Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலா அண்ணாவிடம் இருந்து ஈழத் தமிழர் தேசம் கற்றுக்கொள்ளக் கூடியவை எவை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணாவிடம் இருந்து ஈழத் தமிழர் தேசம் கற்றுக்கொள்ளக் கூடியவை எவை?

சர்வே

3980010b-3dce-4f42-b783-f07efaea60be1.jp

பாலா அண்ணா எம்மை விட்டு பிரிந்து இன்றுடன் (14.12.2014) 8 வருடங்கள் உருண்டோடி விட்டன.

இவர் காலம் ஆகிய பின்னர் கழியும் ஒவ்வாரு அரசியற் தருணங்களும், அவர் இல்லாத வெறுமையை இன்றுவரை நினைவூட்டிக் கொண்டே உள்ளன.

தமிழீழ தேசத்தின் முதலாவது இராஜதந்திரி எனக் கருதப்படக்கூடியவராக பாலா அண்ணா இருந்தார்.

தமிழர்கள் மத்தியில் இராஜதந்திரப் பாரம்பரியம் வளர்ந்திராதவொரு சூழலில்தான் பாலா அண்ணா தன்னையொரு இராஜதந்திரியாக நிலைநிறுத்த வேண்டியிருந்தது.

தமிழர்களிடம் இராஜதந்திரப் பாரம்பரியம் வளரச்சியடையாமைக்கு மூன்று காரணங்களைக் கூறலாம்.

முதலாவது காரணம், தமிழர்கள் நீண்ட நெடும் காலமாக அரசற்றதொரு தேசிய இனமாக இருந்து வருவது.

தமிழர்கள் தமது அரசை காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இழந்து நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. இரண்டாம் உலகப் போரின் பின்னர், காலனித்துவ ஆட்சிகள் முடிவுக்கு வரும் தருணத்தில் நிகழ்ந்த எல்லைப் பிரிப்புகளிலும் அரசுருவாக்கத்திலும் தமிழர் அரசு எதுவும் அமையவில்லை. இதனால் தமிழர்கள் மத்தியில் இராஜதந்திரப் பாரம்பரியம் வளரக் கூடிய சூழலும் வாய்ப்புகளும் அமைந்திருக்கவில்லை.

இரண்டாவது, இராஜதந்திர நடைமுறையில் விடயங்கள் கையாளப்படுவதற்கு ஒவ்வொரு தேசத்திடமும் ஏதோவொரு பலம் அமைந்திருத்தலும் அந்தத் தேசம் ஒரு வலு மையமாக உருவெடுத்திருத்தலும் முக்கியமானது.

3980010b-3dce-4f42-b783-f07efaea60be4.jp

பொருளாதாரம், விஞ்ஞான தொழில் நுட்பம், இயற்கை வளம், மனித வளம், சந்தை, கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த இடம் போன்றவை ஒரு தேசத்துக்கு பலம் தரக்கூடியவையாக அமைகின்றபோதும் இவை அனைத்தையும் தாண்டி படைபலமே வலுச்சமநிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

நவீன வரலாற்றில், விடுதலைப்புலிகளின் காலத்துக்கு முன்னர் தமிழர்களிடம் படைபலம் இருந்ததில்லை. தமிழீழத் தாயகப் பிரதேசத்தில் நடைமுறை அரசினை விடுதலைப்புலிகள் அமைத்திருந்த காலமே தென்னாசியாவின் வலுச் சமநிலையில் ஈழத் தமிழர் தேசமும் ஒரு பொருட்டாக கருதப்பட்ட காலமாக இருந்தது.

இதனால் இக் காலம் வரை ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்து இராஜதந்திரிகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே இருந்தன.

மூன்றாவது, உலக வரலாற்றில் இராஜதந்திரிகள் உருவாகுவதிலும் செயற்படுவதிலும் போர்க்காலங்கள் தீர்மானகரமான பங்கை வகித்துள்ளன.

போர்க்காலங்கள் தேசங்களுக்கிடையிலான பலப்பரீட்சையாக அமைவதுடன் மட்டுமன்றி, தமது தேசத்தின் வெற்றிக்கு உதவும் வகையில் அனைத்துலக உறவுகளைக் கையாள்வதிலும் காய்நகர்த்தல்களைச் செய்வதிலும் கூடுதல் கவனத்தைக் கோரும் காலங்களாகவும் அமைவன.

இதனால் அனைத்துலக மயப்பட்ட போர்ச்சூழல் இராஜதந்திரிகள் உருவாகுவதற்கு வாய்ப்பான நிலைமைகளைக் கொண்டிருக்கும். ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் இராஜதந்திரிகள் உருவாகுவதற்கான ஒரு புறச்சூழலைத் தந்தது.

இத்தகையதொரு சூழலில்தான் பாலா அண்ணா விடுதலைப்புலிகளின் தத்துவாசிரியராகவும் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் செயற்பட்டு தமிழீழத்தின் முதலாவது இராஜதந்திரி என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொண்டார்.

பொதுவாக ஆயுதப் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த இராஜதந்திரிகள் வெற்றிகரமாகச் செயற்படுவதற்கு சில முன் நிபந்தனைகள் உண்டு. இம் முன் நிபந்தனைகள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் இராஜதந்திரிகளுக்கு கூடுதல் கூர்மையானதாக இருந்தது.

இம் முன்நிபந்தனைகளை பின்வரும் வகையில் அடையாளப்படுத்தலாம்.

1. இவர்கள் மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு அரசு என்ற அங்கீகாரம் இல்லாத காரணத்தால், அரச தரப்பு இவர்களைத் தமக்குச் சமதையாக நடாத்துவதற்கு இலகுவில் சம்மதம் தராது. இத்தகையதொரு சமத்துவமானதொரு அங்கீகாரம் கிடைக்கும்வரை மிகவும் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் செயற்பட வேண்டியவர்களாக ஆயுதப் போராட்ட அமைப்புகளின் இராஜதந்திரிகள் இருக்க வேண்டும்.

2. பேரராட்ட அமைப்பின் தலைமையின் உறுதியான நம்பிக்கையினைப் பெற்றிருக்க வேண்டும். இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடும் இராஜதந்திரிகள் தடம் புரளமாட்டார்கள் என்றும் விலைபோக மாட்டார்கள் என்றும் போராட்டத் தலைமை நம்ப வேண்டும். இல்லாதுவிடின் இரஜதந்திர நடவடிக்கைகளே தடம் புரண்டுவிடும்.

3. ஆயுதப் போராட்ட உலகத்துக்கும் இராஜதந்திர உலகத்துக்கும் இடையில் இருக்கக்கூடிய இடைவெளியை நிரப்பக் கூடிய ஆற்றல் உள்ளவராக இருத்தல் வேண்டும். ஆயுதப்போராட்ட உலகத்தினதும் இராஜதந்திர உலகத்தினதும் இயங்கு விதிகள் வேறுவேறானவை. ஒரு உலகத்துக்கு சரியாகத் தெரிவது மற்றையதற்குப் பிழையாகத் தெரியக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதனால் இரண்டு உலகத்தினதும் இயங்குவிதிகளைத் தெளிவாக விளங்கி அதற்கமைய ஒன்றோடு மற்றையது உறவுகளைப் பேண வழிகோலவும் புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்படுவதற்கான சூழலை வளர்க்கக்கூடிய திறமையும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

4. தொலைநோக்கும் தீர்க்கதரிசனமும் உள்ளவராக இருத்தல் வேண்டும். அனைத்துலக நிலைமைகளை நன்கு விளங்கியவராகவும் எதிர்காலத்தில் நிகழக்கூடியவைகளை முன்கூட்டியே உய்த்துணரக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். இவற்றைத் தலைமையுடன் விவாதித்து உரிய மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வகுப்பதில் தற்துணிவுடன் ஈடுபடுபவராக இருத்தல் வேண்டும்

5. போராட்ட இயக்கத்தின் தலைமையின் நம்பிக்கையை மட்டுமன்றி தளபதிகள், போராளிகளின், மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பாலா அண்ணா மட்டுமே இத்தகைய முன்னிபந்தனைகளை நிறைவு செய்யும் தகமைகளைக் கொண்டிருந்தார். அதனால்தான் அவரால் நீண்டகாலம் விடுதலைப்புலிகள் அமைப்பை பிரதிநிதித்துவம் செய்து தமிழீழத்தின் தலைமை இராஜதந்திரியாக இருக்க முடிந்தது.

பாலா அண்ணா தனது அரசியல் இராஜதந்திரச் செயற்பாடுகளை ஒரு கடினமான சூழ்நிலைக்குகள் நின்றவாறுதான் செய்ய முடிந்தது.

விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவரீதியாக வெற்றியடைய வேண்டும் என்று கருதி எடுத்த சில நடவடிக்கைகள் பாலா அண்ணாவின் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு இடையூறாக இருந்த சந்தர்ப்பங்கள் பலவற்றை இவர் எதிர்கொண்டிருக்கிறார். இதில் ஏற்படும் சங்கடங்கள் பலவற்றை தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்து கொள்வார்.

ஒரு தடவை பாலா அண்ணா என்னிடம் சொன்னார். "மண்டையிலை போடுறதை நிப்பாட்டச் சொன்னால், இன்னமும் கூடப் போடுறாங்கள். இதுக்குள்ளதான் என்ரை diplomacy யை ஓட்ட வேணும்".

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பாலா அண்ணாவிடம், ஒரு முக்கியமான பொறுப்பாளர் ஒரு தாக்குதலைச் செய்துவிட்டு வந்து, அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று கருத்தறிய வந்தாராம். இத் தாக்குதல் நடக்கும் வரை பாலா அண்ணாவுக்கு இது பற்றி எதுவும் தெரியாது. பாலா அண்ணா தனக்கேயுரிய முறையில் சொன்னாராம் "உதுகளை செய்ய முதலல்லோ வந்து கதைக்க வேணும். இப்ப செய்து போட்டிகளல்லோ. இருந்து பாருங்கோ, உதுவின்ரை விளைவுகள் என்னவெண்டு" இதுவும் பாலா அண்ணா என்னிடம் கதைக்கும்போது கூறிய தகவல்தான்.

இவற்றை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் பாலா அண்ணா செயற்பாட்டு களநிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் பேராட்டப் பரிமாணம் தற்போது முடிவுக்கு வந்து அரசியல் இராஜதந்திர வழியில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முனைப்புகள் மேற்கொள்ளப்படும் இன்றைய காலகட்டத்தில் பாலா அண்ணாவிடம் இருந்து தமிழீழ தேசம் கற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள்தான் எவை?

விடுதலைப்பலிகள் காலத்தில் ஈழத் தமிழர் தேசத்திடம் வன்வலு (hard power) உம், மென்வலுவும் (soft power) இருந்தது. இதனால் இரண்டையும் இணைத்த வகையில் ஒரு smart power ஆகச் செயற்படக்கூடிய நிலைமைகள் அப்போது இருந்தன. இப்போது வன்வலு இல்லை. இருக்கக்கூடிய மென்வலுவினை smart way இல் பிரயோகிப்பதனைப் பற்றியே சிந்திக்க வேண்டும். இல் விடயம் தனியொரு கட்டுரைக்குரியதென்பதால் விரிவினைத் தவிர்த்து விடுகிறேன்

நிலைமைகள் வேறு என்றாலும் பாலா அண்ணாவிடம் இருந்து சில பயனுள்ள அணுகுமுறைகளைத் தமிழர் தேசம் கற்றுக் கொள்ள முடியும். இவற்றை பின்வரும் வகையில் அடையாளம் காணலாம்.

முதலாவது, தமிழர் தேசத்தின் நலன்களையும் அனைத்துலக அரசுகளின் நலன்களையும் புரிந்து அதற்கேற்ப இராஜதந்திர அணுகுமுறையினை வகுத்துக் கொள்ளல்.

பாலா அண்ணா தனது இராஜதந்திர செயற்பாட்டில் இயக்க நிலைப்பாட்டையும் அனைத்துலகத்தின் நிலைப்பாட்டையும் எவ்வாறு சந்திக்க வைக்கலாம் என்பது பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவர். இயக்கத்திடம் இராஜதந்திரக் கவனத்துடன் செயற்படுமாறு வலியுறுத்திய அதேவேளை, தனது தொடர்பில் இருந்த இராஜதந்திரிகளிடம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களது விடுதலை பற்றியும் வலியுறுத்தியவர்.

இரண்டாவது, இராஜதந்திரச் செயற்பாட்டில் அனைத்துலக இராஜதந்திரிகளிடம் நம்பிக்கையினையும் நன்மதிப்பையும் வளர்த்துக் கொள்ளல் முக்கியமானது என்பது.

இவ் விடயத்தில் பாலா அண்ணா எவ்வாறு சிந்தித்தார் என்பதனைப் புரிந்துகொள்ள நான் அவருடன் மேற்கொண்ட உரையாடல் ஒன்றினை இங்கு பகிர்ந்து கொள்ளல் பொருத்தமானது என்று கருதுகிறேன்.

2006 ஆம் ஆண்டு என்று நினைவு. மக்கள்படை என்ற பெயரில் யாழ் குடாநாட்டில் சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் தீவிரமாக்கப்பட்டிருந்த காலம். இந்த நடவடிக்கைகளால் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிர்மறையான விளைவுகள் அனைத்துலக அரங்கில் தோன்றப் போகிறது என்ற அச்சம் எனக்கு எழுந்தது. பாலா அண்ணாவிடம் இது குறித்து பேசினேன்.

'மக்களுக்கு மட்டுமில்லையடாப்பா, diplomats க்கும் ஆர் செய்யினம் எண்டு தங்களுக்குத் தெரியாது எண்டுதான் வன்னியிலை இயக்கம் சொல்லுதாம். இதை என்னட்டைச் சொல்லி "எங்களை முட்டாள் எண்டு இயக்கம் நினைக்குதோ" எண்டு கேட்டுச் சிரிக்கிறாங்கள்.

நாங்கள் முழுப்பூசணிக்காயைச் சோத்துக்குள்ளை மறைக்கேலாது. இப்படி பொய் சொல்லி diplomacy செய்யேலாது. அவங்கள் நம்ப மாட்டாங்கள். வெளியிலை என்னத்தைச் சொன்னாலும் அவங்களிட்டை உண்மையைச் சொல்லவேணும். நாங்கள்தான் செய்யிறம். ஏன் செய்யிறம், சிறிலங்கா அரசாங்கம் இப்படி இப்படி செய்யிறதாலதான் நாங்கள் இதைச் செய்யிறம்.. எண்டு காரணத்தோடை கதைக்க வேணும். சிறிலங்கா நிப்பாட்டினால் நாங்களும் நிப்பாட்டுவம்.. எண்டு சொல்ல வேணும். இதை diplomats விளங்கிக் கொள்ளுவாங்கள்"

பாலா அண்ணாவின் இந்த அணுகுமுறை இவருக்கு அனைத்துலக இராஜதந்திரிகள் மத்தியில் நற்பெயரையும் மதிப்பையும் வளர்த்திருந்தது. பாலா அண்ணாவின் இறுதி மரியாதை நிகழ்வில் "பாலசிங்கம் தம்மிடம் பொய் சொன்னதில்லை" என எரிக் சூல்கெய்ம் அவரை விதந்துரைத்திருந்தார்.

மூன்றாவது, பாலா அண்ணாவிடம் இருந்த எதிர்காலத்தில் நடைபெறப்போவதை முன்கூட்டியே உய்த்துணரும் ஆற்றல் தமிழர் தேசம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியதொன்று.

2002 ஆம் ஆண்டின் பின், மீண்டும் சண்டைப்பாதைக்கு என்ன காரணத்துக்காகவும் திருப்பினால் எல்லாரும் சேர்ந்து இயக்கத்தை அழித்து விடுவார்கள் என்பதனை பாலா அண்ணா உய்த்துணர்ந்திருந்தார். இயக்கத்தை மட்டுமல்ல, மக்களையும் பெரும் தொகையில் கொன்று குவிப்பார்கள் என்றும் அவர் அஞ்சினார்.

இதனால் இயக்கம் மீண்டும் சண்டைப்பாதைக்குத் திரும்பாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னால் இயன்ற சகல முயற்சிகளையும் செய்து பாரத்தார். இயக்கத்தை அழிக்கும் நடவடிக்கை எவ்வாறு நிகழும் என்பதனைக்கூட அவர் இயக்கத்துக்கு எடுத்துச் சொல்லியிருந்தார்.

பாலா அண்ணா காலம் ஆகிய பின்னர் இயக்கத்தக்கு எதிரான நடவடிக்கை தீவிரமாகி இயக்கம் பின்வாங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு முக்கிய தளபதி சொன்னாராம்.

"பாலா அண்ணா அப்ப சொன்னது இப்ப நடக்குது"

நான்காவது, இராஜதந்திரப் பணியென்பது அர்ப்பணிப்பு மிக்க வாழ்வுடன் மேற்கொள்ளப்பட வேண்டியதொன்று என்பது.

பிரித்தானியாவில் குடியுரிமை கொண்டிருந்த பாலா அண்ணா மிகவும் நோய்வாய்ப்படும்வரை தாயகத்தில் மக்களுடன் அர்ப்பணிப்புடன்தான் தனது வாழ்வை மேற்கொண்டிருந்தார்.

அவரும் அடேல் அன்ரியும் போராட்டப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக தமக்கு குழந்தை வேண்டாம் என்ற முடிவினை எடுத்திருந்தார்கள். இவர்கள் தமது வாழ்வை அமைத்திருந்த முறையில் இருந்தும் ஈழத் தமிழர் தேசம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

ஐந்தாவதாக, அரசியல் இராஜதந்திரச் செயற்பாட்டுக்கு அவசியமான அறிவுக்கூர்மையும் அவரிடம் இருந்த அரவணைப்பும் மனிமநேயப் பண்பும்.

பாலா அண்ணா மிகுந்த அறிவுக்கூர்மை கொண்டவர். அற்புதமான எழுத்தாற்றல் மிக்கவர். இவை இவரது இராஜதந்திரப் பணிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தன.

இயக்கம் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என பாலா அண்ணா பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் யோகி, பாலா அண்ணாவுக்கான தனது இறுதி மரியாதை வணக்கத்தில் இயக்கத்தில் தலைவருக்கு தந்தைப் பாத்திரமும் பாலா அண்ணைக்குத் தாய் பாத்திரமும் இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தது இங்கு நினைவு கூரத்தக்கது.

பாலா அண்ணா காலம் ஆகி எட்டாவது ஆண்டு நிறைவுறும் இவ் வேளையில் அவரிடம் இருந்து எமது தேசம் கற்றுக் கொள்ள வேண்டியவை குறித்தும் சிந்தித்துக் கொள்வது நல்லது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=3980010b-3dce-4f42-b783-f07efaea60be

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை. பிரபாகரனின் சாவை விட பல மடங்கு தமிழருக்கு பாதகமாக அமைந்தது பாலசிங்கத்தின் சாவு. ஒரு அருமையான, யதார்த்த ராஜதந்திரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.