Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் வெஸ்ட் இண்டிஸ் ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

இந்தியத் தொடர்: நரேன் இல்லை
 

 

சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வந்த சுநீல் நரேனின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து அவரை திரும்பப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஒரு டி20 போட்டி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது. வரும் 8-ம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் தொடரில் சுநீல் நரேனும் இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வந்த நரேனின் பந்துவீச்சு குறித்து தொடர்ந்து 2-வது முறையாக சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இந்தியாவுடனான தொடரில் இருந்து அவரை திரும்பப் பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் வாரியம், “சுநீல் நரேன் தனது பந்துவீசும் முறையை ஆய்வுக்கு உட்படுத்தி மீண்டும் அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பளிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article6472024.ece

  • தொடங்கியவர்

 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின் வெளியே, அமித் மிஸ்ரா, குல்தீப் யாதவ் உள்ளே! 

 

 

பெங்களூர்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடருக்கான 14 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கு 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. மே.தீவுகளுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி பெங்களூரில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின் வெளியே, அமித் மிஸ்ரா, குல்தீப் யாதவ் உள்ளே! இதில் சமீபகாலமாக பந்து வீச்சில் சொதப்பி வரும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கழற்றி விடப்பட்டு அவருக்கு பதிலாக சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டித் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி கலக்கி வரும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அனுபவமிக்க ஸ்பின்னர் தேவையை ஈடு செய்ய அமித் மிஸ்ராவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

தமிழக வீரர் முரளி விஜய்க்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது. இந்திய அணி விவரம்: டோணி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷிக்கர் தவான், அஜிங்யா ரகானே, விராட் கோஹ்லி, ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, மோகித் ஷர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப் யாதவ்.

 

Read more at: http://tamil.oneindia.in/news/sports/india-vs-west-indies-2014-kuldeep-yadav-in-ravichandran-out-212307.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கொச்சியில் இந்திய வீரர்கள்
அக்டோபர் 06, 2014.

கொச்சி: முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொச்சி வந்தனர்.  மழை காரணமாக போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது.           

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல்போட்டி நாளை கொச்சியில் நடக்கவுள்ளது.           

இதில் பங்கேற்கும் இந்திய அணியின் கோஹ்லி, முகமது ஷமி, ரகானே, அம்பதி ராயுடு, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் நேற்று மதியம் கொச்சி வந்தனர்.மோகித் சர்மாவும், அணியில் புதிதாக இடம் பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், கேப்டன் தோனி, ரெய்னாவும் பிறகு வந்ததாக தெரிகிறது.      

     

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் டுவைன் பிராவோ, ஆன்ட்ரூ ரசல், நேற்று முன்தினமே கொச்சி வந்துவிட்டனர்.            

பயிற்சி எப்போது: இன்று காலை இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதியத்துக்கு பின், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் பயிற்சி செய்யவுள்ளனர்.           

மழை தொல்லை: இதனிடையே, கொச்சியில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கேரள கிரிக்கெட் சங்க (கே.சி.ஏ.,) மாத்யூ கூறியது:          

 

நாளைய போட்டிக்குரிய டிக்கெட் விற்பனை, கடந்த முறை இருந்ததை விட குறைவு தான். அதிரடி வீரர் கெய்ல் இல்லாததால் கூட இப்படி இருக்கலாம். போட்டி நடக்கும் போது, மைதானம் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கிறோம். ஆடுகளத்தை பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங் என, இரண்டுக்கும் சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. எவ்வளவு மழை பெய்தாலும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் போட்டியை நடத்தும் அளவுக்கு மைதானம் தயாராகி விடும். இதற்கான வசதிகள் உள்ளதால் மழை குறித்து எங்களுக்கு கவலை இல்லை. 

இவ்வாறு மாத்யூ கூறினார்.    

       

ராசியான மைதானம்           

கடந்த 1998ல் கொச்சி நேரு மைதானம் அறிமுகம் ஆனது. இங்கு நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா, 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.           

*இதுவரை நடந்த 9 போட்டிகளில் 6ல் இந்தியா வென்றது. 2ல் எதிரணிகள் (ஜிம்பாப்வே, ஆஸி.,) வென்றன. ஒரு போட்டி (2010) மழையால் ரத்தானது.

 

 

http://sports.dinamalar.com/2014/10/1412615551/IndiaWestIndiesOneDayCricketJadejaKochi.html

  • தொடங்கியவர்

வெற்றியுடன் துவக்குமா இந்தியா * இன்று வெ.இண்டீசுடன் முதல் மோதல்
அக்டோபர் 07, 2014.

 கொச்சி: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி சுலப வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல்  போட்டி இன்று கேரளாவின் கொச்சியில் நடக்கிறது. 

இந்திய அணியை பொறுத்தவரை ‘பேட்டிங்’, ‘பவுலிங்’ என இரண்டிலும் அசுர பலத்தில் உள்ளது. ரோகித் சர்மா(தோள்பட்டை காயம்) இல்லாத நிலையில், துவக்கத்தில் ரகானே, தவான் களமிறங்கலாம். முரளி விஜய்க்கும் வாய்ப்பு உள்ளது.

 

சுதாரிப்பாரா கோஹ்லி:

துணைக்கேப்டன் விராத் கோஹ்லி கடந்த பிப்ரவரியில் நடந்த ஆசிய கோப்பையில் சதம்(136 ரன்) அடித்தார். இதன் பின் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கடந்த ஆறு போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 107 ரன்கள்தான் (48, 5, 0, 40, 1*, 13) எடுத்துள்ளார். இன்று இழந்த ‘பார்மை’ மீட்க முயற்சிக்க வேண்டும்.

 

ரெய்னா நம்பிக்கை:

‘மிடில்–ஆர்டரில்’ ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளனர். சமீபத்திய சாம்பியன்ஸ் லீக் பைனலில் சென்னை அணிக்காக சதம் விளாசிய ரெய்னாவின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த இங்கிலாந்து ஒரு நாள் தொடரில் இரண்டு அரை சதம் அடித்த ராயுடுவின் பங்களிப்பும் அவசியம். கேப்டன் தோனியின் சிறப்பான செயல்பாடு வழக்கம் போல் அணிக்கு பலம் சேர்க்கும்.

 

சிறப்பான கூட்டணி:

‘வேகத்தில்’ மிரட்ட மோகித் சர்மா, புவனேஷ்வர், ஷமி, உமேஷ் யாதவ் உள்ளனர். ‘சுழலில்’ அஷ்வினுக்கு ஓய்வு தந்துள்ளதால், ஜடேஜா, அமித் மிஸ்ரா அசத்தலாம். சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அறிமுகமாவாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இத்தொடரை உலக கோப்பைக்கான(2015) பயிற்சியாக பார்ப்பதால், இந்திய அணி வெற்றியுடன் துவக்குவது அவசியம்.

 

கெய்ல் இல்லை:

வெஸ்ட் இண்டீசுக்கு ‘அதிரடி’ கெய்ல் காயத்தால் விலகியது பெரும் இழப்பு. கேப்டன் டுவைன் பிராவோ, ‘சீனியர்’ வீரர்களான டேரன் சமி, டேரன் பிராவோ, போலார்டு கைகொடுக்கலாம்.

பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கிய ‘சுழல் மாயாவி’ சுனில் நரைன் இல்லாதது, இந்திய அணிக்கு சாதகம். இவரது இடத்தை சுலைமான் பென் நிரப்பலாம். வேகப்பந்துவீச்சில் ஜெரோமி டெய்லர், கீமர் ரோச், ராம்பால் அசத்தலாம்.

யார் ஆதிக்கம்

கொச்சி நேரு மைதானத்தில் நடந்த 9 ஒருநாள் போட்டிகளில், இந்தியா 6ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. இரு போட்டிகளில் தோற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டி (2010) மழையால் கைவிடப்பட்டது.

* கடைசியாக (2013) இங்கு நடந்த வெஸ்ட் இண்டீஸ் (211/10) அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி (212/4), 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

மழை வருமா

போட்டி நடக்கும் கொச்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை 24, அதிகபட்சம் 32 டிகிரியாக இருக்கும், இன்று இரவு இடியுடன் கூடிய மழை வர 66 சதவீதம் வாய்ப்புள்ளது.

பயிற்சி இல்லை

வெஸ்ட் இண்டீஸ் அணியினர் நேற்று மதியம் 1 மணிக்கு பயிற்சியில் ஈடுபடுவதாக இருந்தது. இதனை தவிர்த்துவிட்டனர். மாலை 4 மணிக்கு நடக்கவிருந்த பத்திரிகையாாளர் சந்திப்பிலும் பங்கேற்கவில்லை. இதற்கான காரணங்கள் என்னவென்று அணி நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

 

சோதனை முயற்சி

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ ஆஸ்திரேலிய மண்ணில் (2014 டிச., முதல் 2015 ஜன.,)  விரைவில் போட்டிகளில் பங்கேற்கவுள்ள நிலையில், அங்கு சென்று சோதனை செய்து கொண்டிருக்க முடியாது. இதனால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் சில சோதனை முயற்சிகளில் ஈடுபடுவோம். அதேநேரம், முதல் போட்டியில் வெல்வது, தொடரை கைப்பற்றுவதும் முக்கியம். இது தான் எங்களது முதல் இலக்கு,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/10/1412701619/indiawestindiesodikochicricket.html

 

  • தொடங்கியவர்

கொச்சி ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங்
 

 

கொச்சியில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

டாஸில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டிவைன் பிராவோ டெய்ல் என்றார் ஆனால் விழுந்தது ஹெட், இதனால் தோனி டாஸில் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

2-வது பாதி ஆட்டத்தில் பனி விழலாம் இதனால் பவுலர்கள் வீசுவது சற்று கடினம் ஆகவே முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ததாக தோனி தெரிவித்தார்.

 

இந்திய அணி வருமாறு:

தவன், ரஹானே, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ராயுடு, தோனி, ஜடேஜா, புவனேஷ் குமார், அமித் மிஸ்ரா, மொகமது ஷமி, மோகித் சர்மா

வெஸ்ட் இண்டீஸ் அணி:

டிவைன் ஸ்மித், டிவைன் பிராவோ, சாமுயெல்ஸ், டேரன் பிராவோ, தினேஷ் ராம்தின், பொலார்ட், டேரன் சமி, ஆந்த்ரே ரசல், சுலைமான் பென், ரவி ராம்பால், ஜெரோம் டெய்லர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் சர்ச்சை நீடிப்பதால் டிவைன் பிராவோ தொடக்க வீரராகக் களமிறங்கியுள்ளார்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/article6481396.ece

  • தொடங்கியவர்

சாமுவேல்ஸ் சரவெடியில் மே.இ.தீவுகள் 321 ரன்கள் குவிப்பு

 

கொச்சியில், இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையே நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா வெற்றி பெற 322 ரன்களை மே.இ.தீவுகள் இலக்காக நிர்ணயித்துள்ளது. அந்த அணியின் மார்லன் சாமுவேல்ஸ், சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. மோஹித் சர்மா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களோடு இந்தியா களமிறங்கியது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை.

தங்கள் ஆட்டத்தை நிதனாமாக தொடங்கிய மே.இ.தீவுகள் அணி, 8-வது ஓவரிலேயே துவக்க வீரர் டுவைன் பிராவோவை 17 ரன்களுக்கு இழந்தது. மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ஸ்மித் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து டேரன் பிராவோவும் 28 ரன்களுக்கு வெளியேற 23 ஓவர்கள் முடிவில் 122 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது.

 

இதற்குப் பின் களத்தில் இணைந்த சாமுவேல்ஸ் மற்றும் ராம்தின் இணை, இந்தியப் பந்துவீச்சை பயிற்சி ஆட்டம் போல கையாண்டது. சீராக ரன்கள் வர, மே.இ.தீவுகள் வலுவான ஸ்கோரை நோக்கி வேகநடை போட்டது. 48 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு சிக்ஸரை விளாசி சாமுவேல்ஸ் தனது அரை சதத்தைக் கடந்தார். ராம்தின் 52 பந்துகளில் அரை சதம் தொட்டார்.

23 ஓவர்கள் களத்தில் இருந்த இந்த இணை ஒரு ஓவருக்கு 7 ரன்களுக்கும் அதிகமாக அடித்து, 165 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர். முக்கியமாக பேட்டிங் பவர்ப்ளே (5) ஓவர்களில் 52 ரன்கள் சேர்ந்தது. ராம்தின் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அந்த நிலையில் மே.இ.தீவுகள் அணி வலுவான நிலையை எட்டியிருந்தது. ராம்தினை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மறுமுனையில் சாமுவேல்ஸ் மட்டும் தனது அதிரடியைத தொடர்ந்தார்.

50 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் அணி 321 ரன்களைக் குவித்திருந்தது. சாமுவேல்ஸ் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியத் தரப்பில் பந்துவீசிய மோஹித் சர்மா, ஷமி, மிஸ்ரா என அனைவரும் ஒரு ஓவருக்கு 7 ரன்களுக்கும் அதிகமாக வாரி வழங்கினர். இவர்களுக்கு மத்தியில் புவனேஸ்வர் குமார் மட்டுமே பொறுப்பாகப் பந்துவீசி, தனது 10 ஓவரகளில் 38 ரன்களை மட்டுமே வழங்கியிருந்தார்.

 

இந்த ஆட்டத்திற்கு முன்னர், இந்திய அணியில் சோதனை முயற்சிகள் செய்யப்படும் என்று கேப்டன் தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், புதிய முயற்சிகள் ஏதுமின்றி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கும் வாய்ப்பளிக்காமல் இந்திய அணி களமிறங்கியது. இது கிரிக்கெட் வல்லுநர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-321-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6481873.ece

  • தொடங்கியவர்

இந்திய அணிக்கு முதல் தோல்வி
அக்டோபர் 07, 2014.

கொச்சி: கொச்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி, கொச்சி நேரு மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டேரன் பிராவோ (28), ராம்தின் (61), சாமுவேல்ஸ் (126) கைகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (68) மட்டும் ஆறுதல் தந்தார். மற்றபடி, கோஹ்லி (2), தோனி (8), புவனேஷ்வர் (2), அமித் மிஸ்ரா (5) ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர்.

இந்திய அணி 41 ஓவரில் 197 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 124 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜடேஜா (33) அவுட்டாகாமல் இருந்தார்.

http://sports.dinamalar.com/2014/10/1412701619/indiawestindiesodikochicricket.html

 

  • தொடங்கியவர்

கொச்சி ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி

 

கொச்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பேட்டிங், பந்து வீச்சு இரண்டுமே மோசமாக, வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்தியா ஏ அணி, மனோஜ் திவாரி தலைமையில் இன்று ஆடும் வெஸ்ட் இண்டீஸை விடவும் பலமான அணியை 2 போட்டிகளிலும் வீழ்த்திக் காட்டிய பிறகு இந்திய சீனியர் அணி தோனி தலைமையில் படுதோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

321 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி சாமுயெல்சின் அபார சதத்தினால் குவித்த பிறகு உணவு இடைவேளை தறுவாயில் பிட்ச் மாறிவிட்டதோ என்ற சந்தேகம் தேவையில்லை. இந்திய பேட்டிங் முழுதும் தடுமாற்றமே. இலக்கைத் துரத்திய இந்திய அணி 55/1 என்ற நிலையிலிருந்து 41 ஓவர்களில் 197 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி தழுவியது.

 

ரஹானே, தவன் தொடங்க வெஸ்ட் இண்டீஸில் ரவி ராம்பால் மற்றும் டெய்லர் தொடங்கினர். ஆனால் 4வது ஓவரில்தான் முதல் பவுண்டரி வந்தது. ரஹானே புல்ஷாட் மூலம் முதல் பவுண்டரியை அடித்தார். அதே ஓவரில் மீண்டும் ஒரு பந்தை ரஹானே ஸ்கொயர் லெக் திசையில் புல் ஷாட் அடித்து இன்னொரு பவுண்டரி அடித்தார். பிறகே தவான் 5வது ஓவரில் ரவி ராம்பால் பந்தை பாயிண்டில் பவுண்டரி அடித்தார். மீண்டும் 6வது ஓவரில் ரஹானே, டெய்லர் பந்து வீச்சில் 2 பவுண்டரிகளை அடித்தார். 8வது ஓவரில் ஸ்கோர் 42/0 என்று இருந்தது.

 

மோசமான ரன் கணிப்பில் ரஹானே ரன் அவுட்:

9வது ஓவரில் ராம்பால் பந்தில் தவன் ஒரு பவுண்டரி அடிக்க, பிறகு 1 ரன் எடுக்க ஸ்ட்ரைக் ரஹானேயிடம் வந்தது. ரவிராம்பால் வீசிய பந்தை லெக் திசையில் தட்டி விட முதல் ரன்னை எடுத்தனர். ரஹானே 2வது ரன்னிற்காக வேகமாக வந்தார். ஆனால் ஷிகர் தவன் முதலில் வருவது போல் போக்குக் காட்டி பிறகு திரும்பிச் சென்றார். ஆனால் ரஹானே நிறுத்தாமல் ஓடி வர இருவரும் ஒரு முனையில் இருந்தனர். இதில் ரஹானே ரன் அவுட் ஆனார். இந்தியா 48/1 என்று இருந்தது. 22 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த ரஹானே நன்றாக ஆடி வந்த நிலையில் காமெடி ரன் அவுட் ஆனார்.

 

தொடரும் விராட் கோலியின் மோசமான ஆட்டம்:

ரஹானே காமெடி ரன் அவுட்டில் வெளியேற, விராட் கோலி களமிறங்கினார். 300 ரன்களுக்கும் அதிகமான ரன்களைத் துரத்துவதில் வல்லவர். 5 பந்துகளைச் சந்தித்து 2 ரன்னில் அவுட் ஆனார்.

ஜிம்மி ஆண்டர்சன் இங்கிலாந்து தொடரில் விராட் கோலியை நிறையவே சேதப்படுத்தியது அவர் அவுட் ஆன விதத்தில் தெரிந்தது. ஏற்கனவே கோலியைப் பார்த்தவுடன் வைடு ஸ்லிப் ஒன்றை நிறுத்தியிருந்தார் டிவைன் பிராவோ.

ஜெர்மி டெய்லர் ஒரு பந்தை சற்றே ஆங்கிளாக வீசி லெக் கட் செய்ய அது முழு லெக் கட்டாகமல் லேசாக நேரானது, பின்னால் சென்ற கோலி முன்னங்காலை சரியாகப் பயன்படுத்தாமல் மட்டையையும் நேராக வைக்காமல் சற்றே ஆங்கிளாகப் பிடித்து ஆட பந்து மட்டையின் விளிம்பில் பட்டு சாமியிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

55/1 என்று இருந்த இந்தியா இதன் பிறகு மடமடவென விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. தவான் மட்டுமே ஒரு முனையில் ஆடிவந்தார். அவரது இன்னிங்ஸும் முழு தன்னம்பிக்கையுடன் ஆடப்பட்டதாகத் தெரியவில்லை.

 

ராயுடுவும் தவனும் இணைந்து 55/2 என்ற நிலையிலிருந்து 16வது ஓவரில் ஸ்கோரை 82 ரன்களுக்கு உயர்த்தினர். 13 ரன்கள் எடுத்த ராயுடு, ரசல் பந்தை இறங்கி வந்து ஆடி மிட் ஆனில் கேட்ச் கொடுத்து பொறுப்பற்ற முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.

இது நடந்து 3 பந்துகளுக்குப் பிறகு இந்திய அணியின் ஆபத்பாந்தவனாகக் கருதப்பட்ட சுரேஷ் ரெய்னா ரன்னே எடுக்காமல் வெளியேற இந்தியாவின் வாய்ப்பில் இருள் விழுந்தது. டிவைன் பிராவோ ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஒரு சாதாரண பந்தை வீச மிகவும் சோம்பேறித்தனமாக அதை ரெய்னா ஆட பந்து மட்டையின் உள் விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். இந்தியா 16.2 ஓவர்களில் 83/4.

 

அதன் பிறகு தோனி, தவன் இணைந்து சுமார் 9 ஓவர்களை ஆடினர் ஆனால் வந்த ரன்களோ வெறும் 31 மட்டுமே. 21 பந்துகள் அறுவை ஆட்டம் ஆடிய தோனி 8 ரன்களை எடுத்து சாமி வீசிய அப்பாவி யார்க்கரில் பவுல்டு ஆனார். அது முழுமையான யார்க்கர் என்று கூட கூற இடமில்லை. புல்லர் லெந்த் அவ்வளவே. அதனை பிளிக் செய்ய நினைத்து, பிறகு தடுத்தாட நினைத்து பவுல்டு ஆனார் தோனி.

பிறகு 92 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த ஷிகர் தவன் சாமுயெல்ஸ் வீசிய பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்று பவுல்டு ஆனார்.

புவனேஷ் குமாருக்கும் அருமையான ஒரு பிளைட்டட் பந்தை வீசிய சாமுயெல்ஸ் அவரையும் வீழ்த்தினார். அமித் மிஸ்ராவை 5 ரன்னில் டிவைன் பிராவோ வீழ்த்த மோகித் சர்மாவை 8 ரன்னில் ரவி ராம்பால் வீழ்த்தினார். 36வது ஓவரில் இந்தியா 155/9.

 

ஜடேஜா, மொகமது ஷமி அதிரடி:

கடைசியில் ஜோடி சேர்ந்த ஜடேஜா, ஷமி, சில ஷாட்களை ஆடினர். ரசிகர்களை குஷிப்படுத்தும் ஆட்டமே அது. மற்றபடி வெற்றி பெற ஓவருக்கு 13 ரன்களுக்கும் மேல் தேவைப்படும் நேரத்திற்கான போராட்ட இன்னிங்ஸ் என்றெல்லாம் கூற முடியாது.

இருவரும் இணைந்து 5 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தனர். ஜடேஜா 36 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். மொகமது ஷமி 17 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 19 ரன்கள் எடுத்து ரவி ராம்பால் பந்தில் கடைசியாக பவுல்டு ஆக இந்தியா 41 ஓவர்களில் 197 ரன்களுக்குச் சுருண்டு 124 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வி கண்டது இந்தியா.

 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ராம்பால், டிவைன் பிராவோ, சாமுயெல்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த டெய்லர், ரசல், சாமி ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்தியா ஏ-யிடம் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி தோனி தலைமையிலான இந்திய அணிக்குச் சரியான பதிலடி அதிர்ச்சி மருத்துவம் அளித்துள்ளது.

இந்தியப் பந்து வீச்சை பதம் பார்த்த சாமுயெல்ஸ்:

முன்னதாக, இந்தியா வெற்றி பெற 322 ரன்களை மே.இ.தீவுகள் இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியின் மார்லன் சாமுவேல்ஸ், சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. மோஹித் சர்மா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களோடு இந்தியா களமிறங்கியது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை.

தங்கள் ஆட்டத்தை நிதனாமாக தொடங்கிய மே.இ.தீவுகள் அணி, 8-வது ஓவரிலேயே துவக்க வீரர் டுவைன் பிராவோவை 17 ரன்களுக்கு இழந்தது. மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ஸ்மித் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து டேரன் பிராவோவும் 28 ரன்களுக்கு வெளியேற 23 ஓவர்கள் முடிவில் 122 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது.

 

இதற்குப் பின் களத்தில் இணைந்த சாமுவேல்ஸ் மற்றும் ராம்தின் இணை, இந்தியப் பந்துவீச்சை பயிற்சி ஆட்டம் போல கையாண்டது. சீராக ரன்கள் வர, மே.இ.தீவுகள் வலுவான ஸ்கோரை நோக்கி வேகநடை போட்டது. 48 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு சிக்ஸரை விளாசி சாமுவேல்ஸ் தனது அரை சதத்தைக் கடந்தார். ராம்தின் 52 பந்துகளில் அரை சதம் தொட்டார்.

 

23 ஓவர்கள் களத்தில் இருந்த இந்த இணை ஒரு ஓவருக்கு 7 ரன்களுக்கும் அதிகமாக அடித்து, 165 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர். முக்கியமாக பேட்டிங் பவர்ப்ளே (5) ஓவர்களில் 52 ரன்கள் சேர்ந்தது. ராம்தின் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அந்த நிலையில் மே.இ.தீவுகள் அணி வலுவான நிலையை எட்டியிருந்தது. ராம்தினை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மறுமுனையில் சாமுவேல்ஸ் மட்டும் தனது அதிரடியைத தொடர்ந்தார்.

50 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் அணி 321 ரன்களைக் குவித்திருந்தது. சாமுவேல்ஸ் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியத் தரப்பில் பந்துவீசிய மோஹித் சர்மா, ஷமி, மிஸ்ரா என அனைவரும் ஒரு ஓவருக்கு 7 ரன்களுக்கும் அதிகமாக வாரி வழங்கினர். இவர்களுக்கு மத்தியில் புவனேஸ்வர் குமார் மட்டுமே பொறுப்பாகப் பந்துவீசி, தனது 10 ஓவரகளில் 38 ரன்களை மட்டுமே வழங்கியிருந்தார்.

 

இந்த ஆட்டத்திற்கு முன்னர், இந்திய அணியில் சோதனை முயற்சிகள் செய்யப்படும் என்று கேப்டன் தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், புதிய முயற்சிகள் ஏதுமின்றி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கும் வாய்ப்பளிக்காமல் இந்திய அணி களமிறங்கியது. இது கிரிக்கெட் வல்லுநர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6481873.ece

 

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

தோல்விக்கு காரணங்களும் திரும்பத் திரும்பப் பேசும் தோனியும் - ஓர் அலசல்

.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்ததையடுத்து அதற்கான காரணத்தை தோனி 'கண்டுபிடித்துள்ளார்.'

அதாவது விக்கெட்டுகளை மடமடவென இழந்ததால் தோல்வி என்ற தனது ‘கண்டுபிடிப்பை’ அவர் வெளியிட்டுள்ளார்.

"320 ரன்களைத் துரத்தும் போது விரைவாக விக்கெட்டுகளை இழந்தால் பேட்ஸ்மென்களுக்கு கடினமாகப் போய்விடும். அடுத்தடுத்து குறைந்த இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். ஜோடி சேர்ந்து நிலைத்து ஆடி ரன்களைச் சேர்ப்பது முக்கியம்.

தொடக்கம் நன்றாகவே இருந்தது. அஜிங்கிய ரஹானேயின் ரன் அவுட்டிற்குப் பிறகு விக்கெட்டுகள் சரிவதை நிறுத்த முடியவில்லை” என்று போட்டியை பார்த்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றை ‘கண்டுபிடிப்பு’ போல் வெளியிட்டுள்ளார் தோனி.

அனைத்தையும் விட விசித்திரமானது, இந்திய 'பவுலர்கள் ஓரளவுக்கு டீசண்டாக வீசினர்' என்று அவர் கூறியிருப்பது:

 

“கொச்சி ஆட்டக்களம் பேட்டிங் களமாகும். ஸ்பின் பந்து வீச்சில் பந்துகள் திரும்பவில்லை. புவனேஷ் தவிர மீதி பவுலர்கள் ரன்களை கூடுதலாக வழங்கினர். இந்தப் பிட்சில் 320 ரன்கள் என்பது பவுலர்கள் ஓரளவுக்கு டீசண்டாக வீசியதையே உணர்த்துகிறது.

இறுதி ஓவர்களில் பவுலர்கள் சிறப்பாகவே வீசினர். மைதானம் பெரிதானதல்ல, இதில் 320-325 என்ற இலக்கு பெரிதல்ல” என்றார்.

ஏன் பேட்டிங் சரிவு ஏற்பட்டது என்பதைத்தான் ஒரு கேப்டன் கூற வேண்டும், ஆனால் அவரோ விரைவாக விக்கெட்டுகள் விழுந்ததால் தோல்வியடைந்தோம் என்கிறார். இதைத்தான் போட்டியைப் பார்த்த அனைவரும் அறிவார்களே?

320 ரன்கள் ஒரு இலக்கேயல்ல எனும்போது, பிட்ச் பேட்டிங்கிற்குச் சாதகம் என்று அவரே கூறும்போது, பேட்ஸ்மென்கள் ஏன் சொதப்பினர் என்பதற்கான காரணத்தை அல்லவா அவர் கூறியிருக்க வேண்டும்? டேரன் சாமியின் ஒன்றுமேயில்லாத நேர் பந்துக்கு தோனியே பவுல்டு ஆகி வெளியேறினார். மர்லான் சாமுயெல்ஸ் நேர் பந்துகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். கோலி மிகச்சாதாரணமான ஒரு லெக் கட்டர் பந்தில் வெளியேறுகிறார். ரெய்னா நல்ல பார்மில் இருக்கும் போதே தாமதமாக மட்டையை பந்தருகேக் கொண்டு வந்து, உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆகிறார்.

 

ராயுடு நிலைத்து ஆடி பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த வேண்டிய நேரத்தில் ஆந்த்ரே ரசல் பந்தை மேலேறி வந்து தூக்கி அடித்து அவுட் ஆகிறார்.

321 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது ஒரு கேப்டனாக அணி வீரர்களுக்கு என்ன உத்தியக் கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி தோனி கூறியது என்ன? நடந்தது என்ன? என்பதையல்லவா அவர் விளக்கியிருக்க வேண்டும்?

மைதானம் சிறியது, பேட்டிங் பிட்ச் என்றால் டாஸ் வென்று முதலில் பேட் செய்திருக்க வேண்டியதுதானே? அந்த விதத்தில் எதிரணியை பேட் செய்ய அழைத்தது தவறு என்பதை ஒப்புக் கொள்வதிலும் தோனிக்கு பிரச்சினைகள் உள்ளன போலும்.

இறுதி ஓவர்களில் ஓரளவுக்கு சிக்கனம் காட்டினோம் என்கிறார். சிக்கனப் படுத்தியுமே கடைசி 10 ஓவர்களில் 81 ரன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கடைசி 15 ஓவர்களில் 133 ரன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஓவருக்கு 9 ரன்கள் பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி ‘டீசண்ட்’ பவுலிங் ஆகும்?

ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் ஒப்பேற்றும் விதமாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறார் தோனி. முன்பெல்லாம் போட்டிகளை நேரிலோ, தொலைக்காட்சியிலோ காண முடியாது. அதனால் ஒப்பேற்றும் பதில்களே ஏதோ உண்மையான பதில்களாக ரசிகர்களுக்குத் தெரியக்கூடும். இப்போது அனைத்தும் வெட்ட வெளிச்சமாக உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் ஒரு கேப்டன் தோல்வியை அறுதியிடுவதில் எவ்வளவு கறாராக இருக்க வேண்டும்? ஆனால் நம்மவர் ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.

 

இந்தத் தொடரில் புதிதானவற்றை பரிசோதனை செய்வேன் என்றார், பந்து வீச்சு மாற்றம், கள அமைப்பு, பேட்டிங் வரிசை என்று எதிலும் அவர் எந்த விதப் பரிசோதனையையும் மேற்கொள்ளவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டிற்கு புதிதாக வந்திருக்கும் குல்தீப் யாதவ் என்ற இடது கை லெக்ஸ்பின்/கூக்ளி பவுலருக்கு வாய்ப்பளிக்கும் ஒரு சிறிய சோதனை முயற்சியைக் கூட தோனி செய்யவில்லை.

பந்து வீச்சு நன்றாக இருந்தது அதனால் 321 ரன்களுக்கு மே.இ.தீவுகளை மட்டுப்படுத்தினோம், பேட்டிங்கில் மளமளவென விக்கெட்டுகள் விழுந்தது, ஆனால் இது பேட்டிங் பிட்ச் இப்படி முரண்படும் கூற்றுகளைக் கூறி சாமர்த்தியமாக ஒப்பேற்றி வருகிறார் தோனி.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/article6485023.ece

  • தொடங்கியவர்

இந்திய அணியில் இஷாந்த் சர்மா
அக்டோபர் 10, 2014.

மும்பை: கொச்சி ஒருநாள் போட்டியில் காயமடைந்த மோகித் சர்மாவுக்குப் பதில், இஷாந்த் சர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. கொச்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்று, 1–0 என, தொடரில் முன்னிலையில் உள்ளது.

 

இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா, 26, மொத்தம் 9 ஓவர்கள் பவுலிங் செய்து, 61 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. இதனிடையே, கொச்சி போட்டியில் மோகித் சர்மா காயத்தால் அவதிப்பட்டார். இதனால், இவருக்குப் பதில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 26, இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

கடைசியாக கடந்த 2014, ஜன.,22ல் நியூசிலாந்துக்கு எதிரான ஹாமில்டன் ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதன் பின், வங்கதேச தொடர், ஆசிய கோப்பை மற்றும் சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் இஷாந்த் சேர்க்கப்படாமல் இருந்தார்.

தற்போது, 9 மாதங்களுக்குப் பின் இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார். நாளை டில்லியில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இஷாந்த், பங்கேற்கவுள்ளார்.

 

http://sports.dinamalar.com/2014/10/1412921020/ishantsharmaindiaODIwestindies.html

 

  • தொடங்கியவர்

கோலி, ரெய்னா, தோனி அரைசதங்களில் இந்தியா 263 ரன்கள்

 

டெல்லியில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசி ஓவரை ஜெரோம் டெய்லர் வீச முதலில் புல் ஷாட்டில் 2 ரன் எடுத்த தோனி, அடுத்த ஓவர் பிட்ச் பந்தை லாங் ஆனில் மிகப்பெரிய சிக்சருக்குத் தூக்கி அடித்தார். பிறகு அடுத்த பந்து எழும்பி வர அதனை ஹூக் செய்து பைன் லெக் திசையில் பவுண்டரி அடித்து அரை சதம் கண்டார்.

மொத்தம் 40 பந்துகளைச் சந்தித்த தோனி 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

முன்னதாக 72/3 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த ரெயனா, கோலி அரைசதம் எடுத்ததோடு 4வது விக்கெட்டுக்காக 105 ரன்களைச் சேர்த்தனர். இருவருமே 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

 

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெரோம் டெய்லர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் பிட்சில் 263 ரன்களைத் துரத்துவது கடினம் என்றே தெரிகிறது. ஆனால் இந்திய பந்து வீச்சு...?

தொடக்கத்தில் ஷிகர் தவன், ரஹானே எச்சரிக்கையுடன் ஆடினர். இதனை எச்சரிக்கை என்பதை விட கடந்த ஆட்டத்தின் தோல்வியின் எதிரொலியால் விளைந்த தேவையற்ற தயக்கமாகவே தெரிந்தது. 9 பந்துகளைச் சந்தித்த தவன் 1 ரன்னை மட்டுமே எடுத்து சுத்தமாக ஆடும் மனநிலையில் இல்லாதது போல் தென்பட்டார். அப்போதுதான் டெய்லர் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் செய்து உள்ளே கட் செய்தார் மட்டைக்கும், பேடிற்கும் இடையே இடைவெளியுடன் ஆடிய தவான் பந்தை தடுக்க முடியவில்லை பவுல்டு ஆனது.

அதன் பிறகு ராயுடு களமிறக்கப்பட்டார். கோலி அல்ல. ராயுடுவும், ரஹானேயும் இணைந்தனர். ராயுடு, ரவி ராம்பால் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். அடுத்த பவுண்டரி 9வது ஓவரில்தான் வந்தது. ராம்பால் பந்தை ரஹானே தனது முதல் பவுண்டரியாக அடித்தார். 10 ஓவர்களில் 37 ரன்களே வந்தது. அதோடு ரஹானே சரி. 12 ரன்கள் எடுத்து டேரன் சாமி வீசிய மெதுபந்தை கணிக்காமல் டிரைவ் ஆடி கவர் திசையில் ஸ்கூப் செய்து அவுட் ஆனார். ராயுடு கோலி இணைந்தனர். ஸ்கோர் 72 ரன்களை எட்டிய போது ராயுடு 32 ரன்கள் எடுத்த நிலையில் சுலைமான் பென் வீசிய இடது கை ஸ்பின் பந்து சற்றே திரும்ப எட்ஜ் செய்து சிக்கினார்.

 

72/3 என்ற நிலையில் கோலி, ரெய்னா இணைந்தனர். கோலி டெய்லரை அபாரமான 2 பவுண்டரிகள் அடித்தார். இரண்டாவது பவுண்டரி அபாரமான பிளேஸ்மெண்ட். மிட் ஆனுக்கும் மிட் விக்கெட்டுக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியில் பந்தை செலுத்தி அடித்தார். டிவைன் பிராவோவை கவர் திசையில் பவுண்டரி அடித்து ரெய்னா தனது பவுண்டரி கணக்கைத் தொடங்கினார்.

இடையில் தேவையில்லாமல் கோலி, சாமுயெல்ஸிற்கு ஒரு மைடன் ஓவர் விட்டுக் கொடுத்தார். ரெய்னா 14 ரன்களில் இருந்த போது சாமுயெல்ஸ் பந்தை கவர் திசையில் காற்றில் ஆட டிவைன் பிராவொ இடது புறம் இருகைகளை நீட்டிய படி பாய்ந்தார் ஆனால் கேட்ச் பிடிக்க முடியவில்லை. பிறகு பிராவோவை 2 பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்தார்.

 

இருவரும் பிறகு நிதானமாக, அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்துக் கொண்டு சென்றனர். 32வது ஓவரில் பென் பந்தை மேலேறி வந்து டீப் மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்சர் அடித்தார் ரெய்னா. பிறகு ரவி ராம்பால் பந்தை எக்ஸ்ட்ரா கவரில் அடித்த சிக்ஸர் அபாரம். இதன் மூலம் இருவரும் 100 ரன்களைச் சேர்த்தனர்.

இருவரும் 62 ரன்களில் சிறைய இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பவர் பிளேயில் 29 ரன்களையே எடுக்க முடிந்தது. கோலி பவர் பிளே முடிந்த நிலையில் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 6 ரன்கள் எடுத்து டெய்லரின் வேக-மெது ஆஃப் ஸ்பின் பந்தில் பவுல்டு ஆனார். தோனி இருந்ததால் கடைசி 5 ஓவர்களில் 44 ரன்கள் எடுக்க முடிந்தது. தோனி தன் பாணியில் நிதானமாகத் தொடங்கி கடைசியில் 40 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து இந்தப் பிட்சில் வெற்றிக்கான ஸ்கோரை இலக்காக நிர்ணயித்துள்ளார். ஆனாலும் 10 அல்லது 15 ரன்கள் இந்தியா குறைவாக எடுத்துள்ளதாகவே தெரிகிறது.

மேற்கிந்திய அணியில் டேரன் பிராவோ, டிவைன் ஸ்மித் களமிறங்கியுள்ளனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-263-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6491976.ece

 

  • தொடங்கியவர்

ஷமி, ஜடேஜா அபாரப் பந்து வீச்சில் இந்தியா பதிலடி வெற்றி

 

டெல்லியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

பேட்டிங்கில் கோலி, ரெய்னா, கடைசியில் தோனி ஆகியோர் அரைசதங்கள் எடுக்க பந்து வீச்சில் மொகமது ஷமி 4 விக்கெட்டுகளை மீண்டும் கைப்பற்ற ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியா ஒரு மிகச்சிறந்த வெற்றியச் சாதித்தது.

மொகமது ஷமி 9.3 ஓவர்கள் வீசி 36 ரன்களுக்கு 4 விக்கெடுகளைக் கைப்பற்றியது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பந்து வீச்சாக அமைந்தது.

வெற்றி பெற 264 ரன்கள் தேவை என்று களமிறங்கிய மேற்கிந்திய அணியின் வெற்றிப்பாதை 35 ஓவர்கள் வரை அபாரமாகவே இருந்தது. அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை அந்த நிலையில் எடுத்திருந்தது. அதன் பிறகு 45 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களுக்கு 46.3 ஓவர்களில் சுருண்டு தோல்வி தழுவியது.

ஆனால் மொகமது ஷமி, ஜடேஜா தங்களிடையே 6 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொள்ள அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் ஆகியோரும் சிக்கனமாக வீசினர். இதனால் மேற்கிந்திய அணி விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

 

தோனியின் கள அமைப்பில் பெரும் முன்னேற்றம் தெரிந்தது. ஜடேஜா, மிஸ்ராவை வீச அழைத்த போது நெருக்கமாக பீல்டிங்குகளை அமைத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றும் தீவிரத்தை வெளிப்படுத்தினார். விக்கெட்டுகளை வீழ்த்தும் அவரது தீவிர கள அமைப்பினால்தான் மேற்கிந்திய அணியின் பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. அடித்து ஆடுவதா, இல்லை சிங்கிள், இரண்டு என்று எடுத்து படிப்படியாக முன்னேறுவதா என்ற குழப்பம் தோன்றியது.

கடந்த போட்டியில் தோனியிடம் இத்தகைய அணுகுமுறை இல்லை. இதனால் பவுலர்களும் ரன்களைக் கசிய விட்டனர். அபாரமாக ஆடி ஏறக்குறைய தனது 97 பந்துகளில் 97 ரன்கள் மூலம் டிவைன் ஸ்மித் மேற்கிந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் நிலையில் பவர் பிளேயின் முதல் ஓவரிலேயே மொகமது ஷமியை தோனி பந்து வீச அழைக்க அபாரமான யார்க்கரில் ஸ்மித் பவுல்டு ஆனார். அதிலிருந்து சரிவு ஏற்படத் தொடங்கியது.

 

ஆனால் அபாய வீரர் சாமுயெல்ஸ் களத்தில் இருந்தார். ராம்தின், டிவைன் பிராவோ, ரசல், டேரன் சாமி, ரவி ராம்பால், ஜெர்மி டெய்லர் என அனைவரும் பேட்டிங் செய்யக்கூடியவர்கள்தான். அதிரடி ஆட்டம் ஆடக்கூடியவர்கள்தான், இவர்களும் இருந்தனர்.

ஆனால் சாமுயெல்ஸ் இன்று கட்டிப்போடப்பட்டார். 38 பந்துகளில் 1 சிக்சருடன் அவர் 16 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் வீசிய ஷாட் பிட்ச் பந்தை ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முயன்றார் ஆனால் பந்து பாயிண்ட் திசையில் கோலி கையில் கேட்ச் ஆனது.

தினேஷ் ராம்தின் 3 ரன்களில் அமித் மிஸ்ரா பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு 43வது ஓவரில் ஜடேஜா, ஆந்த்ரே ரசலை ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தினார். தோனி அதி அற்புதமாக ஸ்டம்பிங் செய்தார். பிளாஷ் ஸ்டம்பிங் அது. லேசாகக் காலை மட்டும் தூக்கியிருந்தார் ரசல், அதற்குள் பைலைத் தட்டி விட்டார் தோனி.

அதே ஓவரின் கடைசி பந்தில் டேரன் சாமி ஆக்ரோஷமான ஷாட் ஆட நினைத்து பந்தை கோட்டைவிட்டு பவுல்டு ஆனார். டிவைன் பிராவோ 10 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி பந்தை நேராக லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். டெய்லர் லாங் ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஜடேஜாவிடம் வீழ்ந்தார். கடைசியில் ரவிராம்பால் விக்கெட்டை ஷமி தானே கேட்ச் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற தோனி வெற்றிப் பெருமிதத்தில் எம்பிக் குதித்தார்.

 

முன்னதாக டேரன் பிராவோ, ஸ்மித் இணைந்து தொடக்க விக்கெட்டுக்காக 64 ரன்களை 13 ஓவர்களில் சேர்த்தனர். டேரன் பிராவோ 26 ரன்கள் எடுத்து ஷமியின் அபாரமான ஆங்கிள் பந்துக்கு பவுல்டு ஆனார். ஆனால் கெய்ரன் பொலார்ட் களமிறங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அவர் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 50 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து, இவரும் ஸ்மித்தும் இணைந்து 2வது விக்கெட்டுக்காக 15 ஓவர்களில் 72 ரன்ளைச் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பொலார்ட், மிஸ்ரா பந்தில் அவுட் ஆனதும் ஒரு திருப்பு முனை. இவர் ஆட்டமிழந்த பிறகு 7 ஓவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வறட்சியாக அமைந்தது. 34 ரன்கள்தான் வந்தது. 170 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் 15 ஓவர்களில் வெற்றி பெற 94 ரன்களே தேவை என்று பலமாகச் சென்று கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் ஷமியின் யார்க்கர் வேலையைக் காட்ட ஸ்மித் வெளியேற ஆட்டம் அப்படியே இந்தியாப் பக்கம் சாய்ந்தது.

கடந்த போட்டியை விட பந்துவீச்சு மாற்றம், பேட்டிங் வரிசையில் மாற்றம், கள அமைப்பில் விக்கெட்டுகள் எடுக்கும் அவசியத்தின் தீவிரம் என்று தோனியின் அணுகுமுறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது.

 

ஷமி 2வது போட்டியில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பாசிடிவ்வாக டாஸ் வென்று பேட் செய்ய முடிவெடுத்ததும் வெற்றிக்கு ஒரு காரணம்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6492113.ece

 

  • தொடங்கியவர்

இந்திய - மேற்கிந்திய 3 ஆவது ஒருநாள் போட்டி சூறாவளி அச்சத்தால் ரத்து
2014-10-12 21:30:29

இந்திய அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டி ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டண நகரத்தில் நடைபெறவிருந்தது. ஆனால், இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தில் சூறாவளி தாக்கக்கூடும் எனக் கருதப்படுவதால் இப்போட்டியை ரத்துச் செய்வதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இரு அணிகளும் 1:1 விகிதத்தில் சமநிலையில் உள்ளன. 4  ஆவது போட்டி எதிர்வரும்  17 ஆம் திகதி ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள தர்மசாலா நகரில் நடைபெறவுள்ளது.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7253#sthash.s8sNBiux.dpuf

  • தொடங்கியவர்

இந்தியாவின் வெற்றி தொடருமா: இன்று வெ.இண்டீசுடன் மோதல்

அக்டோபர் 16, 2014.

தரம்சாலா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி இன்று தரம்சாலாவில் நடக்கிறது. டில்லியில் திடீரென எழுச்சி பெற்று அசத்திய இந்திய அணி, மீண்டும் வெற்றி நடையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு போட்டிகள் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என, சமனில் உள்ளது.

மூன்றாவது போட்டி (விசாகப்பட்டினம்), புயல் காரணமாக ரத்தானது. நான்காவது போட்டி இன்று தரம்சாலாவில் நடக்கிறது.

டில்லியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், 41வது ஓவருக்குப் பிறகு ஆடுகளத்தில் திருப்பம் ஏற்பட, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா மிரட்டினர்.

கடைசி 8 விக்கெட்டுகளை 45 ரன்னுக்கு வெஸ்ட் இண்டீஸ் இழக்க, இந்திய அணி திடீர் வெற்றி பெற்றது. இதுபோல, தரம்சாலாவில் நடக்குமா எனத் தெரியவில்லை.

மலைகள் சூழ்ந்த தரம்சாலாவில் அவ்வப்போது மழை பெய்வதால், ஈரப்பதமான சூழல் காணப்படும். இது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

இங்கிலாந்துக்கு எதிராக இங்கு விளையாடிய போட்டியில் (2013) முதலில் களமிறங்கிய இந்திய அணி 79 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கோஹ்லி நம்பிக்கை:

இம்முறை துவக்க வீரர்கள் ரகானே, ஷிகர் தவான் அடுத்து வரும் விராத் கோஹ்லி, அம்பதி ராயுடு, ரெய்னா உள்ளிட்டோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரன்குவிக்க வேண்டும். கோஹ்லி கடந்த போட்டியில் இழந்த ‘பார்மை’ மீட்டது ஆறுதல்.

பவுலிங் எப்படி:

ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது என, பராமரிப்பாளர் சுனில் சவுகான் உறுதி தந்துள்ளார். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவுடன், இஷாந்த் என, நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெறலாம்.

அமித் மிஸ்ராவுக்கு இன்று ஓய்வு கிடைக்கும். தவிர, சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் படேல், குல்தீப் யாதவுக்கும் இடம் கிடைப்பது சிரமம் தான்.

அசத்தல் துவக்கம்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டுவைன் ஸ்மித், சாமுவேல்ஸ் முதல் இரு போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை கொடுத்தனர். இருப்பினும், அறிமுகமற்ற இந்த ஆடுகளத்தில் கேப்டன் பிராவோ, போலார்டு ராம்தின் போன்றோர் என்ன செய்யப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பவுலிங்கில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜெரோம் டெய்லர், கீமர் ரோச், ராம்பால் அடங்கிய கூட்டணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைகொடுக்க காத்திருக்கிறது.

மழை வருமா

தரம்சாலாவில் வானம் இன்று தெளிவாகக் காணப்படும். வெப்பநிலை குறைந்தபட்சம் 8, அதிகபட்சம் 21 டிகிரி செல்சியஸ் இருக்கும். இன்று மழை வரும் வாய்ப்பு இல்லை.

http://sports.dinamalar.com/2014/10/1413479599/dhoniindiacricket.html

  • தொடங்கியவர்

விராட் கோலி அதிரடி சதம்: 330 ரன்கள் குவித்தது இந்தியா

தரம்சலாவில் சர்ச்சைகளுக்கிடையே, இத்தொடரில் நடைபெறும் 'கடைசி' ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது.

விராட் கோலி 114 பந்துகளில் 13 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 127 ரன்கள் எடுத்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். விராட் கோலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதம் எடுத்துள்ளார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவரது 20-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி 10 ஓவர்களில் 94 ரன்கள் விளாசப்பட்டது.

36-வது ஓவர் முதல் 40 ஓவர்கள் வரையிலான பவர் பிளேயில் ரெய்னா, கோலி ஜோடி ஆட்டமிழக்காமல் 49 ரன்களை விளாசினர். ஆக மொத்தம் கடைசி 15 ஓவர்களில் 143 ரன்கள் விளாசி எடுக்கப்பட்டது.

 

தொடக்கத்தில் தவன் அதிரடி ஆட்டம் ஆடி 35 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து ஆந்த்ரே ரசல் வீசிய 136 கிமீ வேக பவுன்சரை டீப் ஸ்கொயர் லெக் திசையில் டேரன் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டெய்லரின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி அபாயகரமாக ஆடினார் தவன். ஆனால் அரைசதம் எடுக்கும் முன்பு ஹூக் செய்ய முயன்று அவுட் ஆனார். தொடக்க விக்கெட்டுக்காக தவன், ரஹானே ஜோடி 70 ரன்களைச் சேர்த்தனர்.

மேற்கிந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஷாட் பிட்ச் பந்துகளை அதிகம் வீசி இந்திய பேட்ஸ்மென்களை திணறச் செய்ய முயன்றனர். ஆனால் அனைத்து ஷாட் பிட்ச் பந்துகளும் பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறந்தது. கவனச் சிதறல் ஏற்பட்ட ஒரு தருணத்தில்தான் தவன் ஹூக் ஷாட்டில் அவுட் ஆனார்.

 

ரஹானே, கோலி 72 ரன்களை சேர்த்த நிலையில் 68 ரன்கள் எடுத்த ரஹானே, சுலைமான் பென் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். வெளியே பிட்ச் ஆன பந்து, ஸ்வீப் செய்தார் ரஹானே, பந்து மட்டையில் சிக்காமல் பேடில் பட்டது. பந்து மேலும் வெளியேதான் செல்கிறது. ஆனால் தொடர்ந்து முறையீடு செய்து நடுவரை நெருக்கடிக்குள்ளாக்கி அவுட் வாங்கினார் பென்.

ரஹானேவுக்கும் ஏகப்பட்ட ஷாட் பிட்ச் பந்துகள் வீசப்பட்டன. அனைத்தும் பவுண்டரி விளாசப்பட்டது.

கோலியும் ரெய்னாவும் இணைந்தனர். இந்திய இன்னிங்ஸில் ரன் மழை பொழிந்த நேரம் ஆக அது அமைந்தது. ரெய்னா விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல் ஆடினார். ஷாட் பிட்ச் பந்துகள் இவருக்கும் வீசப்பட்டன இவரும் விளாசித் தள்ளினார். சாமுயெல்ஸ் வீசிய பந்தை மேலேறி வந்து லாங் ஆனில் சிக்ஸ் அடித்து சிக்சர் கணக்கைத் தொடங்கினார் ரெய்னா. மீண்டும் சாமுயெல்ஸ் பந்தை நேராக ஒரு சிக்சர் அடித்தார்.

 

அதன் பிறகு 38வது ஓவரில் டெய்லர் வீசிய அருமையான குட் லெந்த் பந்து ஒன்றை, தடுத்தாடப்படவேண்டிய பந்தை, அபாரமாக லாங் ஆஃப் திசையில் சிக்ஸ் அடித்தார் கோலி, இது நம்ப முடியாத ஷாட்டாக அமைந்தது. இதே டெய்லர் மீண்டும் அரைக்குழியில் ஒரு பந்தை பிட்ச் செய்ய இம்முறை ரெய்னா ‘இனி போடாதே’ என்பது போல் ஒரே அடி அடித்து சிக்சருக்கு விரட்டினார். இப்படியாக பவர் பிளேயில் இருவரும் 49 ரன்களை விளாசினர்.

43வது ஓவரில் ரெய்னா, டிவைன் பிராவோ ஓவரில் தாண்டவமாடினார். 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அந்த ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்டது. இதில் ரெய்னா ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் மற்றும் 1 ரன் எடுக்க விராட் கோலி மீதமுள்ள பந்தில் மேலும் 2 பவுண்டரிகளை விளாசினார்.

 

58 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்சர்களுடன் ரெய்னா 71 ரன்கள் எடுத்து எட்ஜில் அவுட் ஆகி வெளியேறினார் ரெய்னா. தோனி களமிறங்கினார். அவருக்கு ஒரு கேட்சை கோட்டை விட்டனர். ஆனால் 6 ரன்களில் பொலார்டின் அபாரமான பீல்டிங்கிற்கு தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதற்குள் கோலி டெய்லர் பந்தை பிளிக் செய்து 101 பந்துகளில் தனது 20வது ஒருநாள் சதத்தை எடுத்தார்.

தோனி ஆட்டமிழந்த பிறகு ஜடேஜாவும் (2) நீடிக்கவில்லை. இந்தியா கோலியின் நீடித்த ஆட்டத்தினால் 330 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தரப்பில் சுலைமான் பென் தவிர அனைத்து பவுலர்களும் ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் கொடுத்தனர். ஜேசன் ஹோல்டர் ஓவருக்கு 5.77 ரன்கள்தான் கொடுத்தார். பென் 8 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

சர்ச்சைகளினால் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாத மேற்கிந்திய அணியின் பந்து வீச்சும் பீல்டிங்கும் மோசமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-330-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6511576.ece

  • தொடங்கியவர்

சாமுயெல்ஸ் சதம் வீண்: அக்‌ஷர் படேல், புவனேஷ் அபாரம்; இந்தியா வெற்றி

 

தரம்சலாவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

இடையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் தொடரைக் கைவிடுவதாக தங்கள் தரப்பில் தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தது குழப்பத்தை விளைவித்துள்ளது. ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் தொலைக்காட்சியில் இந்தியா தொடரை 2-1 என்று வென்றதாகவே காண்பிக்கப்பட்டது.

331 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய மேற்கிந்திய அணியில் மர்லான் சாமுயெல்ஸ் அபாரமாக விளையாடி 112 ரன்களை எடுத்தாலும் அந்த அணி 48.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி கண்டது.

 

தொடக்கத்தில் புவனேஷ், உமேஷ் யாதவ் மேற்கிந்திய அணியின் ரன்களை முடக்கினர். 11 ஓவர்களில் மே.இ.தீவுகள் 27 ரன்களை மட்டுமே எடுத்து டிவைன் ஸ்மித், பொலார்ட் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

டேரன் பிராவோ, சாமுயெல்ஸ் இணைந்து ஸ்கோரை 83 ரன்களுக்கு உயர்த்தினர். ஆனாலும் 56 ரன்களை இருவரும் 9 ஓவர்களிலேயே எடுக்க முடிந்தது. டேரன் பிராவோ 40 ரன்கள் எடுத்து அக்‌ஷர் படேலின் அட்டகாசமான பந்துக்கு பவுல்டு ஆனார்.

ஆட்டத்தின் 28வது ஓவரில் ரவீந்தர் ஜடேஜா ராம்தின் (9), டிவைன் பிராவோ (0) விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் மேற்கிந்திய அணி பின்னடைவைச் சந்தித்தது. 28வது ஓவரில் அந்த அணி 121/5 என்று சரிவு கண்டது. சமியும் சாமுயெல்ஸும் இணைந்து ஸ்கோரை 165 ரன்களுக்கு உயர்த்திய போது 16 ரன்கள் எடுத்த சாமியை அக்‌ஷர் படேல் மீண்டும் ஒரு அசத்தல் பந்தில் தானே கேட்ச் பிடித்த் வீழ்த்தினார்.

 

அதன் பிறகுதான் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தொடங்கியது, ஆந்த்ரே ரசல் களமிறங்கி காட்டு காட்டென்று காட்டினார். அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்களை எடுக்க, ஜடேஜா வாங்கிக் கட்டிக் கொண்டார். இருவரும் ஜடேஜாவை சாத்தி எடுத்தனர். அதனால் 39 பந்துகளில் 57 ரன்கள் விளாசப்பட்டது. 41வது ஓவரில் 222 ரன்களை எட்டியபோது ஆந்த்ரே ரசலை, உமேஷ் யாதவ் பவுல்டு செய்தார்.

அதன் பிறகே சாமுயெல்ஸிற்கு பக்கபலமாக விளையாட வீரர்கள் இல்லை. சாமுயெல்ஸ் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 106 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து கடைசியாக ஷமி பந்தில் பவுல்டு ஆனார்.

 

இந்திய தரப்பில் புவனேஷ் குமார் 10 ஓவர்கள் 25 ரன்கள் 2 விக்கெட், அக்‌ஷர் படேல் 10 ஓவர் 1 மைடன் 2 விக்கெட்டுகள் 26 ரன்கள். இருவரும் அபாரமாக வீசினர். தோனி கடைசியில் கூறியது போல் இவர்களது கட்டுப்படுத்தல் மற்றும் விக்கெட் வீழ்த்துதலினால் மேற்கிந்திய அணியை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.

ஜடேஜாவின் ஒருநாள் போட்டிகளின் காலம் எண்ணப்படக்கூடியதாக மாறிவிட்டது எனலாம். 9 ஓவர்களில் 80 ரன்கள் கொடுத்தார் அவர். ஷமியும் 72 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6512329.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.