Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளை விட்டுச்சென்றவர்

ஜெயமோகன்

jayakand_1.jpg

ஜெயகாந்தன் மறைந்தார். எழுத்தாளனின் மறைவு என்பது ஒரு தொடக்கம். அவனை முழுமையாக தொகுத்துக்கொள்ள, அனைத்துக்கோணங்களிலும் அவனுடைய பங்களிப்பைப்பற்றி அறிய அது ஒரு வாய்ப்பு. அத்தனை பேரிலக்கியவாதிகளும் இறந்தபின்னர் உயிர்த்தெழுபவர்கள்தான். ஜெயகாந்தனை இன்று ஒரே வீச்சில் எப்படித் தொகுத்துக்கொள்வேன்?

நமக்கு சங்ககாலத்திற்குப்பிறகு இலக்கியவாதி என்ற அடையாளம் மட்டும் கொண்ட பெரிய ஆளுமைகள் இல்லாமலாயினர். இலக்கியமும் மதமும் ஒன்றாக ஆயிற்று.நாயன்மார்களோ சேக்கிழாரோ ஆழ்வார்களோ கம்பனோ மதம் சார்ந்த மரியாதையையே பெற்றனர். மற்றபடி இலக்கியவாதிகள் என்றால் அதிகாரத்தை அண்டிப்பிழைப்பவர்கள், பரிசில் வாழ்க்கை வாழ்ந்த மொழிநுட்பத் திறனாளர்கள். இலக்கியவாதி என்பவன் பிரபுக்களின் அவையிலுள்ள பலரில் ஒருவன் என்ற எண்ணமே மக்களிடமும் இருந்தது

இந்த மனநிலை காரணமாக இங்கு இலக்கியவாதிக்கு மதிப்பு இருந்ததில்லை. இங்கே ஜனநாயகமும் நவீனக்கல்வியும் வந்தபோது நவீன இலக்கியமும் உருவாகியது.நவீன எழுத்தாளன் பிரபுக்களின் தாசன் அல்ல, அவன் மக்களை நோக்கிப் பேசுபவன்,. அவர்களின் கனவுகளை சமைப்பவன், இலக்குகளைச் சுட்டிக்காட்டுபவன், தன் காலகட்டத்தில் அவன் தனித்தவன், முன்னால்செல்பவன் என்ற நிலை உருவானது.

’கேளடா மானுடா’ என்று பீடத்தில் ஏறி நின்று பாடிய பாரதி அந்த வகையில் தமிழுக்கு முதன்மையான நவீன இலக்கியவாதி. அரச அவையைத் துறந்து இதழியல் நோக்கி அவர் போனதே அவ்வகையில் ஒரு பெரிய குறியீடு. ஆனால் அவரைப் புரிந்துகொள்ளாமல் அவமதித்துத் துரத்தியது தமிழ்ச்சமூகம்.

அந்த இழிவு என்றும் இங்கு எழுத்தாளர்களுக்கிருந்தது. ஜனநாயகத்தின் வழியாக உருவாகிவந்த புதிய அரசர்களான அரசியல்வாதிகளுக்கு, நவீனத் தொழில்நுட்பம் மூலம் உருவாகிவந்த புதிய தெய்வங்களான நடிகர்களுக்கு இருந்த இடத்தை தமிழகம் எழுத்தாளர்களுக்கு அளித்ததில்லை- இன்னும் அளிக்கவில்லை

அத்தகைய சூழலில் தமிழ் எழுத்தாளனின் முகமாக தருக்கி நிமிர்ந்து நிற்க, சமூகத்தை நோக்கி கைசுட்டிப் பேச, எழுத்தாளனுக்குரிய வாழ்க்கையை வாழ துணிவுகொண்டவர் ஜெயகாந்தன். எழுத்தன்றி எந்தத் தொழிலும் செய்யமாட்டேன் என அவர் எடுத்த முடிவு, எந்நிலையிலும் கலைஞனாக மட்டுமே வாழ்வேன் என அவர் கொண்ட உறுதி அவரை தனித்து நிறுத்தியது. அவருக்கிருந்த இடதுசாரிப்பின்புலமும் வங்காளத் தொடர்புகளும் அதற்குக்காரணமாயின. அவர் அவ்வகையில் ஒரு முன்னோடி. ஒரு அடையாளம். நவீனத்தமிழிலக்கியத்தின் பதாகை.

இரண்டாவதாக, இங்கே முற்போக்கு இலக்கியம் உருவானபோது அதன் குரலாக எழுந்துவந்தவர் அவர். இந்தியாவெங்கும் முற்போக்கு என்னும் மார்க்ஸிய அடிப்படைகொண்ட இலக்கியம் மரபை முழுமையாக நிராகரிப்பதாக, இந்திய எதிர்ப்பும் ஐரோப்பிய வழிபாடும் கொண்டதாக, இருந்தபோது ஜெயகாந்தன் இந்தியாவின் ஞானமரபிலிருந்த சாராம்சமான விஷயங்களுடன் மார்க்ஸியத்தை இணைக்கமுயன்றார். மார்க்ஸியம் இந்தியாவின் ஞானமாக ஆகவேண்டுமென கனவுகண்டார்

ஆகவே அவருக்கு மார்க்ஸ் அளவுக்கே விவேகானந்தரும், வள்ளலாரும், முதன்மையானவர்களாக இருந்தார்கள். வள்ளுவரும் தாயுமானவரும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். அவர்களை இடதுசாரி மேடைகளில் முன்வைக்க அவரால் முடிந்தது. பொருள்முதல்வாதமான மார்க்ஸியம் மரபின் ஆன்மீகசாரத்தை இழந்துவிடலாகாது என்ற அவரது அறிவுறுத்தல் இன்றும் இடதுசாரிகள் முன் நின்றுகொண்டிருக்கிறது. இந்தியாவின் முற்போக்கு எழுத்தாளர்களிடையே ஒரு கோட்பாட்டாளராக ஜெயகாந்தன் முதன்மையானவர் என்று இந்த ஒருகாரணத்தாலேயெ துணிந்து சொல்லமுடியும்

ஒரு படைப்பிலக்கியவாதியாக, கலைஞனாக, ஜெயகாந்தனின் பங்களிப்பு என்ன? சென்ற தலைமுறையைச்சேர்ந்த ஜெயகாந்தனின் தீவிர வாசகர் ஒருவர் சொன்னார். ‘என் சொந்த வாழ்க்கையைப்பற்றி நானே முடிவெடுக்கலாம், அதற்கான உரிமையும் பொறுப்பும் எனக்கு உண்டு என்று எனக்கு ஜெயகாந்தனின் எழுத்துக்கள் கற்பித்தன’ இன்று சிந்தித்தால் வேடிக்கையாக இருக்கும். ஆனால் சாதி, மதம், சமூகக்கட்டுப்பாடுகளைக் கடந்து ‘நான் சிந்திக்கிறேன்’ என ஒவ்வொரு வாசகனையும் உணரச்செய்தவை அவரது படைப்புகள்.

அவை பிரபல இதழ்களில் அன்று வந்தன. பல லட்சம் வாசகர்களை நேரடியாகச் சென்றடைந்தன. அவர்கள் வாசிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கு என நம்பியிருந்தவர்கள். அவர்களின் பிடரியில் அறைந்து சிந்தித்துப்பார் என்று ஜெயகாந்தனின் கதைகள் சொல்லின. தன்னிடம் விவாதிக்க அறைகூவிக்கொண்டே இருந்த எழுத்தாளர் அவர். இந்தக்காரணத்தால் அவரது எழுத்துக்கள் சற்று உரத்தகுரல் கொண்டவை, கதாபாத்திரங்களும் ஒற்றைப்படையானவையாக அமைந்தன. ஆனால் அவை தமிழ்ச்சமூகத்தை சில அடிப்படை வினாக்களை நோக்கிக் கொண்டுசென்றன

அவரது முக்கியமான கதாபாத்திரங்கள் அறிவார்ந்தவர்கள். அவர் வாழ்ந்த காலகட்டத்தின் பிரச்சினைகளை தாங்களும் ஏற்றுக்கொண்டவர்கள். அந்தக்கதாபாத்திரங்கள் வழியாக வாசகனை அந்தரங்கமாக, தனக்குள் சிலவற்றைக் கேட்டுக்கொள்ள வைத்தார் என்பதே அவரது வெற்றி. அந்த வினாக்கள் மூலம் அவன் மானுட சமத்துவத்தை, ஒருங்கிணைந்த மானுட விடுதலையை நோக்கி வரச்செய்தார். அரைநூற்றாண்டுககலம் இடதுசாரி இலட்சியங்களின் குரலாக இங்கே அவரால் ஒலிக்கமுடிந்தது.

அவரது படைப்புகளின் தலைப்புகள் மேலும் படைப்பூக்கம் கொண்டவை. ’புதியவார்ப்புகள்’, ’சமூகம் என்பது நாலுபேர்’, ’அந்தரங்கம் புனிதமானது’, ’சிலநேரங்களில் சிலமனிதர்கள்’ ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ”எத்தனைகோணம் எத்தனை பார்வை, எங்கோ யாரோ யாருக்காகவோ’ முன்நிலவும் பின்பனியும்’ போன்ற வரிகள் தமிழின் மிகச்சிறந்த கவிதைவரிகளுக்கு நிகரானவை. அவை அப்படைப்புகளின் சாரமாக வாசகன் உள்ளத்தில் வாழ்நாள் முழுக்க நீடிப்பவை

இடதுசாரி எழுத்தாளர் என்றாலும் அவர் வன்முறையை முழுமையாக நிராகரித்தவர். வன்முறை மானுட ஆழத்திலுள்ள புன்மையைத்தான் வெளியே கொண்டுவரும் என நினைத்தார். ஆகவே மார்க்ஸை ஏற்றதுபோலவே அவர் காந்தியையும் ஏற்றுக்கொண்டார். காந்திக்கும் மார்க்ஸுக்குமான அனைத்து முரண்பாடுகளையும் ஜெயகாந்தன் அறிந்திருந்தார். ஆனால் மானுடவிடுதலை என்ற புள்ளியில் அவர்களை ஒருங்கிணைக்கமுடியும் என்று அவர் எண்ணினார்

அதுதான் ஒட்டுமொத்தமாக அவரது பங்களிப்பு. ஒரு தத்துவஇணைவு. ஒரு மகத்தான உரையாடல். அவர் விட்டுச்சென்றுள்ள கனவு அதுதான்.

[தமிழ் இந்து வெளியிட்ட கட்டுரை, 10-5-2015]

http://www.jeyamohan.in/73928#.VS1jaOl0yM8

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ் எழுத்தாளரின் இறுதிச் சடங்கு – (ஜெயகாந்தன் அஞ்சலி)

சுகா

jeyakanthan.jpg

‘பதின்வயதுகளில் அவரது எழுத்துகளைப் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை அவர் என்னோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். இனியும் உரையாடுவார். மரணத்தின் மூலம் நிச்சயமாக எங்கள் உரையாடல் தடைபடாது’.

ஜெயகாந்தனின் மரணச்செய்தி கிடைத்த நிமிடத்தில் என் மனதில் தோன்றியது இதுதான். செய்தி கிடைத்த அரைமணிநேரத்தில் நானும், நண்பர் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜேகே இல்லத்தில் இருந்தோம். உள்ளே சென்று கண்ணாடிப் பெட்டிக்குள் கண் மூடி படுத்திருந்தவரை சில நிமிடங்கள் பார்த்து விட்டு வெளியே வந்து நின்று கொண்டோம். மனநல மருத்துவர் ருத்ரன், கவிஞர் இளையபாரதி உட்பட ஒரு சிலரே அங்கிருந்தனர். ஜெயகாந்தனை ‘அப்பா’ என்றழைக்கும் நண்பர் அன்பு அவர்களில் ஒருவர். ஒன்றிரண்டு ஊடகத் தோழர்கள் வந்தனர். ராமகிருஷ்ணனிடம் பேசச் சொல்லி மைக்கை எடுக்க முனைந்த போது ‘வேண்டாம்’ என்று மறுத்தார், ராமகிருஷ்ணன்.

‘ஏன் ராமகிருஷ்ணன்? பேச வேண்டியதுதானே! ஜே.கேயப் பத்திப் பேசறதுக்கு எவ்வளவோ இருக்கே?’

‘இல்லீங்க. எங்கெ வச்சு பேசறதுன்னு இருக்குல்ல! இந்த இடத்துல அவர் பேசித்தானே நாம கேட்டிருக்கோம்! இன்னிக்கு அவர் போயிட்டாருன்ன உடனே நாம பேசலாமா? வேண்டாம்’ என்றார்.

சில நிமிடங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். நாகூர் ஹனீஃபாவின் உடலுக்கு மரியாதை செய்து விட்டு வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஜே.கேயின் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தவரை நோக்கி, தயாராக நின்ற மைக்குகள் நீட்டப்பட்டன. மங்கிய குரலில் சம்பிரதாயமான சில வார்த்தைகள் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

‘நெக்ஸ்ட் யார் வருவாங்கன்னு தெரியலியே! அதுக்குள்ள இந்த பைட்ஸை அனுப்பிடலாம்’.

‘காலைல ஹெவி ஒர்க் இருக்கு. நெறய கவர் பண்ணனும்.’

‘என்னாலல்லாம் ஃபுல் நைட் ஸ்பென்ட் பண்ண முடியாதுடா. சொன்னேன்ல, நாளைக்கு என்ன ப்ரோக்ராம்னு!’

‘மச்சான்! ஒரு டீ அடிச்சுட்டு வந்திரலாமா?’

ஒரு ஆட்டோவில் வந்திறங்கிய ஒரு மூதாட்டியை கையைப் பிடித்து அழைத்து வந்தனர். ஆட்டோவிலிருந்து இறங்கியதிலிருந்தே ‘காந்தா காந்தா! இனிமெ ஒன்ன நான் எங்கெ பாப்பேன்’ என்று கதறி அழுதபடியே வீட்டுக்குள்ளே சென்ற அந்த அம்மாள், ஜெயகாந்தனின் சகோதரியாக இருக்கலாம். உள்ளே சென்ற அந்தப் பெண்மணியின் அழுகைக் குரல், வெளியே இருந்த அனைவரையும் கலங்கடித்தது.

நள்ளிரவில் ஜே.கே வீட்டு வாசலில் நின்றபடியே பேசிக்கொண்டிருந்த என்னையும், ராமகிருஷ்ணனையும் பார்த்து ஜே.கேயின் இளையமகள் தீபா, ‘எவ்ளோ நேரம் ஸார் நின்னுக்கிட்டு இருப்பீங்க? இந்தாங்க, முதல்ல டீ சாப்பிடுங்க’ என்று நாற்காலிகளை எடுத்துப் போட்டார். நான் ‘தவறுகள் குற்றங்கள் அல்ல’ பற்றியும், ராமகிருஷ்ணன் ‘எங்கோ, எப்போதோ, யாருக்காகவோ’ பற்றியும் பேசிப் பேசி நள்ளிரவைக் கழித்தோம். இளையபாரதி, அவருக்கும், ஜெயகாந்தனுக்குமான உறவைப் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். தனது அபிமானி ஒருவருக்கு தன் தலைமையில் திருமணம் செய்து வைத்து, மணமக்களை ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் உட்கார வைத்து ஜெயகாந்தனே அந்த சைக்கிள் ரிக்ஷாவை ஓட்டி வந்தது உட்பட இன்னும் பல சம்பவங்களை நினைவு கூர்ந்தார், இளையபாரதி.

‘வீட்டுக்குப் போயிட்டு சட்டையை மாத்திட்டு வந்திரலாம்’.

கிளம்பும் முன் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது ஜே.கே உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் சொல்லாமல் சென்று வந்து விடலாம் என்றுதான் தோன்றியது.

காலையில் சென்றபோது எதிர்பார்த்த மாதிரியே ஜெயகாந்தன் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைய முடியவில்லை. வாசலை மறைத்தபடி மைக்குகள், கேமராக்கள். அரசியல் கட்சித்தலைவர்கள் அணிவகுத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், ரங்கராஜன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்(அதுதானே?) தலைவர் ஜி.கே.வாசன், பீட்டர் அல்ஃபோன்ஸ், திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பலர் வந்தனர். ஜெயகாந்தனை வாழ்நாளெல்லாம் திட்டித் தீர்த்தவர்கள் உட்பட, அதுவரை பார்த்தறியாத பல முகங்களைப் பார்க்க முடிந்தது. முதுபெரும் எழுத்தாளர் கோவி மணிசேகரன் வந்து கதறி அழுதார். கவிஞர் நா. காமராசன் கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டார். கவிஞர்கள் முத்துலிங்கம், மு.மேத்தா, பழநிபாரதி வந்தனர். நேருக்கு நேராக முதன்முறையாக கவிஞர் போகனைப் பார்த்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நானாகப் பேசியிருக்கலாம். ஆனால் அந்த இடம் முதல் சந்திப்புக்கான இடமாகத் தோன்றவில்லை. தவிர, பார்த்த மாத்திரத்தில் ஜெயகாந்தனை மறந்து விட்டு ஜெயமோகனைத் திட்டுகிற அவரது அன்றாடப் பணியைச் செய்து விட்டால் எப்படி சமாளிப்பது என்கிற யோசனையும் அவரிடம் பேசவிடாமல் தடுத்தது. திரைப்பட இயக்குனர்கள் லிங்குசாமியும், சீனு ராமசாமியும் வந்தனர். சீனு கூட்டத்துக்குள் என்னைப் பார்த்து, ‘அண்ணே! நீங்களும் கூட வாங்க’ என்று இழுத்துச் சென்றான். கோவையிலிருந்து சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா வந்திருந்தார். ‘பெசன்ட் நகர்ல தகன ஏற்பாடுகள கவிஞர் செஞ்சுக்கிட்டிருக்காரு’ என்றார். சொல்கிறவர் மரபின் மைந்தன் என்பதால் அவர் சொன்ன ‘கவிஞர்’ ‘கவிப்பேரரசு வைரமுத்து’ என்று புரிந்து கொண்டேன். ஜெயகாந்தனின் பதிப்பகத்தார் விஜயா பதிப்பகம் வேலாயுதம், கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் மற்றும் காந்தி கண்ணதாசன் போன்றோர் வந்திருந்தனர். தி ஹிந்துவில் ஜெயகாந்தனுடனான தனது அனுபவங்கள் குறித்து கட்டுரைத் தொடர் எழுதி வருகிற பி.ச.குப்புசாமி ஐயா அதிகாலையிலேயே திருப்பத்தூரிலிருந்து வந்திருந்தார். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர் முகத்தில் கலக்கமில்லை. ஜே.கேயை நல்ல படியாக அனுப்பி வைக்க வேண்டுமே என்கிற கவலையும், பொறுப்பையும் மட்டுமே அவரிடம் பார்க்க முடிந்தது. குப்புசாமி ஐயாவிடம் மட்டுமல்ல. ஜே.கேயின் நெருக்கமான நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்த கே.எஸ், மணி, கணையாழி இதழின் ஆசிரியர் மா.ராஜேந்திரன் போன்றோரிடமும் இந்த உணர்ச்சிதான் தென்பட்டது. ஜே.கேயின் தீவிர அபிமானியான கலை இயக்குனர் ஜே.கே தன் குடும்பத்துடன் வந்திருந்தார்.

திடீரென்று சஃபாரி உடையணிந்த ஒரு சிலர் வந்து கையில் இஞ்ச் டேப்புடன் ஜே.கேயின் வீட்டுக்குள் செல்லும் நடைபாதையின் நீளம், அகலத்தை அளந்தனர். சிறிது நேரத்தில், மரத்தினாலான தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. தனது மகள் கவிஞர் கனிமொழியுடன், கலைஞர் கருணாநிதி வந்தார். ஜெயகாந்தனின் உடலருகே கலங்கிய முகத்துடன் சிறிது நேரம் இருந்து விட்டுக் கிளம்பிச் சென்றார்.

‘இந்த மனிதரை நமக்குப் பிடிக்கலாம். பிடிக்காம போகலாம். ஆனா, ஆயிரந்தான் சொல்லுங்க. இந்த மாதிரியான அடிப்படையான மரியாதைகள்ல இந்தாள அடிச்சுக்க முடியாதுங்க’.

பின்னால் அமர்ந்திருந்த யாரோ சொல்வது கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அந்தக் குரலுக்கான முகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில நொடிகளில் அந்தக் குரல் என்னுடையது போலத் தோன்றியது.

திரைப்பட நடிகர்களில் நான் பார்த்தவரைக்கும் நாசர், பிறகு சிவகுமார், அப்புறம் கமலஹாசன் போன்றோர் வந்தனர். சிவகுமார் அஞ்சலி செலுத்த வந்த போது, ‘நெறய ஃபுட்டேஜ் குடுப்பாருப்பா. நல்ல மனுஷன்’ ஊடகத் தோழர்கள் மத்தியில் அத்தனை திருப்தி.

ஜெயகாந்தனின் வீடு அமைந்திருக்கும் தெரு ஓரங்களில், சுவர்களில் பல சிறுவர்கள், இளைஞர்கள்.

‘ரஜினி வருவாராடா?’

‘ஏன்டா? கமல் வந்தா, ஒடன்னே ரஜினியும் ஒனக்கு?’

‘விஜய் வருவாருன்னு சுந்தர் சொன்னான் மச்சான்’.

‘விஜய் சேதுபதி வந்தா ஃபோட்டோ எடுக்கலான்டா’.

‘டேய்! இவனப் பார்றா. அமலா பால் கூட ஃபோட்டோ எடுக்கணுமாம்’.

தொடர்ந்த வேடிக்கைப் பேச்சுகள், சிரிப்பு.

ஊடகத்தில் இருக்கும் இளைஞர்கள் சிலரே இந்த அளவில்தான் இருக்கிறார்கள். ‘இவர் யார் ஸார்? இவர் யார் ஸார்?’ என்று வரிசையாக ஒவ்வொருவரையாகக் காட்டிக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் ஊடக இளைஞரிடம், ‘பிரதர்! உங்களுக்கு ஜெயகாந்தன் யாருன்னு தெரியுமா?’ என்று கேட்டேன். ‘ஸார். ஃபிராங்கா சொல்றேன்.ரைட்டர்னு தெரியும். அதுக்கு மேல எதுவும் தெரியாது’ என்றார்.

திரைப்பட நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு, வழக்கறிஞர் சுமதி, எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, இரண்டு தலைமுறையாக ஜெயகாந்தனுடன் உறவாடி வரும் படத்தொகுப்பாளர் பி.லெனின், எழுத்தாளர் திருமதி சிவகாமி, கவிஞர் இளம்பிறை போன்றோரும் வந்து ஜே.கேயின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

நண்பர் ஜெயமோகனால் வர இயலவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். முதல் நாள் இரவு எனக்கு செய்தி கிடைத்த உடனேயே அவருக்கு தகவல் சொல்லியிருந்தேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் யாராவது வந்து மரியாதை செய்தார்களா என்று தெரியவில்லை. பரவலாக அறியப்படாத எத்தனையோ எழுத்தாளர்களைத் தேடிப் பிடித்து கௌரவித்து விருதளிப்பதைக் கடமையாகச் செய்கிற அவர்கள், ‘ஆசான்களின் ஆசான்’ ஜெயகாந்தனுக்கு மரியாதை செய்யாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

வெற்றிமாறன் ஃபோன் பண்ணினான்.

‘அண்ணே! இப்பதாண்ணே எனக்குத் தெரியும். அங்கெதான் இருக்கீங்களா? கிளம்பி வரட்டுமா?’ என்றான்.

‘3 மணிக்கு எடுப்பாங்க. அதுக்குள்ள வா’ என்றேன்.

ஆங்கில இலக்கியம் படித்த வெற்றிமாறனுக்கு ஜெயகாந்தன் மேல் பெரிய மரியாதை வரக் காரணமாக இருந்தவர், அவனது தாயார். கூடவே ஜே.கேயின் தீவிர வாசகரும், நண்பருமான வாத்தியார் பாலுமகேந்திரா. தான் காலமாவதற்கு சில தினங்களுக்கு முன், ‘ஜே.கேயைப் பாக்கணும் போல இருக்கு. என்னைக் கூட்டிட்டுப் போயேன்’ என்று கேட்டிருந்தார். அவர் கேட்டு என்னால் செய்ய முடியாமல் போனதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தேன். இப்போது ஜே.கேயே வாத்தியாரைப் பார்க்கக் கிளம்பிச் சென்று விட்டார்.

தனது இறுதி யாத்திரைக்கு ஜே.கே கிளம்பியபோது, வாசலுக்கு அவர் மனைவியும், கௌசல்யா மாமியும் அழைத்து வரப்பட்டனர். மாமியின் முகத்தில் உணர்ச்சியில்லை. ‘பத்திரமா போயிட்டு வாங்க, ஜே.கே’ என்று சொல்வது போல அமைந்திருந்தது அவரது முகம்.

பெசன்ட் நகர் மின்மயானக்கட்டிடத்தின் வாசலிலேயே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செந்தில்நாதன் உட்பட அதன் நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். ஜே.கேயின் நெருங்கிய நண்பரான தேவபாரதியை இரண்டு பேராகச் சேர்ந்து பிடித்தபடி அழைத்து வந்தார்கள். மின்மயானத்துக்கு ஜே.கேயின் மகள்கள் இருவரும் வந்தனர். கவிஞர் வைரமுத்து அங்கே ஏற்கனவே வந்துக் காத்திருந்தார். ஜே.கே யின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு ஓரமாகக் கைகட்டி நின்று கொண்டார். வழக்கறிஞர் அருள்மொழி, பவா செல்லத்துரை, ஷைலஜா, பாரதி கிருஷ்ணகுமார் போன்றோரும் வந்து சேர்ந்தனர். ரஷ்யன் கான்ஸலேட்டிலிருந்து சூட் அணிந்த ஒருவரும், ஒரு பெண்மணியும் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். மின் தகனத்துக்கு ஜே.கே தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் உரத்த குரலில்

‘வேற்று விகார விடக்குடம்பினுட்கிடப்ப

ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே’

என்று சிவபுராணம் பாடிக் கொண்டிருந்தார்.

எல்லா சடங்குகளையும் படம்பிடித்துக் கொண்டிருந்த கேமராக்கள் மின் தகனத்துக்குச் செல்ல இருக்கும் கடைசி நிமிடத்தையும் சுற்றி நின்று பதிவு செய்து கொண்டிருந்தன. மின் மேடைக்கருகே ஒரு சிலர் கடைசியாக ஜே.கேயின் முகத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் ஏறினர்.

‘நாமளும் போகலாமா?’ என்று ராமகிருஷ்ணனிடம் கேட்டேன்.

‘வேண்டாம். நமக்குத் தாங்காது’ என்றார் ராமகிருஷ்ணன்.

‘சரிதான். வாத்தியார் விஷயத்துல இதுதான் ஆச்சு’.

அங்கேயே நின்று கொண்டோம். பி.ச. குப்புசாமி ஐயாவை லண்டனிலிருந்து ஜே.கேயின் அபிமானியும், ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் எழுதிய கதைகளை அழகாகத் தொகுத்து சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டவருமான டாக்டர் ராம் கைபேசியில் அழைத்தார். ‘வணக்கம். . . ஆமா . . . ஜே.கே கிளம்பிட்டார். . . இப்பதான் புறப்பட்டு போனார்’ என்றார், குப்புசாமி ஐயா. அத்தனை நேரம் ஜே.கேயின் மரணத்தை எளிதாக எடுத்துக் கொண்டு உறுதியாக இருந்த என்னை பி.ச.குப்புசாமி ஐயாவின் இந்த வார்த்தைகள் அசைத்து விட்டன. உள்ளே பெரும் கூக்குரல்கள் கிளம்பின. ஒரு வயதான இஸ்லாமியர் கண்களைத் துடைத்துக் கொண்டு கதறி அழுதபடியே வெளியே வந்தார். எனக்கு கண்கள் கலங்கத் துவங்கின. ‘ராமகிருஷ்ணன். இனி நம்மால தாக்குப் பிடிக்க முடியாது. வாங்க வெளியே போயிருவோம்’ என்று சொல்லியபடி, சட்டென்று வெளியே வந்து விட்டேன்.

பவா செல்லத்துரையின் தலைமையில் அங்கேயே ஓர் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே பேசுவதற்கு மறுத்து வந்த ராமகிருஷ்ணன் அப்போதும் பேச மறுத்தார். பாரதி கிருஷ்ணகுமாரும் மறுத்தார். ‘கெளம்பலாம்’ என்றார், ராமகிருஷ்ணன். நாங்கள் கிளம்ப இருக்கையில், பெயரறியா ஒரு தோழர் வந்து, ‘அரசாங்கம் என்ன செய்யுது தோழர்? ஞானபீடம், பத்மபூஷன் வாங்கினவரு. மத்த மொழிக்காரங்கக்கிட்ட நமக்கான மரியாதைய ஏற்படுத்திக் குடுத்தவரு. பாருங்க. இங்கே நாம எத்தனை பேரு இருக்கோம்! நெஞ்சு கொதிக்குது தோழர்’ என்றார்.

யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் அவராகப் பேசிக் கொண்டிருந்தார்.

தூரத்தில் நின்று கொண்டிருந்த எங்கள் ஊர்க்காரனான தம்பி மாரி செல்வராஜ் அருகில் வந்தான். ‘என்ன ஸார்! கூட்டமே இல்ல?’ என்றான். தோழரின் ஆதங்கத்தை ஒத்திருந்தது மாரியின் குரல்.

மாரி செல்வராஜ் கேட்டது வாஸ்தவம்தான். அஞ்சலிக் கூட்டத்தில் இருப்பவர்களையும், ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களையும் சேர்த்து மொத்தமாக அந்த இடத்தில் நூறு பேர் இருந்திருப்பார்கள்.

‘இதென்ன கேரளாவாடே! தமிள்நாடுல்லா!’ என்றேன்.

http://solvanam.com/?p=39311

இவரது எழுத்துக்களை படித்து சுவைத்திருக்கிறேன் . 
 
ஆழ்ந்த இரங்கல்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயகாந்தன்

அபிலாஷ் சந்திரன்

thodar_2117213f.jpg

ஜெயகாந்தன் நம் பண்பாட்டுச் சூழலில் ஒரு புயல் போல் வீசிய காலத்தில் நான் வாசிக்க துவங்கவில்லை. அவரது தாக்கத்தை நான் நேரடியாக உணர்ந்ததில்லை. வெகுஜன எழுத்தை பொறுத்தமட்டில் நான் சுஜாதா, பாலகுமாரன் காலகட்டத்தை சேர்ந்தவன். அதே போல நான் ஜெயகாந்தனை முற்றுமுழுதாக படித்ததும் இல்லை. சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், பாரிசுக்கு போ போன்றவை, சில குறுநாவல்கள், பல சிறுகதைகள், கூர்மையான கட்டுரைகள் இது தான் நான் வாசித்தவை. ஆக ஜெயகாந்தன் பற்றி ஒரு முழுமையான மதிப்பீடு வைக்கும் தகுதி எனக்கில்லை. படித்த மட்டில் அவர் மீதான என் மனப்பதிவை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

நான் பாலகுமாரன், சுஜாதா படித்து விட்டுத் தான் மௌனி, ல.சா.ரா, சு.ரா, அசோக மித்திரன், ஜெயமோகன், எஸ்.ரா, கோணங்கி மற்றும் பல மேற்கத்திய எழுத்தாளர்களைப் படித்தேன். அதனால் எனக்கு ஆரம்பத்தில் பாலகுமாரன், சுஜாதா மீது ஒரு பிரமிப்பு இருந்தது; அது இலக்கியம் படிக்க ஆரம்பித்ததும் சோப்பு நுரை போல் உடைந்து விட்டது. ஆனால் ஜெயகாந்தன் விசயத்தில் நேர்கீழ். நான் தீவிர இலக்கிய எழுத்தை படித்து சற்றே முதிந்த பின் தான் ஜெயகாந்தனுக்கு வந்தேன். அதனால் சற்றே ஏமாற்றம் தான் ஏற்பட்டது.

“அக்னி பிரவேசம்” இன்று இணையத்தில் யாரும் எழுதி விடக் கூடிய ஒரு கதை தான். அப்பெண் பின்னர் தன்னை வன்புணர்வு செய்தவனைத் தேடி அவன் மீது ஒரு மென்மையான ஆனால் முதிர்ந்த பிரியத்துடன் இருக்கிறாள் என விவரிக்கும் “சில நேரத்தில் சில மனிதர்கள்” எனக்கு கொஞ்சம் மிகையான கதை எனப் பட்டது.

பெண்கள் தம் மீதான வன்மத்தை தம்மை அறியாது ரசிக்கிறார்கள் என்பது உண்மையே. ஸ்டாக்ஹோம் சிண்டுரோம் என்று ஒரு மனநிலையை உளவியலில் குறிப்பிடுவார்கள். கடத்தப்பட்ட பெண்கள் தம்மை கடத்தியவர்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அவர்களுடனே இருக்க விரும்புவது. ஆனால் இது அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தாது. இந்திய பெண்களிடம் இந்த ஸ்டாக்ஹோம் சிண்டுரோம் இருப்பதாய் ஜெ.கெ நினைத்திருக்கலாம். அவர் பார்த்த சம்பிரதாயமான பெண்கள் பலர் உள்ளார தம்மை யாராவது ஆட்கொண்டு கட்டுப்படுத்த மாட்டார்களா என ஏங்கி இருக்கலாம். ஆனால் இது மற்றொரு விதமாகவும் இருக்கும்.

சற்றே பொருளாதார சுதந்திரமும் அதிகாரமும் பெற்ற பெண்கள் தாம் அடக்கியாண்டு அதிகாரம் பண்ண ஒரு ஆண் கிடைக்க மாட்டானா என ஏங்குவார்கள். இன்றைய காலத்தில் இத்தகைய பெண்கள் தாம் அதிகம். “சில நேரங்களில் சில மனிதரகள்” நாயகியைப் போன்றவர்கள் இன்று அருகி விட்டார்கள். அதே போல் பெண்கள் இன்று ஜெயகாந்தன் காலத்தை விட பலமடங்கு அதிகம் வெளியே சென்று வெளியுலகில் புழங்குவதால் அவர்கள் மிக அதிகமாய் பாலியல் ஒடுக்குமுறையை, சுரண்டலை நேரிடுகிறார்கள். தம் உடல் மீதான தொடர்ச்சியான அத்துமீறல் அவர்களுக்கு தொடுகை பற்றிய ஒரு அச்சத்தை, வெறுப்பை உண்டாக்கி உள்ளது. தன் கணவனால் தினமும் அடித்து உதைக்கப்பட்டு அழுது ஆர்ப்பரித்து, பிறகு ரகசியமாய் அந்த மனப்புண்ணை நக்கி ருசி காணும் வகையான பெண்கள் இன்று வெகுவாய் குறைந்து விட்டார்கள்.

பொருளாதார, சமூக சூழலின் ஒரு பின்விளைவான ஒரு மனநிலை மட்டுமே “சில நேரத்தில் சில மனிதர்கள்” நாவலின் நாயகியிடம் உள்ளதோ என தோன்றுகிறது. இதுவே அந்நாவலின் குறை. அப்பெண்ணின் மனநிலையின் பல பின்னணி பரிமாணங்களை ஜெயகாந்தனால் அலசி பதிவு செய்ய இயலவில்லை. ஒரு நல்ல படைப்பு எக்காலத்திலும் உண்மை மங்காது இருக்க வேண்டும். ஆனால் “சில நேரத்தில் சில மனிதர்கள்” இன்று சற்றே வெளிச்சம் குறைந்த ஜீரோ வால்ட் பல்ப் ஆகி விட்டது.

ஒரு பெண்ணின் நேரடி வர்ணனையில் நகரும் அந்நாவல் மொழியின் தடுமாற்றங்களை, மனதின் பல வர்ணங்களை, உளவியலின் நுண்பார்வைகளை கொண்டிருக்கவில்லை என்பது எனக்கு படிக்கிற வேளையில் ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக நீங்கள் வெர்ஜினியா வூல்ப் படித்தவர் என்றால் “சில நேரத்தில் சில மனிதர்கள்” நாவலின் பெண் மொழி ரொம்ப தட்டையாக உங்களுக்கு தோன்றும். அவர் காலத்தில் மிக பிரபலமாக திகழ்ந்த நனவோடை உத்தியின் சிறுதாக்கம் கூட அந்நாவலில் இல்லை என்பது முதலில் வியப்பாக இருந்தது. அது படிக்கையில் ஒரு பெண் பேசுவது போன்றே இல்லை. ஒரு தட்டையான அறிக்கை மொழியாக படுகிறது. கடந்த முப்பது வருடங்களில் அம்பை துவங்கி பல பெண் எழுத்தாளர்கள் இதை விட நுணுக்கமாய், உளவியல் பார்வையுடன் பெண் மொழியை, பெண் மனதின் தத்தளிப்பை, போக்கை சித்தரித்திருக்கிறார்கள்.

“சில நேரத்தில் சில மனிதர்கள்” நாவலின் தாக்கத்தை ஜெயமோகனின் “கன்னியாகுமரியில்” பார்க்கலாம். அதிலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண் தன்னை தாக்கியவனைத் தேடி பல வருடங்களுக்கு பிறகு போகிறாள். அவன் சயரோகம் பிடித்து உடல் நலிந்து ஒரு முதியவனாக தோன்றுகிறான். அவள் அவனுக்கு பணமும் மருத்துவ ஆதரவும் அளித்து உதவுவதன் வழியாக தன் மனதின் ஆற்றாமையை தணித்து கொள்கிறாள். “கன்னியாகுமரி” நாவலுக்கு அதற்கான சில குறைகள் உண்டு என்றாலும் ஜெயகாந்தனின் நாயகியை இன்னும் எதார்த்தமாய் அவர் உருமாற்றியிருக்கிறார். இதைப் படிக்கையில் ஜெயகாந்தனின் மூலப்படைப்பின் போதாமைகள் விளங்கும். அதை விட முக்கியமாய் ஜெயகாந்தன் வாசகர்கள் விர்ஜினியா வூல்பின் “மிஸிஸ் டேலொவேய்” படித்துப் பார்க்க வேண்டும். அது முடித்து விட்டு நகுலனுக்கு வந்து பாருங்கள். இருவரும் First person எனும் கதைசொல்லியின் தரப்பில் இருந்தே பேசும் பாணியை எவ்வளவு கூர்மையாய், ஆழமாய் பார்வையுடன் பயன்படுத்தி இருக்கிறார்கள், ஜெ.கெ எப்படி கோட்டை விட்டிருக்கிறார் எனப் புரியும். அது கூட வேண்டாம் சு.ராவின் First person கதையாடல் பாணியிலான சு.ராவின் “ரத்னாபாயின் ஆங்கிலம்” படித்து விட்டு ஜெயகாந்தனின் First person கதையாடலோடு ஒப்பிட்டு பாருங்கள். இன்னும் சுலபமாய் வித்தியாசம் புரியும்.

ஜெயகாந்தனின் அடிப்படையான குறை அவர் மொழியை துடைப்பம் போல் பயன்படுத்தினார் என்பது. மொழி என்பது ஆபரேசன் கத்தி போல் ஒரு நுணுக்கமான கருவி என்பது அவருக்கு புரியவில்லை. அவரைப் பற்றி யோசிக்கையில் எனக்கு அடிக்கடி அவரைப் பற்றி மனுஷ்யபுத்திரன் சொன்னது நினைவு வரும். நான் முதன்முதலாய் மனுஷிடம் ஜெயகாந்தன் பற்றி குறிப்பிட்ட நாள் அவர் வாயில் இருந்து வந்த வாக்கியம் இது: “ஜெயகாந்தன் ஒரு பிரசங்கி”. எவ்வளவு அழகான துல்லியமான சொல். இன்றும் கிறித்துவ போதகர்களை பிரசங்கியார் என அழைப்பார்கள். ஜெயகாந்தன் எழுத்தை ஒரு போதனை மேடையாகத் தான் பார்த்தார். மொழியின் பல அடுக்குகளை திறந்து பார்ப்பதிலோ, மனித உளவியலின் புதிர்கள் பற்றி வியந்து அதனுள் பயணிக்கவோ அவருக்கு அவகாசம் இல்லை.

ஜெயகாந்தன் பற்றி தமிழவன் சொன்னதாய் கேட்ட ஒரு கருத்தும் முக்கியமானது. சுஜாதாவின் வருகையை மிக கவனமாய் அறிந்து கொண்டு விலகி நின்றவர் ஜெயகாந்தன் என்கிறார் தமிழவன். சுஜாதா எழுத வரும் காலத்திலேயே ஜெ.கெ மெல்ல மெல்ல எழுத்தில் இருந்து அகன்று கொள்கிறார். பிறகு அந்த இடத்தை சுஜாதா தன் மரணம் வரை ஆட்சி செய்கிறார். இலக்கியத்தில் இது போல் இடத்தை காலி பண்ணி கொடுப்பதெல்லாம் இல்லை. ஆனால் வணிக பத்திரிகைகளில் நாகராஜ சோழன்கள் வந்தால் மணிகள் உடனே நாற்காலியில் இருந்து எழுந்து பின்னால் போய் விட வேண்டும்.

ஜெயகாந்தன் முழுக்க வணிக எழுத்தாளரும் அல்ல, அவர் ஒரு கராறான இலக்கிய எழுத்தாளரும் அல்ல. அவருக்கு பின் வந்த சுஜாதா, பாலகுமாரன் இருவரும் கூட இலக்கிய திறன்கள் கொண்ட வணிக எழுத்தாளர்கள் தாம். ஆக இவர்களை வணிக பரப்பில் செயல்பட்ட இடைநிலை எழுத்தாளர்கள் எனலாம். பின்னிருவரோடும் ஒப்பிடுகையில் ஜெயகாந்தனின் கதைகூறலில் நுட்பமும் வாசகனை ஊகிக்க அனுமதிக்கும் புதிர்த்தன்மையும் இல்லை. இதற்கு காரணம் ஜெயகாந்தனின் மேற்கத்திய வாசிப்பின் போதாமையாக இருக்கலாம். அவர் எழுத்தை படிக்கையில் அவர் முழுக்க உள்ளூர் மண்ணில் உள்ளூர் வெயிலில் வளர்ந்த தாவரம் எனத் தோன்றுகிறது. சுஜாதா, பாலகுமாரனுக்கு உள்ள பரவலான வாசிப்பு அவருக்கு இல்லை.

ஆனால் இயல்பான கலைத்திறன் ஜெயகாந்தனுக்கு அபாரமாக உண்டு. வாழ்க்கை மீதான ஒரு ஒட்டுமொத்த விசாலமான பார்வையும் அவரது மிகப்பெரிய பலம். இது சுஜாதா மற்றும் பாலகுமாரனிடத்து இல்லை. அவ்விதத்தில் ஜெயகாந்தன் தொழில்நுட்பத்தில் கசாப்புக்காரர் என்றாலும் கலைப்பார்வையில் இருவருக்கும் மேலானவர். இந்த கலைப்பார்வை ஒருவர் தன் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து புரிதல்களில் இருந்து பெறுவது. ஜெயகாந்தன் எனும் ஒரிஜினல் கலைஞனுக்கு அது அபரிதமாகவே இருந்தது.

ஜெயகாந்தனின் சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பு தொண்ணூறுகளின் இறுதியில் வந்த போது வாங்கி வாசித்து விட்டு ஜெயமோகனிடம் பேசியது நினைவுள்ளது. “ரொம்ப சுமார் தான், பெரும்பாலான கதைகள் தேறாது” என அவர் கூறினார். எனக்கு அன்றும் சரி இன்றும் சரி ஜெயகாந்தன் சிறுகதைகளைப் படிக்கையில் அவை அடிப்படையில் கதைகள் (tales) தாம், சிறுகதைகள் அல்ல எனத் தோன்றுகிறது. இன்னொரு புறம் ஜெயகாந்தன் சிறுகதைகள் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியவை என்பதையும், அவரது சிறுகதைகளை இப்போதும் பலர் வழிபடுகிறார்கள் என்பதையும் அறிவேன். ஆனால் இந்த வரலாற்று மதிப்பு என்பது எனக்கு முக்கியம் அல்ல. இப்போது படிக்கையில் ஒரு எழுத்தாளன் எனக்கு எப்படி தோன்றுகிறான் என்பது முக்கியம். தான் வாழ்ந்த காலத்தில் ஜெயகாந்தன் சமூகத்தை என்ன செய்தார் என்பது அப்போதுள்ள சமூகத்தின் அக்கறை. ஒரு இலக்கிய வாசகனாக அது என் அக்கறை அல்ல.

எனக்கு விகடனில் வெளிவந்த ஜெயகாந்தனின் ஒரு புகைப்படம் இன்றும் நினைவுகளில் திகைப்பூட்டுகிறது. ஜெயகாந்தன் ஜுப்பாவும் வேஷ்டியும் அணிந்து கையில் மல்லிகைப்பூ சுற்றி ஒரு ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு புகைப்படக் கருவியை முதலிரவுப் பெண்ணின் உதடுகளைப் போல் காமத்துடன் பார்க்கிறார். என்னவொரு தோரணை! ஜெயகாந்தன் கஞ்சா புகைத்தபடி இறுமாப்பாய் பேசுவது, அவரது ஹிப்பி மனப்பான்மை பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை அன்று அதெல்லாம் புரட்சிகரமாய் நம் நடுத்தர மனோபாவத்துக்கு தோன்றியிருக்கலாம். இன்று பதிமூன்று வயது பையன்களே கஞ்சா அடித்து விட்டுத் தான் வகுப்புக்கு வருகிறார்கள். நகர்வாழ் பையன்களுக்கு 16 வயதிலேயே மது, பெண் இவையெல்லாம் அலுப்பூட்ட துவங்குமளவுக்கு பழகிப் போகின்றன. இவர்களுக்கு இன்று ஜெயகாந்தன் எல்லாம் பொருட்டாகவே தோன்ற மாட்டார்.

மேற்கில் அன்று புகழ்பெற்றிருந்த ஹிப்பி வாழ்வை அவர் இந்திய சூழலில் வைத்து சின்ன அதிர்வுகளை உண்டாக்கும் கதைகளை எழுதி இருக்கிறார். ஆனால் அவை அசலான ஹிப்பி கதைகள் அல்ல. ஜேக் கெரவக்கின் On the Road படித்தால் ஜெயகாந்தன் எழுதியது மேம்போக்கான ஹிப்பி மனப்பான்மை எனத் தோன்றும். அதற்கு அவரை குற்றமும் கூற இயலாது. எழுதுவதற்கு இந்தியாவில் ஹிப்பி வாழ்க்கை என்ற ஒன்று என்றுமே இயல்பாக பரவலாக இருந்ததில்லை.

http://thiruttusavi.blogspot.in/2015/04/blog-post_19.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.