Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் நீதிக்கு எதிரான சக்திகளின் நிகழ்சிநிரலை குழப்பியுள்ள ‘தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் இன அழிப்பு’ தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களின் நீதிக்கு எதிரான சக்திகளின் நிகழ்சிநிரலை குழப்பியுள்ள ‘தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் இன அழிப்பு’ தீர்மானம்

Feb 15, 20150

 

Genocide.jpg

- நிர்மானுசன் பாலசுந்தரம்

சர்வதேச தரத்துக்கு இணையான உள்ளக பொறிமுறையை உருவாக்கப் போகிறோம் என்ற பரப்புரையில் ஈடுபட்டுவரும் சிறீலங்கா, இன்னொரு பக்கத்தில் சிறீலங்காவில் இருக்கும் வரை கோத்தபாய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இது சிறீலங்கா உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கும் உள்ளகப் பொறிமுறையும், அதற்கமைவாக செயற்படுத்தக்கூடிய பொறுப்புக்கூறும் கடப்பாடும் தமிழர்களுக்கு நீதியை வழங்காது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு.

UNHRC.jpgஇதேவேளை, ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக சமூகம் சிறீலங்காவில் உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க உதவ வேண்டும் என்ற அடிப்படையில் சிறீலங்காவின் தூதுக்குழுக்குள் தொடர்ச்சியான வெளிநாட்டுச் சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் எதிர்வரும் மார்ச் மாதம் 25ம் திகதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் இலங்கைத் தீவு தொடர்பான அறிக்கையை பிற்போடுவதற்காக சிறீலங்கா அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் செய்கிறது. இந்த அறிக்கையை பிற்போடும் நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்தால் அதனை ஐரோப்பிய ஒன்றியமும் பின்பற்றும் என்று இராசதந்திர வட்டாரங்கள் ஊடாக அறியமுடிகிறது. இந்தியாவும் சிறீலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இன்றைய தினம் (15-02-2015)இந்தியாவுக்கான விஜயத்தை ஆரம்பிக்கும் மைத்திரிபால சிரிசேன இதற்கான உத்தரவாதத்தினை பெற்றுக்கொள்வதற்கான சகலவகை தயாரிப்புக்களையும் பூர்த்திசெய்துள்ளதாக அறியமுடிகிறது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையை பிற்போடவைத்து, உள்ளகப் பொறிமுறையை உருவாக்கி, தமிழர்களின் நீதிக்கான பயணத்தை முடக்கும் நோக்கோடு சுமார் முப்பத்தைந்து நாட்களுக்குள் சிறீலங்கா முன்னெடுத்த நகர்வுகள் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழர்களுக்கான நியாயமான உரிமைகளோ நீதியோ என்றைக்கும் கிடைக்கப் போவதில்லை. ஆதலால், இத்தகைய நகர்வுகளை தமிழர் முறியடித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

NPC.jpg

இத்தகைய ஒரு சூழலிலேயே, ‘தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் இன அழிப்பு’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை, பெப்ரவரி 10ம் திகதி வடமாகாண சபை நிறைவேற்றியுள்ளது. சிறீலங்கா சுதந்திரம் அடைந்ததாக கூறப்படுகின்ற காலம் முதல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போர்வரை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பை மேற்கொண்டுள்ளதை ஆதரபூர்வமாக முன்வைத்துள்ள இந்தத் தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விசாரணையில் தமிழ் இன அழிப்பு தொடர்பான விசாரணையும் உள்ளடக்கப்பட வேண்டும். அத்துடன், பொருத்தமான விசாரணைக்கும் குற்றவியல் வழக்கு தொடர்வதற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிபாரிசு செய்ய வேண்டும் என கேட்டுள்ளது.

சிறீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இருந்த மேற்குலக சமூகத்துக்குள் ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ளது. தமது நலன்களை மையப்படுத்தி ஆட்சிமாற்றத்துக்கு பூரண ஆதரவுடன் உள்ள தரப்புகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்படவிருக்கும் அறிக்கையை பிற்போடுவதற்கு பக்கத்துணையாக உள்ளன. மனித உரிமைகள் சமூகத்தின் பெரும்பகுதியினர் இதற்கு உடன்படவில்லை. அறிக்கையை பிற்போட உடன்படாத தரப்புகளுக்கும், தமிழர்களுக்கான நீதி மறுக்கப்படக்கூடாது, சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்பதற்காக போராடுபவர்களுக்கும் இந்த வரலாற்றுத் தீர்மானம் ஒரு உந்துசக்தியாக மாறியிருக்கிறது.

NPC-memebers.jpgதமிழர்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்று நேர்மையோடு செயற்படுபவர்கள் இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளார்கள், வரவேற்பார்கள். இதற்காக பணியாற்றியவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஏனெனில், தமிழர்களுடைய சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்குமான போராட்டத்தில் வட்டுக்கோட்டை தீர்மானம் எவ்வாறு பெரும் திருப்புமுனையாக அமைந்ததோ, அதேபோன்று இந்த தீர்மானத்தை தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்ட இன அழிப்புக்கு நீதி பெற்றுக்கொள்ளும் போராட்டத்திற்கு ஒரு திருப்புமுனையாக மாற்றலாம். ஆனால், இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய வட மாகாண சபை, எத்தகைய சவால்கள் வரினும் அதற்கு உறுதியுடன் முகம்கொடுத்து இந்த தீர்மானத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துதிலேயே அது தங்கியுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவான கருத்துக்கள் தமிழ் நாட்டில் ஒலிக்கின்றன. ஆயினும், இந்தியாவின் மத்திய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எச்சரிக்கையுடன் பார்ப்பதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. மக்கள் ஆதரவுள்ள பெரும்பாலன புலம்பெயர் அமைப்புகளும் இந்தத் தீர்மானம் தமக்கு உற்சாகம் அளிப்பதாக கருத்து வெளியிட்டுள்ளன. தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது இன அழிப்பு என கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக வலியுத்தி வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி இந்த தீர்மானத்துக்கு தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு நேரெதிராக செயற்படுபவர்களை ஓரம்கட்டி, நேர்மையான முறையில் இந்த தீர்மானத்தை செயற்படுவதற்கு முதலமைச்சரும், வட மாகண சபை உறுப்பினர்களும் ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்களும் தயாரென்றால், அவ்வாறான தலைமைக்கு முழு ஆதரவை வழங்குவதோடு, அவர்களுடன் கூட்டிணைந்து பணியாற்றத் தயாரென்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி தெரிவித்துள்ளது.

Nimal.jpg

இதேவேளை, மனித உரிமைவாதிகளாக காட்டிக்கொண்ட கொழும்பு சிவில் சமூகத்தைச் சார்ந்த ஒரு பகுதியினரும், எதிர்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவும் இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனரட்ன ஒரு அரசு என்ற வகையில் இந்த தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துள்ளார். ‘தெரியாத தேவதையோ’ திகைப்படைந்துள்ளதாக சிலோன் ருடே செய்தி வெளியிட்டுள்ளது. சிங்கள அரசை பாதுகாக்க முற்படும் தரப்புகள் எல்லாம் இந்த தீர்மானத்தை கடுமையாக விமர்சிக்கின்றன. தமிழருக்கான உரிமையையும் நீதியையும் மறுப்பதற்கு சிங்களப் பேரினவாதமும் அதற்கு ஆதரவான சக்திகளும் காலத்திற்கு காலம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒவ்வொரு காரணங்களை முன்வைப்பார்கள். அந்த வரிசையில் இந்த தீர்மானம் மகிந்தவை பலப்படுத்தும், மீள்நல்லிணகத்தை பலவீனப்படுத்தும் என்று வசைபாடத் தொடங்கியுள்ளார்கள்.

அண்மையில் நடைபெற்ற சிறீலங்காவின் சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எந்த ஒரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகள் தொடர்பாக பேசவில்லை. இது சிறீலங்காவின் இனவாத போக்கை எடுத்துக்காட்டினாலும் உண்மையான அந்தக் காரணம் மூடிமறைக்கப்பட்டது. மாறாக, மைத்ரிபால சிரிசேன அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக பேசினால், அது அவரின் வெற்றியை பாதிக்கும். ஆதலால், அவர் வெளிப்படையாக பேசமாட்டார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் தமிழ்மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவார் என்ற மாயை கட்டியெழுப்பட்டது. ஆதலால், ‘தெரியாத தேவதைக்கு’ வாக்களியுங்கள் என்று மைத்திரிக்கு ஆதரவானவர்கள் தெரிவித்தார்கள்.

Srisena--1024x613.jpgதற்போது மைத்திரி ஆட்சி முப்பத்தைந்து நாட்களை கடந்தாயிற்று. ஆயினும், தமிழ் மக்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மைத்திரி ஆட்சியை பாதுகாக்க துடிப்போர், தற்போதுதான் ஒரு மாதம் நிறைவடைந்திருக்கிறது. அவசரப்படாதீர்கள். பொறுமை காக்குக என கூறுகிறார்கள். அது மட்டுமல்ல, தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக மைத்திரிபால சிரிசேன இன்றைய சூழலில் பேசினால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அது மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக மாறிவிடும் என்று மற்றுமொரு மாயை கட்டியெழுப்பப்படுவதன் ஊடாக உண்மை மீண்டும் மறைக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கு உரிமையையும் நீதியையும் மறுப்பதனை அடிப்படையாகக் கொண்ட சிங்களத்தின் இனவாதமே அந்த உண்மையாகும். புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையை ஒரு மாதத்திற்குள் தீர்க்க முடியாது. ஆனால், அந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விருப்போ இதயசுத்தியோ சிங்கள ஆட்சியாளர்களிடம் இல்லை. அதற்கு மைத்திரி-ரணில் அரசாங்கமும் விதிவிலக்கல்ல என்பதையே அவர்களின் கடந்த ஒரு மாதகால நடவடிக்கைகள் வெளிப்படுத்தி நிற்கிறது. இத்தகைய பின்னணியில் நீதிக்காக தமிழ் மக்கள் எவ்வளவு காலம் பொறுமை காப்பது?

தமிழ் மக்களை பொறுமை காக்குமாறு தமிழ்த் தலைமைகள் கூறிக்கொண்டிருக்க, தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் வழிகளை நீர்த்துப் போகச் செய்து, இறுதியில் நீதியே கிடைக்காமல் செய்யும் நடவடிக்கைகளில் சிங்கள ஆட்சியாளர்கள் மிகுந்த சிரத்தையுடன் ஈடுபட்டுள்ளார்கள். இதற்கு தமிழர்களின் பிரதிநிதிகள் எனக் காட்டிக்கொள்வோர் ஒரு சிலரும் துணைபோவதை தமிழ் மக்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.

ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக சமூகம் சிறீலங்காவில் உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க உதவ வேண்டும் என்ற அடிப்படையில் சிறீலங்காவின் தூதுக்குழுக்குள் தொடர்ச்சியான சந்திப்பில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை (11-02-2015) வொசிங்டனில் உள்ள சர்வதேச சமாதானத்திற்கான கார்னெகி அறக்கட்டளையில் (ஊயசநெபநை நுனெழறஅநவெ கழச ஐவெநசயெவழையெட Pநயஉந) ‘சனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா’ என்ற தலைப்பில், உரையாற்றிய சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மனித உரிமைகள் சமூகம் உட்பட்ட சர்வதேச சமூகம் பொறுமை காக்க வேண்டும். மனித உரிமையை பேணி பாதுகாக்கும் அதேவேளை, சனநாயகம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்தும் பயணத்தின் வெற்றியை உறுதிப்படுத்த திடசங்கற்பம்பூண்டுள்ளது என வெளித்தரப்புகளை ஏமாற்றும் தந்திரத்தை முடுக்கிவிட்டிருந்தார்.

வெளியுலகுக்கு தாம் தொடர்பாக நல்லதொரு பிம்பத்தைக் காட்ட முயற்சிக்கும் சிறீலங்கா, மனித உரிமைகளை பாதுகாப்பதாக காட்டிக்கொள்கின்ற போதிலும், ராஜபக்சவின் கட்டமைப்பு சார் இனஅழிப்புக் கொள்கையை தொடர்ந்தும் பின்பற்றுகிறது. இதன் வடிவங்கள் மாறினாலும் இலக்கு மாறவில்லையென்பதற்கு கீழ்வரும் விடயங்கள் சில உதாரணங்கள்.

சிறீலங்காவின் பயங்கரவாத விசாரணை திணைக்களத்தைச் சார்ந்தவர்களால் மாணவ சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கல்வி வலுவூட்டல் செயற்பாடுகளில் ஈடுபட்ட வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள் பொய்குற்றச்சாட்டின் பெயரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுத் துறையின் செயற்பாடுகள் திவீரம் அடைந்துள்ளன.

வெளிநாட்டிலிருந்து திரும்பிய குறைந்தபட்சம் மூன்று தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிறையத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். புலம்பெயர்ந்துள்ள ஊடாகவியலாளர்கள், வெளிநாட்டிலுள்ள முன்னால் போராளிகள் மற்றும் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களை மீண்டும் நாடுதிரும்புமாறு அழைப்பு விடுத்த பிற்பாடே, இந்த கைது சம்பவங்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினருக்கு உள்ள பொதுசன பாதுகாப்புக்கான அதிகாரங்களை இராணுவத்துக்கு வழங்கும் பிரகடனத்தில்Ruwan-Wijewardene.jpg ராஜபச்சவைப் போலவே மைத்திரியும் கையொப்பமிட்டுள்ளார். இது இராணுவதினர் புரியக்கூடிய மனித உரிமை மீறல்களுக்கு சட்ட பாதுகாப்பை வழங்கக்கூடிய ஆபத்துள்ளது. இதேவேளை, தமிழர் தாயகம் தொடந்தும் கடுமையான இராணுமயமாக்கலை சந்தித்துள்ளமை அறிந்ததே. தமிழர் தாயகத்தை தொடர்ச்சியான ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதற்காக ராஜபக்சாக்கள் 180,000 சிறீலங்கா ஆயுதப் படைகளை வடகிழக்கில் நிறுத்தியிருந்னர். இன்னொருமுறையில் கூறுவதானால், சிறீலங்கா இராணுவத்திலுள்ள 20 டிவிசன்களில் 18 டிவிசன்கள் வடகிழக்கிலேயே நிறுதப்பட்டிருந்தன. (இதில் தொண்டர் படையணி போன்றவை உள்ளடக்கப்படவில்லை.) இவை மைத்திரியின் ஆட்சியில் தமிழர் தாயகத்திலிருந்து அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. மாறாக, வடகிழக்கில் அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்ற மாட்டோம். எத்தகைய சூழலிலும் இராணுவத்தை குறைக்க மாட்டோம் என்று பலாலி இராணு தலைமையகத்தில் வைத்து சிறீலங்காவின் இராசாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

மறுபுறத்தே, பிடிவிறாந்து இன்றி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைக்கும் சட்டத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதை தம்மால் அறிய முடிவதாக சிறீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி.மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

இவையனைத்தும் மைத்திரி-ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த முப்பந்தைந்து நாட்களுக்குள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். இதனை விட பல செய்திகள் வெளியே வராமலும் வெளிப்படுத்த முடியாமலும் உள்ளது. நிலைமை இவ்வாறிருக்க மனித உரிமை, சனநாயகம், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் நடவடிகைகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளோம் என்று சிறீலங்கா பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகிறது.

இவ்வாறான பின்னணியிலேயே ‘தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் இன அழிப்பு’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் கடும் அழுத்தங்களையும் எதிர்கொண்டபடி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனை நிரந்தர வெற்றியாக மாற்ற வேண்டும் என்றால், இந்த தீர்மானம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அதற்குரிய ஆதரவையும் அழுத்தத்தையும் தாயகம், தமிழகம் புலம்பெயர் தேசமென உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் வழங்குவதோடு, இந்த தீர்மானத்துக்கு ஆதரவான சர்வதேச அலையை உருவாக்க வேண்டும்.

Armeniang-enocide1.jpgஇது இலகுவான விடயமல்ல. உலகிலேயே முதன்முதலாக இடம்பெற்ற இன அழிப்பு ஆர்மேனியர்களுக்கு எதிராக துருக்கி மேற்கொண்ட இன அழிப்பு ஆகும். சுமார் எட்டாண்டு காலப்பகுதிக்குள் 10 தொடக்கம் 15 இலட்சம் வரையான ஆர்மேனியர்கள் துருக்கிப் பேரரசால் படுகொலை செய்யப்பட்னர். இதனை இன்றும் துருக்கி மறுத்து வருகிறது. இதேவேளை, 2012 ஜனவரி மாத நடுப்பகுதியில், ஆர்மேனிய இனப்படுகொலை தொடர்பான விடயம் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, 86 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததோடு, இனப்படுகொலையின் மறுப்பது குற்றச்செயல் எனும் பிரேரணை இயற்றப்பட்டது. ஆயினும், ஆர்மேனியார்கள் அமெரிக்கா பிரான்ஸ் போன்ற நாடுகளில் பலமுள்ள புலம்பெயர் சமூகமாகத் திகழ்தாலும், நீதிக்கான பயணத்தில் அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய உண்டு. இருப்பினும் நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஓர்மத்தோடும் திட்டங்களோடும் ஆர்மேனியர்கள் காணப்படுகிறார்கள். இது சிறீலங்கா அரசால் இன அழிப்பை வரலாற்று ரீதியாக சந்தித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு சாதகமான படிப்பினையாகும். இதனையும் மனதிலிருத்தி வரலாற்றில் என்றுமில்லாதவாறு நீதிக்கான தமது போராட்டத்தை தமிழர்கள் கூர்மைப்படுத்த வேண்டும். அதற்கு வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் இன அழிப்பு’ என்ற தீர்மானம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடித்தளமாகும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.