Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை: தீராத் துயரின் ஆறாம் ஆண்டு - புண்உமிழ் குருதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: தீராத் துயரின் ஆறாம் ஆண்டு

புண்உமிழ் குருதி

கீதா சுகுமாரன்

கூடாரங்கள் மேவிய திசை ஒன்றில்

அவலத்தின் சுருக்கங்களை முகத்தில் பொருத்தி

பிடி மண்ணுமற்றலையும்

என் உயிர்ப்பிண்டம் பற்றிய கதையாடல்களை

யாரோ சொல்லியிருப்பர் அல்லது சொல்லுவர்

- சுஜந்தன் (அகதிமுகாம்)

குருதியோடிய கூந்தலில் வீழ்ந்தொட்டின இலையான்கள்

மண்ணுண்டு கிடந்தது கிழித்தெடுத்த முலைகள்

கருகி யோனி குகை பிளந்து உளுத்திருந்தது எறும்படுக்க

பார்த்தேன்

- பா. அகிலன்

எரிகணை பட்டுத் தெறிக்க, காயம்பட்ட

இரண்டரைவயதுக் குழந்தையின் கைகளை

மயக்க மருந்தின்றி அறுக்கின்ற மருத்துவன்

இக்கணம் கடவுள்

நீரற்ற விழிகளுடன் அலறும் தாய் ஒரு பிசாசு

- சேரன்

பிணக்குவியலில் தடுக்கி விழுந்தெழுந்து

இறுகிய விழிகளை உன் பக்கம் திருப்புகிறேன்

கழுத்திலிருந்து குருதி வழிய வருகிறாய் நீ

நிமிர்ந்த உன் நெஞ்சு உனை அடையாளப்படுத்திய தெனக்கு

தலை கழன்று முண்டமாய் நீ ஆனபின்னும்

- ஸர்மிளா ஸெய்யித்

இருண்ட காலத்திலும் பாடல் இசைக்குமா?

ஆம், இசைக்கும், இருண்ட காலத்தைப் பற்றிய பாடல்.

- பெர்டோல்ட் ப்ரெக்ட்

அகதி முகாமாயினும் புலம்பெயர் உலகாயினும் எங்கிருந்து படைக்கப் பட்டாலும் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான ஈழக்கவிதைகள் சிதைந்த உடலினூடாக வதைக்கப்பட்ட மனதின் எதிரொலியாகவே இருக்கின்றன. எண்பதுகளில் துவங்கி இன்றளவும் போர் சார்ந்த துயர நிலையை இவை அடிச்சரடாகக் கொண்டுள்ளன என்பது தெளிவு. ஏன் மீண்டும் மீண்டும் துயரும் வன்முறையும் ஈழக் கவிதைகளின் களமாகின்றன என்பதே ஈழக்கவிதைகள் எதிர்கொள்ளும் விமர்சனமாகும். இனப்படுகொலைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிற சமூகங்களின் படைப்புகளும் இப்படித் தான் இருக்கின்றனவா?

tamil02.jpg

அண்மையில் புத்தகம் ஒன்றைத் தேடி டொரொண்டொவின் அந்தப் பெரிய புத்தகசாலை ஒன்றுக்குள் நுழைந்தேன். அங்கே ஓர் இளம்பெண், ஆர்மேனிய இனப்படுகொலைகளைப் பற்றிய கவிதை நூல்களைக் கடை ஊழியரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் (ஆர்மேனிய இனப்படுகொலை 1915ஆம் ஆண்டு நிகழ்ந்தது - இருபதாம் நூற்றாண்டின் முதல் இனஒழிப்புகளில் ஒன்று - இந்த ஆண்டு அதன் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் புலம்பெயர்ந்த ஆர்மேனியர்களால் உலகின் பல நாடுகளில் நிகழ்த்தப்படுகின்றன). அவளுடன் பேசியபொழுது புலம் பெயர்ந்த ஆர்மேனியர்களில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவள் தான் என்றாள். தொடர்ந்து நடந்த உரையாடலில் உலகெங்கிலும் ஆங்கிலம், ருஷிய மொழி உட்பட பல மொழிகளிலும் புலம் பெயர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரும் ஆர்மேனிய இனப்படுகொலையை இன்றளவும் தம் கவிதைகளின் தளமாக அமைத்துள்ளனர் என்று அவள் மேலும் சொன்னாள். அதனால் புதிய தொகுப்புகளைப் பெறுவதாகச் சொன்ன அவளுக்கு ஆர்மேனிய மொழி தெரியாது. எனக்கு ஆஸ்விட்சிலிருந்து (Auschwitz) தப்பி வந்த பின்னாளில் யூத இனக்கொடுமைகளைப் பற்றி எழுதிய இத்தாலிய யூத எழுத்தாளர் பிரீமோ லெவி(Primo Levy)யின் வாசகம் ஒன்று நினைவுக்கு வந்தது: “இந்தக் கொடுமையான இருண்ட ஆழத்தை முற்றுமுழுதாக வெளியேற்றுவது இயலாத ஆனால் செயலாற்றப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் நேற்று நிகழ்ந்தது நாளையும் நிகழலாம். . . மனம் அருவருத்து இதைவிட்டு விலக நினைத்தாலும் விலகாதிருப்பது அவசியம்”. எவ்வளவு உண்மை இருக்கிறது இந்தக் கூற்றில் என்பதற்கு மீண்டும் மீண்டும் உலகின் பல இடங்களில் தொடர்ந்துகொண்டிருக்கும் இனப்படுகொலைகளே சாட்சியாகும்.

வதைபடும் உடலின் மூலம் வன்முறையையும் மீளாப்பெருந்துயரையும் முன்னிறுத்தும் இக்கவிதைகளில் வெளிப்படும் அனுபவம் ஆங்கிலத்தில் trauma எனப்படுகிறது. தமிழில் அதற்கு இணையான ஒரு சொல்லைத் தேடுவதிலிருந்து இக்கட்டுரை துவங்குகிறது. கிரேக்கச் சொல்லான trauma உடலின் பெருங்காயத்தைத்தான் முதலில் குறித்தது. பின்னர் உடலின் ஆறாத வடு , மனதின் காயம் அல்லது சொற்களுக்குள் அடங்காத வடுவின் குறியீடாக அது அமைந்தது. Trauma என்ற சொல்லுக்கு மனவடு என்ற சொல்லைத் தற்போது நான் பயன்படுத்தினாலும் இச்சொல் ‘traumatized bodies’ என்பதை எப்படி உணர்த்தும் என்ற கேள்வி எழுகிறது. இச்சொல்லின் போதாமையை உணர்ந்தே இதைப் பயன்படுத்துகிறேன்.

பிராய்டு ‘மனவடு’ என்ற சொல்லை ‘மனதின் தற்காப்பு வளையத்தை உடைத்தெறியும் புறஉலகால் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கு’ என்று விளக்கினார்.1 குறிப்பாகப் போரின் பேரழிவு, வன்முறை, வதை இவற்றின் பெரும்பாதிப்பை, அதாவது எதிர்பாராது நிகழும் பெருந்துயரை உளக்கூறாக்கும் மனவடு, மனதில் ஏற்படுத்தும் ஒரு ஆறாத காயமே அது என்றார். அந்தப் பாதிப்பிலிருந்து வெளியேற இயலாத மனம் மீண்டும் மீண்டும் அதைச் சொற்களில் வடிவம் கொடுக்கும் முயற்சியில் பலமுறை அத்துயர்மிகு சம்பவங்களை/அனுபவங்களை அசைபோடுகிறது என்றும் கூறுகிறார். மீண்டும் மீண்டும் மொழியப்படுவது என்பது trauma பற்றி இங்கு அவதானிக்கப்பட வேண்டிய முக்கிய கருத்தாகும்.

மற்றொரு உதாரணத்தையும் இங்கு இணைக்க விரும்புகிறேன். கிரேக்கத் தொன்மத்தில் ஸிஸிபஸ் (Sisyphus) என்ற கதை உண்டு. ஸிஸிபஸ் என்பவன் கடவுள்களால் சபிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் மலையடிவாரத்திலிருந்து ஒரு பெரும் பாறாங்கல்லை உடலை வருத்தி மலை உச்சிக்கு உருட்டி வருவான். மலை முகட்டை எட்டியதும் பாறாங்கல் உருண்டு மீண்டும் அடிவாரத்தை எட்டிவிடும். பிறகு மீண்டும் அவன் அதை உருட்டி மேலே கொண்டு செல்வான், மீளவும் அந்தக் கல் கீழே விழும் என்ற அறிதலோடே அவன் அதைச் செய்வான். வாழ் நிலையின் அபத்தம் என்ற கோட்பாட்டைப் பற்றிய (The Myth of Sisyphus and Other Essays) என்ற நூலில் ஆல்பெர் காம்யூ இந்தக் கதையை எடுக்காட்டாக்கிச் சொல்கிறார்:”I see that man going back down with a heavy yet measured step toward the torment of which he will never know the end. That hour like a breathing-space which returns as surely as his suffering, that is the hour of consciousness. At each of those moments when he leaves the heights and gradually sinks toward the lairs of the gods, he is superior to his fate. He is stronger than his rock”.2 அதாவது ஒவ்வொரு முறையும் தன் விதியை, துயரை அறிந்துகொண்டே செயற்படும் அவன் அந்த விதியைவிட வலியவனாகிறான், அந்தப் பாறையை விட வலியவனாகிறான். வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை இருந்தால் அவனுடைய சித்திரவதைக்கு என்ன பொருள் சொல்ல இயலும்? மனவடு பற்றிய இலக்கியங்களின் படைப்புமனத்தையும் இத்துடன் ஒப்புநோக்கலாம். அவனுடைய சித்திரவதையைப் பற்றிய அவனது புரிதலே அவனுடைய வெற்றியாக மாறுகிறது. எந்தக் காலத்திலும் அவனால் அந்த தனித்த, அன்னியமான, மீளாத் துயர் சூழ் உலகிலிருந்து விடுபட இயலாது. பல வேளைகளில் மனவடுவை உள்சாரமாகக் கொள்ளும் படைப்பும் படைப்புமனமும் அவ்வாறே செயல்படுகிறது. கவிஞர் சேரனின் ‘காடாற்று’ தொகுப்பின் பின்னுரையில் நாகார்ஜுனன் படைப்புமனதின் இந்தத் தேடலை, அதன் மொழியாக்கத்தைத்தான் அடோர்னோவின் இரு குறிப்புகளிலிருந்து குறிப்பிடுகிறார். அடோர்னோவின் இந்த இரு கூற்றுகளுமே வெளிப்படுத்த இயலாத மனவடு மற்றும் அதைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்குமிடையே ஊசலாடும் வாழ்நிலைக்கும் அதிலிருந்து தோன்றும் படைப்புக்கும் இடையிலிருக்கும் சிக்கலைச் சுட்டுகிறது என்றும் சிந்திக்கலாம்.

கட்டுரையின் தொடக்கத்திலிருக்கும் கேள்விக்கான விடை இங்குதான் காணக்கிடைக்கிறது. அதாவது மனவடு என்ற அனுபவம் ஈழக்கவிதைகளில் உள்ளுறைந்து தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பா. அகிலன் தன்னுடைய ‘சரமகவிகள்’ தொகுப்பின் பின்னுரையில் தன் கவிதைகள் ‘பல்லாயிரம் புண்ணுண்ட மனங்களின் வசிப்பிடம்‘ என்கிறார். மனவடு பற்றிய இலக்கிய வகைப்பாட்டுக்குள் (trauma literature) தன் கவிதைகளை நிறுவி அவர் முன்வைக்கும் கருத்துக்கள் முக்கியமானவை. நானறிந்தவரையில் மனவடுவைக் கவிதையுடன் தொடர்புபடுத்தும் கருத்தமைவை முதன்முறையாகத் தமிழ் இலக்கியச் சூழலில் முன்வைத்தவர் பா. அகிலன். மனவடு வெளிப்பாட்டின் மொழி குறித்த பா. அகிலனின் கருத்தாக்கத்தை இங்கு நினைவுகூர்வது மிக முக்கியம் என எண்ணுகிறேன்: “அசாதாரணமான அனுபவங்களும் - பெருங் காயங்களின் அனுபவங்களும் மொழியிலும் - மொழிதலிலும் அதன் வழமைகளுக்கு அப்பாலான பாய்ச்சலை இயல்பாகக் கோருகின்றன. அவற்றுக்கு ஒரு புதிய சொல்லுடல் தேவைப்படுகிறது. இவ்வகைப்பட்ட படைப்பாக்க நிலவரங்கள் மொழியை அதிகம் உருவகப்படுத்துகின்றன. படிமங்களும் - குறியீடுகளும் அதன் இயற்கையாகி விடுகின்றன. அவை மொழியை அதிகவேளையில் அதன் வழமைப் பிரகாரமான ஒழுங்குநிலைக்கு வெளியால் வேறொரு விதமாய்ப் புணர்த்துகின்றன. சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு உயிரிபோல தொழிற்படத் தொடங்குகின்றன. சில வேளைகளில் எல்லாக் கவிதை களும் ஒரு கவிதையாக அல்லது ஒன்றின் பல காட்சித் துண்டுகளாகிவிடுகின்றன”. அகிலனின் படைப்புகளுக்கு மட்டுமல்ல ஈழக்கவிதைகளுக்கும் இந்த விளக்கம் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது என்று கூறலாம்.

இருண்ட அனுபவங்களை வெளிப்படுத்தும் முகமாக ஈழக்கவிதைகளின் படிமங்களும் குறியீடுகளும் ஆறாப் பெருந்துயர் என்ற தளத்திலேயே இயங்குகின்றன. இக்கவிதைகளின் மீதெழுந்த விமர்சனப் பார்வை சமகால ஈழக்கவிதைகளைப் பற்றிய ஆய்வுகளின் போதாமையைத் தான் காட்டுகின்றது. இக்கவிதைகள் ‘மனவடு’ என்ற சிறிய வகைப்பாட்டுக்குள் ஒரு பெரிய ஆய்வு வெளியைக் கட்டமைத்துள்ளன என்று உறுதியாகச் சொல்ல இயலும்.

எண்பதுகளில் அமெரிக்காவில் முதன்முறையாக PTSD (post traumatic stress disorder) குறித்த ஆய்வுகள் துவங்கின. வியட்நாம் போரிலிருந்து மீண்டுவந்த இராணுவத்தினரின் சிகிச்சைக்காக இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதே சமயம் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடிய பெண்ணியவாதமும் அதனுடன் இணைய, பாலியல் வன்முறையும் இந்த ஆய்வுக்களத்துள் இணைக்கப்பட்டது. மனவடுவுக்கான செயற்பாடுகளை மனதின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ளும் முனைப்பில் ஹாலோகஸ்டு (Holocaust) இலக்கியங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மனவடு இயல் துவங்குமுன்பே யூத இனக்கொலைகள் இன அழிப்பு என்று நிறுவப்பட்டதாலும், மானுடத்தின் உச்சகட்ட கொடுமையாக ஹாலோகஸ்டு கொள்ளப்பட்டதாலும் இந்த இலக்கியங்களே இத்துறையின் ஆய்வுகளுக்குப் பொருத்தமாக அமைந்ததிலுள்ள அரசியல் இங்கு தெளிவாகிறது. ஏனென்றால் இதே உச்சகட்ட கொடுமையைத்தான் அர்மேனியர்களும் அனுபவித்தனர். ஆனால் ஹாலோகஸ்டு இலக்கியத்துக்கு நிகராக அவை ஏற்றுக்கொள்ளப்பட்டனவா? அதனால்தான் அர்மேனிய இனப்படுகொலைகளைப் பற்றிய இலக்கிய ஆய்வுகள் குறைவாகவே உள்ளன (1985இல் தான் ஐநா சபை அர்மேனிய இனப்படுகொலைகளை இன அழிப்பு என்று அறிவித்தது.) ஹாலோகஸ்டின் கொடுமைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை, அவற்றை மறுக்கவும் இல்லை. ஆனால் மற்ற அனைத்து இனப் படுகொலைகளும் வன்முறைகளும் ஹாலோகஸ்டின் அடுத்த இடத்தில்தான் வைத்துப் பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஹாலோகஸ்டுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் எந்த அளவுக்கு அதற்கு நியாயம் வழங்கியதோ, அதே அளவுக்கு மற்றவர்களுக்கான நியாயத்தை மறுத்தது; இதன் பிரதிபலிப்பு இனப்படுகொலை தொடர்பான இலக்கிய ஆய்வுகளிலும் வெளிப்படுகிறது. அதாவது மேற்கின் பின்புலத்தில் உருவான இலக்கியங்களே இந்த ஆய்வின் புலமாக அமைந்தன. அதனடிப்படையில் மனவடு பற்றிய இலக்கியங்களின் வரையறை நிறுவப்பட்டது. அதனால் இவ்வகை இலக்கியங்கள் தொடர்பற்ற சொற்களாலும் முற்றுப்பெறாத தொடர்களாலும் படிமங்களாலும், பழக்கமற்ற குறியீடுகளால் மட்டுமே மனவடு அனுபவங்களை உணர்த்த இயலும் என்ற கட்டுமானத்தை மனவடு குறித்த ஆய்வுகள் உருவாக்கியுள்ளன. மேற்கு அல்லாத ஏனைய நாடுகளின் மனவடு தொடர்பான இலக்கியங்கள் தோன்றும் புறச்சூழலையும் பண்பாட்டையும் அவை கணக்கிலெடுக்கவில்லை.

செப்டம்பர் 9/11 க்குப் பிறகு மனவடு பற்றிய ஆய்வியலின் களம் சற்றே விரிவடையத் தொடங்கியது. அதுவரை மேற்கிய சார்புத்தன்மையே மேலோங்கியிருந்த ஆய்வுக்களத்தில் பின் காலனித்துவத்தின் பின்புலத்திலும் இலக்கிய ஆய்வுகள் தொடங்கின. அடிமை வாழ்வின் அனுபவத்தின் சாரமாக விளங்கும் ஆப்பிரிக்க இலக்கியத்திலும் ஆய்வுகள் துவங்கின. ஆப்பிரிக்கக் கலை மற்றும் பண்பாடு, மனவடு அனுபவங்களைக் கையாளும்முறை அதன் பிற பரிமாணங்கள் என இக்களம் விரிவடையத் துவங்கியது. இதுபோலவே இந்திய பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நிகழ்ந்த பேரழிவுகள், பங்களாதேஷ் போரின் அழிநிலை பற்றிய இலக்கியங்களிலும் ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகளின் உள்கூறாக அமைந்திருப்பது மேற்கிய மனவடு பற்றிய அழகியல், மொழியியல் மற்றும் இலக்கிய வெளிப்பாட்டுத் தளத்தின் உத்திகளில் மாற்றுப் பார்வையை, கருத்தைக் கண்டடைவதும் பதிவதுமாகும்.

ஸ்டெப் கிராப்ஸ் (Stef Craps) என்ற புலமையாளர் ஆப்பிரிக்க நாவல்களை எடுக்காட்டாக்கி பிராய்டிய மனவடுக் கோட்பாட்டில் சுட்டப்படும், மீண்டும் மீண்டும் மொழியப்படுவதால் மட்டுமே மனவடு எனும் நிலையைக் கடக்க இயலும் என்ற கருத்தாக்கத்தை மீறி நாவல்களில் விரவும் கதை மாந்தர்களின் மௌன வெளிகளிலும் மனவடு வேறு வகையாக நிலைகொள்கிறது, வேறு வகையில் அது கடந்தும் செல்கிறது என்று கூறுகிறார்.3இலக்கியத்துக்கு சமாந்திரமான நிகழ்த்துக் கலைகளிலும் இவ்வகை மாற்றுக் கருத்துகளுக்கு இடமிருப்பதாக இத்துறையில் ஈடுபடும் பல புலமையாளர்கள் கருதத் துவங்கியுள்ளனர்.

ஈழக் கவிதைகளின் படைப்புவெளி இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு பெரும்புலத்தை உருவாக்கியுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகால இலக்கியச் செறிவின் பின்புலத்தில் வெளிப்பட்டிருக்கும் இக்கவிதைகள் ஐரோப்பியப் படிவத்தைப் பின்பற்றுகின்றனவா அல்லது மாற்றுத் தளத்தில் இயங்குகின்றனவா என்பதும், மனவடுவின் பதிவாக வெளிப்படும் இவற்றின் கவிதைமொழியில் நிகழ்ந்த மாற்றம் என்ன என்பதும் மிக முக்கியமான கேள்விகள். இக்கவிதைகளில் உருக்கொள்ளும் மனவடு இலக்கிய அழகியலை (aesthetics of trauma literature) எவ்வாறு வரையறுக்கலாம்? பிராய்டிய மனவடு கோட்பாட்டுச் சட்டகத்தை விலக்கி மனவடுவைக் கண்டறிய இயலாது. ஆனால் அது கவிதையாக மொழியப்படுவதிலுள்ள பண்பாட்டு, சமூக, இலக்கியச் சார்புநிலைகளை எவ்வாறுஉள்ளடக்கியுள்ளது? இது போன்ற கேள்விகளையும் இப்போது சிந்திக்க வேண்டியுள்ளது.

உலகளவில் இதுவரை மனவடு குறித்த பெரும் பான்மை ஆய்வுகள் சிறுகதைகள் மற்றும் நாவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஹாலோகஸ்டு கவிதைகள், சில லத்தின் அமெரிக்க கவிதைகள் மற்றும் சில்வியா பிளாத் போன்ற ஒரு சில படைப்பாளிகளின் கவிதைகள் மட்டுமே இப்போக்கிற்கு விதிவிலக்காக உள்ளன. ஆனால் கவிதையே மனவடுவின் வெளிப்பாட்டில் ஆய்வு செய்வதற்கு ஏற்ற களம். அதற்கு முதற் காரணம் உரைநடையைவிட கவிதை மன எழுச்சி சார்ந்த உடலைக் கொண்டுள்ளது. இரண்டாவது, சமகாலக் கவிதைகளில் பல்பொருள் உணர்த்தும் சொற்கள் (ambiguity), தொடர்பற்ற வரிகள், படிமங்கள் மற்றும் குறியீடுகள் உள்ளோடியுள்ளன. மனவடு அனுபவத்தையும் மனம் இப்படித்தான் நினைவு கொள்கிறது, இப்படித்தான் துண்டிக்கப்பட்ட நினைவுகளாய் மீட்டுருவாக்கம் செய்கிறது. அதனால் கவிதைகளில் வெளிப்படும் குரலும் மனவடுவின் மீட்டுருவாக்கமும் நெருங்கிய தொடர்புடையன. அதனாலேயே ஈழக்கவிதைகள் இத்தகைய ஆய்வுகளைத் தமிழ்ச் சூழலில் சாத்தியமாக்குகின்றன.

வன்முறைக்குட்பட்ட உடலையே தளமாகக்கொண்டு மனவடுவை அந்த உடலின் மீதே கட்டமைப்பது இவ்வகைக் கவிதைகளின் பொதுவான கூறு. அதனால் மனவடு பெண் படைப்பாளிகளின் கவிதைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. குறிப்பாக ஈழப்பெண் படைப்பாளிகளின் கவிதைகளில் மனவடு எவ்வகையில் கையாளப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமான கேள்வி. ஏனென்றால் 90களில் ‘சித்திரவதைப்பட்ட உடல்’ முதன்மையான கவிதைக்களமாக உருப்பெறுவதற்கு அப்போது தோன்றிய ஓவியங்களுடன் பெண் படைப்பாளிகளின் கவிதைகளின் பங்களிப்பும் இன்றியமையாத ஒன்றாகும். வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட உடலின் மூலம் உருக்கொள்ளும் மனவடு, சொற்கட்டுக்குள் சிறைப்படுத்த இயலாத அந்த அனுபவம், பெண்மொழியில் எவ்வாறு வெளிப்படுகிறது? போரின் கொடுமைகள் சொல்லும் மொழி இல்லம் சார்ந்த வன்முறையினால் உருவாகும் மனவடுவை (நான் இங்கு குறிப்பிடுவது உடல் சார்ந்த வன்முறை மட்டுமல்ல, பெண்களின் வாழ்வில் அமிழ்ந்து வெளித்தெரியா, சொல்ல இயலா மனவடுவையும் இணைத்து தான்-personal trauma) எவ்வாறு இயைந்தும் இடைவெட்டியும் கவிதையாகின்றன? எவ்வகையில் கட்டமைக்கப்படுகின்றன? தனிப்பட்ட மனவடுவும் கூட்டு மனவடுவும்(collective trauma) எவ்வாறு இக்கவிதைகளில் ஊடாடுகின்றன?

சமகாலக் கவிதை மட்டுமல்லாமல் பக்தி இலக்கியங்கள் மற்றும் சங்க இலக்கியங்களிலும் மனவடுக் கோட்பாட்டுச் சட்டகத்துள் மீள்பார்வை இடுவதற்கான வெளி இருக்கிறது. இவ்வகையில் புறநானூற்றுப் பாடலொன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்:

ஐயோ வெனின் புலியஞ் சுவலே

அணைத்தனன் கொளினே யகன்மார் பெடுக்கவல்லேன்

என்போற் பெருவிதிர்ப் புறுக நின்னை

இன்னா துற்ற வறனில் கூற்றே

நிரைவளை முன்கை பற்றி

வரை நிழற் சேர்க நடத்திசிற் சிறிதே (புறம் 255)

பெரும்காயமுற்று இறக்கப்போகும் தலைவனைச் சுமக்க இயலாமலும் தானுற்ற பெருந்துயரை எவரோடும் பகிர முடியாமலும், அழ இயலாமலும் தற்காலிக நிழலைத் தவிர அவளால் வேறு எதையும் பற்றிக்கொள்ள இயலவில்லை. அந்தப் பெண்ணின் குரல் அவளுற்ற மனவடுவின் உச்சமாக வெளிப்படுகிறது.

பக்தி இலக்கியங்களிலுள்ள விரகம், இறையைத் தேடி உழலும் ஆன்மாவின் பாடு, இவற்றை மீள்பார்வையிடும்போது மனவடுவின் இதுவரை கண்டறியப்படாத புதிய பரிமாணங்கள் தெளிவாகும். பக்தி இலக்கியத்தில் வெளிப்படும் விரக பாவம், உள்ளத்தின் சித்திரவதை (தாயுமானவர் உளப்பாடு என்றே அதைப் பாடுகிறார்), திருவாசகத்தில் வெளிப்படும் சுயச்சித்திரவதை இவையெல்லாம் மனவடுவின் வெவ்வேறு காட்சிகளை, அவை தோன்றிய சூழலைத் தொடும் வாய்ப்பளிக்கின்றன. குருதி சொரியும் வதைபடும் உடல் மனவடு சார்ந்த கவிதைகளின் உடலாகவும், குறியீடாகவும் உள்ளதால், இந்த ‘உடல் மொழியை’ச் சித்தர் பாடல்களின் உட்கூறாக விளங்கும் உடல் பற்றிய சித்தாந்தம், பாலியல்பு (sexuality) இவற்றுடன் ஒப்புநோக்கலாம். மொழிக்கு அப்பாலிருக்கும் கொடூரமான நினைவுகள் / அனுபவங்கள் மீது உருவான மனவடுவுக்கும் பக்தியால் வன்முறைக்கு உட்படும் மனதில் உருவாகும் மனவடுவுக்கும் எப்படி வேறுபாடு காண்பது? லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் அனன்யா ஜெ கபீரின் ஆய்வுக்கட்டுரைகள் இந்தக் கருத்தாடலில் முக்கியத்துவம் வாய்ந்தன. அவருடைய கட்டுரை ஒன்றில் விரக பாவத்தை வெளிப்படுத்தும் கவிதைகளையும் பாடல்களையும் மனவடு மற்றும் மீளாப்பெருந்துயரோடு (melancholia) தொடர்புபடுத்தி மேற்கின் மனவடுக் கோட்பாட்டுச் சட்டகம் இந்த வெளிப்பாட்டுத் தளத்தில் பொருந்தாது என்று நிறுவுகிறார். குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்றால் விரக பாவத்தை அவர் பிராய்டிய மீளாப் பெருந்துயரோடு, அதன் கோட்பாட்டுடன் ஒப்பிட்டு, விரகம் பிராய்டியக் கோட்பாட்டை மீறிச் செயல்படுகிறது என்கிறார்.4

மனவடுவின் மற்றொரு பாகமாய் இருப்பது மீளாத் துயரும் இரங்கலும் (mourning and melancholia). சமகாலத் தமிழ்க் கவிதைகளில் இரங்கற் பாடல் என்றொரு வடிவம் இல்லாமல் போய்விட்டது. கலிங்கத்துப் பரணி மற்றும் சிலத் தனிப்பாடல்களுக்குப் பிறகு இரங்கற் பாடல் சமகாலத்தில் கவிதையாக இயங்கவில்லை எனலாம். ஈழக்கவிதைகள் கடந்த நாற்பது ஆண்டுகளாகவே இரங்கற் பாடல் வடிவத்தை மீள எழுப்பியுள்ளன. இவை ஒடுக்குமுறைக்கான எதிர்ப்புக் கவிதையாக (poetry of resistance) மட்டுமல்லாமல், இரங்கற் பாடல் என்ற வடிவத்துக்கும் எதிர்ப்புக் கவிதையாக உள்ளன. அதன் காரணம் செவ்விலக்கியங்களிலும் அதற்குப் பிறகு வந்த இலக்கியங்களிலும் இரங்கல் என்பது ஆறுதல்தரும் முகமாக எழுந்தது. ஆனால் சமகால ஈழக்கவிதைகளோ மீண்டும் மீண்டும் புண்ணைக் கீறி, துயரிலிருந்து துயரையே பாடுவதால் அவை இரங்கற் பாடலின் வடிவம் மற்றும் அதன் கட்டுமானத்தைக் குலைக்கின்றன; பிறழச்செய்கின்றன. அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பலகலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் மானுடப் பண்பியலின் பேராசிரியராக இருக்கும் கும்கும் சங்கரி, விரகக் கவிதைகளைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றுள் ஒரு கட்டுரையில் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது வெளிவந்த கவிதைகள் எப்படி விரக பாவத்தை, துயரப்பாடல்களாக மீட்டுருவாக்கம் செய்தன என்று நிறுவுகிறார். பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுவரை விரகமாக வெளிப்பட்ட காதல், பிரிவினையின் கொடுமைகளை உள்ளொடுக்கி மீளாத் துயர்மிகும் மொழியாகக் கவிதைகளிலும் அப்போதைய ஹிந்தி திரைப்படப் பாடல்களிலும் விரவியதாகக் கூறுகிறார்.5

ஆஸ்திரேலியாவில் உளவியல் துறைப் பேராசிரியராக இருக்கும், ஈழத்தைச் சார்ந்த தயா சோமசுந்தரத்தின் ‘Scarred Communities’ என்ற மனவடு குறித்த நூல் மேற்கின் மனவடு கோட்பாட்டுச் சட்டகத்தின் மாற்றாகத் தமிழ்ச் சமூகம் மனவடுவின் ஆறாத் துயரை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை நிறுவுகிறது. இந்த நூல் உருவாக்கும் கோட்பாடு நமது இலக்கியங்களில் மனவடு குறித்த ஆய்வுகளுக்கு உறுதுணையாக அமையும்.

தீப்பந்தம் கொண்டு

நிர்வாண மணப்பெண்களை

அவர்கள் எரித்தனர்

கருகிய உடல்கள் உருண்டு இடறிச்

சாவுக்கு இரையாகின

கதவுகளை அறைந்து சாத்தி

என்னருகே இறந்துகிடந்த

பெண்ணிடம் கேட்டேன்:

“எவ்விதம்

பிடுங்கி எடுப்பேன்

என் விழிகளை?”6

நூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இவ்வரிகள் ஏன் இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கின்றன? சாதாரணமாக இயங்கும் கவிதைகளைவிட இவ்வகைக் கவிதைகளை வாசித்துக் கடப்பது சுலபமல்ல. வாசகரின் புரிதலுக்கும் உள்வாங்கும் தன்மைக்கும் இவற்றின் படிமதளங்களும் அவை கட்டி எழுப்பும் அவலமான உணர்வுகளும் அதற்குச் சவாலாக அமைகின்றன. அதைவிடப் பெரிய சவால் அவற்றிலுள்ள அழகியலை அணுகுவது. மானுடத்தின் உச்சகட்ட கொடுமைக்கு எதிர்ப்புக்குரலாகவும் சாட்சியாகவும் செயற்படும் இக்கவிதைகள் மறக்கப்படாமலிருத்தல் அவசியமாகும். அதற்கு முதல்கட்டமாக துயரின்சாயலுற்ற அனுபவம் வெறும்அனுபவமாகச் சிறைப்படும் படைப்புகளுக்கும், அனுபவம் மொழியைப் புணர்ந்து கவிதையாகும் படைப்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து உணர்ச்சிப்பெருக்குகளுக்கு இடம் தராமல் கவிதைகள் தொகுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அடுத்தக்கட்ட ஆய்வுகள் சாத்தியப்படும்.

இறுதியாக, மனவடு கோட்பாட்டுச் சட்டகத்தளம் என்பது கவிதை வாசிப்பின் ஒரு வகை மட்டுமே. இந்த ஒற்றைப் பார்வைக்குள் மட்டுமே அவை வாசிக்கப்பட வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் ஈழக்கவிதைகள் இப்படி ஒரு தளத்தை நிறுவி இவ்வகையான வாசிப்புக்கு இடமளிக்கின்றன என்பதை மறுக்க இயலாது.

குறிப்புகள்:

1.Sigmund Frued, Beyond the Pleasure Principle. P.301

2. Albert Camus, The Myth of Sisyphus and Other Essays, (Vintage Books, 1991),121

3. Steff Craps, Beyond Eurocentrism:trauma theory in the global age, The Future of Trauma Theory, (Routledge, 2014).

4.Ananya J.Kabir, Affect, Body, Place: trauma theory in the world, Ibid

5. Kumkum Sangari, Viraha: A Trajectory in the Nehruvian Era, Poetics and Politics of Sufism and Bhakti

6. Siamanto (ஸியாமந்டொ -நடனம் என்ற அர்மேனியக் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து)

http://www.kalachuvadu.com/issue-185/page40.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.