Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆம்புரோஸ் பவுன்சரை ஆன்டிகுவாவுக்கு அனுப்புவேன்: சச்சின் சுயசரிதையில் சுவாரசிய குறிப்புகள்

Featured Replies

  • தொடங்கியவர்

சச்சினுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது- கபில் அதிரடி! 

 

டெல்லி: கபில்தேவ் ஒரு சிறந்த பயிற்சியாளராக திகழவில்லை, அவரது வேலையையும் சேர்த்து தான் பார்க்க வேண்டியிருந்தது என்று தனது சுயசரிதை புத்தகத்தில் சச்சின் டெண்டுல்கர் அலுத்துக் கொண்டது குறித்து பதிலளிக்க கிரிக்கெட் ஜாம்பவான், ஹரியானா சிங்கம் கபில்தேவ் மறுத்து விட்டார். இது சச்சின் கருத்து. இதற்குப் பதிலளிக்க முடியாது என்று கபில் தேவ் கூறியுள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான, சச்சினின் குரு என்று கருதப்படும் கவாஸ்கரை விட மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தியாவுக்காக ஆடிய கபில் தேவ் குறித்து சச்சின் தனது சுயசரிதை நூலில் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆனால் இதற்குப் பதிலளிக்க மறுத்து விட்டார் கபில்தேவ். டெல்லியில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது கபிலிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. ஆனால் நோ கமெண்ட்ஸ் என்று கூறி விட்டார் கபில்.

 

சச்சினின் கதை பிளேயிட் இட் மை வே என்ற பெயரில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்த நூல் படு பரபரப்பாக விற்று வருகிறது. காரணம், சச்சின் பரபரப்பான பல புகார்களை புத்தகத்தில் குவித்து வைத்திருப்பதால்.

கபில் தேவ் மீது கடுப்பு

இந்தியாவின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான, இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தவரான, பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சீறும் சிங்கமாக திகழ்ந்தவரான, தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடியவருமான, இந்தியாவின் அருமையான கேப்டன்களில் ஒருவருமான கபில் தேவ் மீதும் இந்தப் புத்தகத்தில் பாய்ந்திருந்தார் சச்சின்.

 

பயிற்சியாளர் வேலை தெரியவில்லையாம்

கபில் தேவ் பயிற்சியாளராக இருந்தபோது கேப்டனாக இருந்தவர் சச்சின். ஆனால் சச்சினின் சொதப்பல் கேப்டன்ஷிப்பால் இந்திய அணி பெரிய பெரிய தோல்விகளைச் சந்தித்து வந்தது. ஆனால் கபில்தேவ் நல்ல பயிற்சியளராக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் சச்சின். கபிலுக்கு பயிற்சியாளர் வேலை சரியாக செய்யத் தெரியவில்லை. அவரது வேலையையும் நானே பார்க்க நேரிட்டது என்று கூறியுள்ளார் சச்சின்.

 

இது அவர் கருத்துங்க இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் கபிலிடம் கேட்டபோது, இது அவரது கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அனைவரது கருத்தையும் நான் மதிக்கிறேன்.

 

வாழ்த்துகள் சச்சின்! சச்சினின் அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி நிறுத்திக் கொண்டார் கபில்.

 

விளையாடினால் ஜெயிக்கலாம்

இந்தியா உலகக் கோப்பையை தக்க வைக்குமா என்ற கேள்விக்கு, இப்பவே அதைச் சொல்ல முடியாது. எனது நாட்டு வீரர்களுக்கு நான் வாழ்த்து கூறிக் கொள்கிறேன். நன்றாக ஆடினால், நல்ல கிரிக்கெட்டைக் கொடுத்தால் வெல்லலாம் என்றார் கபில்தேவ்.

 

http://tamil.oneindia.com/news/sports/respect-sachin-tendulkar-s-opinion-about-me-as-coach-kapil-dev-214794.html

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மட்டையின் கண்கள் - ப்ளேயிங் இட் மை வே: சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை
 

 

கை விரலில் சின்ன அறுவைச் சிகிச்சை. மயக்க மருந்து கொடுத்திருக்கிறார்கள். திடீரென்று அவர் எழுந்துகொள்கிறார். “உள்ளங்கையில் வெட்டிவிடாதீர்கள். பேட்டைப் பிடிக்க க்ரிப் இருக்காது” என்கிறார் பதற்றத்துடன். மருத்துவர்கள் பதறிப்போகிறார்கள். “நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள்” என்று மீண்டும் தூங்கவைக்கிறார் மருத்துவர். இந்த மனிதனுக்கு கிரிக்கெட்டின் மீதிருக்கும் தீராக் காதலை எப்படிச் சொல்வது?

‘ப்ளேயிங் இட் மை வே’. சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை. புத்தகத்தில் அவருடைய மனைவி அஞ்சலி தொடர்பான ஒரு அத்தியாயத்தைத் தவிர ஏனைய அத்தியாயங்கள் அத்தனையும், பக்கங்கள் அத்தனையும், பத்திக்குப் பத்தி, வரிக்கு வரி கிரிக்கெட், கிரிக்கெட், கிரிக்கெட்...

 

வரலாற்றுப் பதிவு

வரலாற்றில் யாரும் செய்யாத, இனி அனேகமாக யாராலும் செய்ய முடியாத பல சாதனைகளைச் சாதித்திருக்கும் சச்சின், அவற்றை எப்படிச் செய்தார் என்பதற்கான பதில் புத்தகத்தில் இருக்கிறது. 11 வயதில் தொடங்கிய பயணம். கிட்டத்தட்ட 30 ஆண்டுப் பயணம். அதன் தீவிரம், அசாத்தியமான முனைப்பு, பிரமிக்கவைக்கும் முன்தயாரிப்பு, பரவசம், வலிகள் என இந்தப் பயணத்தின் பரிமாணங்கள் பலவும் 450 பக்கங்களில் படர்ந்திருக்கின்றன.

ஆடுகளம் கருணையற்றது. அது வயதைப் பார்க்காது. உடல் நிலையைப் பார்க்காது. மன நிலையைப் பார்க்காது. எப்போதும் முழு வேகத்துடன் தன் தாக்குதலைச் செலுத்தும். அதற்கு அவர் எல்லா விதங்களிலும் தயாராகவே இருந்திருக் கிறார். பயிற்சிக்காக வாழ்க்கையில் எவ்வளவு காலத்தைக் கொடுத்திருக்கிறார்? பயிற்சி என்றால் சாதாரணப் பயிற்சி அல்ல. 11, 12 வயதிலிருந்தே நாள் முழுவதும் கடும் பயிற்சிகள். வெறித்தனமான பயிற்சிகள். காலம் முழுவதும் கடும் பயிற்சிகளைத் தொடர்ந்திருக்கிறார். கடைசித் தொடருக்கு முன்பும் அப்படியே. 198 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஒருவர் அப்படியெல்லாம் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால், அவர் ஒவ்வொரு போட்டியையும் முதல் போட்டியைப் போலவே பார்த்திருக்கிறார்.

 

வலியின் கதை

சச்சினின் கதையை ஒரு விதத்தில் வலியின் கதை என்று சொல்லலாம். சொல்லொணாத வலிகளுக்கு மத்தியில் ஒரு மனிதன் விடாமல் போராடிய கதை. முதுகு வலி, கால் விரல் எலும்பு விரிசல், முழங்கை வலி, தோள்பட்டைத் தசைக் கிழிசல், கை விரல் முறிவு, தொடை இணைப்பில் ஏற்பட்ட காயம்... இவ்வளவுக்கு நடுவிலும் போராடி விளையாடிருக்கிறார். இந்தப் போராட்டத்தின் மூலமே தன்னுடைய எல்லைகளையும் ஆட்டத்தின் எல்லையையும் விரிவுபடுத்தியிருக்கிறார்.

ஒரு ஆட்ட நாயகன் உருவாகிறான் என்றால், அதற்கு அவன் மட்டு மல்லாமல் அவன் குடும்பமும் விலை கொடுக்க வேண்டும். சச்சினின் பெற்றோரிலிருந்து தொடங்கி அவரது அண்ணன், பின்னாளில் மனைவி, குழந்தைகள் என எல்லோருக்கும் இதில் பெரிய பங்கு இருந்திருக்கிறது. இவர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் சச்சின் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார். கோச் ரமாகாந்த் அச்ரேகரைப் பற்றிப் பேசும்போது நெகிழ்ந்துபோகிறார்.

சோதனைகள் எல்லாத் துறைகளுக்கும் பொதுவானவைதான். ஆனால் சமகால விளையாட்டுக் களத்தில் சச்சின் அளவுக்குச் சோதனை களை அனுபவித்திருக்கும் இன்னொருவர் இருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் இவற்றை இயல்பாக எடுத்துக் கொண்டு போராடிய தன்மை அவரது நூலில் வெளிப்படுகிறது.

 

விமர்சனங்கள் x விமர்சனங்கள்

சச்சின் சர்ச்சைகளைப் பற்றியும் பேசுகிறார். அணித் தேர்வு விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் குறைகளைப் பற்றி, 1997-ல் தன்னிடம் சொல்லாமல் தலைமைப் பதவியிலிருந்து தன்னை நீக்கியதைப் பற்றி, ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கும் ஹர்பஜன் சிங்குக்கும் இடையே நடந்த சண்டையைப் பற்றி, தவறான முறையில் அவுட் கொடுக்கப் பட்ட சமயங்களில் அடைந்த ஏமாற்றங்களைப் பற்றி, தான் 194 ரன்னில் இருக்கும்போது திராவிட் டிக்ளேர் செய்தது பற்றி, கிரேக் சாப்பலின் செயல்பாடு பற்றி, இயன் சாப்பலின் விமர்சனங்கள் பற்றி…

 

சில பதிவுகள் தனித்து நிற்கின்றன. ஷார்ஜாவில் ஆடிய அந்த இரண்டு ஆட்டங்கள், 2003 உலகக் கோப்பை ஆட்டங்கள், கொல்கத்தாவில் லட்சுமணனும் திராவிடும் நிகழ்த்திய அதிசயம், கும்ப்ளேயின் போர்க்குணம், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகியோருடன் இருந்த நட்பு போன்றவை சுவாரஸ்ய மானவை.

புத்தகத்தில் என்னவெல்லாம் இல்லை என்றும் பல விஷயங்களை அடுக்கலாம். சில விமர்சகர்கள் மேட்ச் ஃபிக்ஸிங் பற்றி மவுனம் சாதிப்பது குறித்துக் கேள்வி எழுப்புகிறார்கள். சிலருக்கு வேறு சில சர்ச்சைகளைப் பற்றிக் கவலை. புதிய தகவல்கள் அதிகம் இல்லை என்பது சிலரது ஆதங்கம். இன்னும் அடுக்கலாம். கங்கூலி, கும்ப்ளே ஆகியோரைப் பற்றி எழுதிய அளவுக்கு திராவிட், லட்சுமணன் பற்றி இல்லை. ரிச்சர்ட்ஸைப் பற்றி நெகிழ்ந்து பேசும் சச்சின், கவாஸ்கர் முதலான இந்திய வீரர்கள்பற்றி அதிகம் சொல்லவில்லை. பால்ய நண்பன் காம்ப்ளி பற்றிய பதிவு ஏனோதானோவென இருக்கிறது. ஒரு சில மோசமான தோல்விகளைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. லாரா, பான்டிங் போன்ற சமகாலச் சாதனையாளர்கள் பற்றி அதிக மில்லை. இவை போதாமைகள்தான். ஆனால், ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது சச்சினின் சுயசரிதை. எதை எழுதுவது, எதை விடுவது என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். தவிர, இந்தியச் சூழலில், எந்த அளவுக்கு விஷயங்களைத் திறந்த மனதுடன் பேச முடியும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். கபில்தேவும் கவாஸ்கரும் எத்தனை சர்ச்சைகளைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்கள் என்பதையும் யோசித்துப் பார்க்கலாம்.

 

ஆகச் சிறப்பான அம்சம்

டெண்டுல்கர் மொழித் திறனுக்குப் பேர்போனவர் அல்ல. அவருடன் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதிய போரியா மஜும்தாரும் நடையழகுக்காக மெனக்கெடவில்லை. எளிமை யாக, செய்தித்தாள் பாணியில் மொழிநடை இருப்பது சச்சினின் ஆளுமையுடன் பொருந்திப் போகிறது.

ஆகச் சிறந்த மட்டையாளர்களில் ஒருவரது பார்வையி லிருந்து ஆட்டம் அணுகப்படுவதில் வெளிப்படும் நுட்பம்தான் நூலின் ஆகச் சிறப்பான அம்சம். ஆடுகளத்தை மதிப்பிடுதல், காற்று வீசும் திசையைக் கவனித்தல், வானிலையால் ஏற்படும் கள மாற்றங்களின் தன்மைகள், பந்துவீச்சாளரின் மனதை ஊடுருவ முயலும் உளவியல் போராட்டம், எதிரணியின் வியூகங்களைக் கணித்தல், உடல் குறைபாடு ஆட்டத்தைப் பாதிக்காத வண்ணம் செய்துகொள்ள வேண்டிய மாற்றங்கள், களத்தில் சக ஆட்டக்காரர்களுடனான உரையாடல்களின் முக்கியத்துவம் என மட்டைவீச்சுக் கலையின் சூட்சமங்களை அவர் விவரிக்கும் நுட்பம் அபாரம்.

 

ஒரு இளைஞர், அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதில் போராடித் தன் எல்லைகளை விரிவுபடுத்து வதற்கான உத்வேகத்தை இந்த நூலிலிருந்து பெற முடியும். தான் தேர்ந்துகொண்ட விஷயத்தின் மீது அசாத்தியமான காதல் இருந்தால் அசாத்தியமான வலிகளைத் தாண்டிச் சாதிக்க முடியும் என்பதையும் அறிய முடியும். இதுதான் இந்த நூலின் ஆகச் சிறந்த பங்களிப்பு.

 

சுயசரிதையிலிருந்து

அப்பா

நான் என்ன செய்தாலும் என் அப்பா என்னைப் பார்த்துக் கத்த மாட்டார். நான் ஏன் ஒரு விஷயத்தைச் செய்யலாம் அல்லது செய்யக் கூடாது என்பதை எனக்கு விளக்க முயல்வார். இந்த விளக்கங்கள் எனக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

 

அம்மா

என் முகத்தில் சிரிப்பைப் பார்ப்பதற்காக அம்மா என்ன வேண்டுமானாலும் செய்வார். அவர் செய்யும் மீன் வறுவலும் இறால் பிரட்டலும் மிக அற்புதமாக இருக்கும். உணவின் மீது எனக்குள்ள காதலுக்குக் காரணம் என் அம்மாதான்.

 

அண்ணன்

அஜித்தும் நானும் ஒரே கனவைக் கொண்டிருந்தோம். நான் மிகவும் நம்பும் விமர்சகர் அவன்தான். களத்தில் ஓட்டங்களை எடுத்தது நானாக இருக்கலாம். ஆனால் அவன் உணர்வுபூர்வமாக எப்போதும் என்னுடன் கலந்திருந்தான்.

 

குரு

அச்ரேக்கர் சார் மட்டும் இல்லையென்றால் நான் இப்படிப்பட்ட ஆட்டக்காரனாக உருவாகியிருக்கவே முடியாது. ஒவ்வொரு தொடருக்கு முன்பும் நான் நான்கு இடங்களுக்குச் செல்வேன்: சிவாஜி பார்க்கில் இருக்கும் பிள்ளையார் கோயில், பிரபாதேவியில் இருக்கும் சித்திவிநாயகர் கோயில், என் தாய்மாமன் - அத்தை வீடு, அச்ரேக்கர் சாரின் வீடு.

 

அஞ்சலி

அஞ்சலி என்னுடைய உணர்ச்சிகளுக்கான வடிகால். என் மீது எனக்குச் சந்தேகம் வரும்போதெல்லாம் நான் அவளிடம்தான் செல்வேன். நான் சீக்கிரம் வீட்டுக்கு வர வேண்டும் என்று என் மனைவி எனக்கு என்றைக்கும் நிர்ப்பந்தம் தந்ததில்லை.

 

மகனும் மகளும்

2013, அக்டோபர் 10 அன்று நான் தென்னாப்பிரிக்காவில் இருந்த என் பையன் அர்ஜுனைத் தொலைபேசியில் அழைத்தேன். உன் அறைக்குப் போ, நான் உன்னிடம் முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்றேன். நான் ஓய்வுபெறும் முடிவை அவனிடம் சொன்னேன். மறு முனையில் முழு அமைதி. ஆனால் அவன் அழுவது எனக்குத் தெரிந்தது. பத்து நிமிடங்கள் கழித்து அவன் என்னை அழைத்தான். அங்கே என்ன நடக்கிறது என்பதைச் சொன்னான். ஓய்வு பற்றி அவன் பேசவே இல்லை. செய்தி வெளியானபோது என் மகள் சாரா பள்ளியில் இருந்தாள். வீட்டுக்கு வந்ததும் என்னை நோக்கி ஓடி வந்தாள். ஒரு வார்த்தைகூடப் பேசாமல் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

 

ஊக்கம் தந்த அழைப்பு

2007 உலகக் கோப்பைக்குப் பிறகு மிகவும் மோசமான மனநிலையில் இருந்தேன். கிரிக்கெட்டை அனுபவித்து ரசிக்க முடியவில்லை. ஓய்வுபெறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன் - விவ் ரிச்சர்ட்ஸிடமிருந்து அழைப்பு வரும்வரை. திடீரென்று அவர் அழைத்தார். நாங்கள் 45 நிமிடங்கள் பேசினோம். உன்னிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் மிச்சம் உள்ளது, ஆடுவதை நிறுத்துவதுபற்றி யோசிக்கவே கூடாது என்றார். விவ்தான் என் ஹீரோ. எப்போதும்… சில மாதங்களுக்குப் பிறகு சிட்னியில் சதம் அடித்த பிறகு அவரை அழைத்து நன்றி சொன்னேன்.

 

களமும் ஆளுமையும்

களத்தில் வெறுமனே நிற்பது என்பது வேறு. களத்தில் ‘இருப்பது’ என்பது வேறு. நீங்கள் களத்தில் இருக்கிறீர்கள் என்பதை எதிரணி யினர் உணர வேண்டும். உடல் மொழி, சுடர் விடும் ஆளுமை ஆகியவை சம்பந்தப்பட்டது அது. விவ் ரிச்சர்ட்ஸ் அத்தகைய ஆளுமை கொண்டவர்.

 

சென்னை டெஸ்டும் வலியும்

வெற்றிக்கு இன்னும் 17 ரன்கள்தான் இருந்தன. என் முதுகு என்னைக் கைவிட்டது. நேராக நிற்கக்கூட முடியவில்லை. ஒவ்வொரு ஷாட்டும் வலியைக் கூட்டியது. பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முஷ்டாக்கின் தூஸ்ராவை மிட் ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முற்பட்டேன். நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகப் பந்து எழும்பியது. பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டது. வக்கார் யூனுஸ் அதைப் பிடித்தார். நான் நொறுங்கிப்போனேன்.

 

1996 உலகக் கோப்பை பாகிஸ்தான் ஆட்டம்

ஓட்டலுக்குத் திரும்பும் வழியெங்கும் மக்கள் சாலைகளில் திரண்டிருந்தார்கள். எங்கள் மீது பூமாலைகளை வீசினார்கள். பூமழை பொழிந்தார்கள். ஓட்டலில் பணியாளர்கள் எங்களை மகிழ்விக்க முயன்றார்கள். ராஜ உபசாரம் கிடைத்தது.

 

1996 உலகக் கோப்பை இலங்கை ஆட்டம்

இந்த முறை ஓட்டலுக்குத் திரும்பிச் சென்ற பயணம் வலி மிகுந்ததாக இருந்தது. ஓட்டலை அடைந்தபோது எல்லாமே மாறிவிட்டது என்பதை உணர்ந்தோம். நாங்கள் பெரிய தவறு இழைத்துவிட்டதாக உணரும் நெருக்கடிக்கு ஆளானோம். அந்த இரவு நீளமானதாக, மிகக் கடினமானதாக இருந்தது.

 

கவனத்தில் கவனம்

என்னுடைய மனம் பந்து வீச்சாளரின் முனையில் இருந்தபோதெல்லாம் நான் சிறப்பாக விளையாடியிருக்கிறேன்... வீச்சாளரோ, மட்டையாளரோ, கவனம் நம் பக்கமாகவே தங்கிவிடும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன.

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/article6646241.ece?widget-art=four-rel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.