Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஞ்சள் சுவாலை .

Featured Replies

மஞ்சள் சுவாலை (சிறுகதை)
....................................................

அன்று நாங்களொரு தீர்மானத்திற்கு வந்திருந்தோம். பரந்தனில் இருந்து கரடிப்போக்கு சந்தியை நோக்கி ஜீவனேசன் தன் லுமாலாவை வேகமாக மிதித்துக்கொண்டிருந்தான்.நான் அவனுக்கு உதவியாக பெடல் போட்டபடி அவனுக்கு பேச்சு கொடுத்து கொண்டிருந்தேன். இடைக்கிட அவன் வியர்வை என் கன்னத்தில் சிந்தியது . மூச்சிரைக்க என்னை ஏற்றிக்கொண்டு கரடி போக்கு சந்திக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இருக்கும் வயல் வெளியின் எதிர்காற்றுக்கு ஈடுகொடுத்து சைக்கிளை செலுத்தி கொண்டிருந்தான் ஜீவனேசன்.அவன் பருத்த தேகத்தின் பலத்திற்கு முன்னால் எதிர்காற்று ஒரு பொருட்டல்ல என்றே தோன்றியது எனக்கு

“டேய் குண்டா எனக்கு பயமாகிடக்கு ”

“ஏன் டா”

“மாட்டினம் உரிச்சு போடுவாங்கள் ”

“ஆர் ?”

”பக்கத்துல எஸ்டீ எப் காரங்களின்ர காம் இருக்கடா ”

“சும்மா பயபடாத அக்சிடண்ட் மாதிரி லேசான தட்டு நவரத்தினத்தான் வாய்க்காலுக்க கிடப்பான் பார்”

“நாங்களும் சேந்து தான் விளப்போறம் பார்”

“உனக்கு பயமெண்டா இறங்கி நில் நான் வேலைய முடிச்சிட்டு உன்ன வந்து ஏத்துறன்”

எனக்கு பயம் தான் ஆனால் அந்த மிசன திட்டமிட்டவனே பின் வாங்குவதா என்ற கெளரவம் தடுக்க இல்லை நானும் வாறன் என்றேன்.
ஜீவனேசன் வேகமாக மிதித்தான்.

ஜீவனேசனும் நானும் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தோம் .ஜீவனேசன் என்னை விட இரண்டு வயது பெரியவன் .இரண்டு வருடம் பெயில் எண்டு இடைல இரண்டு வகுப்பில் தங்கிவந்தவன் ஆதலால் என்னுடன் படிக்கிறான்.முன்கோபி… முரடன்…. .ஆனால் நல்லவன். வகுப்பில் அவனுடன் யாரும் சேரமாட்டாங்கள் அவன் குழப்படி தனம் எனக்கு பிடிக்கும்.நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு வந்து முதல் முதல் கூச்சத்துடனும் பயத்துடனும் வகுபிற்குள் நுழைந்த போது எனக்கு கதிரை தந்து பக்கத்திலே அமர்த்தி கொண்டான். சாதரணமாய் கதிரை தந்திருந்தால் எனக்கு அவனை பிடித்திருக்காது அனால் முன் வாங்கில் இருக்கும் ஒரு அம்மாஞ்சி பையனை உறுக்கி விட்டு அவன் கதிரையை பறித்து கொடுத்தது எனக்கு பிடித்திருந்தது. அப்போதுதான் என்னை விட ஒரு குழப்படிகாரனை அல்லது என்னை போன்ற குழப்படிகாரனை சந்தித்த ஆச்சரியம் எனக்கு. அன்றிலிருந்து இருவரும் குழப்படிகளை பங்கு போடும் , சேர்ந்து தூசணம் கதைக்கும் , சேர்ந்து அடிபடும் , சேர்ந்து வகுப்பை குழப்பும் ,சேர்ந்து (எப்போதாவது ) படிக்கும் நண்பர்களானோம்.

இப்படி இருக்க தான் ஜீவனேசனுக்கு காதல் வந்தது. மிதுனா. எங்கட வகுப்புக்கு வந்த புது மாணவி .அழகாக இருப்பாள்.அவளை கண்டநாள் முதல் ஜீவனேசன் மிதுனா புராணம் தான். மிதுனாவை பற்றிய தகவல்களை நா நுணியில் அடுக்குவான்

”அவள் கிறிஸ்டியன் டா”

“அவளுக்கு ஒரு அப்பா .ஒரு அம்மா ஒரு அக்கா."

“குண்டா எல்லாருக்கும் ஒரு அம்மா ஒரு அப்பா தான்”

“மாமிக்கு ஏலாது பாரிசவாதம் பாவம் ”

”ஹிம் “

”மாமா கடல் தொழில் செய்றவர் இடம்பெயர்ந்து வந்ததாலயும் எங்கட ஊர் பக்கம் கடல் இல்லாததாலையும் கூலி வேலைக்கு போறார் .
குடிகாரன்”

“மச்சினி ஜீ எஸ் ஒவ்பிஸ்ல கிளாக். பெயர் அனோசியா.

அவான்ர உழைப்பில தான் குடும்பம் ஓடுது”

”ஓ”

மிதுனா காலமை ஐஞ்சு மணிக்கு எழும்பி அக்காவோட சேர்ந்து சமைப்பாள் , வீட்டு வேலை செய்வாள் , மாமாக்கு தேத்தண்னி வச்சு குடுப்பாள் ,அம்மாவ குளிக்கவாத்து சட்டை போட்டு விட்டு சாப்பாடு தீத்தி விடுவாள்.

”பிறகு அக்கான்ர சைக்கிள்ள ஏறி பள்ளி கூடத்தெடில வந்து இறங்குவாள். பினேரம் டீசன் போறாள். நாங்கள் இனி ஒழுங்கா டீசன் போறம்.”

”ஞாயிற்று கிழமை சேர்ச்சுக்கு போறவள் கயானி ஆக்களோட. நாம இனி ஜேசுவையும் கும்பிடுறம்.”
இப்பிடி வள வள என மிதுனா புராணம் பாடுவான். போதா குறைக்கு கயூகொட்டையில் ஊசியை சொருகி எடுத்து மிதுனா என்று கையில் எழுதி இருந்தான். அது பள்ளி கூடத்தில் பிடிபட்டு மிதுனா அழுதது . ஜீவனேசன் சுழல சுழல வாங்கினதெல்லாம் தனிக்கதை ….தனி சரித்திரம்.
இன்று கரடிபோக்கு சந்திப்பக்கம் சைக்கிள் வலித்து மிதுனாவின் அப்பா நவரத்தினத்த தேடி போறதுதுக்கு தனிக்காரணம் இருந்தது.

மிதுனா வீட்டில் கொஞ்சநாளாக ஒரே சத்தம் . நவரத்தினம் குடித்து விட்டு வந்து அக்கம் பக்கம் இருந்தவர்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தார். மிதுனாவின் ஏலாத அம்மாவோடும் சண்டை. தூசணம் . மிதுனா வும் அக்காவும் ஒரே அழுகை. என்று ஜீவனேசன் வந்து சொன்னான்.

அன்று இருவரும் மாலை மயங்கிய நேரம் மிதுனா வீட்டு பக்கம் போக அவள் வீடு அல்லோலப்பட்டது . மிதுனா வீறிட்டு கொண்டு வெளியே ஓடி வந்தாள்.
“ஐயோ ஓடிவாங்கோ அக்காக்கு கை முறிஞ்சு போச்சு ”
நாங்களும் அயலவர்களும் ஓடி உள்ளே போனோம்.
அவளுடைய குடிசை வீட்டுக்கு முன்னால் மிதுனாவின் அக்கா கையை வயிற்று பக்கமாக பிடித்தவாறு கிடந்தாள். மிதுனாவின் தாய் வழமையாய் படுத்திருக்கும் ஈஸி செயரை விட்டு இறங்கி தரையில் கிடந்தாள் .நவரத்தினம் தடுமாறி அவருடைய சைக்கிளின் மேல் விழுந்து கிடந்தார்.அவருடைய உதடுகள் போதையில் ஏதோ உழறிக்கொண்டிருந்தன.
அந்த காட்சியை பார்த்தவுடனே எனக்கு புரிந்து போய் விட்டது. நவரத்தினம் மிதுனாவின் தாயை அடிக்க போயிருக்க வேண்டும் தடுக்க போன மிதுனாவின் அனோசியாவை தள்ளி விட்டிருக்கிறார்.
ஜீவனேசன் ஓடிசென்று அவள் அக்காவை தூக்கினான். அங்கே நின்ற பெண்களி அவனுக்கு உதவி செய்தனர். அனுசியா அழவில்லை வலி முகத்தில் தெரிய இறுக்கமான முகத்துடன் வெறித்தபடி இருந்தாள் . ஆட்டோவில் ஏற்றும் வரை அவள் முகத்தை கவனித்தேன். அவள் அழவில்லை.

இது நடந்து இரண்டு நாட்களாக மிதுனா பாடசாலை வரவில்லை. அவள் தமக்கையுடன் கிளிநொச்சி ஆசுப்பத்திரியில் நிற்பதாகவும் அனோசியாவின் கையில் பீ .ஓ .பி போட்டிருப்பதாகவும் ஜீவனேசன் யாரிடமோ தகவலறிந்து வந்தான்.

“மச்சான் அந்த நவரத்தினம் மிருகம் டா ஏதும் செயோணும் அவன”

“டேய் தெரியாம தானே தள்ளி விட்டார் ஆரும் பெத்த பிள்ளைய கையை உடைப்பாங்களோ ?”

“போடா விசரா அவன ஏதும் செய்யோணும் ”

“என்ன செய்ய போற ?”

“எனக்கு தெரியா ஏதும் செய்யோணும்” ஜீவனேசன் கொதித்தான். எனக்கும் கோபமாக இருந்தது.

”அடிப்பமோ ?”

“இல்ல மாட்டுவம்”

“அப்ப என்ன செய்றது ? இருட்டடி போடுவம்”

“எப்ப ?”

”கிறிஸ்மஸ்சுக்கு இரவு சேர்ச்சுக்கு போவார்”

“டேய் அதுக்கு ஒரு மாசம் கிடக்கு உடன ஏதும் செய்யோணும்”

“டேய் அந்தாள் கரடிபோக்கு சந்தி பக்கம் எங்கையோ குடிச்சிட்டு பினேரம் தனியா வரும் சைக்கில அப்ப மறிச்சு தலையில சாக்கால மூடி அடிப்பமே ?

“அப்பிடி அடிச்சா காவல் துறை நாளைக்கு வீட்ட நிக்கும்”

“அப்ப என்ன தான் செய்றது ? சைக்கிள்ள வரேக்க 
சைகிளால கொண்டே இடிப்பமா ?”

“டேய் சூப்பர் டா நல்ல ஐடியா”

”எப்ப ?”

“இண்டைக்கே”

மேற்படி திட்டத்தின் பயனாய் தான் ஜீவனேசன் என்னை ஏற்றி சைக்கிள் வலித்து கொண்டிருந்தான்.
அப்போது கிளைமோர் தாகுதல்கள் அதிகரித்ததால் விடுதலை புலிகள் வீதிகளில் காவலரண்களையும் சோதனைச் சாவடிகளையும் அதிகப்படுத்தியிருந்தனர். நாங்கள் போகும் வழியில் ஒரு சோதனைச் சாவடி இருந்தது. நாங்கள் வழமை போல அதனைப் பொருட்படுத்தாமல் கடக்க முனைந்தோம் ஆனால் அங்கே ஏழுட்டு பேர் எதையோ கூடி நின்று வேடிக்கை பார்த்த படியிருந்தனர்.

நாங்கள் என்னவாக இருக்கும் என்று எண்ணியவாறு அவ்விடத்தை நெருங்கினோம் நான்கைந்து சீருடை அணிந்த ,அணியாத போராளிகள் யாரோ ஒருவரை விசாரிப்பது தெரிந்தது. நாங்கள் அருகில் சென்று பார்த்தோம். நவரத்தினமேதான்.

அதே சண்டி கட்டு கட்டிய சறத்துடன். நவரத்தினம் போதையில் போராளிகளுடன் ஏதோ வாக்குவாத பட்டு கொண்டிருந்தார். பொதுவாக பழக்கமான முகங்களை அவர்கள் மறிப்பதில்லை. சில வேளைகளில் பொழுது போகாவிட்டால் யாரும் மாட்டினால் கேள்விகேட்டு வறுத்தெடுப்பார்கள். அப்படித்தான் நவரத்தினம் சிக்கியிருக்க வேண்டும்.

நாங்கள் நெருங்கினோம் .நவரத்தினம் துப்பாக்கி தாங்கி நின்றிருந்த போராளிகளிடம் ஏதோ உழறிக்கொண்டிருந்தார்

“பெடியள் நான் ஆயிரம் இயக்கத்த பாத்தவன் என்னை நீங்கள் விசாரிக்கேலாது நான் மத்தது”

“என்ன ஐயா மத்தது ?”

”அது மத்தது “

“ஐயா தளபதியோ ? என்ன ராங் கேணலோ ?”

நக்கலாக கேட்டான் அந்த போராளி

“இல்ல தம்பி மத்தது ”

“என்ன போராளியோ ?”

“அதில்ல தம்பி மத்தது ”

“அரசியல் துறையோ ?
“மத்தது தம்பியள் “

“” எஸ் .டி எப்போ ? “

”தம்பி மத்ததடா”

“புலனாய்வு துறையோ ?”

“சீ சீ மத்தது”

“காவல் துறையோ ?”

“இஞ்சபார் தம்பி நான் மத்தது ”

போராளிக்கு சிரிப்புமறைந்து கோபம் வந்து விட்டது. அவனுடைய வலது கரம் எழுந்து நவரத்தினத்தின் கன்னத்தில் இறங்கியது. ஏற்கனவே ஆடுபாரத்தில் இருந்த நவரத்தினம் தடுமாறி நிலத்தில் உருண்டார்.
போராளி கனதியான குரலில்

“டேய் என்னடா மற்றது சொல்லடா ”
என்றான்.

நவரத்தினம் தட்டு தடுமாறி எழுந்து

“தம்பி …. நான் மத்தது சனம் தம்பி ..பொது சனம் ”
என்றார் பரிதாபமாக

அதை கேட்டவுடன் அங்கிருந்த போராளிகளும் வேடிக்கை பார்த்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர். ஜீவனேசன் முன்னால் சென்றான்.

“தம்பி டேய் இந்தாள தெரியுமோ ?”

“ஓம் அண்ணை எங்கட ஊர்தான்”

“ஆள் ஆடுபாரம் . ஆள கூட்டிகொண்டுபோய் விடுறியே ?”

“ஓம் அண்ணை”

நான் நவரத்தினத்தை அந்த போராளி இளைஞனுடன் சேர்ந்து ஜீவனேசன் சைக்கிள் பாறில் ஏற்றினோம். நான் நவரத்தினத்தின் சைக்கிளை எடுத்துக் கொண்டேன். நவரத்தினம் முள்ளம் தண்டு எடுக்க பட்டவர் போல் சவண்டு போய் சைக்கிள் பாரில் இருந்தார். ஆனால் உழறல் மட்டும் நிற்கவில்லை. என்னை பார்த்து

“தம்பி நீ ஆற்ற பெடியன் ?”

“குணத்தின்ர”

“நீ ” ஜீவனேசனிடம்

“செல்வராசான்ர”

எத்தினை படிக்கிறியள்?

“பத்து”

“மிதுனாவ தெரியுமோ ?”

“ஓம் எங்கட வகுப்பு தான்”

”தெரியும் “

“என்ர பிள்ளை தான் கெட்டிகாரி ”

ஜீவனேசன் என்னை முறைத்தான்
எனக்கு சிரிப்பாக வந்தது .யாரை சைக்கிளால் தள்ளி விட திட்டமிட்டு வந்தோமோ அவரை ஏற்றி கொண்டு செல்கிறோம்.

நான் ஜீவனேசனுக்கு கண்ணை காட்டினேன் என்ன செய்வதென்று.
அவன் ஒன்றும் செய்ய வேண்டாம் என்றான் சைகையால்.

நான் தொடர்ந்து நவரத்தினத்திடம் பேச்சு கொடுத்தேன்.

“ஏன் இப்பிடி குடிக்கிறியள் ?”

“காரணமிருக்கு”

”பாவம் உங்களால அக்காக்கு கை உடைஞ்சு போச்சு”

“காரணமிருக்கு”

“மிதுனா பள்ளி கூடம் வாறேல்ல பாவம் உங்கட மனிசி ஏன் இப்பிடி செய்யிறியள் ?”

”காரணமிருக்கு”

”என்ன காரணம் ?”

ஜீவனேசன் கேட்டான்

“காரணமிருக்கு”

ஜீவனேசன் சட்டென்று சைக்கிளை விட்டு விட்டு குதித்து விட்டான். நான் கூட எதிர்பார்க்கவில்லை.
சைக்கிள் நவரத்தினத்தை சுமந்தவாறு வாய்காலுக்குள் சென்று நவரத்தினத்தோடு பிரண்டது.

நான் ஒரு கணம் ஸ்தம்பித்து போனே . ஜீவனேசன் வேகமாக ஒரு கட்டையை எடுத்து கொண்டு ஓடினான். எனக்கு புரிந்து விட்டது அவன் கோபத்தில் இருக்கிறான். ஜீவனேசனுக்கு கோவம் வந்தால் அடக்குவது கடினம் .மகா முரடனாகிவிடுவான் .எனினும் நான் தடுக்க ஓடினேன் .அதற்குள் அவம் நவரத்தினத்தை நெருங்கிவிட்டான்.

”டேய் இவன என்ன செய்யிறன் பார் ” பாய்ந்தான்
அவன் அடிக்க வருவதை கண்ட நவரத்தினம் சட்டென கையை உயர்த்தி அவனை கும்பிட்டார்.

“அடி தம்பி அடி அப்பன் செத்தாலும் என்ர பிள்ளைய பிடிக்க மாட்டாங்கள் தானே”

ஜீவனேசன் ஸ்தம்பித்தான். கட்டையை கீழே எறிந்து விட்டு அவர் பக்கத்தில் போய் அமர்ந்தான் வாய்க்கால் தண்ணீரை கையில் எடுத்து அவர் முகத்தில் அடித்தான்
“என்ன கதைக்கிறியள் விளங்கே ல”

நவரத்தினம் கதை சொல்ல தொடங்கினார் . அதே குடிகார தொரணையுடன்

“தம்பி நான் குடிக்கிறனான் ஆனா முதல் எல்லாம் நிதானமா குடிப்பன் ஆனா இப்ப நான் ஏன் குடிக்கிறன் எண்டு தெரியுமே உனக்கு ”

நவரத்தினம் விம்மி வெடித்தார்

”என்ர பிள்ளைய இவங்கள் பிடிச்சு கொண்டு போய் சண்டேல விட்டு சாக்கொண்டிடுவாங்கள்”

“அதுக்கு நீங்கள் குடிச்சா பிடிக்காம விடுவாங்களோ ?”
“ஒருக்கா பிடிக்க வந்தாங்கள் தம்பி என்ர மனிசி அவர் குடிகாரர் எனக்கு எலாது என்ர பிள்ளைதான் எங்கள பாக்குதெண்டு கத்தி இருக்கு விட்டிட்டு போட்டாங்கள்” இதை சொல்லும் போது மட்டும் இரசியமாக குர்லை தாழ்த்தி சொன்னார்.

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக விடயம் புரிந்தது, நவரத்தினம் மிதுனாவின் அக்காவை கட்டாய ஆள் சேர்பிலிருந்து காப்பாற்ற இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதை. வன்னியில் கட்டாய ஆட் சேர்ப்பு தொடங்கிய காலம் அது. வீட்டிற்கு ஒரு பிள்ளை என்றால் தொடக்கத்தில் பிரசாரம் செய்தே ஆட் சேர்க்க முனைவார்கள். ஆனால நாட் போக வீட்டில் மூத்த பிள்ளை கட்டாயம் போராட வேண்டும் என்றநிலை ஏற்படுத்த பட்டது.

விடுதலை புலிகளின் அரசியல் துறை அந்த கொடுமையை செவ்வென நிறைவேற்றியது ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் கதற கதற பிள்ளைகளை பிடித்து சென்றனர். பலர் ஒளிந்து வாழ்ந்தனர்.ஆனால் இடம்பெயர்ந்து வந்த நவரத்தினம் மிதுனாவின் அக்காவை எங்கே ஒழிப்பது அவருடைய வருமானம் குடும்பத்திற்கு போதாது. அக்கா மறைந்து வாழ்ந்தால் வீட்டில் சமைப்பது யார் ? மிதுனா சின்ன பிள்ளை. மிதுனாவின் அக்காவும் அவள் பார்க்கும் வேலையுமே குடும்பத்தின் அடிநாதம் . நவரத்தினதிற்கு நெஞ்சில் இந்தியன் ஆமி அடித்ததில் பாரிய வேலை செய்ய முடியாது நெஞ்சு வலி இருந்தது. ஆதலால் மிதுனாவின் அக்காவை பிள்ளை பிடிகாரரிடம் இருந்து காப்பாற்ற முழுநேர குடிகாரனாகி விட்டார் நவரத்தினம் , வேண்டுமென்றே அயலவர்களுடன் தகராறிற்கு சென்றார். இந்த கதை அரசியல் துறை காறருக்கு போகும் . எனவே மிதுனாவின் அக்காவை பிடிக்க மாட்டார்கள். இதை நவரத்தினம் வீட்டில் கூட சொல்லவில்லை.அவர் மனைவி உட்பட நவரத்தினத்தை யாரும் உணரவேயில்லை.

இந்த தகவலை நவரத்தினம் அழுதவாறே சொல்ல்லி முடித்தார்.

“அப்ப ஏன் அண்டைக்கு அனோசியா அக்கான்ர கைய முறிச்சனியள்”

அதை கேட்டவுடன் மீண்டும் நவரத்தினம் தலையில் அடித்தபடி அழத்தொடங்கினார்.

“ஐயோ தம்பி என்ர பிள்ளைய நான் வேணுமெண்டு தள்ளி விடேல்ல. நான் மனிசிக்கு கிட்ட போக நான் அடிக்க போறன் எண்டு பிடிக்க வந்தவள் நான் வெறில உதற பாவம் என்ர பிள்ளை விழுந்து போச்சு”

நவரத்தினம் மேலும் கதறி அழுதார்.

நாங்கள் இருவரும் அவரை தேற்றி பார்த்தோம்.அழுவதை நிறுத்தவில்லை. வெறியும் அழுகையுமாக வாய்க்கலுக்குள் கிடந்த நவரத்தினத்தை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

ஒருவாறு அவரை தேற்றி சைக்கிளில் ஏற்றினோம் போகும் வழியில் எங்களிடம் சொல்லியது போல் யாரிடமும் சொல்லாதீர்கள் என்றோம். இனி குடிக்காதீங்கோ பெரிசா . உங்கட வீட்டு பிரச்சினைய தலைவருக்கு லெட்டர் எழுதி போடுங்கோ . என்றான் ஜீவனேசன் .

“அவருக்கு தெரியாமலோ தம்பி பிடிக்கிறாங்கள் , எல்லாரும் கள்ளர் எல்லாம் பம்மாத்து ” என்று அலுத்து கொண்டார் நவரத்தினம்.

நவரத்தினம் வீட்டை நெருங்கினோம் நேரம் மாலை ஏழுமணிக்கு மேலாகி விட்டது இருட்டு கவ்வியிருந்தது. அங்கே நவரத்தினம் வீட்டின் முன்னால் கூட்டமாக அயலவர்கள் எல்லோரும் நின்றனர். எதோ பிரச்சினை என்று புரிந்தது. நெருங்கினோம்.

நான்கைந்து லாம்புகளின் வெளிச்சத்தில் காட்சிகள் தோன்றின மிதுனாவின் அம்மா வாசலில் தலைமயில் தரையில் படர்ந்து கிடக்க முகத்தை மண்ணில் குத்தி பெரிய குரலில் அழுது கொண்டிருந்தாள் மிதுனா தாயின் பக்கத்தில் புதிதாக அடைத்த செத்தையில் தலை சாய்த்திருந்தாள். அவள் முகம் மிக பயங்கரமாய் இறுகி இருந்தது. இரண்டு கண்களில் இருந்தும் கண்ணீர் சமநேரத்தில் கீழிறங்கி கொண்டிருந்தது.
லாம்புகளின் மங்கிய மஞ்சள் ஒளியில் இக்காட்சியை கண்டு வெறிமுறிந்தும் முறியாமலும் நவரத்தினம்

பீதியான குரலில்

“என்ன்ன்ன நடந்ததது ?”

“அனோசியாவை பிடிச்சுக்கொண்டு போட்டாங்கள் ”

என்று யாரோ அறிவித்தனர்.

நவரத்தினம் விழுந்து கிடந்து கதற தொடங்கினார் 
நான் மிதுனாவை பார்த்தேன்

அவள் எதையும் பொருட்படுத்ததவளாய் பார்வையை மாற்றி

சிமிலியில் படிந்திருந்த புகைகறையை மீறி லேசாய் மஞ்சள் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்த லாம்பின் சுவாலை யை வெறித்தபடியிருந்தாள்.

-யதார்த்தன் -

ஓவியம் - SP Pushpakanthan

 
 

Edited by arjun
பந்தி சரிப்படுத்த .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.