Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - மூனா

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 19

அன்று தம்பி, இன்று அண்ணன்..

மூனா

அன்று தம்பி, இன்று அண்ணன்... 
 

 

 

ஒரு சில நிமிடங்களில் மீண்டும் வெளிச்சத்திற்குள் நின்றோம். இடையில் விளக்குகள் அணைந்ததால் நாங்கள் பேசிக்கொண்டிருந்த விடயங்களும் விடுபட்டுப் போயின.

கதை இப்பொழுது நவம் அறிவுக் கூடத்தில் நாங்கள் கண்ட நம்பிக்கை தளராத உள்ளங்களைப் பற்றிச் சுழன்று கொண்டிருந்தது.

பிபிசி தமிழ்ச்சேவையில் விவரணம் ஒன்றின்போது உறுதியோடு பேசிய, 14 வயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த பெண்ணைச் சந்திக்க வேண்டுமென்பதில் எனது மனைவிக்கு ஆர்வம் இருந்தது. நவம் அறிவுக்கூடம் போயும் அவளைச் சந்திக்க முடியாது போய்விட்ட ஆதங்கத்தை மனைவி பிரபாகரனிடம் சொன்னார்.

'நீங்கள் சொல்லுறது செல்வாவை எண்டு நினைக்கிறன். அவ நவம் அறிவுக் கூடத்திலை இல்லை. இங்கை கிட்டத்தான் இருக்கிறா.

'அந்தப் பிள்ளையை சந்திக்க வாய்ப்பிருக்கோ?' எனது மனைவி கேட்டவுடன்.

'இப்பவே சந்திக்கலாம். பத்து நிமிசத்துக்குள்ளை ஆள் வந்திடும்'

பிரபாகரன் தனது பாதுகாவலர்களிடம் அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.

அவர் சொன்னபடி பத்தாவது நிமிடத்தில் கையில்லாத போதும் மனவலிமையோடு வாயாலும், காலாலும் எலக்ரோனிக் துறையில் வேலை செய்துகொண்டிருக்கும் செல்வா தனது பெண் உதவியாளருடன் அங்கே நின்றார்.

செல்வாவுக்கு கை போட்டால் என்ன..? அது முடியுமா..? என்ற கேள்விகள் எம்முள் எழ அது பற்றி கொல்கரிடம் கேட்டோம்.

'மிகவும் சிரமமான விடயம். எலெக்ரோனிக் சம்பந்தப்பட்டது. காலைப் பொருத்துற மாதிரி ஒன்றும் இலகுவான வேலை இல்லை. நரம்புகளைக் கண்டறிஞ்சு, வயருகள் பொருத்தி, பயிற்சி எடுத்து எக்கச்சக்கமான சிக்கல் பிடிச்ச வேலை' என்று கொல்கர் சொன்னான்.

'சிக்கலாகவே இருக்கட்டும். இரண்டு கையில்லாத பெண்ணுக்கு ஒரு கையாவது கொடுப்போம்'

'பயிற்சி எண்டிறது ஒரு நாளிலை இல்லை. கொம்பியூட்டருக்குள்ளாலை செய்யிறது. அதுக்குக் கன நாட்கள் தேவை. மற்றது அந்தப் பெண்ணுக்கும் கொம்பியூட்டர் அறிவு இருக்கோணும்'

'பயிற்சி செய்யிறதை இஞ்சை ஆருக்காவது சொல்லிக் கொடுத்தால் அவர் அதை நடைமுறைப்படுத்துவார்'

கொல்கர் என்னைப் பார்த்த பார்வையில் அவனது எரிச்சலும், கோபமும் தெரிந்தது.

'ஒரு கையின்ரை எடை குறைஞ்சது ஏழு கிலோ வரும். அதைத் தோள்பட்டையிலை பொருத்தி அந்த எடையைத் தாங்குறதே சிரமம்'

'அவர்கள் இஞ்சை எவ்வளவோ தாங்கீட்டீனம். அந்தப் பிள்ளை இதையும் தாங்கும்'

'நீ நான் சொல்லுறதை விளங்க மறுக்கிறாய். சரி விடு. ஒரு கையின்ரை விலை எவ்வளவு தெரியுமே? 35,000 யூரோவிலிருந்து 40,000 யூரோ வரும்'

'பணம் இங்கை பிரச்சனை இல்லை. நீ செய்வியோ என்பதுதான் கேள்வி'

எனது இடைவிடாத நச்சரிப்புக்குப் பின் கொல்கர் சொன்னான் 'செய்யலாம். புது ரெக்னிக் வந்திருக்கும். அதை எல்லாம் நான் புதுசா படிக்கோணும். நீ வற்புறுத்துறதாலை நான் இதற்கு ஒத்துக் கொள்ளுறன்'

கொல்கர் எங்கே மறுத்து விடுவானோ என்ற பயம் எனக்குள் இருந்தது. கொல்கர் இல்லாவிட்டாலும் இன்னொருவரைக் கொண்டு கை பொருத்துவதை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால் கொல்கர் போல் வருமா? அவன் சம்மதித்ததால் சிரமங்கள் இல்லாது போனது.

நானும் கொல்கரும் நீண்ட நேரம் உரையாடியதை பிரபாகரன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். பிரபாகரனிடம் கொல்கர் சொன்னதைச் சொன்னேன்.

'ஏழு கிலோதானே! அது பழகீடும். இதுக்கான சகல செலவுகளையும் நான் தாறன்'

'பணம் ஒரு பிரச்சனையாக இல்லை. அதை யேர்மனிப் புனர்வாழ்வுக்கழகம் பார்க்கும்'

அந்தப் பிள்ளையின் கை நரம்புகள் இன்னும் வேலை செய்கிறதா. செயற்கைக் கையை தோள்ப்பட்டையில் பொருத்த வாய்ப்பிருக்கிறதா எனத் தான் பார்க்க வேண்டுமென்று கொல்கர் சொன்னான். அதை பரிசோதிப்பதற்காக கொல்கரை அனுமதித்து விட்டு  கூடத்துக்கு வெளியே நாங்கள் நின்றோம். கொல்கருக்கு உதவியாக செல்வாவுடன் வந்திருந்த பெண் உதவியாளரும் எனது மனைவியும் நின்றார்கள்.

'மெத்தக் கடைக்கு சின்னனிலை அடிக்கடி வாறனான். அவையள் எங்கடை நெருங்கின சொந்தக்காரர்'

கூடத்துக்கு வெளியே நிற்கும் பொழுது சிறுவயதில் தந்தையுடன் பருத்தித்துறைக்கு தான் வந்த சில விடயங்களை பிரபாகரன் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

கொல்கர் செல்வாவை பரிசோதித்து விட்டு வெளியே வந்தான். அவன் சொல்லப் போகும் வார்த்தையிலேயே எங்கள் நம்பிக்கை இருந்தது.

'செய்யலாம்'

அந்த வார்த்தை எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

இப்பொழுது அடுத்த கேள்வி 'எப்பொழுது இந்த வேலையை ஆரம்பிப்பது?'

இந்த வருடத்திற்கான எனது வருடாந்த விடுமுறையில் மிகுதியாக இன்னும் ஐந்து நாட்களே இருந்தன. செல்வாவின் கை பொருத்தும் வேலை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போனால் எடுத்துக் கொண்ட வேலையில் ஈடுபாடு குறைய வாய்ப்பிருக்கிறது. எல்லாவற்றையும் யோசித்து விட்டு இந்த வருடத்துக்குள் செய்து முடிக்க வசதி இருக்கிறதா என கொல்கரைக் கேட்டேன்.

குறைந்தது ஆறுமாதங்களாவது தனக்கு வேண்டும் என்றான்.

அவன் கேட்ட ஆறுமாதங்களாயின் அது நவம்பர் மாதத்தில் வருகிறது. நவம்பர் தாயகத்தில் மாவீரர்களைக் கௌரவிக்கும் மாதம். அந்த மாதம் வந்து இங்குள்ளவர்களுக்கு இடைஞ்சல்கள் கொடுக்க விரும்பவில்லை.

ஒக்ரோபர் மாதக் கடைசியில் வசதிப்படுமா என கொல்கரைக் கேட்டேன். யோசித்து விட்டு சரி என்றான்.

'நாங்கள் கை கொண்டு ஒக்ரோபரில் வருகிறோம்' என்று பிரபாகரனிடம் சொன்னேன்.

'நல்லது. ஒக்ரோபரிலை அவவுக்கு கை கிடைக்கிறது. சந்தோசம்' என்றார். செல்வாவுக்கும் அது மகிழ்ச்சியைத் தந்திருந்தது. நன்றியோடு அண்ணனைப் பார்த்தாள்.

இங்கு நான் ஏன் அண்ணன் என்று குறிப்பிடுகிறேன் என்றால், அங்கே அவரை அண்ணன் என்றே பாசத்துடன் அழைப்பார்கள்.

எழுபதுகளின் பிற்பகுதியில் தம்பியாக அழைக்கப்பட்டவர் இன்று அண்ணன் என்று பாசம் பொங்க அழைக்கப்படுகிறார். தம்பிக்கு வயது கொஞ்சம் ஏறிவிட்டது.

அவர்களுக்கு அவர் அண்ணன். எனக்கு?

சமய குறவர்களுக்கு தந்தையாக, தோழனாக, தலைவனாக ஆண்டவன் இருந்தார் எனச் சொல்வார்கள். இங்கு ஆள்பவன் எனக்கு நண்பனாக நின்றார். அவரின் பேச்சில் என்னிடம் காட்டிய உரிமையில் அதை நான் கண்டேன். அன்று நான் எதிர்பார்த்ததை விட எல்லாம் இனிமையாக நடந்தேறின.

'வாருங்கள் போட்டோ எடுத்துக் கொள்வோம்' என்று பிரபாகரன் அழைத்தார்.

'எங்கள் கமராவையும் பயன்படுத்தலாமா?' என மனைவி கேட்டார்.

'தாராளமாக' என்று அனுமதி தந்தார்.

என் மனைவி கமராவை பிரபாகரனின் பாதுகாவலர் ஒருவரிடம் கொடுத்து படம் எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதைப் பார்த்து கொல்கரும் தனது கமராவைத் தூக்கிக் காட்ட பிரபாகரன் சிரித்துக்கொண்டே தனது இன்னுமொரு பாதுகாப்பாளரிடம் 'அதை வாங்கி போட்டோ எடு' என கண்களால் ஜாடை காட்டினார்.

மூன்று கமராக்கள் ஒளிர்ந்தன.. எந்தப் பக்கம் பார்ப்பது என்பது சற்று தடுமாற்றமாக இருந்தது.

'செல்வாவின் கை அளவுகள் தேவைப்படுகின்றன. மற்றும் தோள்பட்டையை plaster of paris இல் அச்சு எடுத்துக் கொண்டு சென்றால் யேர்மனியில் அந்தக் கையை வடிவமைக்கலாம்' என கொல்கர் சொன்னான்.

அடுத்தநாள் பத்து மணிக்கு அதற்கான நேரம் குறிப்பிடப்பட்டது.

படங்கள் எடுத்து விடைபெறும் நேரம். 'அடுத்த முறை வரக்கை பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வாங்கோ' என்று உரிமையுடன் எனது மனைவிக்கு பிரபாகரன் சொன்னார்.

விடைபெற்றோம்.

கொல்கர் விடைபெறுவதற்கு பிரபாகரனை நெருங்கிச் சென்ற பொழுது 'நன்றி மீண்டும் வருக' என பிரபாகரன் சொல்ல, பாடமாக்கி வைத்திருந்த வார்த்தைகள் மறந்து போக வெறும் 'நன்றி' மட்டும் சொல்லி கை கொடுத்து கொல்கர் விடை பெற்றான்.

வாகனத்தில் மீண்டும் வெண்புறா நோக்கிய பயணம். நேரம் நன்றாகப் போய்விட்டது. பயண அலுப்போ தூக்கமின்மையோ தெரியவில்லை. பிரபாகரனுடனான சந்திப்பையே மனது அசை போட்டது. நித்திரை கொண்டால் எல்லாம் கனவு என்ற நிலை ஆகி விடுமோ என்று ஒரு பயம். ஆகவே கண்கள் விழித்திருந்தன.

வாகனத்துக்குள் பார்த்தேன். யாரும் தூங்கவில்லை. பார்த்த விழிகள் பார்த்தபடி இருக்க அவர்களது எண்ணங்களும் எங்கேயோ போய்விட்டிருந்தன.

தொடரும்..

 

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=6b7b3c89-a176-42bb-bfe3-1b12c5839a70

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 20

24 மணி நேரத்துள் உடும்பு

மூனா

<p>24 மணி நேரத்துள் உடும்பு</p>
 

 

மறுநாள் காலை

இன்று எந்தவிதமான வேலைகளும் இல்லை. எடுத்து வந்த வேலை சிறப்பாக முடிந்ததில் மனது நிம்மதியாக இருந்தது.

நவீனமுறையிலான யேர்மன் தொழில்நுட்பத்தில் செயற்கைக் கால் செய்வதற்கான பயிற்சியை பெறுவதற்கு ஒருவரை அதுவும் யேர்மன் மொழி தெரிந்தவரை கொல்கரிடம் சேர்க்க வேண்டும். அப்படி ஒருவரைக் கண்டுபிடித்து விட்டால் வெண்புறா நிறுவனத்திற்கான எனது வேலைத்திட்டம் நிறைவடைந்துவிடும். அதன் பின்னர் நான் எனது மற்றைய பணிகளைத் தொடங்கலாம். அதேநேரம் ஒக்ரோபரில் செல்வாவிற்கு கை பொருத்தும் வேலை இருக்கிறது. அதற்கான பணம்?

தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக் கிளையில் போதுமானளவு பணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக் கிளையின் வங்கிக் கணக்குக்கு நிலையாக வந்து கொண்டிருக்கும் பணத்துக்கு வழமையான வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. இப்பொழுது செல்வாவிற்கு கை போடுவதற்கு பணத்துக்கு என்ன வழி? இந்தக் கை போடும் வேலையைப் பற்றி யேர்மனியில் அறிவிக்கும் பொழுது அங்கே என்ன மாதிரியான விளைவுகள் இருக்கப் போகின்றன.

சிந்தனையில் இருந்த என்னை வெண்புறா வாசலில் வந்து நின்ற வாகனம் கவனிக்க வைத்தது.

வாகனத்தில் இருந்து இறங்கி இருவர் வந்தார்கள். ஒருவர் இரு அஞ்சல் உறைகளைத் தந்தார். ஒன்றை உடைத்துப் பார்த்தேன். நேற்றிரவு பிரபாகரனுடனான சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்கள் வர்ணத்தில் இருந்தன. மற்றைய உறை கொல்கருக்கு உரியது என்றார்கள்.

வன்னியில் எல்லா வேலைகளும் துரிதகதியில் நேர்த்தியாக நடந்து கொண்டிருந்ததைப் பார்க்கும் பொழுது மகிழ்வாக இருந்தது.

<p>24 மணி நேரத்துள் உடும்பு</p>

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அரசியல்துறைச் செயலகத்தில் இருந்து ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். தனியாக என்னுடன் கதைக்க வேண்டும் என்றார்.

'சொல்லுங்கள்' என்றேன்.

'அண்ணனின் பாதுகாப்பு விடயமாக தீபன் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். இது ஒரு பாதுகாப்பு நிமித்தமான செயற்பாடு. அது நீங்கள் விரும்பினால் மட்டும் தான். உங்களிடம் சொல்லி உங்கள் பதிலை அரசியல்துறைப் பொறுப்பாளர் வாங்கிவரச் சொன்னார்' என்று வந்தவர் சொன்னார்.

'வரச் சொல்லுங்கள் அவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சியே என்றேன்' அரசியல்துறையில் இருந்து வந்தவர் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

சிறிது நேரம் போயிருக்கும். தீபன் உங்களுக்காக வெண்புறா வரவேற்பறையில் காத்திருக்கிறார் எனத் தகவல் வந்தது.

வரவேற்பறையில் தீபன் மடிப்புக்கலையாத இராணுவச்சீருடையில் நின்றார். அறிமுகம் செய்து கொண்டார்.

'இராணுவச் சீருடையில் இங்கே வருவதற்கு தடை. ஆனால் எனக்கு நேரம் மட்டு மட்டு. அன்ரனி கண்டால் கத்துவார்'

'அன்ரனி நாளை காலையில்தான் வருவார். நேற்று இரவே தன் குடும்பத்தைக் காண முல்லைத்தீவுக்குச் சென்று விட்டார்' என்றேன்.

'அரசியல்துறை நான் உங்களைச் சந்திக்க வருவதை அறிவித்ததுதானே?'

'அறிவித்தது. ஆனால் விளக்கமாகச் சொல்லவில்லை'

'அண்ணன் பாதுகாப்பு சம்பந்தமானது. அவருடைய பாதுகாப்பாளர் ஒருவரது விபரம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அது விடயமாகத்தான்... ஏனென்றால் அண்ணனின்ரை பாதுகாப்பிலை ஒரு சின்ன விசயமும் வெளியிலை தெரியக் கூடாது. அதுதான்...'

தீபன் சொல்லும் பொழுதே, எனது அதிகப்பிரசங்கித்தனமும், அவசரக்குடுக்கைத்தனமும் புரிந்து போனது.

தீபன் சில கேள்விகளைக் கேட்டார். பதில் சொன்னேன்.

சந்திப்பு திருப்திகரமானதாக இருந்தது என்று நன்றி சொல்லிவிட்டு தீபன் விடைபெற்றார். அவர் போனதன் பின்னரே அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்திருக்கலாமே என்ற நினைப்பு வந்தது.

நான் அங்கிருந்த பொழுதுகளில் பலர் என்னை வந்து சந்தித்தார்கள். எங்களுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்பதற்காக அநேகமாக அவர்கள் மாலைப்பொழுது விடைபெறும் நேரங்களிலேதான் வருவார்கள். அப்படிச் சந்தித்தவர்களில் புலித்தேவனும் ஒருவர். அவரைக் கூட எனது கமரா பதிந்து வைக்கவில்லை என்ற கவலை எனக்கிருந்தது.

பத்து மணிக்குத்தான் செல்வா வருவதாக இருந்தது. ஆனால் பத்து மணிக்கு சற்று முன்னரே ரேகாவின் வாகனம் வந்தது. செல்வாவும், அவளுக்குத் துணையாக இன்சுடரும் அந்த வாகனத்தில் இருந்தார்கள்.

யேர்மனியர்கள் நேரத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று எனக்குத் தெரியும். வன்னியில் நேரத்தை மட்டுமல்ல சொல்வதையும் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள், காக்கிறார்கள் என்பதை நேரிலேயே கண்டேன். இதை கொல்கரும் எனக்குப் பல தடவைகள் சுட்டிக் காட்டி இருக்கிறான்.

நேற்று இரவு எங்களுக்குப் பரிமாறப்பட்ட உணவின் ருசி என் மனைவியைக் கவர்ந்திழுக்க அதை எப்படிச் செய்வது? யார் செய்தது? என்று பிரபாகரனைக் கேட்டிருந்தார். பலன் இன்று கிடைத்தது.

அந்த உணவை எப்படித் தயாரிப்பது என்று எனது மனைவிக்கு செய்து காண்பிக்க, அதைத் தயாரித்த புகழோவியனையும், நிமலனையும் பிரபாகரன் அனுப்பி வைத்திருந்தார். அவர்கள் இருவரும் அரசியல்துறை அலுவலகத்துக்குச் சொந்தமான சமையலறையில் காத்திருப்பதாக ரேகா எனது மனைவியிடம் சொன்னார்.

செல்வாவின் தோள் பட்டையுடன் சேர்த்து அச்சு எடுக்க வேண்டி இருப்பதால் எனது மனைவியும் கொல்கருக்கான மொழிபெயர்ப்பில் இருப்பது நல்லதாகப் பட்டது. அன்றைய பகல் நேரம் அதற்கு முற்றாகத் தேவை என கொல்கர் கூறியதால், புகழோவியனையும் நிமலனையும் இரவு சந்திப்பதாக எனது மனைவி சொன்னார்.

அன்று இரவுவரை அவர்கள் காத்திருந்து உணவு தயாரிக்கும் முறையை காண்பித்தது மட்டுமல்லாமல் செய்முறையை எழுதியும் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

செல்வாவின் கை அளவு எடுக்க வேண்டி இருந்ததால் இரணைமடுவுக்குப் போவது அடுத்த நாளுக்குத் தள்ளிப் போயிருந்தது.

மறுநாள் ரெஜியுடன் சேர்ந்து இரணைமடுக் குளத்துக்குப் போனோம். அமைதியான, இதமான காலநிலையுடன் அந்த இடம் இருந்தது.

கொல்கருக்கு அந்த இடம் மிகமிகப் பிடித்துப் போயிற்று. 'இப்படியான  ஓர் இடத்திலேயே வாழ விரும்புகிறேன்' என்று தனது ஆசையை அவன் வெளியே சொன்னான்.

மரங்களைச் சுற்றி வட்டம் வட்டமாக கட்டப்பட்டிருந்த இடங்கள் அமர்வதற்கு ஏற்றவையாக இருந்தன. நீண்ட நேரமாக மரநிழல்களின் கீழ் இருந்து உரையாடினோம். இடையில் நானும் ரெஜியும் கிளிநொச்சிக்குப் போய் இளநீரும், பாலைப்பழமும் வாங்கி வந்தோம். அன்றைய பொழுது ரெஜியுடன் நீண்ட நேரங்களைச் செலவழிக்க முடிந்தது.

எங்களை அடிக்கடி சந்திக்க வரும் நண்பர்களிடம் நாங்கள் ஏற்கெனவே விடைபெற்று விட்டோம்.

மிகுதியான இரு நாட்களையும் வெண்புறாவில் உள்ள உறவுகளோடு செலவழிப்பது என்று முடிவு செய்திருந்தோம். மாலையில் எல்லோரும் கூடிக் கதைத்து மகிழ்ந்திருந்தோம். முதல்நாள் பயணக் களைப்பு இப்போது மெதுவாக வெளிவரத் தொடங்கியிருந்தது. வழமையை விட நித்திரைக்கு நேரத்துக்குச் சென்றோம்.

ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை வெளியே இருந்து வந்த சத்தங்கள் விழிப்புக்குக் கொண்டு வந்தன. படுக்கையில் இருந்தபடியே அவதானித்தேன். ஜெனரேட்டர் இயங்கும் சத்தம் கேட்டது. நாங்கள் நித்திரைக்குப் போகும் பொழுது நிறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டர் எதற்கு இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது. 

அன்ரனி அங்கே இல்லாததால் அவரவர் தங்கள் விருப்பத்துக்கு நடந்து கொள்கிறார்களோ? கேள்விகளுடன் இருந்தபொழுதே கதவு தட்டப்பட்டது. ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்று உறுதியாயிற்று.

எழுந்து கதவைத் திறந்தேன். கதவைத் தட்டியது சுந்தரம். எதுவுமே அவர் சொல்லவில்லை. வெண்புறா முற்றத்தில் வெளிச்சம் பரவியிருந்தது. கூட்டமாக நான்கு பேர் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அந்த நால்வரில் ஒருவனாக கொல்கர் நின்றான்.

இரவு வணக்கம் சொல்லி படுக்கைக்குப் போனவன் எதற்காக அங்கே நிற்கிறான்? மனதுள் கேள்வி மேல் கேள்வி.

கொல்கர் நின்ற இடத்தை நெருங்கினேன். அவனது கையில் வீடியோ கமரா. வட்டமாகச் சுற்றி வந்து நிலத்தில் இருந்த எதையோ படம் பிடித்துக் கொண்டிருந்தான். என்னவாக இருக்கும்? நெருங்கிப் போய் நின்றேன்.

தங்களுக்கு நடக்கப் போவதை அறியாமல் நாக்கை அடிக்கடி நீட்டுவதும், உள்ளிழுப்பதுமாக வேட்டைக்காரன் கட்டுக்குள் இரண்டு உடும்புகள் தரையில் கிடந்தன.

'முழுநாள் வேட்டை. கொஞ்ச நேரத்துக்கு முதல்தான் பூநகரியிலை பிடிச்சனாங்கள். பிடிச்ச உடனை அங்கை அறிவிச்சனாங்கள்' உடும்புகளை வேட்டையாடிக் கொண்டு வந்த இருவரில் ஒருவர் வேட்டையின் வெற்றியைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

'யேர்மன்காரனுக்குக் கொண்டு போய்க் காட்டச்சொல்லி அண்ணன் சொன்னவர்'

கொல்கருக்கு அவர்கள் சொல்வதை மொழிபெயர்த்தேன். அண்ணனுக்கு தனது நன்றியைச் சொல்லும்படி கொல்கர் அவர்களைக் கேட்டுக் கொண்டான்.

கொல்கரின் முகத்தில் பிரகாசம். அவன் விருப்பம் ஒன்று பிரபாகரனிடம் கேட்டு 24மணி நேரத்துக்குள் நிறைவேறுகிறது. அந்தக் காலகட்டத்தில் உடும்பு பிடிக்க வாய்ப்பில்லை என்று அங்கே எல்லோரும் சொல்லியிருந்த போதிலும் விருந்தினரின் விருப்பத்தை அவர்கள் ஈடேற்றி இருக்கிறார்கள். அவர்கள் மேலான மதிப்பு அவனிடம் மேலும் உயர்ந்தது.

'நாளைக்கு உடும்புக்கறி சாப்பிட யேர்மன்காரனைத் தயாரா இருக்கச் சொல்லுங்கோ' சொல்லியபடியே இரண்டு உடும்புகளையும் சாக்குக்குள் போட்டுக் கொண்டார்கள். விடைபெறும் பொழுது அவர்களுக்கும் தனது நன்றியை மனப்பூர்வமாக கொல்கர் தெரிவித்துக் கொண்டான்.

தொடரும்…

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=3fffefe4-00cb-4fac-84aa-0f81e88b16c5

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 21

வெண்புறாவில் விடைபெறும் நேரம்

மூனா

<p>வெண்புறாவில் விடைபெறும் நேரம்</p>
 

 

 

உடும்பைப் பற்றிய நினைவுகளோடு இனி கொல்கர் நித்திரை கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தது.

நான் நினைத்தது போலவே அவனது நிலைமை இருந்தது. நேற்றைய மிகுதி இரவில் தான் எடுத்த வீடியோவை திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்ததாக அடுத்தநாள் காலையில் அவன் சொன்னான்.

இரண்டு உடும்புகள்தானே கிடைத்தது. அதை எப்படி இங்கை இருக்கிற 32 பேரும் சாப்பிடப் போறம்?

கொல்கரின் சந்தேகத்துக்கு விடை அரசியல்துறையில் இருந்து வந்தது. அன்று இரவு எங்களுக்கான உணவு கண்காணிப்பு அலுவலகருடன் இடம்பெறும் என்பதே அந்த அறிவிப்பு.

கொல்கருக்கு நினைவூட்டினேன். 'இரவு உணவுக்கு கட்டைக் காற்சட்டையுடன் வந்து என்னைக் குறை சொல்லாதே' என்று. சிரித்துக் கொண்டான்.

இரவு உணவுக்காக கண்காணிப்பு அலுவலகர் தங்கியிருந்த ஹொட்டேலுக்குப் போனோம். கட்டிடத்தின் உள்ளே எல்லாமே சிறப்பாக இருந்தன. ஐரோப்பாவில் நான் பார்த்த ஹொட்டேல்களுக்கு இணையாக காணும் இடமெல்லாம் அழகாக இருந்தன. மாடிப்படிகளில் ஏறும் பொழுது பெரிய படத்தில் இருந்த பிரபாகரன் எங்களை வரவேற்பது போல் இருந்தது. 'வன்னியில் இப்படி ஒரு ஹொட்டேலை தான் எதிர்பார்க்கவில்லை’ என கொல்கர் சொன்னான்.

உள்ளிருக்கும் பொழுது யேர்மனியில் ஏதோ ஒரு ஐந்து நட்சத்திர ஹொட்டேலில் இருப்பதான பிரமையே வந்து போனது. நாங்கள் செய்த சேவைக்கு மேலாக இவர்கள் எங்களை உபசரிக்கிறார்கள் என கொல்கர் சொன்னான்.

<p>வெண்புறாவில் விடைபெறும் நேரம்</p>

இரவு உணவுக்கான நேரம். இருக்கைகளில் அமர்ந்தோம். உடும்பு இறைச்சி என்று இனம் காண முடியாதவாறு உணவைத் தயாரித்திருந்தார்கள். எலும்புகளை நீக்கி இறைச்சியைக் கட்லட் போல் தயாரித்துப் பரிமாறினார்கள். கொல்கர் ரசித்துச் சாப்பிட்டான். கண்காணிப்புக் குழுவின் பொறுப்பாளரும் எங்களுடனேயே இரவு உணவை மேற்கொண்டார்.

எங்களது சேவைகளைப் பற்றி அவர் விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். தொடர்ந்து உங்கள் சேவையைச் செய்யுங்கள் என்று சொல்லி அது வெற்றி பெற வாழ்த்தும் தந்தார்.

கொல்கரின் 'வாறான்' உண்ணும் ஆசை ஒருவாறு அன்று தீர்த்து வைக்கப்பட்டது. இன்னும் ஒரு நாள்தான் இருந்தது. நாளை மறுநாள் வன்னியை விட்டுப் புறப்படப் போகிறோம் என்று நினைத்தபொழுது மனது பாரமாகிப் போனது. சில வாரங்களாக இயற்கைக்குள் இருந்து விட்டு மீண்டும் இயந்திர வாழ்வுக்குள் கலந்து விடப் போகிறோமே என்ற கவலையும் கூடவே வந்து சேர்ந்தது.

நாங்கள் இரவு உணவை முடித்து விட்டு வெண்புறா சென்ற பொழுது அன்ரனி முல்லைத்தீவில் இருந்து திரும்பி இருந்தார். அவருடன் சிறிது உரையாடினோம். நவீன முறையில் யேர்மனியத் தொழில்நுட்பத்தில் செயற்கைக்கால் பொருத்தும் செயற்திட்டத்தில் அவருக்கு மிகத் திருப்தியாக இருந்தது.

மறுநாள் வெண்புறாவின் பிற்பகுதியில் கொஞ்சம் ஆரவாரமாக இருந்தது. என்ன என்று பார்க்கப் போன என்னைப் போக வேண்டாமென சுந்தரம் தடுத்து நிறுத்தினார்.

'ஏன்?' என்று கேட்டேன். 'மாடு அடிக்கினம்' என்று சுந்தரத்திடம் இருந்து பதில் வந்தது.

ஏன், எதுக்கு என்று கேட்க எனக்குத் தோன்றவில்லை. சுந்தரமே அதையும் சொன்னான். 'உங்களுக்காகத்தான்'

'எங்களுக்காகவோ? எதுக்கு?'

'யேர்மனிக்குக் கொண்டு போறதுக்குத்தான்'

'யேர்மனியிலை போதுமான அளவு இறைச்சி இருக்கே'

'இது வத்தல் போடுறதுக்கு. கனகாலம் வைச்சிருந்து பாவிக்கலாம்'

நேற்று இரண்டு உடும்புகள் இறந்து போயின. இன்று ஒரு மாடு.

எங்களுக்கு ஏதாவது தருவதற்கு அவர்கள் விரும்பி இருக்கிறார்கள். அவர்கள் மகிழ்வோடு தருவதை வாங்கிக் கொள்வதுதானே மரியாதை.

அன்று தமிழ்ச்செல்வனைச் சந்தித்தேன்.

'நாளைக்குக் காலைமை Red Cross வாகனம் வரும்' என்று நினைவூட்டினார்.

வன்னியில் நாங்கள் தங்கியிருந்த காலங்களில் எங்களுக்கு செய்த உதவிகளுக்கு  அவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொண்டேன்.

தமிழ்ச்செல்வனிடம் இருந்து வெண்புறாவிற்கு வரும் வழியில் லோரன்ஸ் திலகரையும் சந்தித்துக் கதைத்துவிட்டு அவரிடமும் விடை பெற்றுக் கொண்டேன்.

மாலையில் ரெஜி வந்தார். முற்றத்தில் கதிரைகளை வட்டமாக அடுக்கி எல்லோரும் அமர்ந்து கொண்டோம். சில நாட்களானாலும் ஒரு குடும்பமாகவே பழகி இருந்தோம். பிரியப் போகிறோம் என்ற நிலையே எல்லோருக்கும் கவலையைத் தந்தது. ஆனாலும் ஆளாளுக்கு சிரித்துக் கொண்டே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

நாங்கள் எடுத்து வந்த சேவையின் நன்மையை ரெஜி பாராட்டிச் சொன்னார். ஒரு சகோதரன் போலப் பழகிய கொல்கருக்கு நன்றி சொல்லி கொல்கரின் சேவைக்காக தமிழர் புனர்வாழ்வுக் கழக முத்திரை பதித்த தங்கப்பதக்கத்தை அணிவித்துக் கௌரவித்தார்.

கொல்கர் எல்லோருக்கும் 'நன்றி' சொன்னான்.

ஜெனரேட்டர் அன்று இரவு 10மணிக்கு மேலேயும் இயங்கிக் கொண்டிருந்தது. பொழுது விடிந்து விடும் எனும் நிலைமை வருகையிலே நித்திரைக்குப் போனோம்.

காலையில் கண்ணனின் பால்தேநீர். இனி நாளையிலிருந்து அந்த சுத்தமான பாலுடன் கூடிய தேநீர் அதுவும் கண்ணனின் அன்போடு கிடைக்க வாய்ப்பில்லை.

வழமையாக தான் அமரும் மரத்தின் நிழலில் கொல்கர் சிறிது நேரம் அமர்ந்து கொண்டான்.

மெதுமெதுவாக பயணத்துக்கு ஆயத்தமானோம். பொதிகள் எல்லாம் வெண்புறாவின் வரவேற்பறைக்கு வந்து விட்டன. வெண்புறாவில் இருந்த அத்தனை பேரும் குழுமியிருந்தனர்.

சொன்ன நேரத்துக்கு வாகனம் வந்தது. ஒவ்வொருத்தராக சந்தித்து விடைபெற்றுக் கொண்டோம். மீண்டும் ஒக்ரோபரில் வருவோம் என்று நம்பிக்கை கொடுத்து விட்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டோம்.

கொழும்பில் தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டை மேம்படுத்துவதற்காகவும், தமிழர் புனர்வாழ்வுக் கழக அனைத்துலக செயற்பாட்டாளர் டொக்டர் மகேஸ்வரனைச் சந்திப்பதற்காகவும் ரெஜியும் எங்களுடைய கொழும்புப் பயணத்தில் இணைந்து கொண்டார்.

தமிழீழச் சோதனைச்சாவடியை தாண்டி சிறீலங்கா சோதனைச்சாவடியில் வாகனம் நின்றது.  நாங்கள் வாகனத்துக்குள்ளேயே இருந்தோம். வாகனச்சாரதி சில படிவங்களை சோதனைச்சாவடி அலுவலகரிடம் காண்பித்து அனுமதி பெற்று வந்தார். பயணம் தொடர்ந்தது.

மதிய உணவை வவுனியா விருந்தினர் விடுதியில் எடுத்துக் கொண்டோம். உணவருந்தும் பொழுது வேண்டுமானால் பியர் எடுத்துக் கொள் என்று கொல்கரிடம் சொன்னேன். நாங்கள் வருவதை உனது சசோதரனுக்கு அறிவித்து விட்டாய்தானே. அவர் எனக்காக காத்துக் கொண்டிருப்பார். இப்பொழுது தேவை இல்லை என்றான்.

வழியில் தெருவோரங்களில் விற்பனைக்கு இருந்த விளாம்பழங்களை வாங்கிக் கொண்டோம். விளாம்பழத்தின் தடித்த ஓடு கொல்கருக்கு வியப்பைக் கொடுத்தது.

இதுவும் ஒருவகை அப்பிள்தான். மரத்தால் தோல் செய்து மூடி இருக்கிறோம் என்றேன்.

ஒன்றை உடைத்துச் சாப்பிடக் கொடுத்தேன். சிறிதளவை கையால் எடுத்து சுவைத்து விட்டு திருப்பித் தந்து விட்டான்.

யேர்மனியில் இருந்து வந்த பொழுது கொழும்பில் நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீடு இம்முறை கிடைக்கவில்லை. ஹொட்டேலில் அறை எடுத்துக் கொண்டோம்.

ரெஜி எங்கள் மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டார். இன்னும் சில தினங்களில் டொக்டர்.மகேஸ்வரன் யேர்மனிக்கு வர இருப்பதாகத் தகவல் தந்தார். கொழும்பில் தமிழர் புனர்வாழ்வுக் கழக சேவை சரியாக இயங்கத் தொடங்கிய பின், தான் யேர்மனிக்கு வருவதாகச் சொன்னார். அவருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்து விடைபெற்றுக் கொண்டோம்.

நீண்ட நாட்கள் பியர் இல்லாமல் விரதம் இருந்த கொல்கருக்கு அன்று தீர்த்தத் திருவிழா.

அடுத்தநாள் அண்ணன் குடும்பத்துடன் இணைந்து ஒரு சிறிய சுற்றுலா சென்றோம்.

பேருவளை என்ற இடத்திற்கே யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவார்கள். அவர்களுக்குச் சொந்தமான உணவகங்கள், விடுதிகள் அங்கே இருக்கின்றன. கொல்கரை அங்கே அழைத்துப் போனோம். கடலில் நீச்சலடித்தான். காணும் யேர்மனியருடன் அரட்டை அடித்தான். மொத்தத்தில் மகிழ்ச்சியாக இருந்தான்.

அதன் பின்னர் கண்டி, நுவரெலியா எனக் காண்பித்து தேயிலை தயாரிக்கும் முறையையும் காண்பித்தோம்.

தலதா மாளிகையில் அமைதியான புத்தரில் லயித்திருந்தான்.

கொழும்பு திரும்பினோம். அடுத்த நாள் பயணம். ஆனந்தண்ணையிடம் எங்கள் வருகையை உறுதி செய்தேன்.

'நீங்கள் வாற அன்று தமிழர் புனர்வாழ்வுக் கழக பொறுப்பாளர்களுடன் கூட்டம் ஒண்டு ஒழுங்கு செய்திருக்கிறன். டொக்டர் மகேஸ்வரனும் வாறார். யேர்மன் ரிஆர்ஓ தொண்டர்களுக்கும் அழைப்பு குடுத்திருக்கிறன்' என்றார்.

பயணத்துக்கு முதல், தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டோம்

டுசுல்டோர்ப் விமான நிலையத்தில் ஆனந்தண்ணை எங்களுக்காகக் காத்து நின்றார்.

தொடரும்..

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=233079d1-abef-4a56-b6ad-015f485f81ea

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 22

கரும்பு தின்னக் கூலியா?

மூனா

<p>கரும்பு தின்னக் கூலியா?</p>
 

 

போகும் பொழுது டுசுல்டோர்ப் விமான நிலையத்தில் இருந்த சங்கடங்கள், வரும் பொழுது இல்லை. ஆனந்தண்ணையும் நலமாக இருந்தார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மன் கிளை அமைந்திருந்த வூப்பெற்றால் நிலைய  மண்டபத்திலேயே கூட்டத்திற்கான ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கொல்கரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு கூட்டத்திற்குப் புறப்பட்டோம்.

பயணிக்கும் பொழுதே வன்னியில் எங்களது வெண்புறா திட்டத்தின் முழு விபரங்களையும் ஆனந்தண்ணைக்கு விபரமாகச் சொல்லிக் கொண்டேன். கூடவே செல்வாவிற்கு இலத்திரனியல் கை பொருத்துவது பற்றியும் சொன்னேன்.

'அதிகச் செலவாகுமா?' என்று கேட்டார்.

'முப்பதில் இருந்து நாற்பது ஆயிரம் யூரோக்கள் வரலாம்'

'அவ்வளவா?'

எங்கே இன்னும் ஒரு தடவை கீழே விழுந்து துடிக்கப் போகிறாரோ என்றொரு பயம் வந்து போனது.

'வங்கியிலை அவ்வளவு பணம் இல்லையே' அவரது வார்த்தை முடிவு ஆலாபனை பாடியது.

'ஆறு மாதங்கள் இருக்கு. அதுக்குள்ளை முழுப் பலத்தோடையும் நம்பிக்கையோடையும் செயற்படுவோம். சரி வரும்'

'இந்தச் செயற்பாட்டை இண்டையான் கூட்டத்திலை அறிவியுங்கோ'

'வெண்புறா செயற்பாடு பற்றி சொல்லக்கை நீங்களே சொல்லி விடுங்கோ' ஆனந்தண்ணை  பிரச்சனையை என்னிடமே விட்டுவிட்டார்.

வூப்பெற்றால் சென்றடையும் பொழுது கூட்டம் ஆரம்பிக்க வேண்டிய நேரம் போய் விட்டிருந்தது. மண்டபத்தில் இருந்த அத்தனை பேருக்கும் எரிச்சல் அதிகமாக இருந்திருக்கும்.

ஐரோப்பிய நாடுகளுக்கான தமிழர் புனர்வாழ்வுக் கழக அமைப்பாளர்களுடன் சர்வதேச தமிழர் புனர்வாழ்வுக் கழக இணைப்பாளர் டொக்டர் மகேஸ்வரனும் அங்கே இருந்தார்.

ஒவ்வொரு நாட்டுக்கான அமைப்பாளர்களும் தாங்கள் எடுத்துச் செய்யும் புனர்வாழ்வுச் செயற்திட்டங்கள் பற்றி அங்கே விளக்கம் அளித்தார்கள். யேர்மனி சார்பாக நான் பேச வேண்டி இருந்தது. எங்கள் செயற்திட்டம் தற்பொழுதுதான் நாட்டிற்குச் சென்று சூடாக விமானம் ஏறி வந்து இறங்கியிருந்தது. ஆகவே சொல்வதற்கு ஏராளம் என்னிடம் இருந்தன.

வெண்புறா நிலையத்தில் பார்த்தவைகள், சேகரித்த தகவல்கள், யேர்மன் தொழில் நுட்பத்தில் வெண்புறாவில் அறிமுகம் செய்து வைத்த வேலைத் திட்டம் என்று எல்லாவற்றையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னேன். நான் பார்த்து வந்த இனிய வாழ்வு இல்லம், நவம் அறிவுக் கூடம், பெண்கள் புனர்வாழ்வு அபிவிருத்தி நிலையம், குருகுலம் என எல்லாவற்றையும் புள்ளி விபரங்களுடனும், அவர்களது தேவைகள் எதிர்பார்ப்புகள் பற்றியும் எடுத்துச் சொன்னேன்.

'நீங்கள் எடுத்து வந்த செயற்திட்டம் அளப்பரியது. இந்தத் திட்டத்திற்கு உழைத்த அனைத்து TRO தொண்டர்களுக்கும், நிர்வாகத்துக்கும் எனது வாழ்த்தையும், நன்றியையும் உங்கள் மூலமாகத் தெரிவிக்கிறேன்'' என்று பிரபாகரன் சொன்ன செய்தியையும் எனது பேச்சில் குறிப்பிட்டேன்.

பிரபாகரன் என்ற சொல்லே ஒரு ரொனிக் மாதிரி. அவருடைய வாழ்த்துச் செய்தியும் சேர்ந்து வந்தால் எப்படி இருக்கும் என்று அன்றைய கூட்டத்தில் தெரிந்தது. தொண்டர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

அடுத்து செல்வாவின் இலத்திரனியல் கை பற்றிச் சொன்னேன். அதைச் செய்வதற்கான முழு ஒத்துழைப்பும் தங்களிடம் இருந்து கிடைக்கும் என்று அனைவரும் உடன்பட்டுச் சொன்னார்கள்.

கூட்டத்தில் பேசி முடிந்ததன் பின்னர் அவதானித்தேன், டொக்டர் என்.எஸ்.மூர்த்தி அவர்களின் சிந்தனை எங்கேயோ சிதறிப் போயிருந்தது. அவரது அந்தச் சிந்தனை பின்னாளில் எங்களது செயற்பாட்டில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப் போவது அப்பொழுது எனக்குத் தெரியாமல் போயிற்று.

விடுமுறை முடிந்துவிட்டது. வாழ்க்கையை பழைய நிலைமை நோக்கி திருப்ப வேண்டிய கட்டாயம். தாயகத்தின் நினைவுகள் என்னோடு இருந்தாலும் எனது அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டு வார இறுதிநாட்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகச் செயற்பாடுகளைக் கவனித்துக் கொண்டேன்.

தாயகத்தில் இருந்த புனர்வாழ்வு இல்லங்களைப் பற்றி நான் வூப்பெற்றால் கூட்டத்தில் குறிப்பிட்டதை குறிப்பெடுத்து வைத்திருந்த சங்கர், ஒருநாள் என்னை தொலைபேசியில் அழைத்து அந்த இல்லங்களைப் பற்றி மேலதிக விபரங்களைக் கேட்டார்.

முதலில் சங்கரைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்.

'அடித்த பாம்பை எரிக்காமல் விட்டால் அது காத்துக்கு உயிர்த்து விடும்' என்று ஊரில் அப்பொழுது சொல்லிக் கொள்வார்கள். அது உண்மைதானா என்ற ஆராய்ச்சியில் எல்லாம் நான் ஈடுபட்டதில்லை. சங்கரைக் காணும் பொழுதெல்லாம் அடித்துப் போட்ட பாம்பும், வீசும் காற்றும் என் நினைவுக்கு வரும்.

இந்திய இராணுவம் எங்கள் மண்ணில் நிலை கொண்டிருந்த நேரம், தங்களுக்கு ஏதாவது இழப்புகள் நேர்ந்தால் கண்ணில் காணும் இளைஞர்களைப் பிடித்து துவம்சம் செய்து விடுவார்கள். ஒரு நாள் பருத்தித்துறைக் கடற்கரையில் இந்திய இராணுவத்தால் துவம்சம் செய்யப்பட்டு இறந்து விட்டான் என்று போடப்பட்டவன்தான் சங்கர்.

ஆனால் உயிர்த்து விட்டான். கடற்கரைக் காற்றுப் பட்டதால்தான் அந்த உயிர் வந்ததா? என சங்கரைக் காணும் பொழுதுகளில் நான் கேட்பதுண்டு.

உயிர்த்து விட்ட சங்கர் யேர்மனிக்கு இடம்பெயர்ந்து வந்து விட்டான். வயதில் சிறுவனாக இருந்த சங்கரை ஸ்வெற்றா நகரத்தில் இருக்கும் றாடமாகர் குடும்பம் தங்கள் மகனாகப் பொறுப்பேற்றுக் கொண்டது.

இப்பொழுது யேர்மனியில் தனது வேலை நேரம் போக, கிடைக்கும் மிகுதி நேரங்களில் எல்லாம் யேர்மனிய தமிழர் புனர்வாழ்வுக் கழக கணக்காளராக சேவை செய்து கொண்டிருக்கின்றான்.

இயற்கையிலேயே உதவும் குணமுடைய றாடமாகர் குடும்பம், ஆபிரிக்க நாட்டில் இருக்கும் செரோலியன் என்ற நகரத்து மேம்பாட்டுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். அதற்காக செரோலியன் என்ற அமைப்பை யேர்மனியில்  நிர்வகித்தே செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

சங்கர் எங்கள் மண்ணில் இருக்கும் புனர்வாழ்வு இல்லங்களைப் பற்றி அவர்களிடம் தெரிவிக்க, பார்வையற்றவர்களுக்கும், செவிப்புலனற்றவர்களுக்கும் உதவ அவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அதற்காகத்தான் இப்பொழுது சங்கர் அந்த இல்லங்களைப் பற்றிய முழு விபரங்களையும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

இனியவாழ்வு இல்லம் மற்றும் நவம் அறிவுக் கூடத்திற்கான சில பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்கும், இனியவாழ்வு இல்லத்திற்கு அவர்கள் கேட்ட கட்டிடத்தை கட்டிக் கொடுப்பதற்கும் விருப்பம் இருப்பதாக சங்கர் சொன்னான்.

கரும்பு தின்னக் கூலியா? என்னிடம் இருந்த எல்லா விபரங்களையும் சங்கருக்குக் கொடுத்தேன்.

செயற்கைக் கால் பொருத்தும் யேர்மனியத் தொழில் நுட்பத்தைப் பயில ஒரு இளைஞன் விருப்பம் தெரிவித்தான். அவன் பெயர் ஸ்ராலின். அவனை கொல்கரிடம் ஆனந்தண்ணை இணைத்து விட்டார். முதற் கட்டமாக தங்கள் நிறுவனத்தில் ஸ்ராலின் ஆறுமாதப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என கொல்கர் அறிவுரை சொன்னான். இனி வரும் காலங்களில் ஸ்ராலின் கொல்கருடன் இணைந்து தாயகம் சென்று யேர்மனிய தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொள்ளும் வெண்புறா திட்டத்தை நடைமுறைப்படுத்துவான். அந்தத் திட்டத்திற்கான நிதியை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதே எங்களது அடுத்த வேலையாக இருந்தது.

ஆனாலும் செல்வாவின் கை செய்வதற்கான நிதியை ஏற்பாடு செய்ய வேண்டிய ஒரு கடமை நிலுவையில் இருந்தது.

ஆனந்தண்ணையிடம் இருந்து ஒரு நாள் அழைப்பு வந்தது.

'செல்வாவின் இலத்திரனியல் கை செய்யும் பணியில் தாங்களும் இணைந்து கொள்ளலாமா என அமெரிக்காவில் இயங்கும் தமிழர் புனர்வாழ்வுக் கிளை கேட்டிருக்குது' மகிழ்ச்சியோடு சொன்னார்.

'செங்கம்பளம் விரித்து வரவேற்க வேண்டிய விசயம். ஓமெண்டு சொல்லுங்கோ'

'நான் ஏற்கனவே ஓமெண்டு சொல்லிட்டன். இப்ப உங்களுக்கு தகவலை தந்திருக்கிறன்' என்றார்.

இலத்திரனியல் கை செய்வதற்காக தமிழர் புனர்வாழ்வு அமெரிக்கக் கிளையினர் பதினைந்தாயிரம் யூரோக்களை தந்து உதவினார்கள்.

நான் எடுத்து வந்த விடயங்கள் ஈடேறிக் கொண்டிருப்பது எனக்குள் ஒரு பதினாறு வயது இளைஞனை உருவாக்கி விட்டிருந்தது.

இடைப்பட்ட நேரங்களில் என்னால் முடிந்த வரையில் செஞ்சோலை மற்றும் இதர இல்லங்களுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டேன்.

தொடரும்..

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=89568639-0d6c-4a75-867c-5734acc2d545

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 23

வன்னிக்கு மீண்டுமொரு பயணம்

மூனா

வன்னிக்கு மீண்டுமொரு பயணம்
 

 

 

எல்லாம் ஓரளவு தயாரானது. மீண்டும் வன்னிக்குப் புறப்பட தயாரானோம். இம்முறை பயணத்தில் எங்களது இரு மகன்களும் இணைந்து கொண்டார்கள். டுசுல்டோர்ப் விமான நிலையத்தில் ஆனந்தண்ணை, கொல்கர், ஸ்ராலின் மூவரையும் சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு.

டுசுல்டோர் இற்கு போகுமுன் ஸ்வெற்றா நகரத்துக்குச் சென்று றாடமாகர் குடும்பம் மற்றும் சங்கர், அவருக்கு உதவிய நண்பர் ஆகியோரைச் சந்திக்க வேண்டி இருந்தது.

றாடமாகர் குடும்பம் எங்களை அன்போடு வரவேற்றார்கள். தாங்கள் தந்து விடும் பொருட்களை அழகாகப் பொதி செய்து வைத்ததும் அல்லாமல் அவற்றின் விபரங்கள், அவை எந்த எந்தப் பொதிகளுக்குள் இருக்கின்றன என்ற தகவல்கள் எல்லாவற்றையும் அச்சிட்டு விபரமாக பேப்பர்களில் தந்தார்கள். அவர்கள் தந்த பொதிகளின் அளவு மட்டும் 65 கிலோவிற்கு மேலாக இருந்தது. ஆகவே எனது ஒரு மகனின் பயணச் சீட்டை தாங்களே பொறுப்பெடுப்பதாகச் சொன்னார்கள். இனியவாழ்வு இல்லக் கட்டிடம் கட்டுவதற்காக 2100 யூரோக்களையும் ஓர் உறையில் போட்டுத் தந்தார்கள். வாடகைக் காரை வரவழைத்து டுசுல்டோர்ப் வரை போக ஏற்பாடும் அவர்கள் செய்தார்கள்.

நன்றி சொன்னோம். இது ஒரு மனிதாபிமானப் பணி. ஒருவருக்கொருவர் நன்றிகள் சொல்லிக் கொண்டாலும் தொடர்ந்து செய்வோம் என்று சொல்லி அன்போடு வழி அனுப்பி வைத்தார்கள்.

டுசுல்டோர்ப் விமான நிலையத்தில் கொல்கர் எங்களுக்காகக் காத்து நின்றான். முன்னர் அவனிடம் இருந்த அதே சிரிப்பு. மகிழ்ச்சியுடன் எங்களை எதிர் கொண்டான். செல்வாவிற்குப் பொருத்த வேண்டிய இலத்திரன் கையை மிகப் பாதுகாப்பாக, ஒரு குழந்தையைப் போல தனது கையில் அணைத்து வைத்திருந்தான்.

நாங்கள் சென்ற சில நிமிடங்களில் ஆனந்தண்ணையும், ஸ்ராலினும் பெரிய பெரிய பொதிகளோடு வந்து சேர்ந்தார்கள்.

கோப்பி குடிப்போமா? என்று ஆனந்தண்ணை இம்முறை கேட்கவில்லை. நேரம் போதாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

வன்னிக்கு மீண்டுமொரு பயணம்

சென்ற முறை பயணம் தந்த அனுபவம் இம்முறை சரியாகச் செயற்பட உதவியது. பொதிகளை ஒப்படைத்தோம். பயணத்திற்கு அனுமதிக்கப்படும் எடையை விட அதிகமாக இருந்ததால் செரோலியன் அமைப்பு மூலமாக கொண்டு செல்ல வேண்டிய பொருட்களிற்காக மேலதிகமாகப் பணம் செலுத்த வேண்டியதாக இருந்தது.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சம்பிரதாயங்கள் முடிந்து வெளியே வந்தோம்.

தமிழர் புனர் வாழ்வுக்கழகச் சின்னம் பொறித்த வாகனம் ஒன்று விமான நிலையத்திற்கு வெளியே எங்களுக்காகக் காத்து நின்றது.

அன்று இரவே எங்களது வன்னிக்கான பயணமும் இருந்ததால், நாம் தங்குவதற்கான இடம் தமிழர் புனர்வாழ்வுக் கழக கொழும்புக் கிளையில் ஏற்பாடாகி இருந்தது.

'உன் அண்ணணை எப்போ சந்திக்கலாம்?' கொல்கர் என்னிடம் கேட்ட பொழுதுதான் நானும் அண்ணனைப் பற்றிய நினைவுக்கு வந்தேன்.

இம்முறை செயற்பாட்டுக்கான நாட்கள் ஒரு கையின் விரல்களில் அடங்கி இருந்தன. நேரத்தை பார்த்துத்தான் செலவிட வேண்டி இருந்தது. அது கொல்கருக்கும் தெரிந்திருந்தது

'வன்னி போய் திரும்பி வரும்பொழுது எனது அண்ணனைச் சந்திப்போம்' என்றேன்.

'திரும்பி வரும் பொழுதும் சந்திப்போம்' என்றான்.

கொண்டு சென்ற பணத்தை இலங்கை ரூபாவிற்கு மாற்ற வேண்டி இருந்தது. பெண்கள் புனர்வாழ்வு நிலையத்திற்கு தருவதாக ஒப்புக்கொண்ட தையல் இயந்திரங்கள் வாங்க வேண்டிய தேவையும் இருந்தது.

தமிழர் புனர்வாழ்வுக் கழக கொழும்புக் கிளையின் அருகிலேயே சிங்கர் கொம்பனி இருந்ததால் தையல் இயந்திரங்களை கொள்வனவு செய்வது எளிதாகிப் போனது.

கொல்கரின் விருப்பத்தின் பேரில் இருந்த சொற்ப நேரத்துக்கு எனது அண்ணனைச் சந்தித்து வரலாம் என்று தொலைபேசியில் அழைத்தேன்.

'வன்னிக்கு இரவுதானே பயணம். போவதற்கு முன்னர் இரவுச் சாப்பாட்டுக்கு வாருங்கள்' என்று அங்கிருந்து அழைப்பு வந்தது.

கொல்கர் மகிழ்ச்சியோடு, தோளில் மாட்டிய பையோடு அண்ணன் வீட்டிற்கு வந்தான். அண்ணனைக் கண்டதும் கொல்கர் முகத்தில் பூரண நிலவு. மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. கொல்கர் தனது பையில் இருந்து தான் கொண்டு வந்த மதுவை எடுத்து அண்ணனிடம் கொடுத்தான். மறந்து விடாத மது தந்த நட்பு அது.

அதிக நேரம் அண்ணனிடம் இருக்க வாய்ப்பில்லை. உணவு எடுத்துக்கொண்ட பின் வன்னிக்குப் பயணமானோம்.

வவுனியாவிலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளை இருந்தது. காலையில் அங்கே இளைப்பாறிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

சோதனைச் சாவடிகளில் இறங்கி ஏற வேண்டிய தேவைகளோ, பெட்டிகளை திறந்து மூட வேண்டிய தேவைகளோ இருக்கவில்லை. முக்கியமாக அல்பா, ஆழ்வாப்பிள்ளை அங்கலாய்ப்புகள் அறவே இருக்கவில்லை.

குழி விழுந்த வீதிகளைக் காணவில்லை. தார் போட்டுச் சீராக்கி இருந்தார்கள். வீதியோரங்களில் புதிது புதிதாகக் கடைகள் பூத்திருந்தன. புதிய வர்ணங்களோடு கட்டிடங்கள் பொலிவாகி இருந்தன.

வன்னி செழித்து, சிரித்து எங்களை வரவேற்றது. வெண்புறா நிலையத்திலும் புதிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. கைத்தொலைபேசிகளுக்கு கதைக்கவும் கேட்கவும் இப்பொழுது இயலுமாக இருந்தன.

இம்முறை பயணம் அதிக அலுப்புத் தராததால் நாங்களும் பழுதில்லாமல் புத்துணர்வோடு இருந்தோம். ஆனாலும் ஏதோ குறைந்திருந்ததை உணர முடிந்தது.

மே மாதத்தில் வெண்புறாவிற்கு நாங்கள் வந்திருந்த பொழுது அவர்களிடம் இருந்த மகிழ்வும், உற்சாகமும் இப்பொழுது அங்கே காணாமல் போயிருந்தன. வெண்புறா தொழில் பட்டறைக்குள் சென்ற கொல்கர் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வந்தான். முழுதாக ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருந்தன.

மறுநாள் காலையில் செல்வாவுக்கு கை பொருத்திப் பார்க்கும் வேலையும், அந்தக் கையை அசைப்பதற்கான பயிற்சி கொடுக்கும் வேலையும் கொல்கருக்கு இருந்தன. இம்முறை கொல்கருக்கு உதவியாக ஸ்ராலின் நிற்பதால் எனக்கான சுமை இல்லாமல் இருந்தது.

நாங்கள் சென்றிருந்த நேரம் தமிழர் புனர்வாழ்வுக் கழக இணைப்பாளர் றெஜி வன்னியில் இல்லை. வெளிநாடுகளுக்கான செயற்பாடுகளுக்காக அவர் ஐரோப்பா சென்றிருந்தார். இனியவன்தான் எங்களுக்கான தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொடர்பாளராக இருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமான அரசியல் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த முக்கியமான நேரம். அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் செய்வதற்காக வன்னிக்கு வந்திருந்தார். அரசியல்துறை அலுவலகத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை.

நின்று நிதானமாக வணக்கம் சொல்லக் கூட யாருக்குமே நேரம் இருக்கவில்லை. நாங்களும் யாருக்கும் இடைஞ்சல்கள் தர விரும்பவில்லை.

சென்ற தடவை போல் இம்முறையும் அரசியல்துறைக்கு எங்கள் வருகையைத் தெரிவித்துவிட்டு வந்துவிட்டோம்.

அன்று மாலையே பெண்கள் புனர்வாழ்வு நிலையத்திற்குச் சென்று தையல் இயந்திரங்களைக் கையளித்தோம். வெளிநாடுகளில் இருந்து பல தமிழ் உறவுகள் வந்து அவர்களுக்கு உதவி செய்திருந்ததை அங்கே அவதானிக்க முடிந்தது. முன்பிருந்த எதிர்பார்ப்பும், வரவேற்பும் அங்கே குறைந்திருந்தன. பல தொப்புள் கொடி உறவுகள் உதவிகள் செய்ய அடிக்கடி வந்து கொண்டிருந்ததால், ஒரு சம்பிரதாய முறையிலான அணுகுமுறையைத்தான் இப்பொழுது அவர்களிடம் காணக் கூடியதாக இருந்தது. அவர்களின் தேவைகள் நிறைவேறுவதில் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சி அவர்களிடமும் நிறைந்து இருந்து.

தொடரும்...

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=e0ac2530-f1fa-4915-9830-95b4a15984f3

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 24

விருந்தோடு கூடிய ஒரு விருது

மூனா

<p>விருந்தோடு கூடிய ஒரு விருது</p>
 

 

 

மறுநாள் காலையில் செல்வா தனது உதவியாளருடன் வந்தாள். கொல்கர் தாமதங்களை ஏற்படுத்தாமல் கை பொருத்துவதற்கான வேலைகளை உடனேயே தொடங்கி விட்டான். ஸ்ராலின், கொல்கருக்கு உதவியாளராக நின்று உதவிகள் செய்து கொடுத்தான்.

செல்வாவின் கை வேலைகள் ஆரம்பித்த சில நிமிடங்களில் மருத்துவத் துறைப் பொறுப்பாளர் ரேகா வந்தார். நலன் விசாரிப்புகளுக்குப் பின்னர், தமிழ்ச்செல்வனுக்கு நேரம் கிடைக்கவில்லை அதனால் அவரால் வர முடியவில்லை என்ற தகவலைத் தந்தார்.

செல்வாவின் கை வேலைகளுக்கான தேவைகள் எல்லாம் ஒழுங்காக இருக்கின்றனவா என சரி பார்த்துக் கொண்டார். சிறிது நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றுக் கொண்டார்.

அன்று மாலை கவிஞர் நாவண்ணன் வந்தார். கூடவே தனது மனைவியையும் இம்முறை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார். தனக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதற்கான சந்தர்ப்பம் ஒன்று கூடி வந்திருப்பதாகச் சொன்னார்.

சென்ற முறை போல் நாவண்ணனுடன் அதிக நேரம் உரையாட முடியவில்லை. யேர்மனியில் சந்தித்துக் கொள்வோம் என்று அவர் விடைபெற்றுக் கொண்டார். நாவண்ணன் விடை பெறவும் ஜனனி வரவும் சரியாக இருந்தது.

எனது மகன் பிறந்த பொழுது வந்து அவனை பார்த்து பரிசும் தந்து போனவர், இன்று அவனது  தோற்றத்தைக் கண்டு வியந்து சொன்னார். செஞ்சோலைக்கு என்று யேர்மனியில் இருந்து பல பொருட்களை நாங்கள் கொண்டு சென்றிருந்தோம். அவற்றை எல்லாம் பார்வையிட்டு தனது நன்றியைச் சொன்னார். அவற்றை எல்லாம் உடனடியாக எடுத்துச் செல்ல ஜனனிக்கு வாகன வசதி இல்லாததால் மறுநாள் நாங்களே வாகனம் ஏற்பாடு செய்து செஞ்சோலைக்கு கொண்டு வருகிறோம் என்றோம். மகிழ்ச்சியோடு வரச் சொன்னார். அடுத்தநாள் எங்களுக்கு நேரம் இருக்கப் போவதில்லை என்று அப்பொழுது எங்களுக்குத் தெரியவில்லை.

ஜனனியுடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே தமிழ்ச்செல்வனது வாகனம் வெண்புறாவுக்குள் நுளைந்தது. தமிழ்ச்செல்வன் நிறையவே களைத்திருந்தது தெரிந்தது. அவரது சிரிப்பு மட்டும் களைக்காமல் இருந்தது.

<p>விருந்தோடு கூடிய ஒரு விருது</p>

'எப்பிடி சுகமாக இருக்கிறீங்களோ?' என்ற நலன் விசாரிப்பில் ஆரம்பித்து உடன் வந்து சந்திக்க முடியாத சூழ்நிலையைச் சொன்னார்.

எனது மகன்களைப் பார்த்து, 'உங்களுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் இருக்கினமே?' என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

'எனக்கும்தான் ஆச்சரியமாக இருக்குது' என்றேன்.

தொடர்ந்து சிரித்தார்.

அவருக்கு நேரமே இல்லை. அரசியல் பேச்சுவார்த்தை, அதற்கான வெளிநாட்டுப் பயணங்கள், இராஜதந்திரிகளுடான சந்திப்பு என பல வேலைகள் அவருக்கு முன்னால் பரவி இருந்தன. ஆனாலும் கிடைத்த சொற்ப நேரத்திலும் எங்களை நினைவு வைத்து சந்திக்க வந்ததற்கு நன்றி சொன்னோம்.

'இன்னும் ஓராளுக்கு நாளைக்கு நீங்கள் நன்றி சொல்ல வேணும்' என்றார்.

'யாருக்கு?'

'நாளைக்கு ஒரு பெரிய சந்திப்பு உங்களுக்கு இருக்கு' என்று சொல்லிவிட்டு கண்சிமிட்டிச் சிரித்தார்.

மகிழ்ச்சியாகவும் அதேவேளை ஆச்சரியமாகவும் இருந்தது. பேச்சுவார்த்தை நேரம் இப்படியான சந்திப்பு ஒன்று சாத்தியப்படும் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை.

இன்னும் ஒரு மகிழ்ச்சியை அடுத்து வந்த தமிழ்ச்செல்வனின் வார்த்தைகள் தந்தன.

'இந்தமுறை அவர் இருக்கிற இடத்திற்கு நீங்கள் போகத் தேவையில்லை. நீங்கள் இருக்கிற இடத்திற்கு அவர் வாறார்'

நம்ப முடியாமல் இருந்தது.

'நாளைக்கு மத்தியானம் அவரோடை சேர்ந்து சாப்பிடப் போறீங்கள். அரசியல்துறை கட்டிடத்திலை அதற்கான ஒழுங்கு செய்திருக்கு' தமிழ்ச்செல்வன் சொல்லும் பொழுது நான் அங்கே இல்லை எங்கேயோ சென்றிருந்தேன்.

தமிழ்ச்செல்வன் வந்து சந்தித்ததற்கும், இனிய செய்தி சொன்னதற்கும் நன்றி சொன்னோம்.

தமிழ்ச் செல்வன் சென்றதன் பின் ஜனனி சொன்னார், 'நாளைக்கு அண்ணனோடை உங்களுக்குச் சந்திப்பு இருக்குதெண்டால், நாளையிண்டைக்கு செஞ்சோலைக்கு வாங்கோவன்'

அவர் சொன்னதும் சரியாகத் தெரிந்தது.

செஞ்சோலைக்குப் போகவேண்டும். இனியவாழ்வு இல்லத்தில் செரோலியன் அமைப்பு தந்து விட்ட பொருட்களை சேர்ப்பிக்க வேண்டும். கஸ்ரோவைப் போய்ப் பார்க்க வேண்டும். நவம் அறிவுக் கூடத்திற்கான பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு நாட்கள் தேவைப்பட்டன. அதில் நாளைய பொழுது பிரபாகரனுடனான சந்திப்பு என்பதால் நீண்டதூரம் பயணம் செய்து மேற்சொன்ன எதையும் செய்ய விரும்பவில்லை. அதனால் நாளைய நாளைத் தவிர்த்துப் பார்த்தால் இரண்டு நாட்களில் இவை எல்லாம் சாத்தியமாகுமா என்ற அச்சம் எனக்குள் வந்து அட்டணக்கால் போட்டு அமர்ந்து கொண்டது.

சென்ற தடவை வந்திருந்த சமயம் பொழுது போகாமல் இருந்தது. இந்தத்தடவை பொழுது போதாமல் இருக்கிறது.

ஸ்ராலின் இம்முறை கொல்கருக்கு உதவியாக இருப்பதால், எனக்கான நேரங்களை நிலைமைகளுக்கு ஏற்ப என்னால் ஓரளவு சமாளிக்க வாய்ப்பிருந்தது. கொல்கரை வேலை செய்ய விட்டுவிட்டு நான் மட்டும் வன்னியைச் சுற்றித் திரிவதும் சந்திப்புகளை மேற்கொள்வதும் கொஞ்சம் உள்ளுக்குள் துருத்தியது.

செல்வாவின் கை பொருத்துவது முக்கியமானது. அதை கொல்கர்தான் செய்ய வேண்டும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

கொல்கர் சொன்னான் 'நாட்கள் போதாது. கை போடும் வேலையை நான் பார்க்கிறேன். நீ உனது மகன்களையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாய். நேரத்தை உனக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்.' என்று.

நாளைய சந்திப்பை அவனுக்குச் சொன்னேன். 'கை பொருத்தும் வேலைக்கு சில மணித்தியாலங்கள் ஓய்வு கொடு' என்றேன்.

'மகிழ்ச்சி' என்றான்.

நாளைய சந்திப்பை வெண்புறா உறவுகளுக்கும் சேர்த்து பயன்படுத்த அன்ரனிக்கு விருப்பம் இருந்தது. அதை அவர் தமிழ்ச்செல்வனுக்குத் தெரிவிக்க, நாளைய சந்திப்பில் வெண்புறா உறவுகள் அனைவருக்கும் மதிய உணவு அரசியல்துறை அலுவலகத்தில் என்று ஏற்பாடாகியது.

இந்த முடிவால் வெண்புறா நிறுவனத்தில் ஆரவாரத்துக்கு அளவே இல்லை. ஒருவிதத்தில் பார்த்தால் இது அவர்களது சேவைக்கான அங்கீகாரம். ஒரு கால் இழந்தவனுக்குத்தான் நன்கு தெரியும், அதன் வலியும் மறு காலின் தேவையும். அதனால்தான் அதீத ஈடுபாடுகளோடு அவர்களால் சேவை செய்ய முடிகிறது. நாளைய சந்திப்பானது அவர்களுக்கு விருந்தோடு கூடிய ஒரு விருது.

வெண்புறா நிலையத்தில் இருந்து ஒரு நடை போட்டு வரக் கூடிய தூரத்தில்தான் அரசியல்துறை இருந்தது. ஆனாலும் மரியாதையாக எங்களை அழைத்துப் போக வாகனம் வந்தது.

வெண்புறா உறவுகள் அரசியல்துறைக்கு வருவதற்கான ஒழுங்குகளை தாங்களே பார்த்துக் கொண்டார்கள்.

மதிய நேரத்தில் அரசியல்துறை அலுவலகத்தின் வராந்தாவில் இருந்து தமிழ்ச் செல்வனுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். வரவேண்டியவரை மட்டும்தான் காணவில்லை.

'என்ன ஆளை இன்னும் காணேல்லை?' என்று தமிழ்ச் செல்வனைக் கேட்பது அழகாக இருக்காது. அவராக அது பற்றி ஏதாவது சொன்னால்தான் உண்டு.

எனது மனதில் இருந்ததை தமிழ்ச்செல்வன் எப்படிப் படித்துக் கொண்டார் என்று தெரியவில்லை.

'கொஞ்சம் தாமதமாகும். உங்களுக்குப் பிரச்சினை இல்லைத்தானே?' சிரித்துக்கொண்டே பேசத் தெரிந்தவரிடம் பிரச்சனை இருந்தாலும் சொல்ல வாய்ப்பே இல்லைத்தானே.

'கொஞ்சம் என்ன அதிக நேரம் எண்டாலும் காத்திருக்கிறோம். மதியச் சாப்பாட்டை இரவுச் சாப்பாட்டோடை சேர்த்து எடுத்துக் கொள்ளுவம்'

'அவ்வளவு நேரம் செல்லாது. பேச்சுவார்த்தைக் குழுவை சந்திக்கிற வேலையும் அவருக்கு இண்டைக்கு இருக்கு'

தமிழ்ச்செல்வன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே அரசியல்துறை அலுவலகத்துக்குள் வாகனம் ஒன்று வேகமாக வந்து நின்றது.

தொடரும்..

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=029cbadd-b886-4d2b-b8db-3652831df0dc

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 25

பிரபாகரன் தந்த விளக்கம்

மூனா

பிரபாகரன் தந்த விளக்கம்
 

 

 

வாகனத்தின் மேற்கம்பிகளைப் பிடித்து எம்பி வெளியே குதித்து, சிரித்தபடி ஓர் இளைஞன். அட அது பிரபாகரன். இராணுவச் சீருடையோ, பிரமுகர்களைச் சந்திக்கும் பிரத்தியேக உடையோ அணியாமல் சாதாரண கோடு போட்ட சேர்ட்டுடனும், சாம்பல் நிற நீள் காற்சட்டையுடனும் சிரித்துக் கொண்டே வந்தார்.

இருக்கையில் இருந்து எழுந்து கொண்டோம்.

'முதலிலை மன்னிக்கோணும். அரை மணித்தியாலம் லேற்றாப் போச்சு'

ஒரு தலைவனின் பேச்சின் கண்ணியம் தெரிந்தது.

'பொடிபில்டிங் செய்யிறீங்கள் போலை' எனது மூத்த மகனைப் பார்த்துக் கேட்டார்.

எனது இரு மகன்களும் தங்கள் வாழ்வில் இப்படி ஒரு தருணம் வரும் என்று எதிர்பார்திருக்க மாட்டார்கள். இங்கே அவர்களுக்கு அருகில் இருந்துகொண்டு அவர்களது வயதுக்கேற்ப சமீபத்தில் வெளிவந்த ஆங்கிலப் படங்கள், இசை அல்பங்கள், விளையாட்டுக்கள் என அவர்களுடன் பிரபாகரன் உரையாடிக் கொண்டிருந்தார்.

மீண்டும் சந்திப்பதாலான மகிழ்ச்சியை கொல்கர் பிரபாகரனுடன் பகிர்ந்து கொண்டான்.

கையோடு கொண்டு வந்த செல்வாவின் கையை அவர் முன்னால் இருந்த மேசையில் வைத்து அதன் செயற்பாடுகளை விளக்கினான். கொல்கர் சொல்வதை ஸ்ராலின் மொழிபெயர்த்து பிரபாகரனுக்குச் சொன்னான்.

'கனக்கப் பேர் இஞ்சை வந்திருக்கினம். அது செய்யிறம் இது செய்யிறம் எண்டு சொல்லிப்போட்டுப் போவினம். பிறகு ஆக்களைக் காணக் கிடைக்காது. நீங்கள் விதிவிலக்கு. சொன்ன நேரத்துக்கு வந்திருக்கிறீங்கள். சொன்னதைச் செய்து கொண்டும் வந்திருக்கிறீங்கள்'

தனது மகிழ்ச்சியை பிரபாகரன் வெளிப்படுத்த, அந்த வார்த்தைகள் எனது உச்சியில் போய் நின்று உடலெல்லாம் குளிர வைத்தன.

'கொல்கர் வாறான் எண்டால் இஞ்சை 'வாறான்' எல்லாம் ஓடி ஒளிஞ்சிடுதுகள்' கொல்கரைப் பார்த்து நகைச்சுவையோடு பிரபாகரன் சொன்னார்.

'வாறான்' என்ற வார்த்தையை மறக்காமல் அவர் வைத்திருந்தார்.

'நீங்கள் பகிடிக்காரன் எண்டு கஸ்ரோ சொன்னான்' சிரித்துக்கொண்டே என்னைக் கேட்டார்.

'நீங்கள் சொன்ன 'வாறான்' பகிடியை கஸ்ரோ கேட்டால் உங்களையும் பகிடிக்காரன் எண்டுதான் சொல்லுவார்'

சிரித்துக் கொண்டே சொன்னார், 'வாங்கோ சாப்பிடுவம்'

மண்டபத்தில் வெண்புறா உறவுகளுக்கு உணவு உட்கொள்வதற்கான இடம் பிரத்தியேகமாக  ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பிரபாகரன், தமிழ்ச்செல்வன், கொல்கர், எனது குடும்பம் இணைந்து சாப்பிட இடம் தனியாக ஏற்பாடாகி இருந்தது.

சாப்பிடும் பொழுது பலதைப் பேசிக் கொண்டோம்.

தங்களுக்குத் தரப்பட்ட மாம்பழத் துண்டுகளையும், பலாப்பழச் சுளைகளையும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த எனது இளைய மகனின் தட்டில் பிரபாகரனும், தமிழ்ச்செல்வனும் மாறி மாறி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

'எல்லாத்தையும் அவனுக்குக் குடுத்தால் உங்களுக்கு...?'

'எங்களுக்கு எப்பவும் இது கிடைக்கும்'

'யேர்மனியிலை கிடைக்கிறதுக்கு வாய்ப்பிருக்காது' என ஆளாளுக்கு காரணம் சொன்னார்கள்.

சர்க்கரை வருத்தம் இருவருக்கும் இருப்பது எனக்கும் தெரியும். பழங்களை அவர்கள் தவிர்த்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

'நீங்கள் தன்னை வந்து பாக்கேல்லை எண்டு சூசை குறைப்பட்டுச் சொன்னான். நாளைக்குப் போய்ப் பாருங்கோ. அதற்கான ஏற்பாட்டை ரேகா செய்வான். பிரபாகரன் இன்னும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

அரசியல் பேச்சுக் குழுவை சந்தித்து வழி அனுப்பும் வேலை பிரபாகரனுக்கு அன்று இருந்தது. சாப்பாடு எடுத்துக் கொண்டதன் பின்னர் தமிழ்ச்செல்வனை அவர்களிடம் செல்லும்படியும் தான் பின்னர் வருவதாகவும் சொன்னார்.

தமிழ்ச்செல்வன் எங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார்.

'வாங்கோ. உங்களோடை கதைக்கோணும்' என்னைத் தனியாக பிரபாகரன் அழைத்தார்.

பிரபாகரனும் நானும் ஒரு அறைக்குள் சென்றோம்.

'கொல்கர் என்ன சொல்லுறான்?'

'எதுவுமே சொல்லேல்லை. ஆனாலும் இது அவன் எதிர்பார்க்காதது. அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் இது ஏமாற்றமாகத்தான் இருக்கு'

'எனக்கு இந்த விசயம் முதலிலை தெரியாது. பிரச்சினை எண்டு வந்தாப் போலைதான் எனக்கு சொல்லிச்சினம். இப்ப உங்களிட்டை சொல்லச் சொல்லி என்னைக் கேட்டிருக்கினம்'

'நாட்டுக்கு சேவை செய்யிறதுக்கு எல்லோருக்கும் பங்கிருக்கு. அதிலையும் சிக்கல் சிதறல் சீண்டல்கள் இல்லாமல் செய்யோணும்'

'லண்டனிலை இருந்து வந்து பட்டறை ஒண்டு வைக்கினம் எண்டுதான் எனக்கு முதலிலை தகவல் வந்தது. ஆனால் வெண்புறா நிறுவனம் எண்டு ஆரம்பிச்ச பிறகுதான் சிக்கல் என்னவெண்டு தெரிய வந்தது'

'கால் பொருத்துற எங்கடை செயற்திட்டத்தை யேர்மனியரிட்டையும் கொண்டு செல்லவதற்கான வேலைத்திட்டங்களையும் நாங்கள் ஆரம்பிச்சிட்டம். போன தடவை நாங்கள் இஞ்சை வந்து செய்த சேவையைப் பற்றி யேர்மனியப் பத்திரிகைகளிலையும் வந்திருக்கு. எல்லாம் ஒழுங்கா போய்க் கொண்டிருக்கக்கை ஒரு தடங்கல் வந்திருக்கு'

'நீங்கள்தான் இதுக்கு ஒரு முடிவு சொல்லோணும்'

பிரபாகரன் என்னை அப்படிக் கேட்டதும் எனக்கு நினைவுக்கு வந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

1990இல் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கான சேவைகளை நாங்கள் மேற்கொண்டிருந்த பொழுது, பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது 'தமிழர் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்´ மூலமான சேவைகளும் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தமிழர்களுக்கு இரண்டு புனர்வாழ்வு நிறுவனங்கள் அதுவும் சிறு அளவிலான பெயர் மாற்றத்துடன் சேவை செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும், ஒருங்கிணைந்த பங்களிப்புகள் சிதறிப் போகும் வாய்ப்புகளையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அறிவித்திருந்தோம். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பேராசிரியருடன் உரையாடிய பொழுது நிலைமையைப் புரிந்து கொண்ட அவர் தனது அமைப்பின் செயற்பாட்டை தானாகவே உடனே நிறுத்திக் கொண்டார்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது அன்றைய நிலைப்பாட்டை பிரபாகரனிடம் நினைவூட்டி விட்டுச் சொன்னேன், 'பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் சொன்ன வழிதான் பிரச்சினை இல்லாதது. அதைத்தான் நாங்களும் செய்யோணும்'

'அப்பிடியெண்டால்..?'

'டொக்டர் மூர்த்தியே செய்யட்டும். நாங்கள் ஒதுங்கிக் கொள்ளுறம்'

நான் அப்படிச் சொன்னது பிரபாகரனுக்கு கவலையைத் தந்திருக்கலாம்.

'அப்பிடிச் சுலபமா விடேலாது' என்றார் பிரபாகரன்.

'சுலபமில்லைத்தான். வெண்புறா நிறுவனம் 1995இலை யாழ்ப்பாணத்திலை இருக்கக்கையே நாங்கள் யேர்மனியிலை வெண்புறாவுக்கான வேலைத்திட்டத்தை தொடங்கிட்டம். நீண்டகாலச் செயற்பாடு எங்களுடையது. இதுதான் யேர்மனிக் கிளையின் முக்கியமான செயற்பாடாகவும் இருந்தது. இவ்வளவு தூரம் எங்கடை செயற்பாடு வளர்ந்த பிறகு திடீரென மாற்றம் வந்தால் எங்களது செயற்பாட்டில் ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

லண்டன் TRO கிளிநொச்சியில் கால் பொருத்திற வேலையைச் செய்தால் நாங்கள் முல்லைத்தீவிலை செய்யலாம் எண்டுதான் முதலிலை நினைச்சனாங்கள். ஆனால் வெண்புறா என்ற ஒரு குடைக்கு கீழை இரண்டு செயற்பாடு சரிவராது. ஆகவே மூர்த்தியரே அதைச் செய்யட்டும். அவருக்கு ஐபிசி றேடியோ மூலமாக ஐரோப்பா முழுதும் இதைப் பிரச்சாரம் செய்யிறதுக்கும் உதவிகள் பெறுறதுக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கு'

'அப்ப நீங்கள் என்ன செய்யப் போறீங்கள்?'

'இப்போதைக்கு செல்வாக்கு கை பொருத்திற வேலை இருக்கு. அது முடிய ஏதாவது ஒண்டு செய்வம்'

எனக்கிருந்த கவலையை நான் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அது பிரபாகரனின் முகத்தில் பிரதிபலித்தது.

வெண்புறா நிறுவனத்திற்கான உழைப்பு என்னுடையது மட்டும் அல்ல. பலரது உழைப்பு அங்கே இருக்கிறது. ஒரு விடயத்தை ஆரம்பிப்பது வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால் அதற்கான ஆயத்தங்கள், திட்டமிடல்கள், செயற்பாடுகள், நடைமுறைப்படுத்தல்கள்  என ஏகப்பட்ட சிரமங்கள் இருக்கின்றன. ஓடும் குதிரைக்கு மேல்தானே எல்லோரது பார்வையும். அதில் ஏறிச் சவாரி செய்யும் ஆசை பார்ப்பவர்களுக்கு வருவதுதானே இயல்பு.

சிறிது நேரம் பிரபாகரன் பேசாமல் இருந்தார்.

'நீங்கள் புதுசா ஏதாவது செயற்திட்டத்தை ஆரம்பிக்கிறதுக்கு பணஉதவி தேவை எண்டால் நான் தாறன்' பிரபாகரன் அப்படிச் சொல்வார் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எனது சேவையை அவர் விரும்பி இருக்கிறார் என்பது அப்பொழுது எனக்குப் புரிந்து போனது.

பிரபாகரன் சொன்னது போல் நின்று விடாமல் நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

'எந்த நேரமும் சேவைகள் செய்ய நீங்கள் இங்கு வரலாம். உங்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம். கொல்கர் போன்றவர்களின் சேவையும் இங்கு அவசியமானது. அவரையும் சமாதானம் செய்யுங்கோ. அவர் நொந்து போகக் கூடாது'

நாங்கள் பேசிக் கொண்டதில் பிரபாகரன் திருப்தி அடைந்தாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் வில்லங்கங்கள் என்றால் தூர ஓடிவிடும் எனது குணம் அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

நாங்கள் கதைத்தக் கொண்டிருந்த இடத்தில் இருந்த மேசையில் இருந்த தமிழ் கார்டியன் பத்திரிகையை பிரபாகரனிடம் காட்டி அதற்கு நான் கார்டூன் வரைவதை அவரிடம் சொன்னேன்.

லண்டனில் மாதம் இருமுறை வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை அது. அதன் புதிய பதிப்புதான் அங்கே இருந்தது. வன்னிக்கு நான் வரவேண்டி இருந்ததால் அவசரமாக நான் வரைந்து கொடுத்திருந்த கார்டூனில் ஒரு பிழை இருந்தது. அதை நான் பிரபாகரனிடம் சொன்னேன்.

அரசாங்கத்தை படகுபோல் வரைந்திருந்தேன். ஜனாதிபதியான சந்திரிகா கையில் சாட்டை வைத்திருக்கிறார். படகின் துடுப்பை பிரதமராக இருந்த ரணில் வலித்துக் கொண்டிருக்கின்றார். நான் வரையும் பொழுது சந்திரிகாவின் வலது கையில் இருக்க வேண்டிய சாட்டையை தவறுதலாக இடது கையில் வரைந்திருந்தேன். இதைத்தான் பிரபாகரனிடம் சொன்னேன். பத்திரிகையைப் புரட்டிப் பார்த்த பிரபாகரன், 'அடிச்சடிச்சு அம்மையாருக்கு கை நொந்திருக்கும். அதுதான் இப்ப இடது கைக்கு மாத்திட்டா போலை' எனது தவறை சுட்டிக்காட்டாமல் ஒரு விமர்சனத்தில் சரியாக்கி விட்டிருந்தார்.

புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

'பாலாண்ணையவையள் பாத்துக் கொண்டிருப்பினம். பிறகு சந்திப்பம்' என்று வாகனத்தில் ஏறிக் கையசைத்து விடை பெற்றுக் கொண்டார்.

தொடரும்..

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=fc78f575-3c86-4f74-9e6a-8d53a45f039f

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 26

மீண்டும் சந்திப்போம் என்ற வார்த்தைகள்

மூனா

மீண்டும் சந்திப்போம் என்ற வார்த்தைகள்
 

 

 

வெண்புறாவிற்கு அழைத்துச் செல்ல வாகனம் இருந்தது. ஆனாலும் நடந்தே வெண்புறாவிற்குச் செல்ல விரும்பினேன். நடைபோட்டு வெண்புறாவிற்குப் போகும் பொழுது கொஞ்சம் அசை போட்டுக் கொண்டேன்.

ஐரோப்பிய தமிழர் புனர்வாழ்வுக் கிளைக் கூட்டத்தில் 'வெண்புறா நிறுவனத்தில் எங்கள் சேவை' பற்றி நான் உரையாற்றிய பொழுது டொக்டர் என்.எஸ்.மூர்த்தியின் சிந்தனை எங்கோ சிதறி இருந்தது என்று நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். அதன் விளைவுதான் இப்பொழுது நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

எங்கள் சேவையின் நோக்கமும், அதன் வெற்றியும் டொக்டர் என்.எஸ்.மூர்த்தி அவர்களையும் ஏதாவது செய்யத் தூண்டி இருக்க வேண்டும். பல வருடங்களாக யாருமே அக்கறை கொள்ளாத வெண்புறா வேலைத்திட்டத்தின் பாரம்பரியம் இப்பொழுதுதான் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. தானும் செயற்கைக் கால் பொருத்தும் ஒரு வேலைத் திட்டத்தை இலண்டன் கிளை ஊடாகச் செய்தால் என்ன என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்கிறது. இலண்டனில் இருந்து ஒரு தொழில்நுட்ப வல்லுனரையும் அழைத்துக் கொண்டு வன்னிக்குப் புறப்பட்டு விட்டார்.

யேர்மனிய தொழில் நுட்பத்தினூடான கால் பொருத்தும் திட்டத்திற்கு நிகராக இலண்டன் தொழில் நுட்பத்தினூடான கால் பொருத்தும் திட்டத்திற்கான பட்டறை வன்னியிலே நடக்கிறது. இந்த விடயம் எனது காதுக்கு வந்த பொழுது சாதாரணமாகவே எடுத்துக் கொண்டேன். ஆனால் வெண்புறா நிறுவனத்தை முழுமையாக எடுத்து அவர் செயற்படும் அறிவிப்பானது ஐபிசி வானொலியில் வந்த பொழுதுதான் மனது சோர ஆரம்பித்தது.

யேர்மனியக் கிளையின் செயற்கை உறுப்பு பொருத்தும் எங்களின் நீண்ட வருடங்களின் ஓட்டம் நின்றுவிடப் போகிறது. எங்களின் வேண்டுகோளை ஏற்று தனது நிறுவனத்திலேயே ஸ்ராலினுக்கு கொல்கர் கடந்த ஐந்து மாதங்களாக தொழில்நுட்ப ரீதியாகப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றான்.

எங்களது செயற்திட்டம் பற்றி தாயகத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனது 2002ம் ஆண்டு ஆடி மாத அறிக்கையில், 

'இதுவரை காலமும் வெண்புறா செயற்கை உறுப்பு தொழில்நுட்ப நிறுவனம் தனது சூழலுக்கேற்ப உள்ளுர் சந்தையில் கிடைக்கக்கூடிய மூலவளப் பொருட்களைப் பாவித்தே தனது அளப்பரிய சேவையினை வலுக்குன்றியோர் மத்தியில் வழங்கி வந்துள்ளது. அண்மையில் சமகால தொழில் நுட்பங்களைப் பாவித்து துரிதமாகவும் தரமாகவும் செயற்கைக் கால்களைத் தயாரித்து வழங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் இது மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

மீண்டும் சந்திப்போம் என்ற வார்த்தைகள்

இம் முயற்சிகளுக்கு அனு சரணையாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனது யேர்மன் நாட்டுக் கிளையின் உதவியுடன் அந்நாட்டிலுள்ள 'ஒத்தோப்பேடி' நிறுவனப் பிரதிநிதியான திரு. கொல்கர் அவர்களை வரவழைத்து உள்ளூர் தொழில் நுட்பவியலாளர்களுக்குப் பயிற்சியளித்ததன் மூலம் இப் புதிய தொழில் நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திரு கொல்கர் அவர்களுக்கு உதவியாக அந்நாட்டில் இருந்து திரு.திருமதி செல்வகுமாரன் ஆகியோர் இங்கு வந்து பயிலுனர்களுக்கு பலவகையிலும் உதவியாக இருந்தமை மிகவும் பாராட்டுதலுக்கு உரியதொன்றாகும்.

இரசாயன மூலப்பொருட்கள் தாராளமாகக் கிடைக்கும் பட்சத்தில் போர் அனர்த்தங்களினால் கால்களையிழந்த ஏராளமானோர் துரிதகதியில் பயனடைவர் என்பது உறுதியளிக்கப் பட்டுள்ளது', இப்படிக் குறிப்பிடுகிறது.

ஆக எங்களுக்குத் தேவையானது எல்லாம் மூலப்பொருட்களை பெற்றுக் கொள்ளும் வசதிகளை மேம்படுத்திக் கொள்வது. ஆனால் செய்யப்பட்டது என்னவோ மாற்றாக இன்னும் ஒரு தொழில்நுட்ப அறிமுகம்.

என் மனதில் ஒரு குறை இருந்தது. அதை இங்கு நான் சொல்ல விரும்பவில்லை. குறைபட்டுக் குறைபட்டுக் கறைபட்டுப் போனவர்கள் நாங்கள். ஆதலால் என் மனதில் இருந்த அந்தக் குறையை அப்படியே புதைத்து விடுகிறேன்.

மாலையில் சூசை உங்களைச் சந்திக்கிறார் என மறுநாள் காலையில் தகவல் வந்தது. அத்தோடு இன்னும் ஒரு தகவல் வந்தது. அன்று மாலையில் கஸ்ரோவுடனான சந்திப்பும் ஏற்பாடாகி இருக்கிறது என்று.

இனியும் தாமதிக்க முடியாது. இனியவாழ்வு இல்லத்திற்குப் பயணமானோம். பயணிக்கும் வாகனத்திலேயே செஞ்சோலை, மற்றும் நவம் அறிவுக் கூடத்திற்கான பொருட்களையும் ஏற்றிக் கொண்டோம். எங்களுடன் அன்ரனியும் உடன் பயணித்தார்.

இனியவாழ்வு இல்லம், செஞ்சோலை, சூசை, கஸ்ரோ என சந்திப்புகளை வரிசைப்படுத்திக் கொண்டோம்.

கொல்கருக்கு நேரம் இல்லை. ஸ்ராலினுடன் வெண்புறாவில் அவனை விட்டு விட்டு நாங்கள் மட்டும் பயணத்தை மேற்கொண்டோம்.

இனியவாழ்வு இல்லத்திற்கு நாங்கள் சென்றிருந்த பொழுது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. இனியவாழ்வு இல்லத்தின் மண்டபத்தில் எல்லோரும் கூடி இருந்து இனிய வாழ்த்துச் சொல்லி எங்களை வரவேற்றார்கள். செரோலியன் அமைப்பு தந்த பொருட்களை அங்கிருந்த பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம்.

கட்டிடம் கட்டுவதற்காக செரோலியன் அமைப்பு தந்த பணத்தை இனிய வாழ்வு இல்லத்தின் நிர்வாகி தம்பு வினாயகமூர்த்தி அவர்களிடம் கையளித்தோம். மழை வெளியில் பலமாகக் கொட்டிக் கொண்டிருப்பதால், எங்களைக் கொண்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வைச் செய்ய முடியாதிருந்தது. அதற்கான வருத்தத்தை அவர் சொன்னார்.

'இது ஒரு வெறும் சம்பிரதாய நிகழ்வுதான். மழை இல்லாத ஒரு பொழுதில் எங்களுக்காக நீங்களே அடிக்கல்லை நாட்டிக் கொள்ளுங்கள்' என்று தம்பு வினாயகமூர்த்தி அவர்களிடம் சொன்னேன்.

நாட்டுக் கோழிக்கறியோடு அசத்தலான ஒரு மதிய உணவை அங்கே தந்தார்கள். உதவிக்கான நன்றியை என் மூலம் செரோலியன் அமைப்புக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள்.

நேரத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டி இருந்ததால், உணவு அருந்திய உடனேயே புறப்பட்டு விட்டோம்.

செரோலியன் அமைப்பு செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து அதன் நிர்வாகி தம்பு வினாயகமூர்த்தி அவர்கள் பின்னர் கடிதம் ஒன்றை யேர்மனிக்கு அனுப்பி வைத்தார். அதில் செரோலியன் அமைப்பு தந்த பணத்தில் கட்டிய கட்டிடத்திற்கான புகைப்படத்தையும் மறக்காமல் நன்றியோடு இணைத்திருந்தார்.

'செஞ்சோலைக்குப் போற வழியில் கஸ்ரோவின்ரை அலுவலகத்திலை நவம் அறிவுக் கூடத்திற்கான பொருட்களை ஒப்படைச்சுப் போட்டு போவம். எதுக்காக எல்லாத்தையும் கொண்டு அலையோணும்?' அன்ரனி அப்படிக் கேட்டது எனக்கும் சரியாகத் தெரிந்தது.

நவம் அறிவுக் கூடத்திற்கு என்று நாங்கள் கொண்டு வந்த பொருட்களை கஸ்ரோவின் அலுவலகத்தில் ஒப்படைத்தோம்.

'உங்களுக்கு இரவுச் சாப்பாடு இங்கேதான்' என்று கஸ்ரோ அன்றைய இரவு உணவுக்கு அழைப்பு விடுத்தார்.

மாலையில் வந்து மீண்டும் கஸ்ரோவை சந்திப்பதாகச் சொல்லி செஞ்சொலைக்குப் பயணமானோம்.

செஞ்சோலையில் அதிக நேரம் செலவிட முடியவில்லை. எங்களது நிலைமை ஜனனிக்குத் தெரிந்திருந்தது. மீண்டும் சந்திப்போம் என்று விடைபெற்றோம். நன்றியோடும், நட்போடும் ஜனனி எங்களை வழியனுப்பி வைத்ததார்.

அந்த 'மீண்டும் சந்திப்போம்' என்ற வார்த்தைகள் பொய்யானவைதானா? தெரியவில்லை.

அங்கிருந்து புறப்பட்டு வழியில் ரேகாவையும் இணைத்துக் கொண்டோம்.

அடுத்த சந்திப்பு முல்லைத்தீவில் சூசையுடனானது.

தொடரும்..

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=cbc4f071-2ae0-417a-8aab-21e19cb8ae29

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் - மூனா

<p>நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம்</p>
 

 

பகுதி 27

எழுபதுகளின் பிற்பகுதிகளில் எனது மாலைப்பொழுதுகளை பொலிகண்டி ஆலடிச் சந்தியில் செலவழித்த காலங்களில் எனக்கு சூசையின் அறிமுகம் இருந்தது. அவரை இறுதியாக 1984இல் கண்டிருக்கிறேன். பதினெட்டு வருடங்களின் பின் இப்பொழுது மீண்டும் சந்திக்கப் போகிறேன்.

முல்லைக் கடற்கரை மணலில் கதிரைகள், மேசை போட்டு எங்களுக்காகக் காத்திருந்தார். சிற்றுண்டி தந்து நீண்ட நேரம் நட்பாக உரையாடினார். 'வாருங்களேன் கடலில் ஒரு பயணம் போய் வரலாம்' என்றார்.

கடலில் தூரத்தே சிறிலங்கா கடற்படை தெரிந்தது. மாலை மங்கிய நேரம் பயமாகவும் இருந்தது. அவர் கேட்கும் பொழுது மறுப்பு சொல்லவும் முடியவில்லை.

கடலில் ஆங்காங்கே விடுதலைப் புலிகளின் படகுகள் பாய்ந்து, துள்ளி கடல் நீரைக் கிழித்து ஓடித் திரிந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும் பொழுது பயம் சற்று விலகிக் கொண்டது.

கடலில் சிறிது தூரம்தான் பயணம் என்று நினைத்தேன். அது நீண்ட தூரமாக இருந்தது.

'கடலில் சிறிலங்கா கடற்படை நிற்கிறதே.. பயம் இல்லையா?' என்று சூசையிடம் கேட்டேன்.

கேட்டிருக்கக் கூடாது என்று உடனேயே புரிந்துவிட்டது.

<p>நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம்</p>

'அவங்கடை கப்பலை நோக்கி விடு' சூசை கடற்படைத் தளபதியாக கட்டளை இட்டார்.

'சிரிச்சபடி வாயை வைச்சுக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்தானே' என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

நாங்கள் இருந்த கப்பல் வேகம் கொண்டு சிறிலங்கா கடற்படை இருந்த இடம் நோக்கிப் பயணித்தது. எங்கள் கப்பல் பயணிக்க சிறிலங்கா கடற்படையினரின் கப்பல் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. நாங்கள் இருந்த கப்பலின் வேகம் கூடிக் கொண்டே போனது. திடீரென பாரிய இரு வெடிச் சத்தங்கள்.

'சரி திருப்பு' சூசை அறிவித்தார்.

எங்களைப் பார்த்துக் கேட்டார். 'பயந்திட்டீங்களோ? ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட அளவு மெயின்ரெயின் பண்ணோணும். நாங்கள் நெருங்கிப் போனதாலை சத்தவெடி போட்டு ஒரு சமிக்கை காட்டுகினம். அவ்வளவுதான்.'

எதுவானாலும் கப்பல் கரையை நோக்கித் திரும்பியதில் எனக்கு நிம்மதியானது.

'நாங்கள் கடலிலை இருந்து தொடர்ந்து அடிச்சுக் கொண்டிருந்தம். அவங்கள் கரையிலை இருப்பெடுத்து வைச்சுக்கொண்டு விடாமல் அடிச்சுக் கொண்டிருந்தாங்கள். பார்த்தன் சரிவரேல்லை. கடைசியா சொன்னன். அடிச்சுக் கொண்டே போங்கோ, எஞ்சினை நிப்பாட்டாதையுங்கோ எண்டு. தண்ணியிலை இருந்து போட்டுகள் எல்லாம் அடிச்சபடி  பாஞ்சு போய், அதோ அவ்வளவு தூரம் தரையிலை போய் தரை தட்டி நிண்டுதுகள். போட்டுகள் பாஞ்ச வேகத்திலை பயந்து ஓடிட்டாங்கள்.. 'கடற்கரையில் நின்று 'முல்லை வெற்றிச்சமரில்´ போராடிய முறையை சூசை விளக்கிச் சொன்ன விதமே தனி.

கஸ்ரோவைச் சந்திக்க வேண்டிய தேவையைச் சூசையிடம் சொன்னேன்.

'நல்ல கதையா இருக்கு. என்னட்டை வந்திட்டு சாப்பிடாமல் போறதோ? கஸ்ரோவிட்டை நாளைக்குப் போய்ச் சாப்பிடுங்கோ' சொன்னது மட்டுமல்லாமல், நாளைதான் நாங்கள் வந்து சந்திப்போம் என கஸ்ரோவுக்கு தகவல் கொடுத்து விடும்படி தனது உதவியாளருக்குச் சொன்னார்.

இரவுச் சாப்பாடு கடலுணவுகளாக இருந்தன. கொல்கர் இந்த உணவை தவற விட்டு விட்டானே என்ற உறுத்தல் மனதில் இருந்தாலும் எனது நாவும், வயிறும் மிகமிக பேருவகை கொண்டிருந்தன.

இரவு உணவுக்குப் பின்னரும் சூசையுடன் நீண்ட நேரம் உரையாட முடிந்தது. அடுத்த நாள் விடியலுக்கு கொஞ்சம் முன்பாக வெண்புறா வந்து சேர்ந்தோம்.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக கஸ்ரோவைத் தொடர்பு கொண்டு நேற்று வரமுடியாத நிர்பந்தத்தை அவரிடம் சொன்னேன். அன்றே தன்னிடம் வரும்படி கஸ்ரோ அழைத்தார்.

மறுநாள் யேர்மனிக்கு மீண்டும் பயணம். கஸ்ரோவிடம் சென்று வர நேரமாகி விடும் என்பதால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் எல்லோரையும் சென்று சந்தித்து விடை பெற்றுக் கொண்டேன்.

கொல்கர் செல்வாவிற்கு கைக்கான பயிற்சியை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தான்.

முதல்நாள் பயணித்த வாகனத்தையே வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கஸ்ரோவிடம் சென்றோம்.

'நேற்று ஏமாத்திப் போட்டீங்கள்' கஸ்ரோவின் பேச்சில் கவலை தெரிந்தது.

'சாப்பாடெல்லாம் செய்தாப் போலைதான் சூசையிட்டை இருந்து தகவல் வந்தது. உங்களுக்குப் பிடிக்கும் எண்டு பெரிய்ய்ய்ய வடை எல்லாம் சுட்டு வைச்சிருந்தம்'

'எல்லாம் வீணாப் போயிற்றா?'

'எங்கை வீணாகிறது? நாங்களே சாப்பிட்டிட்டம்'

'எங்கள் பெயரில் உங்களுக்கு மகா விருந்து'

கஸ்ரோ சிரித்துக் கொண்டார். 'வடை இல்லை எண்டு கவலைப் படாதையுங்கோ. வந்து கொண்டிருக்குது' என்று நாவூற வைத்தார்.

இம்முறை எனது மனைவியும் பிள்ளைகளும் கூட இருந்ததால் பலதையும் கஸ்ரோவிடம் கதைக்க முடிந்தது. சென்ற முறையை விட நீண்ட நேரம் எங்களது உரையாடல்கள் தொடர்ந்தன.

அவர் எழுதிய புத்தகத்தில் கையெழுத்துப் போட்டு எனது மனைவிக்குப் பரிசாகக் கொடுத்தார். 'மீண்டும் கட்டாயம் வரவேண்டும்' வலியுறுத்திச் சொல்லி வழியனுப்பி வைத்தார்.

மறுநாள் காலையில் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்தாகி விட்டன.

செல்வாவிற்கான கையில் ஏதோ சில வேலைகள் இருக்கிறது. அதை மீண்டும் யேர்மனிக்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும் என்று கொல்கர் சொன்னான்.

'அடுத்தமுறை நீ வரும் பொழுது உன்னுடன் நான் வர வேண்டிய தேவை இருக்காது. ஸ்ராலின் உனக்கு துணை நிற்பான்' என்றேன்.

வெண்புறா உறவுகளிடம் விடை பெற்றுக் கொண்டோம். கொழும்பு செல்ல வாகன வசதி செய்து தந்திருந்தார்கள். இடையில் சோதனைகள், இடைநிறுத்தல்கள் எதுவும் இல்லாமல் பயணம் சுலபமாகவும், சுகமாகவும் இருந்தது.

கொழும்பு நோக்கிய பயணத்தின் போது, லண்டன் தொழில் நுட்பத்தில் வெண்புறாவில் நடந்த பட்டறை பற்றி கொல்கரிடம் சொன்னேன். வெண்புறாவில் அங்கிருந்தவர்கள் தனக்கு அதை தெரியப்படுத்தியதாகச் சொன்னான்.

அது விடயமான எதுவிதமான மேலதிக விமர்சனங்களையும் அவன் தரவில்லை. 'செல்வாவின் கை வேலையை முடி. காலம் ஒருநாள் உன்னை மீண்டும் அழைக்கும். அதுவரை ஸ்ராலினுக்கு உனது நிறுவனத்தில் தொடர்ந்து பயிற்சி கொடு' என்றேன்.

புன்னகையோடு சம்மதித்தான்.

பின்னாளில் வந்த சுனாமி அலைகளில் அரசியல் புயல்களில் போராட்ட அனர்த்தங்களில் எங்களின் சேவையும் புதைந்து போயிற்று. 

எந்தவித அரசசார்பற்ற நிறுவனமும் வடக்கு கிழக்கில் செயற்பட அனுமதி இல்லை என்று அழித்தவர்களே ஆணையிட்டுச் சொன்னார்கள். அச்சுறுத்தி நின்றார்கள்.

எதுவுமே செய்ய வாய்ப்பில்லை.

வலிகளைச் சுமந்தே வாழ்க்கைகள் தொடர்கின்றன. தேவைகள் அங்கே நிறைய இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றும் வல்லமைகள் இங்கே தனியாகப் பரந்து வீணே கிடக்கின்றன.

புலம்பெயர் நாடுகளில் வெவ்வேறு துறைகளில் எங்கள் இளைய சந்ததிகள் தங்கள் ஆற்றல்களை, அறிவுகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து நாட்டுக்குத் தேவையான விடயங்கள் எடுத்துச் செல்லப்பட்டால் சோர்ந்திருக்கும் மனங்கள் எல்லாம் அங்கே துளிர்விடத் தொடங்கி விடும்.

எங்கள் நாட்டுக்கான பொதுப் பணியில் தனி ஒருவராக பெரிதாக சாதிக்க வாய்ப்புகள் இல்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.

பிறந்தநாள், திருமணநாள் அல்லது எங்களது ஏதாவது ஒரு நினைவு நாளில் அங்கிருக்கும் இல்லத்தில் ஒருநாள் உணவழிப்பது எங்கள் மனதுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் பாதிப்புக்குள்ளான நமது உறவுகள் யாரிலும் தங்கியிராது சுயமாகச் சம்பாதித்து வாழ்வதற்கான வழிவகைகளை கண்டறிந்து அதை ஏற்படுத்துவோமாயின் அது சமுதாயத்திற்கான உயர்ச்சியைத் தரும்.

'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு´ என்று இரண்டாம் வகுப்பில் படித்ததை ஏனோ மறந்து விட்டோம். சிதறி இருந்து சேவை செய்பவர்கள் எல்லாம் சேர்ந்து வரவேண்டும்.

அதுவும் தன்னலம் இல்லாமல் நீ, நான் என்று வேறுபாடு இல்லாமல் மனிதாபிமான சேவை மனத்தோடு தொண்டு செய்வோமாயின் நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம்.

சொல்ல மறந்து விட்டேன். பல வருடங்களாக கொல்கரைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அவன் ஞாபகம் வந்த பொழுது இப்பொழுது அவன் என்ன செய்கிறான் என்று தேடிப் பார்த்தேன். கையிற்றி (Haiti)யில் பூகம்ப அனர்த்தங்களில் கால் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்திக் கொண்டிருக்கும் அவனது படம் ஒன்று இணையத்தில் காணக் கிடைத்தது.

(கட்டுரைத் தொடர் நிறைவடைந்தது)

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=060646f4-d1d5-4116-b5ff-40825664e256

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.