Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
பிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம்
 
 உலகம் முழுவதும் உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு பிடித்த நாடு பிரேசில். அதற்கப்பால் உலகின் மிகப் பெரிய நாடுகளில் (8.511.965 க்ம்) ஒன்றான பிரேசிலை அறிந்து வைத்திருப்பவர்கள் அரிது. மேற்குலகில் பிரேசில் கேளிக்கைகளின் சொர்க்கம். வர்ணமயமான கார்னிவல் அணிவகுப்புகள். பாலியல் பண்டமாக நோக்கப்படும் அழகிய பெண்கள். இவை தான் பலருக்கு நினைவுக்கு வரும். கொஞ்சம் "சமூக அக்கறை கொண்டவர்கள்" என்றால், தெருக்களில் வளரும் குழந்தைகள், நாற்றமடிக்கும் சேரிகளை பார்த்து, வறிய பிரேசில் மீது அனுதாபப் படுவார்கள். ஆனால் எண்ணெய் வளத்தை தவிர உலகின் அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. என்றோ லத்தீன் அமெரிக்காவின் வல்லரசாக வந்திருக்க வேண்டியது. மொழி, இன, மதப் பிரச்சினை என்று பிரிவினையை தூண்டும் காரணிகளும் கிடையாது. அப்படிப்பட்ட பிரேசில் ஏன் இன்றைக்கும் பின்தங்கிய வறிய நாடாக உள்ளது?
 
 
மொத்த சனத்தொகையில் இருபது வீதமான பணக்காரர்கள், தேசத்தில் மொத்த உற்பத்தியில் அறுபது வீதத்தை நுகர்கிறார்கள். சனத்தொகையில் நாற்பது வீதமாக உள்ள ஏழைகளின் நுகர்வு பத்து வீதம் மட்டுமே. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு மூல காரணம். சாவோ பாவுலோ, ரியோ டெ ஜனைரோ போன்ற உலகத் தரம் வாய்ந்த நகரங்கள், தென்னகத்து நியூ யார்க் போல காட்சி தரும். விண்ணை எட்டத் துடிக்கும் கட்டிடங்கள், கான்க்ரீட் காடுகளாக காணப்படும். பிராடா, ஷனேல், அடிடாஸ்... உலகில் சிறந்த பிராண்ட் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் ஆடம்பர அங்காடிகள். அவற்றை வாங்குவதற்கு மொய்க்கும் பணக்காரக் கும்பல். வீதி வழியாக கடைக்கு சென்றால், வாகன நெரிசலில் சிக்க நேரிடலாம், அல்லது கிரிமினல்களின் தொல்லை. இதனால் தமது பங்களாக்களில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்து வந்து "ஷாப்பிங்" செய்கிறார்கள்.
 
பிரேசில் மக்களில் பெரும்பான்மையானோர் நகரங்களில் வாழ்கின்றனர். நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நகரங்களின் எண்ணிக்கையை வைத்து பிரேசிலின் வளர்ச்சியை கணக்கிட்டு விட முடியாது. பொருளீட்டுவதற்காக நாள் தோறும் லட்சக்கணக்கான நாட்டுப்புற ஏழைகள் பெரு நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். அதிர்ஷ்டத்தை தேடி ஓடி வரும் மக்களை அரவணைக்க நகரங்களில் யாரும் இல்லை. இருப்பிடம், வேலை எல்லாம் அவர்களாகவே தேடிக் கொள்ள வேண்டும். இதனால் நகரத்தின் ஒதுக்குப் புறமாக சேரிகள் பெருகி வருகின்றன. அந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கொள்வது. மின் கம்பங்களில் கம்பியைப் போட்டு மின்சாரத்தை திருடுவது. தண்ணீருக்காக குழாய்யடியில் சண்டை போடும் குடும்பங்கள். சுருக்கமாக, இவை "உலகத்தரம் வாய்ந்த சேரிகள்." புகழ் பெற்ற மும்பையின் தாராவி சேரி பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு அதிகம் விளக்கத் தேவை இல்லை. பிரேசிலில் இவற்றை "பவேலா" (Fஅவெல ) என்றழைப்பார்கள்.
 
பவேலா வாழ் மக்கள் நகரங்களில் பணக்கார வீடுகளில் வேலை செய்வார்கள். டாக்சி ஓட்டுனர்கள், நடைபாதை வியாபாரிகள், ஹோட்டல் பணியாட்கள் என்று உழைத்து முன்னுக்கு வந்த சிலர் சேரிகளிலேயே வசதியான சிறு வீடு கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள். இதைவிட பணம் சேர்க்க சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபடுவோருக்கும் அது தான் புகலிடம். பாலியல் தொழிலாளர்கள், போதைவஸ்து விற்பவர்கள், மற்றும் மாபியா குழுக்களுக்கு வேலை செய்பவர்கள் என்று பலர். கிரிமினல்களின் தொல்லை தாங்காமல் போலிஸ் அந்தப் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை. அந்த அளவுக்கு பவேலாவில் கிரிமினல்களின் ஆட்சி நடக்கிறது. ஒரு ஜீவன் வாழ்வதற்கு போராட வேண்டிய சூழலில், தாய்மார்களால் கைவிடப்பட்ட குழந்தைகள், தெருக்களில் அனாதைகளாக கிடக்கும். தெருவிலேயே வளரும் குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. விபச்சாரம், போதைப்பொருள், திருட்டு, கொலை என்று எல்லாவித குற்றச் செயல்களிலும் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களை மாபியக் குழுக்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. பிடிபட்டால் சிறுவர்கள் என்று சிறு தண்டனையுடன் தப்பி விடுவார்கள். இருப்பினும் நாள் தோறும் குறைந்தது பத்து சிறுவர்களாவது, போலிஸ் - மாபியா சண்டையில் மடிகின்றனர்.
 
லத்தீன் அமெரிக்க கண்டத்தில் தெளிவாகத் தெரியும் வர்க்க முரண்பாடுகளை பிரேசிலிலும் அவதானிக்கலாம். பணக்காரர்கள் தங்களது நலன்களை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். சுரண்டலில் சேகரித்த செல்வத்தை எப்படி செலவழிப்பது என்பது மாத்திரமே அவர்களது கவலை. ஏழைகளும் தமக்குத் தெரிந்த வழியில் பணத்தை சேர்க்க விளைகிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு தொடரும் வரை கிரிமினல்களும் பெருகிக் கொண்டே இருப்பார்கள். "திருடுவது பாவம்" என்று ஏழைகளுக்கு மட்டுமே போதித்துக் கொண்டிருந்த தேவாலயங்களும் பிற்காலத்தில் இந்த யதார்த்தை புரிந்து கொண்டன. எழுபதுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் முற்போக்கு பாதிரிகள் தோன்றினார்கள். அவர்களில் Dஒம் Héல்டெர் Câமர பிரேசிலுக்கு வெளியிலும் பலரால் அறியப்பட்டார். "நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!" என்ற அவரின் வாசகம் உலகப் புகழ் பெற்ற பொன்மொழியாகியது.
 
பிரேசிலில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் சில உள்நாட்டு தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் உள்வாங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பின அடிமைகள், தங்களது மதத்தை பின்பற்ற தடை இருந்தது. இதனால் சில ஆப்பிரிக்க தெய்வங்கள் கத்தோலிக்க புனிதர்களாக வழிபடப்பட்டன. அதே போல பிரேசிலில் பேசப்படும் போர்த்துகீச மொழியும் பல ஆப்பிரிக்க, செவ்விந்திய பழங்குடி சொற்களையும் கொண்டுள்ளது. அனேகமாக கொய்யாப்பழம், போர்த்துக்கேயருடன் பிரேசிலில் இருந்து நமது நாட்டிற்கு வந்திருக்கலாம். பிரேசில் செவ்விந்திய பழங்குடியினர் அந்தக் கனியை "கொய்யாவா" (Gஒஇஅப ) என்று பெயரிட்டிருந்தனர். செவ்விந்திய பூர்வகுடிகளின் பிரதான உணவான "மண்டியோக்" போத்துக்கேயரால் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்களத்தில் அதனை திரிபடைந்த போர்த்துக்கேய பெயரால் "மைஞோக்கா" என்பார்கள். தமிழில் அதன் பெயர் மரவள்ளிக் கிழங்கு.
 
பிரேசிலின் மதமும், மொழியும், கலாச்சாரமும் செவ்விந்திய பழங்குடியின மற்றும் ஆப்பிரிக்க கூறுகளைக் கொண்டிருந்த போதிலும், தேசத்தின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இந்த இரு சிறுபான்மை இனங்களும் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன. அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் குறைவு. இதனால் பெரும்பான்மையானோர் ஏழைகளாக வருந்துகின்றனர். சல்வடோர் என்ற வடக்கத்திய நகரத்தில் ஆப்பிரிக்க அடிமைகளின் வழித்தோன்றல்கள் அதிகமாக வாழ்கின்றனர். சல்வடோர் ஒரு காலத்தில் பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் வட மேற்கை சேர்ந்த அமேசன் நதிப் பிராந்தியத்தில் செவ்விந்திய பழங்குடியினர் வாழ்கின்றனர். இன்றைய பிரேசிலின் வடக்குப் பகுதி மிகவும் பின்தங்கியுள்ளது. எல்லா வித உற்பத்தியும் நின்று போய், வறுமை தாண்டவமாடுகின்றது. இருப்பினும் அமேசன் ஆற்றுப்படுகைகளில் தங்கத் துகள்களை எடுத்து திடீர் பணக்காரனாகும் ஆசையில் இன்றும் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
 
ஐநூறு வருடங்களுக்கு முன்னர் போர்த்துக்கல்லில் இருந்து தங்கம் தேடி வந்தவர்கள் பிரேசிலில் நிரந்தரமாக குடியேறி விட்டனர். கடற்கரையோரம் தங்கம் கிடைக்காததால் உள்நாட்டிற்குள் புகுந்தார்கள். அங்கே தங்கத்தை விட வேறு பல வளங்களையும் கண்டு கொண்டார்கள். குறிப்பாக பலகை ஏற்றுமதிக்காக காடுகளில் இருந்த பிரேசில் மரங்கள் தறிக்கப்பட்டன. பிரேசில் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த பலகைகள் வெளிநாட்டில் தரமானதாக மதிக்கப்பட்டன. ரப்பர், கோப்பி, கரும்பு ஆகிய பயிர்களுக்கான பெருந்தோட்ட செய்கைக்காகவும் காடுகள் அளிக்கப்பட்டன. காடழிப்பு பிற்காலத்தில் மழை வீழ்ச்சிக் குறைபாட்டையும், அதன் நிமித்தம் பிரேசிலுக்கு பொருளாதார பின்னடைவையும் கொண்டு வந்தது. பிரேசில் இன்று வறுமையான நாடாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
 
"சரித்திரம் எமக்கு அவசியமில்லை", என்று சில நடுத்தர வர்க்க புத்திஜீவிகள் வாதிடுவார்கள். பிரேசிலில் கறுப்பினத்தவர்களும், செவ்விந்தியர்களும் வறுமையில் வாடுவதற்கு வரலாற்றில் நேர்ந்த ஒரு பாரிய இடப்பெயர்வு காரணமாக உள்ளது. போர்த்துக்கேய காலனியாதிக்கவாதிகள் செவ்விந்தியர்களை தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அவர்களின் உழைப்பை சாகும் வரை பிழிந்து எடுத்தார்கள். பின்னர் ஆப்பிரிக்காவில் (அங்கோலா, கினியா) இருந்து லட்சக்கணக்கான கறுப்பின அடிமைகளை பிடித்து வந்தார்கள். அவர்களின் உழைப்பில் பெருந்தோட்டத் துறை செழித்தது. போர்த்துக்கேயர்கள் மட்டும் பெருந்தோட்ட முதலாளிகளாக இருக்கவில்லை. ஆங்கிலேயர்கள், யூதர்கள் என்று பல்லின முதலாளிகளின் வர்க்கமாக இருந்தது.
 
ஒரு சாதாரண வெள்ளையின ஐரோப்பியருக்கு கூட பிரேசில் சென்று செல்வந்தனாகும் யோகம் அடித்தது. அடிமையை வைத்து வேலை வாங்குவது என்பது மாடு வாங்கி உழுவதைப் போன்றது. அடிமையை வாங்குவதற்கு சிறிதளவு பணமும், பராமரிக்கும் செலவையும் பொறுப்பெடுத்தால் போதும். யாரும் பெருந்தோட்ட முதலாளியாகி விடலாம். நிலம் கூட வாங்கத் தேவை இல்லை. பூர்வகுடிகளை விரட்டி விட்டு அபகரித்த நிலம் தாராளமாக கிடைக்கும். இவ்வாறு குறைந்த முதல் போட்டு நிறைந்த லாபம் சம்பாதிக்கும் துறையால் பலர் கோடீஸ்வரர் ஆனார்கள். ஒரு கரும்புத் தோட்டம் போட்டாலே போதும். பணம் மழையாகப் பொழியும். ஐரோப்பிய சந்தையில் கரும்புச் சீனி அதிக விலையில் விற்கப்பட்ட ஆடம்பரப் பொருளாக இருந்தது. கடைகளில் ஒரு கிராம் சீனி மருந்து மாதிரி விற்பனையானது.
 
போர்த்துக்கல் அன்று பிரேசிலை தனது குடியேற்றக் காலனியாக அறிவித்து இருந்தது. குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவிப்பவர்களையும், பொது மன்னிப்பு அளித்து குடியேற அனுப்பி வைத்தார்கள். காலனிகளில் கிரிமினல் குடியேறிகளின் சேவை, காலனியாதிக்கவாதிகளுக்கு வெகுவாக தேவைப்பட்டது. முதலாவதாக, செவ்விந்திய பூர்வகுடிகளை அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டார்கள். இரண்டாவதாக, பெருந்தோட்டங்களில் இருந்து தப்பியோடிய அடிமைகளை பிடித்து வரும் பணி ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய அடிமையின் தலையைக் கொய்து வந்தால் சன்மானம் வழங்கப்பட்டது. இந்த பெருந்தோட்டக் காவலர்கள் எல்லாம் முன்னாள் கிரிமினல்கள் அல்லவா? அதனால் அடிமைகளை ஈவிரக்கம் பாராமல் அடக்கினார்கள். Bஅன்டெஇரன்டெச் என அழைக்கப்பட்ட இந்தப் போர்த்துக்கேய கிரிமினல்களை நாயகர்களாக சித்தரிக்கும் கதைகளும் அந்தக் காலத்தில் உலாவின. சாவோ பவுலோ நகரில் கொடிய Bஅன்டெஇரன்டெச் கிரிமினல்களுக்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 

 

கடவுளின் நகரம்(City of Gods) என்ற படத்தில் மேலுள்ள பிரச்சினைகளை தத்ரூபமாக காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் ஒரு போதைக்கடத்தல், மற்றும் சிறுவர்களிடம் வேலை வாங்குதல், பாலியல் குற்றங்கள் மலிந்த நாடு என்பது வரையில் தெரிந்திருந்தது!

 

இன்று நுணாவின் பதிவால், இன்னொரு இந்தியச் சேரி என்றும் அறிந்துகொண்டேன்....! நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலைப் பற்றிய.... மறுபக்கத்தையும் காட்டிய, அருமையான கட்டுரை.
இணைப்பிற்கு.... நன்றி நுணாவிலான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.