Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறை நீர் அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முட்டை உற்பத்திக்கு தேவை 196 லிட்டர் 'மறை நீர்'!

 

 
water2_1687029h.jpg
 

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

 

tamil.thehindu

மண்புழு – சிற்றிதழ் அறிமுகம்

 

கடந்த அரை நூற்றாண்டு காலமாக செழுமையான நிலப்பகுதிகள், மரங்கள் கொழிக்கும் அடர் வனங்கள், அரிய நில வாழ், கடல் வாழ் உயிரினங்கள் போன்ற இயற்கையின் இன்ன பிற அரிய வடிவங்கள் மீது தொடர்ச்சியாக மனித வன்முறை நிகழ்த்தப்பட்டு வருகிறது. எதிர் செயலற்ற அந்த இயற்கையாக்கங்கள் முற்றிலும் அழிவதில் முழுப்பொறுப்பு என்றும் நம்முடையதாக இருக்கும் நிலையில் இயற்கை ஆர்வலர்களும் அமைப்புகளும் அவ்வழிவைக் கட்டுப்படுத்தவும், சமூகத்தில் இயற்கை குறித்தப் புரிதல்களை ஏற்படுத்தவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

manpuzhu_1-225x300.jpg

விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், பிரசுரங்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் வழியாக இயற்கை மீதான சமூகத்தின் பிரக்ஞையைத் தூண்டுவதைப் போல வேறு சில ஊடக வடிவங்களும் துணையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், இயற்கை ஆக்கிரமிப்புகள் மற்றும் சூழலியல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் அது குறித்து விளக்கப்படும் கருத்துகள் அடங்கிய பதிவுகள் நம்மிடையே நூல் வடிவத்தில் மிகக் குறைவாக மட்டுமே இருக்கின்றன. சூழலியலைப் பற்றிய தகவல்கள் அடங்கிய சிற்றிதழ்களின் எண்ணிக்கையும் குறைவுதான். சூழலியலோடு குழந்தைகளின் படைப்புலகத்துக்கும்’ முக்கியத்துவம் அளிக்கும் ஊடக வடிவங்கள்கூட அரிதாகவே இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் “மண்புழு” என்ற சூழலியல் இதழ் குறிப்பிடத்தக்க விதத்தில் உள்ளது.

நூல் வாசிப்பின் வறுமையின் இடையே ஒரு புதுமையை ஏற்படுத்தும்போது எழுதப்பட்ட/ விவாதிக்கப்பட்ட கருத்துகளுடன் எளிதாக சமூகத்தைப் பிணைக்க முடிகிறது. அப்பிணைப்புக் களத்திற்கு தகுந்த உதாரணமாக “மண்புழு” இதழைச் சொல்லலாம். திருவண்ணாமலையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ‘குக்கூ குழந்தைகள் வெளி’ என்ற அமைப்பினர் இவ்விதழைக் கொண்டு வந்திருக்கிறார்கள். குழந்தைகளின் உலகம் குறித்த புரிதல்களும் அதனூடான அனுபவங்களும் அரிதாகி வரும் இன்றைய சமூக கட்டுமான வளர்ச்சியில் புதுமையான ஒரு அழகியலுடன் “குக்கூ குழந்தைகள் வெளி” என்ற அமைப்பு செயல்பட்டு வருவதையும், அவர்களின் இதழின் வருகையையும் வரவேற்க வேண்டும்..

“வேருடன் பிடுங்கப்பட்ட ஒரு மரம் விட்டுச் செல்கிறது பூமியில் ஒரு துளையை” என்ற முன்அட்டை வரிகளின் மூலம் மண்புழு இதழ் முதல் கவனத்தை பெற்றுவிடுகிறது. மிக நுட்பமான தகவல் பகுதிகளும் துல்லியமான புள்ளிவிவரங்களும் அடங்கிய சூழலியல் எழுத்தாளரான நக்கீரன் எழுதிய “கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்” என்ற கட்டுரை (தற்போதைய சூழலுக்கு மிகவும் முக்கியமான கட்டுரை), சர்தார் சரோவர் அணைத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட நர்மதை நதி வாழ் மக்களைப் பற்றி ஒளிப்பதிவாளர் ஜெய் சிங் எழுதிய ஒரு சிறு கட்டுரை அதனுடன் 25 மலை கிராமங்களில் பயணம் செய்து அவர் எடுத்த புகைப்படங்கள், தேவதேவன், ஷண்டாரோ தனிக்காவா, அடோனிஸ், எய்ஹெய் டோகன் ஆகியோரது கவிதைகள் ஆகியவை இவ்விதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன..

இதழின் கனத்திற்கு நக்கீரன் அவர்களின் கட்டுரையை முன்னுதாரணமாக்கலாம். ஒரு ஆய்வுக்கட்டுரையை தொய்வில்லாமல் இடையிடையில் விடுபடுதலின்றி எழுதியதற்காக ஆசிரியரைப் பாராட்டலாம். (கட்டுரையாசிரியருக்கு பதில் ஆசிரியர் என்று கட்டுரையில் உபயோகிக்கிறேன்) நம்மிடையே இருக்கும் சில அடிப்படை பழக்கவழக்கங்களைக்கூட மாற்றக்கூடிய இயல்பான தகவல்களை இதில் அடக்கியிருக்கிறார். எந்த நோக்கத்தில் கட்டுரை ஆரம்பிக்கப்பட்டதோ அதிலிருந்து விலகி வேறு சிலவற்றை ஆராய்ந்து செல்லாமல் அதற்கேற்ற பொருத்தமானவற்றை தெரிவு செய்து மீண்டும் ஒரே பாதைக்கே கட்டுரை வந்துவிடுகிறது.

கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் என்ற தலைப்பிட்ட இக்கட்டுரை உலக நாடுகளிடையே நடைபெற்று வரும் நீர் வணிகம் பற்றியது. அதாவது நீரை கேலன் கேலனாக விமானம் மூலமோ, கப்பலில் ஏற்றியோ ஏற்றுமதி செய்வதல்ல இதன் அர்த்தம். இங்கு வணிகப்படுத்தப்படும் நீருக்கு மறை நீர் என்று பெயர். ஆங்கிலத்தில் வர்ச்சுவல் வாட்டர். நான்கு பகுதிகளாக உள்ள இக்கட்டுரையில் மறை நீர் குறித்த தகவலுக்காகவும், கட்டுரையின் முக்கியத்துக்காகவும் முதல் பகுதியை மட்டும் இங்கு உள்ளவாறு அப்படியே தருகிறேன்.

தமிழகத்தின் வேளாண் நிலவரத்தை கூர்ந்து கவனித்து வந்திருப்பவர்கள் இந்த செய்தியை அறிந்திருக்கலாம். தமிழகத்தின் காவிரி பாசன உழவர்கள் அணையிலிருந்து நீரை திறந்து விடுமாறு போராட்டம் நடத்த கர்நாடக காவிரிப் பாசன உழவர்களோ நீரை திறக்கக்கூடாது என்று போராடுவார்கள். ஓர் அணைக்கு மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையைத் திறக்கக்கூடாது என்றும் அவ்வணைக்கு கீழ்ப் பகுதியில் இருப்பவர்கள் திறக்க வேண்டும் என்றும் போராடுவது பொதுவாகவே உலகமெங்கும் காணப்படும் வேளாண்மை அரசியல்.

இதற்கு முற்றிலும் முரணாக ஓர் அணை இருக்கிறது. அந்த அணைக்கு மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையிலிருந்து நீரை திறந்துவிட வேண்டும் என போராட்டம் நடத்த அந்த அணைக்கு கீழ்பகுதியில் இருப்பவர்களோ அணையைத் திறக்கக்கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்கள். இந்த விநோத காட்சி நடைபெறும் இடம் நம் தமிழகம் தான். அந்த அணை திருப்பூர் நகருக்கு 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓரத்துப் பாளையம் அணை.

காவிரியின் துணை ஆறான நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில்தான் திருப்பூரின் சாயப்பட்டறை கழிவுகள் மொத்தமும் தேங்குகிறது. இதனால் நீர் நஞ்சாகி அணைக்கு மேல் பகுதியில் உள்ள வேளாண் பயிர்கள், கால் நடைகள் மற்றும் குடிநீரும் பாழாகிவிட்டன. இதே நச்சு நீரை திறந்துவிட்டால் கீழ்பகுதி மக்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே அணை நீரை திறக்கக்கூடாது என்கிறார்கள். இப்பிரச்சினையை தீர்க்க தெரியாமல் விழிக்கும் அரசோ காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் அணை நீரை திறந்துவிடுவதன் மூலம் இப்பிரச்சினையை தொடர்ந்து சமாளித்து வருகிறது.

இதற்கு மூல காரணமான திருப்பூரின் பின்னலாடைத் தொழிலை இன்றைய தேதியில் வருடத்துக்கு 12000 கோடி அந்நியச் செலவாணியை ஈட்டித் தருகிறது என்பதற்காக அரசு சீராட்டி வருகிறது. இது நியாயம்தானே என்று தோன்றலாம். ஆனால் நாம் இன்னும் சற்று ஆழமாக யோசித்தோமானால், சில உண்மைகளை எளிதாக புரிந்து கொள்ளலாம். பருத்தியை விளைவிக்க தெரிந்த மேல் நாட்டினருக்கு, பின்னலாடை தொழில் நுட்பத்தை அறிந்திருக்கும் மேல் நாட்டினருக்கு, அதற்கான எந்திரங்களை உற்பத்தி செய்து தரும் மேல் நாட்டினருக்கு இந்த பின்னலாடைகளை மட்டும் அங்கேயே தயாரிக்க தெரியாதா என்ன? பின் ஏன் அதை இங்கு உற்பத்தி செய்து வாங்கிக்கொள்கிறார்கள்?

இதே போல் உலக அளவில் காலணி தயாரிப்புக்கு புகழ்பெற்ற நாடு இத்தாலி. ஆனால், இந்த நாட்டுக்கு பதப்படுத்தப்பட்ட தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுவது நம் பாலாற்றங்கரையை நாசம் செய்த வாணியம்பாடி, ஆம்பூர், இராணிப்பேட்டை போன்ற ஊர்கள் தான். இந்த இத்தாலி நாடு கச்சாப் பொருளான பதப்படுத்தப்படாத தோல்களை அப்படியே இறக்குமதி செய்துகொண்டு அதை இத்தாலியில் பதப்படுத்திக்கொண்டு காலணிகளை தயாரித்தால் கூடுதலான அந்நிய செலவாணியை மிச்சப்படுத்தி கொள்ளலாம் அல்லவா? பின் ஏன் அவர்கள் அதை செய்வதில்லை? இக்கேள்விக்கு வழமையான விடையாக முன்னிறுத்தப்படும் ‘மலிவான மனிதவளம் இங்கு கிடைக்கிறது’ என்ற ஒற்றைப் பொருள் தன்மையை கொண்ட அரசியல் சொற்றொடரை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு வேறுசில வினாக்களை நாம் எழுப்பிப் பார்க்கலாம். கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு அதை ஏற்றுமதியும் செய்து வந்த நாடு சவுதி அரேபியா, தற்சமயம் அந்நாடு கோதுமையை இறக்குமதி செய்துகொள்கிறது. ஏன்?

சீனர்களுக்கு மிகவும் விருப்பமான உணவு பன்றி இறைச்சி. ஆனால், சீன அரசாங்கம் பன்றி இறைச்சி உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது. ஏன்? சிக்கன நீர் பாசன வேளாண்மைக்கு புகழ் பெற்ற இஸ்ரேல் பல வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்தாலும் ஆரஞ்சுப் பழங்களை அது ஏற்றுமதி செய்வதில்லை. ஏன்? இப்படியாக பல ஏன்?-களை எழுப்பிக்கொண்டே செல்ல முடியும். இத்தகைய வினாக்களுக்கான விடைகளில்தான் ஓர் அரசியல் ஒளிந்திருக்கிறது. அதுதான் நீர் அரசியல்.

மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று நடைபெற்றால் அது நீருக்காகவே நடைபெறும் என்று பல அறிஞர்கள் பலர் கணித்திருக்கிறார்கள். அதற்கான சாத்தியக்கூறுகளும் பல நாடுகளுக்கிடையே காணப்பட்டு வருகிறது. ஆனாலும், பெருமளவு தண்ணீர் தட்டுப்பாடும், பற்றாக்குறையும் நிலவும் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக வளைகுடா பகுதி நாடுகளில் நீருக்கான தேவை அதிகமிருக்கும்போதும் அங்கு ஏன் போர் நடைபெறவில்லை என்ற கேள்விக்கு ஏன் நடைபெற வேண்டும்? என்ற கேள்வியை எழுப்புகிறார் இலண்டனை சேர்ந்த புவியியலாளர் டோனி ஆலன். தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து கொண்டாலே போதுமே, அது அவர்களுக்குத் தேவையான நீரை தந்துவிடுகிறதே என்கிறார் அவர். மேலும் நீரை நேரடியாக இறக்குமதி செய்துகொள்வதைவிட இது கொள்ளை மலிவு என்றொரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறார் அவர். 1990-ல் வெளியிட்ட இந்த கருத்தாக்கத்திலிருந்து ஆங்கிலத்தில் விர்ச்சுவல் வாட்டர் என்று பெயரிட்டார். இக்கருத்தாக்கத்தில் இருந்த உண்மைக்காக உலகளாவிய விருது ஒன்றினையும் இவர் பெற்றார்.

தனது ‘வர்ச்சுவல் வாட்டர்’ கருத்தாக்கத்துக்கு விளக்கம் தர முன்வரும் ஆலன் இவ்வாறு கூறுகிறார். “கோதுமை மணிகளை விளைவிப்பதற்கு நீர் தேவைப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கோதுமை மணி விளைந்தவுடன் அதை உருவாக்குவதற்கு பயன்பட்ட நீர் அதில் காணப்படுவதில்லை. ஆனால், அதே சமயம் அந்த நீர் அந்த கோதுமை மணிக்குள் உட்பொதிந்துள்ளது அல்லது மறைந்துள்ளது என்பது உண்மைதானே? அந்த நீர்தான் ‘விர்ச்சுவல் வாட்டர்’. (இதை தமிழாக்கத்துக்கு பயன்படுத்துகையில் ‘மறைந்துள்ள நீர்’ என்னும் பொருள்பட ‘மறைந்துள்ள’ என்பதின் வேர் சொல்லான ‘மறை’ என்ற சொல்லைப் பயன்படுத்தி ‘மறை நீர்’ என்ற வார்த்தை இக்கட்டுரையில் இங்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது).

இப்படி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துள்ள நீர்தான் மத்திய கிழக்கு நாடுகளுக்குள் பிரச்சினையை எழுப்புவதில்லை என்கிறார் ஆலன். எடுத்துக்காட்டாக ஒரு நாடு ஒரு டன் கோதுமையை அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளும்போது அந்நாடு 1300 க.மீட்டர் நீரையும் இறக்குமதி செய்து கொள்கிறது அல்லது 1300 க.மீட்டர் அளவுக்கு தனது சொந்த நீரை சேமித்து கொள்கிறது என்று பொருள். ஒரு தோராயமான கணக்கீட்டின் படி ஒரு டன் தானியம் 1000 டன் நீருக்குச் சமம் என புரிந்து கொள்ளலாம்.

‘ஆலனின் இந்த ‘மறை நீர்’ கருத்தாக்கத்துக்கு தொடர்ந்து ஒவ்வொரு பொருளுக்குமான ‘மறை நீர்’ அளவை கணக்கிட தொடங்கினர் ஹோக்ஸ்த்ரா, சாப்பகைன் போன்ற அறிவியலாளர்கள்.. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் காலையில் ஒரு கோப்பை காப்பி அருந்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். அக்காப்பியில் உள்ள மறை நீரின் அளவு 140 லி ஆகும்.

அதாவது ஒரு காப்பி செடியைப் பயிரிட்டு, வளர்த்து, கொட்டையை அறுவடை செய்து, தூளாக்கி, சிப்பமிட்டு அதை கப்பலில் ஏற்றுமதி செய்யும் நாட்டின் நீர் அதில் மறைந்துள்ளது. இது ஒவ்வொரு ஏற்றுமதி பொருளுக்கும் பொருந்தும். இப்படி கணக்கிடும் போதுதான் ஒரு கோப்பை காப்பியின் மறை நீர் அளவு 140 லி ஆகிறது. இந்த அளவானது ஒரு இங்கிலாந்து நாட்டவர் நேரடியாக புழங்கும் ஒருநாள் நீரின் அளவாகும். அதாவது குளிக்க, குடிக்க, சமைக்க, கழிவறை சுத்தம் செய்ய என அனைத்துக்கும் பயன்படுத்தும் நீரின் அளவாகும். ஆனால், இந்த காப்பிக்கான மறை நீரை ஏற்றுமதி செய்த ஆப்பிரிக்க நாட்டினரோ நாளொன்றுக்கு சராசரியாக 10 முதல் 20 லிட்டர் நீர் வரைக்கூட புழங்குவதற்கு கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

இத்தகவலை தெரிந்து கொண்ட கையோடு நாம் முன் எழுப்பப்பட்ட மூன்று ‘ஏன்?’ கேள்விகளுக்கான விடைகளை இப்போது காண்போம்.

தன் உணவு உற்பத்திக்காக 75 விழுக்காடு நிலத்தடி நீரையே சார்ந்திருந்த சவுதி அரேபியா தொன்னூறுகளின் தொடக்கத்தில் கோதுமை விளைச்சலை அதிகப்படுத்திக் கொண்டு அந்நிய செலவாணியை அதிகமாய் ஈட்ட ஏற்றுமதியையும் ஊக்குவித்தது. இதனால் உலக வரலாற்றில் சவுதியைப் போல் நிலத்தடி நீரை அதிகமாய் உறிஞ்சியதில் முன்னிலை பெற்ற நாடு வேறு எதுவுமில்லை என்ற பெயரை அது பெற்றது. விளைவு நிலத்தடி நீரை வெகுவாக காலி செய்துவிட்டு இன்றைய நிலையில் 6 பில்லியன் க.மீ. நீர் பற்றாக்குறையுள்ள நாடாக மாறிவிட்டது. இப்பாடத்தைக் கற்றுக்கொண்ட பிறகுதான் சவுதி இப்போது கோதுமையை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது..

நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் முட்டைகளை நாம் ஏற்றுமதி செய்கிறோம். ஒரு முட்டையின் மறை நீர் அளவு 200 லி. நாம் மாதந்தோறும் இப்படியாக பல லட்சக்கணக்கான முட்டைகளை மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. பல கோடி கன அடிகள் அளவில் நமது நன்னீரையும் சேர்த்துதான் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். இவ்வளவு நன்னீரையும் ஏற்றுமதி செய்துவிட்டுதான் 1 லி தண்ணீரை 20 ரூபாய் விலை கொடுத்து வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறோம்.

சென்னையை ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என்று பெருமையுடன் அழைத்துக் கொள்கிறோம். இந்த பெருமைக்குப் பின்னே காணப்படும் கார் தயாரிப்பில் உள்ள மறைநீரின் அளவைக் கணக்கிட்டோம் எனில் தலை சுற்றிவிடும். 1.1 டன் எடையுள்ள ஒரே ஒரு காரின் மறை நீர் அளவு நான்கு இலட்சம் லிட்டர்தான். இந்த அளவானது இரண்டாயிரம் மக்கள் தொகைக் கொண்ட 5 கிராமங்களின் ஒரு நாள் புழங்குநீர் அளவுக்கு சமமாகும். ஒரு ஆண்டுக்கு இலட்சக்கணக்கில் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது எனில் எவ்வளவு மறை நீர் இங்கிருந்து ஏற்றுமதி ஆகிறது என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். அத்தோடு சேர்ந்து சென்னையில் நிலவும் நீர் பஞ்சத்தையும் கணக்கிட்டு கொள்ளுங்கள்.

இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் ஏன் கார் தயாரிப்பை மேற்கொள்ளுவதில்லை என்பதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த விவகாரத்தில் அவர்கள் எவ்வளவு கவனமுடன் இருக்கிறார்கள் என்பதற்கு ஆஸ்திரேலியாவே சிறந்த எடுத்துக்காட்டு. அங்கு நன்னீரைக் கொண்டு கார் கழுவுவது கூட சிறை தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய பின்னணியில்தான் திருப்பூரையும், வாணியம்பாடியையும் நாம் கணக்கில் எடுத்துப் பார்க்க வேண்டும். ஒரே ஒரு பின்னலாடையில் மட்டும் மறைந்துள்ள நீரின் அளவு 2700 லி. அதன் விளைவோ இன்றைக்கு திருப்பூரின் நீர் பற்றாக்குறை மட்டும் ஆண்டுக்கு 22 மில்லியன் க.மீ. ஒரு கிலோ பதனிடப்பட்ட தோலின் மறை நீர் அளவு 16,600 லி.இதன் விளைவால் இன்று பாலாற்றையே இழந்து நிற்கிறோம்.’

ஒரு கிலோ பன்றி இறைச்சியின் மறை நீர் அளவு 4810 லி. இது கோழி மற்றும் பண்ணை மீன்களை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படுவதை விட இருமடங்கு அதிகம். எனவேதான் சீனர்களின் மிகை விருப்ப உணவான பன்றி இறைச்சி உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது சீன அரசு. உலக மக்கள் தொகையில் சீனர்களின் தொகை 21 விழுக்காடு. ஆனால், அந்நாட்டின் நன்னீர் வளம் வெறும் 7 விழுக்காடுதான். ஆகையால்தான் குறைந்த அளவு நீர் தேவைப்படும் உணவுகளையே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள சீனா அதை செயற்படுத்தியும் வருகிறது.

இறுதியாக இஸ்ரேலுக்கு வருவோம். ஒரே ஒரு ஆரஞ்சு பழத்தின் மறை நீர் அளவு 50 லி. நீர் சிக்கனத்தைப் பின்பற்றும் இஸ்ரேல் அரசு பின் எப்படி ஆரஞ்சு பழங்களை ஏற்றுமதி செய்யும்? இப்படியாக விழித்துக்கொண்ட நாடுகள் எல்லாம் மறை நீர் அளவு அதிகமுள்ள பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஓர் உணவுப் பொருளைப் பற்றியும், ஓர் உற்பத்திப் பொருளைப் பற்றியும் காண்போம்.

 

கட்டுரையின் பிற மூன்று பகுதிகள் மேலும் முக்கியமானவை. இம்முதல் பகுதியை வாசித்தவருக்குத் தோன்றும் சில கேள்விகளுக்கான விடைகளை அடுத்தடுத்த பகுதிகளில் ஆசிரியரே கொடுத்துவிடுகிறார். முழுக்கட்டுரையையும் வாசிக்கையில் ஒருவகையான அச்சமும், இதுவரையில் தெரியாமல் செய்துவந்த தவறுக்கானக் குற்றவுணர்வும் மனதுக்குள் எழாமல் இருக்கவில்லை.

அன்றாட தொழிற்வாழ்விலிருக்கும் கடமைகளுக்கு அப்பால் சில கேள்விகள் எழுகின்றன. அதிகம் பொருட்படுத்த இயலாமல் தன்னை அறியாமல் செய்யும் தவறுகளே இந்த கேள்விகள்.

அதை கண்டுகொள்ளவேண்டிய நிர்பந்தம் எதுவுமில்லாமல் நாம் இதுவரை இருப்பதை இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார் நக்கீரன்.

பசுமை வளம் குன்றி தொழிற் வளம் பெருக ஆரம்பித்த நாளை இயற்கையின் மீது இடி விழுந்த நாளாகவும் அதனால் மனித இனம் அல்லல்படக்கூடிய நாளாகவும் எடுத்துக்கொண்டால், அத்தகைய ஒரு நாளை நோக்கி நாம் பயணிப்பதைப் பற்றியதே இக்கட்டுரை.

நீரை அடுத்த சந்ததியினருக்காகவும், உலகுக்காகவும் பாதுகாத்து சேமித்து வைத்தல் என்ற கருத்து மட்டுமல்ல. மதுஒழிப்பு, பன்னாட்டு நிறுவனங்களின் ஆளுகையில் சிக்கியிருக்கும் நாடுகள், உணவுப் பதார்த்தங்களில் இருக்கவேண்டிய கட்டுப்பாடு இன்னபிற அம்சங்களையும் மறைமுகமாக வலியுறுத்துகிறது.

உயிர் வாழ்வின் ஆதாரங்களில் ஒன்றானது நீர். அது மாசுறும்போது விளையும் கேடுகள் நாமறிந்தவையே. இவை, நம்முடைய தகவல் தளம் எனும் பொதுத்தளத்துக்குள் இதுவரை வந்தவை. அதை ஊடகங்களின் துணையுடனும் நாமறிவோம். ஆனால், பரவலாக பெரும்பான்மையினர் மத்தியில் பேசப்படாத, அறிந்துகொள்ளப்படாத தற்போதைய சூழலில் அத்தியாவசியப்படுகின்ற ஒரு தகவலை கட்டுரையின் மையப்புள்ளியாகக் கொண்டு எழுதியமைக்காக நன்றிகூற விரும்புகிறேன்

தினசரி வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளவேண்டிய சிறிய பொது நலத்தை நடைமுறைப்படுத்தச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

பல முறை கட்டுரையை வாசித்த பின்பு, அதை நண்பர்கள் சிலரிடம் சொல்லியிருந்தேன். அவர்களில் சிலர் நன்னீர் உபயோகத்தைக் கட்டுப்படுத்தியிருப்பதாக தகவல் அளித்தார்கள். அதுமட்டுமின்றி, என்னுடைய தொழிலில் இருந்துகொண்டு இப்போதைக்கு என்னால் இதை மட்டுமே செய்ய முடிகிறது என்றார்கள். இதையாவது செய்ய முடிந்ததே. அதுவே போதும் என்றேன். ஆம், அரசின் மீதோ, பன்னாட்டு நிறுவனங்களின் மீதோ கோபப்படுவதில் எள்முனையளவுகூட பிரயோஜனமுமில்லை. சுயநலம் என்ற ஒற்றை வார்த்தையை அழுத்தமாக ஜபம் செய்யும் உலக நாடுகளில் இந்நீர் வர்த்தகத்தின் இடையே இறக்குமதி செய்வதற்கு இயலாமல் பொருளாதாரக் குட்டு வாங்கி வறுமையில் நிற்கும் நாம் இவ்வளவு மட்டுமே செய்ய முடியும். ஆசிரியரின் கருத்தும் இதுவே.

இதன் பிரதிபலனாக மறை நீர் அதிகமுள்ள பொருட்களை மட்டுமாவது இறக்குமதி செய்துகொள்ள நாம் துணிவோமா? ஆம் என்றால், அப்படி துணிந்தால் அதற்கும் ஓர் அரசியல் ஒப்பனை செய்ய வேண்டியிருக்கும். அதெல்லாம் நாம் செய்யப்போவதில்லை. அது நிகழாத வரை ஆசிரியர் கட்டுரையின் முடிவில் சொல்லியிருப்பது போல காலநிலை மாற்றத்தின் விளைவால் கடுமையாக பாதிக்கப்படப் போவது நம்மை போன்ற ஏழை நாடுகள்தான். இதன் முதன்மையான பாதிப்பு என்னவென்றால் நீர் பற்றாக்குறைதான். இப்போது நமது நீரை அனுபவித்து கொண்டிருக்கும் எந்த ஒரு நாடும் அப்போது ‘ஒரு துளி நீரை’க்கூட நமக்கு தரப்போவதில்லை.

manpuzhu2-225x300.jpg

 

இக்கட்டுரையின் சிறப்புக்கு மற்றுமொரு காரணம் ஜெய் சிங்கின் புகைப்படங்கள். நக்கீரன் எழுத்தில் விவரித்த விடயத்துக்கு பொருத்தமாக ஜெய் சிங் காட்சிகளைக் கொடுத்திருக்கிறார். அவரது புகைப்படங்கள் உயிர்ப்புள்ளவை. அவற்றைக் கண்ணுறும்போது உள் நுழைந்து வெளியேறிய அனுபவம் கிடைக்கிறது. புகைப்படம் ஒவ்வொன்றிலும் சில்லிட்ட காற்று உருவம் கொள்கிறது. கைகள் வழியே அந்நிலப்பரப்பின் வாசனையும், அம்மனிதர்களின் அன்பும் சுற்றிப் பரவுகிறது.

சர்தார் சரோவர் அணைக்கட்டுத் திட்டத்தினால் மக்களின் மரபு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நர்மதை நதிக்கு அருகிலிருந்த 25 மலை கிராமங்களில் பயணம் செய்து புகைப்படங்களாக்கியிருக்கிறார் ஜெய்சிங். வெறும் புகைப்படங்களாக ரசித்து்க் கடக்கக்கூடியவை அல்ல. மிக ஆழமான உணர்வை அவை அளிக்கின்றன.

குழாய் நீரை ஒரு பாத்திரத்தில் பெற்று கைகளை அலைந்து எடுத்து தன்னுடைய கால்களை கழுவிக்கொள்ளும் பெண், அங்கு குழாயைப் பற்றி நீரை இரைக்கும் சிறுமி என்று ஒவ்வொருவரும் புகைப்படத்தில் மட்டுமின்றி இவ்வுலகத்தின் கதாநாயகர்கள் ஆகிறார்கள்.

இறுக்கமான இருண்ட மேகங்கள் கொண்ட பகல் வானம் மனதுக்குள் அதீத சலனத்தை உருவாக்கும் புகைப்படம், .நீர் சுமந்து வீடு திரும்பும் பெண்கள், நீளமான கயிற்றினால் மாடுகளை இணைத்து வழி நடத்திச் செல்லும் ஓர் குடும்பம், அடர் வனமொன்றின் பின்புலத்துடன் அமர்ந்திருக்கும் பெண், வீட்டுக்கதவைப் பிடித்துக்கொண்டு கீழே குனிந்தபடி சிரிக்கும் ஒரு சிறுமி என பல நுண்ணிய பதிவுகள் அவரது புகைப்படங்களில் காண முடிகிறது.

தவிர அட்டைப் படத்திலிருக்கும் புகைப்படமும், குக்கூ காட்டுப்பள்ளி தோன்றி வரும் இடமும் கண்களில் கனமாக நிற்கின்றன.

அனைத்து புகைப்படங்களிலும் ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வுமுறை தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. வயதான ஒரு பெண் சுருட்டு பிடிக்கும் புகைப்படம், முகங்களில் தெரியும் சுருக்கத்தின் பதிவுகள், வெறுமையான பார்வை புகைப்படமெங்கும் அம்மக்களின் விரக்தியும், இழந்த நிலமொன்றின் பெருமையும் இருப்பதாகவே தோன்றுகிறது.

ஜெய் சிங்கின் இப்புகைப்படங்கள் ஓவிய அமைப்பையும், வர்னணையும் கொண்டுள்ளதை ஆழமாக பார்த்து அறிய வேண்டிய நிலையை அவர் தரவில்லை. அதற்குப் பதிலாக சாதாரணமாக ஒருவர் பார்த்தாலே அவ்வாறு தோன்றும் பார்வையைத் தந்திருக்கிறார். இயற்கையைத் தொகுத்து வழங்கியதிலும், அடிமக்களின் சாமானிய வாழ்க்கையை சொல்லியதிலும் ஜெய் சிங்கின் புகைப்படங்கள் மனதினுள் சலனத்தை உருவாக்க தவறவில்லை.

இயற்கை குறித்த எதிர்கால அச்சத்தையும், குழந்தைகளும் இயற்கையும் ஒன்றிணையும் நிகழ்வையும் மண்புழு இதழ் மூலம் மேலும் அறிய நேர்ந்ததில் பலன் இருக்கிறது.

இதழில் இடம்பெற்ற பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் ஷண்டாரோ தனிக்காவாவின் கவிதை முக்கியமானது.

பதினைந்து வரிகளில் இயற்கையின் மீதான நெருக்கத்தை விவரிக்கும் இக்கவிதையுடன் கட்டுரையை நிறைவு செய்து கொள்கிறேன்.

பறவைகள் இருக்கின்றன

எனவே வானம் அங்கிருக்கிறது

வானம் அங்கிருக்கிறது

எனவே அங்கு பலூன்கள் இருக்கின்றன

அங்கு பலூன்கள் இருக்கின்றன

எனவே குழந்தைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன

எனவே அங்கு சிரிப்பொலி இருக்கிறது

எனவே அங்கு சோகம் சிரிக்கிறது

எனவே அங்கு பிரார்த்தனை இருக்கிறது

மண்டியிடுவதற்கு பூமி இருக்கிறது

அதனால் நீர் வழிந்து ஓடுகிறது

மேலும் இன்றும் நாளையும் இருக்கின்றன

ஒரு மஞ்சள் பறவை அங்கிருக்கிறது

எனவே எல்லா வர்ணங்கள் வடிவங்கள் இயக்கங்களுடன்

அங்கே உலகம் இருக்கிறது.

- See more at: http://solvanam.com/?p=25505#sthash.cCA5CO97.dpuf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீரின் அருமை உணர்வோம்!

 

உலகில் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் தற்போது எண்ணெய் வளம் பெற்று வருகிற முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இன்னும் 50 ஆண்டுகளில் நன்னீர் முக்கியத்துவம் பெற்றுவிடுமென அறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உலகில் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் தற்போது எண்ணெய் வளம் பெற்று வருகிற முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இன்னும் 50 ஆண்டுகளில் நன்னீர் முக்கியத்துவம் பெற்றுவிடுமென அறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இயற்கை வளங்கள், மனித வளம், நீடிப்புத் திறனுள்ள பொருளாதார வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, ஆயுத பலம், பூகோள ராஜதந்திரங்கள் ஆகியவற்றுடன் நன்னீர் வளமும் எதிர்கால அரசியலை வடிவமைக்கும் காரணியாக அமையும். தேவையான அளவில் நன்னீரும் உணவும் ஆற்றலும் கிடைக்கிற வரைதான் உலகில் அமைதி நிலவும்.

இயற்கை தன் நீரியல் சுழற்சிச் செயல்பாடுகள் மூலம் ஆண்டுக்குச் சுமார் 43 ஆயிரம் பில்லியன் கன மீட்டர் அளவுக்கு நன்னீர் இருப்பைப் புதுப்பிக்கிறது. அதனிடமுள்ள மொத்த நீர் இருப்பு வரையறுக்கப்பட்டு விட்ட மாறிலி. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் உலக ஜனத்தொகை இரட்டிப்பாகியுள்ளது. உலகின் தொழில் துறைகளும் பொருளாதாரமும் அதைவிட வேகமாக வளர்ந்து வருகின்றன. குடிநீர் வழங்கல் எதிர்காலத்தில் ஒரு பணம் கொழிக்கும் வியாபாரமாகப் போகிறது என்று நீர் வணிகர்கள் நாவில் நீரூறக் காத்திருக்கிறார்கள்.

அறிவியலார் நாளைய நன்னீர்த் தேவைகளை நிறைவு செய்ய புதிய உத்திகளைக் கண்டறிந்து வருகிறார்கள். ரஷ்யாவைச் சேர்ந்த இகார் செக்ட்ஸர் என்ற நீரியல் நிபுணர் கடலடித் தரையிலிருந்து தற்போது எண்ணெய் எடுப்பதைப் போல நன்னீரையும் எடுக்க முடியும் என்கிறார்.

கடலடித் தரையில் பல இடங்களில் நன்னீர் ஊற்றுகள் பீறிட்டெழுந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து வெளிப்படும் நீர் மேலெழுந்து கடலின் மேற்பரப்புக்கு வரக்கூடிய அளவுக்கு அந்த ஊற்றுகளில் அழுத்தமும் விசையும் தென்படுகின்றன.

ரஷ்ய அறிவியல் கழகத்தின் நீர்ப் பிரச்னை ஆய்வகம், உப்பு நீர்க் கடலடித் தரைக்கும் கீழே தூய நீர் தேங்கியுள்ள நீர்த் தேக்கங்களைக் கண்டறிந்துள்ளது. கடற்கரையோர ஆழமற்ற பரப்புகளிலும் அவற்றுக்கப்பாலுள்ள கண்டச் சரிவுகளிலும், ஆழ்கடலின் அடித் தரைகளிலும் துளைகளிட்டு அவர்கள் கடலடி நீர்த் தேக்கங்களை அளவிட்டுள்ளனர். அட்லாண்டிக் கடற்கரையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில்கூட இத்தகைய நிலத்தடி நீர்த் தேக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைக்கெட்டாத வண்ணம் கடலடித் தரையில் புதைந்துள்ள நன்னீரை வெளிப்படுத்தினால், நன்னீர்ப் பற்றாக்குறையுள்ள பல கடலோரப் பிரதேசங்களுக்குத் தேவையானதை விட அதிகமாகவே நன்னீர் கிடைக்குமென்று இகார் செக்ட்ஸர் உறுதியளிக்கிறார். அவரது ஆய்வுக் குழு உலகு முழுவதிலுமுள்ள நிலத்தடி நீரோட்டம் மூலம் கடலுக்குள் பாயும் மொத்த நன்னீரின் அளவைக் கணக்கிட்டிருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாமல் கடலில் கலந்து கொண்டிருக்கிற நிலத்தடி நீரோடைகளின் நீர் அளவைக் கணக்கிடுவது கடினம். அதன் காரணமாகவே உலகின் நன்னீர் இருப்புகளை மதிப்பிடும்போது நிலத்தடி நீர் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

பூமியின் நடு உறையிலிருந்து வெளிப்படும் வாயுக்களில் நிறைய நீராவியும் கலந்துள்ளது. அதுவும் கடல் நீரில் கலக்கிறது. எரிமலைகளிலிருந்தும் வென்னீர் ஊற்றுகளிலிருந்தும் பூமியின் ஆழ்பிளவுகளிலிருந்தும் ஏராளமான நன்னீர் வெளியாகிறது. அவ்வாறு வெளிப்பட்டு கடலில் கலக்கும் நன்னீர் அளவு ஆண்டுக்கு அரை முதல் ஒரு கன கிலோ மீட்டர் வரையிருக்கலாமென்று ரஷ்ய நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள். அது ஒரு லட்சம் கோடி லிட்டருக்கு சமம்.

அடுத்து தரைப் பகுதியிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக கடலில் கலந்து கொண்டேயிருக்கிறது. இந்த நீரின் அளவை கணக்கிடவே முடியாது. உலகிலுள்ள மொத்த நீரின் அளவை சரியாக கணக்கிட முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.

ஒவ்வோராண்டும் ரஷ்ய ஆய்வர்கள் கடலோரக் கரைகளையும் கரையோரக் கடல்களையும் ஒரே சமயத்தில் ஆய்ந்து 2,400 கன கிலோ மீட்டர் அளவில் நன்னீர் கடற்கரைகளின் ஊடாகக் கசிந்து கடலில் சங்கமித்து விடுவதாக மதிப்பிட்டுள்ளனர்.

வட அமெரிக்கக் கண்டத்தின் கரைகளிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் சுமார் 400 கன கிலோ மீட்டர் அளவுக்கு நன்னீர் கடலுக்குப் போய் விடுகிறது. தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்து இவ்வாறு வெளியேறும் நீரின் அளவு சற்றே குறைவு. ஆஸ்திரேலிய கண்டத்தில் அது சுமார் 25 கன கிலோ மீட்டர் அளவிலுள்ளது. பெருங் கண்டங்களிலிருந்து வெளியேறிக் கடலில் பாய்கிற மொத்த நிலத்தடி நீரின் அளவை விட, சிறு தீவுகளிலிருந்து அதிக அளவு நீர் கடலில் கலக்கிறது. அதற்கு அத்தீவுகளின் தட்பவெப்ப நிலையும், அவற்றின் மேடு பள்ளத் தரையமைப்பும் காரணமாகின்றன.

தென் துருவத்தில் சுமார் 24 மில்லியன் கன கிலோ மீட்டர் அளவுக்கு நன்னீர் உறைந்து கிடக்கிறது. அது உலகின் நன்னீர் இருப்பில் 80 முதல் 90 சதவீதம். ஆண்டுதோறும் 1,000 முதல் 1,300 கன கிலோ மீட்டர் வரையிலான அளவுக்கு பனிப் பாறைகள் அன்டார்டிகாவிலிருந்து வெளியேறி கடலில் மிதந்து கரைகின்றன. அவை சுமார் 600 கோடி மக்களுக்கு தேவையான நன்னீரை கடலில் கரைத்து விடுகின்றன.

குறைந்தபட்சமாக பத்துக் கோடி கன மீட்டர் பருமனுள்ள பனிமலையைக் கட்டி இழுத்து வந்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் மேற்குக் கரையோர நாடுகள், வட அமெரிக்காவின் தென் மேற்குக் கரை போன்ற இடங்களுக்கு நன்னீர் வழங்கும் பல கனவுத் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. அத்தகைய ஒரு பனிமலையின் எடை நூறு மில்லியன் டன்னாக இருக்கும். பெரும் பொருட் செலவும், தொழில்நுட்பச் சிக்கல்களும் அத்திட்டங்களை நிறைவேற்றத் தடையாக உள்ளன.

கடல் நீரின் வெப்ப நிலை பனிமலையின் வெப்பநிலையைவிட 15 செல்சியஸ் டிகிரி அதிகமாக உள்ள இடங்களில் கடல் நீரின் வெப்பத்தால் ஒரு திரவத்தை ஆவியாக்கி மின் உற்பத்திச் சாதனங்களை இயக்கலாமெனவும், ஆவியைப் பனிமலையின் குளிர்ச்சியைப் பயன்படுத்தித் திரும்பவும் திரவமாக்கிக் கொள்ளலாம் எனவும் ஆய்வுத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு கன கிலோ மீட்டர் பருமனுள்ள பனிக்கட்டி மூன்றாண்டுகளுக்கு 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவும் என்கிறார்கள்.

இவையெல்லாம் ஆகாயக் கோட்டை போன்ற திட்டங்களாகத் தோன்றினாலும் இவற்றை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலை விரைவில் தோன்றி விடலாம். விதை நெல்லை விற்று உணவை வாங்குவதைப் போல நாளைக்கான நன்னீரை உலகம் இன்றே செலவழித்துக் கொண்டிருக்கிறது.

நீர்வளம் குறைந்ததால் கடந்த 50 ஆண்டுகளில் உலகின் பல்லுயிர்ப் பன்மை பாதியாகக் குறைந்துள்ளது. நிலத்தடி நீரை அளவுக்கு மீறி பயன்படுத்துவதால் ஆறுகளின் சுயமான நீரோட்டப் பாணிகளும், சதுப்பு நிலங்கள் மற்றும் ஏரிகளின் நீர் இருப்பும் அவற்றைச் சார்ந்திருக்கும் பல்லுயிர்ப் பன்மையும் நிலை குலைந்திருக்கின்றன.

ஒரு நாட்டில் நீர்வளம் அற்றுப்போனால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குக் குடிபெயர்ந்து அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்துவர். சீனா, திபெத்தில் உள்ள பிரும்மபுத்திரா நதியில் அணைகளைக் கட்டி தன் வட பகுதிகளுக்குத் தண்ணீரைத் திருப்பி விடுமானால், வங்கதேசம் வறண்டு அதன் மக்கள் இந்தியாவிலும் மியான்மரிலும் புகலடைவர். அது ஜனத்தொகை விகிதங்களை மாற்றி, மதம் மற்றும் இனங்களுக்கிடையிலான மோதல்களுக்கு வழிகோலும்.

சூடானின் உள்நாட்டுப் போருக்கு தண்ணீர் மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்கான போட்டிதான் காரணம். தன் பகுதியிலுள்ள நீல நைல் நதியில் எதியோப்பியா ஒரு பெரிய அணை கட்டி வருவதை ஆட்சேபித்து, எகிப்து அதன் மேல் படையெடுக்கப்போவதாக மிரட்டி வருகிறது. இத்தகைய சச்சரவுகளில் பயங்கரவாதிகள் தலையிட்டு நிலைமையை அதிகச் சிக்கலாக்கி விடலாம் என அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அரசு தனது வெளியுறவுக் கொள்கை வகுப்பில் தண்ணீர் ஒரு மையக் கூறாக அமையும் என்று கூறியிருக்கிறது.

தொழிற்சாலைகளை அமைக்க ஏதுவாக தண்ணீர் வளமுள்ள இடங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. ஒடிசாவில் பாஸ்கோ எஃகு உற்பத்தி நிறுவனம் தொடங்குவதை உள்ளூர் மக்கள் எதிர்ப்பதற்கு தண்ணீர்ப் பிரச்னையும் ஒரு காரணம்.

தென் கொரியா, தனக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்கிற தொழிற்சாலைகளை நீர்வளம் மிக்க அயல்நாடுகளில் நிறுவுமாறு தொழிலதிபர்களை வற்புறுத்துகிறது. மாமிச உணவு உற்பத்திக்கு அதிக நீர் செலவாகிறபடியால் பல நாடுகள் தம் மக்களைச் சைவ உணவுக்கு மாறும்படி வேண்டுகோள் விடுக்கின்றன.

பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்காதே என்று சொல்வதை விட்டு விட்டு தண்ணீரைப் பணமாகச் செலவழிக்காதே என அறிவுரை கூறும் காலம் வந்து விடும் போலிருக்கிறது.

 

http://www.dinamani.com/editorial_articles/2014/03/22/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article2123367.ece?service=print

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.