Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுகதை - லண்டன் அகதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்அகதி 

இளைய அப்துல்லாஹ் 

லண்டனில் எறிக்கும் வெயில்தான் வெள்ளைக்காரருக்கு பிடிக்கும். ஆனால் எனக்கு குளிர்தான் பிடிக்கும். காரணம் பல. பகலில் அந்த வெக்கையில் கட்டிலில் படுக்க முடியாது வியர்த்து ஒழுகும். இரவில் யன்னலைத் திறந்தாலும் அவியும். கட்டில் சூடு கிளைமேட் எல்லாம் சேர்ந்து வேகும் நித்திரை வராது. சிலர் வேர்வை ஒழுக ஒழுக படுப்பார்கள். என்னால் முடியாது.

இப்பொழுது குளிர்காலம். எல்லோரும் குளிர் உடுப்புக்கு மாறி விட்டார்கள்.
ஹவுன்ஸ்லோவில் இருந்து எமது வீட்டுக்கு போகும் பாதைக்கு செல்ல கொஞ்சம் வேகமாக நடந்தால் பத்து நிமிடம் நடக்க வேண்டும். நடந்து தான் போகிறேன். குளிர் முகத்தில் அறைகிறது. மழை தூறப்போகிறது.
வெள்ளைக்காரர் சொல்லுவினம் வைபையும் வெதரையும் நம்ப முடியாது எண்டு.

மழை மாதிரி இருக்கும் வெயில் வரும். வெயில் மாதிரி இருக்கும், மழை வந்துவிடும்.
மனம் முழுக்க மிகவும் புழுக்கமாக இருக்கிறது. ஸ்ரெயின்ஸ் றோட்டில் ஒரு ரெட்டைத் தட்டு பஸ்போகிறது. முன் சீற்றில் இருக்கும் ஒரு பிள்ளை மேல் தட்டு பஸ்ஸை தான் ஓட்டுகிறதாக பாவனை செய்கிறது. டிக்ஸனுக்கும் அஸ்டாவுக்கும் பக்கத்தில் உள்ள முடுக்கில் ஒரு ஹோம்லெஸ் பிச்சை கேட்கிறார்.
அவரை பொதுவாக ஆட்கள் கவனிக்காமல் போகிறார்கள். அவர் ஹோம்லெஸ் ஆனதற்கு அவர்தான் காரணம் என்று போவோர் வருவோர் நினைக்கிறார்கள். அவர் உசாராக வேலை செய்திருந்தால் அவர் வயதான காலத்தில் நாயோடு ஏன் பிச்சை கேட்க வேண்டும் அரசாங்கம் அவருக்கு காசு கொடுக்குமே என்பதே மக்களின் மனங்களில் உள்ள கேள்வி.

பொதுவாகவே மணித்தியாலம் மணித்தியாலமாய் உழைத்து சேர்க்கும் ஒவ்வொரு பவுண்ஸ்களுமே மிகவும் பெறுமதி வாய்ந்தவை. அதனை வேறுயாருக்கும் இனாமாக கொடுக்க வெள்ளைக்காரர் தயாராக இல்லை. உடலுழைப்பு இல்லாமல் இங்கு ஒரு பென்ஸ் கூட கிடைக்காது.வாழ்வு இங்கே வித்தியாசமானது.

ஒரு ஃபோன் லொக் உடைக்கும் கடையின் முன்பு சிறுவர்கள் கூடி நின்றார்கள்.
லண்டனில் எல்லோர் கையிலும் போன் இருக்கிறது. எஸ்.எம்.எஸ். அனுப்புவது மலிவு. ஸ்கூல் பிள்ளைகள் எல்லாரும் ஃபோன் வைத்திருக்கினம்.
எனது ஃபோன் எனது கையில் இருக்கிறது. 30 பவுண்ட்க்கு சண்டே மார்க்கட்டில் வாங்கியது.
அதுதான் லண்டனில் உள்ள மிகக் குறைந்த விலையுள்ள ஃபோன் ஆக இருக்கும். ஏதும் அந்தரம் ஆபத்துக்கு ஒரு ஃபோன் வேண்டுமென்று ரூமில் உள்ளவர்கள் சொல்ல வாங்கியது 30 பவுணை இலங்கை காசுக்கு கூட்டிப்பார்த்தால் ஆறாயிரம் ரூபா. ஆறாயிரம் ரூபாவுக்கு இலங்கையில் ஒரு புதுப் ஃபோன் வாங்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள்.
லண்டனில் ஃபோன் பாவிப்பதும் செலவுதான். போன ஆரம்பத்தில் எல்லா பவுண்ஸ்களுக்கும் ரூபாயை கணக்குப் பார்த்து பழகி விட்டது.


ஒரு கோப்பி 200 ரூபாய் முடிவெட்ட குறைந்தது 2000 ரூபாய் ஒரு நேரம் ரேக் எவே சாப்பாடு 800 ரூபாய் என்று. ஆனால் பெற்றோல் ஸ்டேஸனில் வேலைக்குப் போனாப் பிறகு கொஞ்சம் மாறிவிட்டது எல்லாம். இரவு வேலைஏனெனில் ஆசைப்பட்டது எல்லாம் அனேகமாக பெற்றோல் ஸ்டேசனில் எடுத்து தின்னலாம். லண்டனில் உள்ள அனேகமான சொக்கலேட் வகைகள் குளிர் பானங்கள் என்று பெற்றோல் ஸ்டேஸனில் இருக்கும். மனேஜர் சாப்பிடுவது குடிப்பதற்கு ஒன்றும் சொல்ல மாட்டார். நல்ல மனிதர் தேவன் அண்ணை அவர்தான் மனேஜர்.


**************************


அவனும் அகதியாகத்தானே வந்தான். 83 இல் வந்து இப்ப பாஸ் போட் கிடைத்திருக்கிறது. எனக்கு இன்னும் பாஸ் போட் கிடைக்கவில்லை. எனக்கு பிரிட்டிஷ் பாஸ்போட் கிடைத்து விடும் என்று ஸ்ரீ நினைக்கிறான்?
எனது நண்பன் எப்பொழுது துரோகியாகவும் கீழ்த்தரமானவனாகவும் மாறினான். உண்மையில் எனது மனம் அவனை எண்ணி எண்ணி வேதனைப்படுகிறது. இந்த வேதனை வேறு யாருக்காகவும் நான் படவில்லை. எவ்வளவு அன்னியோன்யமாக நன்றாக பழகியவனுக்கு ஏன் உந்தக் குணம் வந்தது. எங்கேயிருந்து தேவையில்லாத பொறாமை வந்தது. அப்படி வரக்கூடிய பொறாமை என இந்த ஆறு வருடத்திலையும் எதுவுமே தெரியவில்லையே. அவன் தனது நெஞ்சுக்குள் நயவஞ்சகத் தனத்தை மூடி மூடி வைத்திருந்தானா? ஏன் அப்படி மூடி வைத்துவிட்டு சிரித்து சிரித்து பேசினான். நல்லவனாகத் தானே இருந்தான். எப்படி கெட்டகுணம் வந்தது. கேவலமான குணத்தை அவன் ஏற்கனவே கொண்டிருந்தது தெரியாமல் இருந்ததே எனக்கு. அவனோடு நான் பழகியது நான் செய்த பெருந்தவறோ. அவனால் எனக்கோ என்னால அவனுக்கோ எந்த நஷ்டமும் ஆகப்போவதில்லையே. ஒரு ரூபா நஷ்டம் ஆகப் போவதில்லையே. எனது வேலையை எனக்கு மிக விருப்பமான வேலையை முதலாளியிடம் சொல்லி பறித்து விட்டானே. மாதம் அழகாக சம்பளம் பெற்று வந்த வேலையை பறிக்க கங்கணம் கட்டி நிற்கிறானே. இத்தனைக்கும் கொம்பனியில் வேலை செய்கிற முப்பத்திரெண்டு பேருக்கும் என்னை மிகவும் பிடிக்கும். முதலாளி சொல்லும் எல்லா வேலையையும் நான் கேட்டு செய்வேன். என்ன சொன்னாலும் நான் தட்ட மாட்டேன். இரவு பகலாக செய்திருக்கிறேன்.



ஸ்ரீயும் நானும் சுமார் ஆறு வருஷங்கள் பழகியிருக்கிறோம். ஏன் இப்படி என்மீது பொறாமை கொள்கிறான். ஏன் வேலையை என்னிடமிருந்து பறிக்க நினைக்கிறான். அவனுக்கும் எனக்கும் வேலையில் எந்த முரண்பாடும் இல்லை. இந்த ஆறு வருஷத்தில் எந்த மோதலும் வந்ததே இல்லை. ஆனாலும் ஏன் எனக்கு அப்படி செய்கிறான். என்னைப் பழிவாங்க அவனுக்கு ஒரு காரணத்தையும் கூற முடியாது. அவன் மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. சில வேளை கவலையாக இருக்கிறது. சிலவேளை அவனது சட்டையைப் பிடித்து உலுப்பி ஏன் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் முதலாளியிடம் சொல்கிறாய் என்று சொல்ல வேண்டும் கேட்க வேண்டும் போலிருக்கிறது.


அர்த்தமில்லாத பதவிகள் சிலரை அப்படி ஆக்கிவிடுமாக்கும் அதுதான் அவனுக்கும் நடந்திருக்கிறது. அவன் ஒரு மனநோயாளியைப் போல நடந்து கொள்கிறான். தனக்கு இல்லாத ஒன்றை தனக்கானது என்றும் தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்றும் தான் இல்லாவிட்டால் எதுவுமே இல்லை என்றும் நினைக்கிறான்.

முதலாளி தந்திரமானவர். ''நீர்தான் பார்த்துக் கொள்ளும் உமது பொறுப்புத்தான் '' என்று சும்மா சொல்லுவார். இப்படி பலர் பொறுப்பாக இருந்தவர்கள் போய்விட்டார்கள்.
கஜன், நிரஞ்சன் அபலன் என்று பலருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அவன் ஒரு சாதாரணமான வீடியோ கமராக் காரனாக இருந்தவன். கலியாண வீடு சாமத்திய வீடு என்று அலைந்தவனுக்கு ஒரு ரி.வி ஸ்டேஸனில் எடிட்டர்களுக்கு சுப்பவஸியர் என்பது பெரும் பதவி என்று நினைத்திருக்கிறான்.
அதுவும் எனது பிரபல்யமும் அவனுக்கு பிடிக்கவில்லையோ ஏன் என்னை மட்டும் குறிவைக்கிறான்.
அவன் எடிட்டர் மாருக்கு பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறான். உண்மையில் புரியவில்லை அவனைப் பற்றி. அவனுக்கு அந்தத் தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ஏற்கனவே பொறுப்பாக இருந்த அமலன் சின்னப்பெடியன் உவன் எங்களுக்கு வேலை சொல்லுறதோ என்று அமலனுக்கு கீழே இருந்த போது ஆத்திரப்பட்டவன் இப்பொழுது அதே தவறை அதே நாட்டாமைத் தனத்தை இவன் செய்கிறான்.

பழைய காலத்து சுருட்டுக்கடை முதலாளிமார் போல வேலை வாங்கப்பார்கிறான் லண்டனில்.
அவனோடு வேலை செய்கிறவர்கள் எல்லாம் அவனை பிய்த்துக் கொடுத்தால் தின்று விடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
எவ்வளவு அழகாக மற்றவர்களுக்கு உதாரணமாக அவனை சொல்லுவேன். அவன் வீட்டில் வேலைகளை திட்டமிட்டு செய்வான். நல்ல உழைப்பாளி. எப்பொழுது இவனுக்கு இந்த காழ்ப்புணர்ச்சி வந்தது என்பது தான் மர்மமாக இருக்கிறது.

ஸ்டுடியோவில் அவனோடு எவ்வளவு குதூகலமாக ஓடி ஆடி மிகவும் மகிழ்வாக விளையாடி இருக்கிறோம். எத்தனை சந்தோசமான மாலைகள் கழிந்திருக்கின்றன. அதெல்லாம் பொய்யான பொறாமையின் மன நோயாளியாக அவனை நான் காண்கிறேன். உண்மையில் இவர்கள் ஆபத்தானவர்கள்.
அவர்கள் மீது கவனமாக இருக்க வேண்டும்.

இப்படித்தான் இரண்டு சந்தர்ப்பங்களில் நான் எனது வாழ்க்கையில் ஆத்திரம் மீறி அடித்திருக்கிறேன். ஒருவன் இருந்தான். என்னிலும் பல வயது குறைந்தவன். அவன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன். அவன் டொக்டர் கோவூர் எழுதிய புத்தகங்களையே அதிகமாக படித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு சுற்றி இருக்கும் யாரிலும் நம்பிக்கை இல்லை. எல்லோரும் தனக்கு எதிரிகளாகவே இருப்பார்கள் தன்னைத் தவிர என்று நினைத்துக் கொண்டேயிருப்பான்.
இதுதான் அவனின் பிரச்சினை. ஆனாலும் இந்தப் பிரச்சினை தனக்கு இருக்கிறது என்பதனை அவன் ஒத்துக் கொள்ள மாட்டான். என்னை அவனுடைய முன்னேற்றத்தை கெடுக்க வந்ததாகவே நினைத்தான். தொடர்ந்தும் எனக்கு ரோச்சர் தந்தான். நான் அவனின் ரோச்சரால் பெரிதும் பாதிக்கப்பட்டேன். அவன் மற்றவருக்கு ரோச்சர் செய்வதன் மூலம் தன்னை நிலைநிறுத்த யோசிக்கும் மனநிலை உள்ளவன். உண்மையில் அவன் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனும் ஒரு அகதியாகவே இருந்தான்.


ஸ்ரீயும் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருக்கிறான். இதுவேறு வகை. மற்றவர்களின் முன்னேற்றங்களை தடுப்பது மற்றவர்களுக்கு முதலாளி ஏசினால் அதனைப் பார்த்து சிரித்து சந்தோஷப்படுவது, மற்றவர்களின் துக்கங்களில் மகிழும் மனச்சிதைவு அவனுக்கு இத்தனைக்கும் அவன் வீட்டில் நானும் என் வீட்டில் அவனும் உணவுண்டு மிகவும் மகிழ்ந்திருக்கிறோம். இப்போது சும்மா எதற்கும் லாயக்கற்ற பதவி என்பதனால் அதன் மாயையில் அவன் என்னை வேலையில் இருந்து வெட்டப் பார்க்கிறான். ஆனால் அது அவனுக்கு அவ்வளவு இலகுவானதல்ல. மனம் முழுக்க பாரமாக இருந்தது இன்று பாரத்தை இழக்க பியர் குடிக்க வேண்டும்.

****************************

அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட செய்தியோடு சுரேஷ் வந்தான். பிரித்தானிய இமிக்கிரேஷன் என்ன நினைக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் ஏன் நிராகரிக்கிறார்கள். ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது மறை பொருளாகவே இருக்கிறது.
உண்மையில் இலங்கையில் ஆபத்து உள்ளவர், உயிருக்கு அச்சமுள்ளவர், வாழ முடியாதவர், இயக்கங்களாலும் ஆமியாலும் சுடப்பட்டு விடுபவர் என்று இருப்பவர்கள் பல பேர். ஆதாரங்களை காட்டினாலும் நிராகரித்து விடுவார்கள்.
சிலருக்கு ஒன்றுமே இருக்காது வழக்குக்கு முறைப்பாடு அழகாக சோடிக்கப்பட்டதாக இருக்கும் ஆனால் பிரித்தானிய நீதவானுக்கு அது பிடித்திருக்கும். எல்லாத்தையும் தோண்டிப் பார்க்க முடியாது தானே.
சுரேஷ் பியர் குடிக்க வேண்டும் என்று கேட்டான். நான் வேலை செய்கிறேன். சுரேசும் பெற்றோல் ஸ்ரேஸன் ஒன்றில் ஏழு வருஷமாக வேலை செய்கிறான். அவன் லண்டன்வந்த காசை உழைத்து கட்டிவிட்டான். அவனுக்கு பொறுப்புகள் அதிகம்.

முதலில் பல நண்பர்களோடு நானும் சுரேசும் ஒன்றாக இருந்து விட்டு பின்னர் நாங்கள் மட்டும் தனி ரூமுக்கு வந்து விட்டோம்.
கரைச்சல் இல்லாதவன். இன்றைக்கும் கவலையாக இருக்கிறான். நாங்கள் ஹொட்றிங்ஸ் எடுக்கிறதில்லை. பியர் தான் அதுவும் ஒரே இல்லை.

பனி ஊசியாக குத்துகிறது. பனி பொழிகிறது. கட்டிகட்டியாய் விழுகிறது. நாளைக்கு வேலை லீவு எனவே இன்று சந்தோஷம் இன்று பியர் குடிக்கலாம். நல்லா நித்திரை கொள்ளலாம். ஒரு படம் பார்க்கலாம்.
எதுக்கும் மூட் இல்லை சுரேசுக்கு பியர் குடிப்பதை தவிர.
அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டால் இனி கையெழுத்திடப் போக வேண்டும். கையெழுத்து வைப்பது என்பது ஒரு பேரவலம் லண்டனில்.
சிலருக்கு மாதத்துக்கு ஒருமுறை சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, சிலருக்கு கிழமைக்கு ஒரு முறை, சிலருக்கு தினமும்.
இந்த கையெழுத்து வைக்கும் வேலை என்பது அகதிகளை பாடாய்படுத்தும் பயக்கடுதியான வேலை.


கையெழுத்து வைக்கப் போன இடத்தில் எத்தனையோ பேரை தூக்கி சிலோனுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதுதான் நெஞ்சிடி. எப்போ திருப்பி அனுப்புவதற்கு பிடித்து வைக்கப்போகிறார்கள் என்பதே தெரியாமல் கையெழுத்து வைக்கும் இடத்துக்கு போவதே ஒருவகை மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். ஒரே ட்ரென்ஸன் ஆன வேலை அது. நெஞ்சம் படபடத்துக் கொண்டே இருக்கும் எல்லோருக்கும். கையெழுத்து வைக்கப் போனால் அந்த ஒஃபிஸ் கவுண்டரில் அனேகமாக குஜராத்தி, பஞ்சாபிகள் தான் வேலை பார்க்கிறார்கள்.

அவர்கள் ஏதோ எமது தலைவிதியை தாமே தீர்மானிப்பவர்கள் போல நடந்து கொள்வார்கள். அவர்களின் வழித் தோன்றல்கள் எல்லாம் எமது நாட்டுக்கு பக்கத்தில் உள்ளவர்கள் என்றோ நாமும் இரக்கப்பட வேண்டியவர் என்றோ நடந்து கொள்ள மாட்டார்கள்.

முழு பிரித்தானிய இமிக்கிறேஷனும் அவர்கள் கையில் இருப்பது போலவே இருப்பார்கள். அவர்களின் கெடுபிடி தாங்க முடியாது அவ்வளவு அட்டகாசம்.
ஹவுன்ஸ்லோவுக்கு அண்மையில் இருக்கும் கையெழுத்திடும் இடம் ஸ்ரெயின்ஸ் றோட்டில் இருக்கிறது. ஹவுண்ஸ்லோவில் இருந்து இரண்டு பவுண் பஸ் தூரம்.


வெகு தொலைவில் கிழமைக்கு ஒரு தரம் வருபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.
அகதிகள் சிலருக்கு ஒருமுறை கையெழுத்திடப் போகாவிட்டாலும் வேலை அனுமதியை ரத்து செய்து விடுவார்கள். கவுண்டரில் இருக்கும் ஒரு ஒஃபிஸருக்கு வேலை அனுமதியை ரத்து செய்யும் அதிகாரம் இருக்கிறது இது பெரிய அனியாயமாகும்.

ஏனெனில் அரச உதவியும் இல்லாமல் வேலையும் செய்ய முடியாமல் இருப்பது பைத்தியக்காரத்தனத்தை கொணடு வந்துவிடும். லண்டனில் அகதிகளுக்கான கொடுமை இது.
நேரம் மாலை ஆறு மணி. குளிர்காலத்தில் நாலு மணிக்கே இருண்டுவிடும் லண்டன். குளிர் உடலை குத்துகிறது. எப்படியாவது வெளியில் போக வேண்டும். மழை தூறிக் கொண்டிருந்தது திடீரென்று அது நின்றுவிட்டது. இப்பொழுது சின்னச் சின்ன பஞ்சுத் துண்டுகள் போல பனி பொழிகிறது. றோட்டில் கார்களின் மேல் பனிப் பஞ்சுகள் விழுந்து கொண்டிருக்கின்றன. வர வர கூடும் போல இருக்கிறது.

***********************

பக்கத்து வீட்டு பெஞ்சமின் தனது நாயைக் கூட்டிக்கொண்டு தனது வீட்டுக்கு வருகிறா. பிரான்சில் மூன்று நாய் கடித்து ஒரு நாய் வளர்த்த மனிசி செத்த கதையை பெஞ்சமினுக்கு நேற்றுத்தான் சொன்னேன்.
தனது நாய் அப்படி செய்யாதென்றும் தனது தாய் குட்டியிலேயே தன்னோடு வந்து விட்டதாகவும் ஒரு கன்றுக்குட்டி அளவுக்கு வளர்ந்து விட்டதால் அதன் குணம் மாறாது என்றும் சொன்னா.
இருந்தும் கடிக்கும் வாக்கு இருப்பதாகவும் அதன் வாய்க்கு சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பூட்டு போட்டு வைத்திருக்கும் படியும் சொன்னேன்.
அவ அதில் உடன்படவில்லை. தன்னை அது கொஞ்சவும் கொட்டாவி விடவும் மெதுவாக அது குலைக்கவும் தனது கால்களை செல்லமாக கடிக்கவும் பூட்டு போட்டால் அது என்ன செய்யும் என்றும் அதன் சுதந்திரம் இல்லாமல் போய்விடும் என்றும் சொன்னா.
சுதந்திரத்தை விடவும் உங்களின் முகம், உயிர் முக்கியம் என்பதனை பிரான்ஸ் நாய்கள் எசமானியின் முகத்தையே முதலில் கடித்ததை சொன்னேன்.
நாய் விடயமாக வெகு ஆழமாக நான் சொன்னது பெஞ்சமினின் அடி மனதில் பதிந்து போய் இருக்கிறது. என்னைக் காணும் போதெல்லாம் பெஞ்சமின் இப்பொழுது தன் மீது அக்கறை கொண்ட ஒருவரைப் பார்த்து சிரிக்கும் சிரிப்பை சிரிக்கிறா. முந்தியென்றால் அப்படி இல்லை. நாய் என்னைப் பார்ப்பது முறைப்பது போல இருக்கிறது.

சுரேஷ் கவலை தோய்ந்த முகத்தோடு ஜக்கட்டை போட்டுக் கொண்டு வந்தான். அவனது ஜக்கட் எப்பொழுதும் புகை மணம் உடையதாக இருக்கும் றை கிளினுக்கு போட்டு எடடா என்றாலும் கேட்க மாட்டான். அந்த மணம் அவனுக்கு பழகிவிட்டது. எனக்கு பிடிக்காதது.
பஞ்சாபியின் கடை திறந்திருக்கிறது. லண்டனில் பஞ்சாபிகள், குஜராத்திகள், இலங்கையர், பாகிஸ்தானியர், பங்களாதேஷிகள் என்று கூட்டம் கூட்டமாக வாழுகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பை கொடுக்கிறது.
சுரேஷ் மூஞ்சையை தொங்கப் போட்டுக் கொண்டே பாதையில் வருகிறான். மல்பறோ லைட் சிகரட் ஒன்றை வாங்கி பத்த வைத்தேன் குளிருக்கு இதமாக இருந்தது.

லண்டன் வருகிறோம் என்று விட்டு ஹரோ, ஹவுன்ஸ்லோ ஈஸ்ட்ஹம், அல்பேட்டன் பக்கம் போய் பார்க்கும் முதலாவதாக போகிறவர்கள் லண்டன் ஊத்தையாய் இருக்கிறது என்று சொல்வார்கள். வீதியில் குப்பை இருக்கும். பஞ்சாபிகளும், இலங்கையரும், குஜராத்திகளும் தமது குப்பைகளை பக்குவமாக குப்பைத் தொட்டியில் போடுகிறவர்கள் குறைவு. அதுதான் ஹவுன்ஸ்லோ கவுன்ஸில் குப்பையை றோட்டில் போட்டால் 50 பவுண்ஸ் தண்டம் கட்ட வேண்டும் என்ற சட்டத்தை போன ஜனவரியில் இருந்து கொண்டு வந்திருக்கிறது.
சுரேஷ் திருப்பி அனுப்பி விடுவார்களோ என்ற கவலையில் இருந்தான். இப்ப இருக்கும் சூழ் நிலையில் திருப்பி அனுப்ப மாட்டார்கள் என்று யோசித்துப்பார்த்து விட்டுச் சொன்னான்.

மாவீரர் உரைக்கு பிறகும் பித்தளைச் சந்தி குண்டு வெடிப்புக்கு பிறகும் அகதிகளுக்கு ஒரு தைரியம் வந்திருக்கிறது திருப்பி நாட்டுக்கு அனுப்பமாட்டார்கள் என்பது தான் அது.
லண்டனில் காசு சேர்க்கிறவையிட்டையும் எங்கை தம்பி அடிபாடுகளை காணவில்லை என்று தான் எல்லோரும் கேட்டு ஐம்பது பவுணோ நூறு பவுணோ கொடுக்கிறது வழக்கமாகவே இருந்தது. இருக்கிறது.
அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் கரைச்சல் இல்லாமல் இருக்க வேணுமெண்டால் ஈழத்தில் அடிபாடு இருக்க வேண்டுமென்டுதான் அகதிகள் எப்போதும் நினைக்கினம். அது உண்மையானதும் கூட.


''கய்ஸாஹே எப்படி இருக்கிறாய்?''
''டீக் கூன்'' (நல்லாய் இருக்கிறேன்.) பஞ்சாபி, ஹிந்தியில் என்னிடம் விசாரித்தார்.

நாய், பூனை போன்ற பிராணிகளுடன் கடைக்குள் வரவேண்டாம்என்று பஞ்சாபி போட் போட்டிருக்கிறார். உவர் என்ன இரக்கமில்லாதவர் போல என்று சில வெள்ளைக்காரர் முகம் சுளிப்பதுண்டு. ஆனால் பாணில் சாப்பாட்டு சாமான்களில் உணவுப் பொருட்களில் மிருக சாதிகள் வாயை வைத்து விட்டால் வாற மனிசரும் வரமாட்டார்கள்.


''கோமதை மச்சாங்''திரும்பியபோது ஜயலத் நின்று கொண்டிருந்தான்.
ஜெயலத்துக்கும் ஒரு மாதம் முதல் தான் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டிருந்தது. ஹவுன்ஸ்லோவில் இருக்கிறான். நன்றாக தமிழ் பேசுவான். ஒரு சன்விச் கொம்பனியில் பாணுக்கு உள் சாமான்கள் வைக்கும் வேலையில் இருக்கிறான். கொழும்பில் ஹுனுப்பிட்டியில் இருக்கிறான். எங்களோடு நல்ல சினேகிதம்.
ஜெயலத் ஆமியில் இருந்ததாகவும் புலிகளின் ஏரியாவில் வேலை செய்து ஓடி வந்ததாகவும் அதனால் தனக்கு உயிர் அச்சம் இருப்பதாகவும் அகதி கேஸ் செய்திருந்தான்.
ஆனால் இமிக்கிரேஷன் காரருக்கு இப்ப இலங்கை அத்துப்படி. சிங்களவன் உனக்கு ஹுனுப்பிட்டியில் இல்லாவிடில் வேறு எங்காவது வாழலாம் என்று கேஸை றிஜக்ட் பண்ணி விட்டார்கள். ஜெயலத் ஊருக்கு போக எமர்ஜன்ஸி பாஸ் போட்டுக்கு விண்ணப்பித்து இருக்கிறான்.

சுரேஷ் பன்னிரண்டு ஸ்ரெல்லா பியர் கானை எடுத்து சொப்பிங் பையில் போட்டு கொடுக்க பஞ்சாபி எண்ணிப் பார்த்து காசை வாங்கினார்.
''கல் மிலேன்கே'' (நாளை சந்திப்போம்). கடையை விட்டு வெளியில் வரும் போதும் சுரேஷ் தலையை கவிழ்ந்தபடியே வந்தான் சோகமாகவே.
ஜெயலத்தையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு போனோம். கடையில் வாங்கிய கபாப் இருந்தது அதனை மைக்ரோவேவில் வைத்து சூடாக்கி எடுத்தான் ஜெயலத். ஜெயலத் அடிக்கடி வீட்டுக்கு வருவான்.

ஹீற்றரை கொஞ்சம் கூட்டி வைத்துக் கொண்டு ஜன்னல் சீலையை விலத்தினால் வெளியில் முழுக்க பனி பொழிகிறது. கண்ணாடி முழுக்க ஈரம். ஹீற்றர் இதமாக இருந்தது.
குளிருக்கு பியர் இதமாக இருந்தது. ஒரு ஸ்ரெல்லா இறங்கிய பின்னர்தான் சுரேஷ் சாதாரண நிலைமைக்கு வந்தான்.

''கேஸை அப்பீல் பண்ணலாமா?''

''ஏற்கனவே உறுதி இல்லாமல் போயிட்டுது''
''அப்ப என்னடா செய்றது?ஊரிலையும் இருக்கேலாது இங்கையும் இருக்கேலாட்டி என்ன செய்யுறதுகளவாய் எத்தனை காலத்துக்கு ஒழிச்சுக் கொண்டு இருக்கிறது''
அகதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு கவலைகள், கேள்விகள், வாழ்வின் எதிர்பார்ப்புகள், இயலாமைகள் இருக்கும்.
இமிக்கிறெஷன் காரர்களும் நிராகரிப்பு என்ற ஒரு லெட்டரோடு எல்லாத்தையும் முடித்து விடுவார்கள். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டிருப்பார்கள் அகதிகள்.

********************
வெளியில் பொலிஸ் சைரன் கேட்டது. ஜன்னல் சீலையை விலக்கிப் பார்த்தேன். மூன்று கார்களும் இரண்டு வானும் நிறைய பொலிஸ்காரர்கள். நேராக சாந்தன் வீட்டுக்கு போய் கதவைத் தட்டுகிறார்கள். அப்பொழுதுதான் சாந்தன் வந்திருந்தான். போன கிழமைதான் ஒரு பி.எம்.டபிள்யூ கார் வாங்கியிருந்தான் சாந்தனுக்கு பத்தொன்பது வயதுதான்.
கிறடிட் காட் செய்கிறவன் சாந்தன் என்று எல்லோருக்கும் தெரியும். அதனை ஒரு பிஸ்னஸ் போல செய்கிறான் அவனிடம் மெசினும் இருக்கிறது கிறடிட் காட் செய்ய. அது ஒரு கையடக்கமான சாமான். லப்டொப்பில் எல்லாமே செய்யலாம். பொலிஸ் கன காலமாக முகர்ந்து முகர்ந்து பிடித்துவிட்டது. சாந்தனின் வீட்டை சுற்றி மஞ்சள் நாடாவை கட்டி விட்டார்கள். பெரிய வீடு முழுவீட்டையும் சோதிக்க ஆறு நாய்கள் சகிதம் வந்து இறங்கிவிட்டனர். ஆண், பெண் மெற்றோ பொலிற்றன் பொலிஸார்.

கள்ள கிறடிட் காட் செய்து பெரிய பணக்காரர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை ஏ.ரி.எம். மெசின் மூலமாக உருவுவது. டிக்ஸன், ஆர்கோஸ், போன்ற இடங்களில் பெரிய பெரிய எலக்ரோனிக் சாமான் வாங்கி விற்பது,

கொலை, கொள்ளை என்று கிறிமினல் வேலை செய்வதனால் தான்
இலங்கையில் உண்மையான கொலை மிரட்டல் உள்ளவர்களையும், இங்கிலாந்தும் ஏனைய நாடுகளும் அகதிகளாக உள்ளே எடுக்கிறார்களில்லை.

உயிருக்கு பயந்து வந்தவன் இங்கு கிறிமினல் ஆகிவிடுகிறான். சட்டத்தில் உள்ள மனிதருக்கான உரிமையை துஷ்பிரயோகம் செய்கிறான்கள்.
சோதனை நடக்கிறது எல்லா நாய்களும் சாந்தனின் வீட்டுக்குள் முகர்ந்து முகர்ந்து திரிகின்றன. கொம்பியூட்டர், கிரடிட் காட்டுகள் பல நூறு எடுத்துவிட்டார்கள். மெசின், தூள், கள்ளமாக வாங்கிய பொருட்கள் எல்லாவற்றையும் பொலித்தினில் சுற்றுகிறார்கள். நாய்கள் ஆறும் தொடர்ந்து முகர்ந்து முகர்ந்து கொண்டே வீடு முழுக்க பரபரப்பாக ஓடி ஓடி வருகின்றன. நாய்கள் மூசும் சத்தம் இங்கு கேட்கிறது.
தெருவே பரபரப்பாகிவிட்டது. அக்கம் பக்கம் இருந்த வீட்டுக்காரர்கள் எல்லோரும் இப்பொழுது சாந்தனின் வீட்டுக்கு முன்னால் கூடி விட்டார்கள். நாங்கள் முதலே போய்விட்டோம்.


''புளடி கிரிமினல்ஸ்''என்று ஒரு வெள்ளை ஏசுகிறது.

''ஃபக்கிங் ரமிள்ஸ்'' என்று இன்னொன்று சொல்கிறது. இப்படியே எமது இனத்தையும் சாதியையும் சொல்லி ஏசுகிறார்கள்.
சாந்தனுக்கு விலங்கு போட்டாச்சு சாந்தனின் இரண்டு கூட்டாளிகளையும் ஆம்பிளை பொலிஸார் வீட்டுக்கு வெளியே அழைத்து வருகின்றனர். சாந்தனின் மனைவியையும் தங்கச்சியையும் குழ்தையையும் பெண் பொலிஸார் அழைத்து வருகின்றனர்.

வீட்டுக்கு பின்னால் உள்ள கதவு, சைற் கதவு எல்லாவற்றையும் பொலிஸ் சீல் வைக்கிறது. முன் கதவையும் சீல் வைத்து மூடிவிட்டு காருக்கும் ரயருக்கு லொக் போட்டு மூடி விட்டார்கள்.
எல்லா தெருவாசிகளும் திட்டுகிறார்கள்.

இந்த அகதிகளால் எங்களுக்கும் நிம்மதியில்லை. எங்களுடைய நாட்டை கொள்ளையடிக்க வந்த மூதேசிகள். இவன்களை எல்லாம் நாட்டை விட்டு முதலில் துரத்த வேண்டும் எவனுக்குமே நாட்டுக்குள் வர விடக்கூடாது. எவனுக்குமே இரக்கம் காட்டக் கூடாது. எங்களின் இரக்க குணத்தை இவன்கள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். எங்கடை நிம்மதியையும் இவன்கள் பறிக்கிறான்கள். இந்த முறை தேர்தலிலை இவன்களை பற்றி கட்சிகளிடம் சொல்ல வேண்டும். இவன்களை எந்த அகதியாக இருந்தாலும் உள்ளே எடுக்காத கட்சிக்குத் தான் எங்கடை வாக்கு.
எல்லா பத்திரிகைகளிலும் இவன்களைப் பற்றி எழுத வேண்டும். எல்லா ரீ.விக்களிலும் இவன்களைப் பற்றி டொக்கியூமன்றி போட வேண்டும். கிரிமினல்ஸ் எங்கட பணத்தை எங்கட நாட்டில் இருந்து கொண்டே கொள்ளையடிக்கிறான்கள்.
எல்லோரும் ஆத்திரப்படுகிறார்கள். சாந்தனையும் குடும்பத்தையும் மற்றவர்களையும் பொலிஸ் வானில் ஏற்றும் பொழுது ஊரே வெறுப்பாய் பார்த்துக் கொண்டு நிற்கிறது. அவன் இருந்த அந்தத் தெருவில் தாங்கள் இருந்தோமென்ற வெறுப்பு வெள்ளைக்காரருக்கு இருந்தது தெரிந்தது.
வானில் ஏறிப் போக முதல் பொலிஸ் நாயொன்று எமது வீட்டையும் அண்ணார்ந்து பார்த்தது. நாஙகளும் சிலோன் காரர் என்று மோப்பம் பிடித்து விட்டதாக்கும் என்று ஜெயலத் சொன்னான்.

எல்லோரும் ஒவ்வொரு கதையாக கதைத்துக் கொண்டு வீட்டுக்குள் போகிறார்கள். எங்களையும் பார்த்து ஒருவகை வெறுப்பாக முகத்தை சுளிக்கிறார்கள். பெஞ்சமின் மட்டும் எங்களோடு வந்து கதைக்கிறா. எல்லா சிலோன் காரரும் அப்படி இல்லைத்தானே. சந்தன்(பெஞ்சமின் சாந்தனை சந்தன் என்றுதான் சொல்லுவா) எப்பொழுதும் கிறிமினல் வேலைத்தான் செய்வான். அவனை இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து அவதானிக்கிறேன். உவன் உப்படித்தான் என்று ஹவுன்ஸ்லோ பெற்றோல் ஸ்டேஸன் மனேஜர் நாதன் சொன்னவர். சந்தனை பொலிஸ் பிடித்தது சரி என்று சொன்னா பெஞ்சமின்.

மக்கள் கலைந்து போகிறார்கள். பொலிஸ் நாயை கண்டு விட்டு ஏனைய வளர்ப்பு நாய்கள் குலைக்கத் தொடங்கியது. இப்பொழுது நின்று விட்டது. பொலிஸ் நாய்கள் ஒன்றுமே வாயைத் திறக்கவில்லை. அவையளுக்கு பயிற்சி அப்படிப் போல.

சுரேஷ் வீட்டுக்கு வந்து மீண்டும் ஒரு பியர் குடித்தபடி தனது எதிர்காலத்தை பற்றி என்னிடமும் ஜெயலத்திடமும் சொன்னான். ஜெயலத் ஒரு முடிவில் இருக்கிறான் ஊர் போக.
சுரேஷ் சென்னான் தன்னால் இப்ப போக முடியாது. அங்கே இரண்டு தங்கச்சிகளை கரை சேர்க்க வேணும் ஒரு வீட்டை கட்டவேணும், அம்மாவை சந்தோஷமாக வைத்திருக்க வேணும், வாதம் வந்த அப்பாவை நல்லபடியாக அவரின் இறுதி காலத்தில் பார்க்க வேணும், தம்பியை எப்படியாவது லண்டனுக்கு எடுக்க வேணும்.

இவ்வளவு வேணும் களோடு சுரேஷ் இருக்கிறான்.
சுரேஷுக்கு கொஞ்சம் மப்பு ஏறி விட்டது. சாப்பிடச் சொன்னேன். ரெடிமேட் பராட்டாவும் கபாப்பும் இருக்கிறது. வேண்டாம் என்று விடடான். கதிரையில் சாய்ந்தவன் நித்திரையாகிவிட்டான்.

''மங் யன்னங் மச்சான்''ஜெயலத்தும் போகிறான். நாலைக்கு வேலை இல்லை சுகமாக நித்திரை கொள்ளலாம். கதவை மூடி லைற்றை ஓஃப் செய்தேன்.
சடார் என்றொரு கல் எனது வீட்டின் கூரையில் விழுந்தது. கதவைத் திறந்து லைற்றைப் போட்டேன் இரண்டு வெள்ளைக்கார சிறுவர்கள் கல்லை எறிந்து விட்டு ஓடுகிறார்கள்

 

http://mnmanas.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதையின் எழுத்தாளார் என்ன சொல்ல வருகிறார் என விளங்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அந்நிய நாடுகளில் அகதியாக வேண்டா விருந்தாளிகளாக வந்து இருந்து கொண்டு ஊருக்கு போய் பந்தா காட்டும் நம்மவர்களின் சரியான வெளிநாட்டு முகவரிகள் இவை தான். நல்லதொரு படைப்பு. இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி எழுதி இருக்கலாம்.

 

எம்மவர் ஊரில் போய்.. ஐயோ.. இன்னும் இரண்டு கிழமை தான் இருக்கு. வேலை தொடங்கப் போகுது.. என்று பெரும் பந்தா காட்டுவார்கள். இங்கே வேலையில் இவர்களைத் தேட ஆளே இருக்காது. இவர்கள் போகாட்டி.. தூக்கி தூர வீசிட்டு.. அந்த இடத்தை நிரப்பி விடுவார்கள். ஆனால்.. இவர்கள் ஊரில் என்னவோ.. வெள்ளைக்காரன் இவை நம்பித்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பது போல வெட்டி பந்தா காட்டுவார்கள்.

 

இங்கே சீட்டுக்கட்டி.. வாங்கின நகைகளை எல்லாம் போட்டுக் கொண்டு அங்கே துன்பத்தில் துவண்டு கிடக்கும் மக்களுக்கு காட்டுவார்கள். 20 பவுனுக்கு 3 சாறி என்று போடும் போது.. வாங்கி வைச்சிட்டு அல்லது.. அரசாங்க வீட்டுக் காசை மிச்சம் பிடிக்க.. அரசாங்க வீட்டிலையே ஒரு பாதியை வாடகைக்கு விட்டு பெற்ற காசில்.. பட்டுச் சேலை வாங்கி ஊரில் சோ.. காட்டுவார்கள். அங்குள்ள மக்களும் தோட்டம் என்றால் என்னவோ ஊரில் உள்ளது போன்ற பரிமானத்தில் சிந்திப்பார்கள். ஆனால் இங்கே பெட்டி அறைகள் கொண்ட வீடுகளுக்குள்.. தோட்டம் என்பது.. ஊரில் வீட்டுப் பின் கோடியிலும் சின்னன்.

 

ஐயோ.. அங்க வீட்ட விட்டிட்டு வந்திட்டம். தோட்டம் என்னவோ.. ஏதோ என்று ஊரில் போய் பதறி அடிப்பார்கள். இங்கே தோட்டப் பக்கம்.. நரிதான் துள்ளி விளையாடிறதா இருக்கும்.

 

மொத்தத்தில்.. எம்மவர்களின் பொய்.. மாயை விம்பங்களுக்கு சரியான அடையாளமிட்டுள்ளது இவ்வாக்கம். இன்னும் எழுதலாம். இவர்களின்.. அந்நிய நாட்டில் அடிமை வாழ்வை பந்தா வாழ்வாகக் காட்டுவதற்கு இன்னும் சவுக்கடி கொடுத்தால் அன்றி நம்மவர்களுக்கு தேசப் பற்று என்பது சோத்தை ஊட்டுவதால் மட்டும் வராது. :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிலிம் காட்டுற வேலை எல்லாம் 10,15 வருடத்திற்கு முந்தி நடந்திருக்கலாம்.இப்பவும் நடக்கிறது என்பது நெடுக்கரின் கற்பனை.இப்ப அநேகமாக ஊரில் இருப்பவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவராவது இங்கே இருக்கிறார்கள்.பிறகு யாருக்குப் போய் பிலிம் காட்டுறது.இங்க புலத்தை விட அங்கே ஊரில் இருப்பவர்களது நாகரீகம் அதி வேகமாக முன்னேறிக் கொண்டு போகுது

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சுழற்சி முறையில் போய்க்கிட்டு இருக்குது. முந்தி வந்தவை இப்ப அடங்கிட்டினம். இப்ப வாறவை தொடங்கி இருக்கினம். இன்னும் தொடருது. தொடரும். பல்வேறு வடிவங்களில். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை எழுதிய காக்காவ எனக்கு பிடிக்கவே பிடிக்கிது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.