Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் ஐயா எங்கே எம்மை அழைக்கிறார்?

Featured Replies

சம்பந்தன் ஐயா எங்கே எம்மை அழைக்கிறார்?

 
11825212_1466607406996095_75928602148472


தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற நான்கு கட்சிகள் இணைந்த பரந்த அரசியல் முன்னணி 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, பின்னாளில் மீளமுடியாத சிதம்பர சக்கரத்திற்குள் தான் மாட்டிக்கொண்டு இப்படி தவிக்கும் என்று அப்போது கூட்டமைப்பின் தலைமை கனவிலும் எதிர்பார்த்திராது.

விடுதலைப்புலிகளின் அரவணைப்பில் நாடாளுமன்றம் செல்லும் செல்லப்பிள்ளைகளாக, தமிழ்ச்செல்வனின் சொல் கேட்டு தமது காலத்தை ஓட்டிவிடலாம் என்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு –

2009 ஆம் ஆண்டின் பின்னர் தமிழ் மக்களை வழிநடத்துவதற்கு கிடைத்த பொறுப்பெனப்படுவது “விஜயகாந்திற்கு எதிர்க்கட்சித்தலைவர்” பதவி கிடைத்தது போன்றதானது. காகத்தின் தலையில் வைக்கப்பட்ட பனம்பழம்.

அந்த சுமையை சரியான வழியில் கொண்டுபோய் சேர்ந்துவிட்டு - 

தமது பாதையில் அடுத்த தலைமுறையினரை முன்னிறுத்தி அவர்களை மக்களின் அபிமானத்துக்குரியவர்களாக மாற்றி –

கட்சியின் பின்னணியில் தீர்க்கதரிசிகளாகவும் தக்க சமையத்தில் சரியான ஆலோசனைகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கக்கூடிய முக்கிய பாத்திரங்களாகவும்தான்; தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் முக்கால்வாசி மூத்த தலைவர்கள் இருந்திருக்கவேண்டும்.

ஆனால், உண்மையில் நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

தமிழ் கூட்டமைப்பை பொறுத்தவரை அதன் தலைமை எதிர்கொள்ளும் பிரச்சினை வேறு. அங்குள்ள ஏனைய உறுப்பினர்களது பிரச்சினை வேறு. மக்களது பிரச்சினை வேறு. இதுதான் இங்கு பெரும் பிரச்சினையே ஆகும்.

அதாவது, ஐயாவை பொறுத்தவரை அவர் சுமந்திரனை ஒருவாறு அரசியலில் கரைசேர்த்து, தனது இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடவேண்டும் என்பது அவரது நீண்டநாள் கணக்கு. அது தனது காலத்திற்குள் நடந்துவிட்டால் தனது பொறுப்பு முடிந்துவிடும் என்பதும் அவரது எதிர்பார்ப்பு. அவ்வாறான ஒரு வழிமுறையின் ஊடாக, இந்த நான்கு கட்சிக்கூட்டணியின் முடிவுகளை – தான் இவ்வளவு காலமும் மேற்கொண்டது போல தன்னிச்சையாக மேற்கொள்ளும் பொறுப்பை - இனிமேல் சுமந்திரன் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் எண்ணுகிறார்.

ஐயாவின் இந்த திட்டத்தின் நோக்கம் வெளியில் சொல்லப்படாதது என்றாலும் “சுமந்திரனை வெற்றிபெற வையுங்கள்” என்ற அவரது கோரிக்கை மிகவும் வெளிப்படையானது. இம்முறை தேர்தல் பரப்புரை கூட்டங்களில் சந்திக்கு சந்திக்கு மக்கள் பிரச்சினையைவிட ஐயா அதிகம் பேசுவது சுமந்திரனின் திறமைகளைப்பற்றித்தான். 

இது எவ்வளவு தூரம் தூரநோக்கம் இல்லாதது - யதார்த்தத்துக்கு ஒவ்வாத பிரயத்தனம் - என்பது கட்சியில் உள்ளவர்களுக்கும் கடந்தகாலத்தை அறிந்தவர்களுக்கும் நன்கு புரியும்.

ஆனாலும், விடுதலைப்புலிகள் உருவாக்கிய கட்சி. அதை பிளவுபடுத்தக்கூடாது என்ற விசுவாசம். இனியொன்றை முதலிலிருந்து ஆரம்பித்து வளர்த்தெடுப்பதா என்ற அயர்ச்சி. ரத்தத்தால் திலகமிட்டு பாரம்பரியங்களால் கட்டியெழுப்பிய வீட்டுச்சின்னத்திலிருந்து மாற மறுக்கும் பழமைவாதம் போன்ற எத்தனையோ காரணங்கள் பலரை இன்னமும் ஐயாவுடன் கட்டிவைத்திருக்கிறது.

அரசியல் என்ற போதை. அதில் அங்கம் வகிக்கும் எவரையும் அது யதார்த்தத்தை ஒட்டி சிந்திக்கவிடுவதில்லை. உச்சக்கட்ட சுயநலத்தினாலும் பதவி மோகத்தினாலும் கட்டுண்ட அரசியல்வாதிகள் யதார்த்தத்தை ஒட்டி சிந்திக்க முயற்சிப்பதுமில்லை. அவ்வாறு சிந்திக்க தெரிந்தவர்களின் ஆலோசனைகளை கேட்பதுமில்லை.

இது இன்று நேற்றல்ல. தமிழர்களின் கடந்த கால அரசியல் வரலாறுகள் தெரிவித்து நிற்பது ஆகும்.

தமிழரசுக்கட்சியின் ஆரம்ப கர்த்தாக்களாகவும் தூண்களாகவும் என்றும் கருதப்பட்ட ஞானமூர்த்தி அப்பா மற்றும் சட்டவாளர் குமரகுரு ஆகியோர் ஒரு தடவை, தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் வங்குரோத்துநிலையை ஓரளவுக்கு முன்கூட்டியே புரிந்துகொண்டு 83 இல் இந்தியாவில் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

அந்த சந்திப்பில் அமிர்தலிங்கம் அவர்களின் பிரச்சினையை ஆழமாக புரிந்துகொண்டு, அவரை கட்சியின் ஆலோசகராக பின்னணியில் இருந்துகொண்டு இளைஞர்களை உள்வாங்கி ஜனநாயக வழியில் அவர்களின் அரசியலை நெறிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தபோது அதனை அடியோடு நிராகரித்தார் அமிர்.

அவரைப்பொறுத்தவரை, தமிழரசுக்கட்சி என்பது தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக முடிவெடுக்கும் உயர்பீடம். கொந்தளிக்கும் போராளிக்குழுக்கள் மாவை மற்றும் காசி ஆனந்தன் ஆகியோரின் - கட்சியின் இளைஞரணியின் - கீழ் பணிபுரியவேண்டிய “ஏவல் நாய்கள” தாம் கட்டளையிடும்போது கட்சியின் எதிரிகள் என்று கருதப்படுபவர்களை போட்டுத்தள்ளுவதற்காக கட்சியுடன் ஒட்டியிருக்கவேண்டிய காவல்படை. அவ்வளவுதான்.

அவருடனான நீண்டநேர சந்திப்புக்கு பின்னர், எந்த பயனுமில்லாமல் வெறுங்கையோடு வெளியில் வந்த தமிழரசுக்கட்சியின் மூத்த புரவலர்கள் “அமிர்தலிங்கத்திற்கு பதவிமோகம் தலைக்கேறிவிட்டது. அவரது பிடிவாத அரசியல் போக்கு தமிழர் அரசியல் இருப்பை அடியோடு அழிக்கப்போகிறது” என்று கவலையுடன் கூறிவிட்டு வந்தார்கள்.

அமீரின் அரசியல் மோகம் மட்டுமல்லாது அவரது அரசியல் செல்நெறிகளும் தமிழர் அரசியலுக்கு மிகுந்த தலையிடியாகவே அமைந்தன.

அதாவது, அரசியலில் எந்த முன்அனுபவமும் இல்லாத – மக்களின் பிரச்சினைகள் பற்றி தங்களது தந்தையின் ஊடாக மட்டுமே அறிந்த – மக்களின் எந்த அபிமானமும் அற்ற - தனது மகன் காண்டீபனையும் பின்னர் ரவியையும் வலுக்கட்டாயமாக அரசியலுக்குள் இறக்கி “இவன்தான் உங்களது அடுத்த தலைவன்” என்று வாரிசு அரசியல் நடத்தமுயன்ற முட்டாள்தனங்கள் உட்பட பலவிடயங்கள் இதில் அடங்கும்.

ஆனால், கடைசியில் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

முன்னர் குறிப்பிட்டது போல சுயநல அரசியலும் பதவிமோகமும் பரந்த தீர்மானங்களை நிறைவேற்ற வலுவற்ற நிலையில் எதேட்சதிகாரத்துடன் செயற்படும் தான்தோன்றித்தனங்களும் அரசியலில் எவரையும் ஆரோக்கியமான பாதைகளில் பயணம் செய்ய அனுமதித்ததில்லை.

அது குறுகியகால துணிவுகளை தீர்வுகளாக வழங்குமே தவிர நீடித்து நிலைக்க வல்ல திருப்திகளை வழங்குவதில்லை.

இன்று சம்பந்தன் ஐயா தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவு கண்மூடித்தனமாக அன்று அமிர்தலிங்கம் பயணம் செய்த அதே பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவரது அரசியலை கூர்ந்து கவனிக்கும் எந்த பாதசாரியும் புரிந்துகொள்வான்.

கடந்த தடவை நாடாளுமன்றம் சென்ற சுமந்திரனின் அரசியல் பிரவேசம் மக்களின் ஆணையின் ஊடானதல்ல என்பதற்காக, ஐயா தனது அரசியல் வாரிசாக சுமந்திரனை கொண்டுவந்து நிறுத்தும் நடவடிக்கை மக்கள் மீதான அரசியல் திணிப்பு என்றுதான் சொல்லவேண்டும். அந்த திணிப்பை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பது அடுத்த விடயம்.

ஆனால், தாயகத்திலும் வெளியிலும் சுமந்திரன் அவர்களது அரசியல் பிரவேசத்துக்கான ஆதரவெனப்படுவது எந்தளவு சீத்துவத்தில் கிடக்கிறது என்றால், அவரை சிங்கள தேசம் சாதகமாக பயன்படுத்துவதற்கு காண்பிக்கும் தீவிரத்திலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.

தமிழர்களின் சிறந்த தலைவர்களாக வரலாற்றில் வந்து போனவர்களும் இப்போதிருப்பவர்களும் மக்களால் தலைவர்களாக உருவாக்கப்பட்டவர்களே தவிர கட்சியால் உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. அந்த அங்கீகாரத்தை தருணம் வருகின்றபோது மக்களே வழங்கியதுதான் வரலாறு.

அந்த அங்கீகாரம் சம்பந்தன் - சுமந்திரன் கூட்டணிக்கு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதா? அதனை வழங்குவதற்கு இவர்கள் இருவரும் மக்களுக்கு வாய்ப்பாளித்தார்களா?

ஐம்பதுகளில் சிங்களத்தில் "சிறி" என்ற சிங்கள எழுத்து பொறித்த வாகன இலக்கம் பொறித்தமைக்காக சிங்கள திணிப்புக்கு எதிர்த்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழரசு கட்சியின் வழிவந்த சம்பந்தனும் அவரது சகா மாவை சேனாதிராசாவும் இன்று சிறிலங்கா அரசிடம் விண்ணப்பமிட்டு பெற்றுக்கொண்ட சொகுசு பஜிரோக்களில் போர் தின்ற மண் வீதிகளில் புழுதி பறக்க போய் நின்றுகொண்டு மக்களின் குறை கேட்கிறார்கள்.

சிங்கள திணிப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கர்த்தாலின்போது மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறி கறுப்புக்கொடி கட்டும்போது சிங்கள படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நடராஜன் பிறந்த திருமலை மண்ணிலிருந்து வந்த சம்பந்தன் ஐயா, எமது இனத்தின் ஒரு தலைமுறையையே அழித்துவிட்டு திமிரோடு நிற்கும் சிங்கள தேசத்திற்கு நல்லெண்ண சமிக்ஞை காட்டுவதற்காக சிங்கக்கொடியை ஏந்திக்கொண்டு சிறிலங்கா சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்.

தமிழர்களை பாரிய இன அழிப்புக்கு உள்ளாக்கிய போரை நடத்திய தினத்தை வெற்றி தினமாக கொண்டாடிய விழாவுக்கு பிரசன்னம் செய்த சுமந்திரன் தனது பங்குக்கு தானும் சிங்கள தேசத்துக்கு நல்லெண்ண சமிக்ஞையை காண்பித்துவிட்டு வந்தார்.

இதற்கெல்லாம் இவர்கள் கூறும் காரணங்கள். மென்வலு. இராஜதந்திரம். சாணக்கியம்.

இவ்வாறு மக்கள் கருத்துக்களை கேளாமல் மட்டுமல்லாது தாம் அங்கம் வகிக்கும் கட்சி உறுப்பினர்களிடமும் ஆலோசிக்காது மேற்கொள்ளும் எல்லா சட்டம்பித்தனமான தீர்மானங்களுக்கும் ஆதரவு தரும்படி இன்று மக்களிடம் வாக்குக்கோரி வந்து நிற்கும் சம்பந்தன் ஐயாவும் சுமந்திரனும் மக்கள் ஆதரவும் கிடைத்துவிட்டால் என்வெல்லாம் செய்ய உத்தேசித்திருக்கிறார்கள்?

மொத்தத்தில், மறு ஆய்வு செய்யப்படவேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கும் அதன் முடிவுகளும் சம்பந்தன் ஐயாவின் வரட்டு பிடிவாதங்களால் பீடித்துப்போயுள்ளன.

இதன் பிரதான விளைவுகளில் ஒன்றாக, இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியின் உருவாக்கத்தையும் அதற்கு திரளுகின்ற ஆதரவையும் காண்கிறோம்.

வரலாறு தனது சக்கரத்தில் இம்மியும் அசையாது தனது சம்பவங்களை புதுமை செய்துகொள்கிறது.

அன்று தங்களது தேச வேட்கைகளை சரியாக உள்வாங்காத அமிர்தலிங்கத்தை புறக்கணித்துவிட்டு கொந்தளிப்பு மிக்க இளைஞர் குழு எவ்வாறு ஆயுதம் ஏந்தி தனிவழி அமைத்ததோ –

அதேபோன்று 2015 ஆம் ஆண்டு தேர்தல் இளைஞர்கள் மத்தியில் தமிழ் கூட்டமைப்புக்கு எதிராக ஒரு பரந்த கொந்நதளிப்பை ஏற்படுத்தியிருப்பதை மறுக்கமுடியாது.

இந்த புதிய அரசியல் முன்னணியின் கொந்தளிப்பான அரசியல் பிரயாணமும் சம்பந்தன் ஐயாவின் அரசியல் செல்நெறியும் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற இலவு காத்த மக்கள் ஏமாந்து கனகாலமாகிவிட்டது.

இப்போது, இதற்கு உறுதியான மக்கள் தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பமாக 17 ஆம் திகதி அமையப்போகிறது.

இந்த வரலாற்றுக்கடமையை தமிழ் மக்கள் இம்முறை சரிவர புரிந்து செயலாற்றவேண்டும்.

http://malaimaram.blogspot.co.uk/

  • கருத்துக்கள உறவுகள்

Veluppillai Thangavelu அனந்தியை ததேகூ கழட்டி விடவில்லை. அரசில் இருந்து ஓய்வூதியத்தோடு விலகி மாகாணசபையில் போட்டியிட சுமந்திரன்தான் உதவி செய்தார். இல்லாவிட்டால் அவர் பதவியை இராஜீனாமா செய்துவிட்டுத்தான் தேர்தலுக்கு நின்றிருக்க வேண்டும். அனந்திக்கு வாய் இருக்கிற அளவுக்கு பணிவு இல்லை. போரில் இவரது கணவன்தான் காணாமல் போனார். கணவனும் மனைவியும் போரில் இறந்தவர்கள்இருக்கிறார்கள். அனந்தி அரசாங்க உத்தியோகத்தவராக கடைசிவரை இருந்து சம்பளம் வாங்கினவர்.

(என்னுடைய முகநூலில் இருந்து எடுத்தது......அய்யா தங்கவேலுவின் அட்டகாசம் கனடாவில் பெரிய தொல்லை..கனடா டங்கர் என்றுகூடச் சொல்லலாம்...)

 இதுதான் இன்றைய கூட்டமைப்பின் தர்மம்..தார்மீகம் எல்லாமே

Edited by alvayan
ஏழுதுப்பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.