Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசிலாந்து பயணக் குறிப்பு

Featured Replies

நியூசிலாந்து பயண அனுபவங்கள் - பாகம் 1/3

 

நியூசிலாந்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று ஏன் தோன்றியது என்று  தெரியவில்லை. Divinely Inspired என்பார்களே அது போல கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு எண்ணமாகவே திடீரென்று என் மனதில் எழுந்தது. சரி, வலைத்தளத்தில் நியூசிலாந்து பற்றி படித்து தான் பார்ப்போமே என்று எண்ணி அந்நாட்டை பற்றி படிக்க படிக்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம் என்ற எண்ணம் வலுத்தது.நிறைய தேடலுக்குபின் வலைதளத்தின் மூலமாகவே ஒரு பயண முகவரை அணுகி நாங்கள்  பார்க்க நினைத்த இடங்களின் பட்டியலை கொடுத்தேன். அழகான பயண விவர ஏடு விரைவாக மின்னஞ்சல் வழியாக வந்தது. பிறகென்ன, வானத்து தேவதைகள் ஒன்று கூடி 'ததாஸ்து' என்று சொன்ன 2008 ஆண்டு  நவம்பர்  மாதம் மூன்றாம் வாரத்தில் இனிமையாக தொடங்கியது நியூசிலாந்து பயணம். வட அமெரிக்காவில் இருந்து பயண முகவர் குறித்து தந்த பயண விவர ஏட்டின் படி லாஸ் ஏஞ்சல்ஸ், ஆக்லாந்து வழியாக பயணித்து க்ரைஸ்ட்சர்ச்  நகரை நானும் என் கணவரும் அடைந்தோம்.

 
நியூசிலாந்து பற்றிய ஒரு சிறிய அறிமுகம் - வடக்கு தீவு, தெற்கு தீவு ஆகிய இரண்டு பெரிய தீவு பகுதிகளையும் மற்றும் பல்வேறு சிறு தீவுகளையும் உள்ளடக்கி, பசிபிக் பெருங்கடலில் தென் மேற்கு கோளார்த்ததில் அமைந்துள்ளது. சுற்றுலாவை பிரதான வருவாய் ஆதாரமாக கொண்ட நாடு. கண்ணை கவரும் அழகிய மலைகள், அம்மலை முகட்டில் வெள்ளியை உருக்கி வார்த்தது போன்ற உறைபனி படலம், அந்தப்பனி படலத்தில் இருந்து உருவாகி பிரவாகிக்கும் ஏரிகள் மற்றும் ஆறுகள், எங்கும் பச்சை பட்டாடையை விரித்தது போன்ற புல்வெளிகள், பால் போன்ற நீரை சுரக்கும் அருவிகள் என்று எங்கெங்கு காணினும் கொள்ளை அழகோ அழகு. மக்கள் தொகை தோரயமாக 43 லட்சம்.
 
க்ரைஸ்ட்சர்ச் விமான நிலையத்தை அடைந்ததுமே முதலில் எனக்கு தோன்றிய எண்ணம்  "ம்ம்ம்  விமான நிலையம் எவ்வளவு  சிறியதாக இருக்கிறது என்று".  அமெரிக்காவில் உள்ள பெரிய விமான நிலையங்களை பார்த்த பிறகு எந்த ஊர் சென்றாலும் இதே உணர்வு தான் வருகிறது. உதாரணமாக இந்தியாவில் எந்த ஹோட்டலிலாவது காபி/தேனீர் அருந்த சென்றால் முதலில் எனக்கு தோன்றுவது இந்த டபரா டம்ளர் எல்லாம் எவ்ளோ சின்னதா இருக்கு என்பது தான். விமான நிலையத்தை விட்டு வெளியேறியதும்,  எங்கள் ஹோட்டலை அடைந்து அங்கே பெட்டிகளை விட்டு விட்டு நாங்கள் முதலில் சென்ற இடம் க்ரைஸ்ட்சர்ச்  கதீட்ரல் சதுக்கம்.
 
NZTrip+051.jpg
 
க்ரைஸ்ட்சர்ச்  கதீட்ரல் வெளிப்புற தோற்றம்
 
NZTrip+046.jpg
க்ரைஸ்ட்சர்ச்  கதீட்ரல் உட்புற தோற்றம்
 
நிலவில் மட்டும்தான் ஸ்டார்பக்ஸ்இல்லை என்று  தோன்றுகிறது. அந்தளவுக்கு எங்கு
சென்றாலும் ஸ்டார்பக்ஸை விட்டு அதிக தூரம் செல்ல முடியாது போலும். க்ரைஸ்ட்சர்ச்  கதீட்ரல் சதுக்கமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இன்னொரு விஷயம் - நியூசிலாந்தில் உள்ள அளவிற்கு உணவகம் அதிகம் உள்ள நாடு இல்லை. அதாகப்பட்டது அங்கு உள்ள ஜனத்தொகைக்கும் உணவகத்துக்கும் உள்ள விகிதம் மிகவும் குறைவு.  இது எந்த நாட்டிலும் இல்லாத ஒன்று. எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கே மெக்சிகன், சைனீஸ், இந்தியன் என்று பல தரப்பட்ட நாடுகளின் உணவு வகைகளை சுவைத்து மகிழலாம். க்ரைஸ்ட்சர்ச்  கதீட்ரல் சதுக்கம் அருகில் உள்ள தபால் நிலையம், மற்றும் கடைகள்,அருகிலுள்ள சிறிய பூங்கா ஆகியவற்றை சிறிது நேரம் பார்த்துவிட்டு மதிய உணவிற்காக ஹோட்டலுக்கு திரும்பினோம். திரும்பியதும் குளித்து விட்டு சிறிது நேரம் உறங்கலாம் என்று எண்ணி பெட்டிகளை திறந்து எனது பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என் கணவர் "என்னுடைய பாஸ்போர்ட்டை காணவில்லை" என்றார். ரூம் மற்றும் அவரது பை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. உடனே காலையில் இருந்து சுற்றி பார்த்த ஒவ்வொரு இடமும் சென்று அங்கு யாராவது பாஸ்போர்ட்டை கண்டெடுத்தார்களா என்று விசாரித்தோம். எல்லா இடத்திலும் இல்லை என்ற பதில்.  பயமும் பதற்றமுமாக  கடைசியாக நாங்கள் சென்ற இடம் க்ரைஸ்ட்சர்ச் தபால் நிலையம்.  விசாரிப்பதற்காக தபால் நிலைய வரிசையில் காத்திருந்த போது என் கணவரிடம் விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து என்ன என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள் என்றேன். அவரும் காலையில் விமானத்தில் இருந்து இறங்கியதில் இருந்து நடந்த ஒவ்வொன்றையும் சொல்லி கொண்டே வந்தார். குடியேற்றம் முடிந்ததும் பாஸ்போர்ட்டை இந்த பையில் வைத்தேன் என்று தன் சட்டை பையை காட்டியவர் ஏதோ நினைவு வந்தவராக உள்பக்கமாக இருந்த
பாதுகாப்பு  பையையும் சோதித்து உற்சாக துள்ளல் போட்டார். என்னவென்றால் கை மறதியாக மேற் சட்டையில் உள்ள பாதுகாப்பு பையில் பாஸ்போர்ட்டை வைத்துவிட்டு காணவில்லை காணவில்லை என்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தானும் அவஸ்தைப்பட்டு என்னையும் அவஸ்தைக்கு உள்ளாக்கி இருக்கிறார். பிறகென்ன இன்றும் வீட்டில் எதாவது காணவில்லை என்று அவர் சொன்னால் பாஸ்போர்ட்டை கையில் வைத்து கொண்டே காணவில்லை என்று சொன்னவர் தானே நீங்கள் என்று கிண்டல் செய்வதுண்டு. எப்படியோ பாஸ்போர்ட்டை பத்திரமாக இருந்ததே என்று நிம்மதி பெருமுச்சி விட்டதோடு அல்லாமல், எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டியதன் அவசியத்தை நினைத்துகொண்டே மறுபடியும் ஹோட்டலை அடைந்தோம்.
 
NZTrip+072.jpg
தாவர பூங்கா
 
அன்று  மாலை க்ரைஸ்ட்சர்ச் தாவர பூங்கா மற்றும் அதனை ஒட்டயுள்ள கண்டர்பரி அருங்காட்சியகம் ஆகியவற்றை கண்டு களித்தோம். அக்காலத்தில் அண்டார்டிகாவுக்கு செல்லும் பயண குழுவினர் அனைவரும் நியூசிலாந்து வழியாகவே பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு சென்று திரும்பிய குழுவினர் பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள், வாகனங்கள் ஆகியவை காட்சிக்காக வைக்க பட்டிருந்தது. நியூசிலாந்து பூர்வ பழங்குடியரான மோரி மக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், பாத்திரங்கள்,பச்சைக்கல் ஆபரணங்கள் ஆகியவையும் பார்வைக்காக வைக்கபட்டிருந்தது. அருமையான சேகரிப்பு. அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.
 
அருங்காட்சியகத்தில் எடுத்த சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.


 


NZTrip+059.jpg ஆதாம் போன்ற முதல் மனிதன் - டிக்கி என்பார்கள்

 


 

NZTrip+060.jpg அருங்காட்சியகத்தில் இருந்து மேலும் சில காட்சிகள்

NZTrip+067.jpg


அன்றிரவு உணவு முடிந்து நாங்கள் தங்கும் ஹோட்டலுக்கு சென்று அடுத்த நாள் செல்லப்போகும் குயின்ஸ்டவுன் பயணத்துக்காக தயாரானோம். குயின்ஸ்டவுனை Adventure Capital  என்பார்கள். குயின்ஸ்டவுன் பயணம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? அது அடுத்த பாகத்தில்.
 
 பயணம் தொடரும்....
 
  • தொடங்கியவர்

நியூசிலாந்து பயண அனுபவங்கள் - பாகம் 2/3

 

சில்லென்று குளிர்ந்த காற்று வீசியவாறு அவ்வப்போது சிறு தூறலும் போடும் வானம். அதிகாலை நேரத்தில் குளிர் சற்று அதிகமாகவே இருந்தது. சில மணிநேரங்களே  உறங்கியிருந்தாலும் செல்லும் இடம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால் சீக்கிரமாக தயாராகி நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலின் கீழ் தளத்திற்கு வந்து புறப்பட தயாராக காத்திருந்தோம். ஜன்னல் மற்றும் மேல் கூரையில் கண்ணாடி பதித்து நவீன ரதம் போன்ற அழகான பேருந்து குறித்த நேரத்தில் வந்ததும் ஏறி அமர்ந்தோம்.வேறு சில தங்கும் விடுதிகளுக்கும் சென்று பயணிகளை ஏற்றி கொண்டு க்ரைஸ்ட்சர்ச்சில் இருந்து பேருந்து விரைவாக புறப்பட்டது.

 

NZTrip+099.jpg

 

க்ரைஸ்ட்சர்ச்சில் இருந்து மவுண்ட் குக் வழியாக குயின்ஸ்டவுன் செல்வதாக எங்கள் பயண ஏட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஓட்டுனர் அழகாக கடந்து செல்லும் இடங்களை பற்றி விவரித்தவாறே வர நாங்களும் இயற்கை காட்சிகளை ரசித்தவாறே பயணித்தோம். தெற்கு ஆல்ப்ஸ் மலை தொடரின் அழகை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. எனவே ஒரு புகை படம் உங்கள் பார்வைக்கு.

 

NZTrip+095.jpg

 

பச்சை பட்டை விரித்தது போன்ற புற்கள் படர்ந்த அழகான மலை தொடரும், அம்மலையின் ஊடே பாய்ந்து மறையும் ஆறுகளும், கண்ணையும் கருத்தையும் கவரும் சிறு நகரங்களையும் தாண்டி பேருந்து சீராக பயணித்து டேகபோ என்ற ஏரியை அடைந்தது. 

 

NZTrip+106.jpg

டேகபோ ஏரி

 

பனி பாறைகள் உருகியதால் உண்டான நீரில் இருந்து உருவாகிய அழகிய ஏரி டேகபோ. லூபின்ஸ்  என்று சொல்லப்படும் வண்ண மலர்கள் அந்த ஏரியின் கரையில் வளர்ந்து அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது. பனி உருக்கத்தில் இருந்து உருவானதால் அந்த நீர் அழகான நீல நிறத்தில் பளபளத்தது. அந்த ஏரியின் கரையினில் தேவாலயம் ஒன்றும் அமைந்து இருக்கிறது.அந்த இடத்தை விட்டு பிரிய மனம் இல்லாமல் புகைப்படம்  எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறினோம். A thing of beauty is a joy forever என்ற சொற்றொடருக்கு அர்த்தம் அளிக்கும் வகையில் இருந்தது அந்த ஏரியும் அதனை சுற்றி அமைந்திருந்த அழகிய பனி படர்ந்த மலைகளும். ஓட்டுனரும் எங்கள் மன ஓட்டத்தை அறிந்தவர் போல கவலை படாதீர்கள், மேலும் ஒரு அழகான ஏரியை  நாம் சிறிது நேரத்தில் அடைவோம் என்றார். அவர் கூறியவாறே நாங்கள் அடுத்து அடைந்தது புககி என்ற ஏரி. டேகபோ போன்ற அழகிய அந்த ஏரியும் மனதுக்கு ரம்யமாக இருந்தது.

மலையும் மலையும் சார்ந்த இடங்களையும் குறிஞ்சி என்பர் பண்டை தமிழர். அந்த குறிஞ்சி நிலத்திற்கு முருகனை தெய்வமாக குறிப்பிடுவர். முருகு என்றால் அழகு என்று பொருள். குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வர். அதாவது மலை இருக்கும் இடங்கள் எல்லாம் அழகான இடங்கள் என்று நம் முன்னோர் எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார்கள் என்று தோன்றியது. மலைகளுக்கு முன்னால் நாம் நிற்கும் போது 'தான்' என்ற எண்ணம் தகர்ந்து இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்திக்கு முன் நாம் எம்மாத்திரம் என்ற உணர்வும்  எழுகிறது. அதனாலயே தவம் செய்யவும் மனதை ஒருமுகப்படுத்தும் தியானம் செய்யவும் மலைகளையே தேர்ந்து எடுத்த நமது முன்னோர்களின் பேரறிவை எண்ணி வியந்தேன்.

புககி ஏரியில் இருந்து புறப்பட்ட பேருந்து மவுண்ட் குக்கை மதியம் அடைந்தது. மவுண்ட் குக்கில் உள்ள சர் எட்மண்டு ஹிலரி ஆல்பைன் மையத்தில் தூரத்தில் தெரிந்த குக் சிகரத்தை ரசித்தவாறே மதிய உணவு  உண்டோம். சர் எட்மண்டு ஹிலரி மவுண்ட் குக்கில் பல முறை ஏறி பயிற்சி எடுத்த பின்பே எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறினாராம். எனவே அவர் நினைவாக சர் எட்மண்டு ஹிலரி ஆல்பைன் மையம் மவுண்ட் குக் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து பலரும் குக் மலையில் ஏறி சாதனை புரிந்து வருகின்றனர். அங்கிருந்து கிளம்பி சுமாராக நான்கு மணி நேர பயணத்திற்கு பிறகு குயின்ஸ்டவுனை அடைந்தோம்.

 

NZTrip+145.jpg

மவுண்ட் குக் 

 

NZTrip+162.jpg

மெக்கின்சி வடிநிலம்

 

NZTrip+176.jpg

வாகடிப்பு ஏரி - குயின்ஸ்டவுன்

 

குயின்ஸ்டவுன்  என்று இங்கிலாந்து விக்டோரியா மகாராணியை பெருமைபடுத்தும் வகையில் பெயரிட்டு இருக்கலாம்  என்ற கருத்து உண்டு. அது 100 சதவிகித உண்மை என்றே தோன்றியது. அவ்வாறு அரசிகள் வசிக்க தகுதி வாய்ந்த அழகிய  நகரம். வாகடிப்பு ஏரியும், ரிமார்கப்ள்ஸ் என்றழைக்கப்படும் மலைகளும் சூழ்ந்த அந்த நகரம் கண்ணை மட்டும் அல்ல கருத்தையும் கவரும். இரண்டு நாள் தங்கிய உடனேயே பல நாட்கள் தங்க வேண்டும் என்ற என்ணத்தை உண்டாக்கியது.
 
அடுத்த நாள் குயின்ஸ்டவுனில் இருந்து ஒரு நாள் பயணமாக கிளம்பி பியோர்ட்லாந்து தேசிய பூங்காவில் உள்ள மில்போர்ட் சவுண்ட் என்ற இடத்திற்கு சென்றோம். மில்போர்ட் சவுண்ட்டை ருட்யார்ட் கிப்ளிங்  உலகின் எட்டாவது அதிசயமாக  குறிப்பிடுகிறார். குயின்ஸ்டவுனில் இருந்து கிளம்பி டிஅனு, ஹோமர் சுரங்க வழியாக பியோர்ட்லாந்து தேசிய பூங்காவை அடைந்தோம். அங்கிருந்து படகுகள் மூலம் மில்போர்ட் சவுண்ட்டை அடையலாம். கிளடோவ் என்ற ஆறு, சுமார்  16  கிலோ மீட்டர்கள், நேர் செங்குந்தான மலைகளின் இடையில் பாய்ந்த பின்பு டாஸ்மான் கடலில் கலக்கிறது.  இந்த இடத்தில் உள்ள உயரமான சிகரத்தை மித்ரி சிகரம் என்று அழைகின்றனர். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பிடித்த இந்த படகு பயணம் என்னால் மறக்க முடியாத ஒன்று. லேடி போவன் நீர்வீழ்ச்சி மற்றும் ஸ்டர்லிங் நீர்வீழ்ச்சியும் அந்த மலைகளின் ஊடாக வழிந்து டாஸ்மான் கடலில் கலக்கிறது. மழை பொழியும் போது திடீரென்று தோன்றி மறையும் சிறு சிறு  நீர்வீழ்சிகளும் அந்த இடத்தை மண்ணில் தோன்றிய அதிசயமோ என்று எண்ணி வியக்க வைத்தது. நியூசிலாந்து பயணம் செல்லும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று மில்போர்ட் சவுண்ட்.
 
NZTrip+195.jpg
மிர்ரர் ஏரி - பியோர்ட்லாந்து தேசிய பூங்கா  
 
NZTrip+184.jpg
பியோர்ட்லாந்து தேசிய பூங்கா மற்றொரு தோற்றம்
 
NZTrip+298.jpg
மித்ரி சிகரம் - மில்போர்ட் சவுண்ட்
 
 அழகான அந்த நாளை அசை போட்டபடியே  மீண்டும் குயின்ஸ்டவுனை அடைந்தோம். அடுத்த நாள் "தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" திரைப்படம் எடுக்கப்பட்ட இடங்களை பார்க்க செல்வதாக திட்டம்.  இந்த பயணம் எப்படி இருந்தது என்று அறிய ஆவலாக உள்ளீர்கள் தானே? அது அடுத்த பாகத்தில். 
 
 
  • தொடங்கியவர்

நியூசிலாந்து பயண அனுபவங்கள் - பாகம் 3/3

 

நியூசிலாந்து பற்றி எழுதும் பொழுது கண்டிப்பாக எழுத வேண்டிய ஒரு விஷயம் உண்டென்றால் அது - ஆடுகள். ஆமாம் நீங்கள் சரியாகதான் படித்தீர்கள். நியூசிலாந்தில் மனிதர்களை விட ஆடுகள் 9 மடங்கு அதிகம். எனவே நியூசிலாந்து மலைகளிலும், சம வெளிகளிலும் ஆடுகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து திரிவதை பார்க்கலாம். இறைச்சிக்காகவும், ரோமத்திற்காகவும் அங்கு ஆடுகள்  வளர்க்கப்படுகின்றன. அதனால் கம்பளி உடைகள் மிகவும்

 
NZTrip+314.jpg
ஆடுகள்
 
மலிவாக வாங்கலாம் என்று எண்ணினேன். ஆனால் நல்ல ஸ்வெட்டர் விலையோ சில நூறு  அமெரிக்கன் டாலர்கள். எனவே கம்பளி உடைகள் வாங்க நினைப்பவர்கள் அதற்கேற்றார் போல் பணம் எடுத்து செல்வது நலம்.
 
சரி அடுத்த பயணம் எங்கே என்று அறிய ஆவலாக இருக்கிறீர்கள் தானே? நான் முன்பே கூறியது போல குயின்ஸ்டவுனில் இருந்து கிளம்பி சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள க்ளெநார்கி  என்ற இடத்திற்கு சென்றோம். நோமட் சபாரி என்ற நிறுவனம் வழியாக இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்தோம்.  மொத்தம் 8 பேர் கொண்ட எங்கள் பயண குழு பயணித்தது ஒரு ஜீப்பில். ஏன் என்றால் நாங்கள் பயணித்த பல பகுதிகளில் தார் சாலைகள் இல்லை. சில நேரங்களில் சிறு சிறு ஓடைகளில் இறங்கி பயணம் செய்ய நேர்ந்ததால் இந்த பயணத்திற்கு ஜீப்பே உகந்ததாக இருந்தது. பயணம் சென்ற சாலையின் ஒரு புறம் வாகடிப்பு ஏரி மற்றும் அதை சூழ்ந்த அழகிய மலை பிரதேசமும்  கண்ணுக்கு விருந்தளித்தது.  பல இடங்களில் இறங்கி வாகடிப்பு ஏரியின் பல்வேறு அழகிய காட்சிகளை புகைப்படங்களாக சிறை பிடித்துக்கொண்டே சென்றோம். இந்த இடத்தை விட இந்த இடம் மேலும் அழகாக உள்ளதா இல்லையோ என்று பட்டி மன்றம் நடத்தும் அளவிற்கு திரும்பும் வளைவுகளில் தோன்றிய இயற்கை   காட்சிகள் மனதை மயக்கியது.
 
NZTrip+008.jpg
வாகடிப்பு ஏரியின் மற்றொரு தோற்றம்
 
NZTrip+019.jpg
க்ளெநார்கி
 
ஓட்டுனர் அழகான அந்த மலை மற்றும் வன பிரேதேசத்தில் "லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" திரைப்படம் எடுக்கப்பட்ட பல்வேறு இடங்களை சுட்டிக் காட்டியவாறே வந்தார். பின்னர் பயணத்தின் முத்தாய்ப்பாக தேநீரும் ரொட்டிகளும் வழங்கப்பட்டது.  அழகான அந்த இயற்கை காட்சிகளை ரசித்தவாறே உண்ட அந்த ரொட்டிகளின் தித்திப்பு இன்றும் நாக்கில் இனிக்கிறது.  அந்த அற்புதமான பயணம் அன்று மதியத்துடன் முடிவடைந்து மீண்டும் குயின்ஸ்டவுனை  அடைந்தோம்.  கோன்டேலா மூலமாக பயணித்து  சுமார் 1500  அடி உயரத்தில் இருந்து  குயின்ஸ்டவுன், ரிமார்கபில்ஸ் மலைகள், வாகடிப்பு ஏரி, செசில் சிகரம், வால்டர் சிகரம் ஆகியவற்றை கண்டு களித்தோம்.  இதோ உங்கள் பார்வைக்கு சில படங்கள்.

 

NZTrip+378.jpg

குயின்ஸ் டவுன் ஒரு பறவை பார்வை

 

NZTrip+380.jpg

குயின்ஸ் டவுன் மற்றொரு பார்வை

 

 

 அன்று மாலை முழுவதும் வாகடிப்பு ஏரியை ஒட்டிய தாவர பூங்காவில் செலவிட்டோம். பல விதமான அழகிய மரங்களும், பல்வேறு நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட அழகான மலர் வகைகளையும் கொண்ட அந்த பூங்கா கொள்ளை அழகுடன் திகழ்ந்தது. கரையில் அடிக்கடி தாள லயத்துடன் மோதும் அலைகளும், தண்ணீர் தாலாட்டும் படகுகளும், கரையை ஒட்டி அமைந்த அழகான சிறு வீடுகளும்  அமைதியான அந்த இடமும் மனதை  கொள்ளை கொண்டது. நேரம் போவதே தெரியாமல் அந்த அழகை ரசித்து கொண்டிருந்தோம்.

 

NZTrip+25+019.jpg

 

 

மறு நாள் காலையில் குயின்ஸ்டவுனை விட்டு விட்டு  கிட்டதட்ட 5  மணி நேர பயண  தொலைவில் உள்ள  பிரான்ஸ்ஜோசப் என்ற இடத்திற்கு புறப்பட்டோம். டன்ஸ்டன்  ஏரி, மபோரிக்கா ஏரி, வனாக்கா ஏரி, மவுண்ட் ஆஸ்பயரிங் தேசிய பூங்கா  ஆகியவற்றை வழியில் கண்டு களித்து விட்டு  பிரான்ஸ்ஜோசப்பை அடைந்தோம். பிரான்ஸ்ஜோசப் பனி பாறை மிகவும் பிரசித்தி வாய்ந்தது. அடுத்த நாள் இந்த பனி பாறை மேல் வழிகாட்டியின் உதவியோடு  நடந்து செல்வதாக திட்டமிட்டு இருந்தோம்.  ஆனால் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதாக நாங்கள் இறங்கியதில் இருந்து, 2 நாட்கள் கழித்து, நாங்கள் கிளம்பும் வரை விடாது கொட்டி தீர்த்தது மழை. மழையில் பனி பாறையில் நடக்க இயலாது என்பதால் அடுத்த நாள் பனி பாறையில் நடந்து சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி ஒரு நாள் முழுவதும் என்ன செய்வது என்று யோசித்தபோது கை கொடுத்தது உள்ளரங்க பனி பாறையேற்ற மையம்.

 

 

NZTrip+25+121.jpg பனி பாறையில் ஏறும் சிலர்

கையில் இரண்டு கூர்மையான கோடரி கொண்டு பனிப்பாறையின் மேல்  பிடிப்பு ஏற்படுத்தி, பின்னர் கூர்மையான ஆணிகள் கொண்ட காலணியால் சிறிது தூரம் ஏறி, கோடரியை  மீண்டும் சிறிது மேலே செலுத்தி  பிடிப்பு ஏற்படுத்தி, மீண்டும் சிறிது தூரம் ஏறி, என்று மாறி மாறி செய்து சுமார் 30 அடி உயர பனி பறையின் உச்சி வரை ஏற வேண்டும். சொல்வதற்கும், பார்ப்பதற்கும் எளிதாக தோன்றிய இந்த செயல் மிகவும் கடினமாகவே இருந்தது. என்னால் பதினைந்து அடிகள் கூட ஏற முடியவில்லை. எனினும் முயற்சி செய்ததே மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

அடுத்த நாள்  காலை பிரான்ஸ் ஜோசப்பில் இருந்து கிளம்பி கிரேமௌத் என்றொரு ஊரை அடைந்தோம். கிரேமௌத்தில் இருந்து ட்ரான்ஸ்-சீனிக் எனப்படும் தடம் வழியாக ரயிலில் பயணித்து, கிரைஸ்ட்சர்ச்சை அடைவதாக திட்டம். ரயிலில் பெட்டிகளை ஏற்றி விட்டு எங்கள் பயண வகுப்பை கண்டுபிடித்து அமர்ந்தோம். ரயிலில் பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஒரு திறந்த பெட்டியும்,  பயணம் செய்வோர்  அமர்ந்து இளைப்பாற வசதியான இரு மூடிய பெட்டிகளும், மீண்டும் திறந்த பெட்டி என்று மாறி மாறி அமைந்து இருந்தது. 

ரயிலில் அனுபவித்து சிலாகித்த காட்சிகள் சில புகைப்படங்களாக:

 

NZTrip+25+161.jpg

வைமாகாரிரி ஏரி  

 

NZTrip+25+176.jpg

 

டுசாக் வகை புற்கள்

 

மழை பொழிவினால் மலைகளில் தோன்றிப்   பாயும் சிறு அருவிகள், அம்மழையில் நனைந்து தலையாட்டும் டுசாக் புற்கள், மழையில் சலசலத்து ஓடும் சிறு ஓடைகள், அந்த ஓடைகள் கலக்கும் ஏரிகளில் இருந்து வரும் நீர் சிதறல்கள், அந்த நீர் சிதறல்கள் உண்டாக்கிய அழகிய புகை போன்ற  நீர் திரை, மழையில் நனைந்ததால் பொலிவு பெற்று திகழும் செடிகளும், மரங்களும் கண்களுக்கு விருந்தளித்தது. அந்தளவு இயற்கை அன்னை அழகுடனும், வனப்புடனும், புதுப்   பொலிவுடனும் திகழ்ந்ததை வேறங்கும் பார்த்ததில்லை என்று சொல்வேன். சுமார் நான்கரை   மணி நேரம் நீடித்த இந்த பயணம் அற்புதமான மற்றும் ஒரு இனிமையான நினைவு. அன்று இரவு கிரைஸ்ட்சர்ச்சை அடைந்து நாங்கள் தங்கும் விடுதிக்கு  சென்று ஓய்வெடுத்தோம்.
 

 

அடுத்த நாள் காலை கிரைஸ்ட்சர்ச்சில் இருந்து ட்ரான்ஸ்-கோஸ்டல் என்ற தடம் வழியாக ரயிலில் பயணித்து கைகௌரா என்ற இடத்திற்கு சென்றோம். ஜன்னல் மற்றும் மேற்கூரையில் கண்ணாடிகள் பதித்த அழகான ரயில். கிரைஸ்ட்சர்ச்சில் இருந்து கிளம்பி கேண்டபுரி சமவெளியை கடந்து பசிபிக் பெருங்கடல் ஒரு புறமும், அழகிய மலைகளையும், வனங்களையும்  மறு புறமும்  கொண்ட தடம் வழியே பயணித்து  கைகௌரா என்ற இடத்தை அடைந்தோம்.   கைகௌரா திமிங்கிலம் மற்றும் டால்பின் வகை மீன்களின் தலைநகரம். இந்த வகை மீன்களை அருகில் இருந்து பார்ப்பதற்கு ஏதுவாக பல நிறுவனங்கள் இங்கு பயணிகளுக்கு வழிகாட்டிகளுடன் கூடிய படகு சவாரியை ஏற்பாடு செய்து தருகின்றன.

நாங்கள் சென்ற  படகு சுமாராக முக்கால் மணி நேரம் பசிபிக் கடலில் பயணித்து திமிங்கிலம் இருப்பதாக சொல்லப்பட்ட கடற்பகுதியில்  காத்திருந்தது. சோனார் ஒலி அலை மூலமாக கடலில் எந்த இடத்தில் திமிங்கிலம் இருக்கலாம் என்று கணக்கிட்ட பின் அந்த இடத்திற்கு சென்று காத்திருக்கின்றனர். எந்த நேரமும் கடலில் இருந்து தோன்றலாம் என்பதால் குதூகலத்துடன் காத்திருந்தோம். எங்களை அதிக நேரம் காக்க வைக்காமல் சிறிது நேரத்திலேயே ஒரு திமிங்கிலம் தண்ணீருக்கு மேலே எழும்பியது. அழகான அந்த காட்சி உங்கள் பார்வைக்கு.

 

NewZealand+26+069.JPG

 

 

NewZealand+26+058.JPG

 

NewZealand+26+074.JPG

 

படகு சவாரி முடிந்ததும் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து கிரைஸ்ட்சர்ச் செல்லும் பேருந்தில் ஏறினோம்.  கிரைஸ்ட்சர்ச்சை அடைந்தவுடன் அங்கிருந்து ஒரு வாடகை டாக்ஸி மூலம் விமான நிலையத்தை அடைந்தோம்.  மனதிற்கு மிகவும் பிடித்த இந்த பயணம் முடிவுறுகிறதே என்று எண்ணியவாறே அங்கிருந்து வட அமெரிக்கா திரும்பினோம்.

பயணங்கள் நம்மை புதுப்பிக்க மட்டுமல்ல நம்மை சிந்திக்கவும் வைக்கும். ஆம், பயணம்/சுற்றுலா ஆகியன நம்முடைய அவசர வாழ்கையில் ஒரு வேகத்தடை.  நமக்கு மன மகிழ்ச்சியை அளிக்கும் அதே வேளையில் நாம் வாழும் இந்த பூமியை நமது வருங்கால சந்ததியினருக்கு எவ்வாறு விட்டு செல்ல போகிறோம் என்ற கேள்வியையும் நமக்குள் எழுப்பாமல்  விடுவதில்லை. இயற்கையுடன் இயைந்து வாழும் வாழ்கையை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டோம். எனினும் பயணங்கள் மீண்டும் நமது வேர்களை கண்டறியும் முயற்சி என்பதால் நாளையை பற்றிய நம்பிக்கையை அளிக்கிறது. 

அது மட்டுமல்ல, நமது குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் நாம் மேற்கொள்ளும் பயணங்கள்  காலத்தை கடந்தும் நம் நினைவில் நிற்கும். எனவே வருடத்திற்கு ஒரு முறையேனும் அருகில் உள்ள இடத்திற்கோ அல்லது வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ குடும்பத்துடன் சென்று வாருங்கள். இனிமையான நினைவுகளுக்கு சொந்தக்காரர் ஆகுங்கள்.

 

http://pachaimannu.blogspot.ch/2011/01/3.html

 
  • கருத்துக்கள உறவுகள்

பயணக் கட்டுரை மிகவும் நன்றாக எழுதப்பட்டு இருக்கிறது..பகிர்வுக்கு மிக்க நன்றி.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.