Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருமற்ற வெளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாருமற்ற வெளி  
அருணன் நிமலேந்திரா - அம்ரித் பெர்ணான்டோ

முள்ளிவாய்க்கால் இப்போதும் பத்திரிகை யாளருக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசம். ஊருக்குப் புதியவர் ஒருவர் முள்ளிவாய்க்கால் வீதியில் நடந்து சென்றால் அரைகுறைத் தமிழ் பேசும் சிவில் உடையணிந்த புலனாய்வாளர்கள் விசாரிக்கத் தொடங்கிவிடுவர். முகாமுக்கும் அழைத்துச் சென்றுவிடுவர். அவர்கள் அடையாள மற்றவர்களெனின் காணாமற் போய்விடுவர். கமராவுடன் தெருவில் நடமாட முடியாது. 2015 மே மாதம் முள்ளிவாய்க்கால், வலைஞர் மடம் முதலான பகுதிகளுக்குச் சென்றபோது பொதுமக்களுடன் உரையாடிப் பதிவு செய்தவற்றில் சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 2009 மே மாதத்தை நினைவுகூர்ந்த மக்களின் கதைகளே இவை. பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. சில இடங்களில் பெயரைக் குறிப்பிடாது கதை மட்டும் பகிரப்படுகிறது. இரட்டை வாய்க்கால் குருதியை உறையச் செய்யும். பாதுகாப்புக் காரணங்களால் சில புகைப்படங்களும் கதைகளும் பகிரப்படவில்லை.

srilanka-01.jpg

இடம்: வெள்ளா முள்ளிவாய்க்கால் (முள்ளி வாய்க்கால் கிழக்கு)

காலம் மே 16, 2009 இரவு 8.00 மணி

வீடு நிறையச் சனம். வீட்டைச் சுற்றி 1000 பேருக்கு மேல் இருந்தனர். சந்திரன் சனங்களை விலத்தி “அத்தை, 6 நாள் சாப்பிடவில்லை” என்று ஈனக் குரலில் அழுதபடி வந்தான். வள்ளிநாயகி தான் சாப்பிட வைத்திருந்த பிட்டைச் சாப்பிட நீட்டுகிறாள். அத்தை என்னோடு 6 பேர் இருக்கினம், 10 மணிக்கு வருகிறோம் என்றுவிட்டுப் பறந்து போனான். வள்ளிநாயகி மாவைக் குழைத்துப்பிட்டு அவித்து விட்டாள். எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. சனங்கள் அழுகிற சத்தம்.

நேரம் கழித்து 6 பேரும் வந்தாங்கள். 2 பேர் கையிலை வைத்திருந்தாங்கள். “சனங்கள் இருக்குது. உதை அங்காலை போட்டுட்டு வரச் சொல்” என்றேன். “அத்தை, எல்லாரும் எங்கடை ஆட்கள்தான் பயப்பிட வேண்டாம்.” சாப்பிடைக்கை சொன்னாங்கள் “இன்னும்

8 பேருக்குச் சாப்பாடு வேண்டும்” என்று. கோதுமை மா இருந்தது. ஒரு கானில் எண்ணெயும் இருந்தது. மாவைக் குழைத்து வாய்ப்பன் சுட்டு வைச்சன். ஒருத்தன் வந்தான் “இரவு பயிற்சி கொடுத்த அக்கா சன்னம் பட்டு விழுந்திட்டா. பயிற்சி முடிந்து இரவு சுத்தியிருந்து சாப்பிடேக்கைதான் பொறுப்பாளர் அக்காவுக்கு சன்னம் பட்டது. அதிலையே போட்டு மூடினம்.

இரவு ஒருவருக்கும் நித்திரையில்லை.”

2009 மே 17

வீட்டு வாசலில் நின்ற சனங்கள் சன்னம்பட்டுக் காயப்பட்டுது. இனி இங்கு இருக்க முடியாது. நந்திக் கடலுக்கு மற்றப் பக்கம் இருந்து சன்னங்கள் வந்து கொண்டிருந்தன. காலை 5.30 பொழுது விடியத் தொடங்கியது. 6 மாதக் குழந்தை - பேர்த்தியைத் தூக்கிக்கொண்டு நடந்தன். கேற்றைத் திறந்து வெளி

யில வாறன். சனங்கள் செத்துக் கிடக்குது. காயம்பட்ட ஆக்கள் கிடந்து அழுகுதுகள். சனவெள்ளம். வட்டுவாகல் பாலத்துக்குக் கிட்டப் போறம். இயக்கத்தின்ர பண்ட் இங்காலை. அங்காலை ஆமியின்ர பெரிய பண்ட். பாலத்தாலையும் கடலுக்காலையும் சனங்கள் போய்க் கொண்டிருந்தது.

ஆமிக்காரன்ட பண்டைத் தாண்டிப் போறம். பிஸ்கற் பெட்டியும் தண்ணிப் போத்தலும் தந்தாங்கள். ஆமி சனங்களை இரண்டாப் பிரிச்சுவிட்டு ஆம்பிளையள் ஒரு பக்கம் பெம்பிளையள் ஒருபக்கம் விட்டு ‘பொடிச் செக்கிங்’ செய்தது.

ஒரு ரென்ருக்குள்ள உடம்பில எங்காவது காயம் இருக்கிதா எண்டு உடுப்பைக் கழட்டிச் சோதிக்கிறாங்கள். ஒரு குமர்ப் பிள்ளை “ஐயோ நான் இயக்கமில்லை” என்று குளர்ற சத்தம். வெளியில நிண்ட எங்களுக்கு நெஞ்சு பதறுது. அதுக்கு செல் பட்டுத் தொடையில காயத் தழும்பு. ஆர் பெத்த பிள்ளையோ?

srilanka-02.jpg

சனங்கள் ஆட்களைத் தேடிக்கொண்டு பிரிஞ்சு போனதுகள். வட்டுவாகல் பாலத்திலிருந்து ஒரு 3 மைல் நடத்திக் கொண்டுபோய் ஒரு வெளியில இருத்தி விட்டாங்கள். சுத்தி முள்ளுக் கம்பி அடிச்சு இருந்தது. பவுசரில் தண்ணி கொண்டு வந்து அடிச்சாங்கள். சனங்கள் அடிபட்டுத் தண்ணி எடுக்குது. எட்டு வயது இருக்கும் ஒரு பெம்பிளைப் பிள்ளை தண்ணிக்குள்ள விழுந்து செத்துக் கிடக்குது. சனங்கள் மிதிச்சுக் கொண்டு தண்ணி எடுக்குது. என்னாலை தண்ணி எடுக்க முடியல்லை. இது எல்லாம் ஒரு கனவுபோல இருக்குது. இந்தக் கதையைச் சொல்ல ஒரு மாதம் போதாது. இப்பிடித்தான் அருணாச்சலம் முகாமில் சாப்பாட்டுப் பாசல் வரும். வவுனியா இந்து இளைஞர் சங்கம், ஆயர்மார் கொணர்ந்து கொடுப்பினம். சாப்பாட்டுப் பாசல் வரப் பின்னேரம் ஆயிடும். எங்களுக்கெண்டு சனங்கள் செய்து கொடுத்தது. புளித்திருந்தாலும் சாப்பிடுவம். ஆமிக்காரர் கொணர்ந்து பாசலை எறியேக்கையும் குழந்தைகள் எடுக்கப்போய் மிதிபட்டுச் செத்துக் கிடந்ததுகள்.

முகாமில நான் குழந்தைப் பிள்ளைக்கு என்று பிஸ்கட்டை வரிசையில் இருந்து வாங்கி வரேக்கை வழியில் காண்கிற ஆம்பிளையளும் பெம்பிளையளும் பறிச்சுக் கொண்டு போகுங்கள். இப்படி ஒரு கேவலத்தை நான் கண்டதில்லை தம்பி. இதால நான் சாமான் வாங்கப் போறதைக் குறைச்சிட்டன். ஒருநாள் இதைப் பார்த்து ஆமிக்காரன் குழந்தைப் பிள்ளை இருக்கு என்டு சொல்லி பிஸ்கட்டைப் பறிக்கவிடாமல் கூட்டி வந்து விட்டான்.

நாங்கள் முள்ளிவாய்க்காலுக்குத் திரும்பி வருவம் என்டு நினைக்கேல்லை. 2013இல் கொணர்ந்து விட்டாங்கள். எல்லாமே தரைமட்டமாகி விட்டுது. ‘ஞிஸிநி’ எங்களுக்கு தகரக் கொட்டிலும் மலசல கூடமும் அமைச்சுத் தந்தாங்கள். இஞ்ச எங்களைத் தேடி எவரும் வந்தால் ஆமி வந்திடும். காம்பிற்கு விசாரணைக்குக் கூப்பிடுவாங்கள். தை 8க்கு முன்னர் என்றால் கெடுபிடி இன்னும் கூட.

தம்பி உன்னைப் போலதான் என்ர பிள்ளையும். பிள்ளையத் தேடி நான் முறையிடாத இடமில்லை; போகாத இடமில்லை. சனாதிபதி ஆணைக்குழு ரெண்டு தரம் கூப்பிட்டாங்கள். நவநீதம்பிள்ளை அம்மா முள்ளிவாய்க்காலுக்கு வாறார் என்று சொன்னாங்கள். அண்டு முழுக்க அலைஞ்சன். அவ அங்க நிற்கிறா. இங்க நிற்கிறா என்றாங்கள். ஒரு மரத்துக்குக் கீழ வெளியில மக்களைச் சந்திச்சா. பத்து பேர் நின்டினம். என்னட்ட கடிதம் எழுதப் பேப்பரும் இல்லை. ஒரு கொப்பிப் பேப்பரைக் கிழிச்சு எழுதினன். புலனாய்வு ஆக்கள் என்ன விட்ட பாடில்லை. நான் என்ன எழுதுறன் எண்டு எட்டி எட்டிப் பார்த்தாங்கள். நான் என்ன சொல்லுறன் என்று தலையை நீட்டிப் பார்த்தாங்கள். எனக்கெண்டு ஆரும் இல்லை. நடைபிணமாய் வாழ்கிறன். கனவில மகன் வந்து கூப்பிடுவதுபோல இருக்கும்.

இந்திய வீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமம் முள்ளிவாய்க்கால் யுத்தத்தால் முற்றாக அழிக்கப்பட்ட கிராமம். யுத்தகாலத்துக்கு முன்னர் 550 குடும்பங்கள் வாழ்ந்த வெள்ளா முள்ளிவாய்க்கால் கிராமத்தில் தற்போது 350 குடும்பங்களே மீள் குடியேறியுள்ளன. இந்திய அரசு வீட்டுத் திட்டத்தின்மூலம் முதற்கட்டமாக 80 வீடுகள் UNHABITAT நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இதைவிட 50 வீடுகள் கரித்தாஸ், போரூட் நிறுவனங்களால் கட்டிக் கொடுக்கப்பட்டன. 2013ஆம் ஆண்டு இந்திய வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தில் 107 வீடுகள் கட்டிக் கொடுக்கவென புள்ளியடிப்படையில் பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு, பெயர்ப்பட்டியலும் கிராம அலுவலரால் பார்வைக்கு ஒட்டப்பட்டிருந்தது. இந்திய வீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்ததால் இந்த 107 பயனாளிகளுக்கும் ஏனைய நிறுவனங்கள் வீடு கட்டிக் கொடுக்கவும் உதவுவதற்கும் முன்வரவில்லை. இந்திய வீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட மக்கள் கடந்த 27.4.2015 அன்று ஊர்வலமாகச் சென்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் மகஜரினைக் கையளித்தனர். தமக்கென்று ஒதுக்கப்பட்ட 107 வீடுகளும் மாயமாய் மறைந்த மர்மம் என்ன என்று கேட்கிறார்கள் நாதியற்றுப் போன தமிழர்கள்.

உலகமே முள்ளிவாய்க்காலுக்கென்று அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்கிறது. ஆனால் முள்ளிவாய்க்கால் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தை அரசாங்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் நீராவிப்பிட்டிக் கிராமத்திற்குத் திருப்பி விட்டதாக முள்ளிவாய்க்காலில் நாதியற்றுப் போன தமிழர்கள் முறையிடுகிறார்கள்.

நிலத்தைக் கிண்டி இரும்பு பொறுக்கி விற்று வாழ்க்கையை நடத்துகின்றார்கள். பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. அண்மையில் இரட்டைவாய்க்கால் பாதையோரம் முகம் சிதைந்த ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இரட்டை வாய்க்கால் பாதையில் பெண்கள் தனியாகச் செல்ல முடியாது. போகும் வழியில் இராணுவ முகாம். பற்றைக்காடு. மனிதர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்?

srilanka-03.jpg

முள்ளிவாய்க்கால் தேனும் பாலும் சொரிந்த கிராமம். பால் மாடு வளர்ப்பார்கள். வீட்டில் மிஞ்சும் பாலையும் தயிரையும் நிலத்திலே வெட்டித் தாள்ப்பார்கள். வீட்டிலே அரியதரம் பலகாரம் சுடுவதென்றால் தேன் விட்டுத்தான் சுடுவார்கள். கழி கிண்டுவதென்றால் தேனை விட்டுத்தான் செய்வார்கள். இன்று அந்தத் தேன் விளையும் காடெல்லாம் கடற்படைவசம். பால் மாடுகளும் இல்லை. மந்தையை மேய்க்கும் இடையனும் இல்லை. முள்ளிவாய்க்கால் ஒரு யுகத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது.

கேணல் ரூபியும் சந்தனப்பேழையில் வைக்கப்பட்ட உடலும்

- ஆரண்ய குமாரன்

ரூபி ஒரு சண்டைக்காரி என்று பெயரெடுத்தவள். வயதில் மூத்த போராளி. போராட்டத்தில் இணைந்து 17 வருடங்கள். வயிற்றில் கட்டி வளர்ந்து அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி ஏற்பட்டது. அவளைத் திருமணம் செய்யக்கூடிய போராளிகள் யாரும் இயக்கத்தில் இல்லை. எல்லோருமே அவளுக்குத் தம்பிமார்தான். அது சமாதான காலம். இயக்கத்துக்கு வெளியில் யாரையாவது திருமணம் செய்துகொடுக்க இயக்க அனுதாபிகள் விரும்பினர். அவளோ மறுத்து விட்டாள். எப்போதாவது அவளைச் சந்திக்கிறபோது அந்தப் பெண் போராளியிடம் காணப்பட்ட மன உறுதியையும் கனவையும் கண்டு நான் ஆச்சரியப்படுவதுண்டு. அவளுக்கென்று எவருமே இல்லை. இயக்கத்தை விட இலட்சியத்தை விட எதையுமே பொருட்படுத்த மாட்டாள்.

வன்னியின் இறுதியுத்தம் கிளிநொச்சியைத் தாண்டி முல்லைத்தீவை நோக்கி நகர ஆரம்பித்தது. 2009 பிறந்தது. தினமும் விமானக் குண்டுகளாலும் எறிகணைகளாலும் முல்லைத்தீவு நகரம் நனைந்து கொண்டிருந்து. அழுகுரல்களும் மரண ஓலங்களும் ஓயாமல் கேட்டன. ஒருபுறம் சண்டையும் நடந்து கொண்டிருந்தது. ரூபி வீரம் செறிந்த பல தாக்குதல்களில் முன்னின்றவள். இம்முறையும் மரணத்தைத் தேர்ந்தெடுத்தவள் போல் தனியாக நின்று சண்டையிட்டு கொண்டிருந்தாள். 3 மணி நேரச் சண்டை, புலிகள் பின்வாங்கி புதிய நிலை எடுத்திருந்தனர். ஆட்கள் அற்ற வெளியில் ரூபியின் உடல் கிடந்தது. 17 வருடங்கள் இயக்கத்தில் இருந்தவளின் உடலை மீட்கவேண்டும் என்று போராளிகள் உறுதியெடுத்துக் கொண்டனர். போராளிகளின் துப்பாக்கி ரவைகள் புறப்பட்டதும் படையினரின் பல்குழல் பீரங்கியும் ஆர்.பீ.ஜியும் முழங்கத் தொடங்கின. படையினரைப் பின்வாங்க வைக்க பீரங்கிப் பிரிவின் உதவியைப் பெறவேண்டி ஏற்பட்டது. 3 நாட்களின் பின்னர், படையினர் சற்றுப் பின்னகர நள்ளிரவில் ரூபியின் உடலை இழுத்து வந்தனர்.

அவளது வீட்டிற்கு எல்லோரும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர். ரூபியின் வித்துடலை விதைப்பதற்காகத் துயிலும் இல்லம் எடுத்துச் சென்றனர். பான்ட் வாத்தியங்கள் எதுவும் இல்லை. வெட்டப்பட்ட புதைகுழியில் பொலித்தீன் பையனுள் பொதியிடப்பட்டிருந்த உடலை அப்படியே கொட்டினர். ரூபி இறந்து 4 நாள்கள் என்று பேசிக் கொண்டனர். உடலில் இருந்து எழுந்த நெடி தாங்காமல் ஓடினர். முகம் ரூபியை அடையாளம் காட்டியது. பையை உதறிவிட்டு கழுவ எடுத்துச் சென்றனர், சாவினைத் தோள் மீது சுமந்த இன்னொரு சந்தன மேனியை எடுத்துவர.


http://www.kalachuvadu.com/issue-186/page21.asp

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.