Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் சர்வதிகாரத்தை நோக்கி வங்க தேசம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மீண்டும் சர்வதிகாரத்தை நோக்கி வங்க தேசம்!

 mullah-191x170.jpg

வங்க தேசத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜமாஅத்தே இஸ்லாமியின் உயர் மட்டத் தலைவர் அப்துக் காதிர் முல்லாஹ் மீதான மரண தண்டணை, பல்வேறு எதிர்வினைகளை வங்க தேசத்தின் அரசியல் அரங்கில் தோற்றுவித்துள்ளது.

 

அடுத்த ஜனவரியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், எதிர்க்கட்சிகள் தேர்தலைப் பகிஷ்கரிப்பதாக அறிவித்திருக்கின்ற நிலையிலும், குழம்பிப் போயுள்ள அரசியலை மேலும் குழப்புகின்ற வகையில், முல்லாஹ் மீதான தண்டனை இவ்விதம் அவசரப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னணி காரணம் புரிந்து கொள்ள முடியாததல்ல.

 

1971ல் இடம் பெற்ற வங்க தேச சுதந்திரப் போர்க் காலத்து யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பிரதமர் ஹஸீனாவால் 2010ல் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றம், கடந்த பெப்ரவரியில் முல்லாஹ்விற்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இத்தண்டனை போதுமானதல்ல, அதிகரிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, இத்தண்டனை மரண தண்டனையாக செப்டம்பரில் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், அப்துல் காதிர் முல்லாஹ் சார்பில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு, யுத்தக் குற்றம் தொடர்பான குற்றங்கள் மேன்முறையீட்டுக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறப்பட்டு நிராகரிக்கப்பட்டு, சில மணித்தியாலங்களுக்குள் அவர், 12.12.2013 அன்று வங்க தேச நேரப்படி இரவு 10.01 இற்கு தூக்கிலேற்றப்பட்டுள்ளார்.

 

பொதுவாக வங்க தேச சட்டவியலில் Jail Code என்ற நடைமுறை உண்டு. இது மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, நாட்டின் ஜனாதிபதியிடம் பொது மன்னிப்பு கோருவதற்காக வழங்கப்படுகின்ற ஒரு வார காலத் தவணையாகும். யுத்தக் குற்றவாளி என்ற காரணத்தை முன்வைத்து, அந்த வாய்ப்பும் முல்லாஹ்விற்கு வழங்கப்படவில்லை.

12.12.2013 அன்று இரவு எட்டு மணியளவில் அவருடைய குடும்பத்தினர் அவரை இறுதியாக சந்தித்த வேளை, அவர் தனது குடும்பத்தினரோடு பேசிய கடைசி வார்த்தைகள் இவைதான்:

 

“இவ்வளவு காலமும் நான் உங்களுக்குப் பாதுகாவலனாக இருந்தேன். நான் செய்யாத குற்றத்திற்காக இந்த அரசாங்கம் என்னைக் கொலை செய்யும் என்றால், அது ஒரு வீரமரணமாகும். எனது வீரமரணத்தைத் தொடர்ந்து, அல்லாஹ்வே உங்கள் பாதுகாவலனாக இருப்பான். பாதுகாவலர்களில் மிகவும் சிறந்தவன் அவன்தான். எனவே, நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. இஸ்லாமிய இயக்கத்தோடு தொடர்பானவன் என்பதற்காகவே நான் கொலை செய்யப்படுகின்றேன். அல்லாஹ்வுக்காக வீரமரணம் அடைகின்ற பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதனை அல்லாஹ் எனக்கு வழங்குகிறான். இதனால், நான் மிகவும் அதிர்ஷ்டக்காரன். எனது வாழ்க்கையில் நான் அடைந்து கொள்கின்ற உயர்ந்தபட்ச அடைவும் அதுதான். என் ஒருவனின் இரத்தம் இஸ்லாமிய இயக்கத்தை ஒன்றுபடுத்தி, சர்வதிகாரத்தின் வேர்களைக் களைந்தெறியும். என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இந்த நாட்டைப் பற்றியும், இஸ்லாமிய இயக்கத்தைப் பற்றியுமே கவலை கொள்கின்றேன். எனது முழு வாழ்வையும் இஸ்லாமிய இயக்கத்திற்காக அர்ப்பணித்து இருக்கிறேன். ஒழுங்கீனங்களுக்கு முன் நான் ஒருபோதும் தலை தாழ்த்தியதில்லை. இறைவன் நாடினால் இனியும் தாழ்த்தப் போவதில்லை. உலக அதிகாரத்திடம் மன்னிப்போ, கருணையோ காட்டுமாறு கோருகின்ற நிலையே எனக்கு உருவாகவில்லை. வாழ்வையும், மரணத்தையும் தீர்மானிக்கின்ற அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. எனது விதியை அல்லாஹ் தீர்மானிப்பான். எனது வீரமரணம் பற்றிய முடிவு வேறு எவரது முடிவின் படியும் எடுக்கப்பட மாட்டாது. எனது திகதி மற்றும் நேரம் பற்றிய இறுதி முடிவு அல்லாஹ்வினாலேயே எடுக்கப்படும். அல்லாஹ்வின் அந்த முடிவை நான் ஏற்றுக் கொள்வேன்.”

 

இவ்வாறு அப்துல் காதிர் முல்லாஹ் தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

தூக்கிலப்படப் போகிறார் என்பது உறுதியாக இருந்தாலும், அந்த நேரம் அதிகாரிகளால் இறுதி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இரவு எட்டு மணிக்கெல்லாம் அவர் தங்க வைக்கப்பட்டிருந்த டாக்கா சிறைச் சாலை சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

 

இரவு 10.01 இற்கு அவர் தூக்கிலேற்றப்பட்டார். இரவு 11.15 அளவில் அவரது இறந்த உடலை சுமந்து அம்புலன்ஸ் சிறையில் இருந்து புறப்பட்டது.

பின்னணி

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையில் இருந்து, இன்று வரையான வரலாற்றுத் தகவல்களைக் கருத்தில் எடுப்பதன் மூலமே, அப்துல் காதிர் முல்லாஹ்வின் மீதான மரண தண்டனை மற்றும் இன்றைய வங்க தேச அரசியல் குறித்த சரியான புரிதலொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

1947ல் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்த போது, வங்க தேசம் பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக (கிழக்குப் பாகிஸ்தான்) இருந்தது.  உர்து மொழிக்கு மாத்திரம் தேசிய மொழி அந்தஸ்து வழங்கப்பட்டமை, சமூக, பொருளாதார ரீதியில் கிழக்குப் பாகிஸ்தான் மத்திய இஸ்லாமாபாத் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்படுதல் போன்ற காரணிகளை முன்வைத்து, பங்களாதேஷ் தனி நாட்டுக் கோரிக்கை உருவானது.

இது தவிர வேறு பல உடனடிக் காரணிகளும் இருந்தன. கட்டுரையின் சுருக்கம் கருதி அவற்றை இங்கு நாம் வழங்கவில்லை. 1971ல் ஷெய்க் முஜீபுர் ரஹ்மான் தலைமையில் பங்களாதேஷ் சுதந்திரப் போர் ஆரம்பித்தது. ஷெய்க் முஜீபுர் ரஹ்மான் அவாமி லீகின் முன்னாள் தலைவர் என்பதும், தற்போதைய பிரதமர் ஷெய்க் ஹஸீனாவின் தந்தை என்பதும் மேலதிகத் தகவல்கள்.

எவ்வாறாயினும், பங்களாதேஷ் சிந்தனையாளர்கள் மத்தியில் ஆரம்பித்தில் இருந்தே தனி நாட்டுக் கோரிக்கை பற்றிய மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. முஸ்லிம் லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, நிஸாமே இஸ்லாம் கட்சி, ஜம்இய்யத்துல் உலமா இஸ்லாம், சீன சார்பான கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பல கட்சிகளும், சிந்தனையாளர்களும் தனிநாட்டுச் சிந்தனையை வரவேற்கவில்லை.

பாகிஸ்தான் பிரிவினையையே புத்திஜீவிகள் பலர் வரவேற்காத நிலையில் இவ்வரசியல் நிலைப்பாடு புரிந்து கொள்ளக் கூடியதே!  பங்களாதேஷ் சுதந்திரப் போர் நீங்காத வடுக்களை பங்களாதேஷ் மக்கள் மனதில் உண்டு பண்ணியது. பங்களாதேஷ் தகவல்களின் படி, சுதந்திரப் போரை அடக்குவதற்குப் பாகிஸ்தான் இராணுவம் கையாண்ட குரூரமான வழிமுறைகள் காரணமாக  முப்பது இலட்சம் பேர் கொல்லப்பட்டதோடு, மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டனர்.

எட்டு இலட்சம் பேர் அயல் நாடான இந்தியாவிற்கு இடம் பெயர்ந்தனர். ஒன்பது மாதங்கள் தொடர்ந்த இந்த யுத்தம், பிறகு இந்தியாவின் நேரடித் தலையீட்டோடு ஒரு முடிவுக்கு வந்தது. சிறுபான்மையாக வாழும் ஹிந்து, பௌத்த சமூகங்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

யுத்தக் குற்றச்சாட்டு விவகாரம்

ஒன்பது மாதங்கள் தொடர்ந்த சுதந்திரப் போர், 93,000 பாகிஸ்தான் இராணுவத்தினர் சரணடைவதோடு ஒரு முடிவுக்கு வருகிறது.  இவர்களுள் 195 பேர் மீது யுத்த அபராதக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டன. இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் இராணுவத்தினர். இது தவிர வேறு எவர் மீதும் யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படவோ, விசாரிக்கப்படவோ இல்லை.

 

1973ல் யுத்தக் குற்ற நீதிமன்ற சட்டம் (War Crimes Tribunal Act of 1973) அமுலுக்கு வந்தது. இச்சட்டத்திற்குக் கீழேயே யுத்த காலத்தில் சரணடைந்து, யுத்த அபராதக் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ வீரர்கள் விசாரிக்கப்பட்டனர். சம காலத்தில் பிராந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாயின. பிராந்திய வல்லரசுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் தமது கடந்த காலப் பகையை மறந்து, சிம்லா ஒப்பந்தத்தில் கைத்தாச்சிட்ட கையோடு,  மேலும் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

 

1974ல் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் முத்தரப்புப் பேச்சு வார்த்தை புதுடில்லியில் ஆரம்பமானது. அரசியல், பொருளாதார ரீதியான பல்வேறு ஒப்பந்தங்கள் இதன் போது செய்து கொள்ளப்பட்டாலும், யுத்த அபராதக் கைதிகள் விவகாரம் இழுபறி நிலையைத் தோற்றுவித்தது.

இறுதியில் யுத்தக் குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று இணக்கம் காணப்பட்டது. இத்தோடு யுத்த அபராதக் குற்றச்சாட்டு விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது.

2008ல் ஷெய்க் ஹஸீனாவின் தேர்தல் வெற்றி

ஷெய்க் ஹஸீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி 2008ல் ஆட்சிக்கு வந்தது. இதன் போது யுத்த அபராதக் குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் எனத் தனது விஞ்ஞாபனத்தில் ஹஸீனா தெரிவித்திருந்தார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்தன. எதிர்கட்சிகளுள் ஒன்றான ஜமாஅத்தே இஸ்லாமி கட்சியையும், அதன் மாணவர் அமைப்பான சத்ர ஷிபிர் அமைப்பையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான தலைவர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

1973ம் ஆண்டு யுத்த அபராதக் குற்ற நீதிமன்ற சட்டத்தை அடிப்படையாக வைத்து, ஷெய்க் ஹஸீனாவால் 2010ல் உருவாக்கப்பட்ட சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் மூலம் விசாரிக்கப்பட்ட இவர்களுள் 8 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பும், அப்துல் காதிர் முல்லாஹ்விற்கு ஆயுள் தண்டனையும் ஆரம்பத்தில் விதிக்கப்பட்டது.

 

இவர்களுக்கு மேலதிகமாக மரண தண்டனை அறிவிக்கப்பட்டவர்களில் இருவர் முன்னாள் பிரதமர் காலிதா ஸியாவின் BNP கட்சியைச் சேர்ந்தவர்கள். அப்துல் காதிர் முல்லாஹ் தூக்கிலிடப்பட்டு, சில மணித்தியாலங்களுக்குள் முன்னாள் ஜனாதிபதியும், இராணுவ ஆட்சியாளருமான எச்.எம். இர்ஷாதும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இக்கட்டுரை எழுதப்படும் வரை, அவர் தடுத்து வைக்கப்பட்ட இடம் தெரியவில்லை. ஜமாஅத்தே இஸ்லாமி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், காலிதா பேகம் ஸியா, ஷெய்க் ஹஸீனா ஆகிய இருவரில் அடுத்த பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கப் போகும் ‘குயீன் மேகர்’ (Queen Maker) என அரசியல் விமர்சகர்கள் இர்ஷாதை வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் மீதான விமர்சனங்கள்

2010ல் ஷெய்க் ஹஸீனாவால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றத்திற்கும், சர்வதேச நீதிமன்றத்திற்கும் பெயரைத் தவிர எந்த சம்பந்தமும் இல்லை. பல சர்வதேச நிறுவனங்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்நீதிமன்றத்தின் சர்வதேசத் தரம் பற்றிய விமர்சனங்களை எழுப்பியிருந்தன.

 

1973ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அடிப்படையாக வைத்தே இந்நீதிமன்றம் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்குப் பிந்தைய நாற்பதாண்டு காலத்தில் சர்வதேச சட்டங்களில் கணிசமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன. குறிப்பாக ரோம் உடன்படிக்கை (Rome Statue) கைத்தாச்சிடப்பட்டதோடு, சர்வதேச நீதிமன்றமும் 1998ல் உருவாக்கப்பட்டது.

 

இப்புதிய முன்னேற்றங்கள் எதுவும் ஷெய்க் ஹஸீனாவின் யுத்தக் குற்ற நீதிமன்றங்களில் உள்வாங்கப்படவில்லை. 1973ம் ஆண்டு சட்டத்தின் உள்ளடக்கமும், வங்க தேச அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும், யுத்த அபராத நீதிமன்றத்தின் சர்வதேசத் தன்மையைக் கேள்விக்குட்படுத்துகின்றன.

 

இது பற்றி சர்வதேச சட்ட நிபுணர்களாலும், ராஜ தந்திரிகளாலும் கேள்விகள் எழுப்பப்பட்ட சந்தர்ப்பங்களில், அவற்றைத் தட்டிக் கழித்ததோடு, உரிய முறையில் தம் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் பின் கதவால் விடயங்களை சாதிக்கும் கைங்கர்யங்களில் வங்காள அரசு ஈடுபட்டமை பற்றிய போதுமான குறிப்புகள் இருக்கின்றன.

ஜமாஅத்தே இஸ்லாமி

ஜமாஅத்தே இஸ்லாமி என்பது இஸ்லாமியக் கருத்தியலை மையமாக வைத்து இயங்குகின்ற ஓர் அரசியல் கட்சியாகும். ஜனநாயகத்தை மட்டுமே சமூக, அரசியல் மாற்றத்திற்கான வழிமுறையாக அது முன்னிறுத்தி வருகின்றது. 1962ல் இருந்து பங்களாதேஷில் இடம் பெற்ற சகல தேர்தல்களிலும் அது போட்டியிட்டுள்ளது.

 

அய்யூப்கானின் சர்வாதிகாரத்திற்கெதிரான ஜனநாயக ரீதியான முன்னெடுப்புகளிலும், பிரிவினைக்குப் பின்னர் ஏற்பட்ட இராணுவ ஆட்சியை, ஜனநாயகத்திற்கு மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் (COP), ஜனநாயக செயன்முறை கமிட்டி (DAC) போன்ற கமிட்டிகளின் உருவாக்கத்திலும் முக்கிய பங்காற்றிய ஜமாஅத்தே இஸ்லாமி, ஷெய்க் ஹஸீனாவின் அவாமி லீக் மற்றும் காலிதா ஸியாவின் பீ.என்.பீ. (BNP) என்பவற்றுடன் இணைந்து இயங்கியது.

அவாமி லீக் தலைவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்களும் கைகோர்த்து இயங்குவதில் அப்போது பிரச்னை உருவாகவில்லை. 1991 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கம் அமைப்பதற்கு வருமாறு ஜமாஅத்தே இஸ்லாமிக்கு அவாமி லீக் அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1972- 1975 மற்றும் 1996-2001 காலத்தில் அவாமி லீக் ஆட்சியில் இருந்த போதும், யுத்த அபராத விவகாரம் பற்றிய எதுவித குரலையும் அவாமி எழுப்பவில்லை. யுத்த காலத்தில் புத்திஜீவியொருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஜமாஅத்தே இஸ்லாமி உறுப்பினரொருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கொன்றில் மரண தண்டனை தீர்ப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், உயர்நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பிலான மேன்முறையீடு எதுவும் கூட அரசாங்கத்தினால் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை. இந்நிலையில், 2008இற்குப் பிறகு, திடீரென இவ்விவகாரம் தலை தூக்கியமை ஏன் என்ற பலமான சந்தேகம் எழுகிறது.

ஷெய்க் ஹஸீனாவின் அரசியல் காய் நகர்த்தலா?

எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை. ஆனால், சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைகளின் ஊடாக அது இடம் பெற வேண்டும். யுத்தக் குற்றங்கள் இடம் பெற்றிருப்பின் அவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஆரம்பத்தில் இருந்தே கோரி வந்தது.

ஜமாஅத்தே இஸ்லாமி மீதும், எதிர்க்கட்சிகளின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவாமி லீக்கிற்கு பல்வேறு அரசியல் நலன்கள் காணப்படுகின்றன. காலிதா ஸியாவின் BNP நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகும்.

1991லும், 2001லும் BNP ஆட்சி அமைத்த போது, ஜமாஅத்தே இஸ்லாமி அதன் பங்காளிக் கட்சியாக இருந்தது. ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆதரவின்றி BNP ஒரு போதும் ஆட்சி அமைக்கின்ற சாத்தியம் இருக்கவில்லை.

எனவே, ஜமாஅத்தே இஸ்லாமியைக் கருவறுப்பதன் மூலம், நடைபெற இருக்கின்ற தேர்தல் வெற்றிகளை ஹஸீனாவின் அவாமிக் கட்சி ஒரேயடியாக சுருட்டிக் கொள்ள முனைகிறது. குறிப்பாக, நாடு சிக்கலான பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அதிலிருந்து வாக்காளர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு யுத்த அபராத விவகாரம் கையாளப்படுகிறது.

யுத்தக் குற்றச்சாட்டுகள் இத்தோடு முடியப் போவதில்லை. இத்தீர்ப்புகளை முன்னுதாரணமாக வைத்து (Follow Suit), மேலும் பல தலைவர்கள் தண்டனைகளை எதிர்நோக்கப் போகிறார்கள்.

இதன் மற்றொரு கட்டமாக நாட்டின் அரசியல் யாப்போடு முரண்படுவதாகக் கூறி, ஜமாஅத்தே இஸ்லாமி கட்சியை பங்களாதேஷ் அரசு ஒரே அடியாகத் தடை செய்துள்ளது. இவ்விதம் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதற்குரிய சாத்தியத்தை இல்லாமலாக்கி, அதன் மூலம் ஒரு கட்சி ஆட்சியை ஏற்படுத்தவும், நீண்ட காலத்திற்கு தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவுமே ஷெய்க் ஹஸீனா முயல்கிறார்.

அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம் ஷெய்க் ஹஸீனாவின் தந்தை ஷெய்க் முஜீபுர் ரஹ்மான், எழுபதுகளில் ஒரு கட்சி ஆட்சி முறையை அறிமுகப்படுத்தி, ஏனைய கட்சிகளைத் தடை செய்தமையும், இறுதியில் அது இராணுவ ஆட்சிக்கு வித்திட்டமையும்தான் பங்களாதேஷின் கடந்த கால வரலாறு.

அந்த வகையில் பார்த்தால், அப்துல் காதிர் முல்லாஹ்வின் மீதான மரண தண்டனை, ஷெய்க் ஹஸீனாவின் ஓர் அரசியல் காய்நகர்த்தல்தான். அது அவருக்கு வெற்றியைத் தரப் போவதில்லை என்பதையும், வரலாறு மனசாட்சியை விட நியாயமாக இயங்குகிறது என்பதையும் வரலாறு உணர்த்தத்தான் போகிறது.

- See more at: http://www.thoothuonline.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8/#sthash.im9wWTvi.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

வங்களாதேசத்தின் சுதந்திரப்போராட்ட காலங்களில் பல்லாயிரக்கணக்கான வங்காளிகளை பாகிஸ்தான் இராணுவத்துடன்சேர்ந்து படுகொலை செய்த அயோகியன் இவனாகும். இப்போதும் மதத்தின் பெயரால் வன்முறையைத்தூண்டி விடுபவனும் இவனே இவனால் உருவாக்கப்பட்ட ஜமாத் ஐ இஸ்லாமிக் கட்சி மிகவும் வன்முறை நிறைந்தது, தவிர வங்களாதேசத்தில் வாழும் இந்துக்களுக்கு எதிரான வன்முறையை இவனது தலைமையிலே நடக்கின்றன. தர்போது இவனது ஜமாத் ஐ இஸ்லாம்யக் கட்சியுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கலீத ஜிஜா குடும்பமே சேக் முயுபூர் ரஹ்மானை அவரது குடும்பத்துடன் கொலை செய்தது. காலிதா ஜிஹாவினது மகன் வங்காளதேசத்தில் ஒண்ணாம் இலக்கப் பொறுக்கி. இந்தப் பொறுக்கிக் கூட்டமே லண்டன் புறநகர்ப்புறங்களில் கடைகளில் மதுபானம் விற்கக்கூடாது என ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.