Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் எல்லாம் எழுத்தாளராய்யா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் எழுத்தாளராய்யா?
வா. மணிகண்டன்

கே.என்.செந்திலைப் பற்றிய கட்டுரையை பதிவேற்றிவிட்டு நேற்று மதியத்துக்கு மேல் தபாலில் வந்திருந்த காலச்சுவடு இதழைப் புரட்டினால் அதில் கே.என்.செந்தில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரையின் ஒரு பத்தியில் எனது பெயரும் வந்திருக்கிறது. திட்டியிருக்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால் கிட்டத்தட்ட அப்படித்தான். நேற்று பாராட்டி எழுதிய அதே விரல்களால் இன்று சண்டைக்காக தட்டச்சு வேண்டியதாகிவிட்டது


கட்டுரையில் அந்தப் பத்தி இப்படி இருக்கிறது-


முகநூல் மற்றும் வலைப்பக்கம் வைத்திருப்பவர்களின் தாக்கத்தை இந்தப் புத்தகச் சந்தையில் அதிகமாகவே உணர முடிந்தது. படைப்பாளிகள் பல ஆண்டுகள் எழுதி அதன் வழி உருவான வாசக எண்ணிக்கையை விளம்பரங்களால் இவர்கள் அனாயசமாக கடந்து போகிறார்கள். தற்காலிக வெற்றியை நோக்கி ஓடுகிறார்களோ? அடுத்த ஆண்டு இந்த நூல்களைப் பற்றி யாரேனும் பேசுவார்களா? சில பாடல்கள் ஒன்றிரண்டு மாதங்கள் மாநிலத்தையே உலுக்கிய பின் இருந்த சுவடு தெரியாமல் போய்விடுமே அதே கதிதான் இந்த நூல்களுக்கும் நேருமோ என்று தோன்றியது. பதிவர், எழுத்தாளர், படைப்பாளி, கலைஞன், மேதை என்ற வரிசையில் பதிவர்கள் எழுத்தாளர்களின் இடத்தையும், எழுத்தாளர்கள் படைப்பாளியின் இடத்தையும்- அதற்குரிய உழைப்பும் அர்பணிப்புமின்றி- பிடிக்க முண்டுகிறார்கள். முகநூலிலும் வலைப்பூவிலும் எழுதும் பெரும்பாலானோர் தங்களை எழுத்தாளர்களாக நினைத்துக் கொள்வது அதனால்தான். இவர்களின் முதல் இலக்கு அனைத்திலும் சுவாரசியம். சுவாரசியம் ஒன்றை மட்டுமே கொண்ட சுஜாதாவை பின் தொடர்கிறார்களோ? சுஜாதாவின் எழுத்து மேலோட்டமானது. ஆனால் வாசிப்பு பரந்துபட்டது. இவர்களோ நுனிப்புல் வாசிப்பையும், மேலோட்டமான எழுத்தையும் கொண்டவர்கள். அராத்து, விநாயகமுருகன், வா.மணிகண்டன் போன்றோரின் நூல்கள் ஒரே வாரத்தில் சுமார் ஐநூறு பிரதிகளாவது விற்றிருக்கும். அராத்து, விநாயகமுருகன் ஆகியோரிடம் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் மணிகண்டனிடம் இந்த புகழ், வெளிச்சம், விற்பனையின் எண்ணிக்கை போன்றவற்றின் பின்னே சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ள முடியும்.


கடைசி வரியை அறிவுரை என்று எடுத்துக் கொள்ளலாம். அறிவுரைதானே? இருக்கட்டும், தப்பில்லை.


ஆனால் பாருங்கள்- ‘இணையத்தில் எழுதுவதற்கு எந்த உழைப்பும் தேவையில்லை, இங்கு எழுதுபவர்கள் வாசிப்பே இல்லாதவர்கள்’ என்றெல்லாம் எழுதியிருப்பதுதான் வருத்தமடையச் செய்கிறது. இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து பெரும்பாலான இலக்கியவாதிகளும் இதையேதான் சொல்கிறார்கள். இணையத்தில் எழுதுபவர்களுக்கு தங்களைப் போன்ற வாசிப்பு இல்லை; இங்கு எழுதுபவர்களுக்கு பெரிய அளவில் பயிற்சி இல்லை என்றெல்லாம் அடித்து விடுகிறார்கள். எப்படி இந்த முடிவுக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை.


இவர்கள் சொல்லும் உழைப்பு, அர்பணிப்பு, வாசிப்பு இத்யாதியெல்லாம் இல்லையென்றால் இங்கு வெகு நாளைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதுதான் உண்மை.


நம்பிக்கையில்லாதவர்கள் இணையத்தில் எழுதிப் பார்க்கலாம். அதிகமாக வேண்டாம்- ஒரு வருடம் போதும். உங்களின் அத்தனை உழைப்பையும், அர்பணிப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு சாதாரணமாக ஜல்லியடியுங்கள். சுஜாதாவின் அதே மேலோட்டமான எழுத்திலேயே எழுதுங்கள். உங்களின் அதிக நாட்களைக் கோரவில்லை. ஒரு வருடம். ஒரே ஒரு வருடம்தான். பதிவுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது வரும்படி ஒரு தளத்தை உருவாக்கிக் காட்டுங்கள். பிறகு சொல்லுங்கள். இங்கே எழுதுவதற்கு எந்த இழவும் தேவையில்லை என்று. சலாம் அடித்து ஏற்றுக் கொள்கிறேன்.


இன்னொரு விஷயம்- எழுத்தாளர், பதிவர், படைப்பாளி குழப்பம். வலைப்பூவில், முகநூலில் என எழுதுபவர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்றும் படைப்பாளிகள் என்று நினைத்துக் கொள்ளட்டுமே. அதில் என்ன தவறு? எங்குதான் இதை நினைத்துக் கொள்ளவில்லை. ஒண்ணேகால் கவிதை பிரசுரமானவர்கள் தங்களைக் கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லையா? வாழ்நாள் முழுமைக்கும் சேர்த்து ஒற்றைத் தொகுப்பை வெளியிட்டவர்கள் ‘இந்த உலகம் எங்களை கண்டுகொள்ளவே இல்லை’ என்று கதறுவதில்லையா? எனக்கு விளம்பரமே பிடிக்காது என்று சொல்லிக் கொண்டு சேனல்களில் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்குவதில்லையா? இணையத்தில் மட்டும் இல்லை- எல்லா இடத்திலுமே இப்படியானவர்கள் உண்டு.


மூன்று வரிகளை சேர்ந்தாற்போல தட்டச்சு செய்யத் தெரிந்தவர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்றும் படைப்பாளிகள் என்றும் நினைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அது அவர்களின் திருப்தியென்றால் தாராளமாக நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் அதைப் பற்றி வேறு யாரும் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. இங்கு புழங்கும் வாசகர்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்களில்லை. நிறைய வாசிக்கக் கூடிய நுட்பமான வாசகர்கள் ஏகப்பட்ட பேரை இங்கு கைநீட்டிக் காட்ட முடியும். சாவதானமாக நிராகரித்துவிடுவார்கள்.


செந்தில் குறிப்பிட்டிருக்கும் இன்னொரு விஷயம் புத்தகத்தின் ஆயுட்காலம். வெளியிலேயே தெரியாமல் செத்துப் போகும் புத்தகங்களை விடவும், குறைந்தபட்சம் வெளியில் தெரிந்து அடுத்த வருடம் அந்தப் புத்தகத்தைப் பற்றி யாருமே பேசாமல் மறந்து போவது நல்ல விஷயம் என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு வருடங்களும் எத்தனை ஆயிரம் புத்தகங்கள் வெளிவருகின்றன? அவற்றில் எத்தனை புத்தகங்களை புரட்டிப் பார்க்கிறோம்?


தனது புத்தகம் பற்றி வாயே திறப்பதில்லை என்று பேசும் படைப்பாளிகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இங்கு இலக்கியவாதி என்பதற்கான சில இமேஜ்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வாழ்நாள் முழுமைக்கும் கஷ்டப்பட வேண்டும்; எழுத்துக்காக உருக வேண்டும்; துன்பத்தோடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் எக்ஸெட்ரா; எக்ஸெட்ரா. உண்மையில் அப்படி இருக்கிறார்களோ இல்லையோ- ஆனால் அப்படியிருப்பதாகக் காட்டிக் கொள்ளும் ஆட்கள் இங்கு அதிகம்.


இந்தத் தியாகம் எல்லாம் தேவையே இல்லை.


எழுத்தாளர்கள் புத்தகத்தைப் பற்றி வெளியில் பேச வேண்டும். நமது குழந்தைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதில்லையா? அப்படித்தான். இந்தியாவில் வெளியாகும் ஆங்கில நூல்களை மிகச் சிறந்த வகையில் ப்ரோமோட் செய்கிறார்கள். ஆனால் நாம்தான் பெரிய வியாக்கியானங்களை பேசிக் கொண்டு ‘பதிப்பகத்தார் பாடு’ என்று விட்டுவிடுகிறோம். ஒரு புத்தகம் பரவலான வாசக பரப்பை அடைவதற்கான நேர்மையான செயல்பாடுகளை எழுத்தாளர்கள் செய்ய வேண்டும். தமது புத்தகம் பற்றிய நேர்மையான உரையாடல்களை தயக்கமே இல்லாமல் உருவாக்கலாம். இப்படியான உரையாடல்களை உருவாக்குவதற்கான மிகச்சிறந்த தளமாக இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.


இதைச் சொல்வது பீற்றிக் கொள்வது போலத்தான் இருக்கும் ஆனாலும் சொல்லிவிடுகிறேன். ஒரே வாரத்தில் ஐந்நூறு பிரதிகள்- சரியாகச் சொன்னால் பத்து நாட்களில் எந்நூற்று சொச்சம் பிரதிகள் விற்றதற்கு- வலைப்பதிவிலும், முகநூலிலும் எழுதியதைத் தவிர எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. புத்தக விளம்பரத்திற்கெனச் செய்த அதிகபட்ச செலவு வெறும் தொண்ணூற்று நான்கு ரூபாய். அவ்வளவுதான். டிஸ்கவரி அரங்கில் புத்தக அட்டையின் கலர் பிரிண்ட் அவுட்களை ஒட்டி வைத்திருந்தார்கள். அதைத் தவிர வேறு எந்தச் செலவும் இல்லை. புத்தகம் குறித்தான சச்சரவு எதையும் உருவாக்கவில்லை, வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யவில்லை, புத்தக வெளியீட்டுக்கு எந்தப் பிரபலத்தையும் அழைக்கவில்லை. ஆனால் இந்தப் புத்தகம் பற்றி திரும்பத் திரும்ப எழுதினேன். நண்பர்கள் பேசினார்கள். இவை அத்தனையும் இணையத்திலேயேதான் நடந்தது. ஆனால் நமது புத்தகத்திற்காக இதைக் கூடச் செய்யவில்லை என்றால் எப்படி?


இணையத்தில் எழுதுபவர்கள் வெறும் சுவாரசியத்தை மட்டுமே மையமாக எழுதுகிறார்கள் என்பதிலும் கூட மாற்றுக் கருத்து உண்டு. அநேகமாக செந்தில் அப்படியான எழுத்துக்களை மட்டுமே இங்கு வாசிக்கிறார் என்று நினைக்கிறேன். தமிழில் மிக ஆழமான கட்டுரைகளை சர்வசாதாரணமாக கூகிளில் தேடி எடுத்துவிடலாம். ஏகப்பட்ட பேர்கள் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு கவனம் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை.


ஆனால் காலம் இருக்கிறது.


இப்பொழுதுதான் இணையத்தில் தமிழை வாசிக்கும் ஒரு பெரிய வாசகப்பரப்பு உருவாகியிருக்கிறது. இது ஒரு வகையில் Transition period. இந்த வாசகர்களில் கணிசமானவர்கள் தங்களின் தேடுதலை விரிவுபடுத்தும் போது பிற எழுத்தாளர்களும் கவனம் பெறுவார்கள். கொஞ்சம் பொறுத்திருப்போம். அது கூடிய சீக்கிரம் நடந்துவிடும். இணையத்திற்கான வக்கீலாக நான் இருக்க விரும்பவில்லை. ஆனால் இணையத்தின் வீச்சையும் அதன் ஆழத்தையும் புரிந்து கொள்ளாமல் நிறைய பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வருத்தம். பேசுங்கள். ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் உள்ளே வந்து இங்கே கொஞ்சம் புழங்கி விட்டு பிறகு பேசுங்கள். நான்கு வலைப்பதிவுகளைத் திறந்து பார்த்துவிட்டு, சக இலக்கியவாதியோடு பேசியவற்றிலிருந்து ஒரு கருத்தை உருவாக்கி கொண்டு ஒரு கவளம் மண்ணை எடுத்து வீச வேண்டாம் என்பது மட்டுமே எனது வேண்டுகோள்.


http://www.nisaptham.com/2014/02/blog-post_9.html

வடிவேலு ஒரு படத்திலை நான் ஜெயிலுக்கு போறன் ..நான் ஜெயிலுக்கு போறன் என்று சத்தம் போடறமாதிரி ...நானும் எழுத்தாளன் நானும் எழுத்தாளன் என்று சத்தம் போட்டு பார்ப்பம் என்று பார்க்கிறன் 

.முகநூலில் சற்று முன்பு பார்த்தேன் இணையத்து அல்லது வலைபதிவுஎழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல என்ற பொருள்பட. நம்ம ஊரிலை கிராமத்து வழக்கத்தின்படி திருமண எழுத்து எழுதும் அதிகாரியை கூட எழுத்தாளன் என்று அழைப்பாங்கள் . இணையத்திலை எழுதுபவங்களை எழுத்தாளன் என்று அழைக்க கூடாது என்று நீங்க எல்லாம் சட்டம் போட்டால் என்னங்க நியாயம் .

முந்தி எல்லாம் ஒரு பத்திரிகைக்கு எழுதவேணும் பிரசுரிக்க வேணும் என்றால் அவன் மனசு வைத்தால் தான் அதுவும் எத்தனை வெட்டு குத்து வோடை . இந்த இணைய வசதி வந்தா பிறகு என்னை போலை உள்ள கந்தன் சுப்பன் எல்லாம் கிறுக்க கூடியதாக இருக்கு . நீங்க எங்களை எழுத்தாளன் என்று சொல்லாட்டி விடுங்க ..முதலில் வலை பதிவு வந்த பொழுது எழுதிய பொழுது எங்களுக்காக தான் எழுதினோம் ..இப்பவும் எங்களுக்காக தான் எழுதுகிறோம் . விரும்பினால் கை தட்டுங்க அல்லாட்டி விடுங்க... நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டிலும் நாம எங்களை எழுத்தாளர் என்று நினைச்சுக்குவோம் ...உங்களுக்கே மட்டுமே கொண்டாடிய எழுத்தாளர் என்ற பிரேத்தியேக கதிரை பறி போகிறதே என்ற பொறாமையின் காரணமாக உங்கள் காதிலை புகை வாறதுக்காக விட்டு விட முடியாது.

 

அண்மையில் சென்னையில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சென்று அல்லது அங்கு வெற்றி வாகை சூடின இணைய அல்லது வலைபதிவை தாயகமாக கொண்ட எழுத்தாளர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்... தொடர்ந்து அவர்களின் காதில் புகையை வர வையுங்கள்

 

1888599_702059389833876_1008984131_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

. விரும்பினால் கை தட்டுங்க அல்லாட்டி விடுங்க... நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டிலும் நாம எங்களை எழுத்தாளர் என்று நினைச்சுக்குவோம் ..
. அதே ....ஆமோதிக்கிறேன்
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி போகும் பக்கங்களில் வா.மனிகண்டனுடையதும் ஒன்று, அறிமுகபடுத்தியதுக்கு நன்றி கிருபன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.