வேலை செய்த காலங்களில் கடுமையாக வேலை வாங்கப்பட்டார்.

இப்படத்தை இயக்கிய ஸ்டீவ் மக்வீன் இதற்கு முன்பு 2008இல் Hunger படத்தை இயக்கியுள்ளார். இது வட அயர்லாந்தில் உண்ணாவிரதமிருந்து இறந்த

Bobby Sands-ன் போராட்டத்தை மையமாகக்கொண்டது. அரசியல் போராட்ட வரலாற்றை வெளிப்படுத்துவதில் திறமை கொண்ட இவரின் திரைமொழி இப்படத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இயக்குநர் மூன்று வேறு நிலைகளில் அடிமை வாழ்வியலை வெளிப்படுத்தியுள்ளார். முதலாவது அடிமை வாழ்வின் துன்பியல். இங்கு முதலாளிகளின் அகமனப் பிறழ்வை ஒரு மனநோய்க்கு ஒப்பானதாக வெளிப்படுத்துகின்றார். இரண்டாவது அடிமைகளாக வாழ்வும் கறுப்பினத்தவரின் இயல்பான மனோநிலை அன்றாட அக புறத்தேவைகள் அதனை அவர்கள் எவ்வாறு பூர்த்தி செய்தார்கள் என்பதனைப் பதிவு செய்துள்ளார். மூன்றாவது புறம் சார்ந்தது. சமூகம், அரசு, மதம் அடிமைத்தனத்தின் மீது கொண்டுள்ள கருத்தியல் மீதான தனது கருத்தை முன்வைக்கின்றார்.

253db0d21870429d620f68654dc.jpg

முதல் இரண்டு நிலைகளையும் பின்வரும் காட்சிகளுக்கூடாக விளங்கிக் கொள்ளலாம். நூலாசிரியரின் நோக்கம் அடிமை ஒழிப்பு. இதனை கருத்தில் கொண்டு அடிமைகளின் நாளாந்த வாழ்வில் அவர்கள் சந்திக்கும் இயல்பான உள்மன உளைச்சல்களையும் தேவைகளையும் கூட அழகாக இயக்குநர் வெளிப்படுத்தியுள்ளார். சொலமன் அடிமையாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் பல அடிமைகளுடன் இரவில் தூங்குகின்றார். அப்பொழுது இவருக்கு அருகில் உறங்கும் பெண் இவருடன் உறவு கொள்கின்றாள். இவ்விடத்தில் இப்பெண்ணின் முகம் காட்டப்படவில்லை. உடல் அசைவுகள் மூலமே இயக்குநர் காட்சியைப் பதிவு செய்கின்றார். அடிமையாக இருந்தபோதும் தனது உடலை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளாள் என இயக்குநர் இக்காட்சிக்கான விளக்கத்தை நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கான பேட்டியில் கூறுகின்றார். புணர்ந்து முடிந்தவுடன் வழமையான தனது நரக வாழ்வை நினைத்து அழுகின்றாள். சொலமனுக்கும் இரு பெண்களுடன் இக்காலகட்டத்தில் உறவுகள் ஏற்படுகின்றன. அடிமையாக வாழ்வோரின் அக வாழ்வியலையும் இங்கு இயக்குநர் வெளிப்படுத்தத் தவறவில்லை. (ஹரிசன் ஆன் ஜேக்கப் எழுதிய Incidents in the Life of a Slave Girl நூல் பெண்களின் அவலங்களை வலிகளை கூறுகின்றது.)

அநேகமான ஹொலிவுட் படங்களில் கறுப்பின ஆண்கள் முரட்டுத் தனம் நிறைந்தவர்களாக காட்டப்படுவார்கள். இப்படத்தில் சொலமன் ஒரு பொறுப்புள்ள, பாசமுள்ள தந்தையாக கணவனாக அறிமுகப்படுத்தப்படுகின்றார். பின்னரும் இவர் இரக்கமுள்ள, உணர்ச்சியான, துணிச்சலான மனிதனாக காட்டப்படுகின்றார். சொலமானாக இயல்பாக Chiwetel Ejiofor நடித்துள்ளார்.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு அடிமைப் பாத்திரமும் தனித்தன்மை கொண்டவையாக உள்ளன. இது கறுப்பின மக்களின் ஆற்றலையும் சக்தியையும் வெளிப்படுத்துகின்றது. படத்தில் சில இரக்கமுள்ள முதலாளிகளும் காட்டப்பட்டபோதும், அடிமைகள் கொடுமைப்படுத்தப்படும் பொழுது அங்கு நிற்கும் வெள்ளை இனத்தவர் அக்காட்சிகளை இரசிப்பவர்களாகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் வெளிப்படுத்தப்படுகின்றனர்.

மூன்றாவது நிலை இயக்குநரின் விமர்சனமாகவே வெளிப்படுகின்றது. இதே காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டு வட அமெரிக்காவின் எல்லைப் புறங்களை நோக்கி தள்ளப்பட்ட முதன்மைக் குடிகளும் பூர்விக மக்களுமான செவ்விந்தியர் இப்படத்தின் ஒரு காட்சியில் வருகின்றனர். ஒரு காட்சியில் கறுப்பின அடிமைகளுடன் செவ்விந்தியர் நடனமாடுகின்றனர். அக்காட்சியே அவர்களும் கறுப்பினத்தவரும் ஒரே நிலையில் உள்ளனர் என்பதனை வெளிப்படுத்துகின்றது. அரசு கறுப்பினத்தவரையும் செவ்விந்தியரையும் அடிமைப்படுத்தியே வைத்துள்ளது. அடிமைகளுக்கெதிராகவே இக்காலகட்டத்தில் இயங்கிவந்துள்ளது. அடிமைகளை வைத்திருந்தோர்மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிறிஸ்தவ மதத்துக்கும் முதலாளித்துவத்துக்குமான நெருக்கத்தையும் இப்படம் வெளிப்படுத்தியுள்ளது. இதனைப் பொதுவாக மதத்துக்கும் அடிமைத்தனத்துக்குமான நெருக்கமாகவே பார்க்க வேண்டும். இத்திரைப்படம் கடும் கோடைகாலத்தில் படமாக்கப்பட்டபோதும் பெரும்பாலும் ஒளி குறைந்தே காணப்படுகின்றது. இயக்குநரின் உள்ளார்ந்த வெளிப்பாடாகவே இது வெளிப்படுகின்றது. அவரின் ஒரு விமர்சனமாகவும் ஒளிக்கின்றது. பெரும்பாலான கறுப்பின அடிமை பற்றிய படங்களில் ஒரு வெள்ளை இனத்தவரே வந்து கறுப்பினத்தவர்களை காப்பாற்றுவார். இப்படம் உண்மை சுயசரிதத்தை மையமாகக் கொண்டிருந்த போதிலும் இங்கும் அதுவே வெளிப்படுகின்றது.

இப்படம் இக்காலகட்டத்தில் மிக முக்கியமான படம். அமெரிக்க அதிபராக ஒரு கறுப்பினத்தவர் இருக்கின்றபோதும் இன்றும்கூட கறுப்பின மக்கள் பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளனர். சிறைகளில் உள்ளோரில் 60 வீதமானோர் கறுப்பின மக்கள். அண்மைக் காலங்களில் கறுப்பின மக்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இன்றைய அமெரிக்காவை கட்டியெழுப்பியவர்களில் கறுப்பின மக்களின் பங்கு கணிசமானது. மீண்டும் ஒரு தடவை தாங்கள் வந்த பாதையை மீளப் பார்த்து மீண்டும் புத்துயிர்ச்சி பெற வேண்டும். இளம் சந்ததியினருக்கு இது பாடமாகவும் அமையும். திரையரங்கில் எனக்கருகில் இருந்த வெள்ளை இனத்தவர்கள் சித்திரவதைக் காட்சிகளின்போது காணச்சகிக்காது கீழே பார்த்தவண்ணமிருந்தனர். ஆமேனியர்களைப் படுகொலை செய்த துருக்கியர் இன்றுவரை ஆமேனியர்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. இலங்கை அரசு தமிழ் மக்களிடம் எதுவும் கேட்கப்போவதில்லை. அமெரிக்கா ஒன்று மட்டும் செய்யும். ஒஸ்காரில் பல விருதுகளைக் கொடுக்கும்.

ரதன்: இவரது ஆக்கங்கள் நிழல், கணையாழி, சதங்கை, உயிர்நிழல், தேடல் போன்ற சஞ்சிகைகளிலும் திண்ணை, இனியொரு உள்ளிட்ட இணையதளங்களிலும் வெளிவந்துள்ளன.

கடந்த 11 வருடங்களாக ரொரண்ரோவில் சர்வதேசத் தமிழ் திரைப்பட விழாவை நடத்தி வரும் சுயாதீனத் திரைப்படக் கழகத்தின் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவர். அதன் இயக்குநர்.

http://www.kalachuvadu.com/issue-168/page39.asp

நல்லதொரு பதிவு .

படத்தை பார்க்க இன்னமும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.