Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவிக்கும் தாய்லாந்து

Featured Replies

தவிக்கும் தாய்லாந்து - 1

 
 
தாய்லாந்தின் எரவானில் உள்ள பிரம்ம தேவன் கோயில்.
தாய்லாந்தின் எரவானில் உள்ள பிரம்ம தேவன் கோயில்.

எரவான் ஆலயம் என்பது தாய்லாந்தில் மிகவும் பிரபலம். அதன் முக்கியக் கடவுள் ஓர் இந்துக் கடவுள்தான் பிரம்மா. பிரம்மாவை அங்கு ப்ராப்ரோன் என்கிறார்கள். சிறிய ஆலயம்.

ஆனால் அங்கு இரு வருடங்களுக்கு முன் சென்றிருந்தபோது வியப்பு ஏற்பட்டது. எக்கச்சக்கமான பக்தர்கள்.

அது ஒரு திறந்தவெளிக் கோயில். பக்கத்தில் பல உயர்ந்த கட்டிடங்கள். முக்கிய மாக, கிராண்ட் ஹையத் எரவான் ஹோட்டல். பாங்காக்கின் சிட்லோன் ரயில்வே நிலையத் துக்கு அருகில் அமைந்த பகுதி இது.

இந்த ஆலயம் உருவான கதை சுவையானது. 1956ல் அரசுக்குச் சொந்தமான எரவான் ஹோட்டல் இங்கே எழும்பத் தொடங்கியது. ஆனால் கட்டுமானம் தொடங்கியதிலிருந்து நிறைய பிரச்னைகள். எதிர்பார்த்ததைவிட செலவு மிக அதிகமாக கூடிக் கொண்டிருந்தது. அவ்வப்போது கட்டிடத் தொழிலாளர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

போதாக்குறைக்கு கட்டிடம் கட்டுவதற் காக கப்பலில் வரவழைக்கப்பட்டிருந்த சலவைக் கற்கள் மொத்தமும் மாயமாய் மறைந்து விட்டன. இதன் பின்னணியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய அரசு, ஒரு காரியத்தைச் செய்தது. அது ஜோதிடர் ஒருவரை ஆலோசித்ததுதான். அந்த ஜோதிடர் எரவான் ஹோட்டல் அமைய உள்ள பகுதியின் அக்கால ‘முக்கியத்துவத்தை’ நினைவு கூர்ந்தார்.

குற்றவாளிகளை அங்கே பொது மக்கள் பார்வைக்குக் காட்டுவது வழக்கமாம். ‘‘ஹோட்டல் உருவாவதைத் தடுக்கும் தீய சக்திகளுக்கு எதிராக ஓர் ஆலயத்தை பக்கத்தில் எழுப்புங்கள். அது பிரம்மாவுக்கான கோயிலாக இருக்கட்டும்’’ என்றார்.

இதன்படி ஆலயம் அமைக்கும் பணிகள் துவங்கின. அதன் பிறகு எந்தத் தடையும் இல்லாமல் ஹோட்டல் கட்டுமானம் மளமளவென முன்னேறியது.

எரவான் ஆலயம் மிக முக்கியமான ஓர் வணிகத் தெருவில் இருப்பதால், அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

ஒரு கட்டத்தில் எரவான் ஹோட்டல் முழுவதுமாக இல்லாமல் போனது. ஆனால் யாரும் எரவான் கோயிலின் மகிமையைக் குறைத்து மதிப்பிடவில்லை. காரணம் ஹோட்டல் கட்டிடத்திற்கு தானாக எந்த சிக்கலும் நேரவில்லை. அது இடிக்கப்பட்டு இன்று மேலும் நவீன வசதிகள் கொண்ட கிராண்ட் ஹையத் எரவான் ஹோட்டலாக மாறியுள்ளது.

நான்கு முகங்கள், ஆறு கரங்கள் என்று கம்பீரமாகக் காட்சி அளிக்கும் இந்த பிரம்மன் சிலைக்கு 2006ல் ஒரு விபரீதம் நேர்ந்தது. கையில் கத்தியோடு வந்த ஒருவன் இந்தச் சிலையை உடைத்தான். தெருவில் இருந்த சிலர் அங்கு பாய்ந்து வந்து குற்றவாளியைப் பிடிப்பதற்குள், சிலை கிட்டத்தட்ட முழுவதுமாக உடைந்து விட்டது.

எதற்காக உடைத்தான்? பின்னணியில் இருந்தது மாற்று மதமா? தீவிரவாதமா? இல்லை. அவன் ஒரு மனநோயாளி. எரவான் தெய்வத்தின்மீது பெரும் பற்று கொண்டிருந்த, சாலையில் சென்ற கொண்டிருந்த சிலர் அவனைத் தாறுமாறாகத் தாக்க, அவன் இறந்தே விட்டான்.

ஆலயம் பொது மக்கள் பார்வைக்கு சில நாட்கள் மூடப்பட்டது. கடும் எதிர்ப்பு. அவசர அவசரமாக புதிய பிரம்மன் சிலை உருவாக்கப்பட்டு அங்கே வைக்கப்பட்டது. தங்கம், வெண்கலம் மற்றும் அரிதான உலோகங்களால் இவற்றோடு பழைய சிலையின் பகுதிகளும் கலந்து இந்தச் சிலை காணப்படுகிறது.

(பின்னர் நடைபெற்ற ஆராய்ச்சியில் இறந்தவனின் முதுகிலும், கைகளிலும் அராபிக் எழுத்துகளால் பச்சை குத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகவும் ஆராய்ச்சிகள் நடைபெற, ‘‘கடந்த வருடங்களில் என் மகன் மனநல சிகிச்சை எடுத்து வருகிறான். இன்னது செய்கிறோம் என்று தெரியாமலேயே அவன் சிலையை உடைத்திருக்கிறான். அதற்காக அவனை அடித்துக் கொன்றது அநியாயம்’’ என்றார் அவன் தந்தை).

ஆக எரவான் ஆலயம் மீண்டும் பக்தர்களால் ஈர்க்கப்பட்டது. புத்தமதத்தி னரும் இங்கு எக்கச்சக்கமாக வருவதுண்டு. நாம் சென்றிருந்தபோது ஆலயத்தைச் சுற்றியுள்ள இடத்தில் ஒரு நடனக்குழு தாய்லாந்துக்கே உரிய கண்கவரும் ஆடை களுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். கேட்டபோது அது ஒருவகை வேண்டுதலாம். குறிப்பிட்ட தொகையை ஆலய நிர்வாகத்திடம் செலுத்தினால் இந்த நடனத்தை ஏற்பாடு செய்வார்களாம்.

All is well என்று போய்க் கொண்டிருந்த போது படைக்கும் கடவுளின் உருவத்துக்கு ஏற்பட்டது மற்றொரு ஆபத்து.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று அங்கு குண்டு வீசப்பட்டது. நூற்றுக்கணக் கானவர்கள் பலியாயினர்.

தாய்லாந்து திகைத்து நிற்கிறது. நாம் மும்பையிலும், பெரும்புதூரிலும் அனுபவித்திருக்கிறோம். ஆனால் தாய்லாந்துக்கு வெடிகுண்டு ‘கலாச்சாரம்’ புதிது. தாய்லாந்து மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தவிக்கும்-தாய்லாந்து-1/article7603026.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

தவிக்கும் தாய்லாந்து - 2

 
 
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள முதலாம் ராமா மன்னரின் சிலை.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள முதலாம் ராமா மன்னரின் சிலை.

எரவான் ஆலயத்தில் குண்டு வெடித்ததில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். 90-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

கண்காணிப்பு கேமராவில் இந்தத் தாக்குதல் பதிவாகியிருக்கிறது.

ஆலயத்தில் தாக்குதலை நடத்துகிறான் ஒரு சதிகாரன். பின்னர் அவன் வெளியேறி மோட்டார் சைக்கிள் ஒன்றில் செல்கிறான்.

ஆக அந்த சதிகாரன் விரைவில் கண்டுபிடிக்கப் பட்டுவிடுவான் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை.

‘’குண்டு வைத்தவனைக் கண்டுபிடிக்க போதிய நவீன சாதனங்கள் எங்களிடம் இல்லை’’ என்று தாய்லாந்து தேசிய தலைமை காவல் அதிகாரி கூறியது அதிர்ச்சியை உண்டாக்கியது. வெளிநாடுகளிலிருந்து உரிய சாதனங்கள் வந்து விடுமென்றும் விரைவில் சதிகாரன் பிடிக்கப்பட்டு விடுவான் என்றும் கூறப்படுகிறது.

சேதமடைந்த எரவான் ஆலயம் பக்தர்களின் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது. ஓரளவு பாதிக்கப்பட்ட சிலை சரி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தாய்லாந்தில் சரி செய்யவே முடியாத விஷயங்களும் நடந்துதான் வருகின்றன.

ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இந்து மதமும், புத்த மதமும் பெருமளவில் தாய்லாந்தில் செழித்து வளர்ந்தன. பத்தாம் நூற்றாண்டில் தொடங்கி தெற்கு தாய்லாந்தை மோன் லாவோ என்ற சாம்ராஜ்யம் ஆட்சி செய்தது. ஆனால் காலப்போக்கில் கெமர் சாம்ராஜ்யம் இங்கு தடம் பதித்தது. தற்கால கம்போடியாவில் அப்போது ஆட்சி செய்த இனம் கெமர். (தாய்லாந்தும், கம்போடியாவும் அண்டை நாடுகள். முன்னொரு காலத்தில் சண்டை நாடுகள்.)

பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுகோதாய் சாம்ராஜ்யம் இன்றைய தாய்லாந்தின் பெரும் பகுதியைத் தன் பிடிக்குள் கொண்டு வந்திருந்தது. சுகோதாய் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு மகிழ்ச்சியின் உதயம் என்று பொருள். புத்தமதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சாம்ராஜ்யம் 1238ல் உருவானது. கிழக்கு மாகாணங்கள் மட்டும் கெமர் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு மற்றொரு பெரும் சாம்ராஜ்யமான ஆயுத்தயா தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் பரிண மித்தது. சுமார் 400 வருடங்கள் ஆயுத்தயாவின் பிடியில் இருந்தது தாய்லாந்து.

அப்போதைய ராணுவத்தில் வெறும் சிப்பாயாக இருந்த ஒருவர் நாளடைவில் நாட்டின் மன்னர் ஆனார். அவர் பெயர் டக்ஸின். இவரது முன்னோர்கள் சீனர்கள். மன்னர் டக்ஸின் உருவாக்கிய புதிய தலைநகர் தோன்புரி. பின்னர் தாய்லாந்தை சக்ரி பேரரசு ஆட்சி செய்தது. அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் மன்னர் முதலாம் ராமா. (இப்போதைய மன்னர் ஒன்பதாம் ராமா). அவரது ஆட்சிக் காலத்தில் பாங்காக் தலைநகர் ஆனது.

1932க்கு முன்னாள் தாய்லாந்தில் நடைபெற்றது முழுமையாக மன்னர் ஆட்சிதான்.

1932 ஜூன் மாதத்தில் ஒரு பெரும் புரட்சி அங்கு ஏற்பட்டது. அது சயாமியப் புரட்சி என்று அழைக்கப்பட்டது.

மக்கள் கட்சி என்று பொதுவாக அழைக்கப்பட்ட ஓர் அமைப்பில் அரசு அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் மிக உயர்ந்த பதவிகளில் இல்லாமல் அதற்கு அடுத்த நிலைப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இவர்கள் மிகவும் வலிமையான போராட்டத்தைத் தொடங்கினர். மன்னர் உடனடியாகவே சரணடைந்து விட்டதால் வன்முறை இல்லாமலேயே ஆட்சி மாறியது.

முடியாட்சியாக இருந்த தாய்லாந்து அதற்குப் பிறகு அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சியாக மாறியது. என்றாலும் 1973-ல் தான் தாய்லாந்து மக்கள் முதன்முறையாக ஒரு பிரதமரை தேர்வு செய்தார்கள். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது மாணவர்கள் புரட்சி.

மாணவர்கள் புரட்சியைத் தொடர்ந்து பிரதமரை மக்கள் தேர்வு செய்யத் தொடங்கினர். எனினும் மன்னர் பதவி தொடர்ந்தது. காலத்தின் கட்டாயமாகவோ என்னவோ சென்ற ஆண்டு தாய்லாந்து ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தவிக்கும்-தாய்லாந்து-2/article7607066.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

தவிக்கும் தாய்லாந்து - 3

 

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸ்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸ்.

மாணவர்கள் புரட்சி மற்றும் அதற்கு முந்தைய சயாமியப் புரட்சி ஆகியவை தாய்லாந்தில் நடந்த போது சுகோதாய் சாம்ராஜ்யம் குறித்து வெளியான சில தகவல்கள் பரவலாகப் பேசப் பட்டன. மன்னர் நான்காம் ராமா சரித்திரத்தில் ஈடுபாடு கொண்டவர். அகழ்வாராய்ச்சியிலும் ஆர்வம் கொண்டவர். சுகோதாய் வரலாறை இவர் கண்டுபிடித்து விளக்கினார்.

சுகோதாய் என்பது சாம்ராஜ்யம் மட்டுமல்ல, தாய்லாந்தின் முதல் தேசியத் தலைநகரின் பேரும்கூட. (பின்னர் ஆயுத்தயா, தோன்புரி, பாங்காக் என்று தலைநகரங்கள் மாறின). சுகோதாய் சாம்ராஜ் யத்தில் விளங்கிய மிகச் சிறந்த மன்னர்கள் குறித்த விவரங்கள் வெளியாயின.

சுகோதாய் காலத்தில் தாய்லாந் தில் நிலவிய ஒருவகை ஜனநாயகம் புரட்சிக்காரர்களால் மேற்கோள் காட்டப்பட்டது.

சுகோதாய் காலத்தில் மன்ன ருக்கும், மக்களுக்கும் உள்ள உறவு ‘தந்தை மகன்’ ஆகியோ ருக்கிடையே நிலவிய உறவுபோல சித்தரிக்கப்பட்டது. இதுவே தாய்லாந்தில் ஆட்சியின் அடிப்படை என்றும் கருதப்பட்டது. பின்னர் கெமர்களின் அங்கோர் சாம்ராஜ்யம் தாய்லாந்தில் நுழைந்த போது சுகோதாய் தனித்தன்மையை இழந்தது.

இந்து மதம் மற்றும் மஹாயான புத்தமதம் ஆகியவை தாய்லாந்தில் வேர்விடத் தொடங்கின.

முதலாம் உலகப்போரின்போது சயாம் (அப்போது தாய்லாந்தின் பெயர் இதுதான். 1939ல்தான் சயாம் தாய்லாந்து என்று தன் பெயரை மாற்றிக் கொண்டது) பிரிட்டனை வெகுவாக ஆதரித்தது. ஆனால் 1941ல் ஜப்பானிய ராணுவம் தாய்லாந்தை ஆக்ரமித்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாய்லாந்து, ஜப்பானிய ராணு வத்தை தன் பகுதியைத் தாண்டிச் செல்ல அனுமதித்தது. இதன் மூலம் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த மலாய் தீபகற்பம், பர்மா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளை ஜப்பானிய ராணுவம் அடைய முடிந்தது. 1942-ல் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின்மீது தாய்லாந்து போர் பிரகடனமே செய்தது.

1945ல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தது. உலக நாடுகளின் ஒப்பந்தப்படி தாய்லாந்து தான் கைப்பற்றியிருந்த லாவோஸ், கம்போடியா, மலேசியா ஆகிய நாடு களின் நிலப்பரப்பை அந்தந்த நாடு களுக்குத் திருப்பிக் கொடுக்க நேரிட்டது. இந்த காலகட்டத்தில் தான் மன்னர் ஆனந்தா தாய்லாந்துக்குத் திரும்பினார்.

மன்னர் தாய்லாந்துக்குத் திரும்பினாரா! அப்படியானால் அவர் அதற்கு முன் எங்கிருந்தார்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு முன் தாய்லாந்தில் ஆண்டாண்டு காலமாக மன்னர் பதவிக்குள்ள மரியாதையை சுட்டிக் காட்டுவது அவசியமாகும்.

பாங்காக் செல்லும் யாருமே அங்குள்ள அரண்மனைக்குச் செல்லாமல் திரும்ப மாட்டார்கள்.

அதனால் என்ன நம் நாட்டின் மைசூர் மகாராஜா அரண்மனை, உதய்பூர் அரண்மனை ஆகியவற் றுக்குக் கூடதான் சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள் என்கிறீர் களா? தாய்லாந்தைப் பொருத்த வரை இரண்டு வேறுபாடுகள். மன்னருக்கு அரசியல் அந்தஸ்து அங்கு இன்னமும் உண்டு. தவிர அரசரின் அலுவலக வேலைகள் அந்த அரண்மனையில் இன்னமும் நடைபெறுகின்றன.

பாங்காக் அரண்மனையின் பெயரே 'கிராண்ட் பேலஸ், (Grand Palace). நாற்புறங்களிலும் சுவர்களால் சூழப்பட்ட இந்த அரண்மனை நகரின் மையப் பகுதியில் சவேஃப்ரையா நதிக்கரையில் அமைந்துள்ளது.

சயாம் மன்னர்களின் முகவரி இதுவாகத்தான் இருந்தது. தாய்லாந்தின் இப்போதைய மன்னர் பூமிபோல், வேறொரு இடத்தில் (சித்ரலதா அரண்மனை) வசிக்கிறார். என்றாலும் அரசரின் அலுவலக வேலைகள் இப்போதும் கிராண்ட் அரண்மனையில்தான் நடைபெறுகின்றன.

அரண்மனைக்குள் கண்டு ரசிப்ப தைவிட, அரண்மனை வளாகத்தில் கண்டு ரசிக்கப் பல விஷயங்கள் உள்ளன என்றால் அது மேலும் பொருத்தமாக இருக்கும். பாங் காக்கின் மையப் பகுதியில் உள்ள இந்த வளாகத்தில் ஒன்றல்ல, பல கட்டிடங்கள்.

நுழைவுக் கட்டணம் (ஒருவருக்கு சுமார் 1,000 ரூபாய்) இந்தியர்களுக்கு திகைப்பை உண்டாக்குகிறது என்றால் மேலை நாட்டினர் பலருக்கும் வேறொரு நிபந்தனை கொஞ்சம் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட உடைகள் தவிர பிறவற்றை அணிந்தவர்கள் அரண்மனைக்குள் சென்றுவிட முடியாது.

நாங்கள் சென்றிருந்தபோது மினி ஸ்கர்ட் அணிந்து கொண்டு உள்ளே செல்ல முடியாது என்று ஒரு பிரான்ஸ் பெண்மணிக்குத் தடை விதிக்கப்பட்டது. 'உள்ளாடைகள் தெரியும்படியான (see-through) உடை அணிந்திருக்கிறீர்கள்' என்று வேறொரு இளம் பெண் தடுத்து நிறுத்தப்பட்டார். ''சட்டைக் கைப் பகுதியை மடித்து விட்டுக் கொள்ளக் கூடாது'' என்று ஓர் ஆண் அறிவுறுத்தப்பட்டார். ''டிரவுசர் அணிந்து செல்ல முடியாது'' என்று வேறொருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சொல்லப்போனால் எந்தவகை யான ஆடைகளை அணிந்து செல்லத் தடை என்பதை செயல் முறை விளக்கம் போலவே படங்கள் வரைந்து விளக்கியிருக்கிறார்கள்.

நல்ல வேளையாக தடை செய்யப்பட்ட உடை அணிந்து வந்தவர்களுக்கு 'நிபந்தனைக் குட்பட்ட மரியாதையான' உடை களை தாற்காலிகமாக வழங்கு கிறார்கள்.

அரண்மனையில் மட்டுமல்ல தாய்லாந்தின் பல சுற்றுலாத் தலங்களிலும் இப்படிப்பட்ட உடைக் கட்டுப்பாடுகள் உண்டு. ஒருபுறம் 'பாங்காக்கில் கணிசமான பகுதிகளில் பாலியல் தொழில் வெகு சகஜம்; அதற்காகவே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உண்டு' என்பது பரவலான கருத்தாக இருந்தாலும், உடைகளில் கண்ணியம் காக்கும் நாடாகவும் தாய்லாந்து தன்னை முன்னிறுத்துகிறது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தவிக்கும்-தாய்லாந்து-3/article7610841.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

தவிக்கும் தாய்லாந்து - 4

 
thai_2535413f.jpg
 

தாய்லாந்தை இப்போது ஆள்வது மன்னர் பூமி போல். இவர் தாய்லாந்தின் ஒன்பதாவது அரசர். அவர் அரசரான சூழலே மர்மமான ஒன்றுதான்.

தற்போதைய அரசரின் அண்ணன் ஆனந்தா மஹிடோல். ஆனந்தா மஹிடோல் தனது எட்டாவது வயதில், 1935-ல் சயாமின் (தாய்லாந்தின் அன்றைய பெயர்) எட்டாவது மன்னர் ஆனார். மக்களிடம் பிரியமாக இருந்ததால், மக்களுக்கும் தங்களது இளம் மன்னரைப் பிடித்திருந்தது. ஆனால் அவர் ஆட்சி அதிகமாகத் தொடரவில்லை.

ஒரு நாள் அவரது படுக்கையறையில் ஒரு துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது. தலையில் குண்டு பாய்ந்திருக்க, சடலமாக காட்சியளித்தார் மன்னர். யார் இப்படிச் செய்தது? இன்றுவரை அது விளங்காத புதிர்.

ஆனந்தா இறந்த சில மணி நேரங்களிலேயே அவரது 18 வயது தம்பி பூமிபோல் அரச பதவியை ஏற்றுக் கொண்டார். அன்று தொடங்கி இன்றுவரை அவரது ஆட்சிதான். உலகின் மிக அதிக பணக்கார மன்னர்களில் ஒருவர். பள்ளிகள், மருத்துவமனைகள், இயற்கைப் பேரிடர்களின்போது காலமறிந்து செய்த உதவிகள் காரணமாக மக்களின் இதயங் களிலும், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

ஆனந்தாவும், பூமிபோலும் இணைபிரியாத சகோதரர்கள். இருவருக்கும் துப்பாக்கியைக் கையாள்வது மிகவும் பிடிக்கும். பாங்காக்கில் கிராண்ட் அரண்மனை மைதானத்தில்தான் துப்பாக்கி சுடும் பயிற்சியை இருவருமே மேற்கொள்வது வழக்கம்.

1946 ஜூன் 9 அன்று பூமிபோல் தன் அண்ணனின் அறைக்குள் காலை 9.00 மணிக்கு நுழைந்ததாகவும், அவன் தூங்குவதைப் பார்த்து அறை யிலிருந்து கிளம்பி விட்டதாகவும் குறிப்பிட்டார். அதற்கு 20 நிமிடங்கள் கழித்து துப்பாக்கி ஒலி. அங்கு பாய்ந்தோடிச் சென்ற ஒரு பணியாளர் “மன்னர் தன்னையே சுட்டுக் கொண்டு விட்டார்’’ என்று கத்தினார். தொடர்ந்து அங்கு அலறியபடி வந்தாள் மன்னரின் தாய். ஆனந்தாவின் உடல் கவிழ்ந்தபடி இருந்தது. அவருக்கு அருகே ஒரு பிஸ்டல். நெற்றியில் துப்பாக்கி துளைத்த காயம்.

மேற்கத்திய பழக்க வழக்கங்களும் ஆனந்தாவிடம் நிறைந்திருந்ததாவோ என்னவோ அவரது இறப்பு குறித்து அமெரிக்க, ஐரோப்பிய இதழ்களும் விரிவாகவே செய்திகள் வெளி யிட்டன. பர்மாவில் குடியேறி யிருந்த லூயி மெளன்ட்பேட்டன் என்ற பிரபு, “பூமிபோல்தான் தன் அண்ணனைக் கொன்றிருக்க வேண்டும். தானே அரசாள வேண்டும் என்ற எண்ணம்’’ என்றார். இவர் தாய்லாந்திலும் சில வருடங்கள் தங்கியவர்.

துப்பாக்கியில் உள்ள கைரேககள் என்னவாயின? மன்னரின் இறப்பு குறித்து அமைக் கப்பட்ட விசாரணைக் குழு இப்படிக் கூறியது. “மகனின் இறந்த உடலைக் கண்ட அன்னை அலறினார். தன் இளையமகன் பூமிபோலைப் பார்த்து “நாமும் தற்கொலை செய்து கொள்ளலாம்’’ என்று கத்தினார். பயந்துபோன வேலை யாட்கள் அங்கிருந்த அத்தனை ஆயுதங்களையும் எடுத்து ஒளித்து வைத்தனர். மன்னரைக் காவு வாங்கிய துப்பாக்கியும் அவற்றில் ஒன்று. அதில் எக்கச்சக்கமான கைரேகைகள் பதிவாகி விட்டிருந்ததால், ஒரு தெளிவும் கிடைக்கவில்லை”.

இதெல்லாம் பழங்கதை. இப்போது மக்களின் பேரன்புக்கு உரியவராகத் திகழ்கிறார் மன்னர் பூமிபோல். 87 வயதை எட்டியி ருக்கும் இவர் உடல்நிலை சமீப வருடங்களாக மோசமடைந் திருக்கிறது. மிக அதிக காலம் ஒரு நாட்டை ஆளுகிற மன்னர் என்கிற அந்தஸ்து இவருக்குதான். 69 வருடங்களாக ஆட்சி செய்கிறார்.

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் 2010ல் இவரது சொத்துக்களின் மதிப்பை 30 பில்லியன் டாலர் என்று மதிப்பிட்டது. பூமிபோல் ஒருவிதத்தில் உலகம் சுற்றிய வாலிபர். இவர் பிறந்தது அமெரிக்காவில் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவமனையில்.

இவரது தந்தை மஹிடோல் அதுல்யாதேஜ், சோங்க்லா பகுதி யின் இளவரசர். இவர் அரச குடும்பத்தைச் சாராத சங்வாங் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது தாய் லாந்தை ஆண்ட மன்னர் ஏழாவது ராமா, மஹிபோலின் சித்தப்பா.

தங்கள் இளைய மகன் (தற்போ தைய தாய்லாந்து மன்னர்) பிறந்த போது, அமெரிக்க மருத்துவமனை குழந்தையின் பெயரைக் கேட்டது. பிறப்புச் சான்றிதழில் அதைப் பதிய வேண்டியது அங்கு மிகவும் அவசியம். ஆனால் மன்னரை (சித்தப்பாவை) கேட் காமல் பெயர் வைக்க மனம் ஒப்பவில்லை இளவரசருக்கு. எனவே ‘பேபி சோங்க்லா’ என்பது மட்டுமே பிறப்புச் சான்றிதழில் காணப்பட்டது. பின்னர் அந்தக் குழந்தைக்கு பூமிபோல் அதுல்யாதேஜ் என்று பெயரிட்டார் மன்னர். இதற்கு

‘‘நாட்டின் வலிமை, ஒப்பிட முடியாத சக்தி’’ என்று அர்த்தம்.

உலகின் அரசர்களிலேயே அமெரிக்காவில் பிறந்த ஒரே ஒருவர் பூமிபோல்தான். காலப்போக் கில் பல

‘ஒரே ஒரு’ பெருமைகள் இவருக்குக் கிடைத்தன. பூமி போலுக்கு கல்யாணி வதனா என்ற பெயரில் ஒர் அக்காவும், ஆனந்தா என்ற அண்ணனும் உண்டு.

1928-ல் பூமிபோலின் குடும்பம் தாய்லாந்துக்குக் குடி பெயர்ந்தது. ஆனால் அடுத்த ஆண்டே (பூமிபோலுக்கு இரண்டு வயதாகும்போதே) அவர் தந்தை இறந்தார். காரணம் சிறுநீரக செயலிழப்பு. என்ன காரணத்தினாலோ அடுத்த நான்கு வருடங்களில் பூமிபோலின் அம்மா தன் குடும்பத்தோடு சுவிட்சர்லாந் துக்குச் சென்றார். அங்குதான் பூமிபோலின் பள்ளிப் படிப்பு நடைபெற்றது.

குழந்தையில்லாத பூமிபோலின் சித்தப்பா 1935ல் அரியணையைத் துறந்தார். அப்போதுதான் மன்னர் ஆனார் பூமிபோலின் 8 வயது அண்ணன் ஆனந்தா.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தவிக்கும்-தாய்லாந்து-4/article7615070.ece

  • தொடங்கியவர்

தவிக்கும் தாய்லாந்து - 5

 
தாய்லாந்தில் உள்ள ராணுவ ஆட்சியாளர் சரித் சிலை.
தாய்லாந்தில் உள்ள ராணுவ ஆட்சியாளர் சரித் சிலை.

பூமிபோலின் அண்ணன் ஆனந்தா மன்னரானாலும் அவர்களது மொத்த குடும்பமும் சுவிட்சர்லாந்தில்தான் தொடர்ந்தது. ராஜாங்கக் குழுவின் மூலம் மட்டுமே ஆட்சி நடைபெற்றது. 1938-ல் இரண்டு மாதங்கள் மட்டுமே தாய்லாந்துக்கு வந்தது இந்தக் குடும்பம்.

இதற்கிடையே பூமிபோலுக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் வளர்ந்தது. திறமையான புகைப் படக்காரர் ஆனார். ஜாஸ் இசையிலும் தீவிர ஈடுபாடு. சாக்ஸஃபோன் இசைக் கருவியை வாசிப்பதிலும் வல்லவராக விளங் கினார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு அவர்கள் குடும்பம் தாய்லாந்துக்குத் திரும்பியது.

அப்போதுதான் ஆனந்தா இறந்தார். விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. மன்னர் ஆனந்தா தற்கொலை செய்து கொண்டார் என்ற வாதத்தை இது தள்ளுபடி செய்தது. அரண்மனையைச் சேர்ந்த இரண்டு சேவகர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் தூக்கிலிடப் பட்டனர்.

ஆனந்தாவும், பூமிபோலும் துப்பாக் கிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது, பூமிபோலிடமிருந்த துப்பாக்கி தற்செயலாக வெடித்தது. ஆனந்தா இறந்தார் என்ற கதை வெகு வேகமாகப் பரவியது.

பூமிபோல் அரியணை ஏறினாலும் துக்கம் காக்க வேண்டிய 100 நாட்களுக்குள்ளேயே சுவிட்சர்லாந்துக்கு குடும்பத்தினர் திரும்பினார்கள். அங்கு சட்டம் மற்றும் அரசியல், அறிவியல் பாடங் களில் பட்டப்படிப்பை மேற்கொண் டார். வருங் காலத்துக்காகத் தன்னை தயார் செய்து கொள்ளும் எண்ணம். தன் மாமா ரங்சிட் என்பவருக்கு “பவர் ஆப் அட்டர்னி’’ போல ஓர் அதிகாரத்தைக் கொடுத்து ஆட்சி செய்ய வைத்தார்.

சுவிட்சர்லாந்தில் இருந்தபோது அதன் அண்டை நாடான பிரான்ஸுக்கு அடிக்கடி விசிட் செய்தார் பூமிபோல். பாரிஸ் நகரில்தான் தன் வருங்கால மனைவியை பார்த்தார். பிரான்ஸுக்கான தாய்லாந்து தூதரின் மகள் அவர்.

ஆட்சியின் தொடக்கத்தில் பூமிபோலுக்கு உண்மையான அதிகாரம் என்பதே இல்லாமல் இருந்தது. ராணுவ ஆட்சியே பிரதானமாக இருந்தது. ராணுவத் தளபதி ப்ளேக் என்பவர் எண்ணற்ற அதிகாரங்களை தன் வசம் குவித்துக் கொண்டார்.

ஆனால் ராணுவ ஜெனரலாக இருந்த சரித் என்பவர் ப்ளேக் மீது குற்றங்களைச் சுமத்தினார். சற்றே கலவரம் அடைந்த ப்ளேக், மன்னர் பூமிபோலை அணுகி தன் அரசுக்கு ஆதரவளிக்கச் சொன்னார். பூமிபோலோ “நீங்கள் ராஜினாமா செய்து விடுங்கள்’’ என்றார். ப்ளேக் மறுத்தார். அன்று மாலையே சரித் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றினார். மன்னரின் ஆதரவு அவருக்குதான். இதைத் தொடர்ந்து நாட்டில் ராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

“ஃபீல்டு மார்ஷல் ப்ளேக்கின் அரசு நம்பகத்தன்மையை இழந்து விட்டது. தவிர நாட்டின் சட்டமும், ஒழுங்கையும் அதனால் சரிவரக் கையாள முடியவில்லை. எனவே அவரது இடத்தை ஃபீல்டு மார்ஷல் சரித் எடுத்துக் கொள்வார். இனி மேல் அவர்தான் நாட்டின் ராணுவத் தளபதி”. இப்படி ஒரு அறிக்கை அரசிடமிருந்து வெளியானது.

இதற்குப் பதில் மரியாதையாக அரசருக்கு பல கெளரவங்களை அறிமுகப்படுத்தினர் ராணுவத் தலைவர் சரித். புத்தமதம் தொடர்பான பல சடங்குகளில் மன்னருக்கே முதல் மரியாதை என்ற வழக்கம் மீண்டும் கொண்டு வரப்பட்டது. (முடியாட்சி மாறி அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி என்று ஆன பிறகு இந்த கவுரவம் மன்னருக்கு அளிக்கப்படாமல் இருந்தது).

அதேபோல் மன்னருக்கு எதிராக மண்டியிடும் பழக்கமும் புதுப்பிக்கப்பட்டது. மன்னர் பூமிபோலின் பிறந்தநாள் (டிசம்பர் 5) தேசிய தினமாக அறிவிக்கப்பட்டது. (அதற்கு முன் மாணவர்கள் புரட்சி நடைபெற்ற ஜுன் 24தான் தேசிய தினமாக இருந்தது).

1957ல் ஆட்சியைக் கைப்பற்றிய சரித், 1963-ல் இறந்தபோது மன்னர் அவருக்கு பெரிய அளவில் அஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். 21 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டது.

இதுவரை எந்த நாட்டின் மன்னரும் அதன் பிரதமருடன் அப்படி அணுக்கமாக இருந்ததில்லை எனும் அளவுக்கு இருந்தது பூமிபோல் - சரித் புரிதல்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தவிக்கும்-தாய்லாந்து-5/article7628638.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

தவிக்கும் தாய்லாந்து - 6

 
 
thay_2542032f.jpg
 

பிரதமர் சரித்தின் இறப்பைத் தொடர்ந்து ராணுவத்தில் குழப்பங்கள் நிலவத் தொடங்கின. அடுத்த பிரதமரை மன்னர்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நடைமுறை வந்து விட்டது. ராணுவத்திலிருந்து மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. துணை ஜெனரலாக இருந்த பிரகோப், வலதுசாரி சிந்தனை கொண்ட பாங்காக்கின் கவர்னர் தம்னூன், உச்சநீதிமன்ற நீதிபதி தானின். இவர்கள் மூவருக்குள் மன்னர் டிக் செய்தது தானின் பெயரைத்தான்.

தானின் பிரதமர் ஆனார். ஆனால் இவர் தீவிர வலதுசாரி கருத்துகள் கொண்டவர். கொஞ்சம் இடதுசாரி கருத்துகளைக் கொண்டிருந்த மாணவர்கள்மீதுகூட இவர் அடக்குமுறையைப் பிரயோகித் தார். இது எதிர் திசையில் செயல்பட்டது. இதன் காரணமாக பல மாணவர்கள் மேலும் தீவி ரமடைந்து காடுகளில் ஒளிந்திருந்த கம்யூனிஸப் புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டனர். ராணுவத்திலும் தானினுக்கு எதிர்ப்புகள் உண்டாயின. ஆனால் மன்னரின் தீவிரமான ஆதரவுக் கருத்து காரணமாக ராணுவ எதிர்ப்புகள் வெற்றி பெறவில்லை. என்றாலும் மன்னர் பூமிபோல் நடுநிலையாளர் என்ற கருத்தில் மாறுதல் தோன்றத் தொடங்கின.

1991 பிப்ரவரியில் மீண்டும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவத்தைச் சாராத ஆனந்த் பன்யராசுன் என்பவர் பிரதமராக நியமிக்கப் பட்டார்! எனினும் ராணுவத்தின் பிடி பலமாகவே இருந்தது. இந்த ஆட்சியின்போது ராணுவம் நாடாளுமன்றத்தைக் கலைத்தது. அரசியலமைப்புச் சட்டத்தையும் ரத்து செய்தது. ராணுவத் தலைவர்கள் ஒரு தற்காலிக அரசை ஏற்படுத்தி புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத் தினர்.

இதன்படி 1992 மார்ச்சில் நடைபெற்ற தேர்தலில் அரசர் பூமிபோல் தலைவராகவும், சுசிந்தா க்ரப்ரயூன் என்பவர் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்பு, நாட்டின் ராணுவத்தின் தலை வராக விளங்கியவர் சுசிந்தா என்ப தால் அவரைப் பிரதமராக பாராளு மன்றம் தேர்வு செய்தது. மக்களில் பலருக்குப் பிடிக்கவில்லை. பலத்த எதிர்ப்பு எழவே வேறு வழியில்லாமல் சுசிந்தா ராஜினாமா செய்தார். மீண்டும் (தாற்காலிக) பிரதமர் ஆனார் ஆனந்த்.

இந்த நிலையில், 1992ல் மன்னர் பூமிபோல் தாய்லாந்தை ஜனநாயகப் பாதைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டார். ராணுவத் தலைவர் சுசிந்தா மற்றும் ஜனநாயக இயக்கத்தின் தலைவராக விளங்கிய முன்னாள் மேஜர் ஜெனரல் சாம்லோங் ஆகியோருக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். இந்த முயற்சிகள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப் பட்டன. தாய்லாந்து அரசியலில் தனது பங்கை மன்னர் பூமிபோல் வெளிப்படையாக்கிக் கொண்ட ஒரு நிகழ்ச்சி இது. பின்னர் சுசிந்தா தன் பதவியை ராஜினாமா செய்தார்.

1997ல் ஆசிய அளவில் ஒரு பெரும் பொருளாதாரச் சரிவு நேர்ந்தது. தாய்லாந்து நாணயம் ‘பத்’தும் விதிவிலக்கல்ல. டாலருக்கு எதிராக அதன் மதிப்பு வெகு வேகமாகச் சரிந்தது. பல தாய்லாந்து நிறுவனங்கள் திவாலாயின. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. நாட்டில் அமைதியின்மை பரவலானது. உலக நிதியம் உதவி செய்ய முன்வந்தது. இந்த நிலையில் தேர்தலில் (ஓரே ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது தேர்தல்) சுவான் லீக்பை என்பவர் தாய்லாந்தின் பிரதமர் ஆனார்.

உலக நிதியத்தின் உதவி கிடைத்தும்கூட பொருளாதாரச் சரிவு கணிசமான அளவில் நீங்கிவிட வில்லை. வெளிநாடுகளிலிருந்து வேலை செய்வதற்காக தாய்லாந் துக்கு வந்திருந்த ஆயிரக்கணக் கான தொழிலாளிகள் அவரவர் நாடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். இருக்கும் கொஞ்ச பணிகள் உள்ளூர்வாசிகளுக்கே கிடைக் கட்டுமே என்ற எண்ணம்.

‘‘நாட்டில் பொருளாதார சீரமைப்புகள் உடனடியாக தேவைப்படுகின்றன. இதற்கு உங்கள் உதவியும் இருந்தால்தான் முடியும்’’ என்று எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் சுவான் லீக்பை.

நாட்டின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறத் தொடங்கியது. என்றாலும் மிகப் பெரிய தடைக்கல்லாக இருந்தது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அரசு செலவிட வேண்டிய மருந்து களுக்கான விலை. பாலியல் தொழில் பரவிய நாடாகவும் இருந்ததால், எய்ட்ஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இந்த நிலையை மாற்ற தாய்லாந்து அரசு என்ன செய்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் எய்ட்ஸ்

மருந்துகளுக்கான விலையை குறைத்துக் கொள்ளச் சொல்லி அழுத்தம் கொடுக்கத் தொடங் கியது!

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தவிக்கும்-தாய்லாந்து-6/article7636248.ece

  • தொடங்கியவர்

தவிக்கும் தாய்லாந்து - 7

 
முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் தாய்லாந்து முன்னாள் பிரமதமர் தக்ஸின் ஷினவத்ரா.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் தாய்லாந்து முன்னாள் பிரமதமர் தக்ஸின் ஷினவத்ரா.

தாய்லாந்து அரசியலில் அழுத்தமாக இடம்பெற்ற இன்னொருவர் தக்ஸின் ஷினவத்ரா. 2001 முதல் 2006 வரை பிரதமராக முழுவதுமாக ஐந்து வருடங்கள் ஆட்சி செய்தவர். (பாதியில் ராணுவ ஆட்சி புகாமல் இப்படி ஆட்சி செய்தவர்கள் தாய்லாந்தில் மிகமிகக் குறைவு).

தாய்லாந்தில் போதைப் பொருள்களின் நடமாட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. “போதைப் பொருளுக்கு எதிராகப் போராடுவோம்’’ என்று அறிவித்தார் மன்னர். போதைப் பொருள் கடத்துபவர்களை விசாரித்து தண்டிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டது. பிரதமர் தக்ஸினும் முழுமையாக ஒத்துழைத்தார். ஒவ்வொரு அரசு அதிகாரிக்கும் இலக்கு நிச்சயிக்கப்பட்டது போதைப் பொருள் சம்பந்தப்பட்ட இவ்வளவு கறுப்பு ஆடுகளை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று.

இதைத் தொடர்ந்து போதைப் பொருள் வியாபாரிகள் பலரும் கொல்லப்பட்டனர். மனித உரிமைக் கழகம் இதை விமர்சித்தது. என்றா லும் குறைந்தது பள்ளிக்கூடங் களாவது போதைப் பொருள்களின் பிடியிலிருந்து நீங்கியது உண்மை.

பிரதமர் தக்ஸின் ஆட்சியை மன்னர் பூமிபோல் தனது அப்போதைய பிறந்த நாளின்போது பெரிதும் பாராட்டினார்.

‘‘அரசின் கண்டிப்பான நடவடிக்கையால் 2,500 பேர் இறந்திருக்கலாம். ஆனால் போதைப் பொருள் நடமாட்டம் அதே அளவு தொடர்ந்திருந்தால் எவ்வளவு பேர் இறந்திருப்பார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும்’’ என்றார்.

எனினும் உலக மனித உரிமை அமைப்புகள் அழுத்தம் அளித்தன. விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்தார் மன்னர். “காவல் துறையால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே’’ என்று கூறி நோக்கத்தை நிறைவேற்றியது விசாரணைக் கமிஷன். (பின்னர் 2006-ல் வேறொரு ராணுவப் புரட்சி நடந்து புதிய ராணுவத் தளபதி பொறுப்பேற்றபோது மீண்டும் இது தொடர்பான ஒரு விசாரணை நடைபெற்றது. இதன்படி கொல்லப்பட்டவர்களில் பாதி பேர் அப்பாவிகள் என்றும், தவறான தகவல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்கள் என்றும் கூறியது. எனினும் போதிய ஆதாரம் இல்லாததால், சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை).

இந்த இடத்தில் தக்ஸின் குறித்த சில மேல் விவரங்களைப் பார்ப்போம். அவர் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி. அதுமட்டு மல்ல தேர்ந்த வியாபாரியும்கூட. 1987-ல் ஷின் கார்ப்பரேஷன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இது தகவல் தொழில்நுட்பம் தொடர்பானது.

இந்த வியாபாரம் ஓகோவென்று செழிக்க, தாய்லாந்தின் மிகப் பணக்காரர்களில் ஒருவராக ஆனார்.

காலப்போக்கில் இவருக்கு அரசியலில் கால்பதிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது. 1998-ல் ஒரு கட்சியை தொடங் கினார். அதன் பெயர் தாய் ரக் தாய் கட்சி. 2001 பொதுத்தேர்தலில் அவர் பிரதமர் ஆனார்.

அப்படி ஒரு புகழ் இவரது ஆட்சிக்கு. முக்கியமாக கிராமத்து ஏழைகள் மத்தியில் மிகவும் புகழப் பட்டார். இதற்கு முக்கியக் காரணம் மிகக் குறைவான தொகையில் மருத்துவ சிகிச்சையை இவர் அரசு அளித்ததும், அரசு நிதி நிறுவனங்களிலிருந்து அவர்கள் பெற்ற கடனை ரத்து செய்ததும் தான். தவிர அதிகப்படி கடனையும் வழங்க வகை செய்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாங் காக்கின் மேல்தட்டு வர்க்கத்தினரை விமர்சனம் செய்தார்!

என்றாலும் இவரை பணக்காரர்களும் அதிகமாக வெறுத்துவிடவில்லை. காரணம் ஒரு பன்னாட்டு நிறுவனம்போல அரசை இவர் நடத்த முயற்சித்ததுதான். இவரது கொள்கைகள் ‘தக்ஸினாமிக்ஸ்’ (எகனாமிக்ஸ் போல) என்றே அழைத்தார்கள். 1990-களில் தாய் லாந்து உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கு நிதி நெருக்கடி உண்டானதைக் குறிப்பிட்டோம். அதிலிருந்து தாய்லாந்து பெருமளவு மீண்டது என்றால் அதற்கு தக்ஸினின் சில நடவடிக்கைகளும் காரணம்.

தான் பிரதமர் ஆன அதே ஆண்டில் தக்ஸின், பர்மாவுக்கு விஜயம் செய்தார். இருநாட்டு ராணு வங்களும் மோதிக் கொண்டதை அடுத்து மியான்மர் - தாய்லாந்து எல்லைகளை மூடச் செய்திருந்தது தாய்லாந்து. தக்ஸினின் மியான்மர் விஜயத்துக்குப் பிறகு இந்தத் தடை நீக்கிக் கொள்ளப்பட்டது (ஆனால் அதற்கு அடுத்த வருடமே மீண்டும் ராணுவங்கள் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்த, மேற்படி தடை மீண்டும் அமலுக்கு வந்தது வேறு விஷயம்).

மியான்மர் மட்டுமல்ல. கம்போடி யாவிலும் ஒரு புயல் போன்ற கொந்தளிப்பு உருவாக தாய் லாந்தின் ஒரு நபர் காரணமானார். சொல்லப்போனால் 2003-ல் தாய்லாந்து அரசு உலக அளவில் எந்தப் பிரச்னையையும் தொடங்கிவிடவில்லை. ஆனால் பிரபல தாய்லாந்து தொலைக்காட்சி நடிகையும், வெள்ளித் திரையிலும் சில பாத்திரங்களை ஏற்று நடித்தவருமான சுவனந்த் என்ற நடிகை ஒரு பேட்டியில் கூறியதாக வெளியான வாசகங்கள்தான் தீப்பற்றிக் கொள்ளக் காரணமாக அமைந்தது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தவிக்கும்-தாய்லாந்து-7/article7640853.ece

  • தொடங்கியவர்

தவிக்கும் தாய்லாந்து- 8

கம்போடியாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட தாய்லாந்து தூதரகம்.
கம்போடியாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட தாய்லாந்து தூதரகம்.

‘‘அடுத்த பிறவியில் நான் ஒரு நாயாகப் பிறந்தா லும் பிறப்பேனே தவிர, கம்போடியாவில் பிறக்க மாட்டேன்’’. ‘‘எங்கள் நாட்டிலி ருந்து அங்கோர் வாட் ஆலயத்தை கம்போடியா திருடிக் கொண்டது’’ என்றெல்லாம் தாய்லாந்து நடிகை ஒருவர் கூறியதாக ஒரு ‘செய்தியை’ கம்போடிய நாளிதழ் ஒன்று வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து கம்போடி யாவில் கலவரம் உண்டானது. கம்போடியாவில் தாய்லாந்துக் காரர்கள் நடத்திய வணிக வளாகங் களும், தாய்லாந்து தூதரகமும் எரிக்கப்பட்டன. பற்றி எரிந்த தீயிலிருந்து கம்போடியாவுக்கான தாய்லாந்து தூதர் தீப்புண்களுடன் தப்பினார். பின்புறச் சுவரில் ஏறி குதித்து படகு ஒன்றின் மூலமாக இவர் தப்பினார்.

தாய்லாந்து பிரதமர் தக்ஸின் உடனடியாக கம்போடியப் பிரதமர் ஹுன் ஸுன்னைத் தொடர்பு கொண் டார். ‘‘இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்குள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவில்லை யென்றால் எங்கள் கமாண் டோக்கள் கம்போடியாவுக்கு அனுப்பப்படுவார்கள்’’ என்றார்.

கம்போடியாவின் காவல் துறை உடனடியாகவே செயல்பட்டது என்றாலும் அந்த அரசின் அறிக்கை தாமதமாகவே வெளியானது. இதற்குள் கோபவெறி கொண்டி ருந்த கம்போடியர்கள் தாய்லாந் துக்காரர்களுக்குச் சொந்தமான பல கட்டடங்களை தீக்கிரையாக் கிவிட்டனர். அவற்றில் தாய்லாந்துப் பிரதமர் தக்ஸினின் நிறுவனக் கிளையும் ஒன்று. பிரபல நாம் நெம் என்ற ஹோட்டலும் தீ வைக்கப்பட்டது.

அடுத்த நாளே தாய்லாந்து, ராணுவ விமானங்களை கம்போடி யாவுக்கு அனுப்பித் தனது நூற்றுக் கணக்கான தூதரக அலுவலர்களை மீட்டது. இதைத் தொடர்ந்து கம்போடியாவுடனான தூதரக உறவை மிகவும் குறைத்துக் கொண்டது தாய்லாந்து. தாய் லாந்தில் பணியாற்றிய சுமார் ஐம்ப தாயிரம் கம்போடியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கம்போடியா-தாய்லாந்து எல்லைகள் மூடப்பட்டன.

பல உலக நாடுகள் கம்போடி யாவின் செயலைக் கண்டித்தன. அவற்றின் எதிர்ப்பை சமாளிக்கும் வலிமை கம்போடியாவுக்கு இல்லை. முக்கிய காரணம் கம்போடியா தொடர்ந்து வறுமைப் பிரிவில் சிக்கியதாகவே இருந்திருந்தது. கம்போடிய அரசு தாய்லாந்திடம், தங்கள் செயல் களுக்காக, மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

2004-ல் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் என்று தாய்லாந்து அரசு எடுத்த நடவடிக்கையில் 100 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் தாய்லாந்தின்மீது பகைமை கொண்டனர். 2004 டிசம்பரில் ஒரு பெரும் சுனாமி தாய்லாந்தின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதிகளை புரட்டிப் போட்டது. 2005 மார்ச்சில் தக்ஸின் இரண்டாவது முறையாக தன் பிரதமர் பதவியைத் தொடங்கினார்.

தீவிரவாதம் தலைதூக்கவே அதைச் சமாளிப்பதற்கு அவருக்கு அதிகப்படி அதிகாரம் வழங்கப் பட்டது. என்றாலும் இந்தக் கலவரத் தில் ஆயிரம்பேர் இறந்தனர். எதிர்ப்புகள் அதிகம் ஆயின. சட்ட ஒழுங்கு நிலைமையை தக்ஸினால் கட்டுக்குள் கொண்டுவர முடிய வில்லை என்ற விமர்சனம் எழுந்தது. தவிர இவர் தனது சொத்துக்களின் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றது தாய்லாந்தின் ஊழல் விழிப்புக் கமிஷன். என்றாலும் மக்களின் - முக்கியமாக கிராமப்புறத்து வாக்காளர்களின் - ஆதரவு தக்ஸினுக்குத் தொடர்ந்தது.

ஆனால் பிரச்னை வேறொரு செயலினால் பூதாகரமானது. தான் தொடங்கிய ஷின் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவெடுத்தார் தக்ஸின். இவரது பங்குகள் மற்றும் இவரது குடும்பத்தின் பங்குகள் அனைத்துமே விற்கப்பட்டபோது அது தேசியச் செய்தியானது.

இந்த விற்பனையால் தக்ஸின் குடும்பத்துக்கு 1.9 பில்லியன் டாலர் கிடைத்தது. இதுவே நகர்புறவாசிகளின் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானது. இதற்கான வரியை அவர் அரசுக்குச் செலுத்தாமல் ஏய்க்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தவிர நாட்டுக்கு மிகவும் தேவையான ஒரு நிறுவனத்தை பணத்துக்காக இவர் விற்றது தேசப்பற்று இல்லாத செயல் என்றும் கருதப்பட்டது.

ஆட்சிக்கு எதிரான ஊர்வலங்கள் அதிகமாயின. பிரதமர் தக்ஸின் அரசியலிலிருந்து ஏழு வாரங்கள் விலகியிருக்கப் போவதாக அறிவித்தார். அதைச் செயல்படுத்தினார். அரசியல் வெற்றிடம் ஒன்று உருவானது. 2006 ஆகஸ்டில் தன்னை ராணுவ அதிகாரிகள் கொல்ல முயற்சித்த தாக தக்ஸின் குற்றம் சாட்டினார். இதை உறுதிப் படுத்துவதுபோல அவர் வீட்டின் அருகே நிற்க வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் வெடிகுண்டு தயாரிக்கும் பொருள்கள் காணப்பட்டன.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தவிக்கும்-தாய்லாந்து-8/article7648149.ece

தவிக்கும் தாய்லாந்து- 8

கம்போடியாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட தாய்லாந்து தூதரகம்.
கம்போடியாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட தாய்லாந்து தூதரகம்.

‘‘அடுத்த பிறவியில் நான் ஒரு நாயாகப் பிறந்தா லும் பிறப்பேனே தவிர, கம்போடியாவில் பிறக்க மாட்டேன்’’. ‘‘எங்கள் நாட்டிலி ருந்து அங்கோர் வாட் ஆலயத்தை கம்போடியா திருடிக் கொண்டது’’ என்றெல்லாம் தாய்லாந்து நடிகை ஒருவர் கூறியதாக ஒரு ‘செய்தியை’ கம்போடிய நாளிதழ் ஒன்று வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து கம்போடி யாவில் கலவரம் உண்டானது. கம்போடியாவில் தாய்லாந்துக் காரர்கள் நடத்திய வணிக வளாகங் களும், தாய்லாந்து தூதரகமும் எரிக்கப்பட்டன. பற்றி எரிந்த தீயிலிருந்து கம்போடியாவுக்கான தாய்லாந்து தூதர் தீப்புண்களுடன் தப்பினார். பின்புறச் சுவரில் ஏறி குதித்து படகு ஒன்றின் மூலமாக இவர் தப்பினார்.

தாய்லாந்து பிரதமர் தக்ஸின் உடனடியாக கம்போடியப் பிரதமர் ஹுன் ஸுன்னைத் தொடர்பு கொண் டார். ‘‘இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்குள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவில்லை யென்றால் எங்கள் கமாண் டோக்கள் கம்போடியாவுக்கு அனுப்பப்படுவார்கள்’’ என்றார்.

கம்போடியாவின் காவல் துறை உடனடியாகவே செயல்பட்டது என்றாலும் அந்த அரசின் அறிக்கை தாமதமாகவே வெளியானது. இதற்குள் கோபவெறி கொண்டி ருந்த கம்போடியர்கள் தாய்லாந் துக்காரர்களுக்குச் சொந்தமான பல கட்டடங்களை தீக்கிரையாக் கிவிட்டனர். அவற்றில் தாய்லாந்துப் பிரதமர் தக்ஸினின் நிறுவனக் கிளையும் ஒன்று. பிரபல நாம் நெம் என்ற ஹோட்டலும் தீ வைக்கப்பட்டது.

அடுத்த நாளே தாய்லாந்து, ராணுவ விமானங்களை கம்போடி யாவுக்கு அனுப்பித் தனது நூற்றுக் கணக்கான தூதரக அலுவலர்களை மீட்டது. இதைத் தொடர்ந்து கம்போடியாவுடனான தூதரக உறவை மிகவும் குறைத்துக் கொண்டது தாய்லாந்து. தாய் லாந்தில் பணியாற்றிய சுமார் ஐம்ப தாயிரம் கம்போடியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கம்போடியா-தாய்லாந்து எல்லைகள் மூடப்பட்டன.

பல உலக நாடுகள் கம்போடி யாவின் செயலைக் கண்டித்தன. அவற்றின் எதிர்ப்பை சமாளிக்கும் வலிமை கம்போடியாவுக்கு இல்லை. முக்கிய காரணம் கம்போடியா தொடர்ந்து வறுமைப் பிரிவில் சிக்கியதாகவே இருந்திருந்தது. கம்போடிய அரசு தாய்லாந்திடம், தங்கள் செயல் களுக்காக, மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

2004-ல் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் என்று தாய்லாந்து அரசு எடுத்த நடவடிக்கையில் 100 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் தாய்லாந்தின்மீது பகைமை கொண்டனர். 2004 டிசம்பரில் ஒரு பெரும் சுனாமி தாய்லாந்தின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதிகளை புரட்டிப் போட்டது. 2005 மார்ச்சில் தக்ஸின் இரண்டாவது முறையாக தன் பிரதமர் பதவியைத் தொடங்கினார்.

தீவிரவாதம் தலைதூக்கவே அதைச் சமாளிப்பதற்கு அவருக்கு அதிகப்படி அதிகாரம் வழங்கப் பட்டது. என்றாலும் இந்தக் கலவரத் தில் ஆயிரம்பேர் இறந்தனர். எதிர்ப்புகள் அதிகம் ஆயின. சட்ட ஒழுங்கு நிலைமையை தக்ஸினால் கட்டுக்குள் கொண்டுவர முடிய வில்லை என்ற விமர்சனம் எழுந்தது. தவிர இவர் தனது சொத்துக்களின் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றது தாய்லாந்தின் ஊழல் விழிப்புக் கமிஷன். என்றாலும் மக்களின் - முக்கியமாக கிராமப்புறத்து வாக்காளர்களின் - ஆதரவு தக்ஸினுக்குத் தொடர்ந்தது.

ஆனால் பிரச்னை வேறொரு செயலினால் பூதாகரமானது. தான் தொடங்கிய ஷின் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவெடுத்தார் தக்ஸின். இவரது பங்குகள் மற்றும் இவரது குடும்பத்தின் பங்குகள் அனைத்துமே விற்கப்பட்டபோது அது தேசியச் செய்தியானது.

இந்த விற்பனையால் தக்ஸின் குடும்பத்துக்கு 1.9 பில்லியன் டாலர் கிடைத்தது. இதுவே நகர்புறவாசிகளின் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானது. இதற்கான வரியை அவர் அரசுக்குச் செலுத்தாமல் ஏய்க்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தவிர நாட்டுக்கு மிகவும் தேவையான ஒரு நிறுவனத்தை பணத்துக்காக இவர் விற்றது தேசப்பற்று இல்லாத செயல் என்றும் கருதப்பட்டது.

ஆட்சிக்கு எதிரான ஊர்வலங்கள் அதிகமாயின. பிரதமர் தக்ஸின் அரசியலிலிருந்து ஏழு வாரங்கள் விலகியிருக்கப் போவதாக அறிவித்தார். அதைச் செயல்படுத்தினார். அரசியல் வெற்றிடம் ஒன்று உருவானது. 2006 ஆகஸ்டில் தன்னை ராணுவ அதிகாரிகள் கொல்ல முயற்சித்த தாக தக்ஸின் குற்றம் சாட்டினார். இதை உறுதிப் படுத்துவதுபோல அவர் வீட்டின் அருகே நிற்க வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் வெடிகுண்டு தயாரிக்கும் பொருள்கள் காணப்பட்டன.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தவிக்கும்-தாய்லாந்து-8/article7648149.ece

  • தொடங்கியவர்

தவிக்கும் தாய்லாந்து - 9

 
தாய்லாந்தில் 2006-ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட கவச வாகனங்கள்.
தாய்லாந்தில் 2006-ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட கவச வாகனங்கள்.

செப்டம்பர் 2006-ல் ஐ.நா.பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள பிரதமர் தக்ஸின் சென்றிருந்தபோது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி யது. ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் சுரயுத் சுலனோன்ட் தற்காலிகப் பிரதமராக நியமிக்கப்பட்டார். வெளியேற்றப்பட்ட பிரதமர் தக்ஸி னின் கட்சி தடை செய்யப்பட்டது.

ஒருவிதத்தில் 2007 டிசம்பரில் ஜனநாயகம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. மக்கள் சக்திக் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வென்றது. (இது நிஜத்தில் தக்ஸினின் தடை செய்யப் பட்ட கட்சியின் மறுவடிவம்தான்). இதைத் தொடர்ந்து தக்ஸின் பொது வாழ்க்கைக்குத் திரும்பினார். ஆனால் இவரது மனைவி மீது ஏமாற்றுதல் தொடர்பாக ஒரு வழக்கு போடப்பட்டு அதில் அவருக்கு மூன்று வருட தண்டனை அளிக்கப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்ய, ஜாமீனும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தக்ஸின் தன் குடும்பத்தோடு பிரிட்டனுக்குப் பறந்தார்.

எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகை யிட்டனர். செயலற்றுப்போன பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

தக்ஸினின் சொத்துகள் முடக்கப் பட்டன. இதனால் கால்பந்து குழு ஒன்றில் தனக்கிருந்த பங்குகளை அவர் விற்கும்படி ஆனது. ஆகஸ்ட் 2008-ல் பெய்ஜிங்கில் நடை பெற்ற ஒலிம்பிக் பந்தயங்களைக் காண தக்ஸின் சென்றிருந்தபோது அவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் ஒரு சம்மனை அனுப்பியது. ‘உடனடியாக தாய்லாந்து திரும்பி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டும்’.

இதைத் தொடர்ந்து தக்ஸின் அடிக்கடி தலைமறைவானார். தாய்லாந்து உச்ச நீதிமன்றம் முன்னாள் பிரதமர் தக்ஸின் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையை வழங்கியது.

தக்ஸின் இப்போது எங்கிருக் கிறார்? அவரது இருப்பிடத்தைக் குறிப்பாகச் சொல்ல முடிய வில்லை. தனது பெரும்பாலான நாட் களை துபாயில் கழித்துக் கொண்டி ருக்கிறார் என்கின்றன நாளிதழ்கள்.

என்றாலும் தாய்லாந்து அரசிய லில் இன்னமும்கூட இவர் மறைமுக மாக பங்கு வகிக்கிறார். 2008 இறுதியில் தக்ஸினின் கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே பதவிகளை இழந்தன. காரணம் எதிர்க்கட்சியின் அறைகூவலும், நீதிமன்றத் தீர்ப்புகளும். என்றாலும்கூட இன்னமும் தக்ஸின் தாய்லாந்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்திதான்.

ஆக பலவிதங்களில் தாய்லாந்து அரசு அலைக்கழிக்கப்பட்டு வருவ தால் மக்கள் திகைத்து நிற்கின்றனர். குழப்பமான நிலைதான் தங்கள் நாட்டின் தலைவிதி என்றுகூட எண்ணத் தொடங்கி விட்டார்கள்.

தக்ஸின் ஆதரவாளர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். தன் தொண்டர்களோடு வீடியோ மூலம் தொடர்பு கொண்டு வருகிறார் தக்ஸின். உச்ச நீதிமன்றம் தக்ஸின் குடும்பத்தின் சொத்துகளில் பாதி தவறான வழிகளில் ஈட்டப்பட்டது என்று கூறி அவற்றை அரசுக்குச் சொந்தம் ஆக்கியது.

2010 மார்ச் மாதத்தில் பல்லாயிரக்கணக்கான தக்ஸின் ஆதரவாளர்கள் சிவப்பு வண்ண சட்டைகளை அணிந்து கொண்டு தெருக்களில் தங்களது எதிர்ப்புகளை வெளியிட்டனர். அப்போதைய பிரதமர் அபிஷிட் ராஜினாமா செய்ய வேண்டுமென்று கோஷமிட்டனர். ராணுவம் அவர்களோடு மோதியது. இந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 90-ஐ தாண்டியது.

இவ்வளவு சிக்கலான நிலையில் தாய்லாந்து மக்கள் தங்கள் மூத்த மன்னரின் துணையை எதிர்பார்க்கிறார்கள். அவரால்தான் சிக்கலை சமாளிக்க முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் மன்னருக்கு உடல் நலம் சரியில்லை. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவரது பித்தப்பை நீக்கப்பட்டது. இந்த ஆண்டு மே தொடக்கத்தில் மன்னராகி 65 ஆண்டுகள் நிறைவு விழாவுக்காக மக்கள் எதிரே அவர் தோன்றினார். ஆனால் நீண்ட பேச்சுகள் எதுவும் இல்லை.

அரசியல் கோணத்தில் அதிகாரங்கள் பெற்றவராக மன்னர் பூமிபோல் இல்லை. இருந்தாலும் அவருக்கு எதற்காக இத்தனை புகழ். அவரை ஏன் பெரும்பாலான தாய்லாந்து மக்கள் இவ்வளவாக விரும்புகிறார்கள்? பலப்பல வருடங்களாக ஆட்சி செய்பவர் என்பது ஒரு காரணம். தாய்லாந்து சிதறாமல் இருப்பதற்கு இவரது ஆட்சி ஒரு முக்கியக் காரணம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே சமயம் தாய்லாந்தில் சில சட்டங்கள் இருப்பதையும் நினைவு கொள்ள வேண்டும். அவரையோ, அரச குடும்பத்தினரையோ யாரும் விமர்சிக்கக் கூடாது. விமர்சித்தால் கடும் தண்டனை.

இந்தச் சட்டங்களை ராணுவ அரசு நினைத்தால் நீக்கி இருக்க லாம். ஆனால் அதைச் செய்ய வில்லை. மன்னரின் ஆதரவு இருந்தால் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்குமென்று அதிகாரிகள் எண்ணுவதும் ஒரு காரணம்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தவிக்கும்-தாய்லாந்து-9/article7654765.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

தவிக்கும் தாய்லாந்து - 10

 
 
(கோப்புப் படம்) முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் ஷினவத்ரா.
(கோப்புப் படம்) முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் ஷினவத்ரா.

சுகோதாய் என்றும் சயாம் என்றும் பெயர் சூட்டிக் கொண் டிருந்த நாட்டின் தற்போதைய பெயர்தான் தாய்லாந்து.

பெயரைக் கொண்டு ‘’ஆஹா அன்னைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது இந்த நாடு’’ என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. தாய் என்பது அங்கு பேசப்படும் மொழியின் பெயர். ஒரு காலத்தில் அதன் மத்திய சமவெளியில் இருந்த இனக்குழுவின் பெயராகவும் இருந்திருக்கலாம் என்கிறார்கள். தாய் என்பதற்கு மக்கள் என்று சிலரும், விடுதலை என்று சிலரும் அந்த மொழியில் அர்த்தமாகிறது என்று கூறுகிறார்கள். நாட்டில் 95 சதவீதம்பேர் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்களின் மொழி ‘தாய்’. 85 சதவீத மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பது நிறைவான விஷயம்.

ஆனால் கடைகளில் பேரம் பேசுவது வித்தியாசமான அனுபவம். கடைக்கார்களால் (பலரும் இளம் பெண்கள்) ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மிக மெதுவாகத்தான் பேசுகிறார்கள். கையில் தயாராக இருக்கும் சிலேட்டுப் பலகையில் விலையை எழுதிக் காட்டுவதன் மூலம் பேரத்தைத் தொடர்கிறார்கள். கடைகளில் மட்டுமல்ல கல்வி, மருத்துவம் என்று பல துறைகளிலும் தாய்லாந்தில் பெண்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.

பிரதமர் மற்றும் நீதித் துறையிடம் என்னவிதமான ‘பேரத்தைப்’ பேசி மன்னர் தங்கள் நாட்டை மீட்கப் போகிறார் என்பதைக் காண மக்கள் ஆவலாக உள்ளனர்.

தனிப்பட்ட முறையில் பல திறமைகளைக் கொண்டவர் மன்னர் பூமிபோல். 1967-ல் நடைபெற்ற நான்காவது தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகளில் பாய்மரக் கப்பல் பந்தயத்தில் முதலிடம் பெற்றார். படகுகள் உருவாக்குவதில் தனித்திறமை பெற்றவர். சிறு பாய்மரப் படகு களை பலவித டிசைன்களில் உருவாக்கியவர். தனது சில கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கூட பெற்றிருக்கிறார். வீணாகும் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடிய கருவி, செயற்கை மழையை உருவாக்குவதில் புதிய முறை போன்றவற்றிற்குக் காப்புரிமை பெற்றுள்ளார்.

2006-ல் தேர்தல் நடப்பதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் மன்னர் பூமிபோலிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தன. “தேர்தலுக்குப் பதிலாக நீங்களே அடுத்த பிரதமரை நியமித்துவிடுங்கள்’’ என்று. மன்னர் மறுத்தார். “இது ஜனநாயகத்துக்கு எதிரானது. மன்னர் பிரதமரை நியமிப்பது என்பது பகுத்தறிவுக்கு உட்படாததுகூட’’ என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தக்ஸின் மீண்டும் வென்றார். அதன் பின்னர் மன்னரோடு தனிமையில் எதையோ பேசினார். சில மணி நேரங்களுக்குப் பிறகு “நான் அரசியலிலிருந்து கொஞ்ச காலத்துக்கு ஓய்வெடுக்க விரும்புகிறேன்’’ என்றார்.

மன்னர் பூமிபோல் தொலைக் காட்சியில் தோன்றினார். “தற்போதைய அரசியல் சிக்கலைத் தீர்க்க வேண்டுமென்று நீதிபதிகளைக் கேட்டுக்கொள் கிறேன்’’ என்றார்.

இங்லக் ஷினவத்ரா என்பவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக விளங்கியவர். 2011 ஆகஸ்ட் 5 அன்று பிரதமரானார். இவர் முன்னாள் பிரதமர் தக்ஸினின் தங்கை. ஆனால் மே 20 2014 அன்று இவரது ஆட்சி கலைக்கப்பட்டது. என்ன வழக்கம் போல ராணுவப் புரட்சியா என்றால் இது கொஞ்சம் மாறுபட்டது. தாய்லாந்து இனி ராணுவத்தால் ஆட்சி செய்யப்படும் என்று நீதிமன்றமே அறிவித்த விநோதம் நடந்தேறியது.

எதற்காக இப்படி ஒரு தீர்ப்பு?. ''அரசுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்களால் உண்டாகக் கூடிய வன்முறையைத் தடுத்து நிறுத்த'' என்கிறது நீதிமன்றம். தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் பிரதமர் என்கிறது நீதிமன்றம்.

என்ன தவறு செய்தார்? ஏற்கனவே இருந்த தாய்லாந்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் எதிர்க்கட்சி ஆதரவு பெற்றவர். எனவே தான் ஆட்சிக்கு வந்தவுடனேயே அவரை மாற்றி வேறொருவரை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுத்தார் இங்லக். இதுதான் அதிகார துஷ்பிர யோகம்! இத்தனைக்கும் பிரதமர் செய்தது சட்டமீறல் அல்ல. என்றாலும் ராணுவம் அங்கே அரசாளத் தொடங்கி விட்டது. தற்போது தாற்காலிகப் பிரதமராக பொறுப்பேற்றிருப்பவர் நிவதும் ராங் பூன்சங்பைசன் என்பவர்.

எனினும் மன்னர் பதவி சிக்கலின்றி தொடர்கிறது. தற்போது அவருக்கு வயது 88.

மீண்டும் ஜனநாயகம் மலரும் என்று ராணுவத் தளபதி ப்ரையுத் கூறுகிறார். என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தவிக்கும்-தாய்லாந்து-10/article7658639.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.