Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்பாராத மாற்றம் - செல்வரட்னம் சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பாராத மாற்றம் - செல்வரட்னம் சிறிதரன்

24 ஜனவரி 2015

எதிர்பாராத விடயங்கள் நடைபெறுகின்ற ஆண்டாக இந்த ஆண்டு - 2015 ஆம் ஆண்டு தோற்றமளிக்கின்றது. ஜனவரி 8 ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் மிகுந்ததாகவே இருக்கும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக கத்தியின்றி சத்தமின்றி மாற்றம் நிகழ்ந்தது என்பதை நிதர்சனமாக்கும் வகையில் அமைதியாக நடந்து முடிந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியாகிய உடன் - முன்னாள் ஜனாதிபதி மகிந்த வெற்றிபெற்றிருந்தாலும்சரி, தோல்வியுற்றிருந்தாலும்சரி, தேர்தலின் பின்னர் வன்முறைகள் நாட்டின் பல இடங்களில், குறிப்பாகத் தலைநகர் கொழும்பில் மோசமான முறையில் வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

தேர்தலில் தோல்வியுற்றால், அதிகார பலமுள்ளவராகத் திகழ்ந்த மகிந்த ராஜபக்ச தனது தோல்விக்குக் காரணமானவர்கள் மீது பழி தீர்த்துக் கொள்வதற்கு எந்த வகையிலாவது முயல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் நடைபெறவில்லை. யாரும் எதிர்பாராத நேரத்தில் அவர், அமைதியாக தனது உத்தியோகபூர்வ இடமாகிய அலரி மாளிகையை விட்டு வெளியேறினார். ஏதிர்பாராத வகையில் அவர் இவ்வாறு நடந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதேநேரம் அனைவரையும் நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்தது. மகிழ்ச்சியடையச் செய்திருந்தது.

என்ன நடந்தது?

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரம், முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியைத் தெளிவாக உணர்ந்து கொண்டபோது, உண்மையான தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் தடுத்து, ஆட்சி அதிகாரத்தைத் தானே தக்க வைத்துக் கொள்வதற்கான சதி முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அர்த்தராத்திரியில் இந்த சதி முயற்சிக்கான திட்டம் அலரி மாளிகையில் வைத்தே வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்; ஜி.எல்.பீரிஸ், நாட்டின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் கூடி, உண்மையான தேர்தல் முடிவுகளுக்கு மாறான வகையில் நிலைமையை மாற்றியமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து, பேச்சுக்கள் நடத்துவதற்காக சட்டமா அதிபர் யுவன்ஜன் விஜயதிலக்கவை அலரி மாளிகைக்கு அன்று அதிகாலை 3 மணிக்கு அழைத்திருந்ததாகத் தகவல்.

பொலிஸ் மா அதிபரின் தலைமையில் தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் 65 ஆயிரம் பொலிசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மேலதிகமாக தேர்தல் பாதுகாப்புக்காக, பல்வேறு இடங்களில் குறிப்பாக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட இடங்கள், வாக்களிப்புச் சாவடிகள், வாக்களிப்பு எண்ணும் நிலையங்கள் மட்டுமல்லாமல், அரச ஊடக நிறுவனங்கள், தனியார் ஊடக நிறுவனங்கள் என்பவற்றைச் சூழவும் இராணுவத்தை நிறுத்துவதற்கான திட்டமும் ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தேர்தலுக்கான பாதுகாப்பு ஒழுங்குகள் மற்றும் நடவடிக்கைகள் யாவும், தேர்தல் ஆணையாளரின் தீரமானத்திற்கும் முடிவுக்கும் ஏற்ற வகையில் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் பொலிசாரினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இலங்கையின் தேர்தல் சட்டமாகும். பொலிசாருக்கு மேலதிகமாக இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை தேர்தல் ஆணையாளரும், பொலிஸ் மா அதிபருமே தீர்மானிக்க வேண்டும் என்பதும் தேர்தல் சட்டவிதியாகும். இதற்கு முரணான வகையில் தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாக ஜனவரி 5 ஆம் திகதியிலிருந்து மேலதிக பாதுகாப்புக்காக என்ற போர்வையில் இராணுவத்தைக் கடமையில் ஈடுபடுத்துவதற்கும், அதற்கென நடவடிக்கைத் தலைமையகம் ஒன்றைச் செயற்படுத்துவதற்கும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது பற்றியும் தவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இராணுவத்தைப் பயன்படுத்தும் திட்டம்

இராணுவத்தைப் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தும் திட்டம் பற்றிய ஏற்பாடுகள் யாவும், சீவ் டிபென்ஸ் ஸ்டாவ் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் முப்படைத் தளபதிகளுக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் சுற்றறிக்கை ஒன்றின் மூலமாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல். மிகவும் இரகியமானது என குறித்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்தத் திட்டச் செயற்பாடு குறித்த ஆவணம் எதிரணி வேட்பாளராகிய மைத்திரிசபால சிறிசேன அணியினருக்கும், ஊடகங்களுக்கும் முக்கிய வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இரகசியமாகக் கசிந்திருந்தது. இராணுவத்தைப் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துகின்ற திட்டம் தொடர்பான இரகசியம் வெளியாகியதையடுத்து, முக்கியமான பல தரப்பினரும் நிலைமைகளை எதிர்கொள்வதற்கும் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தயாராகியிருந்தனர்.

இதனால், இந்தத் திட்டத்திற்கு அமைவாக ஜனவரி 5 ஆம் திகதி முதல் இராணுவத்தைப் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அது கைவிடப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே தேர்தல் நடைபெற்ற தினத்தன்று இரவோடு இரவாக தேர்தல் மூலமான மக்களின் தீர்ப்புக்கு எதிரான வகையில் ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சதி நடவடிக்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பொலிசார் ஏற்கனவே தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் மேலதிக பாதுகாப்பு என்ற போர்வையில், முப்படைகளையும் உடனடியாகக் களத்தில் இறக்கும் வகையில் படைத்தளபதிகளுக்கு உத்தரவு பறந்தது. ஆயினும் தேர்தல் நிலைமையில் தாங்கள் கடமையில் ஈடுபடுவது குறித்த சட்டப் பாதுகாப்பு அவசியம் என முப்படைத் தளபதிகளும் வலியுறுத்தியதையடுத்து, சட்டமா அதிபரின் ஒத்துழைப்புக்காகவே, சட்டமா அதிபர் யுவன்ஜன் விஜயதிலக்க ஜனவரி 8 ஆம் திகதி இரவு நள்ளிரவுக்குப் பின்னர் (9ஆம் திகதி) அதிகாலை 3 மணிக்கு அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அலரிமாளிகைக்கு சட்டமா அதிபரை அழைப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பே பனாகொட இராணுவ முகாமைச் சேர்ந்த சில இராணுவ பிரிவுகளை கொழும்பில் உள்ள முக்கியமான வாக்குகள் எண்ணும் நிலையங்கள் சிலவற்றைச் சூழ்ந்து கடமையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் தகவல் கசிந்திருக்கின்றது.

அந்த அதிகாலை நேரத்தில் வந்த அழைப்பு குறித்து சந்தேகம் கொண்ட சட்டமா அதிபர், இந்த அழைப்பு குறித்து, சொலிசிட்டர் ஜெனரல் பிம்பா திலகரத்னவுக்கு விபரமாகத் தெரிவித்து, சட்ட ஆலோசனைகள் ஏதேனும் தேவைப்படலாம் என்றும் அதற்குத் தயாராக இருக்குமாறு முன்னெச்சிக்கை நடவடிக்கையை மேற்கொண்ட பின்பே அலரி மாளிகைக்குச் சென்றிருந்தார்.

அந்த அகால வேளையில் அலரி மாளிகையில் கூடியிருந்த அரச உயர் மட்டத்தினரைக் கண்டு அதிர்ச்சியடைந்த சட்டமா அதிபர் விஜயதிலக்கவுக்கு அங்கு விபரிக்கப்பட்ட விடயங்கள் மேலும் அதிர்ச்சியடையத்தக்கதாக இருந்ததாகவும், அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், சொலிசிட்டர் ஜெனரலுடன் இதுபற்றி ஆலோசித்தே முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி, அவருடன் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார். அவரும் மற்றுமொரு சட்டநிபுணருடன் ஆலோசனை நடத்த வேண்டும் எனத் தெரிவித்து, நாட்டின் முக்கிய மூன்று சட்ட நிபுணர்களும் தங்களிடம் தெரிவிக்கப்பட்ட சதி முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என தெரிவித்ததையடுத்தே அந்த சதி முயற்சி கைவிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நாட்டின் அதியுயர் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக அவர்களுடைய வேண்டுகோள் வடிவிலான கட்டளையை மீறினால் தங்களுக்கும் தமது குடும்பத்தினருக்கும் என்ன நடக்கும் என்ற உயிரச்சம் இருந்த போதிலும் அவர்கள் மூவரும் முழு நாட்டினதும் நன்மையைக் கருத்திற்கொண்டு உறுதியாகத் தமது மறுப்பை வெளியிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத அதிர்ச்சிகள்

முப்பது வருடங்கள் தொடர்ந்த மோசமான ஒரு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் இரத்த ஆறு ஓடுவதை நிறுத்தி அமைதியைக் கொண்டு வந்த பெருமைக்குரிய வீரனாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருதப்பட்டார். இரத்தம் சிந்தப்படுவதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக சிங்கள மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு அவரின் பின்னல் அணிதிரண்டிருந்தனர். அத்தகைய தலைவனாக இருந்த ஒருவர் தேர்தலின் பின்னர் சதி முயற்சியின் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றிருப்பது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கல்விமானாக மதிக்கப்பட்ட, சிறந்த கல்வியறிவைக் கொண்டு அரசியல்வாதியாகச் செயற்பட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ{ம் இந்த சதிமுயற்சிக்கு உந்தையாக இருந்தாரோ என்று பலரும் அதிர்ச்சியிலும் அதிசயத்திருக்கின்றார்கள். அதேநேரம் நாட்டின் பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ{ம் இதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றாரே, இதன் மூலம் இலங்கையின் நீதித்துறைக்கு அழிக்க முடியாத அபகீர்த்தியை ஏற்படுத்திவிட்டாரே என்று பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள்.

தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சதி முயற்சி பற்றிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. இந்த சதி முயற்சி பற்றி முழுமையாக விசாரணை செய்வதற்குப் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அந்த விசாரணைகள் நியாயபூர்வமாக நடத்தப்பட வேண்டும். விசாரணைகளில் கண்டுபிடிக்கப்படுகின்ற விடயங்கள் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றார்கள்.

ஏனெனில் நாட்டில் இதுவரைகாலமும் இல்லாத வகையில் நாட்டின் அதியுயர் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் மூலம் மக்களின் தீர்ப்பு வழங்கப்படுகின்ற வேளை, ஆட்சிப் பொறுப்பு கைமாறுகின்ற இடைவெளியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சதி முயற்சி ஒன்றைப் பற்றிய தகவல்கள் அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் வெளியாகியிருக்கின்றன.

ஆரசியல்வாதிகளின் இந்த நடவடிக்கை குறித்து மக்கள் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். அதேநேரத்தில் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதன் ஊடாக மட்டுமே எதிர்காலத்தில் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற எண்ணுபவர்கள், அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கையாகவும், அபாய அறிவிப்பாகவும் அமையும். அதன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தையும், மக்களின் இறைமையையும் பாதுகாக்கவும், அவற்றின் புனிதத் தன்மையைப் பேணவும் கூடியதாகவும் இருக்கும்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்த பின்னர், பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டை பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவித்ததாகப் பெருமை பேசிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த நாட்டில் பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனம் என்று எவரும் கிடையாது என்றும், இந்த நாட்டை நேசிப்பவர்கள், இந்த நாட்டைப் பயங்கரவாதத்தின் மூலம் இரண்டாகப் பிரிக்க முயற்சிப்பவர்கள் என்று இரண்டு வகையினரே இருப்பதகக் குறிப்பிட்டிருந்தார். அதாவது நாட்டை நேசிப்பவர்கள் பெரும்பமான்மையாகவும், நாட்டை துண்டாடுவதற்கு முயற்சிக்கின்ற சிறிய எண்ணிக்கையிலான துரோகிகள் சிறுபான்மையாகவும் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாள் முதல் படிப்படியாக நியாயமான அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டும், உரிமைகள் மறுக்கப்பட்டும் வந்துள்ள சிறுபான்மை இன மக்கள் தமது உரிமைக்காகப் போராடுவதும்,அதற்காகப் பாடுபடுவதும் நாட்டுக்கு இழைக்கப்படுகின்ற துரோகமாக அவரால் பார்க்கப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களாகப் போகின்ற நிலையில் தானே தனது விருப்பத்திற்கு அமைவாக உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று நடத்திய ஜனாதிபதி தேர்தலின் முடிவில் சதி முயற்சியில் ஈடுபட்டு, நாட்டுக்குத் துரோகம் இழைத்துள்ளாரா என்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றார். இதையும்கூட எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியாகிய அவரே இதனை எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார் என்றும் கூற வேண்டும். அந்த வகையில் இந்த நாட்டில் அரசியல் நிலைமைகள் எதிர்பாராத வகைகளில் மாற்றமடைந்திருக்கின்றன.

புதிய அரசாங்கத்தின் எதிர்பாராத அறிவித்தல்கள்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலானது வெறுமனே ஆட்சி மாற்றத்தை மட்டும் கொண்டு வரவில்லை. பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி, கஸ்ட சீவியம் நடத்தி வருகின்ற சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்கின்ற மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான அறிவித்தல்களையும் கொண்டு வந்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எதிர்பாராத வகையில் திடீர் திடீரென உயர்த்தப்படுவதையே கண்டு வந்த மக்கள் புதிய அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளைச் சடுதியாகக் குறைத்திருப்பதைக் கண்டு மகிழ்ந்து போயிருக்கின்றார்கள். எரிபொருள் விலைகளில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்கள் மக்களுடைய வாழ்க்கையில் பல்வேறு விடயங்களில் மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏறு;படுத்த வல்லது.

எரிபொருட்களின் விலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது, போக்குவரத்து மட்டுமல்லாமல் விவசாயம், கடற்தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளிலும் தாக்கங்களை எற்படுத்த வல்லது. இதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற வகையில் சம்பளம் உயர்த்தப்படுவதில்லை. இதனால் மக்கள் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அல்லாட நேரிடும். கடந்த ஆட்சியில் இதுவே தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. ஆனால் புதிய ஆட்சியில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதாக அறிவித்தல் வெளியாகிய உடன் பஸ் கட்டணங்களையும் குறைக்கப்படும் என்ற அறிவித்தல் பஸ் உரிமையாளர்களிடம் இருந்து வந்துள்ளது.

தேர்தல்களின் போதும், அரசுக்கும் அரச தரப்பினருக்கும் நன்மை தரத்தக்க சமயங்களில் எரிபொருளின் விலை குறைக்கப்படுவதாக முன்னைய அரசாங்கம் அறிவிக்கும். அத்துடன் பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்ற அறிவித்தலையும் அரசாங்கமே விடுக்கும். பல சமயங்களில் எரிபொருளின் விலைகள் குறைக்கப்பட்டதற்கு அமைய கட்டணங்களைக்

குறைக்க முடியாது என்ற மறுப்பையே நாட்டு மக்கள் பஸ் உரிமையாளர்களிடம் இருந்து கேட்டு வந்துள்ளனர். ஆனால் புதிய அரசாங்கம் செய்த விலை குறைப்பையடுத்து, பஸ் உரிமையாளர்கள் தாங்களாகவே கட்டணங்கள் குறைக்கப்படுவது குறித்து அறிவித்திருக்கின்றார்கள். இவையெல்லாம் எதிர்பபார்த்திராத சம்பவங்களாகும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள்

நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கத் தக்க வகையிலான காரியங்களை முன்னெடுத்துள்ள புதிய அராசங்கம், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற அறிவித்தலையும் வெளியிட்டிருக்கின்றது. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், அயல் நாடாகிய இந்தியாவுக்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த அறிவித்தல்களை வெளியிட்டிருக்கின்றார். அதுவும், இந்தியாவுக்கு உறுதியளிக்கும் வகையில் அவற்றைத் தெரிவித்;திருக்கின்றார்.

வடக்கில் இருந்து இராணுவம் குறைக்கப்படும், 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐநாவின் அனுசரணையுடன் உள்ளுரில் விசாரணைகள் நடத்தப்படும், திம்புப் பேச்சுவார்த்தை, மங்கள முனசிங்க தலைமையிலான குழுவின் சிபாரிசுகள், சந்திரிகா பண்டாரநாயக்கா முன்வைத்த தீர்வுத் திட்டம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன் ஊடாக தேசிய நல்;லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இதுகால வரையிலும் அரசியல் தீர்வு காண்பதற்கான விருப்பம் அல்லது அரசியல் ரீதியான நாட்டம் முன்னைய அரசாங்கத்திடம் இருக்கவில்லை. அதன் காரணமாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. தேசிய மட்டத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் முடியவில்லை என்ற சாரப்பட அமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

தேசிய இனப்பிரச்சினை குறித்து பேசுவதே பாவம், அது தீண்டத் தகாதது என்ற வகையில் முன்னைய அரசாங்கமும் ஜனாதிபதியும் செயற்பட்டிருந்த பின்னணியில் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதுமே, தேசிய இனப்பிரச்சினை குறித்தும், தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள அன்றாடப் பிரச்சினை குறித்தும் சாதகமாகக் கருத்துக்களை வெளியிட்டிருப்பது தமிழ் மக்களை இந்த அரசாங்கத்தை நம்பி;க்கையோடு ஏறிட்டு நோக்கச் செய்திருக்கின்றது,

யுத்தம் முடிவுக்கு வந்து ஆண்டுகள் பல கடந்த பின்னரும், தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், அடிப்படை வாழ்க்கைச் செயற்பாடுகளிலும் இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டு இடைஞ்சல்களை ஏற்படுத்தி வந்த முன்னைய அரசாங்கத்தைப் போலல்லாமல், அந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்திருப்பது தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் எதிர்பாராத ஒரு விடயமாகும்.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகத் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, தேர்தல் பிரசார காலங்களில் தமிழ் மக்களின் பிர்ச்சினைகள் குறித்து எதையுமே குறிப்பிடவில்லை. அதேபோன்று தனது தேர்தல் வாக்குறுதிகளிலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து எதனையும் அவர் தெரிவித்திருக்கவில்லை. இதனால் தேர்தல் பிரசார காலத்தில் இது குறித்து விமர்சனங்கள் எழுந்திருந்தன. இருந்த போதிலும் தமிழ் மக்கள் திரண்டு வந்து அவரை ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்துவிட்டனர்.

இந்தப் பின்னணியில் தமிழ் மக்கள் தொடர்பாகவும், அவர்களுடைய பிரச்சினைகள் பற்றியும் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றது.

குறுகிய ஒரு கால வரையறையை – 100 நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள புதிய அரசாங்கம், இனவாத எதிர்க் கருத்துக்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் அஞ்சாமல் நாட்டின் எதிர்கால அரசியல் நன்மைகளைக் கருத்திற் கொண்டு செயற்படுமேயானால், அது அனைவருக்கும் நன்மை யப்பமாகவே அமையும். குறிப்பாக இன்னும் 3 மாதங்களில் வரப்போகின்ற பொதுத் தேர்தலில் நாட்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை அல்லது மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறத்தக்க வகையில் வெற்றியடைவதற்கும் இந்தச் செயற்பாடுகள் வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115889/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க வாசிக்க

எல்லாம் நன்றாகவே இருக்கின்றன

 

இதில் மனச்சுத்தியான விடயங்கள் உண்டா?

மற்றும் இனவாதமும்  அதன் கட்சிகளும் இவற்றை எவ்வளவுக்கு அனுமதிக்கும்???

காலம் பதில் சொல்லட்டும்

அதுவரை தமிழர்கள் மூச்சுவிடட்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.