Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தாயகத்தில் திட்டமிட்டு சீரழிக்கபடுகின்றார்கள், புலத்தில் எம்மை அறியாமல் சீரழிகின்றோம்” - லெனின் எம் சிவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

‘1999’ மற்றும் ‘கண் அன்ட் றிங் (A Gun and A Ring)’ ஆகிய ஈழத் திரைப்படங்களின் இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்கள் ‘கண் அன்ட் றிங்’ திரைப்படத்தின் பிரத்தியேக காட்சிக்காக கனடாவில் இருந்து பரிசுக்கு வருகை தந்திருந்தார். அவரை எமது ஊடக இல்லத்திற்கு அழைத்து அவருடன் ஒரு நேர்காணலை ஏற்பாடு செய்திருந்தோம். அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

ஊடக இல்லம்:-  ‘கண் அன்ட் றிங்’ திரைப்படத்தின் அனுபவங்கள் பற்றி எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?

லெனின்:- கண் அன்ட் றிங்’ திரைப்படம் புலம்பெயர்ந்த கலைஞர்களின் படைப்பு. இப்படத்தில் குறிப்பாக பரிசில் இருந்து மன்மதன் பாஸ்கி அவர்களும் ஜேர்மனியில் இருந்து தேனுகா கந்தராஜாவும் நடித்துள்ளார்கள். ஏனைய கலைஞர்கள் கனடாவில் இருந்தும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த யூன் மாதம் ஷங்காய் சர்வதேச திரைப்படவிழாவில் போட்டிக்கான படங்களில் தெரிவாகியிருந்தது. அதற்குப்பின்னர் கடந்த செப்டெம்பர் மாதம் கனடா மொன்றியல் உலகத் திரைப்படவிழாவிலே தெரிவாகியிருந்தது. அதற்குப்பின்னர் சிறிய திரைப்பட விழாக்களில் தெரிவாகி விருதுகளையும் பெற்றுள்ளது. இதன் பிரத்தியேக காட்சிகள் ரொறன்ரோ, அவுஸ்திரேலியாவில் காண்பிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பரிசில் காண்பிக்கப்படுகின்றது.

gun%202.jpg

ஊடக இல்லம்:-  இயக்குநர் என்ற வகையில் ‘ஷங்காய்’ திரைப்பட விழாவில் கலந்துகொண்ட உங்கள் அனுபவம் பற்றிக் கூறுங்கள்?

லெனின்:- உண்மையிலேயே அது ஒரு மறக்கமுடியாத அனுபவம்தான். ஏனென்றால் போட்டிக்காக அனுப்பப்பட்ட 2 ஆயிரம் படங்களில் பன்னிரண்டு படங்கள் மட்டுமே விழாவிற்குத் தெரிவாகியிருந்தது. அதில் ஒன்றாக எமது படமும் இருந்தது. பல நாடுகளில் இருந்தும் பெரிய பெரிய திரைப்படத்துறை வல்லுநர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் கலந்துரையாடி இனியில்லை எனும் அளவிற்கு பல அனுபவங்களைப் பெற்றுள்ளோம். இதனை நினைத்துக்கூட பார்க்கமுடியாத நிகழ்வாகத்தான் பார்த்தோம். இதில் அனுபவம் என்று கூறும்போது, இத்திரைப்பட விழாவிற்கு பிரதம விருந்தினராக பிரபல கொலிவூட் திரைப்பட இயக்குநர் ஒலிவர்ஸ்டோன் வந்திருந்தார். நாங்கள் செங்கம்பளத்தில் முதலாவதாக நடந்து சென்றோம். அதற்கடுத்ததாக எம்மைத் தொடர்ந்து அவர் வந்தார்.

அதற்கு முன்னதாக அவருடன் பேசும் வாய்ப்புக்கிடைத்தது. நாம் அவருடன் கைகுலுக்கி எம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். எமது படம் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது என அவரிடம் கூறினோம். அவர் மிகவும் சந்தோசப்பட்டார். அது எனக்கு மறக்கமுடியாத அனுபவம். ஏனென்றால், ஒலிவர் ஸ்ரோன் என்னில் பாதிப்பை ஏற்படுத்திய ஓர் இயக்குநர். இவ்வளவு இலகுவில் அவரைச் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் உரையாற்றினார். அவருடைய கருத்துக்கள் பெறுமதியாக இருந்தன. அதையும் தாண்டி ஒஸ்கார் விருதுகளை வென்ற இயக்குநர் ரோம்கூப்பர் வந்திருந்தார். அவர் நடுவராக இருந்தார். அவர் இந்தப்படத்தைப் gun%201.jpgபார்த்துவிட்டு, ஆக்கபூர்வமான விமர்சனங்களை எம்முன் வைத்தார். அது ஒரு இயக்குநராக எனக்கு நல்ல உதவிபுரிந்தது என நான் நினைக்கின்றேன். அத்தோடு ஜக்கிசானைச் சந்தித்தோம் பேசினோம். கானோரீசைச் சந்தித்தோம் பேசினோம். இப்படி பல இயக்குநர்களைச் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்புக்கிடைத்தது. அவர்களும் எம்மைப்போன்று இயல்பானவர்கள் என்று அறிந்தோம். எங்களுக்கென்று ஒரு திரைப்படத்துறை இல்லாத காரணத்தால் தான நாங்கள் இவ்வளவிற்குச் செல்லவில்லை என்பதை அவர்களுடன் பேசியதன் வாயிலாக அறிந்துகொண்டோம். 

ஆனால் எங்களாலும் இந்த அளவிற்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதனையே மிகப்பெரிய அனுபவமாக நினைக்கின்றேன்.

ஊடக இல்லம்:-  ‘கண் அன்ட் றிங்’ திரைப்படத்திற்கு மக்களின் ஆதரவுபற்றி நீங்கள் எப்படி எதிர்பார்க்கின்றீர்கள்?

லெனின்:- ஆம் மக்களின் ஆதரவு என்பது ஒரு முக்கியமான விடயம். திரைப்படங்கள் என்பது ஓர் இலகுவான விடயம் அல்ல. எத்தனையோ கலைஞர்களை உள்வாங்கி எமது கதைகளை வெளியில் கொண்டுவரும் விடயம். எமது படைப்புக்கள் அதாவது, புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புக்கள் எவ்வளவு கஸ்டங்களுக்கு மத்தியில் முன்னேறிக்கொண்டு வருகின்றன. இப்போது உலகத்தரத்திற்கு எமது படைப்புக்கள் சென்றுள்ளன. அடுத்த கட்டமாகச் செல்லவேண்டும் என்றால் எமக்கென்று ஒரு திரைப்படத்துறை வேண்டும். அதற்கு மக்களின் ஆதரவே மிகவும் முக்கியமானது.

gun%203.jpg

போடுகின்ற பணம் திரும்பவரவேண்டும். கலைஞர்கள் எவ்வளவோ நேரத்தைச் செலவுசெய்துள்ளனர். இதற்கு மக்களின் ஆதரவு கட்டாயம் தேவை. தற்போது சர்வதேச அளவிற்கு செல்லுமளவிற்கு அதாவது சர்வதேச பெரிய பெரிய திரைப்படங்களுடன் போட்டி இடும் அளவிற்கு நாங்கள் படம் எடுத்து எங்களால் முடியும் என்று நிருபித்துள்ளோம். எமது மக்கள் இதற்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும் என வேண்டி நிற்கின்றேன். மக்களின் ஆதரவு இன்றி ஒரு திரைப்படத்துறை சாத்தியமே இல்லை என்றே நான் கருதுகின்றேன்.

ஊடக இல்லம்:- வர்த்தகப் போட்டி நிறைந்த இன்றைய திரை உலகில் ஈழத்தமிழர்களின் படைப்புக்கள் வெற்றிபெறும் என்று நம்புகின்றீர்களா?

லெனின்:- இது சரியான நல்லதொரு கேள்வி. ஏனெனில், தென்னிந்திய திரைப்பட வர்த்தகப் போட்டிக்கு மத்தியில் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் படைப்புக்கள் வெற்றிபெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றது. ஆனால், வர்த்தக ரீதியில் அதேயளவு பணத்தைப் பெறுவது சாத்தியமற்றது. தென்னிந்திய திரைப்படங்களோ ஏனைய திரைப்படங்களோ ஏத்தனையோ கோடிக்கணக்கான பணங்களைக் கொண்டுவரக்கூடியவை. காரணம் அவை சென்றடைகின்ற மக்கள் வேறு. நாம் எமது ஈழத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் பார்ப்பதற்கான திரைப்படங்களை அதற்கான செலவில் தயாரிப்போமாக இருந்தால் கண்டிப்பாக வர்த்தக ரீதியிலும் வெற்றியடைய முடியும். தென்னிந்திய திரைப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஆயினும் வர்த்தக ரீதியில் வெற்றி பெறமுடியும் என நான் நம்புகின்றேன். எத்தனையோ மில்லியன் ஈழத்தமிழர்கள் புலத்திலும் ஈழத்திலும் உள்ளனர். அவர்களைநோக்கியதாக நாங்கள் படம் எடுத்தாலே வெற்றிபெறமுடியும். இதற்குத்தான் எமக்குத் திரைப்படத்துறை வேண்டும். கிட்டத்தட்ட அறுபது வருடகால போராட்டம் இது. இப்போதுதான் மெல்ல மெல்ல மிளிரத் தொடங்கியுள்ளது. சரியான திரைப்படத்துறையாக வரும்போது வெற்றிபெறும் என எதிர்பார்க்கின்றேன்.

ஊடக இல்லம்:-  நீங்கள் இதுவரை எடுத்த குறும்படங்கள் பற்றிக் குறிப்பிடவில்லையே...?

லெனின்:- ஆம் நான் 2005 ஆம் ஆண்டு ‘இனியவர்கள்’ என்ற குறுந்திரைப்படம் எடுத்தேன். அது 50 நிமிடங்களாக இருந்தது. அதுதான் எனது முதலாவது திரைப்படம். அது கனடாவில் நல்ல வரவேற்பைப் பெற்ற குறுந்திரைப்படம். அதற்குப்பின் ‘உறுதி’ என்ற குறுந்திரைப்படம் எடுத்தேன். அது ஆண்களிடம் உள்ள மன அழுத்தம் பற்றிக் குறிப்பிடும் படம். பின்னர் ‘பக்கத்து வீடு’ என்றொரு குறும்படம். இவற்றைத் தொடர்ந்து ‘1999’ முழு நீளத் திரைப்படம் எடுத்தேன்.

gun%204.jpg

ஊடக இல்லம்:-  குறும்படங்களை எடுத்துக் கொண்டிருந்த உங்களுக்கு முழு நீளத் திரைப்படங்களை எடுக்கும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

லெனின்:- ‘1999’ திரைப்படம் சொல்லப்படவேண்டிய கதையாக உள்ளது. அங்குள்ள குழு வன்முறைகள், அவை ஏன் அப்படி நடக்கின்றன என எனது தேடலில் கண்டுபிடித்த விடயம். அந்தக்கதையைச் சொல்வதற்கு ஒரு முழுநீளத் திரைப்படம் தேவைப்பட்டது. அதனால் தான் முழுநீளத் திரைப்படம் எடுக்கும் ஆர்வம் என்னுள் ஏற்பட்டது.

ஊடக இல்லம்:-  விருதுகளை நோக்கமாகக் கொண்டுதான் படங்களை எடுக்கின்றீர்களா, அல்லது அவ்வாறு அமைந்து விடுகின்றதா?

லெனின்:- கண்டிப்பாக விருதுகளுக்காக நான் திரைப்படம் எடுப்பதில்லை. ‘1999’ திரைப்படத்தைப் பார்த்தீர்கள் என்றால், எனது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற தமிழ் மாணவன் ஒருவன், ‘கபே சொப்’ ஒன்றில் வைத்து ஆள்மாறி இனங்கண்டு தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்குச் சென்றபோது, எனது மனத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. அங்கு சிங்களவன் எமது மக்களைக் கொல்கின்றான். ஆனால், இங்கு தமிழனே தமிழனைக் கொல்கின்றான். இது என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாத விடயம். அதற்கான ஒரு தேடலே என்னைச் சிந்திக்கவைத்தது. அப்போது குழு வன்முறைகளில் ஈடுபட்ட சிலரின் தொடர்புகளும் கிடைத்தது. அவர்களுடன் கலந்துரையாடியபோது சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இது அவர்களின் பிழையல்ல புலம்பெயர்ந்த ஓர் இனத்தில் குறிப்பாக இளைஞர்கள் பாதிக்கப்படுவதன் பிரதிபலிப்பே ஒரு குழு வன்முறையாக வெடிக்கின்றது. அந்தக் கதையைத்தான் ‘1999’ இல் வெளிக்கொண்டுவந்தேன்.

அதேபோன்றுதான் ‘கண் அன் றிங்’ திரைப்படம், சிறீலங்காவின் தமிழ் இனப்படுகொலை பற்றிய  சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான விவரணப்படத்தைப் பார்த்து விட்டு ஒருகிழமை என்னால் சரியாகத் தூங்கவோ, சாப்பிடவோ முடியவில்லை. அது என்னைக் கடுமையாகப் பாதித்தது. எனது பெயர்கூட லெனின் என்று வைத்தது முதல் அந்த இறுதிக்கட்டம் வரை போர் எனது வாழ்க்கையுடன் எப்படி பின்னிப்பிணைந்துள்ள ஒரு விடயமோ, அதேபோலவே புலம்பெயர் வாழ் மக்கள் எல்லோருக்கும் இருக்கும் என்றும், போர் முடிந்தாலும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் வந்து திரும்பத் திரும்ப எம்மனங்களைச் சுரண்டிக்கொண்டே இருக்கும் என்பதைப் பற்றிய கதையைச் சொல்வதே ‘கண் அன் றிங்’. விருதுக்காக இல்லாமல், எது எமது மனதைப் பாதிக்கின்றதோ அதையே படமாக எடுக்கின்றோம். அதை உண்மையாகச் சொல்லும்போது விருதுகளுக்குத் தெரிவாகின்றது என நான் நினைக்கின்றேன்.

ஊடக இல்லம்:-  திரைப்படத்துறையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

லெனின்:- திரைப்படங்களில் சிறுவயது முதலே எனக்கு ஆர்வம் இருந்துவருகின்றது. நிஜவாழ்க்கையில் இருந்து இன்னொரு வாழ்க்கைக்கு எம்மைக் கொண்டு செல்லும் சாதனமாகவே நான் அதனைப் பார்க்கின்றேன். அதில் இருந்த அளவுகடந்த ஈர்ப்பே என்னை உள்வாங்கியுள்ளது என நான் கருதுகின்றேன்.

ஊடக இல்லம்:-  ‘1999’, ‘கண் அன் றிங்’ இதற்கு அடுத்ததாக என்ன படம் தயாராக இருக்கின்றது?

லெனின்:- நிறையப் படங்கள் உள்ளன. எங்களிடம் ஏராளமான கதைகள் இருக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டுவரவேண்டும். ஆனால் தற்போது ‘கண் அன் றிங்’ திரைப்படத்தைத்தான் வெளிக்கொண்டு வருவதில் முழுமூச்சாக இருக்கின்றோம். மக்கள் ஆதரவைத்தான் எதிர்பார்த்திருக்கின்றோம். அதற்காகத்தான் தற்போது ஐரோப்பாவில் நிற்கின்றோம். இப்படி புலம்பெயர் தேசம் எங்கும் எமது மக்களைத் தேடிக் கொண்டுசெல்லவுள்ளோம். அதுதான் ஒரு திரைப்படத்துறைக்கு வழிகோலும் என்று நம்புகின்றேன். எம்மிடம் நிறையத் திட்டங்கள் உள்ளன. விரைவில் எல்லாவற்றையும் நிறைவேற்றுவோம்.

ஊடக இல்லம்:- யுத்தத்துக்குப்பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் மிகமோசமான சமூக சீர்கேடுகள் நாளும் அரங்கேறுகின்றன. இவை பற்றிய விழிப்புணர்வுக் கதைகள் பற்றி?

லெனின்:- அவைதொடர்பாக என்னிடம் தற்போது கதைகள் இல்லை. தமிழர் தாயகப் பகுதிகளில் அங்குள்ள கலைஞர்களால் ஐந்து முழு நீளத் திரைப்படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த கலைஞர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது. ஆனால், அங்குள்ள கலைஞர்கள் அங்குள்ள சீர்கேடுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களை எடுக்கவேண்டும். இவ்வாறான சீர்கேடுகள் புலம்பெயர் மண்ணிலும் வேறுவிதமாக நடக்கின்றன. அங்கு அவர்கள் திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றார்கள். இங்கு எம்மை அறியாமல் சீரழிகின்றோம். இதுவும் ஒரு முக்கியமான விடயம் என்றுதான் நினைக்கின்றேன். நாம் இங்குள்ள சீரழிவுகளை படமாக்கவேண்டும். எமது உறவுகள் ஈழத்தில் உள்ள கலைஞர்களுக்கு கைகொடுத்து அங்குள்ள சீரழிவுகளைப் படமாக்கவேண்டும்.

ஊடக இல்லம்:-  உங்கள் திரைப்பட முயற்சிக்கான செலவை ஏற்றுக்கொள்ள தயாரிப்பாளர்கள் குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கின்றனரா?

லெனின்:- இது நல்ல ஒரு கேள்வி. எமது ‘கண் அன் றிங்’ திரைப்படத்தைப் பார்த்தீர்கள் என்றால், அதன் தயாரிப்பாளர் விஷ்ணு முரளி. அவர் கதையை வாசித்துவிட்டு நல்ல ஒரு கதை, இது வெளியில் சொல்லப்படவேண்டிய கதை. எவ்வளவு செலவென்றாலும் எடுப்பம் என்றார். அதனால்தான் இந்தப்படம் இவ்வளவுக்கு வந்திருக்கின்றது. ஆனால், இதேபாங்காகத் தொடர்ந்து நாங்கள் இருக்கமுடியாது. இதனால் செலவழிந்த பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொடுக்கவேண்டியது எங்களின் கடமை. அதற்குத்தான் நாங்கள் மக்களின் உதவியை நாடி நிற்கின்றோம். விஸ்ணுவின் பணத்தை திருப்பிக்கொடுத்தால், அவரைப் போன்று ஆயிரம் பேர் இருக்கின்றனர் முன்வருவதற்கு. இதுவரை காலமும் யாரும் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால், போட்ட பணத்தையாவது திரும்பப் பெறுவது பெரிய விடயம். படம் எத்தனை விருதுகளை வென்றாலும் போட்ட பணத்தைத் தயாரிப்பாளருக்குப் பெற்றுக்கொடுத்தால் அது ஒரு செய்தியை வெளியில் சொல்லும். என்னை மாதிரி எத்தனையோ கலைஞர்கள் அபார திறமையுடன் இருக்கின்றனர். அவர்களுக்குப் பிரச்சினையே பணம்தான். இச்செய்தி அவர்களுக்கு தயாரிப்பாளர்களைப் பெற்றுக்கொடுக்கும்.

ஊடக இல்லம்:- புலம்பெயர் தேசம் மற்றும் தாயகத்தில் உள்ள கலைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

லெனின்:- எமது மக்கள் ஓர் இக்கட்டான நிலையில் உள்ளனர். இத்திரைப்படங்களும் எமது கதைகளும் மக்களை முதலில் சென்றடையவேண்டும். வெளி இனத்தவர்களைச் சென்றடையவேண்டும். தென்னிந்திய சினிமாக்களைப் போன்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் நிற்காமல், வர்த்தக நோக்கத்திற்காக ஒரு மசாலாபோன்ற திரைப்படங்களை அணுகுவதை விடுத்து, எமது கதைகளை, எமது மக்களின் கதைகளை வெளிக்கொணர வேண்டும். அதற்கொரு விழிப்புணர்வை கொண்டுவரவேண்டும் என்று நினைக்கின்றேன். அப்படித்தான் எனது இரண்டு படங்களையும் நான் செய்தேன். அதனால்தான், அவற்றுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அவ்வாறான மக்கள் தொடர்பான கதைகளை வெளிக்கொண்டுவரும்போது மக்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றேன்.

ஊடக இல்லம்:- ‘கண் அன் றிங்’ திரைப்படத்திற்காக முதன்முறையாக பிரான்சுக்கு வருகை தந்துள்ளீர்கள் அது பற்றி?

லெனின்:- பிரான்சில் எமது ‘கண் அன் றிங்’ திரைப்படத்தை ‘லிப்ட்’ என்கின்ற ஈழத்தமிழர் திரைப்படச் சங்கத்தினர் வெளியிடுகின்றனர். முதலில் எனது ‘1999’ திரைப்படத்தையும் இங்கு கொண்டுவந்தனர். அதன் மூலம் ஐரோப்பாவுக்கே என்னை அறிமுகம் செய்து வைத்தவர்கள். அது மாத்திரமன்றி மன்மதன் பாஸ்கியை எனது படத்தில் நடிக்க ஒழுங்கு செய்தவர்களும் அவர்களே. ஈழத்தமிழர் திரைப்படச் சங்கம் மிகவும் ஆரோக்கிய பூர்வமான அமைப்பு. புலம்பெயர்ந்த தமிழ் கலைஞர்கள் முன்னோடியாக அவர்களுடன் தொடர்ந்து வேலை செய்யவேண்டும். அவர்கள் ‘கண் அன் றிங்’ திரைப்படத்தை இங்கு வெளியிடுவதற்கு வேலைக்கும் செல்லாமல் பாடுபடுகின்றனர். இவ்வாறான அமைப்புகளின் ஊடாகவே திரைப்படங்களை வெளியிடுவது நல்லது எனக் கருதுகின்றேன். இது ஈழத்தில் உள்ள மற்றும் புலம்பெயர் கலைஞர்களை ஒன்றிணைத்து வளருமென நினைக்கின்றேன்.

இதேநேரம் பிரான்சில் ‘கண் அன் றிங்’ பிரத்தியேக காட்சிகள் சனிக்கிழமை காண்பிக்கப்பட்டன. மறுநாள் சுவிசில் பார்சல், சூரிச் நகரங்களில் காண்பிக்கப்பட்டன. மீண்டும் ஜனவரி 16, 18 ஆம் திகதிகளில் சுவிசின் ஏனைய நகரங்களில் காண்பிக்கப்படவுள்ளது. மீண்டும் பரிசில் எல்லா மக்களும் பார்க்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் பெப்ரவரி 15 ஆம் திகதி இலண்டனில் முதற்காட்சி காண்பிக்கப்படவுள்ளது. இதற்கு கனடாவில் இருந்தும் ஏனைய நாடுகளில் இருந்தும் 10 கலைஞர்கள் வருகைதரவுள்ளனர். மிகப்பெரிய ஒரு நிகழ்வாகத்தான் நாங்கள் அதனைப் பார்க்கின்றோம். அதன்பின்னர் ஜேர்மன், இத்தாலி, நோர்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் காண்பிக்கவுள்ளோம். பின்னர் கனடாவில் படத்தை முழுமையாகத் திரை அரங்குகளில் வெளியிடுவோம் என்றார். அவரது கலைப் பயணம் வெற்றிபெற வாழ்த்தி விடைபெற்றுக்கொண்டோம்.

சந்திப்பு: கந்தரதன்

நன்றி: ஈழமுரசு

 
 
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மெம் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""ஊடக இல்லம்:- வர்த்தகப் போட்டி நிறைந்த இன்றைய திரை உலகில் ஈழத்தமிழர்களின் படைப்புக்கள் வெற்றிபெறும் என்று நம்புகின்றீர்களா?
லெனின்:- இது சரியான நல்லதொரு கேள்வி. ஏனெனில், தென்னிந்திய திரைப்பட வர்த்தகப் போட்டிக்கு மத்தியில் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் படைப்புக்கள் வெற்றிபெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றது. ஆனால், வர்த்தக ரீதியில் அதேயளவு பணத்தைப் பெறுவது சாத்தியமற்றது. தென்னிந்திய திரைப்படங்களோ ஏனைய திரைப்படங்களோ ஏத்தனையோ கோடிக்கணக்கான பணங்களைக் கொண்டுவரக்கூடியவை. காரணம் அவை சென்றடைகின்ற மக்கள் வேறு. நாம் எமது ஈழத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் பார்ப்பதற்கான திரைப்படங்களை அதற்கான செலவில் தயாரிப்போமாக இருந்தால் கண்டிப்பாக வர்த்தக ரீதியிலும் வெற்றியடைய முடியும். தென்னிந்திய திரைப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஆயினும் வர்த்தக ரீதியில் வெற்றி பெறமுடியும் என நான் நம்புகின்றேன். எத்தனையோ மில்லியன் ஈழத்தமிழர்கள் புலத்திலும் ஈழத்திலும் உள்ளனர். அவர்களைநோக்கியதாக நாங்கள் படம் எடுத்தாலே வெற்றிபெறமுடியும். இதற்குத்தான் எமக்குத் திரைப்படத்துறை வேண்டும். கிட்டத்தட்ட அறுபது வருடகால போராட்டம் இது. இப்போதுதான் மெல்ல மெல்ல மிளிரத் தொடங்கியுள்ளது. சரியான திரைப்படத்துறையாக வரும்போது வெற்றிபெறும் என எதிர்பார்க்கின்றேன்.""

 

தென் இந்திய திரைப்படம் என்பது பிரதானமாக தமிழில் இருந்தாலும் அது தமிழர்களுடையாதோ அல்லது அவர்களில் கட்டுபாட்டில் உள்ள துறையோ அல்ல. அங்கு பணம் போடுபவர்களும் எடுப்பவர்களும் யார் யாரோ. அவர்களுடன் மலையாளம் கன்னடம் போன்ற மொழி படஙகளே தாக்கு பிடிக்க முடியாமல் உள்ளது. அதே நேரத்தில் தமிழ் திரை உலகத்த்தில் உள்ள பிரமாண்டம் காரணமாக புது கதைகள் புது முயற்சிகள் வர முடியாது உள்ளது . அதனாலேயே பல சந்தர்ப்பங்களில் மலையாளம் ஏனைய பிற மொழிகளில் குறைந்த செலவில் எடுத்த வெர்றி படங்களை மொழி மாற்றம் செய்கிறார்கள் . அதுவே புதிய கலைஞ்ர்களில் வரவிலும் உள்ளது ..தமிழக தமிழ் சினிமாவில்  இன்றையா நிலையில் யாரும் பழக பார்க்க முடியாது. விஜை , அஜித் போன்ற லூசர்களின் படங்களை பார்த்த்து விட்து அழுது புலம்ப முடியுமே தவிர ஒன்றும் செய்ய முடியாது....புலம் பெயர் தமிழர்களில் முயற்சிகள் சில காலத்த்தில் தமிழகாத்த்திலும் தாக்கங்களை ஏற்படுத்த்தலாம் ..நாங்கள் எங்களுக்களுக்காகவோ, நல்ல சினிமாவிர்க்காகவோ படம் எடுத்த்தால் அவர்களை முந்த வேண்டும் என்கிற தேவையோ நினைப்போ வராது

 

பல மில்லியன் தமிழர்கள் என்பது தவறு ...

வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.