Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவரால் வழங்கப்பட்ட பணிகளை எந்தவிதத் தளர்வுமின்றி நேர்த்தியுடன் செய்யுங்கள் - விடுதலை விரைவில் கிடைக்கும் - காந்தரூபன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் விடுதலை வேண்டிய போராட்டத்தைத் துடைத்தழித்து துவம்சம் செய்வதிலேயே சிறீலங்கா அரசாங்கம் குறியாக இருக்கின்றது. என்ன விலை கொடுத்தாயினும் தமிழ் மக்களை அடிமைகளாக்க வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த சிங்களமும் தெளிவாக இருக்கின்றது. வீரம் செறிந்த போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் புறந்தள்ளி தமிழ் மக்களை அடக்கியாள வேண்டும் என்ற ஆதிக்க வெறிகொண்டு சிங்களம் அலைகின்றது. சிறீலங்கா அரசின் அடக்கியாளும் தந்திரத்தை தலைமேற்கொண்ட சிங்களப் படைகள் தாயகத்தில் கடும் இறுக்கங்களைப் பிரயோகித்து போராட்டத்தின் கட்டமைப்புக்களை நாசப்படுத்தியுள்ளன. இதனால் இன்று தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சில வருடங்கள் மௌனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனித்த பின்னர் தமிழ் மக்களும் மௌனிக்கத் தொடங்கினர். இந்த மௌனிப்பானது சிங்களத்திற்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சர்வதேச ரீதியாகவும் தமிழ் மக்களை ஓரங்கட்டலாம் என்று நினைத்த சிங்களம் இன்று அதற்கான முனைப்பையும் காட்டத் தொடங்கியிருக்கின்றது. சர்வதேச ரீதியாக பலம்பெற்ற சக்தியாக மிளிர்கின்ற தமிழ் மக்களின் விடுதலை வேண்டிய கட்டமைப்புக்களை தகர்த்தெறிந்து அதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் சக்தியையும் அடக்குவதே சிங்களத்தின் கனவாக இருக்கின்றது. புலம்பெயர் மண்ணில் உள்ள தமிழ் மக்களின் குரல்வளையையும் நசுக்கினால் எதிர்காலத்தில் சிறீலங்காவில் தான் நினைத்ததைச் செய்ய முடியும் என்று மகிந்தவும் அவரின் கூட்டாளிகளும் நினைக்கின்றனர். அதற்காகவே புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்குகின்ற 16 தமிழ் அமைப்புக்களை மகிந்த அரசாங்கம் தடை செய்துள்ளது.

தமிழ் அமைப்புக்களைத் தடை செய்யவேண்டிய அவசியம் சிறீலங்கா அரசுக்கு திடீரென்று ஏன் ஏற்பட்டது? இதற்கான பின்னணி என்ன? இதன்மூலம் சிறீலங்கா அரசாங்கம் எதைச் சாதிக்கப்போகிறது? என்ற விடயங்களை இங்கு ஆராயவேண்டியது அவசியமாகின்றது.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறீலங்கா அரசாங்கம் நடத்திய யுத்தம் மிகக் கொரூரமானது என்பது இன்று அனைவரும் அறியக்கூடிய நிலைக்கு எட்டியிருக்கின்றது. அதிலும் இறுதி யுத்தத்தில் வன்னியில் சிறீலங்கா படைகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள், பொஸ்பரஸ் குண்டுகள் போன்ற இரசாயனத் தாக்குதல்கள், திட்டமிட்ட விமானத் தாக்குதல்கள் போன்றவற்றின் காரணமாக ஏறக்குறைய ஒரு இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.

இதனைவிட கைது செய்யப்பட்ட ஆண், பெண் போராளிகளும் பொதுப் பணிகளில் ஈடுபட்ட பெண்களும் கடும் சித்திரவதைகளுக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டனர். இவையனைத்தும் எவருக்குமே தெரியாமல் மறைக்கப்படும் என்று சிறீலங்கா படைத்தரப்பும், அரசாங்கமும் நம்பிக்கொண்டிருந்தபோது அது சாத்தியற்றதாகி தகவல்கள் வெளியே வந்துள்ளன. தகவல்கள் மட்டுமன்றி காணொளி, புகைப்பட ஆதாரங்களே இன்று வெளியே வந்து சிறீலங்கா அரசின் கழுத்தில் நச்சு மாலைகளாக விழுந்திருக்கின்றன. இது சிறீலங்கா அரசாங்கமும் படைகளும் ஈவிரக்கமற்ற கயவர்கள் என்பதை சர்வதேச ரீதியாக தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.

என்னதான் தகவல்கள், ஆதாரங்கள் வெளியே வந்தாலும் அந்தத் தகவல்களை வைத்து சர்வதேச ரீதியாக விசாரணையை அல்லது நடவடிக்கைளைக் கோருவதற்கு ஒரு குழுமம் தேவை. அப்படி ஒரு குழுமம் இல்லாவிட்டால் என்ன ஆதாரங்கள் கிடைத்தாலும் எதுவும் அவை அனைத்தும் பயனற்ற ஆதாரங்களாகவே அமைந்துவிடும். அந்த வகையில் இறுதி யுத்த ஆதாரங்களைக் கொண்டு சிறீலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரியதில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு முக்கியமான பங்கு உண்டு.

கடந்த மூன்று தடவைகள் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் போர்க்குற்ற விசாரணைகள் என்ற கருத்து காத்திரமானளவு வலியுறுத்தப்படாத நிலையிலும் இந்த தீர்மானங்களானவை சிறீலங்காவுக்கு சர்வதேச ரீதியான பின்னடைவுகளாகவே அமைந்தன. இந்தப் பின்னடைவுகளை ஏற்படுத்தியதில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் நிறையவே பங்கிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறீலங்கா படைகள் யுத்தம் செய்வதற்கு உலகின் பல்வேறு நாடுகள் உதவிகளைச் செய்தன. இதில் பல நாடுகள் நேரடியாகவே ஆயுத உதவிகளையும் செய்திருந்தன. ஆனால், சர்வதேச அரசுகளின் ஆதரவுடன் சிறீலங்கா அரசும் படைகளும் முன்னெடுத்து நின்ற யுத்தத்தை எதிர்கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மட்டுமே ஆதரவாக நின்றனர். பலம் பொருந்திய நாடுகளின் பலவித உதவிகளுடன் வன்னியை வல்வளைப்புச் செய்த சிறீலங்கா படைகளிடம் மண்டியிடாமல் இறுதி நிமிடங்கள் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் களத்தில் நின்று சமராடுவதற்கு பின்புலமாக இருந்தவர்கள் புலம்பெயர்ந்த உறவுகள் மட்டுமேயாவர்.

இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, வன்னியில் சிங்களப் படைகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றார்கள். எனவே, இந்த யுத்தத்தை நிறுத்துங்கள் என்று கோரியவர்கள் புலம்பெயர்ந்த மக்கள். இதற்காக அவர்கள் தத்தமது நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்ற போராட்டங்களைச் செய்தனர். சில உறவுகள் தீக்குளித்து தங்களை மாய்த்துக்கொண்டனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் இன்றுவரை தமிழ் மக்களுக்கு ஆதரவான பல்வேறு செயற்பாடுகளை புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த வருடம் (2014) சிறீலங்காவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்தான். குறிப்பாக, தாயகத்தில் இருந்து ஜெனீவாவுக்குச் சென்ற தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் மக்களின் அவலங்களை ஜெனிவாவில் எடுத்துச் சொல்வதற்கு களம் அமைத்துக் கொடுத்தவர்களும் இந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களேதான். புலத்தில் அவர்கள் பல்வேறு அமைப்பு சார்ந்து இயங்குவதாலேயே இந்தச் சாதனைகளை நிலைநாட்டக்கூடிய தன்மை ஏற்பட்டுள்ளது. 

புலம்பெயர் மக்களின் இவ்வாறான அமைப்பு சார்ந்த கட்டமைப்புகள் நிகழ்காலத்தில் மட்டுமன்றி எதிர்காலத்திலும் தங்களுக்கு பாதகமானதாகவே அமையும் என்று சிறீலங்கா அரசு சிந்தித்ததன் விளைவாகவே இந்த அமைப்புகளுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்த பின்னர் புலிகளைத் தடை செய்யுமாறு உலக நாடுகள் எங்கும் கேட்டுக்கொண்டது. ஆனால், தமிழ் மக்களுடைய போராட்டத்தின் நியாயப்பாடுகளை உணர்ந்துகொண்ட எந்தவொரு நாடும் புலிகளைத் தடை செய்யவில்லை. அவர்களினதும் ஆதரவாளர்களினதும் செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவளித்தது. ஆனால், இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் பிற்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளுக்கு எதிராக தடைகளைப் பிரயோகித்தன.

கடந்த காலங்களைப் போன்றே, தற்போது தான் தடை விதித்த தமிழ் அமைப்புகளை சர்வதேச நாடுகளும் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை சிறீலங்கா விரைவில் முன்வைக்கும். குறிப்பாகச் சொல்லப்போனால் அடுத்த வருடம் ஐ.நா மனித உரிமை மாநாட்டுக்கு முன்னர் இந்த அமைப்புகளை சர்வதேச ரீதியாகத் தடை செய்யுமாறு சிறிலங்கா உத்தியோபூர்வமாக வேண்டுகோள்களை விடுக்கும். சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சு இதற்காக கடினமாக உழைக்கும். இதன் மூலம் போர்க்குற்றம், தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கல் போன்றவற்றிலிருந்து தான் தப்பிக்க முடியுமென்று சிறீலங்கா அரசு நம்புகின்றது.

சிறீலங்கா அரசாங்கம் நினைப்பது போன்று எதுவும் நடைபெறப்போவதில்லை. அத்துடன் இந்த அமைப்புகளுக்கு எதிரான தடைகள் தாயகத்தில் பெரியளவிலான தாக்கங்களையும் செலுத்தப்போவதில்லை. எனினும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான உதவிகளில் சிறியளவிலான தடைகளை ஏற்படுத்தக்கூடுமென்றும் இந்த அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுதல், அவர்கள் சிறீலங்கா வந்து செல்வதும் தடைப்படும் என்றும் நம்பப்படுகின்றது. அதைவிட இந்தத் தடைகளால் எந்தப் பாதிப்போ பின்னடைவோ ஏற்படப்போவதில்லை.

சிறீலங்காவின் இந்தத் தடை அறிவிப்பானது சர்வதேசத்திலும் பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தமாட்டாது. சிறீலங்கா கூறுவதைப் போன்று தமிழ் அமைப்புகள் எவையும் தமது நாட்டில் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபடவில்லையென்று பிரித்தானியா உடனேயே அறிவித்திருக்கின்றது. ஏனைய நாடுகளும் இது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.

ஏனெனில், சிறீலங்காவின் பொய் முகம் இன்று சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. புலம்பெயாந்த் தமிழ் மக்கள் இதற்காக நிறையவே உழைத்திருக்கின்றனர். இதனால், சிறீலங்காவின் குத்துவெட்டுக்களையும் போலிச் செயற்பாடுகளையும் சர்வதேசம் நிறையவே படித்திருக்கின்றது. சிறீலங்கா இனியும் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது என்ற நிலைமை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜெனீவா அமர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சிறீலங்கா அரசாங்கம் வடக்கில் ஒரு பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டது. புலிகள் மீண்டும் உருவாகிவிட்டனர் என்றும் அதனால் நாட்டின் பாதுகாப்புக் கேள்விக்குறி என்றும் சிறீலங்கா கூறிய கருத்துக்கள் எவையுமே சர்வதேசத்திடம் எடுபடவில்லை. இன்றுவரை சிறீலங்கா புலி, புலி என்று கத்திக்கொண்டிருக்கின்ற போதிலும் சர்வதேசம் இதை நம்பவேயில்லை. இதேபோன்றுதான் இனியும் நம்பப்போவதிலை.

ஆனாலும் இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயம் என்னவென்றால், சிறீலங்கா அரசாங்கமோ படைகளோ தான் நினைத்ததைப் போன்று எதையும் செய்ய முடியாது. அல்லது சிறீலங்கா அரசாங்கம் அறிவிப்பதுதான் முடிந்த முடிவென்றும் இல்லை. எனவே, இதுவரை நீங்கள் என்ன பணி ஆற்றினீர்களோ அந்தப் பணியைத் தொடர்ந்து ஆற்றவேண்டும் என்பதே தாயகத்திலுள்ள மக்களின் வெளிப்பாடுகளாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் விடுதலை என்பது கேள்விக்குறியான ஒன்றல்ல. கடந்த முப்பது வருடங்களாக எமது பிள்ளைகள், சகோதரர்கள், உறவுகள் களத்தில் போராடியதன் மூலம் எமக்கு விடுதலை கிடைக்கா விட்டாலும் சர்வதேசத்தில் நிலையான இடமொன்று கிடைத்திருக்கின்றது. இது விடுதலைக்கான இடமேயன்றி வேறொன்றுக்குமானதல்ல. எமது தமிழீழ தேசியத் தலைவரின் பாதை சிறீலங்கா அரசாங்கத்தைப் போன்றதல்ல. தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய அவரின் பாதை தெளிவானது. எனவே, எந்தவொரு புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களோ புலம்பெயர் தமிழ் மக்களோ தலைவரால் வழங்கப்பட்ட பணிகளை எந்தவித தளர்வுமின்றி நேர்த்தியுடன் செய்யுங்கள். எங்கள் விடுதலை விரைவில் கிடைக்கும்.

 

 

நன்றி: ஈழமுரசு

 

http://www.sankathi24.com/news/40246/64//d,fullart.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.