Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்த்மாவும் யோகமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்த்மாவும் யோகமும்

 

ஆஸ்துமா எனப்படுவது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு நோய். நமது நுரையீரலில் உள்ள சுவாசக் குழாய்களில் ஏற்படும் தூண்டுதல்களுக்கு நமது உடல் அதிகமான பதில்வினை கொடுப்பதால் ஏற்படும் நோய் இது.

புகைப்பிடித்தல், மாசு படிந்த சூழ்நிலை ஆகியவையும் ஆஸ்துமா வரக் காரணமாக இருக்கிறது. பதற்றம், கவலை, மன அழுத்தம் போன்ற மனதளவில் ஏற்படும் உணர்ச்சிகள் ஆஸ்துமாவை அதிகபடுத்தும்.

ஆஸ்துமா பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஆரம்பிக்கிறது, வெகு சிலருக்கு நடுவயதில் ஆரம்பிக்கலாம். பரம்பரையில் இது யாருக்கேனும் இருந்தால், வரும் சந்ததியினரையும் பாதிக்கலாம். புகைப்பிடித்தல், மாசு படிந்த சூழ்நிலை ஆகியவையும் ஆஸ்துமா வரக் காரணமாக இருக்கிறது. பதற்றம், கவலை, மன அழுத்தம் போன்ற மனதளவில் ஏற்படும் உணர்ச்சிகள் ஆஸ்துமாவை அதிகபடுத்தும்.

தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால், நாளடைவில், நுரையீரல் விரிவடையும் தன்மையை இழந்து நுரையீரலில் பல்வேறு நோய்கள் வருவதற்குக் காரணமாகிவிடும்.

ஆஸ்துமா தாக்குதலின்போது சுவாசக் குழாய்கள் சுருங்குகின்றன. இதனால், உள்ளே மற்றும் வெளியே செல்லும் காற்று தடைபடுகிறது. இதனுடன் சேர்ந்து அதிகச் சளி சுரக்கிறது. இது மூச்சு விடுவதற்குச் சிரமமாகவும், இருமலாகவும், மூச்சிரைப்பாகவும் வெளிப்படும். பதட்டமும் பயமும் ஏற்படும்போது மூச்சு விடுவதின் சிரமம் மேலும் அதிகமாகும்.

ஆஸ்துமா தாக்குதலின்போது ஒவ்வொரு முறையும் உடலும் மனமும் சோர்ந்துவிடும். தகுந்த கவனிப்பும் சிகிச்சையும் கொடுக்காவிட்டால், அடுத்த தாக்குதல் சுலபமாக ஏற்படும். பலருக்கு முதல் தாக்குதல் மோசமான அனுபவமாக இருப்பதால், அடுத்த தாக்குதல் பற்றிய பயமும் பதட்டமுமே மேலும் தாக்குதல் வரக் காரணமாக அமைந்துவிடுகிறது.

சிகிச்சை முறைகள்:

ஆங்கில மருத்துவம்: சுவாசக் குழாய்களின் இறுக்கத்தைக் குறைக்கவும் அவற்றில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் பல்வேறு மருந்துகள் உள்ளன. இவை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சரியாக உட்கொள்ள வேண்டும். ஆஸ்துமாவுக்கான மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனையின்றி நிறுத்தக் கூடாது. இவை உங்கள் ஆஸ்துமாவை மேலும் மோசமடையச் செய்யலாம்.

சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்துகளும் ஆஸ்துமாவுக்கு உதவுவதாக அறியப்படுகிறது.

யோகா எப்படி உதவுகிறது?

பிராணாயாமப் பயிற்சிகள்

நுரையீரல்களுக்கு நன்கு பயிற்சியளித்து பலப்படுத்துகிறது.

சாதாரணமாகச் சுவாசிக்கும்போது, முழு நுரையீரலையும் நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால், பிராணாயாமப் பயிற்சிகள் செய்யும்போது நுரையீரல் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுவதால், நுரையீரல்களின் பல்வேறு பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் எளிதாகச் செல்கிறது.

நுரையீரல்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகமாகிறது.

ஆசனப் பயிற்சிகள்

இவற்றை மேற்கொள்வதன் மூலம் நம் உடல் பலமடைகிறது.

நம் உடல் தளர்வு நிலையை அடைகிறது.

சீரான சுவாசம் ஏற்படுகிறது.

தொடர்ந்த ஆஸ்துமா தாக்குதலினால் நெஞ்சுக்கூட்டில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைக்கிறது.

தியானம்

நமது உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஓய்வுநிலையைக் கொடுக்கிறது. இதனால் பயமும் பதட்டமும் குறைந்து எந்த வகையான மன அழுத்தம் தரும் சூழ்நிலையையும் எதிர்கொள்ள மனதையும் உடலையும் தயார் செய்கிறது. இதன் மூலம் ஆஸ்துமா தாக்குதலை நாம் பெருமளவில் தடுக்க முடியும்.

“அம்” (Aum) மந்திர உச்சாடணையின்போது உடலில் ஏற்படும் அதிர்வுகள் உடலையும் மனதையும் சமநிலையில் வைக்கிறது. இதனால் ஆஸ்துமாவின் பாதிப்பு குறைவதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. (இந்த உச்சாடணத்தை தகுந்த வழிகாட்டுதலுடன் கற்றுக்கொண்டு செய்ய வேண்டும்.)

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிராணாயாமம் ஒரு வரப் பிரசாதம். பிராணாயாமம் செய்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆஸ்துமாவிலிருந்து மட்டுமல்லாமல் வயிற்றுப் புண், இருதய நோய்கள் மற்றும் முதுகு வலியிலிருந்து குணமாகி இருக்கின்றனர்.

இன்றைக்கு மருத்துவர்கள், உடலில் ஏற்படும் நிகழ்வுகள் மனதைப் பாதிப்பதாகவும், மனதில் ஏற்படும் நிகழ்வுகள் உடலைப் பாதிப்பதாகவும் கூறுகின்றனர். இப்போது மக்களுக்கும் பெரிய அளவில் உடல் மற்றும் மனம் சார்ந்த (Psychosomatic disease) வியாதிகள் வருகின்றன. பதட்டம் ஒருவருக்கு வயிற்றில் புண்ணாகவும், மற்றொருவருக்கு நுரையீரலில் ஆஸ்துமாவாகவும் வெளிப்படுகிறது.

உடல் மற்றும் மனம் – இந்த இரண்டு பரிமாணங்கள் வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள் (Software) போல உள்ளன. software மற்றும் hardware நன்றாக இருந்தாலும் அதை நீங்கள் மின்சாரம் என்னும் ஒரு சக்தியில் இணைக்கும்போதுதான் அவை இயங்கும். அதைத்தான் நாம் பிராணமயகோசம் அல்லது சக்தி உடல் எனக் கூறுகிறோம்.

யோகாவின் பெரும்பான்மைப் பணியே இந்த பிராணமயகோசத்தை சமன் செய்து அதை முழுமையான அதிர்வு நிலையில் வைத்திருப்பதுதான். உங்களுடைய சக்தி உடல் குறிப்பிட்ட சமநிலையிலும் முழு அதிர்விலும் இருக்கும்போது, உடல் அளவிலும் மனதளவிலும் நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுடைய உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் உணவு வகைகளைப் பொறுத்தவரையில் வாழைப்பழம், பலாப்பழம், சமைத்த பீட்ரூட் ஆகியவை ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல. அவரைக்காய் ஆஸ்துமாவை மோசமடையச் செய்யும். குறிப்பாக, பால் மற்றும் தயிர் போன்றவை உடலில் சளி ஏற்படுத்தக்கூடியவை. பலருக்கு பால் மற்றும் பால் பொருட்களை நிறுத்தினாலே, ஆஸ்துமா போய்விடுகிறது. நீங்கள் பால் பொருட்கள் சாப்பிட்டுக்கொண்டும் அதே நேரத்தில் ஆஸ்துமா பற்றியும் குறைப்பட்டுக்கொண்டால் பயன் இல்லை!

 
நன்றி 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்மாவும் யோகாவும்   :D   யோகா பயிற்சியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோகம் என்பது என்ன?

 
 
  • 564xNxyoga_1957101g.jpg.pagespeed.ic.6Fo
     
  • 564xNxUntitled_1957102g.jpg.pagespeed.ic
     

உலக யோகா தினம்: ஜூன் 21

யோகம் என்பது சித்தத்தில் ஏற்படும் விருத்திகளை அடக்குதல் என்கிறது யோக சாஸ்திரம். பதஞ்சலி முனிவர் எழுதிய இந்த நூல்தான் யோகம் என்பதன் ஆதார நூலாக விளங்குகிறது. இன்று யோகா என்றால் அது யோகாசனம் என்பதாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. நான் யோகா செய்கிறேன் என்று ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் ஆசனங்களைக் குறிப்பிடுகிறார் என்றுதான் பொருள்.

ஆனால் யோகா அல்லது யோகம் என்பது வெறும் ஆசனங்கள் மட்டுமல்ல. அது மிகவும் ஆழமான பொருள் கொண்டதாக இந்தியத் தத்துவ மரபில் பயன்படுத்தப்படுகிறது. யோகம் என்பதன் வேர்ச் சொல் யுஜ், அதாவது இணைவது. மனித வாழ்வு பரம்பொருளுடன் இரண்டறக் கலக்கும் இணைவைத் தான் யோகம் என்று பண்டைய இந்தியத் தத்துவங்கள் கூறுகின்றன. இத்தகைய இணைவை அடையப் பல விதமாக வழிமுறைகளைத் தத்துவ ஞானிகள் முன்வைத்தார்கள். கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம், பக்தி யோகம் ஆகியவை அவற்றில் பிரதானமான வழிமுறைகள். பரம்பொருளுடன் இணைய ஞானம், பக்தி, செயல் முதலானவற்றை இந்த வழிமுறைகள் பரிந்துரைக்கின்றன. ராஜ என்னும் சொல் யோகங்களுக்கெல்லாம் தலையாயது என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. யோகம் என்பதைச் சில பயிற்சிகளின் மூலம் அடையும் வழிகளை ராஜ யோகம் முன்வைக்கிறது. இந்தப் பயிற்சிகளை அன்றாட வாழ்வில் கடைபிடிப்பதன் மூலம் ஒருவர் பரம்பொருளுடன் இரண்டறக் கலக்கலாம் என்று இது பரிந்துரைக்கிறது.

எட்டு அங்கங்களைக் கொண்ட இந்தப் பயிற்சியில் ஒரு பகுதிதான் ஆசனம் என்பது. இன்னொரு பகுதி பிராணாயாமம். இவை இரண்டும்தான் இன்று யோகா என்னும் பெயரில் அதிகம் கற்பிக்கப் பட்டுப் பயிற்சி செய்யப்படுகின்றன.

எட்டு அங்கங்கள்

யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவையே ராஜ யோகத்தின் எட்டு அங்கங்கள்.

யமம் என்பது ஒரு சாதகன் (மோட்சம் அடைவதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன்) செய்ய வேண்டிய கடமைகள். அஹிம்சை, சத்தியம், கள்ளாமை, பிரம்மச்சரியம், இரக்கம், ஜபம், பொறுமை, திடம், மிதமான உணவு, பரிசுத்தம் ஆகிய பத்தும் யமம் என்பதில் அடங்கும்.

நியமம் என்பது அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள். உடல் சுத்தம், தியான நேரம், அளவான உறக்கம், அளவான சாப்பாடு, தவறு செய் வதற்கு அஞ்சுதல், ஜபம், விரதம் போன்றவை இதில் அடங்கும்.

ஆசனம் என்பது உடலைப் பண்படுத்தும் பயிற்சிகள். பிராணாயாமம் என்பது மூச்சுப் பயிற்சி. இந்தப் பயிற்சியின் மூலம் பிராண சக்தியை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செலுத்தலாம். ஆசனமும் பிராணாயாமமும் உடலின் உள் உறுப்புகள், வெளி உறுப்புகளை ஆரோக்கியமாகவும் செயல்திறனுடனும் வைத்திருக்கும். மனதை அமைதிப்படுத்தி அறிவின் கூர்மையை அதிகரிக்கச் செய்யும். தியானத்துக்குத் தேவையான கவனக் குவிப்பு இந்தப் பயிற்சிகளின்போது நன்கு வசப்பட்டுவிடும்.

பிரத்யாஹாரம் என்பது வெளி முகமாக ஈர்க்கப்படும் புலன்களை உள்முகமாகத் திருப்புதல். ஒவ்வொருவரும் தமக்கென்று அமைந்துள்ள அன்றாடக் கடமைகளைப் பயனை விரும்பாமல் கடைபிடித்தலும் பிரத்யாஹாரத்தில் வரும்.

தாரணை என்பது ஏதேனும் ஒரு பொருளில் மனதை நிறுத்துவது.

தியானம் என்பது அதிலேயே ஆழ்ந்திருப்பது.

சமாதி என்பது அதிலேயே ஐக்கியமாகிவிடுவது.

நுட்பமாகப் பார்த்தால் இந்த எட்டு அங்கங்களும் ஒன்றுக்கொண்று துணை புரிவதாகவும் படிப்படியான வளர்ச்சிக்கு வழிவகுப்பனவாகவும் இருப்பதை உணரலாம்.

இவை அனைத்தும் ராஜ யோகம் எனப்படும் வழிமுறையில் உள்ளவை. கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகியவை முறையே செயல், ஞானம், பக்தி ஆகியவற்றின் வழியே யோகம் என்னும் லட்சியத்தை அடைய வழிகாட்டுகின்றன. ராஜ யோகமோ நமது நடத்தை, பழக்க வழக்கம், உடல் திறன், மன ஒருமைப்பாடு ஆகியவற்றின் மூலம் யோகத்தை அடைய வழிகாட்டுகிறது. உடலுக்கும் நடத்தைக்கும் முக்கியத்துவம் தரும் யோகம் என்றும் இதைச் சொல்லலாம். இதன் ஒரு பகுதிதான் ஆசனமும் பிராணாயாமமும்.

யோகி என்பவர் யார்?

கர்ம, ஞான, ராஜ, பக்தி ஆகிய யோகங்களைத் தாண்டி யோகம், யோகி என்னும் சொற்கள் பல இடங்களில் தனியாகவும் தத்துவ நூல்களில் பயன்படுத்தப்படுகின்றன. முதலிலேயே குறிப்பிட்டபடி ஜீவனும் பிரம்மமும் இணைதல் யோகம். இதற்கேற்பத் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்கள் யோகிகள். வெறுமனே யோகாசனம் செய்பவர்கள் யோகிகள் அல்ல. உடல், உணவு, மனப்போக்கு, சிந்தனை முறை, வாழ்வை அணுகும் முறை, கண்ணோட்டம் எனப் பல அம்சங்களைத் தழுவி விரிவது யோகம்.

ஊருக்கு உழைத்திடல் யோகம் என்று பாரதியார் சொல்கிறார். யோகம் என்பதை அதிருஷ்டம் என்னும் எளிய பொருளில் பயன்படுத்துகிறாரோ என்ற ஐயம் எழலாம். நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் என்கிறார் அடுத்த வரியில். பொதுநலனுக்காகச் செய்யப்படுவதுதான் யாகம் என்கிறார். பகவத் கீதையில் யக்ஞம் (யாகம்) என்பதற்கான விளக்கத்தைப் பார்த்தால் பாரதியார் சொல்வது அதற்கு நெருக்கமாக இருப்பதை உணரலாம். ஆகவே யோகம் என்பதை அதிருஷ்டம் என்னும் பொருளில் பாரதியார் பயன்படுத்தவில்லை. ஊருக்குழைத்திடல், அதாவது தன்னலமற்ற தொண்டு யோகம் என்கிறார். இங்கு அவர் கர்ம யோகத்தைக் குறிப்பிடுகிறார் என்று கொள்ளலாம்.

மெய்ஞானம் யாது?

போருக்கு நின்றிடும்போதும் உளம் பொங்கலில்லாத அமைதி மெய்ஞானம் என்று அடுத்த வரிகளில் சொல்கிறார். நெருக்கடிகள், சவால்கள் எனப் புறச் சூழல் எப்படி இருந்தாலும் அதனால் பாதிக்கப்படாத சமநிலை கொண்டவனை யோகி என பகவத் கீதை சொல்கிறது. யோகி என்பவரைப் பற்றி, “யஸ்மான்னோ த்விஜதே லோகஹ, லோகான்னோ த்விஜதே சயஹ” என்று கீதை சொல்லும் வரியின் பொருள் இதுதான்: யார் இந்த உலகத்தால் பதற்றமுறாமல் இருக்கிறாரோ, யாரால் இந்த உலகம் பதற்றமுறா மல் இருக்குமோ அவரே யோகி.

கீதையின் இன்னொரு ஸ்லோகத்தில் உணவு, பேச்சு, உறக்கம், நடமாட்டம் ஆகியவற்றில் ஒரு அளவுடன் இருப்பவர் யோகி என்று சொல்லப்படுகிறது. செய் வதைத் திறமையாகச் செய்வதே யோகம் என்றும் சொல்லப்படுகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது யோகம் என்பது எல்லைக்குட்பட்ட வாழ்வை எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் இணைப்பது என்றும், எதற்கும் பதறாத, சமநிலை தவறாத நிலையே அதற்கான வழிமுறை என்பதும் தெளிவாகிறது. கர்ம, ஞான, பக்தி, ராஜ யோகி என யாராக இருந்தாலும் இந்த அணுகுமுறை அவர்களுக்குக் கைவர வேண்டும். அசாத்தியமான சில சக்திகள் கொண்டவர்களைச் சித்த புருஷர்கள் என்றும் யோகிகள் என்றும் சொல்வார்கள். இந்த சக்திகள் யோகத்தின் பாதையில் செல்பவர் களுக்கு இயல்பாய் கிடைக்கும் சில அனுகூலங்கள். இவற்றால் கிடைக்கும் பெருமிதங்களையும் பலன்களையும் முக்கியமாகக் கருதாமல் தொடர்ந்து எல்லையற்ற சக்தியை நோக்கிய பாதையில் பய ணிப்பவரே உண்மையான யோகி.

யோகம் என்பது சித்தத்தில் எழும் விருத்திகளை அடக்குதல் என்று பதஞ்சலி முனிவர் சொல்கிறார். சித்த விருத்திகள் என்பவை சித்தத்தின் இயக்கங்கள் என்கிறார் பாரதியார். அதாவது மனம், அறிவு, சித்தம், அகங்காரம் ஆகியவை அடங்கிய உட்கருவி என்கிறார் பாரதியார். இவையனைத்தையும் சேர்த்துச் சித்தம் எனச் சொல்வது யோக சாஸ்திர வழக்கு என்று சொல்லும் பாரதியார், சித்தத்தின் இயக்கங்களை நிறுத்துதலே யோகம் என விளக்கமளிக்கிறார்.

நிச்சலனமான நதியோடு இந்த நிலையை ஒப்பிடலாம். சலனமற்ற, எதிர்பார்ப்புகளோ ஏமாற்றங்களோ அற்ற நிலை. அதிகாரத்தை எந்த வகையிலும் நாடாதிருத்தல். தவிப்புகள் அற்ற, ஊசலாட்டங்கள் அற்ற நிலை. பதற்றங்கள் அற்ற, சமநிலை கொண்ட இயல்பும் நடத்தையும். இன்பத்தையும் துன்பத்தையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுதல். இதுவே யோகத்தின் அடிப்படை. இதுவே யோகியின் அடையாளம்.

http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article6129455.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.