Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெருமூடி மடங்கள்

Featured Replies

யாழ்ப்பாணத்துத் தமிழரின் தனித்துவமான பண்பாட்டுக்குறிகாட்டிகள் பலவாகும். அவற்றுள் தெருமூடிமடங்களும் ஒருவகையினதாகும். எம்மூதாதையரது மிகநீண்ட கால்நடைப்பயணங்களின் போதும், வண்டிப்பாரங்களின் இராப்பயணங்களின் போதும் இத்தெருமூடிமடங்கள் இளைப்பாறும் மையங்களாகவும், பசிநீக்கும் இராச்சிற்றுண்டி விடுதிகளாகவும், திருடர் தொல்லையிலிருந்து பயணிகளைக் காக்கும் காவலரண்களாகவும் தொழிற்பட்டிருந்தமையினைக் காண்கின்றோம். கடல்முகப்புத்தளங்களை மிகவும் நெருக்கமாகக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தீபகற்பத்தில் இத்தெருமூடிமடங்கள் அமைக்கப்பட்டதற்கான காரண-காரிய அடிப்படைகள் பல எம்மூதாதையரினால் வகுக்கப்பட்டிருந்தன. பாய்மரம் செலுத்தி திரைகடலோடி, பொருட்களை ஈட்டி வந்த திராவிடப்பெருங்குடி மக்களுக்கு கடல்முகப்புத்தளங்களில் அமைக்கப்பட்டிருந்த பெருமடங்களே ( கிட்டங்கிகளே ) முதற்தங்கு மடங்களாக விளங்கின. இக்கடல ;வழித்தங்குமடங்களிலிருந்து வணிகப்பொருட்களை ஏற்றிச்செல்வதற்காக வருகைதரும் வண்டில் கூட்டங்கள் இளைப்பாறிச் சற்று பசிதணித்து, திருடர்களிடமிருந்து வணிகப்பொருட்களைக் காப்பாற்றி, உள்நாட்டுச்சந்தைகளுக்கும், அல்லங்காடி, மாலைச்சந்தை, வாரச்சந்தை, இரவிக்கைச்சந்தை, சத்திரத்துச்சந்தை, சாண்டார்சந்தை போன்றவற்றிற்கும் கொண்டு சென்று விற்றுப்பொருளீட்டும் வாழ்க்கை முறைக்கு இட்டுச்சென்ற வகையில்  எம்மவருக்கு இத்தெருமூடிமடங்;களே உயிரோட்டமான வாழ்வாதாரங்களாகச் சேவையாற்றியிருக்கின்றன. அந்தவகையில் கிட்டங்கிகளும், தெருமூடிமடங்களும் யாழ்ப்பாணத்தின் வாணிபப்பண்பாட்டின் ஒரே தொழிற்பாட்டிற்குரிய இருவேறு வடிவங்களாக எமது மரபில் அமைந்திருந்தனவென்றால் அக்கூற்று தவறானதாக அமையாது. இச்சிறு ஆய்வுக்குறிப்புரையின்கண் யாழ்ப்பாணத்திலுள்ள தெருமூடிமடங்களைப்பற்றிய சிறுகுறிப்புக்களை எதிர்கால ஆய்வின்பொருட்டு ஓர் அறிமுகவுரையாகக் கொடுப்பதே நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
தெருமூடிமடங்களின் தோற்றப்பின்னணி
அம்பலம் எனக் குறிக்கப்படுகின்ற வீதியோரத்தங்குமடங்களும் ஆவுரஞ்சிக்கற்களும் கூபங்களும் (கிணறுகளும்) யாழ்ப்பாணத்தில் எக்காலகட்டத்தில் இருந்து இணைவு பெற்ற  ஒரே நிறுவனமாகத் தோற்றம் பெற்றிருந்தன என்ற கேள்விக்கு விடையிறுப்பது கடினமான ஒன்றல்ல. யாழ்ப்பாணத்திற்குரிய ஓரங்குல இடவிளக்கப் படமொன்றைப் பார்க்குமொருவர் அம்பலம் எனக்குறிக்கப்பட்ட தங்குமடங்கள் டச்சுறோட்டுடன் இணைந்த பிரதான வீதிகளின் முக்கிய தரிப்புமையங்களில் இருந்தமைக்கான குறியீடுகளைக் காணமுடியும். பண்டாரமடம், பண்டத்தரிப்பு ,  பண்ணாகம், முத்தட்டுமடம், மருதனார்மடம், ஆறுகால்மடம்,  சங்கத்தானை, பனைமுனை (Light house road), நெல்லியடி, சாரையடி, சுப்பர்மடம், ஓட்டுமடம்,   மடத்துவாசல், தில்லையம்பலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இத்தகைய தங்குமடங்கள் காணப்பட்டிருந்தன. ஆனால் தெருவை மூடிய மடங்களாகக் காணப்பட்டவை மிகக்குறைவாகவே இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
குடாநாட்டின் சந்தை முறை
பண்டகசாலைகளும் பண்டார மாளிகைகளும் நிறைந்திருந்த சோழர்கால ஆட்சிப்புலத்தில் பெருந்தெருக்கள் அமைக்கப்பட்டு, நீண்ட, நெடுந்தூரப்போக்குவரத்தினை நலச்சேவை மன்றங்களினூடாக ஆற்றுப்படுத்தியிருந்தனர். புரவி வீரர்களின் கடுகிய வேகத்திற்கு ஏற்ற நீண்ட பெருந்தெருக்கள் சோழப்பேரரசெங்கும் உருவாக்கி, பராமரிக்கப்பட்டு வந்திருந்தமையைப் போன்றே, இலங்கையிலும் அவர்களால் பெருவீதிகள் உருவாக்கப்பட்டிருந்தன. மன்னாரிலுள்ள மாதோட்டத்திலிருந்து ராசராசப்பெருந்தெரு என்றொரு பெருவீதி அனுராதபுரம் நோக்கிச்சென்றமையை மாதோட்டத்திலுள்ள தாழிக்குமரன் கல்வெட்டு பதிவு செய்து வைத்துள்ளது வடமராச்சியில் வதிரியிலுள்ள கோட்டைத்தெரு
( கோட்டைப்பெருந்தெரு – கோட்டுப்பெருந்தெரு ) பாணன் துறையூடாக நேர்கோட்டில் தெற்கே நோக்கிச்சென்று, சோழங்கனைச் சென்றடைவதனைக்காணலாம். மானாண்டிச்சந்தையுடன் சோழங்கனை (கரணவாய்)
ஒருநேர்பாதையில் இணைத்து வைத்த ஒரு பெருந்தெருவாகவே கோட்டைப்பெருந்தெரு அமைந்திருக்கவேண்டும். கரணவாயிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உப்பு மானாண்டிச் சந்தைக்கு கடுகிய வேகத்தில் எடுத்துச்செல்லப்பட்டு,  மீன்மால்-கூடைகளுக்கு,விற்பனை மையங்களுக்கு, மீன்பறிகளுக்கு இடப்பட்ட ஒரு வகையை அறிகின்றோம்;. மாலைச்சந்தை முறையில் அமைந்த இந்த மானாண்டிச்சந்தை ( மீன் நோண்டிச்சந்தை) நித்தமும் மாலை ஐந்து மணிக்குப் பின்னரே கூடுவது வழமையாகும். ஒரு சந்தை முறையின் தோற்றத்தினை குடாநாட்டிலே மானாண்டிச்சந்தையுடன் இன்றும் தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மானாண்டிச்சந்தை ஒரு வரலாற்றுக்காலச் சந்தை என்பதனை அதன் சூழலில் பெற்றுக்கொள்ளப்பட்ட சங்ககாலத்திற்குரிய சுடுமண் போழைகள் (காவிரிப்பள்ளத்தாக்கிலுள்ள திருக்காம்புலியூரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்ததைப்போன்றவை ) எமக்குக்கிடைத்ததிலிருந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாரத்தில் குறிப்பிட்ட தினங்களில், குறிப்பிட்ட நேரங்களில் இயங்கும் சந்தைகள் காணப்பட்டிருந்தன. வாரத்தில் பல்வேறு நாட்களில் , சூரியோதயத்தின் போதும் , சூரிய அஸ்தமனத்தின்போதும், உச்சியின் போதிலும் சந்தைகள் கூடிக்கலைந்தன. அல்லங்காடிகள் என்றும் மாலைச்சந்தை, வாராந்தச்சந்தை, நித்திய சந்தை, கோயிற்சந்தை என அவை  பாகுபடுத்தப்பட்டிருந்தன. வாரத்தில் ஒரு நாள் மட்டும் கூடிக்கலைகின்ற பெருஞ்சந்தைகள் இரண்டு காணப்பட்டன. அவையாவன: (1) சுன்னாகம். (2) சங்கானை. இதனைவிட வெள்ளிக்கிழமைச்சந்தை முறை தென்மராட்சியிலுள்ள கொடிகாமத்தில் காணப்பட்டது. இந்த மூன்று சந்தைகளும் யாழ்ப்பாணக்குடாநாட்டின் பொருளாதாரத்தில் மிகமுக்கிய பங்கெடுத்திருந்தமையைக் காண்கின்றோம். மாட்டுவண்டி நிரைகள் இந்த மூன்று சந்தைகளுக்கும் இராப்பயணங்களை மேற்கொண்டு வாணிபப்பொருட்களை கொள்வனவு செய்து, யாழ்ப்பாண ஆயன் பட்டினத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ததன் பின்னர் கரையோரத் துறைமுகங்களில் உள்ள கிட்டங்கிகளிலிருந்து நெல்மூடைகளை தம்வாழ்விடம் நோக்கி ஏற்றிச்செல்வதனை அவை தமது ஜீவாதாரத்தொழில் முயற்சியாகக் கொண்டிருந்தன. இப்பின்னணியிலேயே தெரு மூடிமடங்கள் புத்துயிர்ப்பும், இயக்கமும் பெற்று, போத்துக்கீசர் காலத்திற்கும் முன்னருள்ள காலப்பகுதியில் சமூகத்திற்குப்
பெருஞ்சேவையை ஆற்றியிருந்தன.
கிராமச்சந்தை, கறிச்சந்தை (மீன்சந்தை), கோவிற்சந்தை, என்ற சொற்பிரயோகங்கள் யாழ்ப்பாணத் தமிழ்ப்பண்பாட்டில் பரந்து. விரிந்திருந்த வாணிப மையங்களின் தன்மையை எடுத்து விளக்குவனவாக உள்ளன. இவ்வாறு உள்நாட்டுச் சந்தைகளுக்கும், பின்னர் அங்கிருந்து பட்டணச்சந்தைகளுக்கும் இடையே வாணிப நடவடிக்கைகள் பெருகியிருந்த அக்காலகட்டத்தில் இத்தெருமூடிமடங்கள் மக்களுக்கும், வணிகருக்கும் பலத்தினையும் பாதுகாப்பினையும் நன்கு வழங்கியிருந்தன. கிராமங்களிலிருந்து பட்டணம் நோக்கிப் புறப்படும் பெண்கள் , முதியவர்கள், நோயாளிகள் அக்காலத்தில் கூடார வண்டில் அமைப்புடைய ஒற்றைத்திருக்கல், இரட்டைத்திருக்கல், கைத்திருக்கல் வண்டிகளையே போக்குவரத்தற்குரிய ஊடகமாகப் பெருமளவிற்குப் பயன்படுத்தியிருந்தனர். அவ்வாறான நிலையில் தெருமூடிமடங்கள் ஒரு சிறந்த ஆறுதல் தரும் அமைப்பாக, நிறுவனமாகத் தொழிற்பட்டிருந்தமையைக் காணமுடிகின்றது. பொதுவாகக் குறிப்பிடுவதானால் பட்டணத்தை நோக்கிப்புறப்படும் அனைவருக்கும் உரிய ஒரு கலங்கரை விளக்கமாக இத்தெருமூடிமடங்கள் பணியாற்றியிருந்தன என்றால் அக்கூற்று மிகப்பொருத்தமானதாகும்.
பேய்-பிசாசு பற்றிய மூடக்கொள்கைகள் மக்கள் மத்தியில் மலிந்திருந்த அக்காலத்தில், குறித்த நேர-காலப் பிரயாண நடவடிக்கைகளின் போது தடங்கல்கள் ஏற்பட்ட நிலையில் இத்தெருமூடிமடங்களே மக்களது பயத்தினையும் சோர்வையும் நீக்கி, ஆதரவளித்ததோடு, திருடர்களிடமிருந்து அவர்களது பொருட்களை அபகரிக்கும் நிலையை தவிர்த்து விட்டிருந்தது. இப்பங்களிப்புக்களுக்கு அப்பால் எம்முன்னோரது திருத்தல யாத்திரைகளின்போது அடியார்கள் தங்கி, இளைப்பாறிச் செல்லும் யாத்திரைத் தங்கு மடங்களாக இத்தெருமூடிமடங்கள் சேவையாற்றி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வலிகாமப்பரப்பில் இரு முக்கியமான தெருவீதி மடங்கள் மக்களது பொருளாதாரப்பண்பாட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெரும்பங்கு கொண்டிருந்தன. இன்று அவை மறைந்துபோய்விட்டமையைக் காண்கின்றோம். அவற்றில் ஒன்று உப்பு மடமாகும். மற்றையது பூதர் மடமாகும். கோண்டாவிலில் காணப்பட்ட உப்பு மடம் ஒல்லாந்தர் காலத்தில் அல்லது அதற்கும் முற்பட்டநிலையில் கோயிலாகவும் தேவை ஏற்படும்போது உப்புப் பரப்பப்பட்ட வாணிப மடமாகவும் மாறிமாறி தொழிற்பட்டிருந்து வந்தமையைக் காண்கின்றோம். போத்துக்கேயர் காலத்தில் உப்பு வாணிபம் நன்கு மேலோங்கியிருந்த முறையை கோண்டாவில் உப்புமடம் பற்றிய கதைமரபு எமக்கெடுத்துக்காட்டுகின்றது. இம்மடமானது பிள்ளையார் வழிபாட்டுக்குரிய மடாலயமாகவும், போத்துக்கேய அதிகாரிகளின் பிரசன்னம் ஏற்படும் சமயத்தில் பிள்ளையாரது திருச்சொரூபம் மறைக்கப்பட்ட நிலையில் உப்பு மூடைகள் பரப்பப்பட்டும், அதனை உலரவைக்கின்ற செயற்பாடுகள் போன்ற வாணிப நிகழ்வுகளும் அம்மடத்தில் இடம் பெற்றிருந்தன. பூதர் மடம் இன்று முழுவதுமாக அழிந்து விட்டது. இது கோப்பாய்க்கண்மையில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அணித்தாக பருத்தித்துறை பிரதான வீதியில் அமைந்திருந்தது. போக்குவரத்துத் தொடர்பான அல்லது பிரயாண வரி சேகரிக்கின்ற தொழிற்பாட்டை அல்லது யாழ்ப்பாண இராச்சியத்தின் இரண்டாவது தலைநகர் கோப்பாயில் அமைந்திருந்தமையின் பின்னணியில் பூதர்மடம் நிர்வாக முகாமைத்துவத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட வகையில் மக்களுக்கு சேவையாற்றியிருக்கலாம் எனக்கருதப்படுகின்றது. எவ்வாறெனினும் பூதர் மடப்பிரதேசம் இன்று தொல்லியல் அகழ்வாய்வுக்குரிய ஒரு மையமாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.
பூநாகர் மடம் என்ற புராதன மடமொன்றின் பெயர் இன்று திரிபடைந்து பூநாறி மடத்தடி என மக்களால் அழைக்கப்படுவதனைக் காண்கின்றோம். K.K.S பிரதான வீதியில் பெரியபுலத்திற்கு அணித்தாக ஆனைக்கோட்டையிலிருந்து வரும் ஓர் உபவீதி சந்திக்கின்ற மையத்தில் பூநாகர் மடம் அமைந்திருந்தது.
பூநகரியில் வாழ்ந்தவர்கள் பூநாகர் எனவும், குருணாகலில் வாழ்ந்தவர்கள் குறுநாகர் எனவும், வரலாற்றாசிரியர்களினால் விளக்கம் கொடுக்கப்படுவதனைக் காண்கின்றோம். அந்த அடிப்படையில் பூநாகர் மடமும் ஒரு தொன்மையான வரலாற்றுப்பின்னணியை கொண்டிருந்திருக்கவேண்டும் என்பது தெளிவாகின்றது.
பூநகரியார் மடமொன்று சிதம்பரத்திலுள்ளது போன்று பூநாகர் மடமும் (ஆனைக்கோட்டையில் வாழ்ந்தவர்களும் பூநாகர் இன மக்களாவார்) ஒரு தொன்மைவாய்ந்த நிலையில் மக்கள் பணியாற்றிய சேவாநிலையமாக பங்காற்றியிருந்திருக்கவேண்டும.
இவ்வாறான பண்பாட்டுப் வகைப்புலமுடைய தெருமூடிமடங்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து
இலங்கைக்கு வருகை தந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களினால் படிப்படியாக அழித்தொழிக்கப்பட்டது. குறிப்பாக போத்துக்கீசர் இலங்கையில் கிறிஸ்தவ மதத்தினைப் பரப்புவதில் அதிதீவிரமாகச் செயற்பட்டிருந்தனர். இவர்களே கடற்கரையோர மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் பண்பாட்டுக் கருëலங்களை முற்றாக அழித்தொழித்து, பழந்தமிழிற்;கும் இந்;து மதத்திற்கும் பேராபத்தினை விளைவித்திருந்தனர். தெருமூடிமடங்கள் காணப்பட்ட பிரதான வீதிகளின் மருங்கில் கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்து பண்பாட்டு மாற்றத்திற்கு வித்திட்டிருந்தனர். தற்போதும் ஆங்காங்கே காணப்படும் பழைய சுமைதாங்கிக்கல்லின் அருகாமையில் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்திருப்பது அக்கருத்தினையே
உறுதிப்படுத்தி நிற்கின்றது. மக்கள் கூடும் ஒன்றுகூடல் மையங்களை இலக்குவைத்து போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் முறையே கத்தோலிக்க, புரட்டஸ்தாந்துத் தேவாலயங்களை அமைத்திருந்தமையை யாழ்ப்பாணத்தில் இலகுவாக அடையாளம் காணமுடியும். ஒல்லாந்தர் காலத்தின் பிற்பகுதியில் வீதிகளின் புனரமைப்பின் போது சில தெருமூடி மடங்கள் மீண்டும் புனரமைப்புச் செய்யப்பட்டு, மக்களது பாவனைக்காக கையளிக்கப்பட்டமையைக் காண்கின்றோம். அவற்றுள் பல காலவெள்ளத்தில் பொருளாதார வாழ்க்கை மாற்றத்தினூடே, பராமரிப்பாரற்ற நிலையில் அழிவடைந்துவிட, ஒரு சில தெருமூடி மடங்கள் இற்றைவரைக்கும் பாதுகாக்கப்பட்டுக் கொண்டு வரப்படுவதனைக் காண்கின்றோம். பருத்தித்துறை – தும்பளை வீதியில் காணப்படும் தெருமூடி மடம் பூரணத்துவமான தோற்றத்தில் இற்றைவரைக்கும் இப்பிரதேச மக்களால் பேணிப்பாதுகாக்கப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றது. இதைப்போன்றே ஆனைக்கோட்டையிலிருந்த ஆறுகால்மடமும் அண்மைக்காலம் வரைக்கும் நிலைத்திருந்தமையைக் காண்கின்றோம். இவற்றைவிட மடம் என்ற ஈற்றுப்பெயர்கொண்ட பல்வேறு இடப்பெயர்கள் இன்றும் காணப்படுகின்றன. முத்தட்டு மடம்
அல்லது முத்தட்டி மடம், ஓட்டு மடம், கந்தர் மடம், மடமாவடி அல்லது முடமாவடி, மடத்துவாசல், நாவலன் மடம் (நாய் +  வேலர் + மடம் )  செட்டியர் மடம் ( அராலி )ஆகியன இற்றைவரைக்கும் எம்முன்னோரது தெருமூடி மடங்களின் அழிந்துபோன நிலையை எமக்கு நினைவூட்டுவனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறையிலுள்ள தெருமூடிமடமும் அதன் பிரதான இயல்புகளும்
பருத்தித்துறை – தும்பளை வீதியில் சிவன் கோவிலுக்கு அணித்தாக அமைந்துள்ள இத்தெருமூடி மடமானது பல்வேறு காலகட்டங்களில் திருத்தப்பட்டும் புதுப்பிக்கபட்டும் வந்துள்ளமையைக் காண்கின்றோம்.
அதன் தொன்மையான வடிவத்தினைக் கண்டு கொள்ள முடியாமலுள்ளது. தற்போதுள்ள கல்லால் அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியானது 150 வருடகாலப் பழமை மிக்கது என்பது குறிப்படத்தக்கது. திராவிடக்கலைப்பாணியில் அமைந்துள்ள அதன் அடித்தளம், தூண்கள், மற்றும் சுவர்ப்பாகங்கள் கட்டிடக்கலை ரீதியாக விரிவாக ஆராயத்தக்கதாகும். வெண்வைரச் சுண்ணக்கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்கள், அதன் கபோதங்கள், மற்றும் தளம் ஆகியன சிறந்த கொத்து வேலைப்பாடுகளைக் கொண்டிருப்பதனைக் காண்கின்றோம். “பொழிந்த வெண்வைரக்கற்சதுரங்கள்” பிரதான வீதியின் இருமருங்கிலுமுள்ள உயர்ந்த திண்ணை போன்ற தளத்திற்கு மிகவும் செம்மையான முறையில் பரவப்பட்டு, அடுக்கி ஒழுங்கமைக்கப்பட்ட முறையைப் பார்க்கும்போது அவற்றின் சிறப்புக்கூறுகள், அதன் நீண்டகாலப்பாவனை ஆகியன வெளிப்படுகின்றன.
இருபக்கத்திண்ணைகளிலும் கல் பரவப்பட்ட தளத்திலிருந்து நான்கு பக்கச் சதுரப்பட்டை அமைப்புடன் ஆரம்பிக்கும் கற்றூண்கள் அவற்றின் கூரையைத்தாங்கும் பகுதியில் தூண் கபோதத்துடன் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இருபக்கங்களிலும் எல்லாமாக 16 தூண்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஆறு தூண்களில் தமிழ் வரிவடிவில் சாசனங்கள் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டுக்குரிய
வரிவடிவ வளர்ச்சியை அச்சாசனங்களில் காணமுடிகின்றது. இச்சாசனங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளை அவற்றைப்படியெடுத்ததன்( Timestamps ) பின்னரே வெளிப்படுத்த முடியும்.
தூண்களின் அமைப்பு தனித்துவமானது. ஒற்றைக் கற்றூண்களாக காணப்படும் இவை நடுவில் எண்பக்கப் பட்டையுடனான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தூணின் கபோதம் உட்பட முழுத் தோற்றமுமே பல்லவர் கலை மரபினைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள முறையைக் காண்கின்றோம். இத்தெருமூடி மடத்தினது இரு புறங்களிலும்  உயர்ந்த மேடைபோல் காணப்படும் இருபக்கத்திண்ணைகளினதும் வெளிப்புறச்சுவர்கள் சுண்ணச் சாந்தினால் கட்டப்பட்டவையாக உள்ளன. இவ்விரு திண்ணைபோன்ற தளத்தின் அகல—நீளமானவை தூரப்பார்வைக்கு யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் நடுமண்டபத்திற்கு இருமருங்கிலும் காணப்படும் நடைமண்டபமாக (Isles ) தோற்றமளிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தெருமூடிமடத்தினது மேற்கூரையானது தூண்களின் கபோதத்திலிருந்து  இருபக்கங்களிலும் சமாந்தரமாக மேலெழுப்பப்பட்டுள்ள ஓர் அரைச்சுவரின் மீது அமைக்கப்பட்ட விட்டத்துடன் கூடிய ஒரு சட்டகக்கோப்பினால் தாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறையினால் இத்தெருமூடி மடத்தூடான வாகனப் போக்குவரத்து நடைமுறைகளுக்கு அந்த உயர்ந்த கூரை எவ்விதத்திலேனும் தடையாகவோ, இடைங்சலாகவோ அமையாது ஒரு பொலிவான தோற்றத்தினை தூரப்பார்வைக்கு வழங்குவதனைக் காண்கின்றோம்.
இத்தெரு மூடிமடத்தின் இருபக்க மண்டபங்களினதும் மேற்கூரை தட்டையானதாக (Flate) அமைக்கப்பட்டுள்ளது. நீள்சதுரக் கூரையமைப்பின் தட்டையான பரப்பினை உருவாக்குவதற்கு நீளமான வெண்வைரக் கற்பலகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்கற் பலகைகளுக்கு மேல் சுண்ணச்சாந்து இடப்பட்டு, நீர் கசியாதவாறு வெகுகச்சிதமாக அக்கூரையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உயர்ந்துள்ள பிரதான நடுக்கூரையின் இருபக்கங்களிலும் காணப்படும் இத்தட்டையான இருகூரைத்தட்டுக்களின் கூரை முகப்புக்கள்  இரு முனைகளிலும் வெளியே தெரியாதவாறு பக்கவாட்டாக அவ்வவற்றின் முகப்பில் எழுப்பப்பட்ட கபோதத்தின் மீதான குறுக்கு அரைச்சுவர்களினால் மறைக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது. ஒட்டுமொத்தத்தில் கட்டிடக்கலை ரீதியாக நோக்கும்போது யாழ்ப்பாணத்திற்கேயுரிய திருப்பணிக்கல்– கட்டிடக்கலை மரபும் கிறிஸ்தவ கட்டிடக்கலை மரபும் ஒன்றிணைந்த வகையில் மீளுருவாக்கம் பெற்றதாகவே இத்தெருமூடி மடத்தினைக் கொள்ள வைக்கின்றது.
இன்றைய நிலையில் இத்தெருமூடி மடத்தொடு இணைந்திருந்த சுமைதாங்கிக்கல், ஆவுரஞ்சிக்கல், துலாக்கிணறு மற்றும் நீர்த்தொட்டி( கற்தொட்டி) ஆகியன முற்றாகச் செயல் இழந்த நிலையிலேயே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணக்குடாடு பரவலாகக் காணப்படும் சுமைதாங்கிக்கற்களும், ஆவுரங்சிக்கற்களும் “றோட்டுக்கரைப் பிள்ளையாரைப்” போன்று “சும்மா” வீற்றிருக்கின்ற வகையைக்காண்கின்றோம். ரயர்– ரிய+ப் ஒட்டுகின்ற  புத்திசாலிகளான சில கடைக்காரர்கள்  இவ்வாறு சும்மா கிடக்கும் கற்தொட்டிகளை நகர்த்திச்சென்று தமது தொழிலகங்களில் நீர்தாங்கியாக உபயோகிப்பதனையும் காண்கின்றோம். பித்தளைக்குத்துவிளக்குகள்  வெளிநாடுகளிலுள்ள எம்மவர் மத்தியில் Ash tray ஆகப்பயன்படுத்தப்படுவது போன்று யாழ்ப்பாணத்திலும் கலாச்சாரப்பிறழ்வுகள் மேலோங்கி வருகின்றன.
இன்றைய நிலையில் இத்தெருமூடி மடத்தினை இணைத்துள்ள ஒரேயொரு பயன்பாட்டு வெளிப்பாடு ஆடு—மாடுகளின் மற்றும் கட்டாக்காலி நாய்களின் இராத்தங்கும் ஓர் ஆரோக்கியமான மையமாக மட்டுமே காணப்படுவதாகும்.தமிழரது பண்பாட்டின் கால ஓட்டத்துடனான பண்பாட்டு விரிசல்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற இக்காலகட்டத்தில் இச்சின்னங்களை பராமரித்து கட்டிக்காத்து வைத்திருக்க வேண்டிய அடுத்த தேவை என்ன என்பது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு எம்மால் விடையளிக்க முடியாதுள்ளது. இந்துப்பண்பாட்டு மரபில் குறிப்பாக,  யாழ்ப்பாணத்து சுதேசிய கிராமிய வழமைகளிலும், மனித உறவுகளிலும் ஏற்பட்ட மிகப்பாரிய விரிசல்களாலும்,   மற்றும் அன்னியப் பண்பாட்டுத் தாக்கங்களினாலும்,  பொருளாதாரத்தில், யாழ்ப்பாணத்து உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தாக்கங்களினால் எம்மவர் மத்தியில் ஏற்பட்ட வாழ்க்கை நிலையாமை போன்ற உளவியற் தாக்கங்கள் ஊடே உருவான மாற்றங்களினாலும் எமது பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்கள், உடையணியும் மரபுகள் மற்றும் இறப்புப் பிறப்புத் தொடர்பான வழமைகள் சடங்குகள் மரபுகள் யாவும் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தை கைவிட்டு மறைந்து சென்றமையின் பின்னணியில், தெருமூடிமடங்கள் ஆற்றிய சேவை இன்று எமக்கு தேவையற்றனவாக, இன்றைய யாழ்ப்பாணத்துப் பண்பாட்டிற்கு அன்னியமானவையாக அமைந்து விட்டதைக் காண்கின்றோம். இன்ரநெட்டின் அறிமுகத்துடன் பூகோளமயமாதல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் மேலோங்கிவிட்டது. இத்தொழிற்பாட்டின் பின்னணியில் மரபுகளும், பாரம்பரியங்களும் வலுவற்றவையாக ஓர் இனத்தின் அடையாளத்தை நிர்ணயம் செய்ய வலுவற்ற ஒரு நிலைக்குள்ளாக்கப்பட்டமையை காணலாம். யாழ்ப்பாணத்து பூகோளமயமாதலின் பின்னணியில் அதிவேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களுள் ஒன்றாக நித்திய சுமங்கலிகள் சங்கம் தோற்றமளிப்பது குறிப்பிடத்தக்கதாகும். சமூகத்தின் பல மட்டங்களிலும் இந்நிலை விரைவான வளர்ச்சி கண்டு வருகின்றமை யாழ்ப்பாணத்து அடையாளத்தை குசநந ளுழஉநைவல ஆக மாற்றிவிடும் விரைவான மாற்றத்தினைச் சுட்டி நிற்கின்றது எனலாம். நெருங்கிவரும் அடுத்த கட்டப் போரும் சிவந்த மண்ணாக ( The land the red light area) எமது பூமியை மாற்றுவதற்கு அறை கூவல் விடுவதனையும் நாம் செவிமடுக்காமலில்லை.
%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%
நன்றி-      பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா.,
வரலாறு—தொல்லியல் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.