Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் கல்வி கற்கும் உரிமை உலகத் தமிழ் மாணவருக்கு உண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கல்வி கற்கும் உரிமை உலகத் தமிழ் மாணவருக்கு உண்டு - மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சிதம்பரத்தில் மேல இரத வீதியில் இன்றும் நடைபெற்று வரும் பள்ளியை, முன்னாள் அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன் உள்ளிட்ட, சிறந்த மாணவர் பலரை உருவாக்கிய பள்ளியை, 165 ஆண்டுகளுக்கு முன், யாழ்ப்பாணத்தில் திரட்டிய நிதியைக் கொணர்ந்து தொடங்கியவர் தவத்திரு ஆறுமுக நாவலர்.

கலைஞர் மு. கருணாநிதிக்குத் திருவாரூரில் தமிழ் கற்பித்த தண்டபாணி தேசிகரின் ஆசிரியரான யாழ்ப்பாணத்து மட்டுவில் க. வேற்பிள்ளை, சிதம்பரத்தில் அப்பள்ளியில் நெடுங்காலம் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.

பாண்டித்துரைத் தேவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பின்னர், தமிழ் மொழியில் பண்டித, வித்துவான் வகுப்புகளைத் தொடங்க முயன்றபோது, அவ்வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களைப் பெற, யாழ்ப்பாணத்துக்குச் செய்தி அனுப்பி, அங்கிருந்த ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் பாடத் திட்டங்களைப் பெற்று, மதுரையில் வகுப்புகளைத் தொடங்கினார்.

ஈழத்து வடமராட்சி நீதிபதி கதிரவேற்பிள்ளை தொகுத்த அகராதியை மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் பதிப்பித்து வெளியிட்டனர்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரிகள் இருவரும் யாழ்ப்பாணத்த வர்களே; ஒருவர் கறோல் விசுவநாதபிள்ளை; மற்றவர் சி.வை. தாமோதரம்பிள்ளை. சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றவர்களே பின்னர் இலங்கை அரசியலில் புகழ் பூத்த சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆகிய இருவரும்.

கும்பகோணம் கலைக் கல்லூரியில் வெள்ளிநாக்கர் சீனிவாச சாஸ்திரியாருக்கு ஆங்கிலம் கற்பித்தவர் யாழ்ப்பாணத்தவரான பேராசிரியர் ஹென்ஸ்மன், அவரின் வழிவந்தாருள் ஒருவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றதுடன், அப்பல்கலைக் கழகத்தில் உதவிப் பதிவாளராகவும் கடமையாற்றினார். மற்றொருவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்று, சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியியலாளராக இருந்தமையால், அவர் பெயரில் தியாகராய நகரில் ஹென்ஸ்மன் சாலை அமைந்தது. அதுவே கண்ணதாசன் சாலையாக இன்று மாறியுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமைக்கவேண்டுமா என ஆராய்ந்த குழுவின் முன்சென்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் அத்தகைய பல்கலைக் கழகம் அமைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியவர் மட்டக்களப்பு விபுலானந்த அடிகள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் முதல் தலைமைப் பேராசிரியரும் அவரே. கிண்டியில் பொறியியல் கல்லூரியும் சென்னையில் மருத்துவக் கல்லூரியும், வேலூரில் தென்னிந்திய திருச்சபையின் கிறித்தவ மருத்துவக் கல்லூரியும் தொடங்கிய காலங்களில் அவ்வக் கல்லூரிகளின் முதலா வது தொகுதி மாணவர் குழுக்களில் யாழ்ப் பாணத்து மாணவர் பலர் இடம் பெற்றிருந்தனர்.

நல்லூரின் டாக்டர் ஈ.எம். வீ. நாகநாதன் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தபின் யாழ்ப்பாணம் திரும்பினார். தந்தை செல்வாவுடன் இணைந்து தமிழர் விடுதலைப் போராளியானார். சென்னையின் இன்றைய புகழ்பெற்ற தோல் மருத்துவ வல்லுநர் டாக்டர் ஏ.எஸ். தம்பையா ஈழத்துக் காரைநகரில் இருந்து வந்தவர் சென்னையிலேயே படித்தபின் இங்கேயே தங்கிவிட்டார். தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்களான கே.ஆர். சீனிவாச ஐயங்கார் (பிரேமா நந்தகுமாரின் தந்தையார்), கிருஷ்ணசாமி ஐயர் (மகாகவி பாரதியாரின் உறவினர்) நாவலர் சோமசுந்தர பாரதியார், மகாராஜபுரம் சந்தானம் போன்ற பலரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துக் கல்வி நிலையங்களின் தலைவர்களாக்கினார்.

ஈழத்தவர்களான, ம.க. வேற்பிள்ளை பொன்னம்பல பிள்ளை, முத்துத்தம்பிப்பிள்ளை, தென்புலோலி நா. கதிரவேற்பிள்ளை (திரு.வி.க.வின் ஆசிரியர்) பொன். முத்துக்குமரன் போன்ற பலர், தமிழகக் கல்விநிலையங்களில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர். பொன். முத்துக்குமரனின் தமிழ் மரபு நூலின் ஒரு பகுதியைப் பெயர்த்துச் சென்னைப் பல்கலைக் கழக இளங்கலைப் பட்ட வகுப்புக்கான பயன்பாட்டுத் தமிழ்ப் பாடநூலில் ஈராண்டுகளின் முன்னாள் சேர்த்துள்ளனர். 1960களில் சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்திரன் தேவநேசன் யாழ்ப்பாணத்து நீர்வேலியை அடியாகக் கொண்டவர்.

யாழ்ப்பாணத்தவரான கனகசுந்தரம்பிள்ளையிடம் இராமேஸ்வரத்தில் ஆங்கிலம் கற்றதைக் தன் வாழ்க்கை வரலாற்றில் இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில், இலங்கை மாணவர் சங்கத்தின் தலைவராக 1965௬6 ஆண்டுகளில் நான் கடமையாற்றிய காலங்களில், சங்கத்தில் 1,200 உறுப்பினர் இருந்தனர். தமிழகம் முழுவதும் 2,000 மாணவர் வரை கல்வி கற்றனர். தவிர, கொல்கத்தா, மும்பை, புனே, திருவனந்தபுரம், தில்லி, வாரணாசி என இந்தியா முழுவதும் பரந்து கல்வி பயின்றனர்.

யாழ்ப்பாணத்தவரான ஓவியச் செய்தியாளரும் மாமனிதருமான, சிரித்திரன் சிவஞானசுந்தரம் மும்பையில் இன்றைய சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேயுடன் ஒரே கல்லூரியில் சமகாலத்தில் கட்டட வரைகலையும் ஓவியமும் பயின்றவர்.

மட்டக்களப்பின் பாலுமகேந்திரா, புனே திரைப்படக் கல்லூரியில் பயின்று, திரைக் கலையில் புலத்துறை முற்றியவராய், சிறந்த இந்தியத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் இந்திய அரசின் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். புனேயின் வேளாண் கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டும் 4௫ மாணவர்களுக்குக் குறையாமல் ஈழத்துத் தமிழ் மாணவர் பயின்ற காலங்களுண்டு.

வாரணாசியின் இந்துப் பல்கலைக் கழகத்தில் பயின்ற கி. இலட்சுமண ஐயரைக் குறிப்பிடுவதா, கொல்கத்தா சாந்திநிகேதனத்தில் பயின்ற மங்களம்மாளைக் குறிப்பிடுவதா, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தொடங்கிய காலம் முதலாகவும் ருக்மணி தேவியின் கலாச்சேத்திரம் தொடங்கிய காலம் முதலாகவும் அவ்விடங்களில் பயின்று வெளியேறிய ஆயிரக்கணக்கான ஈழத்து மாணவரைக் குறிப்பிடுவதா, இன்னும் விவரம் தெரியாத புகழ்பெற்ற பலரைக் குறிப்பிடுவதா? எதைச் சொல்ல? எதைவிட? தமிழகத்துடன் சிறப்பாகவும், இந்தியத் துணைக் கண்டத்துடன் பொதுவாகவும் ஈழத்தவர் கொண்ட கல்வித் தொடர்புகளுக்கு இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பு 13 சங்கப் பாடல்களைத் தந்த ஈழத்துப் பூதந்தேவனாரும் சாட்சி. இன்றைய அப்துல் கலாமின் ஆங்கில ஆசிரியர் கனகசுந்தரமும் சாட்சி.

இவ்வாறாக ஈழத்தவரும் தமிழகத்தவரும் கொண்டும் கொடுத்தும் ஒருவரை ஒருவர் ஆட்கொண்டு வரும் கல்வித் தொடர்புகள் வரலாற்றுப் பெருமை உடையன. இன்றளவோடு நிற்காமல் காலங் காலமாக வரலாறாகத் தொடரப் போகின்ற பெருமையும் கொண்டன. பார்க்கப் போனால், ஈழத்தவருக்குத் தமிழகத்தில் கல்விகற்க ஓரளவு உரிமை காலங்காலமாக இருந்து வருகிறது.

1950 முதலாக

பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்தியாவெங்கும் ஈழத்து மாணவருக்குத் திறந்தே இருந்தன. அடிப்படைத் தகுதிகள் ஒருவருக்கு இருக்குமானால் மேற்கண்ட படிப்புக்காக, எந்தக் கல்வி நிலையத்திலும் மாணவராகச் சேரலாம். இந்திய அரசும் மாணவருக்கான பல்முறைபுகு நுழைவு கொடுத்து ஈழத்து மாணவரின் கல்வி உரிமையை உறுதி செய்தது.

தொழில் நுட்பத் துறையிலும் (சிற்பம், சித்த-ஆயுர்வேத மருத்துவம்) நுண் கலைகளிலும் (நாகஸ்வரம், தவில், குரலிசை, நடனம்) சமயக் குருக்கள் துறையிலும் (ஓதுவார், அபரக் கிரியையாளர், வேதாகமம் பயில்வோர்) குருகுல முறைப் பயிற்சிக்காகத் தமிழகம் வருவோர் காலாதிகாலமாகத் தத்தம் குருவையோ குருகுலத்தையோ தாமே தேர்வதும் ஒப்புதல் பெறுவதும் பயிற்சி பெறுவதும் - முறை சாராக் கல்வியாதலால் அரசின் தலையீடு இருப்பதில்லை, நுழைவு வழங்குவதிலும் இந்திய அரசு தாராளமாகவே நடந்து வருகிறது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை. சட்டம், கால்நடை உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்விகளுக்கு ஈழத்து மாணவர் நேரடியாகச் சேரமுடியவில்லை. அத்துறைகளில் பட்டப் படிப்புக்கும் பட்டமேற்படிப்புக்கும் தில்லியில் உள்ள நடுவண் அரசின் ஒதுக்கீடுகளுக்குள் வெளிநாட்டு மாணவர் சேர்க்கப்பட்டனர். தமிழகத்துக் கல்வி நிலையங்களில் மட்டுமல்ல, இந்தியா வெங்கணும் உள்ள கல்வி நிலையங்களுக்குத் தில்லியில் உள்ள நடுவண் அரசே வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையைத் தீர்மானித்தது. நடுவன் அரசின் வெளிநாட்டமைச்சில் அயலக மாணவருக்காக ஒரு பிரிவு - அந்தப் பிரிவின் அலுவலகம் தில்லியில் சாஸ்திரி பவனில் உள்ளது. இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிலையங்களில் அயல்நாட்டு மாணவர் சேர்க்கையை இந்தப் பிரிவு ஒருங்கிணைக்கிறது.

இந்தியாவிலுள்ள அனைத்துத் தொழில் நுட்பக் கல்வி நிலையங்களில், அதுவும் அரசுகள் நடத்துகிற தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பட்டப் படிப்புக்கும் பட்டமேற்படிப்புக்கும் இந்த அலுவலகமே ஒற்றைச் சாளரமாக இருக்கிறது. வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி, மணிப்பாலில் உள்ள மருத்துவக் கல்லூரி போன்ற தனியார் கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை இந்தப் பிரிவுள் அடங்குவதில்லை.

தில்லி சாஸ்திரி பவன் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று நிரப்பியோ, கொழும்பில் உள்ள தூதரகத்தில் படிவத்தைப் பெற்று நிரப்பியோ, தாமாகவே பணம் கொடுத்துப் படிக்கும் ஈழத்து மாணவர், ஒதுக்கீட்டுக்காக விண்ணப்பித்து இடம் பெற்று, மருத்துவ, பொறியியல், வேளாண், கால்நடைப் பட்டப் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் ஆண்டுதோறும் வழங்கும் புலமைப் பரிசில்கள் பெற்று, இந்தியா வந்து தொழில்நுட்பக் கல்வி கற்றுத் துறைபோகும் ஈழத்து மாணவரும் உண்டு. அத்தகைய புலமைப்பரிசில் பெற்றுச் சென்னையில் படித்தவருள் நானும் ஒருவன்.

1983௧990 காலப்பகுதி

இந்தப் பின்னணியில், 1983க்குப் பின்னர்தான் ஈழத்து மாணவரின் நிலையை நோக்கவேண்டும். இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் ஈழத்தவர் ஏதிலிகாளக வரத் தொடங்கியது:ம் தமிழகம் தன் கல்விக் கூடங்களின் கதவுகளை மிக அகலமாகத் திறந்து, அவர்களுக்கு எந்த வகுப்பிலும் எவ்விதத் தடையுமின்றி இடங்கொடுக்கலாம் என அறிவித்தபொழுது, ஈழத்தமிழர் நெஞ்சங் குளிர்ந்தது.

ஆண்டு 8 வரை சேர்பவர்களிடம் எந்த முன் கல்விச் சான்றும் கேட்காமல், சேர்க்கைத் தேர்வும் வைக்காமல் வயதுத் தகுதியை மட்டும் கொண்டு சேர்க்குமாறும் எந்த ஒரு வகுப்புக்கும் அரசு ஒப்பிய இட எண்ணிக்கைக்கு மேல் 20% வரையான எண்ணிக்கை வரை ஈழத்து மாணவரைச் சேர்க்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

9௧2 ஆண்டுகள் வரையான வகுப்புகளுக்கு, கல்வித் துறையிடம் மாணவர் சென்று தன்னிலை விளக்கம் கூறி, கல்வித் துறையின் கடிதத்தைப் பெற்று வருவோரை அதே எண்ணிக்கை அதிகரிப்பில் எப்பள்ளியும் சேர்க்கலாமெனத் தமிழக அரசு அறிவித்தது.

தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் சேர்க்கை தொடர்பாக, ஈழத்து மாணவருக்கு இடஒதுக்கீடுகளைத் தமிழக அரசு அறிவித்தது. தில்லி நடுவண் அரசின் ஒது:க்கீடுகளும் தொடர்ந்தன. தமிழக அரசின் ஒதுக்கீடு காரணமாக அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 45, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 20, வேளாண் கல்லூரிகளில் 10, சட்டக் கல்லூரிகளில் 5, கால்நடைக் கல்லூரியில் 1, தொழில் நுட்பப் பயிலகங்களில் 30 இடங்கள் என்ற எண்ணிக்கையில் 1984 கல்வியாண்டு முதலாக ஈழத்து மாணவர் சேர்க்கை தொடங்கியது.. 1990 ஆனியில் தொடங்கிய கல்வியாண்டு வரை இந்த ஒதுக்கீடு தொடர்ந்தது.

1991௧995 காலப் பகுதி

1991 கல்வியாண்டு முதலாக ஈழத்து மாணவர் எந்தக் கல்வி நிலையத்திலும் எளிதாகச் சேரமுடியாத சூழ்நிலை உருவானது. எனினும் பள்ளிகளிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப மாணவர் சேர்க்கைகள் நடந்தன.

மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வழங்கிய ஒதுக்கீட்டை உடனடியாக அரசு நிறுத்தியது.

ஆனாலும் தில்லியிலுள்ள வெளிநாட்டமைச்சின் மாணவருக்கான அலுவலகம், வழமைபோலத் தாமே பணம் செலுத்தும் மாணவருக்கான ஒதுக்கீடுகளையும் புலமைப் பரிசில் மாணவருக்கான ஒதுக்கீடுகளையும் வழங்கி வந்தது. ஈழத்து மாணவர் பலர் தமிழகக் கல்லூரிகளில் இடம் பெற இந்த ஒதுக்கீடு உதவியது.

ஈழத்து மாணவர் சேர்க்கையில் இந்த மந்த நிலை 1995 வரை தொடர்ந்தது.

1995௨000 காலப் பகுதி

1996 ஆனியில் தமிழகத்தில் பதவிக்கு வந்த அரசின் தாராளப் போக்கினால், மீண்டும் மருத்துவம் பொறியியல், வேளாண்மை, சட்டம் கால்நடை உள்ளிட்ட தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கான ஒது:க்கீடுகளைப் புதுப்பித்து, கல்வித் துறை ஆணை வழங்கியது. பொறியியலுக்கு முன்பு வழங்கிய 45 இடங்கள் 25 ஆகக் குறைந்தன. மருத்துவத்தில் 20, வேளாண் 10, சட்டம் 5, கால்நடை 1, தொழில் நுட்பப் பயிலகங்களில் 30 இடங்கள் என ஒதுக்கிய இடங்கள் ஈழத்து மாணவருக்குக் கிடைத்தன.

தில்லியின் அயலகத் துறை வழங்கிய ஒதுக்கீடுகளும் புலமைப் பரிசில்களும் ஈழத்து மாணவரின் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு உதவின.

புதிய அரசின் மாணவர் சேர்க்கைக் கொள்கையால், அனைத்து நிலைக் கல்வி நிலையங்களும் உற்சாகத்துடன் ஈழத்து மாணவரைச் சேர்க்கத் தொடங்கின. அதுமட்டுமல்ல தனியார் மருத்துவக் கல்லூரிகள், போரூர், சிதம்பரம், சேலம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் வந்ததால், வசதி படைத்த ஈழத்து மாணவருக்கு வாய்ப்பாக அவை அமைந்தன. பல் மருத்துவக் கல்லூரிகள் பலவற்றைத் தனியார் தொடங்கினர். அங்கும் ஈழத்து மாணவர் பலர் சேர்ந்தனர். பொறியியல் கல்லூரிகள் பலவையும் தனியார் தொடங்க, வசதி படைத்த ஈழத்து மாணவர் அங்கும் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்தனர்.

மழலைப் பள்ளி தொடக்கம் பட்டமேற்படிப்பு ஈறாக, துறைதொறும் துறைதொறும் தமிழகம் முழுவதும் எவ்வித இடர்பாடும் இன்றி ஈழத்து மாணவர் சேர்ந்து படித்த காலப் பகுதி இஃதாம். எனினும் மருத்துவப் பட்டமேற்படிப்புக்கு நடுவண் அரசின் மருத்துவத்துறை கட்டுப்பாடு விதித்து வந்தது. 2000௨006 காலப் பகுதி:

2001ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், மீண்டும் ஈழத்து மாணவரின் தொழில் நுட்பக் கல்விக்கான இட ஒதுக்கீடுகளில் பின்னடைவு ஏற்பட்டது.

தொழில்நுட்பக் கல்விச் சேர்க்கைக்கான தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் பாதிப்புற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தமிழக அரசின் சிறப்பு ஒதுக்கீடுகளை மாற்றியமைக்கக் கோரி நீதிமன்றத்து:க்குப் போனார்.

ஈழத்து ஏதிலி மாணவருக்கான இடஒதுக்கீடு எண்ணிக்கைகளையும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

தமிழக மாணவியின் விண்ணப்பத்தை எடுத்து நோக்கிய சென்னை உயர்நீதிமன்றம், அவருக்கு நீதி வழங்கியது. அந்தத் தீர்ப்பில், இலங்கை மாணவருக்கான இடஒதுக்கீட்டைத் தமிழக அரசும் நடுவண் அரசும் சேர்ந்து தீர்க்க வேண்டும் என்ற வரிகளைச் சேர்த்தது.. இத்தீர்ப்பால் தொழில்நுட்பக் கல்விக்கான தமிழக அரசின் 1984௧990, 1995௨000 காலப்பகுதிகளின் ஒதுக்கீடுகள் ஓய்ந்து போயின. தில்லியின் அயலுறவுத் துறையின் ஒதுக்கீடுகள் மட்டும் தொடர்கின்றன. மிகச் சிலரான எண்ணிக்கையில் ஈழத்து மாணவர் தொழில் நுட்பக் கல்விக்குத் தேர்வாகின்றனர். அனைத்துப் பள்ளிகளிலும் தகுதிக்கேற்பச் சேர்வதில் ஈழத்து மாணவருக்குத் தடையில்லை.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஈழத்து மாணவர்-சேர்க்கைக்குப் பாதிப்பில்லை.

வசதி படைத்த ஈழத்து மாணவர் தனியார் மருத்துவ, பல்மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேரத்தடையில்லை. தமிழக அரசு வழங்கிய ஈழத்து மாணவருக்கான (பொறியியல் 45, மருத்துவம் 20, வேளாண் 10, சட்டம் 5, கால்நடை 1, தொழில் நுட்பப் பயிலகங்களில் 30 இடங்கள்) ஒதுக்கீடுகளுக்குத் தடை.

மருத்துவப் பட்டமேற்படிப்புச் சேர்க்கைக்கு நடுவண் அரசு ஈழத்து மாணவருக்கு ஒதுக்கீடு தருவதில்லை. ஈழத்தமிழரின் எழுத்தறிவு 99.5%. கல்வியே அவர்களது கண். கல்விக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அளவற்றன. ஈழத்தமிழர் பகுதிகளில் கல்விக் கூடங்களின் எண்ணிக்கை ஏராளம். ஏதிலிகளாக வந்தவர்களைத் தமிழகம் தாங்கி அரவணைத்துக் கல்வியைத் தொடர அளிக்கும் ஆதரவுக்கு ஈழத்தமிழர் நன்றிக் கடனுடையர்.

ஏதிலியராக வந்ததால் பெற்ற ஒதுக்கீடுகளைத் தமிழக அரசு சட்டமாக்கி, ஈழத்தமிழர் என்றென்றும் தமிழகத்தில் கல்விக்கு உரித்துடையர் என்பதை உறுதி செய்தால், தமிழக ஈழக் கல்வித் தொடர்வுகள் மேலும் நெருக்கமாகும். பாடத்திட்டங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மீண்டும் வரும். ஹென்ஸ்மன், வேற்பிள்ளை கனசுந்தரம் போன்றோர் வருவர். கொண்டும் கொடுத்தும் கல்வியில் ஒருவரை ஒருவர் ஆட்கொள்வோம்.

தென் செய்தி

நம் தாயக முன்னோடிகள் இவ்வளவு பிரபல்யமாகவும் அத்துடன் காலம் தொட்டு தமிழகத்துக்கும் தாயகத்திற்கும் இருந்த நல்லுறவை இந்த கட்டுரை விளங்கியிருக்கின்றது. முதல் பாகத்தை வாசிக்கும்போது உண்மையில் புல்லரிக்கின்றது.

இணைப்புக்கு நன்றி கந்தப்பு.

நல்லதொரு ஆய்வுக் கட்டுரை இணைப்புக்கு நன்றிகள் கந்தப்பு

இணைப்புக்கு நன்றி கந்தப்பு தாத்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.