Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞாபக மறதியும் - நினைவாற்றலும் - காரணிகளும் பரிகாரமும்

Featured Replies

%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF.jpg

 

 

நினைவாற்றல் அல்லது ஞாபக சக்தி எனப்படுவது. தான் அனுபவித்த, கற்றறிந்த விடயங்களை தேவைப்படும்போது மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் அறிவாற்றல் மிக்கவனாக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும்.

 

நினைவாற்றல் குன்றுவதனால் பல விடயங்களில் தோல்வி ஏற்பட்டு பின்தங்கிவிட நேரிடும். அதுவும் பள்ளி மாணவர்களுக்கு பரிட்சை நேரத்தில் அவர்களின் நினைவாற்றல் திறன்தான் கை கொடுக்கும். ஏதாவது ஒரு  கேள்விக்கு பதில் மறந்து போனாலே டென்சன் ஆகிவிடுவார்கள். அதன் பின்பு அவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. அதே போன்றுதான் நேர்முக பரீட்சைக்கு தோன்றும் ஒருவருக்கும் உரிய நேரத்தில் சரியான பதில் தெரிந்திருந்தும் நினைவாற்றல் குறைவினால் பதில் கூற முடியாது தோல்வி அடைகின்றான்.

 

பொதுவாக நாம் எல்லோருமே நினைவாற்றல் மனதில்(நெஞ்சில்)தான் பதிந்துள்ளதாக எண்ணுகின்றோம். மனம், மனச்சாட்சி, நெஞ்சு என முன்வைப்பதெல்லாம் மூளையைத்தான் குறிக்கின்றன அதனால்தான் மூளை கோளாறு உள்ளவர்களை மனநோயாளி என குறிப்பிடுவது வழக்கத்தில் உள்ளன.

 

நினைவாற்றல் என்றால் என்ன? 

 

ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பது மட்டுமல்ல நினைவாற்றல்; மனதில் (மூளையில்) பதியப்பெற்று இருக்கின்ற அறிவில் இருந்துசரியான விவரத்தைச் தேவைப்படும் நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

 

ஒரு மாணவனை எடுத்துக் கொண்டால், பாடங்களை நன்றாகப் படித்துவிட்டு தேர்வுக்குச் செல்கின்றான். அவன் படித்ததில் இருந்து கேள்விகள் வருகின்றன. ஆனால், தேர்வறையில் இருக்கும்போது பதில் நினைவுக்கு வராமல் வீட்டுக்குச் சென்றபிறகு நினைவிற்கு வந்தால், அதனால் ஏதாவது பலன் இருக்குமா? நிச்சயம் இல்லை. பதில் தெரிந்தும் அது சரியான நேரத்தில் ஞாபகத்திற்கு வரவில்லை.

 

பலருக்கும் பல விஷயங்கள் நினைவில் இருக்கும். ஆனால், தேவையான நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் தவிப்பார்கள். தேவைப்படும் நேரத்தில் தேவையான செய்தி உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியாது போதலே ஞாபக மறதியெனலாம்.

 

சில விடயங்களை முக்கியமாக துக்கமான சம்பவங்களை, அல்லது துன்பப்படுத்தியவரை மறப்போம் மன்னிப்போம் என்று ஆலோசனை கூறுவார்கள். இங்கு மறப்போம்என்பது தாமாகவே எமது ஞாபகத்திற்கு வருவதை நாமாக தேவை கருதி மறப்பதாகும். அவ்வாறான சூழ்நிலையில் ஞாபக மறதி ஒருவகையில் உதவியாக அமைகின்றது.

 

மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒருநிலைப்படுத்தலுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மனதை எந்தளவுக்கு ஒருமுகபடுத்தி ஒரு விடயத்தில் கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு அது மனதிலே பதிகின்றது. வேறு விதமாக கூறுவதாயின் நாம் ஒன்றிற்கு மேலான வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும்போது. கவனம் சிதறடிக்கப்பெற்று அவை மனதிலே சிதறல்களாக பதிவாகின்றன. அதனால் நாம் அவற்றை தேவைப் படும் போது உடனடியாக நினைவாற்றலை ஏற்படுத்திக் கொள்ள முடிவதில்லை.

 

பாடசாலை மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முதல் தாம் கற்றவற்றை மீட்டல் செய்து மூளையில் பதியப் பெற்றவற்றை புதுப்பித்து ஒருங்கமைப்பதன் மூலமும், நேர்முக பரீட்சிக்கு செல்பவர்கள் முக்கியமான விடயங்கள் பற்றி மீட்டல் செய்து மூளையில் சிதறல்களாக பதியப் பெற்றுள்ளனவற்றை மேலே கொண்டு வந்து ஒருமுகமாக பதிவை புதுப்பித்தல் மூலமும் நினைவாற்றலை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

 

மூளையின் சக்தி என்பது அளவிட முடியாதது. ஒருவர் நூறாண்டுகள் வாழ்கிறார் என வைத்துக் கொண்டால்; இந்த 100 ஆண்டுகளில் ஒவ் வொரு வினாடியிலும் ஒரு சில விஷயங்களை நினைவில் சேகரித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவ்வளவு விஷயங்களையும் அவர் நினைவில் சேகரித்து வைத்தாலும்கூட தனது மூளை செயல்திறனில் 10ல் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துவதால் அந்தளவுக்கு திறன் வாய்ந்தது ”மனித மூளை‘‘ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 

ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் தன்னிச்சையாக தலையைச் சொறிந்து கொண்டு நிற்பதும், ஆசிரியர் அதற்கு தண்டனையாக தோப்புக் கரணம் போடச் செய்வதும் மறதிக்கு செய்யப் பெறும் சில அப்பியாசங்களாகும்.

தலையச் சொறியும் போது மூளை நடம்புகள் உயிதெழுகின்றன. அதேபோல் தோப்புக் கரணம் போடும் போது மைய நரம்தொகுதி உயிர்படைந்து மூளையைத் தூண்டுகின்றது.

அப்பியாசங்கள் மட்டுமன்றி நினைவாற்றல் திறன் அதிகரிக்க சத்தான உணவுகளை உண்பதன் மூலம் அனைவரும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

 

பொதுவாக நாம் எல்லோரும் நினைவாற்றல் மனதில்(நெஞ்சில்) பதிந்துள்ளதாக எண்ணுகின்றோம். ஆனால் மூளை கோளாறு உள்ளவர்களை மனநோயாளிஎன குறிப்பிடுவதும் வழக்கத்தில் உள்ளன. மனம், மனச்சாட்சி, நெஞ்சு என முன்வைப்பதெல்லாம் மூளையையே குறிக்கின்றன.

 

உலகிலேயே மிக மிக நுட்பமானதும், அதிசயமானதும் - மனித மூளையின் அமைப்பும் அதன் செயல்பாடும்தான். அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு மண்டை ஓட்டுக்குள் இருப்பதை ஒரு லொறியில் நிரம்பலாம்!

இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.

 

“ஞாபக மறதி” எனும் பலவீனம், இல்லாத மனிதன் உலகில் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியோர் வரை மறதி இல்லாத மனிதர் இல்லை. ஆனால் அது மனிதனுக்கு மனிதன் மறதியின் அளவுகளும், தன்மைகளும், பாதிப்புகளும் மாறுபடும். 

 

மறதிகள் பலவிதம். சிலர் பழகிய மனிதர்களின் பெயர்கள் அல்லது முகங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றனர். சிலர் பொருட்களின் பெயர்களை மறந்து விடுகின்றனர். சிலர் தம் உடைமைகளை, பொருட்களை எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுகின்றனர். சிலர் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளைக் கூட மறந்து விடுகின்றனர். சிலர் படித்த நூல்களை, நூலிலுள்ள முக்கிய கருத்துக்களை மறந்து விடுகின்றனர். சிலர் கடந்த கால விஷயங்களை மறந்து விடுகின்றனர். சிலர் நிகழ்காலத்தில் சிறிது நேரத்திற்கு முன் நடந்தவைகளைக் கூட மறந்து விடுகின்றனர்.

 

நம்முடைய சிந்தனை, நினைவுகள், நாம் நினைத்துச் செயற்படக் கூடிய அனைத்திற்கும் பெருமூளையே காரணமாக இருந்து செயல்படுகிறது. மனித மூளையின் செயல்களில் தாக்கங்களை உண்டு பண்ணும் காரணிகளை நாம் இனங்கண்டு கொண்டால் ஞாபக மறதி, சிந்திக்கும் திறன் குன்றிய நிலை, சோம்பேறித்தனம்என்பனவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

 

இவற்றின் முக்கிய காரணிகளாக கருதப்படுபவை தகுந்த போசாக்கின்மை, மூளைநரம்புகளில் ஏற்படும் சிதைவு, உற்சாகமின்மை. உடல் அப்பியாசமின்மைஎன்பனவாகும். இவற்றிற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு ஏற்ற தகுந்த பரிகாரம் செய்வதன் மூலம் ஞாபக சக்தியையும், சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

 

இவற்றுடன் ஆர்வமின்மை, முயற்சியின்மை, தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணம், பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு போன்ற உணர்ச்சி மற்றும் மனபாதிப்புகள், மன ஒருமையின்மை, கவனக்குறைவு, தப்பிக்கும் மனோபாவம் (Escapist Tendency), கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல். புகை, மது, போதைப் பழக்கங்கள், உடல்நலக் குறைபாடுகள், உடல்நோய்கள் (குறிப்பாக தொற்றாத வகை நோய்கள் - வலிப்பு, ரத்தசோகை, உயர் (அ) குறை தைராய்டு சுரப்பு, மாதவிடாய் நிற்கும் கால ஹார்மோன் பிரச்சனைகள்) என்பன மனிதனின் சிந்திக்கும் திறனை அதிகம் பாதிக்கின்றன.

 

நாம் படிக்கும் தகவல்களை முறைப்படி தொகுக்காவிட்டால் தேவையானபோது வெளியே எடுப்பதும் கடினம்.

 

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கிய காரணம் கவலைகளே. இரத்த ஓட்டம் குறையும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் ஏனைய முக்கிய காரணங்களாகும். மூளை சோர்ந்து விடாமல் கவனித்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும். எமது மனதை எந்தளவுக்கு ஒருமுகப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு எமது ஞாபக சக்தியையும் அதிகரிக்க முடியும்.

 

நினைவாற்றலின் வகைகள்

 

01. குறுகிய கால நினைவாற்றல்

 

எமது மூளையில் அத்தனை தகவல்களும் தொடர்ந்து சேமித்து வைக்கப்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டுவிடுகின்றன. இது குறுகிய கால நினைவாற்றல் எனப்படும்.

 

02. நீண்ட கால நினைவாற்றல்

 

எம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை, அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவை, நாம் செய்யும் தொழிலுக்கு தேவையானவை எமது மூளையில் நீண்ட கால நினைவுகளாக பதிந்து விடுகின்றன.

எமது மூளை பல செய்திகளையும் தகவல்களையும் சேமித்து வைத்துள்ளது. அவற்றுடன் புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பல ஆண்டுகளாக அந்த தகவல்கள் வெளிக் கொணரப்படாமல் போனால் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன.

நீண்ட கால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலவேளை சிரமப்படுவது அதனாலேயாகும். நீண்ட காலத்தின் பின்னர் நாம் சந்திக்கும் நபரின் அல்லது சிறுவயது நண்பரின் பெயர் ஞாபகத்துக்கு வராமல் இருப்பதை (ஆனால் அவரின் பெயர் நுணி நாக்கில் இருப்பது) இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

 

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு தேவையான மனோநிலை

 

01.தன்னம்பிக்கை

 

நினைவாற்றல் தொடர்பில் எமக்கு தன்னம்பிக்கை அவசியமாகும். நினைவாற்றல் என்பது மூளையின் திறமையாகும். இதனை பயிற்சியாலும் முயற்சியாலும் வளர்த்துக் கொள்ள முடியும். என்ற தன்னம்பிக்கை அவசியமாகும்.

 

02.ஆர்வம்

 

ஒரு விடயம் தொடர்பான ஆர்வமும் அவ்விடயம் தொடர்பில் ஞாபக சக்தி ஏற்பட காரணமாக அமையும்.

 

03.செயல் ஊக்கம்

 

தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விஷயங்கள் நன்றாக பதியும்.

 

04.விழிப்புணர்வு

 

மனம் விழிப்பு நிலையில் இருந்தால் எமது கவனமும், ஒருமைப்பாடும் மிகச் சிறந்ததாக இருக்கும். இதற்கு யோகாசனம்,தியானம், சமய வழிபாடுகள் துணை புரியும்.

 

05.புரிந்து கொள்ளல்

 

புரிந்து கொண்ட விடயங்கள் மனதில் பதியும்.

 

06. உடல் ஆரோக்கியம்

 

மாணவர்கள் நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ள செய்ய வேண்டியவை

 

01.பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.

 

02. படிக்கும் சூழல்

 

அமைதியான சூழலில் படித்து பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உண்டு. இரைச்சலான சூழலில் படித்து அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களும் இருக்கிறார்கள். படிக்கும் இடத்தை விட மனம் தெளிவாக இருப்பதே முக்கியமாகும்.

 

03. நினைவுக்குக் கொண்டு வருதல்

 

படிக்கும் பாடத்தை அடிக்கடி நினைவுக்கு கொண்டு வரல் வேண்டும். மீட்டல் பார்த்தல், மூலம் பாடவிடயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

 

04. மனப்பாடம் வேண்டாம்

 

மனப்பாடம் செய்வதால் பலனில்லை. பயந்தொடர்பாக நன்றாக விளங்கிக் கற்றகாக வேண்டும். குறிப்பிட்ட விடயத்தை நன்றாக புரிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். செயல் முறை கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மூலமாக மாணவர்கள் விடயத்தை நன்றாக புரிந்து கொள்வர்.

 

05. அன்றே படித்தல் வேண்டும்.

 

அன்று கற்பதை அன்றே படித்தல் வேண்டும்.

 

நினைவாற்றலை அதிகரிக்க செய்ய வேண்டியவை

 

01. மனதை ஒரு நிலைப்படுத்துதல்

 

யோகாசனம், தியானம், சமய வழிபாடுகளில் ஈடுபடல் போன்றவை மூலமாக ஆரோக்கியமான மூளைகளில் தகவல்களை குடியேற்றம் செய்வதன் மூலம் சிறந்த நினைவாற்றலை பெற முடியும்.

 

02. உடற்பயிற்சி

 

03. மூளைக்கு பயிற்சி வழங்குதல்

 

குறுக்கெழுத்துல் போட்டி, எண்புதிர், அயல் மொழிகளை கற்றல் போன்றன சில உதாரணங்களாகும்.

 

04. போசாக்கான உணவு (குறிப்பாக காய்கறிகள், பழவகைகள்)

 

05. போதியளவு உறக்கமும் ஓய்வும்

 

06. முதிய வயதிலும் ஏதாவது பணிகளை செய்தல்

 

வயதாக நினைவாற்றல் குறைவடையும், பணியில் ஈடுபட்டிருப்பவர் ஓய்வு பெற்ற பின் விரைவில் நோய்களுக்கு ஆளாவது இயற்கை தொடர்ந்து ஏதாவதொரு பணியில் ஈடுபட்டிருந்தால் மூளைக்கு வேலை கிடைக்கும் நினைவாற்றலோடு ஆரோக்கியமும் மேன்மை அடையும்.

 

07. உடலுக்கு, தேவையான அளவு நீர் அருந்துதல் வேண்டும்

 

08. மருத்துவ ரீதியில் துளசி இலையை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடிப்பது ஞாபக சக்தியை அதிகரிக்கும்

 

09. அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பதினைந்து கருஞ்சீரக விதைகளைமென்று தின்று வருதல் வேண்டும்.

 

10.தூதுவளை கீரையை குழம்பு மற்றும் பொரியல் செய்து வாரத்துக்கு ஒரு தடவை சாப்பிட்டு வந்தால் மூளைக்கு வலிமை கிடைக்கும்.

 

11. பசுமையான வில்வ இலையை அரைத்து சாறு எடுத்து குடித்துவந்தால் ஞாபக மறதி நீங்கி நினைவாற்றல் அதிகரிக்கும்.

 

ஞாபக மறதிக்கான காரணிகளும் பரிகாரங்களும்

 

இங்கதான் வச்சேன், ஆனா எங்க வச்சேன்னு தெரியலையே? என எதையாவது தேடிக் கொண்டிருக்கிறீர்களா?

 

அவ்வப்போது செய்யவேண்டிய முக்கியமான வேலைகள் கூட மறந்து விடுகிறதா?. 'கஜினி'யாகி விட்டோமே என்று பயப்படத் தேவையில்லை. இந்த ஞாபக மறதிக்கு முக்கியக் காரணம் மூளையின் நினைவுச் செல்கள் சிறிது சிறிதாக செயல் இழந்து வருவதுதான். நினைவுத்திறன் குறைபாடு இன்றைக்கு பெரும்பாலோனோருக்கு ஏற்பட்டு வருகிறது. 

 

இவர்கள் எண் விளையாட்டு, குறுக்கெழுத்துப் புதிர் போன்ற புத்திசாலித்தனமான விளையாட்டினை விளையாடுவதன் மூலம் நினைவுத்திறனை மீட்க முடியும் என்று மூளை நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் உண்ணவேண்டிய ஊட்டச்சத்துணவுகளையும் பரிந்துரைத்துள்ளனர். 

 

பச்சைக் காய்கறிகள் பச்சை இலை காய்கறிகளான ப்ரூகோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கீரைகள் போன்றவற்றில் வைட்டமின் பி6, பி12 மற்றும் போலேட் உள்ளது. இது மூளை நினைவுத்திறனுக்கு ஏற்றது. அல்சீமர் நோயாளிகள் இவற்றை அதிகம் உண்ண பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். 

 

இவற்றில் உள்ள உயர்தர இரும்புச்சத்து மன அழுத்தம் தொடர்பான நோய்களையும் தடுக்கிறதாம். தினசரி உணவில் கேரட் சேர்த்துக்கொள்வதன் மூலம் நினைவுத் திறன் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

தானியங்கள் சிவப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் தானியவகைகள் மூளைக்கு ஏற்றது. இவற்றை உண்பதன் மூலம் மூளை நரம்புகளுக்குத் தேவையான ஆக்ஸிசன் கிடைக்கிறது. இது மூளைக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்க செய்யும். 

 

முட்டை அவசியம் முட்டையில் உள்ள புரதம், வைட்டமின் பி காம்ளக்ஸ், போன்றவை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. நினைவுத் திறனை அதிகரித்து மூளை நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கிறது. 

 

எனவே தினசரி உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள். பச்சைத் தேநீர் பச்சைத் தேநீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக பரிந்துரைக்கப்படுகிறது. 

 

இதில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் மூளையின் நியூரான்களை ஆரோக்கியமானதாக்குகிறது. எனவே அல்சீமாரால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் தேநீர் அருந்துவது சிறப்பானது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

 

ப்ளுபெரீஸ் பழங்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் மூளைக்கு மிகவும் ஏற்றது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

ப்ளு பெரீஸ் பழங்கள் நினைவாற்றலை அதிகரித்து கற்கும் திறனை உயர்த்துகிறதாம். மூளை தொடர்பான அழுத்தத்தினை குறைக்கிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய், அல்சீமரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ப்ளு பெரீஸ் பழங்களை உண்ண கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

ஸ்ட்ராபெரீஸ் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடென்ஸ் அதிகம் உள்ளது. இவை மூளை நரம்புகளை பாதுகாத்து உடலுக்கு தேவையான கட்டளைகளை செலுத்துவதற்கு பாதுகாப்பளிக்கிறது. பாதாம் பருப்பு மீன்கள், பாதம் பருப்பில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கிறது. 

 

இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ், வைட்டமின் ஈ போன்றவை மூளையின் நரம்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் தடங்களின்றி நடைபெற வழிவகுக்கிறது. சுறுசுறுப்பு, விழிப்புணர்வு திறன் அதிகரிக்க இவற்றை தினசரி உணவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும் என நரம்பியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

டார்க் சாக்லேட் சாக்லேட் பிரியர்கள் சந்தோசமாய் இனி சாக்லேட் சாப்பிடலாம் ஏனெனில் டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ மூளைக்கு உற்சாகம் தருகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறதாம். எனவே டார்க் சாக்லேட் சிறிதளவு சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே இந்த உணவுகளை உட்கொள்வதோடு மூளைக்குத் தேவையான உற்சாகமான பயிற்சியினை மேற்கொள்வதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கலாம் என்று மூளை நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

போசாகின்மையை நிவர்த்தி செய்ய

 

மாவுச்சத்து வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் தாது உப்புக்கள் முதலியவையே மூளையை போஷிக்கும் ஊட்டத்தை கொண்டுள்ளவாக ஆய்வுகள் நிர்ணயிக்கின்றன.

 

மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.

 

ஒரு நாளைக்குப் பத்து இலட்சம் தடவைகளுக்கு மேல் நமது சிந்தனைகளை வகைப்படுத்தும் வேலையை மூளை செய்து கொண்டிருக்கிறது. தினசரி நம் உணவில் கிடைக்கும் (எரிக்கும்) மொத்தக் கலோரியில் முப்பது சதவிகிதத்தை மூளைதான் பயன்படுத்திக் கொள்கிறது. 

 

எனவே வயது வித்தியாசம் இன்றி மூளை நன்கு செயல்பட வேண்டும் எனில் மாவுச்சத்துப் பொருட்களில் உள்ள குளுகோஸில் இருந்துதான் தேவையான சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும். இந்தச் சத்துணவில் குறைவு ஏற்படும் போது ஞாபக சக்தியிலும் சிக்கல் வந்துவிடுகிறது.

 

இது மட்டுமல்லாது இரத்த ஓட்டம் தேவையான ஆக்ஸிஜனை மூளைக்கு விநியோகித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியமானது. தேவையான சத்துணவு கிடைக்காத போதும், மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறைந்த போதும் ஞாபகசக்தியில் குறைபாடு ஏற்படுகிறது. 

 

இதைத் தடுக்க சிறந்த உணவு முறையையே மருந்தைப்போல் பயன்படுத்தினால் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

 

ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்கள் பைரிடாக்ஸின் என்ற வைட்டமின் அதிகம் உள்ள பாதாம் பருப்பு சோயா பீன்ஸ், வல்லாரை, நாவற்பழம் முதலியவற்றை நன்கு உணவில் சேர்க்க வேண்டும். இது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய உப்பு வகைகளை சமன் செய்து உடலை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இத்துடன் பி12 வைட்டமினை உடல் ஏற்றுக் கொள்ளவும் உதவுகிறது.

 

தேவையான அளவு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட பாலிக் அமிலம் அதிகம் உள்ள தண்டுக்கீரை கொண்டைக்கடலை முதலியவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.

 

பால், தயிர் மற்றும் அசைவ உணவு வகைகளால் பி12 கிடைப்பதால் சோம்பேறித்தனம் குறையும். 

 

அரிசி, கோதுமை, கேழ்வரகு மேற்கண்ட உணவு வகைகளுடன் இரும்புச் சத்து நிறைந்துள்ள பேரிச்சம்பழம் பட்டாணி முதலியவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் நரம்புமண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இது சிந்தித்து செயல்படுவதில் அக்கறை காட்டத் தூண்டிக் கொண்டே இருக்கும். 

 

இந்த உண்மைகளை போஸ்டனின் டப்டஸ் பல்கலைக் கழகமும் வேல்ஸின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழகமும் பல ஆண்களையும், பெண்களையும் பரிசோதனை செய்து வெளிப்படுத்தி உள்ளன. எல்லா வயதுக்காரர்களும் கூர்மையாகச் சிந்திக்க அரிசி, பருப்பு மற்றும் பழவகைகளைத் தவிர்த்துவிடாமல் உணவில் சேருங்கள்.

 

ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவுகள்

 

ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், முலாம்பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலிபிளவர் முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கொத்தமல்லி கீரை, முருங்கைக்கீரை, பச்சைப் பட்டாணி, பால், தயிர், ஈரல் போன்ற உணவு வகைகளில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி இரும்புச்சத்து முதலியன ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லவை.

 

சிந்தனையைத் தூண்ட சில வழிமுறைகள்

 

சாதாரணமாக விஞ்ஞானிகள் புலன் ஞாபக சக்தியை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார்கள். 

 

1. நினைவுகள் ஒரு சில கணங்களுக்கு நிற்கும். 

 

2. புலன் ஞாபகம் (Sensory Memory). ஏறத்தாள அரை மணித்தியாலம் மட்டுமே நிற்கும் குறுகிய கால ஞாபகம் (Short Term Memory). 

 

3. நீண்ட காலமாக நிற்கும் நீண்ட கால ஞாபகம் (Long Term Memory) என மூன்றாகப் பிரிக்கிறார்கள். 

 

உண்மையில் இந்த மூன்று ஞாபகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மனித உடலில் சகல புலன்களில் இருந்தும் வருகின்ற நரம்பு கணத்தாக்கங்கள்  மில்லி செக்கனில் நினைவில் நிற்கும். அந்த நினைவில் சிறிது ஊன்றிக் கவனம் செலுத்தும் போது அவை ஏறத்தாள 30 செக்கன் வரை நிலைத்து நிற்கும். இந்த நேரத்திற்குள் மீண்டும் ஒருமுறை அது பற்றி நினைத்தால் அது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் ஞாபகத்திற்குள் சென்று பதியும்.        

 

`மனித மூளைக்கு மிக அபார திறமை இருக்கிறது' என அதனை ஆராய்ந்து அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். இவர்கள் மனித மூளையில் இரண்டு "குயிண்டிலியன்" (Quintillion) அளவுக்கு சின்னசின்ன செய்திகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும் '' என்று ஆராய்ந்தும் சொல்லியிருக்கிறார்கள்.

 

அதாவது "ஒன்று" என்ற எண்ணிற்குபிறகு 18 பூஜ்யங்களை சேர்த்தால் எவ்வளவு மதிப்புவருமோ அதுதான் "குயிண்டிலியம்" என்பதன் மதிப்பாகும். அதாவது மனித மூளையின் சக்தி 40 விதமான மொழிகளை நினைவில் கொள்ளுகின்ற அளவுக்கு "அபாரசக்தி" கொண்டது. 

 

இப்படி அதிக கொள்ளளவு கொண்ட மனித மூளையில் தேவையான அளவு தகவல்களைத் திரட்டி, சேமித்து பாதுகாப்பாக முறைப்படி வைக்காததுதான் இன்றைய இளையோர், முதியோரது குறைபாடாகும். 

 

ஓரு நூலகத்தில் பலவிதமான புத்தகங்கள் உள்ளன. ஆனால் அந்தப்புத்தகங்கள் ஒழுங்கான முறையில் அடுக்கி வைக்கப்படவில்லை. இதனால் நமக்குத் வேண்டிய புத்தகத்தை உடனே கண்டுபிடிக்க இயலாது. தேவையான புத்தகத்தை எளிதான முறையில்கண்டறிவதற்கு "புத்தகப்பட்டியல் அடங்கிய குறிப்பேடும் (Catalogue) அவசியம் தேவை" 

 

இந்த நூலகம் போலவே நமது மூளையும் ஒரு "ஓழுங்கில்லாத நூலகம்" (Dis-Organised) ஆகும். தேவையான புத்தகங்களை எளிதில் கண்டுபிடிக்க உதவும் குறிப்பேடு போல மூளையில் குவிந்து கிடக்கும் தகவல்களையும் எளிதில் கண்டுபிடிக்க உதவும் குறிப்பேடு போல மூளையில் குவிந்து கிடக்கும் தகவல்களையும் எளிதில் நினைவில் கொள்ள நமது மூளைக்கு நன்கு பயிற்சி கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட செய்திகளை, குறிப்பிட்ட நேரத்தில் நினைவில் கொண்டுவரும் "நினைவாற்றல் கலையை"' வளர்த்துக் கொள்ள வேண்டும். 

 

நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுவதற்கு பலவழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் "தொடர்பு ஏற்படுத்துதல் முறை" (ASSOCIATION) முறை ஆகும். பொதுவாக நமது மூளையில் சேமித்து வைத்திருக்கின்ற தகவல்களை புதிதான தகவல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கின்ற பொழுதுதான் நாம் கற்றபாடம் நினைவில் நிற்கின்றது. அறிவை பெருக்குவதற்கு "தொடர்புப்படுத்துதல்" மிகவும் உறுதுணையாக அமையும். 

 

சிறுகுழந்தையாக இருக்கின்ற பொழுது சில தகவல்களை நமக்குச் சொல்லியிருப்பார்கள். அவையெல்லாம் நம்மை அறியாமலேயே நம்முடைய மூளையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். நேரம் வரும்பொழுது அந்த செய்திகள் நம்மை அறியாமையிலேயே ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும். 

 

உதாரணமாக பக்கத்து வீட்டில் நெருப்புப் பிடித்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். அங்கு சென்று அவர்களுக்கு உதவி செய்வதற்கு முன் நெருப்பு பற்றி நாம் அறிந்து வைத்திருந்த விடயங்கள் யாவும் எம்முன் வந்து நிற்கும் 

 

எனவேதான் "ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்தி ஒருதகவலைக் கவனமாக நினைவில் கொண்டால் அந்தத்தகவல் மனதில் நிலைத்து நிற்கும்" என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

 

உதாரணமாக நீங்கள் கீழ்க்கண்ட பத்து வார்த்தைகளை வரிசையாக நினைவில் வைக்க வேண்டும் என முடிவு செய்வதாக வைத்துக்கொள்வோம். 

 

1. மேஜை. 

 

2. நண்பர்கள்.

 

3. வியாபாரம்

 

4. உரையாடல்

 

5. பழக்கவழக்கம்

 

6. விளையாட்டு

 

7. செய்தி அறிதல்

 

8. பாசம் கொள்ளுதல்

 

9. வெற்றி

 

10. படிப்பு

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை வரிசையாக நினைத்துக்கொள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே நீங்கள் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

 

உதாரணமாக ஒரு புதிய சூழலை மனதில் உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் பலசரக்குக் கடை மேஜை அருகே உங்கள் நண்பர்கள் வந்து நின்று நீங்கள் வியாபாரம் செய்வதை கவனிக்கிறார்கள். நீங்கள் வாடிக்கையாளரிடம் உரையாடல் செய்வதைப் பார்க்கிறார்கள். உங்கள் பழக்கவழக்கம் ஒரு விளையாட்டைப் போல இனிமையாக இருக்கும் செய்தி அறிந்ததால் உங்கள் மீது பாசம் கொள்கின்றார்கள். உங்கள் வியாபார வெற்றி , உங்கள் சிறந்த படிப்பினால் தான் உருவானது என எண்ணுகிறார்கள். 

 

இப்படி தொடர்பை ஏற்படுத்திப் பார்த்தால் மேலேகுறிப்பிட்டுள்ள அத்தனை வார்த்தைகளும் வரிசையாக மனதில் தங்கிவிடும். 

 

நினைவாற்றலை வளர்க்க உதவும் இன்னொரு முறை ``காட்சிப் படுத்துதல்'' (Visualisaion) ஆகும். அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களால் பெறப்பட்ட தகவல்களை அல்லது செய்திகளை காட்சியாக மனதில் உருவாக்கி நினைவில் நிறுத்திக் கொள்வதை இது குறிக்கும். காதல் நிகழ்வுகள், சண்டையில் பாவித்த சொற்கள், நிகழ்வுகள் இவை போன்றவை காட்சிகளாக பதியப் பெற்றுள்ளமையால் மனதில் இடம்பிடித்து விடுகின்றன. 

 

ஒரு தகவலை நினைவில் வைத்துக் கொள்வதற்கு  கற்பனையில்(Imagination), ஒரு காட்சியை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். படைப்புத்திறன் (Creative power) மூலம் நினைவில் கொள்ளும் இந்த முறையை பல மாணவ மாணவிகள் தங்களின் ` நினைவாற்றலை' வளர்த்துக் கொள்ள பயன்படுத்துகிறார்கள். 

 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள ஒரு இணைப்புக்கு நன்றி அலை!. அண்மையில் இரு விஞ்ஞானச் சொற்பொழிவுகளில் கேள்விப்பட்ட இரு நினைவாற்றலோடு தொடர்பு பட்ட விடயங்களை இக்கட்டுரை ஞாபகப் படுத்துகிறது.

1. நினைவு மங்குதல் (dementia) என்பது அனேகமான வயதான காலத்து வியாதிகளில் காணப்படும் ஒரு குணங்குறி. அமெரிக்காவில் 85 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50% ஆனோருக்கு நினைவு மங்குதல் இருப்பதாகக் கூறுகிறார்கள். நினைவு மங்குதலை தள்ளிப் போட வேண்டுமெனில் மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த விடயத்தில் use it or lose it என்ற நிலை!

2. நாளாந்த வாழ்வில் நினைவாற்றலை அதிகரிக்க ஒரு வழி, செய்யும் செயலை அல்லது கற்கும் விடயத்தை  ஒருமிப்புடன் செய்வதாகும். பல்வேறு இடைஞ்சல்களுடன் எலிகளுக்கு சில எளிய செயல்களைப் பழக்கிய போது, இடைஞ்சல்கள் குறைந்த நிலைமைகளில் எலிகள் தாங்கள் கற்ற செயல்களை நீண்ட காலம் நினைவில் வைத்திருந்தன. மனிதர்களின் உணர்வு நிலைகள் எலிகளை விட சிக்கலானதெனினும் மூளையின் இரசாயனம் என்பது எலிகளிலும் மனிதனிலும் ஒன்றே. இதனால் உணர்வுகளை முறையாகக் கையாளும் போது நினைவாற்றலும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.