Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கம்பராமாயணம்: இலக்கிய வழக்கும் உலக வழக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கம்பராமாயணம்: இலக்கிய வழக்கும் உலக வழக்கும்

பெருமாள் முருகன்

தமிழ்க் காப்பிய இலக்கியத் தொடக்கம் சிலப்பதிகாரம். தொடர்ந்தவை மணிமேகலை, பெருங்கதை. மூன்றும் ஆசிரியப்பாவால் ஆனவை. ஆசிரியப்பா உரைநடைத் தன்மை கொண்டது. உணர்ச்சி விவரணைகளுக்கு இடமில்லாமல் கதையைச் சொல்வதற்கு ஆசிரியப்பா ஏற்றது. அதன் போதாமையை உணர்ந்த இடங்களில் விருத்தப்பாக்களை இளங்கோவடிகள் கையாண்டிருக்கிறார். விருத்தப்பாவை முழுமையாகக் கையாண்டது சீவக சிந்தாமணி. பின் தோன்றிய காப்பியங்கள் அனைத்தும் விருத்தப்பா முதலிய பாவினங்களிலேயே இயன்றன. கலிவிருத்தம், கலித்துறை, அறுசீர் ஆசிரிய விருத்தம் ஆகிய பாவினங்களே காப்பியங்களில் அதிகம் பயின்றவை.

கரைக்குள் அடங்கியிருந்த ஆற்றுநீர் வெள்ளப் பெருக்கில் கரையுடைத்து எல்லையற்றுப் பரவுவது போல விருத்தப்பா யாப்பு காப்பியங்களில் பயின்று தமிழ் பெருகுவதற்கு உதவியது. அவ்வகையில் மொழிச் சாத்தியம் விரிவடைந்த வரலாறே காப்பிய இலக்கியம். அதன் உச்சம் கம்பராமாயணம். இராமாவதாரம் என்னும் பெயர் கொண்ட கம்பராமாயணம் வந்தபின்னர் அதற்கு நிகரான காப்பியம் எதுவும் உருவாகவில்லை. ஆறு உருவாக்கும் சிற்றோடைகள், வாய்க்கால்கள் போலக் கிளை பிரிந்து புராணங்களாகவும் சிற்றிலக்கிய வகைகளாகவும் சென்றன.

கம்பராமாயணம் மொழியின் எல்லாவகைச் சாத்தியங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட காப்பியம். கம்பர் பெரும்புலமையும் படைப்பெழுச்சியும் கொண்ட கவிஞர். அவரைப் பற்றிய செய்திகள் வாய்மொழிக் கதைகளாகவே நமக்குக் கிடைக்கின்றன. உண்மைத் தகவல்களைவிட இவை நுட்பமானவை. அவரது மொழிப் பார்வை, அறிவு, பயன்பாடு பற்றிய கதை ஒன்று ‘விநோதரச மஞ்சரி’ நூலில் உண்டு.

கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் சோழ மன்னன் இராமாயணம் எழுதப் பணிக்கிறான். ஒட்டக்கூத்தர் பெரும்பகுதி எழுதி முடித்துவிடுகிறார். கம்பரோ ஒருபாடல்கூடப் பாடவில்லை. அரசவையில் தாம் எழுதிய பாடல்கள் சிலவற்றை அரசனுக்கு ஒட்டக்கூத்தர் வாசித்துக் காட்டுகிறார். கம்பரையும் கேட்கிறான் அரசன். வீம்புக்காக ஒட்டக்கூத்தரை விடவும் அதிகமாக எழுதிவிட்டதாகக் கம்பர் கூறுகிறார். அதன்படி ஒரு படலத்தை மட்டும் எழுபது பாடல்களில் உடனே பாடி விவரிக்கின்றார். அது ‘திருவணைப் படலம்’ என விநோதரச மஞ்சரி கூறுகிறது. கடலில் அணை கட்டும் செயலில் கூறும் யுத்த காண்டப் பகுதி இது. கம்பராமாயணத்தில் ‘சேது பந்தனப் படலம்’ என்னும் பெயரில் இப்போது உள்ளது. ‘திருவணைப் படலம்’ என்னும் பெயரே பழையது போலும். அதனைச் ‘சேது பந்தனப் படலம்’ என்றாக்கியது யாரோ தெரியவில்லை. அதில் வரும் பாடல் ஒன்று:

குமுதன் இட்ட குலவரை கூத்தரின்

திமிதம் இட்டுத் திரையும் திரைக்கடல்

துமிதம் ஊர்புக வானவர் துள்ளினர்

அமுதம் இன்னும் எழுமெனும் ஆசையால்.

குமுதன் என்னும் வானரத் தலைவன் மலைகளைத் தூக்கிக் கடலில் போடுகிறான். அப்போது எழும் அலைகளின் நீர்த்துளி தேவலோகத்தில் சென்று தெறிக்கிறது. அதைப் பார்த்த தேவர்கள் அமுதம் இன்னும் கிடைக்கும் என்னும் ஆசை கொண்டு துள்ளிக் குதித்தனர் என்பது பாடல் பொருள்.

நீர்த்துளியைக் குறிக்கும் பொருளில் ‘துமி’ என்னும் சொல் பாடலில் வருகின்றது. இந்தச் சொல்லுக்கு ‘இலக்கியப் பிரயோகம் உண்டா?’ என ஒட்டக்கூத்தர் கேட்கிறார். ‘இது உலக வழக்கு’ என்று கம்பர் பதில் சொல்கிறார். வழுவாய்ச் சொல்லிவிட்டு உலக வழக்கு எனக் கம்பர் சாதிக்கிறார் எனக் குற்றம் சாட்டும் ஒட்டக்கூத்தருக்கு அச்சொல் உலக வழக்கில் இருப்பதை நிறுவும் கட்டாயம் கம்பருக்கு ஏற்படுகின்றது. கம்பர், ஒட்டக்கூத்தர், அரசன் ஆகிய மூவரும் இடையர் குடியிருப்புக்குச் செல்ல அங்கு கலைமகளே இடைச்சியாக உருவெடுத்து வந்து தயிர் கடைகிறாள். அருகில் விளையாடும் பிள்ளைகளைப் பார்த்து ‘மோர்த்துமி தெறிக்கப் போகிறது. எட்டவிருங்கள்’ என்று கலைமகள் சொல்வதைக் கேட்டபின் அச்சொல் உலக வழக்கில் இருப்பதை ஏற்றுக்கொண்டனர். இதுதான் கதை.

இது கம்பரின் உயர்வை விளக்க எழுந்த கதை. இதன்வழி சில விஷயங்கள் நமக்குப் பிடிபடுகின்றன. கம்பர் பாடல்களில் இலக்கிய வழக்குப் பிரயோகங்கள் மட்டுமல்லாது உலக வழக்கு எனப்படும் மக்கள் வழக்குச் சொற்களும் இடம்பெற்றுள்ளன என்பது முதலாவது. கம்பருக்கு எழுத்திலக்கிய ஞானம் மட்டுமல்லாமல் மக்களோடு கலந்து பழகியதால் அவர்களது வழக்குகளிலும் நல்ல பரிச்சயம் இருந்தது என்பது அடுத்தது. காப்பியங்களுக்கு எழுத்திலக்கியப் பயில்வுச் சொற்கள் மட்டும் போதாது, உலக வழக்குச் சொற்களும் தேவை என்பதும் இதனுள் பொதிந்துள்ள கருத்து. இவ்வாறு உலக வழக்கும் அறிந்தவர்கள் படைக்கும் இலக்கியமே மக்களைச் சென்று சேரும் என்பதும் உட்கிடை.

கம்பர் தம் காப்பியத்தை அரங்கேற்றும் முன் பலரிடம் கையொப்பம் பெற்று வந்ததாகவும் கதை உண்டு. அதில் தில்லை வாழ் அந்தணர்கள், திருநறுங்கொண்டை சமணர்கள் முதலியோர் உண்டு. மேலும் மாவண்டூர் கருமான், தஞ்சாவூர் அஞ்சனாட்சி என்னும் தாசி ஆகியோரும் உண்டு. தம் மகனாகிய அம்பிகாபதியிடம் கையொப்பம் பெற்றபோது அவனுக்குக் கம்பர் விளக்கம் சொன்ன பாடல்கள் நான்கு. அவற்றில் சளசள, களகள, கொளகொள, கிளுகிளு என்னும் ஒலிக்குறிப்புச் சொற்கள் வருகின்றன. கம்பராமாயணத்தில் இடம்பெறும் தமிழ்ச் சொற்களைக் குறித்துப் பேச அக்காலம் தொட்டு இக்காலம் வரை எவ்வளவோ இருக்கின்றன. உலக வழக்கு பற்றியே நிறையப் பேசலாம். தொட்ட இடம் எல்லாம் வழக்குத் துலங்கும்.

பாலகாண்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ‘தாடகை வதைப் படலம்.’ இக்கட்டுரைக்காக அப்பகுதியை மீண்டும் வாசித்தேன். அதில் பயிலும் சொற்கள் தமிழ் மொழியின் எல்லாவகை அழகும் பொங்க அமைந்தவை. தாடகையைக் கொல்ல இராமன் தயங்குகிறான். அப்போது அவள் எவ்வளவு கொடியவள் என விசுவாமித்திரர் இராமனுக்கு எடுத்துச் சொல்கிறார். அதில் வரும் ஒரு தொடர்: ‘எமைக் கோது என்று உண்டிலள்.’ அந்த வனத்திலே உள்ள உயிர்களை எல்லாம் தின்றுவிட்ட தாடகை விசுவாமித்திரர் உள்ளிட்ட முனிவர்களை மட்டும் உண்ணவில்லை. காரணம் அவரைக் ‘கோது’ என நினைத்ததுதானாம். அது என்ன கோது?

கோது என்றால் சாரமற்றது, சக்கை எனப் பொருள் தருகின்றனர் உரையாசிரியர்கள். கொங்கு வட்டார வழக்கில் இன்றும் பயின்று வரும் சொல் இது. காய்ந்த புளியின் மேல்தோல் தோடு என்று வழங்கும். தோட்டை எடுத்தபின் உள்ளே உள்ள சதைப் பகுதியைக் கவ்விப் பிடிக்கும் நார்ப் பகுதி காம்போடு இணைந்திருக்கும். அந்த நாரை உருவி எடுத்துவிட்டுக் கொட்டை வாங்குவார்கள். குவிந்த விரல்களைப் போல் நீண்டு புளியைக் கவ்வியிருக்கும் நாருக்குத்தான் கோது என்று பெயர். சாரமற்றது, சக்கை என்னும் பொருள்களைவிட ‘புளிநார்’ என்று பொருள் கொண்டால் இவ்விடத்தில் மிகவும் பொருந்துகின்றது. புளிச் சதையிலிருந்து உருவிப் போட்ட நார் போன்ற உடம்பு கொண்டவர்கள் முனிவர்கள். நாரை என்ன செய்வோம்? எடுத்து வீசிவிடுவோம். கோது என்பதைப் புளிநார் என்று கொண்டால் பொருள் சிறப்புக் கூடுகிறது.

அதே படலத்தில் தாடகை வீழ்ச்சியைத் தெரிவிக்கும் பாடல் ஒன்று இப்படி வருகிறது:

பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த

தடியுடை எயிற்றுப் பேழ்வாய்த் தாடகை

பொடியுடைக் கானம் என்பதற்குப் ‘புழுதி நிறைந்த காடு’ எனப் பொருள் கூறுகின்றனர். பொடி என்பது பலபொருள் ஒருசொல். இவ்விடத்தில் புழுதியை அடக்கும் வகையில் தாடகையின் குருதிநீர் பொங்கிப் பரவியது என்பது கருத்து. கம்பருக்கு உலக வழக்கு ஞானம் அபரிமிதமாக உண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு இச்சொல்லைக் காணலாம். பொடி என்னும் சொல்லிற்கு இலக்கியங்களிலோ அகராதிகளிலோ காணப்படாத பொருள் ஒன்று கொங்கு வட்டார வழக்கில் உண்டு. ‘வெம்மை நிறைந்த மண்’ என்னும் பொருளில் ‘பொடிச் சுடும், செருப்புத் தொட்டுக்கிட்டுப் போ’, ‘தை மாசத்திலயே இப்பிடிப் பொடிச்சுடுது’ என்பன போலப் பல வழக்குத் தொடர்கள் உண்டு. இப்பாடலுக்கு ‘வெம்மை நிறைந்த மண்ணை உடைய காடு’ எனப் பொருள் கொண்டு பார்த்தால் வெகு பொருத்தம் தோன்றுகின்றது.

அக்காட்டைக் கம்பர் தொடக்கத்திலிருந்தே வெம்மையோடு தொடர்புபடுத்தியே வருணிக்கிறார். ‘சுடுசுரம்’ என்பார். அக்காட்டில் உள்ள வெம்மையைப் பற்றிச் சொன்னாலே சொல்லும் நாக்கு வெந்துபோகும் என்பார். அந்த வெம்மையில் வேகாதவை எதுவுமில்லை. அப்படிப்பட்ட காட்டின் வெம்மையைத் தாடகையின் குருதிநீர் தணிக்கிறது என்று சொல்வது கம்பர் எண்ணம். அதற்கு மிகவும் பொருத்தமான சொல் பொடி என்பதுதான். அடி எடுத்து வைக்க இயலாத அளவுக்குச் சூடு கொண்ட வெம்மை மண். இந்த வழக்குப் பொருளை அச்சொல்லுக்கு இயைப்பது மிகப் பொருத்தம்.

மழை பொழியும்போது சில சமயம் கட்டி கட்டியாக வந்து விழும். அதை ஆலங்கட்டி மழை என்போம். இராமனோடு போர் செய்யும்போது தாடகை கற்களை எடுத்து எறிகிறாள். அதைச் சொல்லக் கம்பர் ‘கல்லின் மாரியைக் கைவகுத்தாள்’ எனச் சொல்லாட்சியை அமைப்பார். அப்பாடலில் அல்லின் மாரி, கல்லின் மாரி, வில்லின் மாரி என மூவகை மாரிகளைக் குறிப்பிடுக்கிறார். இவ்விதம் ஒரு கற்பனை தோன்றுவதற்கு மூல காரணம் எதுவாக இருக்கக்கூடும்? ஆலங்கட்டி மழையைக் கொங்குப் பகுதியில் ‘கல்மாரி’ என்று சொல்வதுதான் இன்றுவரை வழக்கம். கல்மாரி என்னும் சொல்லின் அமைப்புக்குள் உள்ள முரண் கவனிக்கத்தக்கது. கல் கடினத்தன்மை கொண்டது. மாரி மென்மையானது. ஆனால் மாரியே வேகமாகப் பெய்யும்போது சாட்டை போல உடலில் வலிமையோடு வந்துவிழும். இப்போது கடினமான கல்லும் மாரியும் இணைந்தால் அதன் வலிமை எத்தகையதாக இருக்கும் என ஊகிக்கலாம். இந்தச் சொல்லிலிருந்து விரிந்த கற்பனை என இப்பாடலைக் காணலாம்.

மேடையில் முதன்முதலாகப் பேசும் பேச்சை ஆங்கிலத்தில் ‘Maiden speech' என்பர். இதைத் தமிழில் ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுகின்றனர். ஆங்கிலச் சொல்லின் நேரடித் தமிழாக்கம் இது என்றே பலரும் கருதுகின்றனர். அப்படியல்ல. முதல் என்பதைக் குறிக்கக் ‘கன்னி’ என்னும் சொல்லைப் பயன்படுத்தும் வழக்கம் தமிழில் பல காலமாகவே உண்டு. கன்னிப்பூப்பு, கன்னிப்பொங்கல், கன்னித்தீட்டு, கன்னித்தேங்காய், கன்னிநாகு, கன்னிப்பிள்ளைத்தாய்ச்சி முதலிய சொற்களில் கன்னி என்பது முதல் என்னும் பொருளில் வருவதைத் தமிழ் லெக்சிகனில் காணலாம். இதையொட்டிய வழக்கு ஒன்று கொங்குப் பகுதியில் உண்டு. முந்தைய காலத்தில் ஆண்களுக்குத் திருமணத்தின்போதுதான் முகச்சவரம் செய்வது வழக்கம். அதைக் ‘கன்னிச் சவரம்’ என்பர். கன்னியை முதல் என்னும் பொருளில் பயன்படுத்துவது உலகவழக்கு. இவற்றை ஒட்டித் தாடகையோடு இராமன் செய்த போரைக் ‘காகுத்தன் கன்னிப்போர்’ எனக் கம்பர் கூறுகின்றார். போர் பற்றி வரும் வேறிடங்களில் காணப்படாத சொல்லாட்சி இது. உலக வழக்கை ஒட்டிக் கம்பர் புனைந்து உருவாக்கிய சொல்லாட்சியாக இதைக் கருதலாம்.

சிவனது நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனின் உடல் வெந்து உதிர்ந்ததைப் ‘பூளை வீ அன்ன’ என்று கம்பர் சொல்வார். பூளைப்பூ என்பது இன்றும் காணப்படும் பூண்டுச்செடி வகை. சாம்பல் நிறம் பூசிய தண்டுகளுடன் வெண்ணிறப் பூக்கள் சடைசடையாய் நீண்டிருக்கும். பூளைப்பூவைப் பறித்துக் குவித்துப் பார்த்தால் சாம்பல் குவியல் போலவே காணப்படும். தாடகையைக் குறிக்கும்போது ‘தாடகை என்பது அச்சழக்கி நாமமே’ என்கின்றார். சழக்கி என்னும் சொல்லும் அடியாகிய ‘சாழக்கம்’ என்பது கொங்கு வழக்கில் உள்ளது. சாழக்கம் என்பதற்குப் பலவிதமான தந்திரங்கள் எனப் பொருள். அதனோடு இணைத்துப் பார்த்தால் முதற்குறைந்து சழக்கி உருவாகியிருப்பதை அறியலாம்.

ஒரே ஒரு படலத்தில் மட்டுமே கம்பர் கையாண்டுள்ள சொற்களில் உலக வழக்காக இவ்வளவு கண்ணில் படுகின்றன. இன்னும் பிற வட்டார வழக்குகளோடும் பேச்சுமொழியோடும் கம்பராமாயணத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் எவ்வளவோ கிடைக்கக்கூடும். தமிழ் மொழியின் சாத்தியங்களை எல்லாம் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது கம்பராமாயணம் என்பதற்கு இந்த உலக வழக்கு ஒரு சான்று.

------------------

‘தி இந்து’ 2014 சித்திரை மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரை.

http://www.perumalmurugan.com/2014/04/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

நீர்த்துளியைக் குறிக்கும் பொருளில் ‘துமி’ என்னும் சொல் பாடலில் வருகின்றது. இந்தச் சொல்லுக்கு ‘இலக்கியப் பிரயோகம் உண்டா?’ என ஒட்டக்கூத்தர் கேட்கிறார். ‘இது உலக வழக்கு’ என்று கம்பர் பதில் சொல்கிறார். வழுவாய்ச் சொல்லிவிட்டு உலக வழக்கு எனக் கம்பர் சாதிக்கிறார் எனக் குற்றம் சாட்டும் ஒட்டக்கூத்தருக்கு அச்சொல் உலக வழக்கில் இருப்பதை நிறுவும் கட்டாயம் கம்பருக்கு ஏற்படுகின்றது. கம்பர், ஒட்டக்கூத்தர், அரசன் ஆகிய மூவரும் இடையர் குடியிருப்புக்குச் செல்ல அங்கு கலைமகளே இடைச்சியாக உருவெடுத்து வந்து தயிர் கடைகிறாள். அருகில் விளையாடும் பிள்ளைகளைப் பார்த்து ‘மோர்த்துமி தெறிக்கப் போகிறது. எட்டவிருங்கள்’ என்று கலைமகள் சொல்வதைக் கேட்டபின் அச்சொல் உலக வழக்கில் இருப்பதை ஏற்றுக்கொண்டனர். இதுதான் கதை.)

 

அப்பொழுது ஒட்டக்கூத்தர் கூறியதாக ஒரு வாக்கியம் படித்திருந்தேன்.

 

" சரஸ்வதி என் நாவில் இருக்கின்றாள் , ஆனால் கம்பனுக்கு அவள் சேவகம் செய்கின்றாள்" என்று.

 

அதற்கு முன்பும் ஒருமுறை மகன் அம்பிகாபதியைக் காப்பாற்ற  கிழங்கு சுமந்து வந்தவள். (இட்ட அடி நோக...) !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.