Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால்: துயரத்தின் முகவரி

Featured Replies

முள்ளிவாய்க்கால்: துயரத்தின் முகவரி

 

 

ஈழத்தமிழர்களுடைய வாழ்க்கை முள்ளிவாய்க்காலுக்கு முன், முள்ளிவாய்க்காலுக்குப் பின் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு அதாவது 2013ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலுக்குப் போயிருந்தேன். திட்டமிட்ட இனப்படுகொலை நடந்த அந்த இடத்தைப் பார்த்தபோது, வரலாறு கண்ணீர்சிந்திய இடத்தில் நின்றுகொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன். ஏற்கெனவே இணையத்தில் வெளியாகிய புகைப்படங்களிலும் காணொளிகளிலும் பார்த்த இடந்தான்.

என்றாலும், நேர்முகமாகப் பார்த்தபோது வார்த்தைகளில் சொல்லிவிட இயலாத வலியை அனுபவித்தேன். தென்னை மற்றும் பனைமரக் குற்றிகளால் அரணமைக்கப்பட்ட பதுங்குகுழிகள் உட்சரிந்திருந்தன. மண்ணுள் புதையுண்ட துணிகளதும் நீலநிறக் கூடாரத்துண்டுகளதும் சிறிய பகுதிகள் வெளியில் நீட்டிக்கொண்டிருந்தன. பாரிய மனிதப்புதைகுழியாக இருந்ததன் அடையாளங்கள் நான் போன காலத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கவில்லை. பிற்பாடு ஐ.நா.சபையின் மனிதவுரிமைப் பணிப்பாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றதை முன்னிட்டு அந்த இடத்தின் கொலைத்தடயங்கள் அழிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டதாக செய்திகளில் வெளியாகியிருந்தது. ஒருகாலத்தில் அலறலும் குருதியும் பசியும் நோயும் நோவும் பித்தும் அதேசமயம், வாழ்வின்மீதான பெருங்காதலும் பெருக்கெடுத்து ஓடிய அமானுஷ்யவெளியொன்றில் நின்றுகொண்டிருப்பதான பதைப்பு இருந்தது. அந்தக் குறிப்பிட்ட இடத்திலிருந்த மரங்களெல்லாம் பட்டுப்போயிருந்தன. அநேகமாக எல்லா வீடுகளும் சிதைந்துபோயிருந்தன. சுவர்களில் எல்லாம் சன்னக்காயங்கள்.

 

வார்த்தைகளில் எழுத இயலாத, நினைத்துப் பார்ப்பதற்கே அஞ்சி நினைவை மாற்றத் துடிக்கிற, எண்ணுகிறபோதெல்லாம் பித்துநிலைக்குள் தள்ளிவிடுகிற மானுடப்பேரழிவு அங்கு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ‘சானல் 4’ இனால் வெளியிடப்பட்ட காணொளிகளை ஒருதடவைக்கு மேல் எம்மால் பார்க்க இயலவில்லை. அந்த ஒருதடவை பார்த்ததுகூட எங்கள் சனங்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளும்முகமாகவே. வரலாற்றிலிருந்து அந்நியப்பட்டவர்களாக நாம் இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே. காணொளிகளுக்கே முகம்திருப்பி விசும்புகிறவர்களாக நாங்கள் இருக்கும்போது, அவர்கள் அதற்குள் உயிர்தரித்திருந்தார்கள். முள்ளிவாய்க்காலிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் வாழ்நாளெல்லாம் அந்தத் துயர நினைவுகளால் அலைக்கழிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள். சுற்றிலும் பிணங்கள் விழுந்துகிடக்க, காயக்காரர்கள் வலியால் அலறிக்கொண்டிருக்க, குழந்தைகள் பசியால் துடித்துக்கொண்டிருக்க அடுத்த எறிகணை எங்கு வந்து விழுமோ என்று எண்ணுவதற்கிடையில் இல்லாமற் போய்விடக்கூடிய அபாயத்தினுள் அவர்கள் இருந்தார்கள். நிலாந்தனால் எழுதப்பட்ட ‘உத்தரித்த கடற்கரை’என்ற கவிதையில் இடம்பெற்ற, இலட்சக்கணக்கானவர்கள் மலங்கழித்த, ‘உலகின் மிக நீண்ட கழிப்பறை’யிலிருந்து வீசிய மலநாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் அங்கு இருந்தார்கள். இறந்துபோனவரைப் பார்க்கப் போனவர்களும் இறந்தார்கள். காயப்பட்டவரைத் தூக்கப்போனவரும் காயப்பட்டார்கள். கஞ்சிக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த தாய்மாரும் குழந்தைகளும் எறிகணை வீச்சில் உடல்சிதறிச் செத்தார்கள்.

 

“ஆஸ்பத்திரிக்குள்ளையும் குண்டுபோட்டுக் கொல்லுறாங்களே…”என்று இடிபாடுகளுக்குள்ளிருந்து பிரலாபித்த அந்த முதிய பெண்ணின் முகத்தை எப்படி மறப்பது? சுற்றிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று அறியாமல் காயப்பட்டுத் தாய்மாரின் மடியில் கிடந்து அரற்றிய குழந்தைகளின் முகங்களை மறக்க எத்தனை காலமாகும்? “நான் சாகப்போறேன்…நான் சாகப்போறேன்… தூக்கிவிடுங்கோ”என்று, இடிபாடுகளுள் உடல் முழுவதும் நசுங்கியிருக்கக் கெஞ்சிய இளைஞனின் முகத்தை ஆயுசுபரியந்தம் மறக்க இயலாது. உடல் சிதறி இறந்துகிடந்த தாயினருகில் போகத் துடித்தும், எறிகணை வீச்சுக்களால் போகமுடியாமற்போக பதுங்குகுழிக்குள்ளிருந்தபடி ‘அம்மா… அம்மா….”என்று அலறித் துடித்த இளம்பிள்ளைகளின் பரிதவிப்பை எங்ஙனம் மறப்பது? “அது நானில்லை… நானில்லை”என்று மறுத்தபடி, சதுப்புநிலமொன்றிலிருந்து இராணுவத்தினரால் பிடித்துவரப்படும் இசைப்பிரியாவின் நிர்க்கதியான குரலை எவரால் மறக்க இயலும்? பிறகு உடலெங்கும் காயங்களுடனும், வெள்ளைத்துணி மூடியபடியும் கிடந்த அந்த துர்ப்பாக்கியத்தின் பிள்ளையை சாவந்து வாவென்று அழைக்கும் நாள்வரையிலும் மறத்தல் கூடுமோ?

 

பஞ்சசீலத்தைக் கண்ணேபோல் போற்றும் பௌத்தமதத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லும், கையில் தாமரை மலர்கள் நிறைந்த தட்டுக்களோடும் தூய வெள்ளையாடைகளோடும் விகாரைகளுக்குச் செல்லும் அந்தப் புனிதாத்மாக்களால் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்களின் கதியை என்னவென்பது? புலால் உண்ணாமையைப் போதித்த மதத்தின்வழி நின்றொழுகுபவர்கள் பிணங்களையும் புசித்தார்கள். நிர்வாணமாக்கப்பட்டு பிறப்பு உறுப்பிலும் மார்பிலும் குருதி கசியக் கிடந்த பெண்களின் உடலங்கள் கொல்லாமையைப் போதித்தபடியிருந்தன. உயிரற்று, சிதைக்கப்பட்டுக் கிடந்த உடலைப் பார்த்து ‘ஹொந்த படு’ (நல்ல சாமான்)என்று சொன்னவன் இந்நேரம் பதவியுயர்வு பெற்று எங்காவது இருக்கத்தான் இருப்பான்.

 

இனப்படுகொலையின் தடயங்கள் முள்ளிவாய்க்காலிலிருந்து இலங்கை அரசதரப்பினரால் அழிக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய மக்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்க அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இராணுவ பிரசன்னத்தில் மூச்சுத்திணற அன்றாட வாழ்வையே நகர்த்தமுடியாமல் மக்கள் சித்திரவதைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ‘போராட்டம்’என்ற சொல்லுக்கும் அங்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. விபச்சாரம், குடி, களியாட்டம் இன்னபிற கலாச்சாரச் சீர்கேடுகளால் இளைய தலைமுறையினரைச் சீரழிக்கும் திட்டம் செவ்வனே நடத்தப்பட்டு வருகிறது. குடும்ப மற்றும் பாலியல் வன்முறைகளைத் தூண்டித் தம்மைத்தாம் வெட்டிச்சாகும்படியான சூழ்நிலைகளை இனவாதிகள் உருவாக்கிவருகிறார்கள். ஒருகாலத்தில் கல்வியிற் சிறந்து விளங்கிய யாழ்ப்பாணம், இப்போது கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆட்கடத்தல்களுக்குமான இடமாகிப் போயிற்று. போர் முடிந்துபோயிற்று என்று சொல்வதெல்லாம் ஒப்புக்குத்தான். இனவாதிகளால் ஈழத்தமிழர்கள்மீது மறைமுகமானதொரு யுத்தம் இப்போதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.

 

இத்தனை கொடுமைகளையும் செய்துமுடித்த இலங்கை அரச பேரினவாதிகள் தம்மைக் குற்றமற்றவர்களாகவே இப்போதும் சாதித்து வருகிறார்கள். இனப்படுகொலைக்குச் சாட்சியாய் அமைந்துவிட்ட காணொளிகளையும் புகைப்படங்களையும், இனப்பேரழிவிலிருந்து தப்பித்து எஞ்சிய சாட்சிகளின் நேரடி வாக்குமூலங்களையும், மனித உரிமைக் கண்காணிப்பகம்-அனைத்துலக மன்னிப்புச் சபை ஆகிய மனிதவுரிமை அமைப்புகளின் அறிக்கைகள், டப்ளின் தீர்ப்பாயம் மற்றும் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை எல்லாவற்றையும் ஆதாரமற்ற அப்பட்டமான பொய்கள் என்று இலங்கை அரச தரப்பு சாதித்து வருகிறது. அவையெல்லாம் விடுதலைப்புலி ஆதரவாளர்களால் இட்டுக்கட்டப்பட்டவை என்று அடித்துச் சொல்கிறார்கள். பேராசிரியர்கள் பிரான்ஸிஸ் பாய்லே, நோம் சொம்ஸ்கி போன்றவர்கள் சொல்கிறார்கள் அங்கு நடைபெற்றது இனப்படுகொலைதான் என்று. ஆனால், இலங்கை அரச தரப்பு எல்லாவற்றையும் மறுத்துரைக்கிறது. கொஞ்சம் அசந்துபோனால் முள்ளிவாய்க்கால் என்றொரு இடமே வரைபடத்தில் இருந்திருக்கவில்லை அதுவொரு கற்பனையூர் என்று சொல்லிவிடுவார்களோ என்று அச்சப்படுமளவிற்கு அராஜகத்தின் மறுப்பு எல்லைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு உயிரைத்தானும் கொல்லவில்லை என்று ஆரம்பத்தில் சொன்னார்கள். இப்போது ஏதோ சில நூறு பேர் இறந்திருக்கலாம் என்று கருணைகூர்ந்து இறங்கிவந்திருக்கிறார்கள். ‘சாட்சியங்களற்ற போர்’இத்தனை சாட்சியங்களோடு மீளெழுந்துவரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

இப்போது, கண்துடைப்புக்காக ‘இனங்களுக்கிடையில் நல்லிணக்கம்’பற்றிப் பேசக் கிளம்பியிருக்கிறார்கள். LLRC என்று சொல்லப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற, தன்னைத்தான் விசாரணை செய்;ய நியமித்த குழுவின் அயோக்கியத்தனமான அறிக்கை மூலம் உலகை ஏமாற்றப் பார்க்கிறார்கள். உள்ளுக்குள் இனவாதம் ஆழப் புரையோடிப் போயிருந்தாலும், மனிதாபிமானம், சமத்துவம், சகோதரத்துவம் நல்லிணக்கம் என்று கூச்சமின்றி உலகெங்கும் ஓடியோடிப் பிரகடனம் செய்வதைப் பார்க்கையில், “நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போலிருக்கிறீர்கள்”என்ற இயேசுவின் வாசகமே ஞாபகத்தில் வருகிறது. வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 40,000 உறவுகளை நினைத்துப் பதறியழும் அதே நேரத்தில், தென்னிலங்கையில் அலங்கார விளக்குகள்-குதிரை பவனிகள்-மரியாதை வேட்டுக்கள் - தாரை தப்பட்டைகள் முழங்க வெற்றிவிழாக் கொண்டாடப்படவிருக்கிறது. சிறுபான்மை இனத்தவர்களாகிய தமிழர்கள் தம்மால் மிலேச்சத்தனமாகக் கொல்லப்பட்டதைக் கொண்டாடும் பேரினவாதிகள் நல்லிணக்கம் குறித்துப் பேசுவது நகைப்பிற்குரியது. தமிழர்களது பூர்வீக நிலப்பரப்பாகிய வடக்குக் கிழக்கில் இராணுவப் பிரசன்னம் அகற்றப்படாது; கொலைகளும் கைதுகளும் நிறுத்தப்படாது; அதிகாரப் பகிர்வு குறித்துத் திறக்கும் வாயினுள் குண்டுகள் செலுத்தப்படுவதாகிய இச்சூழலில் நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசுவதைக் குறித்து பூட்டிய அறைகளுள் அவர்கள் தம்மைத்;தாம் பார்த்து நகைத்துக்கொள்ளவேண்டியதுதான்!

 

ஆனால், எங்களது திடீர் மீட்பர்களாகக் கிளம்பியிருக்கும் அமெரிக்காவையும் இதர மேற்குலக நாடுகளையும் ஐ.நா.வையும் பற்றி எங்களுக்குத் தெரியும்! முள்ளிவாய்க்காலில் நடந்துகொண்டிருந்தது இனப்படுகொலைதான் என்று அறிந்தும் எல்லோரும் அதை வேடிக்கை பார்த்தவர்கள்தான். செய்மதிகள் மூலம் அந்தக் கொலைபடுகளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்தான். தங்களது உணவுமேசைகளிலிருந்து சிந்தப்படும் பருக்கைகளுக்காகக் காத்திருக்கும் இனங்களிலொன்றாகவே அவர்களது கணிப்பில் நாங்கள் இருக்கிறோம். அவர்கள் நடத்தும் பேரங்கள், சுயலாபத்தை நோக்கி நகர்த்தப்படுபவையே. வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக் என்று அமெரிக்கா மீட்டெடுத்த-மீட்டெடுத்துக்கொண்டிருக்கிற நாடுகளின் சுபிட்ச வாழ்வு பற்றி அறிந்தே இருக்கிறோம். ஈற்றில், ‘குரங்கு அப்பம் பிரித்த கதை’யாக இதுவும் முடியக்கூடும். அமெரிக்காவின் ஏகாதிபத்திய முனைப்புக்கும், இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளின் பிராந்தியப் போட்டிக்கும் இடையில் ஈழத்தமிழர்களது வாழ்வு பணயப் பொருளாக்கப்பட்டிருக்கிறது. எனினும், சுயலாபப் போட்டிகளுக்கிடையில் துளி நியாயம் கிடைக்காதா என்பதே எங்களது அபிலாசை. இல்லையெனில், மீண்டும் ஒருதடவை அமெரிக்காவும் ஐ.நா.வும் நியாயம் நியாயமென ஆர்ப்பரிக்கும் மேற்குலக நாடுகளும் எம்மினத்தைக் கைவிடட்டும். அங்ஙனம் அவர்கள் எங்களைக் கைவிடும் காலம், ஈழத்தமிழர்கள்மீது மேற்குலகினால் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது இனப்படுகொலை என வரலாற்றின் ஏடுகளில் பதிந்துவைக்கப்படும்!

 

நன்றி: கனடா வணக்கம் எஃப்.எம்., ஒழுங்கமைத்த Sakthy Shakthy க்கும் நன்றி.

வானொலியில் பேசியதன் எழுத்துவடிவம்

Tamilnathy Rajarajan   [ முகநூலில் இருந்து  ]  14  May 2014

https://www.facebook.com/tamilnathy/posts/10151946093890834

  • தொடங்கியவர்

தமிழினப்படுகொலை ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் பாடல்

 

 

https://www.youtube.com/watch?v=1G8OUSCcB2k

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.