Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கையை வியாபாரம் ஆக்காதீர்கள்! - ‘மண்புழு நண்பன்' சுல்தான் இஸ்மாயில் நேர்காணல்

Featured Replies

sultan_2429966f.jpg

பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்
 
மண்புழு என்றால் இளக்காரமாகப் பார்க்கும் பார்வை ஒன்று உண்டு. அதை மாற்றி மண்புழுக்களின் மீது மக்களுக்கு மரியாதை பிறக்கச் செய்த மனிதர் அவர். "நான் இருக்கும் வரை மண்புழுக்களுக்கு இடையே எனது வாழ்க்கை. நான் இறந்த பிறகு என் மீது மண்புழுக்களின் வாழ்க்கை!" - இதுவே, பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறும் எளிய வாழ்க்கைத் தத்துவம்.
 
இந்தியாவில் 80-களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு 'வெர்மிடெக்' என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கும். மண்புழுக்களைக் கொண்டு உரம் தயாரிக்கிற பேராசிரியருடைய கண்டுபிடிப்பு, இந்திய விவசாயத்தில் மிக முக்கியமான புரட்சி. 'உலகச் சுற்றுச்சூழல் நாளை' ஒட்டி அவரை சந்தித்து உரையாடியதில் இருந்து...
 
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றால் உடனே புலி, யானை போன்ற பெரிய உயிரினங்களைப் பாதுகாப்பதுதான் என்று தவறாக நினைத்துக்கொள்கிற நிலையே இருக்கிறது. உங்கள் பார்வை என்ன?
 
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உயிரினங்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும் ஒரு சிந்தனை மக்களிடையே தோன்றியிருக்கிறது. ஆனால் உண்மை அப்படியில்லை. காடுகள், மண் வளம், நீர் வளம், பறவைகள், பூச்சிகள், பருவநிலை என அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
 
உதாரணத்துக்குப் புலியை எடுத்துக்கொள்வோம். அது ஒரு பெரிய மானை அடித்தால், குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு அதைப் பத்திரப்படுத்திச் சாப்பிடும் வழக்கம் கொண்டது. அப்படியென்றால் ஓர் ஆண்டுக்கு 52 மான்கள் தேவைப்படும். ஒரு காட்டில் குறைந்தபட்சம் 520 மான்கள் இருந்தால்தான் புலிக்குத் தொடர்ந்து இரை கிடைத்துக்கொண்டே இருக்கும்.
 
ஆனால், அந்த அளவுக்கு மான்கள் இருக்க வேண்டும் என்றால், அங்குத் தாவரங்கள் செழிப்புடன் இருக்க வேண்டும். வளமான தாவரவியல் பன்மை இருக்க வேண்டுமென்றால், அங்கு மண் வளம் நன்றாக இருக்க வேண்டும். அதனால்தான் எல்லா வளத்தையும் தரும் மண்ணை 'தாய்மண்' என்று அழைக்கிறோம். அந்த மண் நல்ல வளத்துடன் இருக்க வேண்டும் என்றால், அங்கு மண்புழுக்கள் உயிர்த்திருக்க வேண்டும். அதனால்தான் 'மண்புழு மண்ணுக்கு உயிர்நாடி' என்கிறோம்.
 
இந்த ஆண்டு 'சர்வதேச மண் வள' ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் முக்கியத்துவம் என்ன?
 
மனிதர்களில் பல வகைகள் இருப்பது போலவே, மண்ணிலும் பல வகைகள் உண்டு. மண்ணைக் குறிப்பாகக் களிம்பு, சவுடு, மணல் என மூன்றாகப் பிரிக்கலாம். இடத்துக்கு ஏற்றதுபோல், இவற்றின் விகிதாச்சாரமும் மாறலாம். இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுக்கவே மண் வளம் சீரழிந்து வருகிறது. மண்ணில் உப்புத்தன்மை அதிகரித்துவருகிறது. இந்திய மண்ணில் 'கரிமச் சேர்மங்கள் உள்ளடக்கம்' (organic compound content), 4 முதல் 5 சதவீதம்வரை இருந்தால் நல்லது.
 
ஆனால், தற்போது அதன் தேசியச் சராசரியே 0.5 சதவீதம்தான். இதை அதிகரிக்கச் செய்ய மண்புழு உரத்தால் முடியும். தவிர, நீர் அதிகம் தேவைப்படாத சிறுதானியங்களை விளைவிப்பதன் மூலமும் மண்வளத்தை மீட்டெடுக்கலாம். காரணம், இவற்றுக்கு ரசாயன உரங்கள் தேவைப்படாது.
 
மண்புழு மீது உங்கள் கவனம் எப்படித் திரும்பியது?
 
அடிப்படையில் நான் விலங்கியல் மாணவன். 1978-79-ல் சென்னை புதுக் கல்லூரியில் எம்.ஃபில். படிப்பை முடித்து, அங்கேயே ஆசிரியப் பணியிலும் சேர்ந்தேன். அப்போது ஒரு மாணவர் என்னைச் சந்திக்கவந்தார். அவருக்கு எம்.ஃபில். படிக்க அங்கு இடம் கிடைக்கவில்லை. ஆனாலும், ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற துடிப்பும், ஆர்வமும் அவரிடம் இருந்தது. அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, கல்லூரியின் ஆய்வக உதவியாளர் எங்களைக் கடந்து சென்றார். 'ஆய்வகத்தில் என்ன உயிரினங்கள் இருக்கின்றன?' என்று அவரிடம் கேட்டேன். 'மண்புழு இருக்கு, சார்' என்றார். உடனே அது குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினோம்.
 
எங்கள் கண்டறிதல்களை ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டோம். 1980-ம் ஆண்டு மண்புழுவின் இயல்புகள் குறித்து இந்தியாவில் வெளியான முதல் ஆய்வுக் கட்டுரை அது. பிறகு அது எவ்வாறு விவசாயத்துக்கு உதவும் என்பது குறித்துப் பல ஆய்வுகளைச் செய்தோம்.
 
இவற்றை அடிப்படையாக வைத்துச் சில போலிகளும் அப்போது வந்தனர். அவர்கள் அறிமுகப்படுத்திய வெளிநாட்டு மண்புழுக்கள் நமது மண்ணைச் சீரழித்தன. எங்கிருந்து வேண்டுமானாலும் மண்புழுக்களைக் கொண்டு வரலாம். ஆனால், அவை அந்தந்த மண்ணில் இருந்து பிறந்தவையாக இருந்தால் மட்டுமே, அது பயன்படும்.
 
இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும், உண்மையை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று முயன்றபோதுதான் வந்தனா சிவா, நம்மாழ்வார், கிளாட்ஆல்வாரெஸ் போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. அனைவரும் சேர்ந்து 'அரைஸ்'(ARISE - Agriculture Renewal in India for Sustainable Environment) எனும் இயக்கத்தை ஏற்படுத்தினோம். அதன் மூலம் மக்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வையும் அக்கறையையும் ஏற்படுத்த முடிந்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சி!
 
'பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவை தீவிரமடைய இந்திய விவசாயம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. கால்நடைகள் அதிகம் பயன்படுத்தப்படுவது இதற்குக் காரணம்' என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறதே. இது சரியா?
 
மாடு, எருமை போன்றவற்றின் சாணத்தில் இருந்து மீத்தேன்உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் தோன்றுவது உண்மைதான். இது ஆய்வகரீதியான கண்டுபிடிப்பு.
 
ஆனால், கள ரீதியான கண்டுபிடிப்பை வைத்துப் பார்க்கும்போது, கால்நடைகளின் சாணத்தை உடனடியாக எருவாக மாற்றி பயன்படுத்தும்போது, அதில் உள்ள நைட்ரஸ் வாயுக்கள் மண்ணுக்கு வளம் ஏற்படுத்தும் நைட்ரேட் உயிர்ச்சத்தாக மாறிவிடுகின்றன. சாணத்தைவிட சிறந்த எரு எதுவும் கிடையாது. கோமியத்தைவிட சிறந்த பூச்சிக்கொல்லியும் கிடையாது. ஆனால், இன்றைக்குப் பெரும்பாலான விவசாயிகள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இன்றைக்குத் தீவிரமாகிவிட்ட நுகர்வுக் கலாசாரத்தில் விவசாயிகள் மீது மக்களுக்கு மரியாதை இல்லை. அது விவசாயிகளை, ரசாயனத்தின் உதவியை நாட வைத்திருக்கிறது.
 
இன்று தமிழகத்தில் அதிகளவு இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர, பசுமை அங்காடிகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?
 
பணி நிமித்தமாக நான் கிராமப்புறங்களுக்குச் செல்வதுண்டு. அங்கு மக்களிடையே உரையாடியபோது, 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஏக்கரில் 30 முதல் 60 மூட்டை நெல் விளைவித்தோம் என்று கூறுவார்கள். ஆனால், ரசாயன உரங்கள் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, 19 அல்லது 20 மூட்டைதான் விளைவிக்க முடிகிறது என்கிறார்கள்.
 
இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் என்னைப் போன்றோர், அதனால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிடுவோம் என்று கனவு காணவில்லை. என்றாலும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தும்போது கிடைக்கக்கூடிய விளைச்சலின் அளவுக்குச் சமமாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இயற்கை விவசாயம் மூலம் பெற முடியும் என்பதையே வலியுறுத்துகிறோம்.
 
இன்னொரு புறம் இப்படி இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைப் பசுமை அங்காடி என்ற பெயரில் விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்துவருகின்றன. ஆனால், அங்கே பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது. காரணம் பெருநிறுவனங்களைப் போல அல்லாமல், ஒவ்வொரு விவசாயியிடமும் நேரடியாகச் சென்று பொருட்களை வாங்கி, அதை ஓரிடத்துக்குக் கொண்டுவர வேண்டியுள்ளது. இந்தப் போக்குவரத்து செலவுகள்தான் பெரும்பாலும் விலையில் பிரதிபலிக்கின்றன.
 
ஆனால், அதையே காரணமாகக் கூறிக்கொண்டு, இஷ்டத்துக்குப் பொருட்களின் விலையை நிர்ணயித்து அநியாய விலையில் விற்பனை செய்கிறார்கள். இதனால் ‘மக்களின் நலனுக்காக‘ என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நற்செயல், மக்களைச் சுரண்டுவதற்குப் பயன்படும் அவலம் நேர்கிறது.
 
முன்பு நான் மண்புழு உரம் தயாரித்தபோது ஒரு கிலோவுக்கு 30 அல்லது 40 பைசாதான் விலை வைத்தேன். அப்போது விவசாயிகள் மாட்டுவண்டியில் வந்து உரத்தை நிரப்பிக்கொண்டு போவார்கள். ஆனால் எப்போது எனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை விட்டுக்கொடுத்தேனோ, அப்போது என்னைப் போலவே பலரும் மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் ஒரு கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை விலை வைத்தார்கள். அப்படியென்றால், ஆயிரம் கிலோ உரம் தேவைப்படும் ஒரு விவசாயி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம்வரை செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் அதைவிட விலை குறைவாக உள்ள ரசாயன உரத்தைத் தேடிப் போக அவர் தூண்டப்படுகிறார்.
 
இயற்கையை நமது தேவைக்குப் பயன்படுத்தி அதில் இருந்து வருமானம் ஈட்டலாம், தவறே இல்லை. ஆனால், எப்போது லாப வெறியுடன் இயங்குகிறோமோ அப்போது இயற்கை அழிக்கப்படுகிறது. தயவு செய்து இயற்கையை வியாபாரம் ஆக்காதீர்கள், நண்பர்களே!
 
மண்புழு உரம் தயாரிப்பது முதற்கொண்டு பல அறிவியல் விஷயங்களைக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்வதில் அதிக அக்கறை காட்டிவருகிறீர்கள். அது குறித்து…
 
ஆங்கிலத்தில் Demystifying Science என்ற சொல்வார்கள். அறிவியல் தொடர்பான தவறான கருத்துகளை நீக்கி, அறிவியல் மேதைகள்தான் கடினமான விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்ற கற்பிதத்தை உடைத்து, குழந்தைகளிடம் அவற்றைக் கொண்டு சேர்ப்பதே அதன் முக்கிய சாராம்சம். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன், அனைவரிடமும்.
 
நம்மைச் சுற்றி நாம் அறியாமலேயே அறிவியல் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவற்றில் சில விஷயங்களில் ஒளிந்திருக்கும் அசாத்தியமான சிந்தனையைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில், 100 அறிவியல் சோதனைகளைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். எளிய முறையில் நமது வீடுகளிலேயே அவற்றைச் செய்துபார்க்க முடியும் என்பதுதான் இதில் சிறப்பம்சம். இந்த அறிவியல் பரிசோதனைகள் 'simple tasks great concepts' என்ற தலைப்பில்யூடியூபிலும், 'ஆப்' ஆகவும் கிடைக்கின்றன. என்னுடைய வலைப்பூவிலும் அவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன (https://simpletasksgreatconcepts.wordpress.com/2010/12/03/hello-world/).
 
இன்றைக்குப் பெரும்பாலான அறிவியல் பேராசிரியர்கள் கல்லூரி செல்வதோடு, தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார்களே…
 
இது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம். இன்று பெரும்பாலான ஆய்வுகள் கல்லூரி, பல்கலைக்கழக ஆய்வகங்களோடு தங்கிவிடுகின்றன. அதன் மூலம் கிடைக்கும் புதிய கண்டறிதல்களைச் சமூகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மக்களோடு மக்களாக இணைந்து, களப் பணியாற்றி, தங்களுடைய ஆய்வு முடிவில் கிடைக்கும் கண்டுபிடிப்புகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதாகப் பேராசிரியர்கள் மாற்ற வேண்டும்.
 
ஆய்வுக்குக் கிடைக்கும் நிதியில் ஒரு பகுதியை விரிவாக்கப் பணிகளுக்காகச் செலவிட வேண்டும் என்று உயர்கல்வி கொள்கையில் விதி கொண்டு வந்தால்தான், இது உத்தரவாதமாக நடக்கும்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.