Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகன் - நளினி... சிறைப் பறவைகளின் காதல் கதை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் - நளினி... சிறைப் பறவைகளின் காதல் கதை!டி.அருள் எழிலன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

 

 முருகன்-நளினி காதலுக்கு வயது 23 வருடங்கள். இதில் சிறையில் பிரிக்கப்பட்டு இருவரும் தனித்திருந்த காலம்... கிட்டத்தட்ட அதே 23 வருடங்கள்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன்-நளினி ஜோடி, தங்கள் காதலுக்குக் கொடுத்த விலை மிக மிக அதிகம்!

1991 பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு. மே மாதம் ராஜீவ் காந்தி கொலை. ஜூன் மாதம் இருவரும் கைதாகிறார்கள். அன்று முதல் இன்று வரை சிறைச் சுவர்களுக்கு இடையில் கிளைத்துக் கிடக்கிறது இவர்களின் காதல்!

''முதல் சந்திப்பு முதல் உங்கள் காதல் கதையை விரிவாகச் சொல்லுங்கள்!'' என்று வழக்கறிஞர் மூலம் வேலூர் சிறையில் இருக்கும் முருகனிடம் பேசியதில் இருந்து...

''நான் முருகன் அல்ல... தாஸ்!''

p28f.jpg''யாழ்ப்பாணம் இத்தாவில் கிராமத்தில் பிறந்தேன். ஓர் அண்ணன், ஓர் அக்கா, மூன்று தம்பிகள், மூன்று தங்கச்சிகள் என நாங்கள் மொத்தம் ஒன்பது பேர். 1987-ல் மூத்த அண்ணன் புலிகள் அமைப்பில் சேர்ந்து மாவீரர் ஆன பிறகு, நானும் புலிகள் அமைப்பில் சேர்ந்தேன். வீட்டில் எனக்கு வைத்த பெயர், ஸ்ரீகரன். அமைப்பு வைத்த பெயர், இந்து. செல்வராசா மாஸ்டர் எனக்குப் பயிற்சி அளித்தார். பயிற்சி முடிந்து புதிய உறுப்பினர்களுக்குப் பயிற்சியாளராகவும், பின்னர் புலனாய்வுப் பிரிவில் விசாரணை அதிகாரியாகவும் வேலை செய்த என்னை, எல்லோரும் 'இந்து மாஸ்டர்’ என்று அழைப்பார்கள். 1991-ம் ஆண்டு ஜனவரியில் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டேன்.

p28.jpgவிடுதலைப் புலிகள் அமைப்பைப் பொறுத்தவரை, நமக்கு அளிக்கப்பட்ட வேலையைச் செய்து முடிக்க வேண்டும். அது தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பற்றி விசாரிக்கக் கூடாது. தற்கொலைப் போராளிகளாகச் செல்பவர்களுக்குக்கூட யாரைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்போகிறோம் என்று தெரியாது. யாருக்காக நமது உயிரைத் தியாகம் செய்யப்போகிறோம் என்பது தாக்குதல் நாளன்றுதான் தெரிவிக்கப்படும். ஏனென்றால், யாரேனும் ஒருவர் பிடிபட்டால்கூட குழுவினரின் நோக்கத்தை அவர் மூலம் கண்டுபிடித்துவிடக் கூடாது அல்லவா! அதுதான் புலிகள் அமைப்பின் பலம். அமைப்பைச் சார்ந்த எவருடனும் பேசக் கூடாது என்ற உத்தரவோடு நான் கடல் வழியே சென்னைக்கு வந்தபோது, எனக்கு வயது 19. சென்னைக்கு வந்தவுடன், 'தாஸ்’ என்று எனக்கு நானே பெயர் சூட்டிக்கொண்டேன்!''

அந்த முதல் சந்திப்பு!

''சென்னை நகரம் எனக்குப் புதியது. முடிவற்ற அதன் பரபரப்புக்கு நான் பழக இன்னும் சில காலம் ஆகும் எனும் நிலையில், பாக்கியநாதன் என்கிற தமிழ் ஆர்வலரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். பாக்கியநாதன், நளினியின் தம்பி. நளினியின் அம்மா பத்மாவுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் (பாக்கியநாதன்). மூத்த பெண்ணான நளினியை நான் அங்கு சென்ற நாட்களில் கண்டதில்லை. இளையவளையும் பாக்கியநாதனையுமே பார்த்திருக்கிறேன். நளினியின் அம்மாவிடம், 'உங்கள் மூத்த மகள் நளினி எங்கே?’ என்று கேட்டேன். 'ஓ..’வென்று கதறி அழுதவர், 'என்னிடம் கோபித்துக்கொண்டு பெரியம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டாள்’ என்று சொன்னார். 'உங்கள் மகளை உங்களுடன் சேர்த்துவைக்கிறேன்... கவலைப்படாதீர்கள்’ என்று அவரைச் சமாதானப்படுத்தினேன். அந்த அம்மாவின் கண்ணீர்தான், நளினியுடனான என் காதலுக்கு விதையாக இருந்தது.

வார இறுதி நாட்களில் நளினியுடன் தங்கியிருப்பார் அவருடைய தங்கை. அவர் மூலம்தான் நளினி எனக்கு அறிமுகமானார். 1991 பிப்ரவரி 8-ம் தேதி முதன்முதலாக அடையாறில் நாங்கள் சந்தித்தோம். அவரைப் பார்த்தவுடன் இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. ஆனால், அதைக் காதல் என்று சொல்ல முடியாது.

அன்றைய தினம் எனது பிறந்த நாள் என்று தெரிந்தவுடன், என்னோடு வந்திருந்த அனைவரையும் அழைத்துச் சென்று எளிமையான ஒரு விருந்தை எனக்குப் பரிசாக அளித்தார். நான் எப்போதுமே என் பிறந்த நாளைக் கொண்டாடியது இல்லை. யுத்தக் களத்தில் அதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஆனால், நளினி என் பிறந்த நாளைக் கொண்டாடச் செய்தது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.p28b.jpg

நளினியை எப்படியாவது அவருடைய தாயாருடன் இணைத்துவைக்க வேண்டும் என்ற நோக்கமும், நளினியைக் காண வேண்டும் என்ற இயல்பான எண்ணத்திலும் நான் அன்றாடம் சைக்கிளை எடுத்துக்கொண்டு அடையாறு செல்லத் தொடங்கினேன். பணியில் இருந்து அவர் வரத் தாமதமானால், காத்திருந்து அவருடன் பேசிவிட்டு அவரைப் பேருந்து ஏற்றிவிட்டு மீண்டும் ராயப்பேட்டைக்குத் திரும்புவேன். பேசும்போது பணியிடங்களில் தனக்கு சில ஆண்களால் ஏற்பட்ட தொல்லையால் வேலை இழக்க நேரிட்டதையும், மேலும் சில கவலைகளையும் நளினி என்னோடு பகிர்ந்துகொண்டார்.

ஒருநாள் நளினிக்கு வேலை தாமதமாக முடிந்தபோது, என்னை அவர் தனியாக சைக்கிளில் ராயப்பேட்டை அனுப்ப விரும்பாமல், வில்லிவாக்கம் பெரியம்மா வீட்டுக்கு என்னையும் அழைத்துச் சென்றார். ஒரு பேருந்துப் பயணத்தில் முதன்முதலாக நாங்கள் இருவரும் நீண்ட நேரம் செலவிட்டது அப்போதுதான். நான் அவருக்கும் அம்மாவுக்கும் இடையிலான பிரிவு பற்றிப் பேசினேன். ஒரு கட்டத்தில் உடைந்து அழுதுவிட்டார். அவரது கண்ணீர் என் கைகளை நனைத்தது. அம்மாவுடன் இணையும் விஷயத்தில், நான் நளினியின் மனதில் பாதியைக் கரைத்துவிட்டேன்.

சில நாட்கள் கழித்து, ஒரு குழுவாக நாங்கள் கோல்டன் பீச் சென்றோம். அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு சென்னைக்கு வர இரவு தாமதமானது. அதனால் வில்லிவாக்கம் செல்லாமல், ராயப்பேட்டையில் அவரது அம்மா வீட்டுக்கு நளினியை அழைத்து வந்துவிட்டேன். நளினி, சுமார் ஒரு வருடம் கழித்து அவருடைய அம்மாவையும் தம்பியையும் பார்த்தார். மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது அது. நளினிக்கு என் மீது ஓர் அபிப்ராயம் வரவும், நட்பு பிரியமாக மாறவும் அந்தச் சம்பவமும் காரணமாக இருந்திருக்கலாம். எப்போதும் போர் விமானங்களையும் இடப்பெயர்வுகளையும் மட்டுமே கண்ட எனக்கு, நளினி எத்தனை பெரிய வரமாக அமைந்தார் என்பதை நான் மட்டுமே அறிவேன்.

மார்ச் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டப் பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. அதற்கு நானும் நளினியும் போனோம். கூட்டம் முடிந்து திரும்பி வரும்போது காந்தி சிலை அருகே சாலையைக் கடக்க முடியாத அளவுக்கு வாகன நெரிசல். 'என் கையைப் பிடிச்சுக்கோ’ என்று சொல்லி, என் கைகளைப் பற்றிக்கொண்டு சாலையைக் கடந்தார் நளினி. அந்தப் பிடிப்பிலும் வார்த்தையிலும் அவ்வளவு பிரியம். அன்று வீடு வரை இருவரும் நடந்தே வந்தோம். எங்கள் காதலுக்கு இரு தரப்பிலும் அச்சாணி விழுந்த நாள் அது!''

p28a.jpg

''இந்தக் காதல் சிக்கலானது!''

''காதல் உணர்வு எங்களை ஈர்த்து இருந்தாலும், நளினியின் எதிர்கால வாழ்வு குறித்து நான் கவலைப்பட்டேன். அந்தக் கவலைகளை ஏற்றுக்கொண்ட நளினி, அதற்கான காரணங்களை நிராகரித்தார். காதலில் உறுதியாக இருந்தார். 'உன்னோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் போதும்’ என்றார். என்னைப் பற்றியும், என் குடும்பம் பற்றியும் கேட்டார்.

பெரிய கனவுகள், ஆசைகள் எதுவும் எங்களிடம் இல்லாவிட்டாலும், வாழ்வின் மீது பெரும் தாகம் இருந்தது. இதை எப்படி அமைப்புக்குச் சொல்வது, நளினியின் அம்மாவும் தம்பியும் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற எண்ணங்களுக்கு இடையில் சில நாட்கள் ஓடின. ஒரு பெண்ணாகப் பிற உயிர்கள் மீது கரிசனத்தோடு இருந்தாரே தவிர, நளினிக்கும் ஈழப் போராட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு போராளியைக் காதலித்ததைத் தவிர, வேறு எந்தத் தவறையும் அவர் செய்யவில்லை!''

''தேவை ஒரு தமிழ்ப் பெண்!''

''சிவராசன் மாஸ்டரை ஒருநாள் பார்க்கப் போனேன். 'இந்திய ராணுவத்தோடு அமைப்புக்கு ஏற்பட்ட முரண்பாட்டால், இங்குள்ள அரசியல் தலைவர்கள் பலரை நாம் பகைத்துக்கொள்ளும்படி ஆனது. ஆகவே, நல்லெண்ணத்தை வளர்க்க அவர்கள் வரும்போது மாலை அணிவிக்க தமிழ்ப் பெண் ஒருவர் வேண்டும்’ என்றார். எனக்கு தமிழகத்தில் தெரிந்த ஒரே பெண் நளினி மட்டும்தான். எங்கள் அமைப்பைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் சிவராசன் கேட்டார் என்று நளினியை அறிமுகம் செய்துவைத்தேன். எனக்கு அமைப்பால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலையும் மீறி, ஒரு மூத்த உறுப்பினரைச் சந்தித்து நளினியை அறிமுகம் செய்துவைத்தேன். நான் வாழ்க்கையில் செய்த ஒரே தவறு அதுதான்!

தணு, சுபா இருவரையும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார் நளினி. எனக்காக, என் மீதான காதலுக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அதைச் செய்தார் நளினி. நான் வழக்கம்போல அமைப்பு சொன்ன உதிரி வேலைகளைச் செய்து வந்தேன். ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு, ஏப்ரல் 22-ம் தேதி திருப்பதியில் வைத்து நளினியின் கழுத்தில் தாலி கட்டினேன். பல்வேறு நெருக்கடிகள் காரணமாக எங்கள் திருமணத்தை ரகசியமாக வைக்க வேண்டியிருந்தது!''

p28c.jpgஅந்தக் கொலைக்குப் பின்...

''மே 21 இரவு, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், அதிர்ச்சியும் குழப்பமும் சரிவிகிதத்தில் என்னைத் தாக்கின. இரவுகள், தூக்கத்தைத் தொலைத்தன. பகல்கள், கொடுந்துயர்மிக்கதாக மாறின. விடுதலைப் புலிகள், அவர்களின் ஆதரவாளர்கள் என அனைவரையும் தேடித் தேடி வேட்டையாடியது காவல் துறை. வெளியே தலைகாட்டவே இல்லை நாங்கள். ஆனால், ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட ஐந்து நாட்கள் கழித்து தணுவின் படம் வெளிவந்தபோது பீதியில் உறைந்துவிட்டோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் எங்கள் உலகத்தைச் சுருக்கியது. நளினியின் தம்பி பாக்கியநாதனை சி.பி.ஐ. அழைத்துச் சென்ற தகவல் தெரிந்து, நளினி வீட்டுக்கு நான் சென்றபோது அவரது அம்மா என்னைத் திட்டினார்.

'என் குடும்பத்தோட வாழ்க்கையையே நாசமாக்கிப் போட்டீங்களே’னு அழுதார். நான் மௌனமாக இருந்தேன். வேறென்ன சொல்ல முடியும்? அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்தார்கள். நான் அவர்களைச் சமாதானப்படுத்தி, தற்கொலை முடிவை நிறுத்தினேன்.

திருப்பதியில் மனமாற்றம்!

மறுநாள் காலை நானும் நளினியும் மீண்டும் திருப்பதி சென்றோம். என்னிடம் இருந்த சயனைடு குப்பி, தண்ணீரில் நனைந்து பாழாகிவிட்டது. புதிய சயனைடு குப்பி கேட்டிருந்தேன். தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்திருந்தோம். ஆனால், திருப்பதி போன மறுநாளில் இருந்து நளினி வாந்தி எடுக்கத் தொடங்கினார். அவர் கர்ப்பமாக இருந்தார்!

தற்கொலை முடிவைக் கைவிட்டோம். சி.பி.ஐ.-யால் தேடப்படும் என்னால், 'கர்ப்பவதி’ நளினியைக் கவனித்துக்கொள்ளவே முடியவில்லை. அவருக்கு வாந்தி நிற்கவே இல்லை. உதவிக்கு யாரையும் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. வேறு வழி இல்லாமல், விழுப்புரத்தில் இருந்த ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றோம். ஆனால், அவர் அங்கு இல்லை. அதனால் அங்கிருந்து சென்னைக்குத் திரும்பினோம். சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது, எங்களைக் கைதுசெய்தது போலீஸ். கைதான சில நாட்களில் எனக்கு, 'மொட்டைத் தலை’ முருகன் என்று பெயர் வைத்தார்கள். ரொம்ப வேடிக்கையான பெயர்!

p28d.jpg

37 கிலோ கர்ப்பிணி!

விசாரணைக் கைதியாக செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, நளினி ஐந்து மாதக் கர்ப்பிணி. அப்போது அவரது எடை, வெறும் 37 கிலோ! நளினியை நான் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சந்திக்க அனுமதி கிடைத்தது. அவரைப் பார்க்க, பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். தரையில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் ஒரு குழந்தை போல தவழ்ந்து, தவழ்ந்து சுவர் ஓரமாக வந்து ஜன்னலைப் பிடித்தபடி எழுந்து நிற்க முயன்றார். நான் ஓடிச்சென்று தூக்க முயன்றபோது, என்னைத் தடுத்தார்கள். 'எனக்குச் சாப்பாடு பத்தலை... ரொம்பப் பசிக்குது. இப்படியே விட்டா, என் பிள்ளை செத்துப்போகும்’ என்று சொன்னார் நளினி. என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் என் செல்லுக்குத் திரும்பி வந்தேன். என்னைக் கைதுசெய்தபோது என்னிடம் 10,000 ரூபாய் பணம் இருந்தது. அதை என்னிடம் தரச் சொல்லியும், நளினிக்கு போதிய உணவு கொடுக்கச் சொல்லியும் சாகும் வரை தண்ணீர் அருந்தாமல் உண்ணாவிரதம் அமர்ந்தேன். அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்தார்கள். அதை முறைப்படி நளினியின் கணக்கில் சேர்த்து, அவருக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்க ஏற்பாடு செய்தேன். பிரசவத்துக்காகக் குறித்த தேதிக்கு பல வாரங்கள் முன்னரே, நளினி பெண் குழந்தையைப் பிரசவித்தார். தாயும் குழந்தையும் மிகவும் பலவீனமாக இருந்தார்கள். மாற்றுத் துணியோ, உணவோ, எதுவுமே எங்களுக்கு இல்லை. ஒவ்வோர் இரவிலும் நளினி அனுபவித்த அந்தத் துன்பம் என்னால் வந்தது என்று இப்போதும் நினைத்து நினைத்து அழுகிறேன். சிறை அதிகாரி ஒருவர், நளினியின் நிலையைப் பார்த்துவிட்டு குழந்தைக்கு பால்மாவு வாங்கிக் கொடுத்தார். சிறைக்கு வந்த பேரறிவாளனின் அப்பா குயில்தாசன், குழந்தை அரித்ராவுக்கு கொசுவலை வாங்கிக் கொடுத்தார். கேட்க இது சாதாரணமாக இருக்கும். ஆனால், அது அப்போது மிகப் பெரிய உதவி.

p28e.jpgரித்ராவுக்கு இரண்டரை வயதானபோது நளினியை சேலம் சிறைக்கு மாற்றினார்கள். அங்கே பாலுக்காகப் பசு மாடுகள் வளர்த்தார்கள். அரித்ரா அந்தப் பசுமாடுகளைப் பார்த்து ஆச்சரியமாக, 'அது என்ன?’ என்று கேட்டாள். நளினி அழுதுவிட்டாள். குழந்தையின் எதிர்காலம் குறித்த அபாயம் உணர்ந்தவர், என்னிடம் உடனே குழந்தையை வெளியுலகத்துக்குப் பரிச்சயமாக்க வேண்டும் என்றார். ஆனால், பொருத்தமான கூட்டில்தானே அந்தச் சிட்டுக்குருவி வசிக்க முடியும். காத்திருந்தோம்.

எங்கள் வழக்கிலேயே சக சிறைவாசியாக இருந்த சுசீந்திரனின் தாயார், ஆசை ஆசையாக அரித்ராவை கோவையில் வைத்து வளர்த்தார். சில ஆண்டுகள் கழித்து ஈழத்துக்குச் சென்ற அரித்ரா, பிறகு அங்கிருந்து லண்டன் சென்றாள். இப்போது அவளுக்கு வயது 22.''

தனிமையே இணை!

''இன்றும் பாதுகாப்பு என்ற பெயரில் தனிமைச் சிறையில்தான் என்னையும் நளினியையும் அடைத்துவைத்திருக்கிறார்கள். ஆறு அடி தூர இடைவெளியில் 10 பேர் சூழ்ந்து நிற்கும் சூழல்தான் நானும் நளினியும் பேசிக்கொள்ளும் 'தனிமைத் தருணங்கள்’! நீண்ட கால சிறைவாசிகளுக்கு செவித்திறன் பாதிக்கப்படும். ஆம்... எனக்கும் நளினிக்கும் செவித்திறன் பிரச்னை உள்ளது. செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ள இருவர், ஆறு அடி இடைவெளியில் என்ன பேசிக்கொள்ள முடியும் என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

நாளை ஒருவேளை என் தண்டனை குறைக்கப்படலாம்... அல்லது நான் தூக்கில் இடப்படலாம்! என் வாழ்வின் எஞ்சிய நாட்களை, ஒருவேளை எஞ்சினால், நான் எப்படிக் கழிக்க வேண்டும் என்பதை இந்த மதில் சுவர்களே தீர்மானிக்கும். வாழ்வின் எந்த சந்தோஷங்களையும் காணாத எனது வாழ்வில், ஒரு வானவில்லைப் போல மின்னி மறைந்த நளினியுடனான காதல் நினைவுகள் மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கின்றன.

நான் என் காதல் மனைவிக்காக கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஓர் ஆயுள் தண்டனைக் கைதிக்கு சிறையில் என்னவெல்லாம் உரிமைகள் வழங்கப்படுமோ, அதை மட்டுமாவது நளினிக்கு வழங்குங்கள். என் காதல் மனைவிக்கு என்னால் செய்ய முடிந்ததெல்லாம், இப்படியான வேண்டுதல்கள்தான். ஆனால், அவள் எனக்காக தன் வாழ்க்கையையே கொடுத்துவிட்டாள்!''

விகடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இன விடுதலையே  அழிந்து விட்டது. 

ம் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.