Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு கவிதை வலி நிவாரணி --- திருமாவளவன் (நேர்காணல்)

Featured Replies

திருமாவளவன். ஈழத்தின் வளம்பொருந்திய  வருத்தலைவிளான் (வலிவடக்கு தெல்லிப்பளை) கிராமத்தின் மண்வாசனையோடுயுத்தம் கனடாவுக்கு  தூக்கியெறிந்த  ஒரு ஆளுமை. இடதுசாரித்துவ  பின்னணியுடன் ஒரு நாடகக் கலைஞனாக  கிராமத்தோடு இயைந்திருந்த அவரை  கவிஞனாக்கியது புலப்பெயர்வு வாழ்க்கை.

 

பனிவயல் உழவுஇருள்யாழிஅஃதே இரவு அஃதே பகல்முதுவேனில் பதிகம் என்ற நான்கு கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள்பத்தி எழுத்துகள்அரங்குசார் நிகழ்வுகள் எனத் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பவர். இவரின் இயற்பெயர் கனகசிங்கம்  கருணாகரன். யாழ் அருணோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் பழையமாணவர்.

 

 புலம்பெயர் வாழ்வின் துயரப்பொழிவினை ஊடுகடத்தும்  கவிதைகள் அதிகம் இருந்தாலும் அவை  மெல்லிய பனிப் பொழிவு போன்ற ஒரு அழகியலையும் கொண்டிருக்கின்றன எனலாம். திணைமாறியஇயந்திர வாழ்வியல்  அனுபவங்களைப்  படைப்பாக்கி அவற்றினூடாக புலம்பெயர் சமூகத்தின் வலிகளைஇயங்குதலை எந்தவித சமரசமும்  இன்றி எடுத்து உணரவைக்கும் கவிஞர்இன்றைய கவிஞர்களில் வேறுபட்டு இயற்கையில் இருந்து தன்னை ஆற்றுப்படும் வித்தையைக் கொண்டிருக்கிறார்.

 

ஈழக் கவிஞர் கருணாகரன்கவிஞர் திருமாவளன் குறித்து இப்படிப் பதிவு செய்கிறார்.

'இலங்கையின் கொந்தளிப்பான காலட்டத்தில் இளமைப்பருவத்தைக் கொண்டிருந்தவர் திருமாவளவன். இன ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமும் இனப்போராக மாறிய சூழலில் வாழவேண்டியஎழுதவேண்டிய நிலையைக் கொண்டவர் என்பதால் இந்தக் கொந்தளிப்பு அவரின் கவிதைகளிலும் உண்டு. ஆனால் சமநிலை குழம்பாதவர் எந்தப்பக்கமும் இழுபடாதவர் சாயாதவர் என்பதனால் திருமாவளவனின் கவிதைகள் கால நீட்சியைக் கொண்டிருக்கும் தன்மையை அதிகம் கொண்டிருக்கின்றன.எனினும் அதை மீறி சமகால ஈழப்பரப்பிற்குள் மட்டும் அடங்கி உறைந்துவிடும் கவிதைகளும் உண்டு. இதைத்தவிர்த்தால் திருமாவளவன் ஈழக் கவிஞர்களிலும் ஈழக்கவிதைகளிலும் முக்கியமான ஒரு அடையாளமாகவே உள்ளார்'.

 

உச்சி வெளிக்க உதட்டுக்கு கீழே சிறிதாய்

குட்டித்தாடி விட்டேன்

சேரன் என்ற நினைப்போ

என்றானொருவன்.

 

சரிதான் போடா என்றபடி

தாடையிலே படரவிட்டேன்

அச்சொட்டாய் ஜெயபாலன் போலவே இருக்கிறாய்

என்றான் இன்னொருவன்.

 

அழல் ஏற

காட்டுப்புதர்போல

அதன்பாட்டில் வளரவிட்டேன்

திடீரென ஒருவன்

தேவதேவன் சாயல் தெரிகிறதென்றான்.

 

என்று அடையாளங்களோடு தொலைந்து போகாத ஒரு படைப்பாளியின் அடையாளமாக இந்த உரையாடல் வெளிவந்திருக்கிறது. --நெற்கொழு தாசன் 

 

  கவிதையை திருமாவளவன் தேர்ந்து எடுத்த காரணம் என்ன?

 

தொண்ணூறுகளுக்கு பிற்பாடு இனியும் நாட்டில் இருந்தால் உயிர் என் உடலில் தங்காது என்றுணர்ந்த போது போரை மறுத்தோடி ஊர் விட்டு வந்தவன் நான். புதிய புலம் எனக்கு இன்னொரு போர்க்களமாக இருந்ததுவாழ்வின் துயர்உறைபனியின்  கொடுங்குளிர். பணியின் சுமை. இவை எல்லாவற்றையும் விட என்னைப்போல ஓடிவந்த சகமனிதர்களின்  போக்கு எல்லாம் சேர்ந்தபோது நான் தனித்து விடப்பட்டிருந்ததாக உணர்ந்தேன்  இரவு வேலைபகலில் தூக்கம். கிடைக்கும் நேரத்தில் மனம் போனபடி அலைவதென என் வாழ்வு இலக்கற்றிருந்தது. அப்போதுதான் நான்  எழுத்தை என்தெரிவாகக் கொண்டேன்.

 

இள வயதில் வாசிப்பதற்கு நல்ல வாய்ப்பிருந்தது. நல்லதெரிவின்  பக்கம் திருப்பிவிட யாரும் வாய்க்கவில்லை. வாசித்தவை எல்லாம் பொழுதுபோக்கு இலக்கியங்கள். எழுதியது மிகக் குறைவு. அவை ஊர் மற்றும் கையெழுத்துப்  பத்திரிக்கை மட்டத்தில் தொலைந்து போய்விட்டன.

 

அக்காலத்தில் கவிதை தொடர்பாக நான் கொண்டிருந்த  எண்ணமும் வேறானது. அத்தோடு ஓசைநயத்திற்கேற்ப மேடையிலே கவிதையை ஒப்புவிக்கும் பயிற்சியும் இருந்தது இத்தகைய சூழலில்கனடா வந்த பிற்பாடு தற்செயலாக  வ.ஐ.ச. ஜெயபாலனின் 'நமக்கென்றோர் புல்வெளிமற்றும் 'சூரியனோடு பேசுதல்ஆகிய இரு தொகுப்புகளும் கிடைத்தன.  இந்த வாசிப்பினால் ஏற்பட்ட தரிசனமே மீண்டும் கவிதையின் பக்கம் திரும்பவைத்தது.   அதற்குப்பின் பல ஈழத்துக்கவிஞர்கள் மற்றும் பசுவையாமனுஷ்யபுத்திரன் போன்ற தமிழகக்கவிஞர்களின் கவிதைகளைப் படித்தேன்.

 

அக்காலத்தில் தொரன்ரோவில் 'சூரியன்என்றொரு தமிழ் வாராந்த பத்திரிகை வந்து கொண்டிருந்தது.  அதில் தொடர்ந்து எழுதி வந்தேன். ஓரளவு உள்ளூரில் அவதானிப்பு கிடைத்தது.

தொண்ணூற்றைந்தில் கவிஞர் சேரனின் நட்பு கிடைத்தது. அவர் தந்த ஊக்கமும் ஒத்துழைப்பும் கவிதை தொடர்பான நுணுக்கங்களை மேலும் அறியும் வாய்ப்பைத் தந்தது. சிற்றிதழ்களுக்கு எழுதத் தொடங்கினேன்.

 

சக்கரவர்த்திபிரதீபா தில்லைநாதன் இருவருடனும் இணைந்து 1999 இல் 'யுத்தத்தை தின்போம்என்ற தலைப்பில் சிறு கவிதைத் திரட்டு வெளிவந்தது. தொடர்ந்து  'பனிவயல் உழவுதொகுப்பை வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததுஇருந்தும் அது வெளிவந்த பின்னால் அதன் மீது எனக்கிருந்த திருப்பி இன்மை அல்லது போதாமை மேலும் கவிதை மீதான தேடலை உருவாக்கியது. இத்தொடர்ச்சியானது கவிதையையே என் முதற்தெரிவாகக்  கொள்ளக்காரணமாக அமைந்தது. நான் கவிதா மனோபாவத்தோடு வாழத்தலைப்பட்டேன். இருந்தும் 'பனிவயல் உழவுஎன் தொகுப்புகளில் சிறந்தது என்று சொல்லுபவர் இன்றும் உளர்.

 

 நான்கு கவிதைத் தொகுதிகள். புலம்பெயர் வாழ்வின் சுமைகளுக்குள் இவற்றைச் சாதித்திருக்கிறீர்கள். முதற் தொகுதி பனிவயல் உழவுக்கும் நான்காவது தொகுதி முதுவேனில் பதிகத்துக்கும் இடையிலான கவிதைப் பயணம் குறித்து?

 

முதற்தொகுப்பான 'பனிவயல் உழவுவைக் கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. இரண்டு வருடங்கள் தாமதமானதுமுடிவில் அது 'எக்ஸில்வெளியீடாக வந்திருந்தாலும் கூட நானே அதன் வெளியீட்டாளனாகவும் இருந்தேன். தாமதமான இரண்டு வருடகால இடைவெளியில் கவிதை தொடர்பான என் எண்ணப்பாடு வேறாயிருந்தது.  அக்காலத்தில் நிறையப் படிக்கவும் கவிதை தொடர்பாக பேசவும் நல்ல சூழலும் நிறைய நண்பர்களும் நல்வாய்ப்புகளும் அமைந்தது. ஈழத்துக் கவிதைகளை விடவும் தமிழகக் கவிதைகளை நிறையப் படித்தேன். அதனால் பரீட்சார்த்தமாக எழுதிப்பார்க்க முடிந்தது எனது விருப்பத்திற்கு இசைந்தபடி இரண்டாவது தொகுப்பு 'அஃதே இரவு அஃதே பகல்வெளிவந்தது றஷ்மியும்  பௌசரும் அதற்கு உறுதுணையாக இருந்தனர்.

 

அதன் பின்பு கலைச்செல்வனின் மரணம் உட்பட இரண்டு கடும் துயர்தரு சம்பவங்கள் குடும்பத்தினுள் நிகழ்ந்தன. மிகவும் மனஉளைச்சலுக்கு ஆட்பட்டேன்.  பலகாலம் எழுதுவதே இல்லை. இனி எழுத்து வசப்படாமல் போய்விடும் என்ற அச்சமிருந்தது. இடையிடையே நண்பர்கள்சிற்றிதழ்கள்  சில கோரிக்கைகளைத் தவிர்க்க முடியாதபோது முயற்சிப்பேன். இப்படி ஆறேழு வருடங்கள் சிறுகச்சிறுக சேர்த்தவையே 'இருள்யாழி'யாகத் திரண்டதுஅத்திரட்டிலுள்ள கவிதைகளைப் படித்தாலே தெரியும். அவை ஒரே பாய்ச்சலில் இருக்காது. பல பரீட்சார்த்த வடிவங்களைக் கொண்டதாக இருக்கும். காலச்சுவடு வெளியீடாக வந்தது.

 

என் கவிதைகள் மீது வெங்கட்சாமிநாதன் பெருவிருப்புக் கொண்டிருந்தார். அவர் ஊடாக ராஜமார்த்தாண்டன் என்னை அறிந்து கொண்டார். அவரே இத்திரட்டைத் தொகுத்தவர். அவருக்கு அத்திரட்டு ஏனையவற்றிலிருந்து வேறுபட்டிருப்பதாகவும்  திருப்தி தந்ததாகவும்  சொன்னார். வேறு விமர்சகர் சிலர் நான் தேங்கி விட்டதாகக் குறிப்பிட்டனர்

இது எனக்குச் சவாலாக இருந்தது. இந்த இடையில்தான் இறுதிப்போரும் முள்ளிவாய்க்கால் பேரவலமும் நிகழ்ந்தது. அதற்குபின்  வாழ்வு தொடர்பான வெறுமை நிலை ஏற்பட்டது. துயரத்தில் மனம் உறைந்து பேசுவதற்கு வார்த்தைகள் அற்றிருந்தோம் பின் புதிய துளிராக இரண்டு பேரக்குழந்தைகள். அவர்களினூடாக எழுகின்ற புது நம்பிக்கைத் துளியில்  சில கவிதைகள் அமைந்தன. அஃதே 'முதுவேனில் பதிகம்திரட்டு. இத்தொகுப்பில் பல கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன.

 

நெருக்கடியான சூழலிலும்எனக்கு மிகப் பிடித்தவகையில்  கவிஞர் கருணாகரன் இத்தொகுப்பைத் திரட்டி வடிவமைத்து வெளியிட்டார். தொரன்ரோவில் நடந்த வெளியீடு கூட எனக்கு மகிழ்வைத் தரும்வகையில் அமைந்ததுவாழ்வின் துயரே என் கவிதைகளில் தூக்கலாக இருக்கிறதென்றார்கள்.  இனியாவது சற்று மகிழ்வான கவிதைகள் அமையவேண்டும் என மனசார விரும்பினேன். ஆனால் காலம் எனக்கு அப்படி அமையவில்லை.

 

 வாசகனாக உங்கள் கவிதைகளை எப்படி உணர்கிறீர்கள் திருமாவளவன் தனக்கான கவிதையைக்  கண்டடைந்து விட்டாரா?

 

இந்தக் கேள்வி மிகச் சிக்கலானது. என் முதலாவது தொகுப்பில் இழந்த சோகம்போர் மீதான வெறுப்புபுகலிடச் சீரழிவுகள் என்ற வகையில்  கவிதைகள் அமைந்தது,  இதற்குப் பின்னான கவிதைகளில் அதிகம் என் வாழ்வே கவிதையானதுஒப்பிட்டுப் பார்த்தால் தன்னிலை சார்ந்த கவிதைகளே தூக்கலாகத் தெரியும். இறுதித் தொகுப்பில் இதை அதிகம் அவதானிக்கலாம்.

 

ஒரு வாசகனாக என் கவிதையைப் பார்ப்பதென்பது என்வாழ்வை வெளியில் நின்று நானே என்னைத் திரும்பிப் பார்ப்பதற்கு ஒப்பானது. உங்கள் வாழ்க்கை குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று  கேட்பது போல் இருக்கிறதுஎன் வாழ்வின் திருப்தி இன்மைகளே அதிகம் என் கவிதைகளில் வெளிப்பட்டிருக்கிறதுஎனக்குச் சிறு வயதிலிருந்தே திருவாசகம் பிடிக்கும். மணிவாசகரைப் பிடிக்கும். அவர் தன்வாழ்வைக் கவிதைகளூடாகக் கடந்தவர்,  எனக்கும் கவிதையென்பது வாழ்வைக் கடக்கும் துடுப்புத்தான். நானும் என் வாழ்வின் துயரைக்  கவிதையிலே இறக்கிவைத்து விட்டு அடுத்த கருமத்தில் இறங்குகிறேன்.

 

என்வாழ்வில் உச்சத்தை அல்ல அதன் அடிவாலைக்கூட கண்டடைந்ததாக இல்லை. கவிதையும் அப்படித்தான். கண்டடைய முடியும் என்றும் நம்பவில்லை. கவிதையின் இயல்பும் அஃதே. வடிவத்தைப் பார்க்கும் போது கூட எனக்கான கவிவடிவம் இதுதான் என்று சொல்லமுடியவில்லை. இப்போதும் புதியபுதிய பரிசோதனை முயற்சிகளில் காலங்கழிகிறது.

 

 உங்கள் கவிதைகளில் அதிகமான  குறியீடுகள்படிமங்கள் வாழும் சூழல்  சார்ந்தே அமைகிறது.  அத்தோடு இயற்கையோடு வாழ்வை இணைத்து ஆற்றுப்படுத்தும் ஒரு ஆற்றுகை நிகழ்கிறது.  இந்த அமைவின் மூலம் என்ன ?

 

நான் கவிதை புனைபவன் அல்ல.  கவிதை புனைபவன் கவிஞன் அல்ல. புலவன். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு என்று நம்புகிறவன் நான்.

 

நான் எந்த இசங்களுக்கும் கட்டுப்பட்டவனல்ல. படிமங்களைத் தேடி அலைவதுமில்லை சிறுவயதிலிருந்தே இயற்கைமீது ஈடுபாடு உண்டு பாடசாலைக்கு கட்’ அடித்துவிட்டு சினிமா பார்க்கப் போனதை விட காடுகரம்பை என அலைந்ததே அதிகம். வறுமை அதற்கு வாய்ப்பாக அமைந்தது பற்றையிலே அன்று எவை கிடைக்கிறதோ அதுவே அன்றைய உணவாகும்.விடலைப்பருவத்தில்  எங்கள் ஊரில் நிகழும் திருமண வைபவங்களுக்கு அலங்கார (வரவேற்பு) முகப்பமைப்பேன் அப்போதெல்லாம் சூழலில் எது கையில் கிடைக்குமோ அதுவே அலங்காரப் பொருளாகும் தென்னங்குருத்து. பச்சைஓலை. பழுத்தல். பாக்குகமுகம் பாளைகுரோட்டனிலை என எதெது அகப்படுகிறதோ  அதுவே மூலம்.

 

இப்போது கவிதையிலும் அதுவே நிகழ்கிறது என்று நம்புகிறேன் இங்கு இன்று கூட புதிதாக வந்த ஒரு கார் பற்றிக் கேட்டால் மணித்தியாலக் கணக்கில் பேசுவார்கள். அருகில் நிற்கும் மரம் ஒன்றைச் சுட்டி என்ன மரம் எனக் கேட்டால் யாருக்கும் தெரியாது. பொதுவாக இயற்கை பற்றிய நேசிப்பு நம்மவர்களிடம் அந்த அளவில்தான் உள்ளதுஇதை எழுதிக்கொண்டிருக்கையில் இந்த இலையுதிர் காலத்திற்குறிய முதல் மழை பெய்கிறது. மைனா போன்ற நிறையக் குருவிகள் வீட்டுமுற்றத்தில் வந்து குந்துகின்றன. ஐந்து நிமிடங்கூட ஆகியிருக்காது. எழுந்து பறந்து அடுத்தவளவு முற்றத்தில் பின் அடுத்தஇடம் அடுத்தஇடம் என மாறிமாறிச் செல்கின்றன. குரலிலும் பார்வையிலும் சோகம் படிந்துகிடக்கிறது.

 

இப்படித்தானே எம் மக்கள் மூட்டைமுடிச்சுகளோடு இடம்மாறி இடம்மாறி அலைந்து கொண்டிருந்தார்கள். இது ஒரு கவிதையில் படிமமாக வருவதில் என்ன அதிசயமிருக்கிறது

இன்னொரு தளத்தில் பார்க்கும்போது நாங்கள் முதலில் இயற்கையை வழிபட்டவர்கள். பிள்ளையார் என்பது இயற்கைக்கு கொடுத்த உருவகம். சிறிது மாட்டின் சாணத்தை உருட்டி அதன் மீது அறுகம் புல்லைச் சொருகிவிட்டு  பிள்ளையார் என்கிறோம். இது இயற்கையான உருவகம் அல்லவா.

 

இதை முன்வைத்துத்தானே எல்லாக் காரியங்களையும் செய்கிறோம். எங்கே குளத்தோரம் பெரிய மரம் நிற்கிறதோ அங்கே அதன்கீழ் ஒரு கல்லை வைத்துவிட்டு மரத்தை வணங்குகிறோம். உண்மையில் மரத்தைத்தானே வணங்குகிறோம். பிற்காலத்தில் வந்த பார்ப்பனர்கள் பிள்ளையார்தான் கணபதி அல்லது விநாயகன் என்றது வேறுகதை. அது தனிக்கதை.

 

நானும் சிறுவயதிலிருந்தே மரத்தை அதன் சூழலைநேசித்து வணங்கி வளர்ந்தவன். வறுமை வேறு. வெய்யிலோடும் புழுதியோடும் மழையோடும் வெள்ளத்தோடும் பனியோடும் இசைந்தே வாழ்ந்தோம். மாரிகாலம் வந்தால் தவளைச் சத்தமின்றி தூக்கமில்லை. மாசிக் குளிருக்கு அம்மாவின் பழஞ்சேலையை விட்டால் வேறு போர்வை இல்லை. பங்குனிசித்திரையில் சஞ்சீவிமலைபோல் வெள்ளத்தோடு வந்த எல்லாவகையான புல்பூண்டுகளும்  எங்கள் வளவில் முளைக்கும்.

 

இதுதான் என் வாழ்வியல். எவ்வளவு வசதிவந்த போதும் இந்த வாழ்வையே மனம் அவாவுகிறது. இனிக்கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் இந்த வாழ்வே எனக்குள் நிறைந்தும் கிடக்கிறது. கவிதையும் அதனூடு இசைந்ததே.

 

 அப்படியாயின் புனைவு இலக்கியங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்அனுபவங்கள் சார்ந்த படைப்புகள் ஒரு வாசகமனதினை சிறைப்படுத்திவிடும் அபாயம் இருக்கிறதே தவிர அனுபவங்களைப் படைப்பாக்குவதால் தான் ஈழக் கவிதைகள் பெருமளவு தேக்கமடைந்திருப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்களே?

 

எல்லாப் புனைவுகளும் அனுபவங்களின் மறுவுருக்கள்தான். புனைவு  என்பதைப் படைப்பாளி தான் காணாத நுகராத கேட்காத அல்லது அனுபவிக்காத ஒன்றிலிருந்து அதிசயமாக இறக்கி வைக்கிறான் என்பதை என்மனம் ஏற்க மறுக்கிறது ஒரு சினிமா நட்சத்திரத்தின் நிஜமுகத்தைப் பார்த்து அயல்வீட்டு ப்பெண் போலிருக்கிறாள் எனக்கருதும் மனம் அவளது ஒப்பனை செய்யப்பட்ட முகத்தைப் பார்த்து பிரமிப்படைகிறது.  இதுவேதான் புனைவுக்கும் அனுபவ எழுத்துக்குமான வித்தியாசம் எனக்கருதுகிறேன்.

 

ஆனால்ஒரு நல்ல படைப்பாளி  தன் அனுபவத்தின் மீது புனைவைக்  கட்டி எழுப்புகிறான்  அல்லது வளர்த்துச் செல்கிறான். அங்கு வாசகமனம் பிரமிப்படைகிறது. புதிய தரிசனங்களை எட்டுகிறது. இங்ஙனம் பார்த்தால் ஈழத்துப் படைப்பாளிகள் அந்தநிலையைத் தொடவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. அவர்கள் யதார்த்தத்துடன் திருப்தி கொள்கிறார்கள்.

 

நான் நினக்கிறேன் எங்களிடம் விமர்சனத்துறை வளரவில்லை. ஒரு படைப்பாளியை நெறிப்படுத்துபவன் விமர்சகன். அவனே படைப்பாளியை வளர்த்துச் செல்கிறான்.  இதேவேளை ஈழத்துப் படைப்பாளிகளிடம் விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் அருகி வருகிறது. முதுகுசொறிதலில் புளங்காகிதம் அடைகிறார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து விமர்சனங்கள் வந்தால் அதுபற்றி ஆராயாமலே கோபப்படுகிறார்கள். முதலில் இந்நிலை மாறவேண்டும்

 

  ஈழத்தமிழ் படைப்பாளிகளும் சரி வாசகர்களும் சரி அதிகம் தமிழ் நாட்டின் ஊடகங்களையும்படைப்பாளிகளையும் கொண்டாடுபவர்களாகவும்தங்கள் படைப்புகள் தமிழக ஊடகங்களில் வெளியாகினால் தமக்கான அங்கீகாரம் கிடைத்தாகக் கருதும் மனோபாவம் உடையவர்களாகவும்  இருக்கிறார்களே?

 

இஃதொரு சிக்கலான கேள்வி. நெடுங்காலமாகவே எங்கள் வாசகப்பரப்பு தமிழ்நாட்டையே சார்ந்திருந்தது. தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் கூட  தமிழ்நாட்டுப் படைப்புகளை மட்டுமே தமிழ் இலக்கியங்களாகவும் மீதி ஈழத்து இலக்கியங்கள்மலேசிய இலக்கியங்கள் எனவும் வகுத்து வைத்திருந்தனர்.

 

பின்நாளில் தலித்திலக்கியங்கள்பெண்ணிய இலக்கியங்கள்புகலிட இலக்கியங்கள் அவற்றுடன் சேர்ந்துகொண்டன.   இந்தச் சவலைப்பிள்ளை மனோபாவம் எனக்கு எரிச்சல் தருகின்ற ஒன்று. இந்த விடயத்தில் போராடியதில் 'உலகத்தமிழ் இலக்கியம்என்ற பொதுக் குரல் தமிழ்நாட்டிலிருந்து இப்போதுதான் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

 

இஃது ஒருபுறமிருக்க ஈழத்து வாசகர்கள் கூட தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற படைப்புகளுக்குக் கொடுக்கின்ற மதிப்பை ஈழத்து எழுத்தாளர்களுக்கு கொடுப்பதில்லை. எங்களில் பலருக்கு இரண்டு முகங்கள் உண்டு. இந்தக்  குற்றச்சாட்டை வைக்கும் ஈழத்துப் படைப்பாளிகள் கூட மனதளவில் இந்திய அங்கீ காரத்தைக்  கோருபவர்களாகவே இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில் படைப்பாளி என்னசெய்ய முடியும்?

நான் எழுதத்தொடங்கி பல ஆண்டுகளான பின்பும்கூட  'பனிவயல் உழவுவந்து தமிழ்நாட்டில் பேசப்பட்ட பின்பே ஈழத்தவர்களின் அவதானத்தைப் பெற்றேன். என் நான்கு தொகுப்புகளில் 'இருள்யாழிமட்டுமே தமிழ்நாட்டில் வெளிவந்தது. அண்மையில் வெளிவந்த 'முதுவேனில் பதிகம்கூட இலங்கையில்தான் வெளியிட்டேன்.

 

ஆனால் இந்தியாவில் அறிமுகம் கிடைத்த பின்பே நம்மவர்களிடம் இருக்கும் சிற்றிதழ்கள் கூட என்னிடம் கவிதை கேட்கத் தொடங்கின. சிற்றிதழ்களே அப்படியாயின்  மற்றவர்கள்?

 

கைலாசபதிசிவத்தம்பி தமிழ்நாட்டில் தம் ஆளுமைகளைச் செலுத்தத் தொடங்கிய பின்பே ஈழத்தில் அவர்கள் பற்றிய பார்வை மிகுந்தது. அவர்களின்  செயற்பாடுகள் விசாலித்தன.

 

ஒரு படைப்பாளியின் பார்வை விசாலப்படவேண்டுமாயின்  அவனுக்குப் பரந்த வாசகர்தளம் வேண்டும்  அத்தகைய வாசகர் தளம் வேண்டுமாயின் அங்கீகாரம் இருக்கவேண்டும்.ஈழத்தமிழருக்கு தங்களோடு இயங்குபவர்களைப் பாராட்டும்  பண்பாடு குறைவு. தங்கள் தேவைகருதி முதுகு சொறிவதைத் தவிர. இது என் கருத்து.

 

ஆனால் தமிழ் நாட்டில் அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே சிறந்த படைப்பாளிகள் என்ற எண்ணம் தவறானது. முக்கியமாக  அந்தக்  கர்வம் படைப்பாளர்களுக்கு வரக்கூடாது.  

 

 புலம்பெயர் தமிழர்களிடம் தங்கள் குழுமம் சார்ந்த படைப்பாளிகளை கொண்டாடுவதும் ஏனைய தளங்களில் இயங்குபவர்களைப் புறக்கணிப்பதுவுமான ஒரு நிலை காணப்படுகிறதே?

 

இது புலம்பெயர் தமிழரிடம் மட்டும் தான் உள்ள நோய் என நான் கருதவில்லை.  இலக்கியம் எப்போதும் குழுநிலை சார்ந்தே இயங்குகிறது.  பிற்போக்குமுற்போக்குநற்போக்குஎனபல போக்குகளுடன் தான் இலக்கியம் இயங்கி வந்திருக்கிறது. அவ்வப் போக்குள்ளவர்கள் தாங்கள் சார்ந்த படைப்பாளிகளையே கொண்டாடினர்.

 

முப்பதாண்டுகாலப்  போராட்டமானது  எங்கள் சமூகத்தில் பெரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.  சனநாயகத்தன்மை அற்ற தனிமனித ஆளுமைகள் தான் இயங்குகின்றன. அதுவே இன்று யதார்த்தமாகிவிட்டது. கூட்டுறவுகூட்டுழைப்பு என்பது வெறும் வார்த்தைகளாயின. தனிநபர் பெயருக்குப் பதிலாக ஒரு அமைப்பின் பெயரை வைத்துக்கொண்டு தனிநபராகவே இயங்குகிறார்கள்.

 

ஒரு படைப்பாளி இந்தப் பாராட்டுகளுக்கு அல்லது புறக்கணிப்புகளுக்குச் செவிசாய்க்க வேண்டியதில்லை. நான் நீண்டகாலமாக புறக்கணிப்புக்குள்ளானவன். இந்தப் புறக்கணிப்புத்தான் நான்கு கவிதைத் திரட்டுகளைச் சாத்தியமாக்கியதுஒரு படைப்பாளி அதிலும் குறிப்பாக கவிஞர் எந்தச் சட்டகத்தினுள்ளும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. நிற்கவும் கூடாது. யாருடைய பாராட்டுதலையும் பெறவேண்டியதில்லை. யாருக்காகவும் அல்லது எதற்காகவும் சமரசம் செய்யவேண்டியதில்லை. கண்டு கொள்வதும் காணாமல் போவதும் நுகர்வோர் மனநிலை சார்ந்தது. அது அவரவர் அரசியல் சார்ந்தது. ஒவ்வொரு பாராட்டுதல் ஒவ்வொரு விருதுகள் அல்லது புறக்கணிப்புகளின் பின்னும் நுண்அரசியல் இருக்கிறது.  இன்று உவப்பாயிருப்பது நாளை கசக்கலாம். அல்லது கசப்பது நாளை உவக்கலாம். அதைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை

இது என் பட்டறிவு.

 

  புலம்பெயர் தேசத்தில்,  புலத்தில் என  இருதளங்களிலும் இன்று அதிக அளவில் படைப்புகள் வெளியாகின்றன. உங்கள் பார்வையில் எந்தத் தளம் திருப்தி தருகிறது?

 

எனக்கு புலம் நிறையவே திருப்தி தருகிறது. புலம்பெயர் தேசத்தில் பல வெளியீடுகள் பணச்சடங்கை நோக்காகக் கொண்டு நிகழ்கின்றன. புலத்தில் அப்படி அல்ல. அது முப்பதாண்டு காலமாகப் போருக்குள் மூடுண்டதேசம்.

 

இன்று அங்கு வெளிவரும் படைப்புகளின் தரம் அதிகரித்திருக்கிறது. அதிலும் வடக்கை விட கிழக்கில் அதிகம் வெளிவருவதைக் காணமுடிகிறது. இது என் அவதானம்

 

புலம்பெயர் தேசத்தில் படைப்பாற்றல் அருகியிருக்கிறது. ஆனால் வெளியீடுகள் நிறைய நிகழ்கின்றன. மற்றைய புலப்பெயர் நாடுகளில் வதிபவர்கள் தொரன்றோ வந்து நூல்களை வெளியிடுகின்றனர். இவர்கள் புலத்தில் சென்று வெளியிடுவதில்லை. புதிதாக இப்போது புகலிடத்தில் குவிந்து வரும் மாசுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்றவகையில் பலர் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

 

புகலிடத்தில் வாழும் பலபடைப்பாளிகள் தங்களின் ஓரிரு படைப்புகளோடு நின்று போய்விடுகிறார்கள். அவர்களின் வாழ்வுச்சுமை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிப்பதில்லை.

 

எண்பது,தொண்ணூறுகளில் புகலிடத்தில் இருந்த படைப்பாற்றல் இன்றில்லை. முகப்புத்தகம் வேறு படைப்பாற்றலை குறுக்கியிருக்கிறது. . பலர் அதில் எழுதும் குறுந்தகவல்சிறுபதிவுகள் மற்றும் அதற்கு கிடைக்கும் 'லைக்குகளுடன் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.

 

 'இதழின் இணையாசிரியாரக இருந்த அனுபவங்களைப் பகிர முடியுமா?

 

எனக்கு அதில் முக்கிய பங்குண்டுமுன்பு சொன்னது போல வணிக இதழ்களிலிருந்து தீவிர எழுத்தின் பக்கம் திசை மாறியபோதில் ''கரம் இதழ் தொடங்கினோம். அக்காலத்தில் புகலிடச் சூழலில் சிற்றிதழ்கள் அருகியிருந்தன. எஞ்சியிருந்த 'காலம்போன்ற ஓரிரு சிற்றிதழ்களும் அறியப்பட்ட எழுத்தாளர்களையே கண்டுகொண்டனர் புதியவர் நுழைவதென்பது முயற்கொம்பு.

 

இச்சூழலில் ஒரு சிற்றிதழ் தொடங்கவேண்டிய தேவை எனக்கிருந்ததுஅக்காலத்தில் என்னுடன் மிக நட்போடிருந்த அ.கந்தசாமிபொன்னையா. விவேகானந்தன்  இருவரோடிணைந்து  ''கரம்  இதழ் தொடங்கினேன் இருமாதம் ஒன்று என்ற வகையில் நான்கு இதழ்கள் வெளிவந்தன.

 

இன்று மிக அறியப்பட்ட சுமதிரூபன்வசந்திராஜாபிரதீபா தில்லைநாதன்சக்கரவர்த்திரதன் மற்றும் நான் உட்பட பலர் சிற்றிதழில் நுழைந்து பிரபலமாக ''கரம் பத்திரிகையே வழிசமைத்தது,  பத்திரிகை யுத்தமறுப்பையும் மாற்றுக்கருத்தையும் கொண்டிருந்தது. அதேவேளை வெகுசன நீரோட்டத்தில் இயங்கிய பலரைக் காரசாரமாக விமர்சித்தது.  இதனால் பலத்த அறிமுகமும்,  எதிர்ப்பும் கிளம்பிற்று.

 

முதலாவது இதழோடு பொன்.விவேகானந்தன் பின்வாங்கினார். பொருளாதார  நிலையில் இறுதிவரை அ.கந்தசாமி அவர்களே பெரிதும் உதவினார்நான் பொருளாதார ரீதியில்  மிகவும் பின்தங்கியிருந்தேன். எங்களுக்குப் படைப்பில் இருந்த விருப்பும் செயற்பாடும் விநியோகத்தில் இருக்கவில்லை. சிற்றிதழ்களுக்குரிய பிரச்சனையே இதுதான்.

 

ஐந்தாவது இதழ் 'லே-அவுட்முடிந்து அச்சகத்துக்கு போகும் தறுவாயில் அ. கந்தசாமி அவர்கள் இனித் தன்னால் பண உதவி செய்வது சிரமம் என்றார்இவ்வேளையில் ''கரம் இதழின் வருகையானது கலைச்செல்வனுக்கு தாங்கள் சிற்றிதழ் ஒன்றைத் தொடங்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிற்று என்பது என் நம்பிக்கை. அவர் தன் நண்பர்களுடன் இணைந்து ஒரு (எக்ஸில்) சிறுபத்திரிகை தொடங்க இருப்பதாகத் தகவல்கிடைத்ததுஐந்தாவது ''கரம் இதழை எப்படிக்  கொண்டுவருவது என்பது தொடர்பாக நண்பர்ளுடன் கூடிக் கதைத்தோம். அப்போது சேரன், 'எக்ஸில்பற்றிய தகவலையும் கூறி அவர்களுடன் இணைந்து இயங்கும்படியும் தொரன்ரோவில் இருந்து படைப்புகளை ஒன்றுதிரட்டி அனுப்பும் படியும் இதனால் சிற்றிதழ் தொடர்பான உங்கள் முயற்சியில் திருப்தி கிடைக்கும் என்று அவர்கள் சார்பில்  பரிந்துரைத்தார். ஏற்றுக்கொண்டேன். ழகரத்தை கைவிடவேண்டியதாயிற்று. முடிவு வேறுவிதமாக அமைந்தது. பின்னாளில் கரத்தை பிச்சை எடுத்தாவது தொடர்ந்திருக்க வேண்டும் என உணர்ந்தேன்.

 

  கலைச்செல்வன்.  புலம்பெயர் இலக்கியத் தளத்தில் ஆழமாகத் தடம் பதித்த ஆளுமை. கலைச்செல்வனின் படைப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். கலைச்செல்வனின் படைப்புகள் மீது உங்களுக்கு இருக்கும் விமர்சனங்கள் ?

 

கலைச்செல்வனின் படைப்புகளை நான் முழுமையாகப் படிக்கவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய சில கதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். அவர் நல்ல கதை சொல்லி. அவர் திசை திரும்பாது சிறுகதைநாவல்களில் மட்டும் இயங்கியிருந்தால் ஒரு சிறந்த படைப்பாளியாகப் பார்த்திருக்க முடியும்.

 

அவருடைய கட்டுரைகள்பத்திகள் சிலவேவ்வேறு புனைபெயர்களில் எழுதியிருப்பதாக  பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இலக்கியச் சந்திப்புகளில் அவர் வாசித்த கட்டுரைகள் முக்கியமானவை எனச் சொல்லப்படுகிறது.

எல்லாவற்றையும் ஒருசேரப் படித்தால்தான் படைப்புகள் மீதான என்கருத்தைச் சொல்ல முடியும்.

 

நிற்க,

கலைச்செல்வன் புலம்பெயர் இலக்கியத்தடத்தில் இயங்கிய முக்கியமான ஆளுமை என்பதில் ஐயமில்லை. அவரது ஆளுமை படைப்பில் இருந்ததைக் காட்டிலும் செயற்பாடுகளில் அதிகம் இருந்திருக்கிறது. ஐரோப்பிய இலக்கியச் சந்திப்புசிற்றிதழ்கள் (பள்ளம்எக்ஸில்உயிர்நிழல்) மற்றும் புகலிடச்சினிமா என மூன்றிலும் இயங்கியிருக்கிறார். இந்த மூன்றும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

 

அவரது மரணத்தின் போது இருந்த உணர்வெழுச்சியைப் பார்த்தபோது  அடுத்த ஓரிரு ஆண்டுக்குள் அவரது நண்பர்களால்  அவர் படைப்புகள்  ஆவணப்படுத்தப் பட்டிருக்கும் என்றே நம்பினேன். ஒரு டாக்குமென்றி”  எடுக்கப்போவதாக  கூடச் சொன்னார்கள்.

 

அவருடன் வாழ்விலும்  இலக்கியத்திலும் இணைந்து செயற்பட்ட லஷ்மியிடமும் ஒரிரு தடவை கேட்டேன். ஐந்தாம் ஆண்டு  நினைவாக அவரது படைப்புகளை கொண்டுவர இருப்பதாகச் சொன்னார்அவர் கையில் அனைத்துப் படைப்புகளும்  சேகரிப்பில் இருக்கிறதென்பதை அறிவேன். அவர் இன்றுவரை வெளியிடாமல் இருப்பதன் காரணம் புரியவில்லை.

 

கலைச்செல்வனோடு  நீண்டகாலம் இலக்கியத்தில் இயங்கிய சுசீந்திரனிடம் கேட்டேன். அவர் அதைப் பெற்றுத் தந்திருந்தால் கூட இதுவரையில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கும் இன்றுவரை நடக்கவில்லை.  இப்போ பத்தாவது ஆண்டும் வந்துவிட்டது. கலைச்செல்வனோடு இறுதி நேரத்தில் இணைந்து செயற்பட்டவர்கள் வேறுவேறு திசையில் நிற்கின்றனர்.

 

எனக்கு நம்பிக்கை போயிற்று. என் ஆயுள் கேள்விக்குறியானபோது இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. கலைச்செல்வன் என் சகோதரன். அவ் வகையில் அதைசெய்வதற்கான உரித்து எனக்கும் உண்டு. முழுமையாக ஆவணப்படுத்துதல் எனக்குச் சாத்தியமில்லை என்பது தெரிந்தபோதும் கிடைத்ததையாவது ஆவணப்படுத்த வேண்டும் என நினைக்கின்றேன். அவையாவது மிஞ்சட்டும். அதில் தவறில்லை. 

 

இந்த இடத்திலும் நான் வேண்டுவதெல்லாம் கலைச்செல்வனின் படைப்புகள்அது தொடர்பான தகவல்கள் அல்லது அதை வைத்திருப்பவர்களிடம் இருந்து பெற்றுத் தந்து உதவுங்கள் என்பதே. அது உங்களோடு வாழ்ந்த நண்பனுக்குச் செய்கின்ற கௌரவமாக இருக்கும்.

 

 நீங்கள்கலைச்செல்வன் இருவருக்கும் இலக்கியத்தில் தடம் பதிக்க எந்தச் சூழல் காரணமாகியது ?

 

மனந்திறந்து பேசுவதாயின் இதில் சொல்வதற்கு நிறைய விடயங்கள் உண்டுஎன் பதினைந்தாவது வயதில் எழுபதாம் ஆண்டுத் தேர்தல் வந்தது அப்போது தந்தை.செல்வா. வீ,பொன்னம்பலம் இருவரும் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டனர். அப்போது தான் அப்பா என்னை முதன்முதலாகத் தேர்தல் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றார்அவர் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருந்தார்இதற்குப் பின்தான் அவரைப் பற்றியும் அவர் மலேசிய விடுதலை அமைப்பில் போராளியாக இருந்த இளமைக்காலம் தொடர்பாகவும் அறியமுடிந்ததுஅவரது வாழ்வும் கொள்கையும் எனக்குள் ஒருவித எழுச்சியைத் தந்ததுஅவர் என்னை 'இதுவே உன்திசை'யென இடதுசாரித்துவ சிந்தனையின் பால் திருப்பிவிட்டதாக உணர்ந்தேன்   எழுபதுகளின் ஆரம்பத்தில் அப்பா விசுவமடுவில் இருந்தார். அங்கிருந்த அவர் நண்பர்களில் பலர் கம்யூனிஸ்ட்கட்சியின் சண்முகதாசனின் பிரிவைச் சார்ந்தவர்கள்.

 

அவர்களின் உரையாடல்களோடு சேர்ந்தே வளர்ந்தேன். அப்பா இறந்ததன் பிற்பாடு அவர்கள் தொடர்பு இல்லாமல் போனது.

எழுபதில் நடந்த தேர்தலோடு மூடப்பட்டிருந்த  வருத்தலைவிளான் வாலிபர் சங்கம்” என்ற அமைப்பை என் வயதொத்தவர்களோடு இணைந்து பொறுப்பேற்று   இயங்கத் தொடங்கியதிலிருந்து என் பொதுவாழ்வு ஆரம்பமானது,

அக்காலத்தில்தான் என் வாசிப்புப் பழக்கமும் தொடங்கியதுஎனது சிறியதாயார் வீட்டில் ஒரு தகரப்பெட்டி (றங்குப்பெட்டி)  நிறைய புத்தகங்கள் இருந்தன. அத்தனையும் கல்கிகலைமகள் போன்றவற்றிலிருந்து சேகரித்து பைன்ட்” செய்யப்பட்ட சரித்திர சமூக நாவல்கள்.

 

கல்கிஅகிலன்சாண்டில்யன்லஷ்மி எனத் தொடர்ந்து பின் மு.வரதராசன் அப்பால்காண்டேகர் வரை நீண்டது. கலைச்செல்வன் என்னிலும் ஐந்து வருடங்கள் இளையவன்

பின்னாளில் என் தெரிவிலுள்ள புத்தகங்கள் தான் கலைச்செல்வனுக்கும் கிடைத்ததனஇவைதான் இருவரினதும் வாசிப்பாக இருந்தது எங்களுக்குச் சரியான தெரிவைத் தர யாரும் இருக்கவில்லை. நாங்கள் கற்ற யூனியன் கல்லூரியிலும் அஃதே நிலை.

 

எழுபத்திரண்டில் முல்லைமணி எழுதிய 'பண்டாரகவன்னியன்நாடகத்தை இயக்கி மேடை யேற்றினேன் அதில் நான் பண்டார வன்னியனாகவும் அவன் தம்பி கைலாசவன்னியனாக கலைச்செல்வனும் நடித்திருந்தோம் சங்கத்தின் செயற்பாடுகளுடாக எங்களை நன்கு வளர்த்துக் கொண்டோம். பட்டி மன்றத்தில் நான் ஓருபக்கம் தலைமை வகித்தால் அவர் மறுபக்கத்தின் தலைவனாக இருப்பார்இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். அங்கும் அது போலவே.

 

இருந்தும்உறவுகளில் பாதிப்பிருக்கவில்லை. இருவரும் ஒரு சைக்கிளில் திரிவோம் ஒரு கட்டத்திற்கு பிற்பாடு எங்கள் இருவர்க்கிடையிலும் ஒருவித போட்டி மனோபாவம் துளிர்விடத் தொடங்கியது, “கொம்பு சீவி” விடுவதற்கும் பலர் இருந்தார்கள்அதுதானே இயல்பு. இதனால் சிலசமயங்களில் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கியது.

 

கலைச்செல்வன் 1984ல் பாரீஸ் வந்து சேர்ந்தார். அவரது நண்பர்கள்செயற்பாடுகள்வாசிப்புஇலக்கிய முயற்சிகள் எல்லாமே அவரைப் புதிய திசைக்கு மாற்றியதுநான் போருக்குள் உழன்று கொண்டிருந்தேன்.

 

ஆரம்பத்தில் எனக்குப் புலம்பெயரும் எண்ணமிருக்கவில்லை. இந்தியராணுவ வருகைக்கு பின் யுத்தம் முடிவுறும் என நம்பியிருந்தேன். நான் 1992ல் கனடா வந்தேன்.

 

இந்தப் பின்புலத்தில்தான் முன்பு கூறியது போல நான் ஜெயபாலனின் கவிதைத்தொகுப்பைப் படித்தேன். எழுதத் தொடங்கினேன். அதற்குப் பின்பும் ஓரிரு ஆண்டுகள் கழிந்த பின்பே தேர்ந்தெடுக்கப்பட்ட திசையில் என் தேடல் தொடங்கியது சிறிது சிறிதாக கவிதைக்குள் ஆட்பட்டேன்.  நான் ''கரம் தொடங்கி பிற்பாடு கலைச்செல்வன் தன் நண்பர்களுடன் இணைந்து 'எக்ஸில்தொடங்கவும் இத்தகைய சூழலே காரணம் என்பது என் மனசறிந்த உண்மை. எக்ஸில்பின் 'உயிர்நிழலில்இரண்டிலும் எனக்கு எந்த உருத்தும் இருக்கவில்லை.  முன்பு சேரன் கூறியது போல எந்த மனநிறைவையும் அது தரவில்லை. படிப்படியாக நான் செய்துவந்த பங்களிப்பும் நின்றுபோனது.

 

இரண்டாயிரமாம் ஆண்டு நான் கலைச்செல்வனை நேரில் பார்த்தபோது பிரமித்து நின்றேன். அவனது தோற்றமும் ஆளுமையும் என் அப்பாவை நினைவூட்டியது. மகிழ்ந்தேன்.  இளமைகாலத்தில் இருக்கும் உறவும் நெருக்கமும்  அவரவர்கள் குடும்பங்களானபின் இருப்பதில்லை. நாங்களும் விதிவிலக்கல்ல.

 

திடீரென நிகழ்ந்த அவனது மரணம் என்னைக் கதிகலங்க வைத்தது.

 

இப்போ பத்து வருடங்கள் கழிந்து விட்டனஅவன் இருந்திருந்தால் இருவரும் இன்னமும் வளர்ந்திருப்போம்.இருந்தும் ஏதோவகையில் நாங்கள் ஒருவர்க்கொருவர் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் சமூகத்துக்குப் பணியாற்றியிருக்கிறோம் என்பதே சிறப்பு.

 

 உங்களின் தந்தையார் மலேசிய விடுதலை அமைப்பில் செயற்பட்டதாகக் கூறினீர்கள் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா?

 

அவர் தன் தந்தையாருடன் குடும்பமாகச் சிறுவயதில் மலேசியா சென்றிருந்தார். போய்சிலநாட்களிலேயே தாயாரும் தமக்கையும் ஊர் திரும்பி விட்டார்கள். சில ஆண்டுகளில் அண்ணன் ஒரு விபத்திலே இறந்துவிட்டார். இச்சூழலில் வாகன ஓட்டியாக இருந்த இவர் ஜப்பான் ராணுவத்தின் அட்டூழியங்களைச் சந்திக்க நேரிடுகிறது.

 

இந்த அகத்தூண்டலில் மலேசியக் கம்யூனிஸ்கட்சியில் இணைந்தார். இவரைப் பொலீஸ் தேடத் தொடங்குகிறது. நெருக்கடியான ஒருநிலையில் தப்பிக் காட்டுக்குள் நுழைந்து கட்சியின் ஆயுதப் போராளியாகிறார்.  அங்கு கப்டன் தரத்தில் இயங்கியதாக அறிந்தேன். பின்னாளில் கட்சியில் உள்ள தலைவர்கள் அவரைக் கப்டன் என அழைப்பதைக் கண்டிருக்கிறேன்.

 

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவுக்கு வரும்காலத்தில் கட்சி கலைக்கப்பட்டு  பிரிட்டிஷ் இராணுவத்திடம் இருந்து தப்பித்து பர்மா ஊடாகத் தரைமார்க்கமாக தமிழ்நாடு வருகிறார். அங்கு கைதுசெய்யப்பட்டுச் சிறைசெல்ல நேர்கிறது. அச்சூழலில் என். எம். பெரேராடாக்டர். விக்கிரமசிங்கா  ஆகியோருடனான நட்பு ஏற்படுகிறது.  விடுதலையாகி இலங்கை வந்தபோது  டாக்டர் விக்கிரமசிங்கா அவர்களே இவரை எதிர்கொள்கின்றார்.

 

ஊரில் யாருடனும் தொடர்பற்ற நிலையில்  கொழும்பில் தங்கிவிட்டார்   அப்போது கட்சியின்  'அத்தஎன்ற பத்திரிகையில் இரண்டாண்டுகள் கடைநிலை ஊழியனாக வேலை செய்கிறார். இரண்டாண்டுகளின் பின் இளவாலையில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றும்போது அவர் மைத்துனர் அவரை அடையாளங்கண்டுகொள்கிறார். அவர் தமக்கையார் குடும்பம் வறுமைநிலையில் வாழும் நிலைகண்டு பின் ஊரிலேயே தங்கிக் கட்சி வேலைகளில் ஈடுபடுகிறார். 

 

ஐம்பதில் பொன். கந்தையா தேர்தலில் நின்ற போது தினமும் சைக்கிளில் இளவாலையில் இருந்து தேர்தல் பணிக்காக பருத்தித்துறை செல்வார்களாம். போகும்போது அக்காலத்தில் இளைஞனாக கம்யூனிஸ்ட்கட்சியில் செயற்பட்ட பிறைசூடி (றயாகரனின் தந்தை) யையும் அழைத்துச் செல்வாராம். இவர்களுடனான நட்பின் தொடர்ச்சியாக பிறைசூடியின் அக்காவான என் அம்மாவைத் திருமணஞ் செய்தார்.

 

எங்கள் ஊர் ஒரு வித்தியாசமான ஊர். யாழ்ப்பாண மனோபாவத்துக்கு எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டுமாயின் எங்கள் ஊரைக் குறிப்பிடலாம். அப்பா பல தொழில்கள் செய்தும் உருப்பட முடியவில்லை.  திருமணமாகி ஆறேழு ஆண்டுகள் தான் ஊரில் இருந்திருப்பார். ஒத்துவரவில்லை.

 

1958க் கலவரத்தைத் தொடர்ந்து  'தருமபுரம்கிராமம் உருவானது. அப்போ  அப்பகுதிக்கான 'டீ.ஆர்.ஓவாக முருகேசபிள்ளை இருந்தார். இக் கிராம உருவாக்கத்தில் இணைந்து செயற்பட்டார். எழுபதாம் ஆண்டுவரை அக்கிராமத்திலேயே வாழ்ந்தார்.

 

நான் அவரது வாழ்வை நேரடியாகப் பார்த்தவன். மாக்சிஸம்கம்யூனிசத்தைக் கரைத்துக் குடித்த தங்களை கம்யூனிஸ்ட்டுகள் எனச் சொல்லும் பல பண்டிதர்களைப் பார்த்திருக்கிறேன். இரவிரவாக வாதாடுவார்கள். அவர்கள் வாழ்வு அதற்கு நேர் மறையாக இருக்கும். கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்தால் மட்டும் போதாது அது செயலிலும் இருக்கவேண்டும்.

 

அந்தக்கொள்கைகளில் நம்பிக்கையும் செயலும் இணைய வாழ்ந்தவர் மிகச்சிலரே. இதில் என் தந்தையும் ஒருவர்.  அவர் பற்றிய நீண்ட பதிவொன்றை விரைவில் எழுதுவேன்

 

  உங்களது ஆரம்பமே ஒரு இடதுசாரித்துவம். இதன் பின்னணியில் உங்களின் செயற்பாடுகள் பற்றி?

 

அம்மா ஒரு மூன்று வருடங்கள் வரையிற்தான் தருமபுரத்தில் வாழ்ந்தார். அவருக்கு அப்பாவின் வாழ்வியலும்  அச்சூழலும் ஒத்துவரவில்லை.  ஊர் திரும்பிவிட்டார்.   அம்மாவுக்கும் அப்பாவிற்குமான வாழ்வியல் போராட்டமே  அப்பா கட்சிப் பணிகளில் இருந்து விடுபடக் காரணமாக அமைந்தது என நம்புகிறேன். 

 

நாங்கள் அம்மாவுடன் அவர் ஊரிலேயே வாழ்ந்தோம். 1973ல் அப்பா காலமானதன் பிற்பாடு வறுமை அசுரத்தனமாகத் தாக்கியது. அதனோடு போராடவே எமது காலம் போது மாயிருந்தது.

 

ஊரில் எல்லாவிதத் தாக்குதல்களையும் புறக்கணிப்புகளையும் வடுக்களையும் சுமக்க வேண்டியவர்களாக இருந்தோம். அம்மா ஒரு சண்டைக்கோழியைப் போல எங்களைத் தன் இறகுக்குள் வைத்துப் பராமரித்தார். 

 

1975இல் நடைபெற்ற தேர்தலில் நான் வி.பொன்னம்பலத்தின் வீட்டில் தங்கியிருந்து  தேர்தல் பணியாற்றினேன். 1977 ல் அவர் கரணமடித்தார்.  பின் போரட்டம் தொடங்கியது. சிலகாலம் டொலர் பாம்’  குடியேற்றத்தில் தொண்டனாயிருந்தேன். அப்போது இயக்கத்தின் பின் பலத்துடன் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் கீழ் இயங்கியது. அம்மா அறிந்து கொண்டார். என்னைத் திரும்பப் போகவிடவில்லை. நானும் அவர் சொல்லை மீறமுடியாதவனாக இருந்தேன். சிலகாலம் புளொட் அமைப்பில் அரசியல் பணி செய்தேன்.  நாடகங்கள்கவிதா நிகழ்வென இயங்கினேன். இப்படியே கழிந்ததன்றி பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என் மனசாட்சிக்கு விரோதமின்றி அக் கொள்கைகளுடன் வாழ்ந்திருக்கிறேன் என்பதில் திருப்தி.

 

  சிறுகதைகள் மற்றும் பத்தி எழுத்துகள் போன்ற இன்னொரு தளத்திலும் இயங்கி வருகிறீர்கள். கவிதை -சிறுகதை -பத்தி எழுத்துகளின்  வாசகர் தளங்கள் எப்படி இருக்கின்றன ?

 

கவிதை விடுத்து மற்றைய தளங்களில் இயங்குகிறேன் என ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. இதுவரையில் ஐந்து சிறுகதைகள் (கல்வெட்டுமனுஷிபோகுமிடமெலாம்ஆண்டபரம்பரைகள்பழி)  மட்டுமே எழுதியிருக்கிறேன். பத்து வரையிலான பத்திகள்  நினைவு அல்லது அனுபவப் பகிர்வாக எழுதியிருக்கின்றேன் அவை அளவில் சற்றுப் பெரியவை. பத்திகள் என்று குறிப்பிடலாமா என்பதும் தெரியவில்லை.

 

என்னோடு எழுதப் புறப்பட்டவர்கள் பலர் வெள்ளாடுகள் போல கவிதைகட்டுரை குறும்படம் சினிமாநாடகம் என அங்கொன்றும்இங்கொன்றுமாக ஒவ்வொரு கடி கடித்துவிட்டு  எதையும் உருப்படியாகச் செய்யாது விடுவது விசனத்தைத் தந்தது,

 

அதனால் நான் கவிதையோடு நிற்பது என முடிவுசெய்தே இயங்கத் தொடங்கினேன். எனக்கான நேரமும் வாழ்வியல் சூழலும் அதற்கே போதுமானதாக இருந்ததுபின்னாளில் கவிதை என்பது வாழ்வுச் சிக்கலிலிருந்து என்னை மீட்டுக் கொள்வதற்கான கருவியாகவும் பயன்பட்டது. நான் மனச்சிதைவுக்கு  உள்ளாகும் போதெல்லாம் என்னை கவிதையில் இறக்கிவைத்துவிட்டு  நிம்மதியாக தூங்கவோ மறுவேலை பார்க்கவோ உதவிற்று. அண்மைக்காலக் கவிதைகளில் அதை அவதானிக்க முடியும். இப்போது சற்று நேரங்கிடைக்கிறது உடல்நிலை கைகொடுக்குமிடத்து உரைநடை இலக்கியங்களில் கூடுதல் கவனங் கொள்ள எண்ணியிருக்கிறேன்.

 

நிற்க,

இன்று கவிதைகளைப் பொறுத்த வரையில் அதன் வாசகர் தளம் குறுகி வருவதாக உணர்கிறேன். வருடத்தில் 500 தொகுப்புகளுக்கு மேல் கவிதை என்ற தலைப்பில் வருகின்றன. இதில் விரல்விட்டு எண்ணக்கூடிய தொகுப்புகளே தேறும். ஒரு தொகுப்பில் ஐம்பது பிரதிகள் விற்பனையாகுவதே  அரிது. கவிதை எழுதுபவர்கள் வாங்கினால் கூட 500 பிரதிகள் விற்பனையாகவேண்டும் அதனால் இன்று வாசகர் கவனம் உரைநடை இலக்கியம் மீதே திரும்பியிருக்கிறது. வெளியீட்டு நிறுவனங்கள் கூட உரைநடை இலக்கியத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.  அஃது செழுமை பெற்று வருகிறது.

தற்போது ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதை மற்றும் பத்தி இலக்கியங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். நாவல் இலக்கியத்தில் நாம் மிகப் பின்தங்கியே நிற்கிறோம்.

 

  நீங்கள் ஒரு நாடக கலைஞனாகவும் இருந்திருக்கிறீர்கள். நாடகம் மக்களை நேரடியாகச் சந்திக்கும் ஒரு சிறப்பான கலைவடிவம். எப்படி  உங்களின் அரங்கு சார் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இன்று நாடகத்துறையில் உங்களின் செயற்பாடுகளைப் பற்றி?

 

சிறுவயதிலிருந்தே நாடகத்தின் மீது பெருவிருப்பிருந்தது. இன்றும் நான் 'நாடகன்என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். நான் அருணோதயாக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே பாடசாலை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன்.

 

'இரு துருவங்கள்என்ற நாடகத்திலேயே முதலில் மேடையேறினேன். ஆசிரியர் சிவபாதசுந்தரம் அதைப் பாடசாலைகளுக்கிடையேயான நாடகப் போட்டிக்கு தயாரித்தார்.  பின் யூனியன் கல்லூரியிலும்  ஓரிரு நாடகங்களில் நடித்திருக்கிறேன்.

 

நான் முதலில் நெறியாள்கை செய்து நடித்த நாடகம் 'பண்டாரகவன்னியன்இதன் பிரதி முல்லைமணி அவர்களால் எழுதப்பட்டது. வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது. இதில் தொடர்பறாமல் 7 காட்சிகளாகச்சுருக்கி பிரதி தயாரித்தேன். இதுவே நான் சுயமாக முதன்முதலில் இயங்கிய இலக்கிய முயற்சி எனலாம்.

 

நெறியாள்கை செய்தபோது நல்ல அனுபவம் கிடைத்தது. இரண்டுமூன்று இடங்களில்  மேடையேற்றினோம். அக்காலத்தில் மாவை மறுமலர்ச்சி கழகம் நாடகப் போட்டிகளில் பங்குபெறும் அமைப்பு. அவர்களின் நாடகங்களில் இடைநிரப்பு பாத்திரமாக பலதடவைகள் நடித்திருக்கிறேன்.

 

1981ல்  என நினைவு. யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியின் நாடகங்கள் சில தொடர்ச்சியாக வீரசிங்கமண்டபத்தில்  மேடையேறியது. அஃதே நாடகம் மீதான புதிய தரிசனத்தை தந்தது. 1987ல் நாடக அரங்கக் கல்லூரியும் யாழ் பல்கலைக்கழகமும் இணைந்து ஆறுமாத நாடகப் பட்டறையை நடாத்தினர். அதில் பயிற்சி பெற்றேன்.

அந்த அனுபவத்தோடு புலம் பெயர்ந்த பிற்பாடு  1995 இல் தொரன்றொவில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்புக்காக மஹாகவியின் 'புதியதொரு வீடுநாடகத்தை நெறியாள்கை செய்து மேடையேற்றினேன். அண்மையில் கூட சக்கரவர்த்திசெழியன் போன்றவர்களின் நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடிகனாக  பங்குபற்றி இருக்கிறேன்

 

  ஈழத்தமிழினத்துக்குஈழத்துக்கு வெளியில் அரசியல் ரீதியான ஒரு அடையாளம் கிடைத்த தேசம் கனடா. கனடாவில் தமிழ் இலக்கிய அடையாளம் எப்படி இருக்கிறது ?

 

ஈழத்தமிழர்கள் பெருவாரியாக ஒருநாட்டின் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில்  வாழுகிறார்கள் என்றால் கனடா என்பதில் எந்த ஐயுறவும் இல்லை. முன்பின்னான ஐந்து லட்சம் தமிழ்மக்கள் தொரன்ரோவில் மட்டும் வாழ்வதாக சொல்கிறார்கள்.

 

பெருவாரியான மக்கள் கனடாவை நோக்கிப் படையெடுத்ததன் காரணம் இரண்டு. ஒன்று ,குறைந்தது நான்கைந்து வருடங்களில் குடியுரிமை  பெற்று குடும்பத்தினரை அழைத்துக்கொள்வது இலகு. இரண்டாவதுஆங்கிலம் பேசும் நாடுஇதில் முதலாவதின் அதாவது குடியுரிமை பெறுவதன் பொருள் இனி நாங்கள் தாயகம் திரும்பப்போவதில்லை என்பதாகும்.  இரண்டாவதன் விளைவு ஆங்கிலமே நாம் பேசக் கௌரவமான மொழி.

 

இவற்றை நாங்கள் மறுத்தாலுங்கூட இதுவே எங்கள் ஆழ்மனதில் ஆழப்பதிந்த விடயம். இது என் அவதானம்.

 

இன்று கனேடியப் பாராளுமன்றத்தில் ஒரு ஈழத்தமிழ் உறுப்பினர் இருக்கிறார்பலர் அடுத்த தேர்தலில் போட்டியிட இருக்கிறார்கள்.  மொழியைத் தவிர மீதி எல்லா விடயங்களிலும் தமிழர்கள் கடும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இதுவரை நாளும் தமிழை முதன்மொழி வடிவில் கற்பிக்க முயற்சி செய்து தோல்வி கண்ட நம் தமிழ் அபிமானிகள் இப்போ இரண்டாவது மொழி வடிவில்  தமிழைக் கற்பிக்கும் வழிமுறைகளைத் தேடுகின்றனர். அதிலும் தூய தமிழைக் கற்பிப்பதா அல்லது நடைமுறைத் தமிழை கற்பிப்பதா என்பதில் பெரும்வாதங்களை பத்திரிகைகளில் காண்கிறோம். இவையெல்லாம் அவரவர் சுய பண்டிதத் தனத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது,மேற்தட்டு வர்க்கம் ஆங்கிலத்தையே பேசுகிறது. அதேவேளை நம் அரசியல்வாதிகள்போல மேடைகளில் தமிழ்தமிழ் எனக் கொக்கரிக்கின்றனர். 

 

சாதாரணமானவர்களின் பிள்ளைகள் வீட்டிலாவது தமிழைப் பேசினால் போதும் என்ற நிலையில்  இருக்கிறார்கள். இந்த நிலையில்  கனேடியத் தமிழரிடம்  எதிர்காலத்தில் 'தமிழ் இலக்கியம்பற்றிய கேள்வி என்னளவில் கேள்விக்குறியே. இதுவரை நாளும் இலங்கையிலிருந்து தொடர்ச்சியாக அகதி அந்தஸ்துக் கோரி அல்லது குடியுரிமை பெற்று வந்தவண்ணமிருந்தனர். கடந்த ஓரிரு ஆண்டுகளில் அருகிவிட்டது. இல்லை என்று சொல்லலாம். ஒரு உதாரணத்திற்குச் சொல்வதானால் எண்பதுகளில் வந்த காலம் செல்வத்திலிருந்து அண்மைக்காலம் வரை வந்தவர்களிடம் மட்டுமே தமிழ் இலக்கிய அடையாளம் தங்கியிருக்கிறது.

 

இப்போ வாராவாரம் நூல் வெளியீடுகள் இடம் பெறுகின்றன. விருதுகள் இலக்கியப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் தரம்தரமல்ல என்ற வேறுபாட்டுக்கு இடமில்லை. விரலுக்கு ஏற்ற வீக்கம் போல எல்லாத் தரமும் இருக்கிறது. 

 

இப்போ அண்மைக் காலங்களில் இந்த இலக்கிய நிகழ்ச்சிகள் ஆங்கில மயப்பட்டு வருவதையும் காணமுடிகிறது. விழாக்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதையும் அங்கு வரும் தமிழர்கள் நடை உடைபாவனைகள் ஆங்கில மயப்படுவதையும் அவதானிக்கிறேன் சுருங்கச் சொல்வதானால் விரும்பியோ விரும்பாமலோ  பேரக்குழந்தைகளுக்காக எங்கள் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

 

  கனடாவில் வாழும் ஏனைய சமூககங்களோடு தமிழினம் எவ்வாறானதொரு போக்கினைக் கடைப்பிடிக்கிறது?

 

நான் அண்மையில் பாரீஸ் வந்தபோது லாச்சப்பலில் உள்ள ஒரு தமிழ் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றேன் அங்கு இருந்த வாடிக்கையாளரில் பாதிக்குமேல் வேற்றினத்தினர். தொரன்ரோவில் மூலைக்கு மூலை 'டேக்அவுட்உண்டு.  இருந்து சிற்றுண்டி அல்லது இருந்து உணவு உண்ணும் 'ரெஸ்ரோரன்ட்அரிது. இருப்பதிலும் அனேகம் இந்தியத் தமிழ் உணவகங்கள்.

 

உண்மையில்  கனடா ஒருபல்கலாசார நாடாக இருந்தால் இங்குதான்  பல்லினப் பரிமாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.  அண்மைக்காலங்களில் திருமணம் போன்ற சடங்குகளில் உணவு மற்றும் உடைகளில் இந்திய வடமாநிலக் கலாசாரங்களை பின்பற்றுவதைக்  காணக்கூடியதாக இருக்கிறது

 

ஆண்கள்( மாப்பிளை) பஞ்சாபியர் போல உடை அணிதல்  பெண்கள் 'மெகந்திஅணிதல் எனப் பல சடங்குகளில் மாற்றம் வருவதைக்  காணமுடிகிறது.  இவை காலாசாரப் பரிமாற்றமா என்று கேட்டால் இல்லை என்பது என்கருத்துகுறிப்பாக எம்மவர்களுக்கு எங்கள் உணவுஉடைகலாசாரம் என்பவற்றின் மீது மதிப்பின்மை இருப்பதாக உணர்கிறேன். 

 

இரண்டாவதுதிருமணம் போன்ற சடங்குகளின் இடைத்தரகர்களாக இருப்பவர்கள் மண்டபம் மற்றும் திருமண நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கிறார்கள் இவர்கள் வியாபாரிகள்.  இவர்களின் வியாபாரப் போட்டிகாரணமாக இதுபோன்ற விடயங்கள் திணிக்கப்படுகின்றன.

 

வருடத்தில் இரண்டு மூன்று திருமணக் காட்சிச்சாலை நிகழ்வுகள் தமிழர்களால் நிகழ்த்தப்படுகிறது. இங்கு வடஇந்திய உடையலங்கார நிகழ்ச்சிகளே அதிகம். விற்பனைச்சாலைகளும் அத்தகையதே.

 

இவற்றை விட்டால் மற்றைய நிகழ்ச்சிகள் சடங்குகள் இலக்கியம் போன்றவற்றில் வேறு சமூகத்தினர் வந்து கலந்து கொள்வதோ அல்லது அவர்கள் நிகழ்வுகளில் நாங்கள் கலந்து கொள்வதோ அரிது. பல்கலைக்கழக மட்டத்தில் கலாசார பரிவர்த்தனை உள்ள சிலநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

 

  ஈழத்தமிழ் இனத்தின் அடையாளம் இன்று என்னவாக இருக்கிறது?

 

தெரியவில்லை.

அடையாளம் தேடித் தொடங்கிய போராட்டமானது இத்தகைய கேள்வி எழும்வண்ணம் முடிவடைந்தது எங்கள் துர்ப்பாக்கியமே. புலம்பெயர்ந்த மக்களின் அடையாளமானது ஆற்றில் வீழ்ந்த உப்பு மூடைக்கு நிகரானது. சிலசமயம் பொதிசெய்யப்பட்ட சாக்குமட்டும் மீந்திருக்கலாம்.

 

ஈழத்தைப் பொறுத்தவரையில் அது எங்களின் மண்.. சிறு மழை போதும் நாங்கள் துளிர்க்க. இதுவே வரலாறு. இலங்கை வரலாற்றில் பன்நெடுங்காலமாக எழுச்சியும் வீழ்ச்சியும் கண்டே வாழ்ந்து வந்திருக்கிறோம். விரைவில் அடையாளம் இழந்து அழிந்துவிடுவோம் என நம்பவில்லை.

 

  'முதுவேனில் பதிகம்தொகுப்பில் இருக்கும் 'தோற்கடிக்கப்பட்ட நிலம்முள்ளிவாய்க்கால்நெத்தலி ஆறுபோன்ற பல கவிதைகள் ஈழத்தின் வலிகளைப் பேசுகின்றன. ஈழப் போராட்டம் பற்றிய புரிதல் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளையவர்களிடம் எப்படி இருக்கிறது ?

 

இதற்கு எவ்வகையில் பதில் சொல்வேன்குறிப்பாக 1972ம் ஆண்டில் தொடங்கிய தரப்படுத்தலில் இருந்து இன்றுவரை இந்த யுத்தத்தை அவதானித்து வருபவன். நாங்கள் எல்லோருமே ஒருகாலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பங்காளர்களாக  இருந்தவர்கள்தான்.

 

ஒரு கட்டத்திற்குப் பிறகு ஈழவிடுதலைப் போராட்டம் சாத்தியமில்லை என்று தோன்றியது அல்லது ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்று கொள்ளலாம். அதற்குபின் நிகழ்ந்தது இரண்டு அதிகாரங்களுக்கிடையேயான போர் என்பது என் கருத்தாயிருந்தது.

 

மக்களை மிரட்டியே  யுத்தத்தின்பால் இணைத்துக்கொண்டது.  அது  பலவிதங்களிலும் மக்களை அடிபணியவைத்தது. மேலும் இந்த யுத்தமானது பெருவாரியான மேல்தட்டு வர்க்கத்தினரின் புலம்பெயரும் அவாவினை அல்லது மேல்நாட்டுக் கனவினைப் பூர்த்திசெய்தது.

 

யாரோ போராட்டத்தைத் தொடங்கினார்கள்   வேறு யாரோ யுத்த முடிவில் மாண்டார்கள்.  எப்படி இந்த யுத்தம் தொடங்கியது என்பதை அவர்கள் அறியார் இது அதிகாரங்களுக்கிடையேயான யுத்தமாக மாறிய காலத்திருந்து இந்த யுத்தத்தை பலமாகக் கண்டித்து வந்திருக்கிறேன்.  பாரபட்சமில்லாமல்  இருபக்க அநீதிகளையும் சுட்டி வந்தேன் என்றோ ஒருநாளில்  இந்தமுடிவு தான் எமக்கு கிட்டும் என்பதை என் மனக்குருவி எச்சரித்துக் கொண்டே இருந்தது.

 

என் கவிதைகள் பக்க சார்பின்றி இருந்தும் கூட தமிழினத்தின் துரோகியாகவே சித்தரிக்கப்பட்டேன் குறிப்பாக என் கோபமெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீதே இருந்தது பலர் பிரமுகர்களாகவும்  பலர் பணம் பண்ணுபவர்களாகவும் இருந்தனர்.

 

அவர்கள் யுத்தத்தின் பெயரால் பலமில்லியன் டாலர்களை  மக்களிடமிருந்து கொள்ளையிட்டனர். பல வர்த்தக ஸ்தாபனங்களில் முதலீடு செய்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர் வாழ்கின்றனர்.

 

இவர்களுக்கு யுத்தம் தேவையாக இருந்தது. அவர்கள் எண்ணியிருந்தால் யுத்தத்தின் போக்கை மாற்றியிருக்கலாம். இவர்களின் குறி பணத்தின் மீதே இருந்ததால் இளைஞர்களிடத்து  ஈழப்போராட்டம் அல்லது ஈழம் குறித்த  சரியான புரிதலை ஏற்படுத்தத் தவறிவிட்டனர்.

 

யுத்தத்தின் பின்னான புகலிட நிலையானது  மாறியிருக்கிறது.  இன்று பல இளந்தலைமுறையினர்  இதை அறிவர்.  மழைவிட்டபின் மரங்களின் கீழ் சொட்டும் நீர்போல பெரியவர் சிலர் ஒட்டியிருந்தாலும் இளந்தலை முறையினர் ஏமாறத் தயார் இல்லை அண்மையில் ஹரி ஆனந்தசங்கரியை பலமாக எதிர்த்த உலகத்தமிழர் அமைப்பால் மக்களை சிறிதும் ஒன்றுதிரட்ட முடியவில்லை. இளைஞர்களின் முழுச் சிந்தனையும் கனேடிய நீரோட்டத்தில்  அரசியலின் பால் திரும்பியிருக்கிறது. இவ்வருடம் 25 பேர்வரையில் கனேடிய அரசியல் தேர்தல் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டார்கள்.  சிலசமயங்களில் வாக்குக்காக ஈழ அனுதாபிகள் போல் நடிக்கிறார்கள். அவ்வளவே.

 

  யாழ் தேவி யாழ்ப்பாணம் சென்றுவிட்டது. நீங்கள் கொட்டைப்பாக்கு குருவி” போன்ற என் கிராமம் இன்னும் முள்வேலிக்குள் தான் இருக்கிறது என எழுதி இருக்கிறீர்கள்?.

 

உண்மையில்  என் கிராமம் முள்வேலிக்குள்தான் சிறைப்பட்டுக்கிடக்கிறது. அது பலாலிப் பெருமுகாமின் நச்சுவேர்களுக்குள் சிக்குண்டு கிடக்கிறது.  இன்று யாழ்நகரம் சென்ற யாழ்தேவி சில மாதங்களில் காங்கேசன்துறையை சென்றடையலாம் சிலவருடங்களின்பின் பலாலிப் பெருமுகாம் தன் நச்சுவேர்களை தன்னுள் இழுத்து சுருங்கிக்கொள்ளலாம். அதனால் என்கிராமம் மீளப்பொலிவு பெற்றுவிடும் எனக்கருத முடியாது. ஊர் என்பது வெறும் நிலப்பரப்பல்ல. அது அங்கு வாழ்ந்த மக்களையும் சேர்த்தது.

 

என் ஊரின் தொண்ணூறு  விழுக்காடு மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். மீதிப் பத்து விழுக்காடு மக்களும் வெவ்வேறு ஊர்களில் சொந்த வீடுவாங்கி குடியேறி இப்போ இரண்டு தசாப்தங்களாகிவிட்டன. அவர்கள் கூட இனி ஊர் மீளப்போவதில்லை.

என் ஊர் என்பது இனிக் கனவுதான். இதில் என் ஊர் என்பது ஒரு அடையாளம் தான்.

 

   முள்ளிவாய்க்கால் பேரவலத்தை  மறந்துகொண்டிருக்கிறோம். ஈழத்தமிழர்களின் வரலாறு சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லையேஅடுத்த தலைமுறைக்கு எதைக் கையளிக்கப் போகிறோம்?   

 

வரலாற்றைச் சரியான வகையில் பதிவுசெய்யும் கடமை புலத்தில் உள்ளவர்களுக்கே உண்டு. ஆனால் அது நிகழும் போலத் தெரியவில்லை. இத்தனை அவலங்களுக்கும் இவ்வளவு துயரங்களுக்கும் காரணம் என்னஏன் இவ்வளவு உயிர்களைப் பலிகொடுத்தோம்?  ஏன் ஊருலகில் எந்த நாடும் கேட்காதிருந்தார்கள்நாங்கள் எங்கே தவறுசெய்தோம் என்பதைத் திரும்பிப் பார்ப்பதற்குக்கூட எமக்கு அவகாசம் கொடுக்கவில்லை.

 

ஹிட்லர்சுபாஸ்சந்திரபோஸ் வரிசையில் பிரபாகரனின் மரணத்தையும் கேள்விக் குறியாக்கிவிட்டு மீண்டும் பழி தீர்க்கும் அரசியல்.  பழையபடி மேடைபோட்டு வீரவசனம் பேசி வாக்குக் கறப்பதிலேயே முனைப்பாயிருக்கிறோம்.

இதில் யார் பதிவு செய்வது?

 
நன்றி 

கார்த்திகை -மார்கழி ஆக்காட்டி இதழ் 

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சடைப்பதுபோல் உணர்வு படித்து முடித்தபோது.. என்னதான் சொன்னாலும் அடையாளம் தொலைத்தவர்தானே நாம்.. :(

இரண்டு ஆழுமைகள் சந்திக்கிறபோது தான் ஓர் நேர்காணல் வெற்றிபெறுகிறது. நெற்கொழுதாசனின் காலத்தின் கேள்விகள் திருமாவளவனின் எதற்கும் சாயாத சத்திய மான வார்த்தைகள். பல இடங்களில் மனதோடு நெருங்கிய உரையாடல்.----இலக்கிய குவியத்திற்காக  வேலணையூர்தாஸ் .

நிறைவான பேட்டி .

கேள்வியும் பதிலும் ஒரே தளத்தில் பயணித்ததுதான் காரணம் என்று நினைக்கின்றேன் .

 

(எனது இரு சகோதரங்களின் பெயர்கள் கூட வந்திருக்கு  :icon_mrgreen: )

  • தொடங்கியவர்

நிறைவான பேட்டி .

கேள்வியும் பதிலும் ஒரே தளத்தில் பயணித்ததுதான் காரணம் என்று நினைக்கின்றேன் .

 

(எனது இரு சகோதரங்களின் பெயர்கள் கூட வந்திருக்கு  :icon_mrgreen: )

 

மிக்க நன்றி arjun அண்ணா,

 

மற்றும் கருத்துரைத்த drsothithas சுபேஸ் இருவருக்கும் என் அன்புகள்.

 

ஈழத்தின் ஆளுமைகளை இயன்றவரை ஆவணப்படுத்துவோம்.

 

உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களும் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.