Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் விமர்சனம்--இனம்

Featured Replies

10153685_3945695578389_486945155_n.jpg

என் விமர்சனம்--இனம்
----------------------------------
இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்கு முன்பும் யூதர்களை இனவெறியோடு ஹிட்லர் கொன்று குவித்த கொடுமை பற்றி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் இன்னும் கூட ஹிட்லரைக் கண்டித்து உலக அளவில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன . எடுக்கப்பட்ட பழைய படங்கள் திரையிடப் படுகின்றன . . அதற்காக கண்ணீர் விடுவதில்தான் மனித இனத்தின் ஆண்மையும் நேர்மையும் நிரம்பி இருக்கிறது . அதை விடுத்து ''யூதர்களுக்கு எதிரான போரில் முன்னூத்தி சொச்ச ஜெர்மனி ராணுவ வீரர்கள் கூடத்தான் அநியாயமாக இறந்தார்கள். யூதர்களை சுட்டுக் கொன்று சுட்டுக் கொன்று ஹிட்லர் படையினருக்கு.. பாவம், கையெல்லாம் வலித்தது தெரியுமா?" என்று யாராவது படம் எடுத்தால் அவர்களை நீங்கள் எந்த லிஸ்டில் சேர்ப்பீர்கள்?.

ஹிட்லரால் யூதர்கள் அநியாயமாக அழிக்கப்பட்டதின் காலகட்டத்தின் அடிப்படையில் அந்த யூத மக்களை வைத்தே மூளை வளர்ச்சி இல்லாத ஒரு யூத இன கதாபாத்திரம், ஆட்டம் பாட்டம் கூத்து, மற்றும் போர்க் காலத்திலும் கூட அவர்கள் ஜாலியாகவே இருந்தார்கள் என்று இன்று கூட யாராவது காமெடியாக ஒரு படம் எடுக்க முடியுமா? சும்மா விடமாட்டார்கள் யூதர்கள். ஆனால் ஈழத்தமிழர்களை வைத்து அப்படி ஒரு படம் எடுத்து, இதிலிருக்கும் உள்வஞ்சகம் தெரியாத நம்மில் சிலரையே, அதைப் பார்த்து சிரிக்கவும் வைக்கும் தந்திரத்தை செய்கிறது இந்த படம் .

முதல் தாக்குதலே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது வைப்பதில் இருந்தே இந்தப் படம் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் யார் இருந்திருப்பாகள் என்பது புரிகிறது. ஒரு பள்ளிக் கூடத்தில் மிக அமைதியான சூழலில் தமிழ் மாணவர்கள் படித்துக் கொண்டு இருக்கும்போது அங்கு வரும் விடுதலைப் புலிகள், கரும்பலகையில் வேட்டியை கட்டி அதில் படம் போட்டுக் காட்டி மாணவர்களை இயக்கத்துக்கு கொண்டு போக மூளைச் சலவை செய்து ஒரு காட்சி வருகிறது. இலங்கையில் தமிழ் மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் யில் சம உரிமை கொடுக்கப்பட்டு இருந்தால், அங்கு விடுதலை போராட்டமே உருவாகி இருக்காது என்ற உண்மையை மறைப்பது நியாயமா ?

போரினால் ஆதரவற்ற பிள்ளைகளுக்காக சுனாமியக்கா என்பவர் நடத்தும் ஆசிரமத்தில் வாழும் அநாதை தமிழ் சிறுவர் சிறுமியரை பற்றிய கதைதான் இந்தப் படம் . சுனாமியக்கா என்ற பெயரின் மூலமும் அது பற்றிய வசனத்தின் மூலமும், போரினால் மட்டுமா ஈழந் தமிழர்கள் அழிந்தார்கள்? சுனாமியாலும் கூடத்தான் தமிழர்கள் அழிந்தார்கள் என்று வலியுறுத்தி, சிங்களர்கள் செய்த இன அழிப்பின் வீரியத்தை மறைக்க முயல்கிறது படம் . அங்கே இருக்கும் தமிழ்ப் பெண்கள் மிக கவர்ச்சியாக உடை உடுத்துகிறார்கள் . போர்ச் சூழலிலும் ஆண்கள் பெண்களின் உடலழகை திருட்டுத் தனமாக ரசிக்கிறார்கள். என்று காட்டுவதன் மூலம் , தமிழர்களை கொச்சைப் படுத்துகிறார்கள்.

ஒரு நடுத்தர வயது தமிழர், தெரியாமல் கண்ணிவெடியில் உட்கார்ந்து விடுவாராம். எழுந்தால் உயிர் போய்விடுமாம். எனவே அவர் பல ஆண்டுகளாக அங்கேயே அதன் மேல் உட்கார்ந்தபடியே வாழ்கிறாராம். அவருக்கு தூரத்தில் நின்று யாராவது சாப்பாடு கொடுத்து விடுவார்களாம்.. 'என்ன முட்டாள்தனமான கற்பனை... அவர் இயற்கை உபாதைகளை எப்படி கழிப்பார் ? எப்படி குளிப்பார்?' என்றெல்லாம் கேட்பதோடு நின்றுவிடுகிற விஷயமில்லை இது. கண்ணிவெடி என்பது ஈழப் போர்க்களத்தில் போராளிகள் பயன்படுத்திய ஆயுதம் . ஆக இந்தக் காட்சிகள் மூலம், அதை வைத்து தமிழர்களை இப்படி கிண்டல் செய்யும் சந்தோஷ் சிவன், அப்படியே பாஸ்பரஸ் குண்டுகள் வீசும் சிங்களவன் பசியில் பாஸ்பரஸ் குண்டை தின்று வயிறு வெந்து செத்துப் போனான் என்றும் ஒரு காட்சி வைத்து இருந்தால் சந்தோஷ் சிவனை நாமும் கூட பாராட்டி இருக்கலாம்.

இலங்கையில் தமிழர்கள் பட்ட இழப்புகளை கடமைக்காவது கொஞ்சம் சொல்லும் ஒவ்வொரு முறையும் உடனே அந்த மன நோயாளிக் கதாபாத்திரம் நகைச்சுவையாக எதோ பேசும்படி காட்சி வைத்து, அந்த இன அழிப்பின் பாதிப்பு படம் பார்ப்பவர்கள் மனதில் நிற்காத வண்ணம் செய்து இருப்பதில், சந்தோஷ் சிவனின் வஞ்சகத் தந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது . தொட்டிலை ஆட்டிய மாதிரியும் ஆச்சு. அப்புறமாக பிள்ளையைக் கிள்ளிய மாதிரியும் ஆச்சு.

மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு வயதான ஈழத் தமிழ்ப் பெரியவர் தனக்கு சொந்தமான ஒரு ஆல்பத்தை எடுத்து புரட்டும்படி சொல்கிறார் . அந்த ஆல்பத்தில் முதல் பக்கம் அவரது புகைப்படம் கம்பீரமாக இருக்கிறது . அடுத்த பக்கங்களில் எல்லாம் கவர்ச்சி நடிகைகளின் படங்கள் இருக்கிறது . அதாவது அவர் இளம் வயதில் கவர்ச்சி நடிகைகள் பற்றி கற்பனை செய்தே வாழ்ந்தார் என்று சொல்கிறாகள். போர்க் களக் கதையில் வைக்க வேண்டிய கதாபாத்திரமா இது? இதன் மூலம் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையே கேவலப்படுத்துகிறார்கள்.

அங்கே போராளியாக இருந்த பலரும் பெண்களைக் காதலித்து ஏமாற்றிவிட்டு விட்டுவிட்டு சண்டைக்கு போய்விடுவார்கள் என்ற ஒரு தொனி வருகிறது படத்தில்.தவிர இலங்கைத் தமிழகர்கள் பலரும் சொந்த மண்ணை நேசிக்காதவர்கள் , வெளிநாடுகளுக்கு போய் சுகமாக வாழும் மோகத்தில் இருப்பவர்கள், ஆங்கில மோகம் கொண்டவர்கள் என்ற தொனியும் பார்த்தீனிய விஷச் செடியாய் பரவிக் கிடக்கிறது.

இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த நார்வே மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களை கேவலப்படுத்தும்படியாக சில வசனங்கள் காட்சி அமைப்புகள் கேமரா கோணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போர் நடந்த பகுதியில் இருந்து கிளம்பும் செஞ்சிலுவைச் சங்க அலுவலர் ஒருவர் அந்த மனநோயாளி சிறுவனின் கையில் நூறு டாலர் கொடுக்கிறார். அவன் சிரிக்கிறான் . 'காசு கொடுத்தேன். அவன் சந்தோசமாகத்தான் சிரித்தான்' என்று அவர் கூறுகிறார் . அதாவது 'என்னதான் தமிழர்களை அசிங்கப்படுத்தினாலும், காசு கொடுத்துட்டா போச்சு' என்று சொல்லாமல் சொல்கிறது இந்தக் காட்சி.

விடுதலைப் போரில் ஈடுபட்ட ஒரு போராளி ஊருக்கு வந்து சாப்பிடும்போது "அப்பாடா .. நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. அங்க எல்லாம் கிடைக்காது. நிம்மதியா தூங்கி ரொம்ப நாள் ஆச்சு "என்று கூறுகிறான் . அதாவது போராளிகளை சாப்பாட்டு ராமன்கள், விருப்பமில்லாமல் போராளிகளாக இருந்தவர்கள் என்று சித்தரிக்கும் நோக்கம் இதில் வஞ்சகமாக இருக்கிறது. உலக வரலாற்றிலேயே உண்ணாவிரதத்தில் உட்கார்ந்து கடைசிவரை ஒரு துளி தண்ணீர்கூட அருந்தாமல் செத்துப் போன போராளி திலீபன் ஆன்மா இவர்களை மன்னிக்குமா?

போராளி இயக்கத்துக்காக பணியாற்றியது பற்றி கூறும் ஒருவனிடன் திடீரென்று சரிதா " குனியக் குனிய குட்டுறவனும் முட்டாள். குட்டக் குட்டக் குனியறவனும் முட்டாள் " என்று சொல்வார் . மேலோட்டமாகப் பார்த்தால் அது ஏதோ சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசப்பட்ட வசனம் போல தோன்றும். ஆனால் ஆழ்ந்து நோக்கினால்தான் அது போராளி இயக்க உறுப்பினர்களையும் தலைவர்களையும் விமர்சிக்கும் வசனம் என்று புரியும்.

ஆசிரமத்தில் உள்ள பிள்ளைகள் யாரும் போராளி இயக்கங்களில் சேர்ந்து விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு சின்ன வயதிலேயே பால்ய விவாகம் செய்து வைக்கிறார்கள் என்ற ஒரு அரைவேக்காட்டுத்தனமான காட்சி .

ஒரு சிங்கள புத்த சாமியார் ஆற்று நீரை பாத்திரத்தில் மொண்டு பானையில் ஊற்றும்போது சில மீன்கள் பானையின் வடிகட்டியில் சிக்கிக் கொள்ளும். . உடனே அந்த சிங்கள சாமியார் அந்த மீன்களை பத்திரமாக எடுத்து ஆற்றில் விடுவார் . அவ்வளவு நல்லவர்களாம் அவர்கள். அதுமட்டுமல்ல , பால்ய விவாகம் செய்து கொண்டு வாழப் போகும் இரண்டு ஜோடிகளுக்கு அவர் அன்போடு ஒரு மாதுளம்பழம் கொடுப்பாராம் . அந்த ஜோடிகள் இரவில் அந்த மாதுளம் பழத்தை சாப்பிட்டு பால் அருந்திவிட்டு அதாவது பாலும் பழமும் சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொள்வார்களாம். மிச்சமுள்ள பழத்தை அந்த வீட்டுக்குள் நுழையும் ஒரு போராளி வீரன் சாப்பிட்டுவிட்டு பசியாறுவானாம். பாவிகளா ! இலங்கையில் புத்த பிட்சுகள் இப்படியா இருந்தார்கள்? இருந்திருந்தால் ஒரு தமிழன் உயிராவது போயிருக்குமா? ஒரு தமிழ்ப் பெண்ணாவது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு இருப்பாளா? தவிர தமிழர் பகுதியில் சிங்கள புத்த பிட்சு இருந்ததே இல்லை எனும் நிலையில் இப்படிக் காட்டுவதன் மூலம் சிங்களர்கள் இலங்கை முழுக்க வாழ்ந்ததாக பொய் வரலாறு புனைகிறார்கள்.

'தமிழர் பகுதியில் நுழையும் இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளை மட்டும்தான் வேட்டையாடும் . மாறாக தமிழ் மக்களை ஒன்றும் செய்யாது. அப்படி இலங்கை ராணுவத்தான்கள் விடுதலைப்புலி ஆட்களை சுடும்போது இடையில் சிக்கி தமிழ் ஆட்களும் செத்திருக்கலாம்' என்று பல காட்சிகளின் மூலம் பச்சைப் பொய்யை சொல்கிறார்கள் . விடுதலைப் புலிகளை சுடும் இலங்கை ராணுவத்தினர், தங்கள் அருகில் நிற்கும் அப்பாவித் தமிழர்கள் மீது குண்டு படக் கூடாது என்று பதறும் அளவுக்கு நல்லவர்களாம். அதுவும் அந்த மன நோயாளி சிறுவனிடம் இலங்கை ராணுவத்தான் ரொம்பவே அனுதாபம் காட்டுவதாக ஒரு நீலிக்கண்ணீர் காட்சி. 'பெண்களை இலங்கை ராணுவம் கொல்லாது. போராளி இயக்கங்களால்தான் ஈழத் தமிழர்கள் அழிந்தார்கள்' என்ற கருத்தை விதைக்கும் வகையில் பல காட்சிகள்.

போரில் இறந்து கிடக்கும் ஒரு சிங்கள ராணுவத்தானின் கையில் அவனது குழந்தையின் புகைப்படம் இருக்கும். அதாவது மகள் மீது பாசமுள்ள தந்தையான அந்த சிங்கள ராணுவத்தானை போராளிகள் அநியாயமாக சுட்டுக் கொண்டு விட்டார்களாம்.

கடைசியில் அழிந்து கிடக்கும் ஒரு பகுதியில் உடைந்து போன விநாயகர் சிலை , இயேசு படம் இவற்றோடு புத்தர் சிலையும் இருக்கிறது . அதாவது "யோவ் தமிழன்களா ! இலங்கையில் கோயிலும் சர்ச்சும் பள்ளிவாசலும் மட்டுமா இடிக்கப்பட்டது? புத்தர் சிலைகளும்தான் அநியாயமாக இடிக்கப்பட்டன. பாவம் சிங்களர்கள் "என்று நம் நாக்கை வைத்தே சிங்களனுக்கு ஆதரவாக உச்சுக் கொட்ட வைக்கப் பார்க்கிறார்கள்.

இன்னொன்று.... ஒரு காட்சியில் ஒரு ஆமையின் மீது அமெரிக்க டாலர் நோட்டு ஒட்டிக் கொண்டு இருக்க, அது அப்படியே கடலுக்குள் இறங்கி தப்பிப் போய்விடும் . அதாவது இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படக் காரணம் அமெரிக்காதான். அதற்கு சிங்களர்களைக் குறைசொல்வது தப்பு " என்று மறைமுகமாக நம்மை மழுங்கடிக்கப் பார்க்கிறார்கள் இந்த இனம் படத்தில் "

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக படத்தில் சில காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அதன் தொடர்ச்சியாகவோ அதற்கு முன்னரோ அதற்கு நேர்மாறான காட்சிகளை வைத்து அந்த ஆதரவுக் காட்சிகளை வலுவிழக்கச் செய்திருக்கும் கபட நாடகத்தைதான் தாங்க முடியவில்லை .

"லீடர் சாகும்போது நான் பக்கத்துலதான் இருந்தேன் . சாகும்போது அவர் கண்ணு தொறந்து இருந்தது " என்று ஒரு சிறுவன் கூறுவான் . ( சிங்களர்களை சந்தோஷப் படுத்துவதற்காக இதன் மூலம் பிரபாகரன் இறந்து விட்டார் என்றும் பிரபாகரன் உடன் இருந்தது எல்லாம் சிறுவர்கள்தான் என்றும் உண்மைக்கு மாறாக சொல்லி போராளிகளை இழிவு படுத்துகிறார்கள்.) உடனே பக்கத்தில் இருக்கும் அந்த மன நோயாளிக் கதாபாத்திரம் கண் தொறந்து கிட்டே செத்துப் போனவங்க திரும்ப வருவாங்க " என்று சொல்கிறது . மேலோட்டமாகப் பார்த்தால் இது ஏதோ பிரபாகரனுக்கு புகழ் மாலை சூட்டும் காட்சி போல தெரியும்.

ஆனால் அதற்கு சில காட்சிகள் முன்பு வேறு இரண்டு நபர்கள் சாகும்போதும் இதே வசனம் சில பெண்களால் சொல்லப்படுகிறது . ஆனால் கவனிக்க வேண்டிய பிரபாகரன் சம்மந்தப்பட்ட காட்சியில் இந்த வசனத்தை சொல்பவர் மூளை வளர்ச்சி இல்லாதவர் என்று காட்டுவதன்மூலம், பிரபாகரன் திரும்ப வருவார் என்று நம்புபவர்களும் அப்படியே என்று நக்கலடிக்கிறது இந்தப் படம்.

ராணுவ விமானங்கள் குண்டு போட பதுங்கு குழிக்குள் பதுங்கி தமிழ் மக்கள் கதறுவது காட்டப்படுகிறது . ஆனால் அதை சினிமாத்தனமாக படமாக்கி எல்லாரும் தாக்குதலில் தப்பித்துக் கொள்கிறார்கள் .ஒரே ஒரு சிறுவன் மட்டுமே கொல்லப்படுகிறான் என்று காட்டி மாய்மாலம் செய்கிறார்கள்.

ரஜினி என்ற இந்து பெண்ணையும் ஆயிஷா என்ற இஸ்லாமியப் பெண்ணையும் சிங்கள ராணுவ வெறியர்கள் கற்பழிப்பதும் அதை இன்னொரு ராணுவ வீரன் கேமராவில் வீடியோ எடுப்பதையும் காட்டுகிறார்கள். உடனே அந்த படையின் மேஜரான சிங்களன் " இதெல்லாம் தப்பு இல்லையா? இப்படி எல்லாம் செய்யக் கூடாது " என்று கூறி நடக்கும் தவறுக்கு வருத்தப்படுவது போல பசப்பலான ஒரு காட்சி. இதன் மூலம் சிங்கள ராணுவத்தால் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது எங்கோ ஓரிரு இடங்களில் மட்டும் நடந்த சம்பவம் . மற்றபடி சிங்கள ராணுவத்தான்கள் ஒழுக்க சீலர்கள் என்று போர்ஜரி சான்றிதழ் தருகிறார் சந்தோஷ் சிவன் . ஆனால் அதே நேரம் அதற்கு முந்தைய காட்சிவரை ரஜினி மற்றும் ஆயிஷாவுடன் இருந்த போராளிகள், குண்டு விழுந்ததும் அந்த இருவரையும் விட்டுவிட்டு ஓடிவிட்டதாக மறைமுகமாக சொல்வதன் மூலம், போராளிகளை கேவலப்படுத்துகிறார்கள்.

தமிழினம்தான் என்று இல்லை . பொதுவில் ஒரு பாதிக்கப்பட்ட இனத்தை ஆதரித்து படம் எடுப்பதுதான் படைப்பாண்மை. முடியாவிட்டால் (வாயைப்) பொத்திக் கொண்டு இருக்க வேண்டும். அதை விடுத்து, யாரிடமோ எதையோ வாங்கிக் கொண்டு, குற்றவாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து , அநியாயமாக அழிக்கப்பட்ட ஒரு இனத்தை கிண்டல் செய்து படம் எடுத்து, அதற்கு இனம் என்று பெயர் வைத்து வெளியிடுவது என்பது, செத்து அழுகிப் போன பிணத்தை புணர நினைக்கும் ஒரு சைக்கோவின் மன நிலையையே வெளிப்படுத்துகிறது .

இது போன்ற படங்கள் வெளியாவதும் அதைப் பார்ப்பதும் தமிழ் இனத்தின் தலையெழுத்து .

இனம் ... ஈனம்!

நான் எழுதி இன்றைய தின இதழில் வெளியாகி இருக்க்கும் வடிவம் கீழே

http://www.readwhere.com/read/c/2635745

எனது எந்தக் கட்டுரைக்கும் லைக் போடுங்கள் அல்லது ஷேர்
---------------------------------------------------------------------------------------
செய்யுங்கள் என்று நான் இதுவரை யாரையும் கேட்டது இல்லை.
-----------------------------------------------------------------------------------------
ஆனால் இதை எல்லாரும் ஷேர் செய்யுங்கள் . நமது இனத்துக்காக !
------------------------------------------------------------------------------------------------

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை 'மெட்ராஸ் கபே'க்களை எதிர்த்துக் கொண்டே இருப்போம். அவன் வேலை செய்கிறான். அதை நாம் எதிர்க்கிறோம். நாமும் வேலை செய்வோம். இந்தப் படைப்புகளுக்குப் பதிலடி படைப்புகளை உருவாக்குவோம். அப்படியான படைப்புகள் வந்தால் அதற்கு உறுதுணையாக இருப்போம். 

 எமது நியாயத்தை (ஓரளவேனும்) எடுத்துச்சொல்லும் படைப்புகளுக்கு நாம் கொடுத்த கொடுத்த ஆதரவு என்ன என்பதை இப்பொழுது சிந்தித்துப்பார்ப்போம்.

இதுவரை நம் வலியை, நமக்கு இழைக்கப்பட்ட அநீதியை, நாம் பட்ட வேதனையை ஒப்பனை இன்றி அப்பட்டமாக திரைமொழியோடு படைத்திருக்கிறோமா? எதிரிகளின் படைப்புகளில் இருக்கும் நேர்த்தி, நம் வலியைச் சொன்ன படைப்புகளில் இருந்திருக்கிறதா? 

எதிர்ப்பது என்பது எதிர்வினை ஆற்றுவது. இதையே எத்தனை நாளைக்கு செய்வோம்? எதிர்வினை ஆற்றியது போதும். இனியொரு விதி செய்வோம். 

இப்போது முள்ளிவாய்க்கால் அவலத்தைச் சொல்லும் திரைக்கதை முழுமை பெறும் நிலையில் உள்ளது. பார்க்கத்தானே போகிறோம், துரோகிகளை எதிர்க்க இணையும் அந்தக் கரங்களில் எத்தனைக் கரங்கள் இந்த எம்மை  வலுப்படுத்தப் போகிறது என்று?

போலி கருத்து சுதந்திரம் பேசும் இந்தத் துரோகிகளை நாளைக்கே உங்கள் நாடுகளுக்கு வரவழைத்து மேடையேற்றி அழகு பார்த்து, இங்கே எதிர்காலத்தை பணயம் வைத்துப் போராடும் எம் மாணவச் செல்வங்கள் முகத்தில் கரி பூசிவிடாதீர்கள்...! உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்..

 

Edited by செங்கொடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.