Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்லி ஹெப்டோ : கருத்துரிமையும் அடிப்படைவாதிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

enhanced-15505-1420644639-7.png

சார்லி ஹெப்டோ படுகொலைப் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது போலத் தோன்றுவது வெறுமனே வெளித்தோற்றம் மட்டும்தான். மூன்று இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுததாரிகளால் மொத்தமாக 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோவின் 4 கார்ட்டுனிஸ்ட்டுகளும் சார்ப்போ சேபர்னியர் எனும் அதனது ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவன்றி இரு இஸ்லாமியர்களான ஒரு காவல்துறை அதிகாரியும், சார்லி ஹெப்டோ ஊழியர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோ அலுவலகத் தளத்தில் மட்டும் மொத்தமாகப் 12 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனோடு ஒரு பெண் காவல்துறை அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். யூத பலசரக்குக்கடையில் நடந்த பிணைக்கைதிகள் பிரச்சினையில் இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுததாரியால் 4 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

படுகொலையாளர்களான சைத் குவாச்சி மற்றும் ஷெரீப் குவாச்சி என இரு சகோதரர்கள், ஹமதி கலிபோலி என மொத்தமாக மூன்று தாக்குதலாளர்கள் பிரெஞ்சுக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஹமதி கலிபோலியின் மனைவியான ஹையத் மோமடின் என்பவர் ஆயுதந் தாங்கியவர் மற்றும் ஆபத்தானவர் என அறிவித்து பிரெஞ்சு அரசு அவரை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. சைத் குவாச்சி, ஷெரீப் குவாச்சி போன்ற இருவரே சார்லி ஹெப்டோ படுகொலைக்குப் பொறுப்பான சந்தேகநபர்கள் என முதலில் அறிவித்தது பிரெஞ்சு அரசு. சகோதரர்கள் இருவரிடமும் மௌரத்திடமும் பிரெஞ்சுத் தொலைக்காட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட கைபேசி உரையாடல்கள் கார்டியன் பத்திரிக்கையில் வெளியானதையடுத்தும் லிபரேஷன் பத்திரிக்கையில் வெளியான ஹையத் போமடின் ஆயுதப் பயிற்சிபெறும் புகைப்படங்களை ஒட்டிய செய்தியை அடுத்தும் படுகொலையாளர்களான் மூவருக்கும் இருக்கும் ஆண்டுக்கணக்கான நெருக்கமான உறவு ஆவணப்படுத்தப்பட்டுவிட்டது. சார்லி ஹெப்டே தாக்குதலும் யூத பலசரக்குக் கடைத் தாக்குதலும் என இரு தாக்குதல்களும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் என ஹமதி கலிபோலி அறிவித்திருக்கிறார். இதனோடு ஈராக்கில் இயங்கும் இஸ்லாமிக் ஸ்டேட் – ஐஎஸ்ஐஎஸ் சார்பாகத் தான் தாக்குதலில் இறங்கியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர் செய்து வருவதற்கான எதிர்விணையே இது எனவும் அவர் தெரிவித்துpருக்கிறார்.

குவாச்சி சகோதரர்கள் தமது தாக்குதல் தீர்க்கதரிசியை அவமானப்படுத்தியதற்கான தமது பழிவாங்கல் எனத் தெவித்திருக்கிறார்கள். அதனோடு மேற்கத்தியர்கள்-அமெரிக்கர்கள் போலத் தாம் பெண்களைக் கொல்லவில்லை எனவும் தெவித்திருக்கிறார்கள். எம்மிடம் அறவழிகாட்டல் நெறிகள் இருக்கின்றன எனவும் தெரிவித்திருக்கிறார்கள். சார்லி ஹெப்டே தாக்குதலின் போது ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஒரு பெண் ஊழியரிடம் ‘நீங்கள் பெண்ணாக இருப்பதால் உங்களை நாங்கள் கொல்லாமல் விடுகிறோம்’ எனச் சொல்லி அவரைச் சுடாமல் விடுவித்திருக்கிறார்கள் எனும் தகவலையும் எவரும் இதனுடன் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியும்.

குவாச்சி சகோதரர்கள் இருவரும் திருட்டுக் குற்றச்சாட்டுக்களுக்காக முன்னர் சிறைத்தண்டனை பெற்றவர்கள் எனவும் அவர்கள் ஈராக், ஏமன், சிரியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்றவர்கள் எனவும் பிரெஞ்சுச் சிறையில் அடைபட்டிருக்கும் ஒரு அடிப்படைவாதியை விடுதலை செய்ய முயன்றார்கள் எனவும் லிபரேஷன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. தாம் சிரியாவில் பயிற்சி பெற்றதாகவும் ஏமான் அல் குவைதா வழிகாட்டலில் செயல்படுதாகவும் தமது கைபேசி உரையாடலில் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் படுகொலைத் தாக்குதல்கள் ஐஎஸ்ஐஎஸ் அல்குவைதா போன்ற அடிப்படைவாதிகளால் ஒருங்கிணைக்கப்பட்டது எனவும், ஈராக், பாலஸ்தீனம், சிரியா, ஆப்கான் போன்ற நாடுகளில் மேற்கத்திய-இஸ்ரேலியத் தலையீடுகளுக்கு எதிரான விளைவு எனவும், சார்லி ஹெப்டோ இதழ்களில் வெளியான தீர்க்கதரிசி முகமது பற்றிய கேலிச் சித்திரங்களுக்கு எதிரான பழிவாங்கல் எனவும், மிக அண்மையில் சார்லி ஹெப்டோ டிவீட் செய்த ஐஎஸ்ஐஎஸ்யின் கோடீஸ்வரத் தலைவருக்கு எதிரான நக்கல் செய்திக்கு எதிரானது எனவும் முடிவுக்கு – அரசியல் முடிவுக்கு – எவரும் வர முடியும்.

இந்தத் தாக்குதலின் விளைவாக நான்கு உலக அரசியல் நகர்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. பயங்கரவாதம் தொடர்பான கொள்கைகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கவும் தமக்கிடையில் புதிய ஒத்துiழைப்பை உருவாக்கவும் பிரெஞ்சுச் ஜனாதிபதி இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். யூத பலசரக்குக்கடை தாக்கப்பட்டு 4 யூதர்கள் கொல்லப்பட்ட பின்னால் இஸ்ரேலுக்கும் பிரான்சுக்கும் இடையில் தமது யூத இன மற்றும் இஸ்ரேல் நாட்டு மக்களைப் பாதுகாப்பது தொடர்பான ஒப்பந்தம் உருவாகப் போகிறது. ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத ஒழிப்புச் சட்டங்கள் இன்னும் இறுக்கமாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை பாதுகாப்பு அமைப்புகள் மட்டத்திலும் அது குறித்த தனிமனித சுதந்திரத்திற்கான அசசுறுத்தல் குறித்த அவதானங்கள் மனித உரிமைகள் அமைப்புகள் மட்டத்திலும் உருவாகி இருக்கின்றன. இதுவன்றி இஸ்லாமியர் உள்படச் சிறுபான்மையின் மக்களின் மீதான துவேஷ உணர்வு ஐரோப்பாவெங்கிலும் அதிகரிக்கும் ஆபத்தும் உருவாகியிருக்கிறது. பிரான்சில் மசூதிகள் மீதான தாக்குதல்களும் இஸ்லாமிய உணவகங்கள் மீதான தாக்குதல்களும் இந்த ஆபத்துக்களுக்கான சான்றுகளாக ஏற்கனவே துவங்கிவிட்டன.

பாலஸ்தீனத்திலும் மத்தியக் கிழக்குநாடுகளிலும் அமெரிக்க-இஸ்ரேலிய-ஐரோப்பிய வெளிநாட்டுக் கொள்கைகளும் ராணுவத் தலையீடுகளும் உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய வெகுமக்களின் மத்தியில் அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்ரேலிய எதிர்ப்பை அதிகரித்திருக்கிறது. இதனால் ஆவேசம் கொண்ட ஒரு தலைமுறை இஸ்லாமிய நாடுகளில் அல்லது இஸ்லாமைப் பின் பற்றுபவர்களிடம் தோன்றியுள்ளது. இந்தத் தலைமுறையை தமது மததியகால இஸ்லாமிய தண்டனைச் சட்டங்கள், பெண்வெறுப்பு, மேற்கத்திய மற்றும் கம்யூனிச எதிர்ப்பு அரசயல் திட்டமாகக் கொண்ட அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கம் தனது இலக்குகளை அடையப் பாவிக்கிறது. தலிபான், அல்குவைதா, ஐஎஸ்ஐஎஸ் போன்றனவே இந்த இறையியல் இயக்கத்தை வழிநடத்துகிறது. இந்தச் சிந்தனைப் பள்ளியே செப்டம்பர் தாக்குதலை நிகழ்த்தியது. இந்தச் சிந்தனைப் பள்ளியின் அரசியல் மையம் சவுதி அரேபியா எனும் நாடும் அதனது ஆதரமான வகாபிய சிந்தனையும்தான். செப்டம்பர் 11 தாக்குதலின் பின் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாமிய துவேஷ உணர்வு அதிகரித்துவருகிறது. இதனது விளைவே பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் மற்றும் ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் அதிகாரித்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் படுகொலைத் தாக்குதல்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் படுகொலைத் தாக்குதல்களை வெறுமனே ஐரோப்பிய-அமெரிக்க-இஸ்ரேலியக் கொள்கைகளின் எதிர்விளைவு என்று மட்டுமே பார்க்க முடியாது. அது பிரச்சினையை மிகக் குறுக்கிப் பார்ப்பதாகவே முடியும். அதில் இரண்டு பரிமாணங்கள் உண்டு. இந்தக் கொள்கையினால் அதிருப்தி கொண்ட மனநிலை முழு இஸ்லாமியர்களிடமும் உண்டு. அது நியாயமானது. தலிபான், ஐஎஸ்ஐஎஸ், அல்குவைதா போன்றவர்களின் சமூகத்திட்டம் அதற்கான தீர்வாக முடியாது. அது அடிப்படைவாதம். பெண் வெறுப்பும் மத்தியகாலக் காட்டு மிராண்டிச் சட்டங்களும் கொண்ட ஒரு இலட்சிய சமூகம் அவர்களது இலட்சிய சமூகம். முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்துக்கும் மாற்று என இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் முன்வைக்கப்படும் ஒரு சமூகத் திட்டம் அது. இந்தச் சமூகத்திட்டத்தை மனுக்குல மேன்மையில் அக்கறை கொண்ட அனைவருமே நிராகரிக்க வேண்டும். இவர்களே உலகெங்கிலும் இன்று பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்கிறவர்கள். இது குறித்த புரிதலுடன்தான் எவரும் சாரலி ஹெப்டோ பிரச்சினையை அணுக வேண்டும்.

பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு சார்லி ஹெப்டோ வார இதழ் குறித்த ஒரு மதிபபீடு இங்கு அடிப்படையானதாகும். ஏன் சார்லி ஹெப்டோ மீது படுகொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது? சார்லி ஹெப்டோ வார இதழ் பலரால் குற்றம் சாட்டப்படுவதுபோல வெள்ளை இனவாத மற்றும் நிறவாதப் பத்திரிக்கையா? அல்லது முகமதுவை, இஸ்லாமை மட்டுமே அது கேலிச்சிரமாக்கி தனிமைப்படுத்திப் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கிறதா? இரண்டுக்குமே இல்லை என்பதுதான் பதில்.

சார்லி ஹெப்டொவின் மீதான தாக்குதலை இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பாசிசத் தாக்குதல் என எந்தவிதமானத் தயக்கமும் இன்றிச் சொல்ல முடியும். ஐரோப்பிய நிறவாதம், இஸ்லாமியோ போபியா, கீழைத்தேயவாதம் என்கிற எந்தவிதமான அடிப்படைகளையும் சார்லி ஹெப்டோ பிரச்சினையில் பொருத்த முடியாது. சார்லி ஹெப்டோ ஒரு இடதுசாரி, மதவாத எதிர்ப்பு, தீவிரவாத எதிர்ப்பு, நிறவாத எதிர்ப்பு, நிலவும் அமைப்பு எதிர்ப்பு இதழ். பிரெஞ்சுப் புரட்சியின் நல்மரபான மதத்திலிருந்து அரசு எனும் நிறுவனத்தையும், சிவில் சமூக நிறுவனங்களையும், நீதி அமைப்பையும், தனிமனித சுதந்திரத்தையும் தூரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவர்களது பார்வை.

அறுபதுகளின் இறுதியில் தோன்றிய இந்தக் கார்ட்டூன் இதழ் இத்தகைய அதிகாரங்களைக் கோபமூட்டுவது அல்லது எரிச்சலூட்டுவது என்பதைத் தனது இதழியல் அறமாகக் கொண்டுள்ளது. இது அராஜகவாதம் என அழைக்கப்படும் ஒரு தத்துவார்த்த நிலைபாடு. புருதோன் முதல் சோம்ஸ்க்கி வரையிலுமான சிந்தனையாளர்களை இவ்வாறு வகைமைப்படுத்துவதும் மேற்கில் ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட அறிவார்ந்த நிலைபாடும் இது. சார்லி ஹெப்டோ மீது வெறுப்புக் கொண்டவர்களில் பிரெஞ்சு ஜனாதிபதி டீ கால் முதல், பிரெஞ்சு வலதுசாரி நிறவாதியான லீ பென், வாத்திகன் அடிப்படைவாதிகள், யூத, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என அந்தப் பட்டியில் மிக நீண்டது. இவர்களிடம் இவர்களை விமர்சிப்பதில் நொய்மையும் சகிப்புத்தன்மையும் காட்டவேண்டும் என்று கோருகிறவர் ஏதோ ஒரு விதத்தில் அடிப்படைவாதியாகத்தான் இருக்க முடியும்.

இந்த வகையில் முழுமையாக சார்லி ஹெப்டோவின் இதழியல் அறத்தைக் காத்து நிற்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பிரெஞ்சு இடதுசாரித் தராராளவாத இதழ்களான லிபரேஷன், லெ மான்டோ டிப்ளமேடிக், கார்டியன் போன்ற இடதுசாரி தாராளவாத நாளிதழ்கள் கூட இத்தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனவே எழுதின. போப், முகமது, இயேசு, லீ பென், யூத அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம், வெள்ளை நிறவெறி என இவை அனைத்தும் குறித்து இதனது அட்டைப்படக் கட்டுரைகள் இருக்கின்றன. சார்லி ஹெப்டோ குறித்து தேடிப்பார்க்கிற எவருக்கும் இவைகள் கிடைக்கின்றன.

உலக அளவில் திரட்டிக் கொண்ட வடிவில் கருத்தியல் அடிப்படையில் மதத்தின் பெயரால் அதிகமும் நடந்த அண்மைக்கால வெகுமக்கள் கொலைகளில் பெரும்பாலுமானவை இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நிகழ்த்தப்பட்டவைதான். ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் தலிபான்கள், ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர், உலகெங்கிலும் அல்குவைதாவினர் அறிவித்துவிட்டே இதனைச் செய்கிறார்கள். சமவேளையில் சவுதி அரேபிய, ஈரானிய தண்டனைச் சட்டங்கள் மத்தியக் காலத் தண்டனைச் சட்டங்களாக இருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் இந்தத்தகவல் தொழில்நுட்பச் சாதனங்களில் குவிந்து கிடக்கின்றன.

தலிபான், ஐஎஸ்ஐஎஸ், சவுத் அரேபியா, ஈரானிய தண்டனைச் சட்டங்கள், சகோதரத்துவ அரசியல் இஸ்லாமின் அடிப்படைவாத நிலைபாடுகள் போன்றவற்றை இடதுசாரி மற்றும் தாராளவாத ஜனநாயக நிலைபாட்டிலிருந்து விமர்சிக்கும் இஸ்லாமியச் சிந்தனையாளர்கள் இன்று அரபு நாடுகளிலும் மேற்கு நாடுகளிலும் அதிகரித்து வருகிறார்கள். இடதுசாரிப் பார்வைக்கு தாரிக் அலியையும் சமிர் அமினையும் குறிப்பிட இயலுமானால் தாராளவாத இஸ்லாமியப் பார்வைக்கு தாரிக் ரமடானையும் ஹமித் தபாசியையும் நாம் குறிப்பிட முடியும்.

தமிழக, இலங்கை சமூக வலைத்தளங்களை எடுத்துக் கொண்டாலும் இந்தப் பார்வைகளைப் பகிர்ந்து கொள்கிற இஸ்லாமிய இளைஞர்களையும் எழுத்தாளர்களையும் பெண் எழுத்தாளர்களையும் தொகையாக நம்மால் காணமுடியும். இந்தத்தலைமுறை தலிபான், அல்குவைதா, ஐஎஸ்ஐஎஸ், ஈரான், சவுதி அரேபியா தண்டனைச் சட்டங்கள் போன்றவற்றை நிராகரிக்கிறவர்கள். சார்லி ஹெப்டோ மீதான தாக்குதலையும் படுகொலைகளையும் இவர்கள் நிராகரிப்பார்கள் என்றே நம்புகிறேன்.

கார்ட்டூன்களின் இயேசுவையோ அல்லது பிற மத தீர்க்கதரிசிகளையோ சித்தரிக்கக் கூடாது எனும் நிலைபாடு ஒன்று. ஒருவரைச் சித்தரிக்கலாம் எங்களுடைய மதத்தீர்க்கதரிசையை மட்டும் சித்திரிக்கக் கூடாது என்று தமது தனித்துவத்தை வலியுறுத்துவது பிறிதொன்று. உலகவயமான சூழலில், கருத்துரிமையும், மத அடிப்படைவாதமும் உலகவயமானவையாக ஆகியிருக்கும் சூழலில், மத அடிப்படைவாதம் என்பது மதங்களுக்கு இடையிலான வித்தியாசமின்றி எல்லா நாடுகளிலும் பெண்களுக்கும் தனிமனித சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ள சூழலில் எந்த மதப் பிரதிமையை முன்வைத்து அடிப்படைவாதம் உருவாகிறதோ அந்தப் பிரதிமையைப் பற்றிய புனிதபிம்பத் தகர்ப்பைச் செய்யக் கூடாது என்பதை, மதம் வேறுபட்ட பார்வை கொண்டவர்களின் மீது வரலாறு முழுவதும் இழைத்த தீமையை விமர்சிப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனச் சொல்ல முடியாது.

உலகவயமாதலும் இடப்பெயர்வும் நாடுகளின் எல்லையை மட்டுமல்ல தத்தமது கலாச்சாரத்தின் எல்லைகளையும் கூட உடைத்து வருகிறது. இதை அங்கீகரிப்பவர் மட்டுமே இன்று உலகக் குடிமக்களாக இருக்க முடியும். இதில் தனித்துவத்தையும் தமக்கு மட்டுமே விலக்கைக் கோருவதும் நடைமுறைச் சாத்தியமும் இல்லை. இதில் இந்து, கிறித்துவம், யூதம், இஸ்லாம் என்றெல்லாம் வித்தியாசமில்லை. சார்லி ஹெப்டோ தனியொரு மதத்தை மட்டும் விமர்சிக்கவில்லை. எவருக்கும் சிறப்புத் தகுதிகளையும் அது வழங்கவில்லை. அடிப்படைவாதத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பதாலேயே அது சகல மதங்களையும் தலைகீழாகக் கவிழ்க்கிறது.

சார்லி ஹெப்டோவின் கேலிச் சித்திரங்கள் இன்று பரவலாகக் கிடைக்கின்றன. அனைத்து வலதுசாரிகளையும், அடிப்படைவாதிகளையும், அடிப்படைவாத நிலைபாடுகளையும் அது விமர்சித்திருக்கிறது. இடதுசாரிப் பன்முகத்துவம் என்பதையே அது தனது கொளகையாக அறிவித்திருக்கிறது. நிலவும் நிறுவன எதிர்ப்பு, அடிப்படைவாத மத எதிர்ப்பு, நிறவெறி எதிர்ப்பு போன்றவற்றையே இன்றுவரை அது பேணிவருகிறது. கடந்த காலங்களில் கம்யூனிசக் குப்பை என வலதுசாரிகள் அதனை விமர்சித்து வந்திருக்கிறார்கள். யூதமதவாதிகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கத்தோலிக்க அடிப்படைவாதிகளும் அதனை விமர்சித்து வந்திருக்கிறார்கள். அடிப்படைவாத இஸ்லாமை மட்டுமே அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்பது யதார்த்தத்தில் வேர்கொள்ளாத பார்வை. ஐரோப்பாவில் நிகழ்ந்த பெருமளவிளான அரசியல் படுகொலைகளுக்கு அடிப்படைவாத இஸ்லாமே காரணமாக இருப்பதனால் அதற்கான எதிர்விணைகளும் அதிகமாக இருக்கிறது. முகமதுவை அடிப்படைவாதிகளும் பயங்கரவாதிகளும் கடத்திவிட்டார்கள் எனப் பொருள் கொண்ட நிறைய கேலிச் சித்திரங்கள் அவ்விதழில் வெளியாகியிக்கின்றன. அனைத்து அடிடபடைவாதங்களையும் குறித்து கேலிச் சித்திரம் வரைகிற ஒரு இதழை ஒரு குறிப்பிட்ட அடிப்படைவாதம் குறித்து மட்டும் கேலிச் சித்திரம் வரையக்கூடாது எனக் கோருவது சமநிலைப் பார்வையாக இருக்க முடியாது.

சார்லி ஹெப்டோ பிரச்சிiனை தொடர்பான கருத்து விவாதங்களில் இடதுசாரிச் சிந்தனையாளரான தாரிக் அலி, மேற்குலக இஸ்லாமியத் தாராளவாதியான தாரிக் ரமடான் என இருவரது கருத்துக்களை மட்டுமே நான் இங்கு எடுத்துக் கொள்கிறேன். தாரிக் அலி இதில் இரு பரிமாணங்கள் இருக்கிறது என்கிறார். முதலாவதாக, மத அடிப்படைவாதிகள் ஒரு புறமும், மதநீக்க அடிப்படைவாதிகள் – செக்யூலர் பன்டமென்டலிஸ்ட்ஸ – ஒரு புறமும் இயங்குகிறார்கள், இதனது அரசியல் அடிப்படையை நாம் பார்க்க வேண்டும் என்கிறார் அவர். இரண்டாவதாக, முகமதுவைக் கேலியாக விமர்சித்த டென்மார்க் இதழ் ஜிலான்ட் போஸ்ட் மோசஸ் பற்றி கேலிச் சித்திரம் போட மாட்டோம் எனச் சொன்னதைச் சுட்டி, இது மேற்கத்திய கருத்துச் சுதந்திரத்தின் இரட்டை நிலைபாட்டைச் சுட்டுகிறது என்கிறார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக இஸ்லாமிய ஆய்வியல் பேராசிரியரான தாரிக் ரமடான் அதிகமும் மேற்கத்திய முஸ்லீம்கள் ஐரோப்பிய தாராளவாத மதிப்பீடுகளுக்குள் இணங்கி வாழ்வது குறித்து அக்கறைபடுகிறவர். கோட்பாட்டளவில் தான் தணிக்கையற்ற கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறேன் என அவர் திரும்பத் திரும்ப வலியுறத்துகிறார். தான் செல்ல நேரும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களிடம் தணிக்கையற்ற கருத்துச் சுதந்திரத்தைப் பேண வேண்டும் எனக் கோரிவருவதாகவும் அவர் சொல்கிறார். சமவேளையில் மேற்கத்திய நாடுகள் கருத்துச் சுதந்திரம் எனும் நிலைபாட்டில் இரட்டை நிலைபாடுகள் கொண்டிருப்பதாகவும் அவர் சொல்கிறார். தாரிக் அலி குறிப்பிடுவது போலவே, இஸ்லாமை விமர்சிக்கிற மாதிரி யூதமதத்தை இவர்களால் விமர்சிக்க முடியுமா எனவும் அவர் கேட்கிறார். மேற்கில் நடக்கும் இத்தகைய தாக்குதல்களை விமர்சிக்கும் இவர்கள், அரபு சர்வாதிகாரிகளை ஆதரிக்கும், அரபு நாடுகளில் தலையிட்டுக் கொலை புரியும், ‘நாங்கள் இறந்தவர்களின எண்ணிக்கையைக் கணக்கிடுவதில்லை’ எனும் அவர்களது கூற்றை, அவர்களது பாலஸ்தீனம் தொடர்பான நிலைபாட்டை இதே வகையில் விமர்சிக்கிறதா எனக் கேட்கிறார். இதே போல, பயந்துபோயிருக்கிற, அதிகாரமற்ற, ஒடுக்குமறைக்கு உள்ளாகிற ஐரோப்பிய முஸ்லீம்களிடம் கேலிச்சித்திரங்களைப் பார்த்துச் சிரிக்கிற மனநிலையிலும் அவர்கள் இல்லை என்கிறார். விமர்சனத்துடன் பொறுப்பும் வேண்டும் எனவும் அவர் கோருகிறார்.

இவ்வாறு சொல்கிற தாரிக் அலியும் தாரிக் ரமடானும் சார்லி ஹெப்டோ படுகொலையை நிபந்தனையற்றுக் கண்டிப்பதாகவும் சொல்கிறார்கள். கேலிச் சித்திரத்திற்கு எதிர் இன்னொரு கேலிச் சித்திரம், விமர்சனத்திற்கு எதிர் மற்றொரு விமர்சனம்தான் பதிலாக இருக்க முடியுமேயொழிய படுகொலை பதிலாக இருக்க முடியாது எனவும் தாரிக் அலி குறிப்பிடுகிறார்.

குறிப்பாக சார்லி ஹெப்டோ மீதான தாரிக் அலியின் விமர்சனமாக அவ்விதழ் மதநீக்க அடிப்படைவாதத்தைப் பேசும் இதழ் என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம். தாரிக் ரமடானின் விமர்சனமாக அதிகாரமற்ற, சிரிக்கிற மனநிலை கொண்டிராத மக்களை நோக்கிய கேலிச்சித்திரங்கள் சார்லி ஹெப்டோவின் விமர்சனங்கள் என நாம் புரிந்து கொள்னலாம். இன்னும் சார்லி ஹெப்டோ ஆசிரியர் சார்ப்போ சேபர்னியருடனான தனது இரண்டு தொலைக்காட்சி விவாதங்களையும் தாரிக் ரமடான் நினைவுகூர்கிறார். தாரிக் அலியோ தாரிக் ரமடானோ சார்லி ஹெப்டோவை வெள்ளை நிறவாத இதழ் எனக் குறிப்பிடுவதில்லை. இஸ்லாமை மட்டும் அது குறிவைக்கிறது எனவும் குறிப்பிடவில்லை. இன்னும் சார்லி ஹெப்டோ கருத்துச் சுத்திரத்தில் இரட்டை நிலைபாட்டைக் கடைப்பிடிக்கிறது எனவும் ரமடானால் சொல்ல முடியவில்லை. சார்லி ஹெப்டோ இஸ்லாமிய மக்களின் உணர்வுகளைக் கணக்கிலெடுக்காமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினது உணர்வுகளாக மட்டுமே இதனை முன்னிறுத்தி எதிர்விணை செய்கிறது. இது மதநீக்க அடிப்படைவாதம் என்கிறார் தாரிக் அலி.

சார்லி ஹெப்டோ குறித்த உரையாடல்களில் இருவருமே தவற விடுகிற பிரச்சினையொன்று இருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல்களை இவர்கள் அமெரிக்க-இஸ்ரேலிய-ஐரோப்பியக் கொள்கைகளின் எதிர்விளைவான அரசியலாக மட்டுமே பார்க்கிறார்கள். அதனையே திரும்பத் திரும்பத் வலியுறுத்துகிறார்கள். இது இத்தகைய தாக்குதல் பின்னணிகளில் ஒரு பரிமாணம் மட்டும்தான். இன்னொரு முக்கியமான பரிமாணம் உண்டு. இத்தகைய தாக்குதல்களை ஒரு சீரழிவுச் சமூகத் திட்டத்தை இலக்காகக் கொண்ட, அதற்கு இறையியல் பரிமாணத்தையும் வழங்குகிற அடிப்படைவாதச் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் உலக அளவில் ஒருங்கிணைக்கிறார்கள் என்பதுதான் அது. இதனை தாரிக் அலியோ, தாரிக் ரமடானோ அழுத்தமாக முன்வைப்பதில்லை.

ஸல்மான் ருஸ்டி பிரச்சினையில் பதிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் கொல்லப்பட்டது, பணிதல் எனும் திரைப்படத்தினை எடுத்ததற்காகக் ஹாலந்து இயக்குனர் தியோ வான்கோ கொல்லப்பட்டது, டென்மார்க் ஜிலான்ட் போஸ்டன் கார்ட்டூன் பிரச்சினையை அடுத்து உலகெங்கிலும் நிகழந்த வன்முறையில் கொல்லப்பட்டவர்கள், இன்னசென்ஸ் ஆப் முகமது திரைப்படத்தினை அடுத்து எழுந்த வன்முறைகள் என்பதனையடுத்து நிகழ்ந்திருக்கிற, உலக அளவில் தாக்கங்களை உருவாக்கியிருக்கும், ஐரோப்பாவில் இன்றும் இனிவரும் காலங்களிலும் மிகப்பெரும் விளைவுகளையும் உருவாக்கப் போகும் பிரச்சினைதான் சார்லி ஹெப்டோ படுகொலைப் பிரச்சினை.

கருத்துச் சுதந்திரம் என்பது பொறுப்புணர்வுடனும் சமூகநீதியுடனும் பிணைக்கப்பட்டிருக்கிறது எனும் பார்வையுடன், ஒரு விமர்சனத்துக்கான அல்லது படைப்புக்கான, கேலிச் சித்திரத்திற்கான எதிர்விணை என்பது மறுவிமர்சனம், இன்னொரு படைப்பு, மாற்றுக் கேலிச்சித்திரம்தான் எனும் பார்வை வலுவடைந்து வருகிறது. கோட்பாட்டளவில் தணிக்கையற்ற கருத்துச் சுதந்திரத்தைத் தான் ஆதரிக்கிறேன் என்றுதான் தாரிக் ரமடானால் சொல்ல முடிகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தையம் அதனது படுகொலைக் கருத்தியலையும் நாம் அனைவருமே நிராகரிக்க வேண்டும். அமெரிக்க-இஸ்ரேலிய-ஐரோப்பிய வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு எதிரான அரசியல் போராட்டம் இந்த வகையிலேயே தார்மீக அரசியலாக முடியும்.

கலை இலக்கியம், தத்துவம், நடைமுறை என இன்றைய உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது மத்தியகாலத் தண்டனைச் சட்டங்களிலும் பெண்வெறுப்பிலும் இஸ்லாமிய அடிப்படைவாதமான தலிபான்-அல்குவைதா-ஐஎஸ்ஐஎஸ் முன்வைக்கும் சமூகத்திட்டத்திலும் இருக்க முடியாது. சார்லி ஹெப்டோ பிரச்சினை குறித்த விவாதம் இத்தகைய திசை நோக்கி நகர்வதே எதிர்கால உலகுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.

http://yamunarajendran.com/?p=1792

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.