Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்

Featured Replies

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்

-மதன்

இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன் என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜூ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று, எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது!

வரலாறு சம்பந்தப்பட்ட எதை எழுத ஆரம்பிக்கும்போதும் மனம் ரொம்பத் தெளிவாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் துவங்கி, இந்த இடத்தில் முடிக்கலாம் என்று மூளை நேர்க்கோட்டில் சிந்திக்கும்.

தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவே கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் போவதோ கடலில். ஆரம்பம், முடிவில்லாத பெருங்கடல்!

ஜில்லென்று காற்று வீசும் மெரீனா கடற்கரையை உடனே கற்பனை செய்துகொள்ளாதீர்கள். நான்... நானென்ன? நாம் பயணிக்கப்போகும் கடல் சற்று சிவப்பானது!

சுறாக்களே பயந்து நடுங்கும் கொடூரமான, விசித்திரமான மிருகங்கள் நீந்தும் கடல் அது! ரத்தச் சுவை மிகுந்த வன்முறைக் கடல்!

ஜூ.வி. வாசகர்களே, உங்கள் எல்லோருக்குமே 'உயிர்கள் அனைத்தும் கடலிலிருந்துதான் தோன்றின' என்கிற உண்மை தெரிந்திருக்கும்.

ஆனால், அது நம் கண்ணுக்குத் தெரியும் ஒரே ஒரு கடல் அல்ல... இரண்டு கடல்கள் என்பது தெரியுமா? ஒன்று, உடலை உருவாக்கிய வெளிப்படையான கடல். மற்றது, மனதைத் தயாரித்த மறைமுகக் கடல்!

மனிதனின் மூளைக்குள் கொடூரமான 'வன்முறை ஸெல்'களைப் படரவிட்டு, அவனை ஆக்கிரமித்த இந்த இன்னொரு கடலைப்பற்றி எழுதப் போவதாகத்தான் ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டேன்.

பிறகு, அதற்காக நூலகங்களுக்கும் புத்தகக் கடைகளுக்கும் கிளம்பிச் சென்றபோதுதான், திகிலேற்படுத்தும் ஓர் உண்மை புரிந்தது. மனித வன்முறையைப் பற்றிய புத்தகங்கள் அங்கே ஆயிரக்கணக்கில், ராணுவ வீரர்களைப் போல வரிசையாக அலமாரிகளில் அணிவகுத்து என்னைப் பயமுறுத்தின!

தனிமனித வன்முறை பற்றியும் வன்முறைக்கான மனோதத்துவ காரணங்கள் பற்றியும் யுத்தங்களைப் பற்றியும் இனவெறி, மதவெறி பற்றியும் தொடர் கொலைகாரர்களைப் பற்றியும் சர்வாதிகாரிகளைப் பற்றியும் எத்தனையெத்தனை புத்தகங்கள்! எதைப் படிப்பது... எதை எழுதுவது... எதை விடுவது..?! சற்றுத் தலை சுற்றியது!

மனித இனத்தோடு வன்முறையும் வளர்ந்து, அரக்கரூபம் எடுத்த வரலாற்றை முழுவதுமாகப் படித்து முடிக்க, ஒரு மனித ஆயுள் போதாது. இது சத்தியம்!

'சரி, மிக மிக முக்கியமான சில புத்தகங்களை மட்டுமே தேர்ந்தெடுத்துப் படிப்போம்' என்று முடிவு கட்டினேன்.

ஏற்கெனவே, கடந்த ஆண்டுகளில் (இப்படி ஒரு தொடர் எழுதப் போகிறோம் என்றே தெரியாமல்!) நான் படித்திருந்த புத்தகங்களும் இருக்கவே இருக்கின்றன!

எழுதத் துவங்கியபோது, நான் முதலில் நினைத்துப் பார்த்தது வாசகர்களைப் பற்றித்தான்! என்முன்னே வந்து நின்ற அவர்கள் சொன்னது இதுதான்.........

"எங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்தாக வேண்டும். எதையும் விட்டுவிடாதீர்கள். எதை விவரமாகச் சொல்ல வேண்டும், எதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். எதை எழுதினாலும் 'ரம்பம்' போட மாட்டீர்கள், போரடிக்காமல் எழுதுவீர்கள் என்கிற நம்பிக்கை மட்டும் எங்களுக்கு உண்டு. 'மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்' என்று ஒட்டுமொத்தமாக ஒரு தலைப்புக் கொடுத்துவிட்டீர்கள்! அந்தத் தலைப்பை, உங்கள் தொடர் மூலம் அழுத்தந்திருத்தமாக நிரூபிக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. இதோ, நாங்கள் தயார்!"

நல்லது! நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்து வரும் வன்முறைகளைப் பற்றிப் பல கோணங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள்!

மனிதர்கள் மேற்கொள்ளும் பல அக்கிரமங்களையும் கொடூரங் களையும் பற்றிப் படித்த பிறகு, உங்கள் மனதில் தோன்றும் ஒரு கேள்வி 'ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்?' என்பதாகத்தான் இருக்கும்.

சிம்பிளான, அதேசமயம் சிக்கலான இந்தக் கேள்விக்கான பதில்களைத்தான், என்னால் முடிந்தவரை இந்தத் தொடரில் விவரிக்கப் போகிறேன்.

கூடவே, உங்களை எச்சரிக்கவும் வேண்டி யிருக்கிறது!..

எந்தவொரு விஷயத்திலும் சற்று ஆழமாகப் போய்ப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளும் அனுபவங்களும் சற்று வேறு மாதிரியானவை. 'உண்மை கசக்கும்' என்பது நிஜமான வார்த்தை!

நான் எழுதப்போவதும் கசப்பான உண்மைகள்தான். அதற்காக உங்களைத் தொய்வடையச் செய்யும் 'பெஸ்ஸிமிஸ்டிக்' ஆன ஒரு தொடர் இது இல்லை. கலவரப்படுத்துவதற்காக எழுதப்படும் தொடரும் அல்ல..!

ஒரு மனித உடலுக்குள் வளர்ந்துவிட்ட கட்டி (Tumor) ஒன்றை 'ஸ்கேன்' பண்ணிப் பார்த்து ஆராய்ச்சி செய்தால்தான், அதை அகற்றுவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.

மனிதனுக்குள்ளே, அவனுடைய மூளையில் ஒரு பாதாள அறையில் அமர்ந்திருக்கும் கொடூரமான மிருகம்,Tumorஐவிட ரொம்பச் சிக்கலானது.

சிலரிடம் கடைசிவரை அந்த மிருகம் வெறுமனே அமர்ந்துவிட்டு மரிப்பதும் உண்டு. சிலரிடம் அது அவ்வப்போது வெளிப்பட்டு தன் கோரப் பற்களைக் காட்டி லேசாக உறுமுகிறது. சிலரிடம் அது அரக்கத்தனமாக விஸ்வரூபமெடுத்து ஆக்கிரமிப்பு செய்கிறது. அப்போது மனிதன் முழுசாக அதன் கைப்பாவை ஆகிவிடுகிறான்!

அந்தப் பாதாள அறைக்குள் நாம் புகுந்து பார்த்துவிடுவோமா?! எதையுமே நேரில் பார்த்து, எடை போட்டுவிட்டால் உண்மை புரிந்துவிடும். நம்மைச் சிந்திக்கவைத்துத் தெளிவு தரக்கூடியது உண்மை மட்டுமே!

ஒரு குறிப்பு: சற்று அதிகமான பயங்கரங்களை நுணுக்கமாக விவரிக்கும் 'பாரா'க்களின் துவக்கத்திலும் முடிவிலும் இந்த குறி 'தி' இருக்கும். லேசான மனம் உள்ளவர்கள், அந்த பாராவை மட்டும் தவிர்த்துவிட்டுப் படிக்கலாம். 'அந்த பாராவை இன்னும் ஆர்வமாகப் படிக்கவைக்கும் ட்ரிக் இது' என்று வாசகர்கள் தயவுசெய்து நினைக்க வேண்டாம்!

இந்தியாவில் தேர்தல் வரும்போதுதான் கருத்துக் கணிப்பு, புள்ளிவிவரங்களுக்கெல்லாம் திடீர் மதிப்பு வரும். அமெரிக்காவுக்குப் 'புள்ளிவிவர நாடு' என்றுகூடப் பெயர் வைக்கலாம்! 'தெருவில் நடந்தவாறு பாப்கார்ன் சாப்பிடுகிறவர்கள் எத்தனை பேர்?' என்கிற புள்ளிவிவரம்கூட அங்கே கிடைக்கும்! ஆகவே, மனித சமுதாயத்தைப் பற்றிய பல தகவல்களுக்கு நாம் அமெரிக்காவுக்குப் போக வேண்டியிருக்கிறது.

பலவிதங்களில் மிகவும் முன்னேறிய ஜனநாயக வல்லரசாகத் திகழும் அமெரிக்காவுக்குள், அதன் ஜிகினா திரைகளையெல்லாம் விலக்கிக்கொண்டு போய்ப் பார்த்தால், பயத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தும் அளவுக்குச் சில அவலமான உண்மைகள் மேடைமீது ஏறுகின்றன!

சாம்பிளுக்குச் சில இதோ...

கடந்த இருபதாண்டுகளில் நாலு கோடி தனிப்பட்ட அமெரிக்கர்கள் வன்முறைக்கு இரையாகி இருக்கிறார்கள். இருபத்திரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை ஒரு அமெரிக்கராவது கத்தியால் குத்தப்பட்டோ, துப்பாக்கியால் சுடப்பட்டோ செத்துப் போகிறார்.

உலக மக்கள்தொகையில் அமெரிக்காவின் பங்கு ஐந்து சதவிகிதம். ஆனால், உலகெங்கும் திரியும் தொடர் கொலைகாரர்களில் (Serial Killers)எழுபத்தைந்து சதவிகிதக் கொலைவெறியர்கள் வசிப்பது அமெரிக்காவில்தான். F.B.I. தரும் தகவல்படி, தற்போது சுமார் ஐந்நூறு சாடிஸ சீரியல் கொலைகாரர்கள் இன்னும் போலீஸ் கையில் பிடிபடாமல் அங்கே வளைய வந்துகொண்டிருக்கிறார்கள்! அமெரிக்க போலீஸ், தங்கள் புத்திசாலித்தனத்தையெல்லாம் பயன்படுத்தித் தேடித் தேடி, ஒருவழியாகப் பிடித்துச் சிறைக்குள் தள்ளியிருப்பது நூற்றுஅறுபது கொலைவெறியர்களை மட்டுமே!

ஆயிரம் வசதிகள் இருந்தும், வன்முறைக்கு நடுவில் அச்சத்தோடு அமெரிக்கர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயம் ஒரு 'அப்ஸெஷனாக' அங்கே தளும்பிக் கொண்டிருக்கிறது! ஹாலிவுட் சினிமாவிலும் இது எதிரொலிக்கிறது. அங்கே தயாரிக்கப்படும் படங்களில் எட்டுக்கு ஒரு படத்தில் மிருகத்தனமான பாலியல் வல்லுறவுக் காட்சி உண்டு! ஒரு அமெரிக்கச் சிறுவனுக்குப் பதினெட்டு வயதாவதற்குள், அவன் நாற்பதாயிரம் கொலைகளை டெலிவிஷனில் பார்க்கிறான்.

ஏன் அங்கே இப்படி?!

இப்படிப்பட்ட புள்ளிவிவரங்கள் அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும்தான் தயாரிக்கப்படுகின்றன என்பதால், மற்ற நாடுகளில் மனிதர்கள் சற்று மேம்பட்டவர்களாக இருப்பதாகத் திருப்திப் பட்டுக்கொள்ளத் தேவையில்லை!

வன்முறையின் அகோர அலைகள் அத்தனை உலக நாடுகளையும் சூழ்ந்துகொண்டிருக்கிறது. வன்முறை மனித இனம் முழுவதற்கும் பொதுவானது.

எல்லா நாடுகளிலும் தனிப்பட்ட (புலியைப் போல வலம்வரும்) கொலைகாரர்கள் உண்டு. கூட்டமாக இருக்கும்போது வந்து சேரும் கொலைவெறி வேறு வகை! உலகெங்கும் கொலைகார ஆட்சியாளர்களும் வந்துபோகிறார்கள். முதலில், தனிப்பட்ட ஓரிரு பயங்கர மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன். ஒரு தனி மனிதன் எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபடுவான்?! உங்களால் கற்பனை செய்ய முடியுமா? சரி, நானே சொல்கிறேன்!

மேலும்...

Thanks: http://www.vikatan.com/jv/index.html

  • தொடங்கியவர்

மனிதமிருகம் - 2

சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் ரொம்ப காலமாக போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி வந்த ஜெஃப்ரி டாமர் என்கிற கொலைகாரன், கடைசியில் ஒரு வழியாக போலீஸ் கையில் சிக்கிக் கொண்டான்.

தன்னந்தனியாகச் செயல்பட்ட டாமர், ஒரு சாடிஸ செக்ஸ§வல் கொலைகாரன். யாராவது ஒரு அப்பாவிப் பெண்ணை (அல்லது இளைஞனை) போகிற போக்கில் தேர்ந்தெடுத்துக் கடத்திக்கொண்டு போய்ப் பல மணி நேரம் விதவிதமாகச் சித்ரவதை செய்து முடிவாக கழுத்தை நெரித்து தீர்த்துக் கட்டிய பிறகு, அந்த உடலோடு செக்ஸ் வைத்துக்கொள்வது டாமருக்கு ரொம்பப் பிடிக்கும்!

தி டாமர் பிடிபட்ட பிறகு, புறநகரில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் இருந்த அவனுடைய கச்சிதமான வீட்டுக்குள் போலீஸார் நுழைந்து சோதனை போட்டார்கள். வீட்டுக்குக் கீழே இருந்த ஒரு பாதாள அறைக்குள் நுழைந்து பார்த்த துணிவு மிகுந்த காவலதிகாரிகள் அனைவரின் நெற்றிகளும் சரேலென்று வியர்க்க ஆரம்பித்தது. சிலர் வெளியில் ஓடிவந்து வாயிலெடுத்தார்கள்.

அங்கே அறை முழுவதும், வெட்டப்பட்ட கை, கால், தலைகள் சிதறிக் கிடந்தன. ஆஸிட் நிரப்பப்பட்ட ஒரு பெரிய 'மீன்தொட்டிக்குள்' அழுகிப்போன (தலை, கை|கால்கள் இல்லாத) உடல்கள் மெள்ள மிதந்து கொண்டிருந்தன. ஃப்ரிஜ் ஒன்றுக்குள் வரிசையாகத் தலைகள் அடுக்கப்பட்டிருந்தன! இன்னொன்றில், ஐஸ் படர்ந்து வெளுத்துப் போன நாலைந்து இதயங்கள், கூடவே கச்சிதமாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆண் உறுப்புகள் (தன் செக்ஸ் பசிக்காக இளைஞர்களையும் டாமர் விட்டு வைக்கவில்லை!).

மனித உடல் பகுதிகளைக் காய்கறிகளைப் போல சாப்பாட்டிலும் பயன்படுத்தினான் டாமர்!

போலீஸ் விசாரணையில், அவன் சாவதானமாகச் சொன்னான் 'வீட்டில் இடமில்லை. எலும்புகள் ரொம்பச் சேர்ந்துவிட்டது. ஆகவே, அவற்றைச் சுத்தியலால் பொடியாக்கி, கிளிஞ்சல்களைப் போல மூட்டைகளில் கட்டி வைத்திருக்கிறேன். தலைகளை தனியே வெட்டி எடுத்துக் கொதிக்கும் நீரில் போட்டு, தோல்களை உரித்துத் துடைத்து, மண்டை ஓடுகளின்மீது சம்பந்தப்பட்டவரின் பெயர், வயது, கொலை செய்த தேதி போன்ற தகவல்களை எழுதி வைத்துவிடுவேன்!

கோர்ட்டுக்கு டாமர் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது, கூடியிருந்த பெரும் கும்பலிலிருந்து ஒரு நிருபர் எட்டிப் பார்த்துக் குரூரமாக ஒரு கேள்வி கேட்டார்| 'டாமர், மனித உடலில் சுவையான பகுதி எது?'

'Bicep!' (புஜம்) என்று பதில் வந்தது!ணி

வாசகர்களே! டாமர் பற்றி விரிவான தனிப் புத்தகமே உண்டு. டாமர் வசித்த வீட்டில், அந்த அறைக்குள் போலீஸ் கண்ட காட்சியை மட்டுமே, அதையும் சுருக்கமாகத்தான் இங்கே விவரித்திருக்கிறேன்.

சற்று நுணுக்கமான விவரிப்புக்குக் காரணம், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பியதுதான்!

டாமர் கொடூரமானவனா(Bad) அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவனா (Mad)?

'இரண்டும்தான்!' என்று கோபத்துடன் நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது!

ஸாரி, ஒன்றைத்தான் நீங்கள் சொல்ல வேண்டும். ஏனெனில், அதை முடிவு கட்டினால்தான், நீதிபதி அவனுக்குத் தண்டனை வழங்க முடியும்!

ஒரு குற்றவாளி, தான் செய்த காரியத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். தான் குற்றம் செய்வதே தெரியாத அளவுக்கு அவனுடைய மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், மரண தண்டனை வழங்க முடியாது.

கொலை செய்யவேண்டும் என்கிற வெறி வந்துவிட்டால், அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்றும் அந்தக் கட்டுப்பாடு அவனுடைய சக்திக்கு உட்பட்டதல்ல என்பதையும் மனோதத்துவ நிபுணர்கள் நிரூபித்தால்கூடப் போதும்... மரண தண்டனை தரமுடியாது!

திடீர் ஆவேசம் காரணமாக, விநாடியில் கத்தியை எடுத்து எதிரே இருப்பவரின் உடலுக்குள் செலுத்துவது வேறு. திட்டம் போட்டுக் காத்திருந்து ஒருவரைக் கொல்வது வேறு. அதுவே, மனநிலை பாதிக்கப்பட்டுக் கொலை செய்வது வேறு!

வாசகர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகள் (Emotions) சட்டத்துக்குக் கிடையாது! மூளையை மட்டும் பயன்படுத்தி, அது தீவிரமாக ஆராய்ந்து நீதி வழங்கும்!

"கொலைவெறி வந்தால், நம்மைப் போல அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. உடனே கொலையைச் செய்தாக வேண்டும். அதற்கு அவன் காரணமல்ல... டாமர் சிந்திக்க முடியாத, ஒரு உருண்டு முன்னேறும் கொலைகார ராணுவ டாங்கி மாதிரி! அந்த டாங்கி தானாக முன்னேறி உயிர்களைக் குடிக்கிறது. டாமர் அதற்குப் பொறுப்பல்ல..." என்று குற்றவாளியின் சார்பில் வக்கீல் வாதிட்டார்.

கொலையின்போது படிப்படியாக டாமர் மேற்கொண்ட அணுகுமுறை, அவனது ரசனை மற்றும் 'சாதாரண' காலங்களில் அவன் மேற்கொண்ட அமைதியான வாழ்க்கை, அவனுடைய நகைச்சுவை உணர்வு (Biceps!)...... இப்படிப் பல விஷயங்கள் டாமருக்கு எதிராகப் போனது!

"டாமருக்குத் தரவேண்டியது ட்ரீட்மெண்ட் இல்லை... பனிஷ்மெண்ட்!" என்று ஜூரி ஏகமனதாகச் சொல்ல...

"தொடர்ந்து பதினைந்து ஆயுள் தண்டனைகளை ஒருசேர அனுபவிக்க வேண்டும்..." என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி (டாமர் வசித்த விஸ்கான்ஸின் மாநிலத்தில் மரண தண்டனை கிடையாது!).

சிறைப்பட்ட 950|வது நாளன்று ஒரு சக கைதி, 'டாமருக்குத் தரப்பட வேண்டியது மரண தண்டனைதான்' என்று முடிவு கட்டி, அவன் பாத்ரூமில் அசந்திருந்த சமயம் பார்த்து ஒரு இரும்புத் தடியால் டாமரை அடித்துக் கொன்றான்!

'எங்களைப் போன்ற சாமானிய மனிதர்கள் வேறு. டாமர் போன்ற கொலை மிருகங்கள் வேறு... கொலை மிருகங்களையும் சாமானிய மனிதர்களையும் ஒரே தராசில் எடை போடாதீர்கள்!' என்று வாசகர்கள் ஆட்சேபிக்கலாம். சற்றுப் பொறுமையாக இருங்கள்.

இதையெல்லாம் படித்துவிட்டு நீங்கள் சற்றுப் பதற்றமடைந்திருந்தால், நான் உங்கள்முன் வைக்கப்போகும் சில கேள்விகள், உங்களை மேலும் தர்மசங்கடப்படுத்தக்கூடும்!

உண்மைதான்! பெரும்பாலான உலக மக்கள் அன்றாட வாழ்க்கையை ரொம்பச் சாதாரணமாக, அமைதியாகத்தான் கழிக்கிறார்கள். அவர்கள் யாரும் திருடுவதில்லை, கற்பழிப்பதில்லை, கொலை செய்வதில்லை அநேகமாகக் கடைசி மூச்சுவரை!

அப்படியென்றால் மனித இனத்தில் டாமர் போன்றவர்களின் கொலைகாரப் பிரிவு வேறு, அமைதியாக வாழும் நல்லவர்களின் பிரிவு வேறு என்று அடித்துச் சொல்ல முடியுமா? சொல்லலாம்தான்... ஆனால், அது முழு உண்மையல்ல!

மனோதத்துவ நிபுணர்கள், 'வன்முறையாளர்களுக்கும் சாமானியர்களுக்கும் உள்ள இடைவெளி ரொம்பச் சின்னது' என்கிறார்கள். அதாவது, குறிப்பிட்ட ஒரு குற்றத்தைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணமே துளிர் விடாத ஒரு மனிதனைக் காட்ட முடியாது!

சரி, உங்கள் கையருகே ஒரு பட்டன் இருக்கிறது. ரிமோட் கண்ட்ரோல்! அதை நீங்கள் அழுத்தினால், உங்களுக்குப் பிடிக்காத ஒரு நபர் இன்றிரவு (இயற்கையாக!) இறந்துபோவார் என்றால், அந்த பட்டனைப் பயன்படுத்துவீர்களா?

உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் மேலதிகாரி, மிரட்டும் கடன்காரர், பிடிக்காத தலைவர், துரோகம் செய்த 'நண்பன்', உங்கள் வீட்டுப் பெண்களைக் கிண்டல் செய்த ரௌடி... இப்படி நீங்கள் வெறுக்கும் பலர் இருக்கக்கூடும். யோசித்துச் சொல்லுங்கள்..!

பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமை காக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. அதீதக் கோபத்தில்கூடக் கத்தியை எடுத்து ஒருவரைக் கொல்லும் அளவுக்கு நாம் போக மாட்டோம்தான்!

அதுவே, அன்றாட வாழ்க்கையில் பல்வேறுவிதமான வன்முறைகளில் நாம் நாட்டம் காட்டுகிறோம் என்பதும் உண்மை!

கொலையெல்லாம் செய்யாத ஒரு சாமானிய மனிதன்தான், மனைவியை சாடிஸத்தோடு துன்புறுத்துகிறான். வயதான தாய், தந்தையருக்குச் சாப்பாடு போடுகிற ஒரே காரணத்துக்காக, மறைமுகமாகப் பலவிதங்களில் அவர்களை வேலை வாங்குகிறான்.

மருமகள்களைக் கொடுமைப்படுத்தும் மாமியார்கள் எத்தனை பேர்? வாயில்லாப் பூச்சியான கணவனின் தாயை ஏசித் துன்புறுத்தும் மருமகள்கள் எத்தனை பேர்?

உங்களைப் பிடிக்கவில்லை என்பதற்காகக் குரூரமாக நடத்தும் சாடிஸ மேலதிகாரிகள் உண்டா, இல்லையா?

குழந்தைகளைப் பணிக்கு அமர்த்தி, கேட்பாரில்லை என்பதற்காக அவர்களை அடித்துத் துன்புறுத்தும் முதலாளிகள் இருக்கிறார்களா, இல்லையா?

தன்னிடம் கல்வி கற்க வந்த சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் ஆசிரியர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?

கெட்ட எண்ணத்தோடு உங்களை 'ஆட்கொள்ளும்' போலிச் சாமியார்கள் எத்தனை பேர் உண்டு?!

ஜூ.வி|யை வாரம் இருமுறை படிப்பவர்களான நீங்கள், சற்று நெஞ்சைத் தொட்டு மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்!

எடுத்த எடுப்பிலேயே இந்தக் கேள்விகளை வாசகர்கள் முன், நான் வைப்பதற்குக் காரணம் பரபரப்புக்காக மட்டும் இந்தத் தொடரை நீங்கள் படிக்கக்கூடாது என்பதற்காகத்தான்!

மேலும்...

  • 1 year later...

இன்று தான் இந்த தொடரை தற்செயலாய் பார்க்க நேரிட்டது. விறுவிறுப்பாக இருக்கிறது. ஏன் நிறுத்திவிட்டீர்கள்? தொடர்ந்து எழுதுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.