Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நமக்கு உணவு பாதுகாப்பு அளிக்குமா?

Featured Replies

Tamil_News_large_1101040.jpg

 

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான கள பரிசோதனையை மத்திய அரசு அனுமதித்து உத்தரவிட்ட போது, நான் அதை எதிர்த்து 'தினமலர்' நாளிதழில் கட்டுரை எழுதி இருந்தேன். அந்த கருத்தை ஆதரித்தும், எதிர்த்தும் எனக்கு பல கடிதங்களும், மின்னஞ்சல்களும் வந்தன. கருத்தை எதிர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிரதானமாக மூன்று கேள்விகள் எழுப்பி இருந்தனர்;
 
1. பெருகிவரும் மக்கள் தொகைக்கு மரபணு மாற்று தொழில்நுட்பம் இல்லாமல் உணவளிக்க முடியுமா?
 
2. இயற்கை விவசாயத்தால் மட்டும் அனைவருக்கும் தேவையான உணவை உற்பத்தி செய்துவிட முடியுமா?
 
3. விவசாயிகளின் ஆதரவு இல்லாமலா, 'பி.டி., பருத்தி'யின் சாகுபடி, மொத்த பருத்தி சாகுபடியில், 95 சதவீதமாக உள்ளது?
 
இந்த கேள்விகளை நான் வரவேற்கிறேன். ஏனெனில், மரபணு மாற்று பயிர்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளிக்கு வந்தால் தான், அதை குறித்த உண்மைகளும் பொதுவெளிக்கு வரும்.
 
வினியோகத்தில் சிக்கல்:
 
 
முதல் இரண்டு கேள்விகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான். நாம் இன்று சந்திக்கும் உணவு பற்றாக்குறை நிகழ்வுகளுக்கு உற்பத்தி காரணம் அல்ல, வினியோகம் தான் காரணம். இன்றைய நிலையில், நம் உணவு உற்பத்தி, நம் தேவையை விட அதிகமாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 25 - 26 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறோம்.
 
நம் தேவை ஏறத்தாழ, 20 கோடி டன்னாக உள்ளது.நம் அரசின் கிடங்குகளும் நிரம்பியே உள்ளன. கடந்த அக்டோபர் 1ம் தேதி நிலவரப்படி அவற்றில், 4.76 கோடி டன் உணவு தானியங்கள் இருந்தன. அங்கு அவை சரியாக பராமரிக்கப்படாததால், அழுகியும், எலிகளால் உண்ணப்பட்டும் வீணாகி வருகின்றன. இப்படி, மத்திய அரசின் கிடங்குகளில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும், 24 ஆயிரம் டன் தானியம் வீணாகிறது. இது தவிர மாநில அரசு கிடங்குகளில் நடக்கும் வீணடிப்பும் உள்ளது. கிடங்குகளில் இருக்கும் தானியங்கள் ஒரு புறம் வீணாக, போதுமான கிடங்குகள் இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் 2.1 கோடி டன் கோதுமை வீணாகிறது. இது ஆஸ்திரேலியாவின் மொத்த கோதுமை உற்பத்திக்கு சமமானது!
 
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்க மத்திய அரசு முனைந்த போது, அதற்கு ஆதரவாக அவர்கள் முன்வைத்த வாதத்தில், 'நம் நாட்டில் விளையும் காய், கனிகளில் கணிசமான பங்கு வினியோகத்தில் வீணடிக்கப்படுகின்றன' என, தெரிந்தோ, தெரியாமலோ ஒப்புக்கொண்டது. அதாவது, விளை பொருட்களை சேமித்து வைப்பதற்கு போதுமான கட்டமைப்பும், தொழில் சூழலும் (தனியார் தொழிலில் தலையிடும் பல்வேறு பழைய சட்டங்கள்) ஏற்படுத்தப்படாததால், அவை யாருக்கும் பயனில்லாமல் போகின்றன. அதனால், கூடுதல் உற்பத்தி என்பதைவிட, வினியோகத்தை சீர் செய்வதே நம்முடைய தேவை.
 
தற்போதைய உற்பத்தி பெரும்பாலும் ரசாயன உரங்களையும், பூச்சிகொல்லிகளையும் பயன்படுத்தியே கிடைக்கிறது; இதில் இயற்கை விவசாயத்தின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது. சமீபத்தில், ஏ.எஸ்.ஹெச்.ஏ., என்ற நிலைத்த நீடித்த வேளாண்மைக்கான கூட்டமைப்பின் சார்பில், ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. அதில், இயற்கை வேளாண்மையின் உற்பத்தி திறன் உள்ளிட்ட, சில முக்கிய பொருளாதார அம்சங்கள் பற்றி, 350 ஆய்வு கட்டுரைகள் உள்ளன.
 
இவை அனைத்தும், 200 சர்வதேச அறிவியலேடுகளில் பிரசுரமானவை. நம் நாட்டு விஞ்ஞானிகள் மட்டுமல்லாது, ஆக்ஸ்போர்ட் போன்ற பிரபல பல்கலைக்கழகங்களை சார்ந்த விஞ்ஞானிகளும் அந்த ஆய்வு கட்டுரைகளை எழுதி உள்ளனர்.அந்த கட்டுரைகள் அனைத்தின் சாராம்சமும் என்னவென்றால், 'இயற்கை வேளாண்மையால், தற்போதைய முறைகளைவிட, 10 - 20 சதவீதம் அதிகமான மகசூலை கொடுக்க முடியும்' என்பது தான். ஒரு வேளை, தற்போது உற்பத்தியான 25 கோடி டன்னைவிட அதிக மகசூலை நாம் எதிர்பார்க்கிறோம் என்றால், அதற்கு இயற்கை விவசாயம் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
 
 
பருத்தி புள்ளிவிவரம்:
 
 
மூன்றாவதாக கேட்கப்பட்ட கேள்வி, மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பற்றியது. 'பூச்சி வராது, அதனால் மகசூல் அதிகரிக்கும், அதனால் லாபம் அதிகரிக்கும்' என்ற அடிப்படையில் தான் மரபணு மாற்றப்பட்ட பருத்தி, நம் நாட்டிற்குள் நுழைந்தது. மகசூல் அதிகரித்ததா? மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம், '10 ஆண்டுகள் பி.டி பருத்தி' என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில், கடந்த 2002 - 2004 காலகட்டத்தில், இந்தியாவில் பருத்தி உற்பத்தி 60 சதவீதம் அதிகரித்தது.
 
அதற்கு முக்கிய காரணம் அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட வீரிய ரகங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பழைய ரகங்கள் மட்டுமே. அந்த காலகட்டத்தில், மொத்த பருத்தி சாகுபடியில், வெறும் 5 சதவீதம் மட்டும் தான் மரபணு மாற்றப்பட்ட பி.டி., வகையாக இருந்தது.இதற்காக தான் விதை உரிமையையும், பன்மையத்தையும் விட்டுக்கொடுத்தோமா? மகசூல், மாட மாளிகை, வணிகம், வாழ்க்கை தரம் என்று, மரபணு மாற்றப்பட்ட பருத்தியை எவ்வாறு விளம்பரப்படுத்தினாலும், விவசாய தற்கொலைகளில், 67 சதவீதம் பருத்தி சாகுபடி பகுதிகளில் தான் நடக்கின்றன என்பது தான் உண்மை.
 
நமக்கு பொருந்துமா?
 
வாசகர்கள் கேட்டிருந்த மூன்று பிரதான கேள்விகளுக்கு மேல், நான்காவதாக ஒரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். மரபணு பயிர்களால் பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க இயலுமா?இயலாது என்று பல விஞ்ஞானிகள் நிரூபித்து உள்ளனர். பல ஆண்டுகளாக மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் புழக்கத்திலிருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உணவு பாதுகப்பு குறியீடுகள் வீழ்ச்சியை தான் கண்டுள்ளன.இயலும் என்று கருத்து தெரிவிப்பவர்கள், 'பருவ நிலை மாறி வருவதால், வறட்சியை தாக்குப்பிடிக்கக் கூடிய, கடல் நீர் உட்பட பல்வேறு வகையான நீரை பயன்படுத்தி வளரக்கூடிய, நோய்களை எதிர்கொள்ளக் கூடிய பயிர்களை இந்த தொழில்நுட்பத்தால் தான் கொடுக்க முடியும்' என்று வாதிடுகின்றனர்.இயற்கை உயிர்பன்மையை விரும்புகிறது, ஒவ்வொரு தாவர இனத்திலும், விலங்கினத்திலும் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும், ஒவ்வொரு சூழலுக்கு ஏற்றதாக உள்ளது.
 
இப்படி இருந்தால் தான் பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட சூழல் மாற்றங்களினால் ஏற்படும் அழிவை ஒரு சில வகைகளாவது தாக்குப்பிடித்து, படிமலர்ச்சி முறையில் புதிய சூழலுக்கு ஏற்றவாறு மாறி, இன தொடர்ச்சியை உறுதி செய்ய முடியும். இது இயற்கையின் திட்டம்.
 
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை தழுவிய நாடுகளில், ஆறு நாடுகள் மட்டுமே 90 சதவீத மரபணு பயிர்களை சாகுபடி செய்கின்றன. இதில், அமெரிக்கா, பிரேசில், கனடா முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ளன. அங்கு, கால்நடை தீவனத்திற்காகவும், எரிபொருளுக்காகவும், சோளத்தில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை போன்ற ரசாயனத்திற்காகவும் தான் இந்த பயிர்கள் பெரும்பாலும் சாகுபடி செய்யப்படுகின்றன.
 
இந்த வகை பயிர்களில் 85 சதவீதம், களைகொல்லி எதிர்ப்பு என்ற ஒரே ஒரு குணம் கொண்டவை. அந்த நாடுகளில் ஒரு சராசரி விவசாயியின் வயல் 400 ஏக்கர். வேலைக்கு ஆட்களும் கிடையாது. அத்தகைய வயல்களில் களை எடுப்பது சிரமம் என்பதால், அனைத்து வகை தாவரங்களையும் கொல்லக்கூடிய களைக்கொல்லி (நம்மூரில் 'ரவுண்டப்' என்ற பெயரில் கிடைக்கிறது) உருவாக்கப்பட்டது. அந்த ரசாயனத்தின் வீரியத்தை தாங்கக்கூடிய திறன் பயிருக்கு மட்டும் மரபணு மாற்றம் மூலமாக கொடுக்கப்பட்டது.
 
இதுவே அந்த நாடுகளில், பெரும்பாலான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் குணம். இதில், களைக்கொல்லியை உருவாக்கிய நிறுவனமும், மரபணு மாற்றப்பட்ட பயிரை உருவாக்கிய நிறுவனமும் ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.
 
இத்தகைய, வீரிய களைக்கொல்லி சார்ந்த விவசாய முறையை கையாள்வதன் மூலம் அந்த நாடுகளில் தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. விவசாயத்தில் தேனீக்களின் முக்கியத்துவத்தை, அறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.
 
அதே போல், அசுர களைகளும் உருவாகி உள்ளன. அவை மகிஷாசுரனை போல் தங்கள் குணங்களை மாற்றிக்கொண்டு படிமலருகின்றன.கடந்த 2012ல் உலகம் தழுவிய வறட்சி ஏற்பட்ட போது, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை தழுவிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை.
 
பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் படைத்த மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் வீரியத்திற்கு, வேற்புழு எதிர்ப்பு தன்மை கொண்ட சோளம் ஒரு நல்ல உதாரணம். இந்த வகை பயிர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது முதலில் நல்ல வேற்புழு எதிர்ப்பு பலன் கிடைத்தது. ஆனால், 10 ஆண்டுகளுக்குள், வேற்புழு இன்னும் வீரியமாக மாறி இந்த பயிரை சர்வநாசம் செய்து வருகிறது. இது இயற்கையின் திட்டம். வேற்புழுவின் படிமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது. சூழலுக்கு ஏற்றவாறு மாறி இனவிருத்தி செய்து வருகிறது.இன்னும் வீரியமான எதிர்ப்பு சக்தியை உருவாக்க 10 - 15 ஆண்டுகள் ஆகும்.
 
அதுவரை? ஒவ்வொரு மரபணு மாற்றப்பட்ட வகையையும் உருவாக்க ஏறத்தாழ 30 கோடி ரூபாயும், 10 - 15 ஆண்டுகளும் தேவைப்படுகிறது. அவை வேகமாக மாறிவரும் சூழல்களையும், படிமலர்ச்சி பெற்ற பூச்சிகளையும் தாக்குப்பிடிக்குமா என்பது கேள்விக்குறி தான். ஆனால், இயற்கை நமக்கு அளித்த கொடையினாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயிகளின் முயற்சியினாலும், பல்வேறு குணாதிசயங்களை படைத்த ஏகப்பட்ட வகையான பயிர்கள் ஏற்கனவே நம்மிடம் உள்ளன. 
 
உதாரணத்திற்கு, உலக அளவில் 1 லட்சம் வகையான நெற்பயிர்கள் உள்ளன. இத்தகைய பன்மையை பாதுகாத்து, ஒற்றை பயிர் வயல்களாக நம் வயல்களை மாற்றாமல் இருந்தாலே பருவ நிலை மாற்றம் உட்பட எந்த சூழலையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.இத்தகைய செல்வத்தை கையில் வைத்துக்கொண்டு, உலகின் 1 சதவீத விவசாயிகளால், மொத்த விவசாய நிலப்பரப்பில், 4 சதவீதம் மட்டுமே பயிரிடப்படும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பின்னால் நாம் செல்ல வேண்டுமா? அது நமக்கு பொருத்தமான தொழில்நுட்பம் தானா?
 
- அனந்து -
கட்டுரையாளர் சென்னையில் உள்ள 'ரெஸ்டோர்' இயற்கை அங்காடியின் நிறுவனர் மற்றும் 'பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின்' ஒருங்கிணைப்பாளர்.
ananthoo@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அவரை தொடர்பு கொள்ளலாம்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.