Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?: ஜெயமோகன்

Featured Replies

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். என்னுடைய அகவை 29. நான் கடந்த 12 ஆண்டுகளாக இலக்கியம் வாசித்து வருகிறேன். தமிழ் இலக்கியம் மாத்திரம் அல்லாமல் தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், மாப்பசான், போர்ஹெஸ், கொர்த்தஸார், காம்யூ, மார்க்கேஸ், ஓரான் பாமுக், சார்த்தர் போன்றோரின் இலக்கிய ஆக்கங்கள் மீதும் தீராத தாகமுண்டு. ஆனால் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற வேட்கை ஓராண்டுக்கு முன்புதான் என்னுள் எழுந்தது. எனினும் அதை என்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு ஃபேஸ்புக் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஐயம் சில நாட்களாக என்னை அரித்துக்கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில் எழுதுவதும், லைக் வாங்குவதும், பலர் நம்மை கவனிக்கிறார்கள் என்ற எண்ணமும் தீவிர எழுத்துக்கு என்னை வரவிடாமல் தடுக்கிறது என்றே கருதுகிறேன். மேலும் ஃபேஸ்புக் சார்ந்த நடவடிக்கைகள் என்னுடைய நுண்ணுணர்வை பெரிதும் பாதிப்பதாக அச்சம் கொள்கிறேன்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் ஃபேஸ்புக் இல்லாமல் ஒரு புதிய படைப்பாளி இக்காலகட்டத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பதுதான். ஏனெனில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தன்னை விளம்பரம் அல்லது வெளிப்படுத்திக்கொள்ளாமல் ஒரு புதிய படைப்பாளி தன்னுடைய வாசகர்களை உருவாக்கிக்கொள்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை!

 

அன்புடன்,
அருண் மொழி வர்மன்.

 

 

அன்புள்ள அருண்மொழிவர்மன்,

நண்பர்கள் பலர் நான் ஃபேஸ்புக் பற்றி விமர்சனங்களை முன்வைக்கும்போது இப்படிக் கேட்டிருக்கிறார்கள். ‘உங்களுக்கு ஃபேஸ்புக் தேவை இல்லை.அதைவிட பலமடங்கு வலுவான ஊடகமான இணையதளம் உள்ளது. மற்றவர்களுக்கு வாசகத் தொடர்புக்கு என்ன வழி?’

உண்மைதான். இன்றைய சூழலில் பரவலான வாசகத் தொடர்புக்கு இணையம் முக்கியமானது. இணையத்தைத் தவிர்த்து அச்சில் மட்டுமே புழங்கும் எழுத்தாளர் இன்று புதியவாசகர்களை அடைவது மிகமிகக் கடினம்.

 

ஆனால் இணையத்தை எப்படி, எந்த எல்லைவரை பயன்படுத்துவது? அங்குதான் சிக்கல் உள்ளது.

 

இணையம் வந்ததுமே செலவில்லாத சிற்றிதழ்களாக இணைய இதழ்கள் வந்தன. ஆனால் வலைப்பூக்களின் வரவுடன் இணைய இதழ்கள் அழிந்தன. அது ஒரு பெரிய இழப்பு. வலைப்பூக்களுக்கு வாசகர்கள் தொடர்ந்து வருவதில்லை. ஆகவே ஃபேஸ்புக் வந்ததும் வலைப்பூக்கள் அழிந்தன. இன்றிருப்பது ஃபேஸ்புக் மட்டுமே.

 

நான் ஃபேஸ்புக் என்றால் என்ன என்ற அளவுக்கு மட்டும் அதைக் கவனித்துவிட்டு விட்டுவிட்டேன். அடிப்படையில் ஃபேஸ்புக்கின் அமைப்பே வேறு. அது எழுத்து வாசிப்புக்கான தளம் அல்ல. அது நட்புக்கான தளம். உங்கள் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என அது வலையை விரித்துச்செல்கிறது

ஆகவே வந்து இணைபவர்களில் வெறும் நண்பர்கள், தெரிந்தவர்கள்தான் அதிகம். உங்களைப்போல சிந்திப்பவர்கள், வாசிப்பவர்கள் சிலரே இருப்பார்கள். கல்யாணவீட்டில் நம்மைச்சுற்றி கூடும் பலதரப்பட்டவர்களின் கூட்டம் போன்றது அங்கு வரும் தொடர்புவலை

அதில் இலக்கியமோ கருத்துக்களோ முறையாக முன்வைக்கப்படமுடியாது. இங்கல்ல, எங்கும் ஃபேஸ்புக் அப்படித்தான் உள்ளது. விவாதங்கள் மையம் கொள்ளாமல் கண்டபடி அலையும். படைப்புகளுக்கு அதற்கான வாசகர்கள் வரமாட்டார்கள். கல்யாணவீட்டில் சொற்பொழிவு ஆற்றுவதுதான் அது. அங்கு வருபவர்களில் பத்துசதம் பேர்கூட அதைக் கவனிக்கமாட்டார்கள்.இதுதான் பிரச்சினை.

 

 

இந்த பொத்தாம்பொதுக் கூட்டத்துடன் நாம் தொடர்ந்து எதிர்வினையாற்றி ,உரையாடிக்கொண்டிருந்தால் மெல்லமெல்ல நமது விவாதமுறை மையமற்ற அரட்டையாகவும் முறைமையற்றதாகவும் ஆகிறது. சம்பந்தமில்லாத எதிர்வினைகள், சீண்டல்கள், புரிந்துகொள்ளாத பேச்சுகள் வழியாக நாம் மெல்லமெல்ல எரிச்சல் மிக்கவர்களாக ஆகிவிடுகிறோம். அது நம் நிரந்தரமான மனநிலையாக காலப்போக்கில் மாறிவிடும்

இன்னொன்று, மானுட மனம் எதிர்வினைகளால் எளிதில் வழிநடத்தப்படுவது. நீங்கள் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எழுதப்படும் மேலோட்டமான உடனடி பதிவுகளின் பலவீனமான மொழியை வாசித்துக்கொண்டிருந்தால் உங்கள் மொழியும் செறிவற்றதாக, ஆழமற்றதாக ஆகிக்கொண்டே இருக்கும். புனைவெழுத்தாளனுக்கு இது தற்கொலை.

 

 

ஃபேஸ்புக்கில் அதிகம் எழுதுபவர்கள் பெரும்பாலும் சவசவவென்ற எளிய, சாரமற்ற உரைநடையை அடைந்திருப்பதை காண்கிறேன். ஏன், தரமான உரைநடை கொண்டிருந்தவர்கள்கூட மெல்ல அதை இழப்பதையும் காண்கிறேன்.

*

இதை எப்படி எதிர்கொள்வது? ஃபேஸ்புக்குக்கு என சிறப்பான விதிமுறைகள் ஏதுமில்லை. ஆனால் இணையத்துக்கு பொதுவான சில விதிமுறைகள் உண்டு. நித்யாவின் மாணவரும் அமெரிக்கக் கல்வியாளருமான பீட்டர் மொரேஸ் எனக்கு அவற்றை இணையத்தில் எழுதவந்த காலத்திலேயே சொன்னார். நான் பெரும்பாலும் அவற்றை கடைப்பிடிக்கிறேன்.

 

 

1.உங்கள் எல்லைகளை நீங்களே முன்னரே வகுத்துக்கொள்ளுங்கள்
இணையம் ஒரு பிரம்மாண்டமான வெளி. அதில் எல்லாமே உண்டு. எல்லாவற்றையும் வாசித்து எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றுவதென்பது ஒரு டம்ளர் நீரை ஒரு மைதானம் முழுக்க பரப்புவதுபோல. அரைக்கணத்தில் ஆவியாகிவிடும்.

நம் எல்லைகளை நாமே வகுத்துக்கொள்ளவேண்டும். என் துறை இலக்கியம்,இந்தியதத்துவம், இவையிரண்டுடனும் தொடர்புள்ள அரசியல், ஒரு சராசரிக்குடிமகனின் சமூகப்பார்வை. அவ்வளவுதான். இந்த எல்லைக்குமேல் நான் செல்வதே இல்லை.

இந்த எல்லைக்கு அப்பால் சிறந்தவை, தேவையானவை நிறையவே உண்டு. நான் அவற்றில் இல்லை, அவ்வளவுதான்.

 

 

2. இணையத்தில் உங்களை முன்வையுங்கள். இணையம் உங்களை மாற்ற அனுமதிக்காதீர்கள்

இணையம் ஒரு சந்தை. அங்கே தேவைகள் பல. வாடிக்கையாளர்கள் பலவகை. அங்கே நீங்கள் தேவைக்கேற்ப வளைந்தால் வளைந்துகொண்டே இருக்கவேண்டியதுதான்

 

நீங்கள் எதை எழுத விரும்புகிறீர்களோ, எதைப்பேச விழைகிறீர்களோ, அதை மட்டும் இணையத்தில் முன்வையுங்கள். அதற்கான எதிர்வினைகளில் உண்மையில் உங்கள் தளத்துக்கு எழுந்து வந்தவற்றை மட்டும் பொருட்படுத்துங்கள்

 

உதாரணமாக, நான் எழுதவந்தது இணையத்துக்குரிய எழுத்தை அல்ல. நான் சொல்புதிது போன்ற தரமான சிற்றிதழ்களை நடத்தியவன். அச்சு ஊடகம் செலவேறியது. ஆகவே இணையத்தை கையாள்கிறேன்.இந்தத் தெளிவு எனக்கிருந்தது

 

ஆகவே நான் எழுதவந்தபோது இணைய எழுத்து இப்படித்தான் இருக்கவேண்டும் எனறு சொல்லப்பட்ட ஆலோசனைகளை நான் கருத்தில் கொள்ளவில்லை. இரண்டுமுறைக்குமேல் ஸ்க்ரோல் செய்யும்படி இருக்கக் கூடாது, அரட்டைத்தன்மை கொண்டிருக்கவேண்டும் [அதாவது உரையாடல்தன்மை] செறிவாக இல்லாமல் சரளமாக இருக்கவேண்டுமென்றெல்லாம் சொன்னார்கள். தினம் ஒரு வாசகர் கடிதம் வந்தபடியே இருக்கும், எளிமையாக எழுதுங்கள், சின்னதாக எழுதுங்கள் என.

 

நான் உறுதியாக இருந்தேன். இது என் எழுத்து. இதற்கு வருபவர்கள் எனக்குப் போதும் என்றேன். சின்னதாக எழுதலாமே என்றவர்களிடம் சின்னதாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள், உன் அறிவுத்திறனுக்கு அவர்களே போதும் போ என்றுதான் பதில் சொன்னேன்

 

மெல்லமெல்ல இணையம் வழியாகவே என் வாசகர்களை பயிற்றி எடுத்தேன். இன்று எந்த ‘எளிய’ கட்டுரைகளை விடவும் என் செறிவான, நீளமான கட்டுரைகள் அதிகமாக வாசிக்கப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன

 

 

3. எதிர்வினைகளை புறக்கணியுங்கள்

இணையம் பலதரப்பட்டவர்களை ஒரே இடத்தில் குவிக்கிறது. ஒரு வரிகூட இலக்கியமறியாதவன் தற்செயலாக சுந்தர ராமசாமியின் ஒரு கதையை வாசிக்கமுடியும். உடனே ‘என்ன கதை இது. சொதப்பல்’ என்று எதிர்வினையும் ஆற்றமுடியும். அந்த எதிர்வினைகளுக்கு ஒரு மதிப்பும் இல்லை

பேஸ்புக் போன்றவற்றில் வரும் கூட்டம் வாசகர்கள் அல்ல, மிகச்சிலரே வாசகர்கள். எனவே அந்த எதிர்வினைகள் உங்களைச் சீண்ட அனுமதிக்காதீர்கள். ஒருவர் உங்களைச் சீண்டினால் அதை வாசிக்காதீர்கள். நீங்கள் வாசிக்காமலிருக்கையில் உங்களை அவர்கள் ஒன்றுமே செய்யமுடியாது. முழுமையாகப் புறக்கணியுங்கள்.

 

 

4 நேரத்தை கட்டுக்குள் வையுங்கள்

ஒருநாளில் நீங்கள் அதிகபட்சம் ஒரு மணிநேரம் இணையத்தில் செலவழிக்கலாம். 30 நிமிடம் ஃபேஸ்புக்கில். எஞ்சியநேரம் வாசிப்பில். விவாதங்களே தேவையில்லை

 

இணையத்தை வெற்றிகரமாக கையாளும் எழுத்தாளன் நான். நான் ஒருநாளில் 20 நிமிடங்களே இணையத்தில் இருக்கிறேன். மின்னஞ்சல் பார்ப்பேன். வாசிப்பேன்

 

எழுதுவதற்கான தகவல்தேவைகளுக்கு கூகிளை பயன்படுத்துவது மட்டுமே மற்றபடி எனக்கும் இணையத்துக்குமான உறவு. அப்படி இல்லாவிட்டால் என்னால் இத்தனை எழுதியிருக்க முடியாதென்பதை உணர்வீர்கள்

 

சிலவருடம் முன்பு எனக்கு ஒரு தயாரிப்பாளர் விலையுயர்ந்த செல்பேசி ஒன்றை தந்தார். பத்துநாள் பயன்படுத்தினேன். என்னை அது அடிமைப்படுத்துவதை கண்டேன். மனைவிக்குக் கொடுத்துவிட்டேன். [அவள் அதை கைப்பையிலிருந்து எடுப்பதே இல்லை] நான் வைத்திருப்பது பேசமட்டுமே உதவக்கூடிய அடிப்படை நோக்கியா செல்பேசி

*

 

ஃபேஸ்புக்கை பயன்படுத்தலாம். சில விதிகள்

1. அதை படைப்புகளை பிரசுரிக்க பயன்படுத்தவேண்டாம். அது நீங்கள் எழுதுவதை பிறர் காண்பதற்கு நீங்கள் ஒரு கொடியை நட்டுவைக்கும் குன்றாக மட்டுமே இருக்கவேண்டும்.

2 அதற்கு வரும் லைக்குகளின் எண்ணிக்கையை ஒரு பொருட்டாகவே எண்ணாதீர்கள். கீழே பார்க்கவே வேண்டாம்

3. அதில் விவாதிக்காதீர்கள். அதன் எதிர்வினைகளை வாசிக்கவே கூடாது. வேறெந்த ஃபேஸ்புக் பக்கத்திலும் எதிர்வினை அளிக்கவேண்டாம்

4. ஃபேஸ்புக்கை கொடுக்கல் வாங்கலாக பயன்படுத்தவேண்டாம். அப்படி எண்ணிக்கையைக் கூட்டி அடைவது என்ன?

ஜெ

 

http://www.jeyamohan.in/?p=61056

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளன் என்றால் அவருக்கு என்ன இரண்டு கொம்பு முளைச்சிருக்கா.

 

ஒருவர் தன்னை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளனுன்னா.. அந்த எழுத்தை அவர் மட்டும் எழுதிட்டு வாசிச்சிட்டு எழுத்தாளனுன்னு சொல்வதில் அல்ல. மக்கள் அதனை ரசனை உள்ள.. சமூகத் தேவையுள்ள எழுத்தென்னு அங்கீகரிக்கனும்.

 

முகநூல் மக்களை ஒருங்கிணைக்கும்.. ஒரு சமூக வலை என்பதால்.. எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வோரும் மக்கள் என்பதால்.. அந்த வலையில் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை..! அது அவர்களை இன்னும் இன்னும் புடம்போட உதவும்.

 

சிலர் தானே சிறந்த எழுத்தாளன் என்ற சிந்தனைக்குள் இருந்து கொண்டு.. சிந்தனை என்பதிலும் சுய சிறைக்குள் இருந்து கொண்டு.. மக்களை கேணயங்கள் என்று பார்த்தால்.. முகநூல் என்ன.. எங்குமே அவரால்.. தன் சிந்தனைக்கு அப்பால் நல்ல எழுத்தாளனாக இருக்க முடியாது. காசு கொடுத்து.. தண்ணி வாங்கிக் கொடுத்து.. புரியாணி வாங்கிக் கொடுத்து... வாழ்க.. வாழ்க கோசம் போட.. அடியாட்களை வைச்சிருந்தால் ஒழிய.

 

ஊருடன் கூடி வாழ் என்று.. அப்பவே எங்கள் பெரியோர் சொல்லிட்டினம். கூடி வாழாட்டி.. யாருக்கு நஸ்டம்..??! காலத் தேவைக்கு ஏற்ப நிகழும் சமூக மாற்றங்களை உள்வாங்கி வாழாட்டில்.. அவர்கள் தாங்களாகவே தம்மை தனிமைப்படுத்திக் கொள்வார்கள்..! அதுக்கு யார் பொறுப்பு..??!

 

தீதும் நன்றும் பிறர் தர வாரா..!! (இதன் பொருள் எமது சிந்தனையும் செயலும் தான் நன்மை தீமைகளை தீர்மானிக்கின்றனவே தவிர..எம்மைச் சூழ்ந்துள்ள மக்கள் அல்ல. அதனால் அந்த மக்களை நோக வேண்டிய தேவை.. விலக்கி வைக்க வேண்டிய தேவை.. விலகி இருக்க வேண்டிய தேவை இல்லை.) :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?:

 

முகநூல்  என்பது

ஒரு தனிப்பட்டவிடயம் என்றநிலையிலேயே  இருக்கவேண்டும்

அப்படித்தான் நான் வைத்துள்ளேன்

 

அது ஒரு குடும்பமாக

உறவுகளாக

தேசமாகக்கூட இருக்கலாம்..

 

ஆனால் எழுத்தாளர்கள் என்பவர்கள் குறுக்குவழிகளில்

தம்மை  பிரபலப்படுத்தவும்

தமது எதிரிகளை வசைபாடவும் பாவிக்கும் கருவியாக

முகநநூல் மாறிவருகிறது

இது முகநூலின் சட்டங்களுக்கு  எதிரானதாகும்

இதனாலேயே பலரும் இதிலிருந்து விலக ஓடத்தொடங்கியுள்ளனர் :(  :(

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முகநூல் பாவனை சோ காட்டுபவர்களுக்கு வாய் வல்லமை உள்ளவர்களுக்கு மட்டும் உரிய தளமாக மாறி விட்டது...சுருக்கமாக சொல்லப் போனால் நேரத்திற்கு,நேரம் தங்களை மாற்றிக் கொள்ளும் மனிதர்களால்,.மனங்களை உயிருடன் கொல்லும் தளமாக முகநூல் மாறிக் கொண்டு வருகிறது..அதை கையாளத் தெரிவதில்லை அதனால் இப்படி எழுதிறன்,சொல்கிறன் என்று யாரும் எண்ணலாம்..அவர்,அவர் வேதனை அவே அவைக்குத் தான் தெரியும்.பக்கம்,பக்மகாக எழுதினால் தான் புரிய முடியும் என்று இல்லை..சிரிக்கும் பெண்ணை நம்பலாம்.அழும் ஆணை எப்போதும் நம்பவே ஏலாது.எங்கள் பேதை மனம் உண்மையாக எங்களுக்காக அழுகிறார்கள் என நினைக்கும் ஆனால் அழுவது வேறு யாருக்காகவோ இருக்கும்..இப்படித் தான் உலகம் போய் கொண்டு இருக்கிறது..

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.